Pages

வியாழன், ஜனவரி 19, 2017

ஜல்லிக்கட்டு: பிரதமர் மோடியின் அண்டப்புளுகு!

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அவசர சட்டத்தை கொண்டுவர முடியாது என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

அதே போன்று, 'காளையை காட்சிப்பொருள் பட்டியலில் இருந்து பிரதமர் மோடி நீக்கியதாகவும், ஆனால் அதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்ததாகவும்' பாஜக அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் கூறிவருகிறார்.

- இவை இரண்டுமே அப்பட்டமான கட்டுக்கதைகள், அயோக்கியத்தனமான வாதங்கள் ஆகும்.

மோடியின் கட்டுக்கதை: நாடாளுமன்றம் சட்டம் இயற்ற முடியாதா?

நாடாளுமன்றத்தின் மூலமாக மக்கள் தான் சட்டத்தை உருவாக்குகிறார்கள். அந்த சட்டத்தின் படி வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்கிறது நீதிமன்றம். எனவே, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நாடாளுமன்றமே உச்ச அதிகாரம் படைத்தது. நீதிமன்ற வழக்கில் உள்ள விவகாரங்களிலும், நீதிமன்றம் தடைவிதித்த கருத்துகளிலும் புதிய சட்டத்தை உருவாக்க நாடாளுமன்றத்தால் முடியும். (A Law of Parliament can be repealed by a repealing Bill, and the rule of sub judice will not apply to such Bill.)

தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்த போது, அதை எதிர்த்து முதல் அரசியல் சாசன திருத்தத்தை செய்தது இந்திய அரசு. அதன்பிறகு, நீதிமன்ற வழக்குகளில் உள்ள எத்தனையே விவகாரங்களில் புதிய சட்டங்களை இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. அவ்வாறு, மோடி அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை வழக்கு நிலுவையில் உள்ளபோதே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மாற்றியதை - மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

கார்ப்பரேட்டுகளுக்காக அவசர சட்டம் கொண்டு வரலாம், தமிழர்களுக்காக கொண்டுவர முடியாதா?
உண்மையில், காங்கிரசு அரசு ஜல்லிக்கட்டுக்கு எதிரான திருத்தத்தை கொண்டுவந்தது. மோடி அரசு அதனை தொடர்கிறது. தேசிய கட்சிகளுக்கு தமிழர்களின் பண்பாடு என்றாலே வலிக்கிறது. எப்படியாவது தமிழ் அடையாளத்தை அழிக்க வேண்டும் என்கிற இனப்படுகொலை நோக்கம் தவிர, இந்தியப் பேரரசின் ஜல்லிக்கட்டு எதிர்ப்புக்கு வேறு காரணம் எதுவும் இல்லை.

பாஜகவினரின் கட்டுக்கதை: காளையை நீக்கினார்களா?

 '2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் காளையை காட்சிப்பொருள் பட்டியலில் இருந்து பிரதமர் மோடி நீக்கியதாகவும், ஆனால் அதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்ததாகவும்' பாஜக அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறிவருகிறார். இது ஒரு பச்சைப் பொய் ஆகும்.

காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகளான (shall not be exhibited as performing animal) கரடி, சிங்கம், புலி, குரங்கு, சிறுத்தை ஆகிய விலங்குகளுடன் காளை மாடும் சேர்க்கப்பட்டதை கண்டித்துதான் தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடந்தன. (காளையை சேர்த்தவரகள் - யானை, ஒட்டகம், குதிரையை இந்த தடைப்பட்டியலில் ஏன் சேர்க்கவில்லை?). இந்தப் பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டின் கோரிக்கை.

ஆனால், 2016-ம் ஆண்டு ஜனவரி 7 ஆம் நாள் மோடி அரசு வெளியிட்ட அறிவிக்கையில் (Ministry of Environment and Forest, Notification number G.S.R. 13(E) 7.1.2016), காளை மாட்டை நீக்கி உத்தரவிடவில்லை. மாறாக, காளைகளை ஜல்லிக்கட்டில் பயன்படுத்த விதிவிலக்கு அளிப்பதாக கூறியிருந்தார்கள் (bulls may be continue to be exhibited as a performing animal). இந்த விதிவிலக்கை தான் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.
மோடி அரசு வெளியிட்ட அறிவிக்கை 7.1.2016
கடந்த ஆண்டே, தடைவிதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கியிருந்தால் - ஜல்லிக்கட்டுக்கு தடை நேர்ந்திருக்காது. அப்படி செய்யாமல் ஏமாற்றிவிட்டு - இப்போது, 'தடைப் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கினோம்' என்று பச்சையாக பொய்சொல்கிறார் பாஜக அமைச்சர்.

பாஜகவின் போலி வேடம்

ஆதிசேஷனுக்கு ஆயிரம் நாக்கு என்பார்கள். பாஜக - சங்கப்பரிவார கும்பலுக்கும் ஆயிரம் நாக்குதான். ஜல்லிக்கட்டை எதிர்க்க மேனகா காந்தி, மாணவர் போராட்டத்தை எதிர்க்க சுப்ரமணியன் சாமி, சப்பைக்கட்டு கட்ட பொன். ராதாகிருஷ்ணன், ஜல்லிக்கட்டை ஆதரிக்க தருண் விஜய் - என பலவேஷம் கட்டி ஆடுகிறார்கள்.

மோடி நினைத்தால் இன்றைய தினமே அவசர சட்டத்தைக் கொண்டுவர முடியும். அதனை நாடாளுமன்றத்தில் சட்டமாக்கவும் முடியும். அதற்கு மேலும் நீதிமன்றம் தலையிடும் என்று நினைத்தால் - அச்சட்டத்தை 'நீதிமன்றம் தலையிடாத' அரசியல் சட்டபிரிவில் (இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950, அட்டவணை 9) சேர்க்கவும் முடியும். 

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதுதான் உண்மை. ஆனால், தமிழனுக்கு என்று தனி அடையாளம், தனி பண்பாடு இருக்கிறது என்பதையே ஏற்க மறுத்து, ஏக இந்திய பண்பாட்டில் தமிழர்களை கலக்கத்துடிக்கும் இனவெறி இந்திய தேசியவாதிகள் இதனை செய்ய மாட்டார்கள் என்பதே உண்மை.

தொடர்புடைய இடுகைகள்:


புதன், ஜனவரி 18, 2017

ஜல்லிக்கட்டு: சாதி ஒழிப்பு கும்பலின் இரட்டை வேடம்!

திராவிடர் அரசியல், சாதி ஒழிப்பு அரசியல், தீவிர இடதுசாரி அரசியல் ஆகியவற்றை முன்னெடுத்த அமைப்புகள் ஜல்லிக்கட்டை தீவிரமாக எதிர்க்கின்றன. அந்த அமைப்புகளில் சில இப்போது மாற்றிப்பேசி ஜல்லிக்கட்டு ஆதரவு போலி வேடம் போடுகின்றன.

நிலப்பிரபுத்துவ கால விளையாட்டு என்றும், சாதி ஆதிக்க விளையாட்டு என்றும் தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்தோர் சிலர் இப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதவாக இருப்பது போல காட்டிக்கொள்கின்றனர்.

மகஇகவின் இரட்டை வேடம்

"ஜல்லிக்கட்டு : தமிழர் பாரம்பரியமா ? ஆதிக்கசாதி அடையாளமா ?" என்று கடுமையாக எதிர்த்து பிரச்சாரம் செய்தது மகஇக அமைப்பு. அதன் பல வேடங்களான புதியகலாச்சாரம், மக்கள் அதிகாரம், வினவு என்கிற பெயர்களில் எதிர்ப்பை கிளப்பியது.

"ஓட்டுக் கட்சிகளும் ஊடகங்களும் ஊதிப்பெருக்குவது போல, ஜல்லிக்கட்டு என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் அடையாளமல்ல. தென்மாவட்ட ஆதிக்க சாதியினரின் சாதித் திமிரைப் பறைசாற்றும் ஓர் ஆதிக்கப் பண்பாட்டுச் சின்னம்தான்" என்றும், "கலாச்சாரம், பாரம்பரியம் என்ற பெயரில் இடைநிலை ஆதிக்க சாதிகளின் சாதி ஆணவத்தைப் பாதுகாக்கும் ஜல்லிக்கட்டை ஆதரிப்பது.. உழைக்கும் மக்களுக்கு ஆபத்து" - என்றும் கூறியது மகஇக.

இப்போது அதே அமைப்பினர் - டெல்லிக்கு எதிராக மல்லுக்கட்டு என்று பாடல் வெளியிட்டும், மக்கள் அதிகாரம் என்கிற பெயரில் மஞ்சுவிரட்டு நடத்த முயற்சித்தும் - இரட்டை வேட நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

தி இந்துவின் இரட்டை வேடம்

ஒரு நிலபிரபுத்துவ அடையாளம் என்று சொல்லி தி இந்து நாளிதழ் ஜல்லிக்கட்டை மிகக் கடுமையாக எதிர்த்து வந்தது. ஜல்லிக்கட்டை தடை செய்தது சரிதான் என்று வாதிட்டு மிகக் கடுமையான தலையங்கங்களை எழுதியது தி இந்து நாளிதழ். A political misadventure (13.01.2016) Saying no to jallikattu, again (19.11.2016) - என்று தலையங்கம் எழுதியது தி இந்து.

ஆனால் இப்போது அதே இந்துவின் தி இந்து தமிழ் நாளிதழ் - "ஜல்லிக்கட்டு தடையை நீக்க மத்திய அரசை நெருக்குங்கள்!"  (13.01.2017) என்று தலையங்கம் எழுதியுள்ளது.

ஜல்லிக்கட்டை எதிர்க்கும் தலித், திராவிட, முற்போக்கு அமைப்புகள்

இவ்வாறு சில அமைப்புகள் நேரத்துக்கு ஏற்ப ஜல்லிக்கட்டு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தாலும் - பல தலித், திராவிட, முற்போக்கு அமைப்புகள் இப்போதும் ஜல்லிக்கட்டை தீவிரமாக எதிர்க்கின்றனர். ஜல்லிக்கட்டு ஒரு ஆதிக்க சாதி அடையாளம் என்பதே அவர்கள் வாதம் ஆகும்.

தலித் முரசு இதழ் மிக நீண்டகாலமாக ஜல்லிக்கட்டை எதிர்த்து வந்தது. சாதி ஒழிப்பு இணையமான கீற்று இப்போதும் மிகக் கடுமையாக ஜல்லிக்கட்டை எதிர்க்கிறது. "பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒரு செயல்தான் ஜல்லிக்கட்டு" என்று இப்போதும் எழுதிவருகிறார் கீற்று நந்தன் (ஜல்லிக்கட்டு மீதான பண்பாட்டு மயக்கமும், நாட்டு மாடுகள் மீதான திடீர் அக்கறையும் 02.01.2017).

அவ்வாறே, கொளத்தூர் தா. செ. மணி தலைமையிலான திராவிடர் விடுதலைக் கழகம் "ஜல்லிக்கட்டுக்காக கொதித்தெழும் அப்பாவி இளைஞர்கள்" என்கிற தலைப்பில் ஜல்லிக்கட்டை கடுமையாக எதிர்த்துள்ளது.

ஆக மொத்தத்தில் - திராவிடர் அரசியல், சாதி ஒழிப்பு அரசியல், தீவிர இடதுசாரி அரசியல் -  அமைப்புகள் ஜல்லிக்கட்டை தீவிரிமாக எதிர்க்கின்றன.

சுற்றுச்சூழலை காப்பாற்றும் ஜல்லிக்கட்டு

மொழி, பண்பாடு, சுற்றுச்சூழல் இந்த மூன்றுவிதமான பன்மயங்களுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. ஒரு இடத்தில் நிலவும் இயற்கைச் சூழலும் அந்த இடத்தில் வாழும் மக்களின் பண்பாடும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது. இயற்கை பண்பாட்டின் ஆதாரமாக இருக்கிறது. பண்பாடு இயற்கையை காக்கும் மனித அறிவின் ஓர் அங்கமாக இருக்கிறது.
ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா பந்தயம் போன்ற காளை மாட்டு விளையாட்டு நிகழ்ச்சிகள் பல பாரம்பரிய மாட்டு இனங்கள் வளர்க்கப்படுவதற்கு காரணமாக உள்ளன. ஜல்லிக்கட்டில் கிராமங்கள் சார்பில் நிறுத்தப்படும் காளைகள் அதிகம். இந்த காளைகள் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்லாமல் அந்த கிராமங்களில் உள்ள மாடுகளின் இனப்பெருக்கத்துக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. ஜல்லிக்கட்டு காளைகள் அழிக்கப்பட்டால் தமிழகத்தில் மாட்டு இனமே அழியும் ஆபத்து ஏற்படும்.

ஜல்லிக்கட்டில் காங்கேயம் காளைகள் புலிக்குளம் காளைகள் பிரதானமாக உள்ளன. கூடவே மலைமாடு, கும்பகோணம், உம்பலாச்சேரி ஆகிய உள்ளூர் மாட்டு இனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஜல்லிக்கட்டு இல்லா விட்டால், இந்த மாடுகளை வளர்ப்பதற்கான தேவை இல்லாமல் போய்விடும். இவற்றை வளர்ப்பதற்கான உள்ளூர் மக்களின் பிரத்தியோகமான அறிவும் அழிந்து போகும்.

எனவே, உயிரிப்பன்மயத்தையும் சுற்றுச்சூழலையும் காப்பாற்ற, ஜல்லிக்கட்டை காப்பாற்ற வேண்டும்.

நாம் ஜல்லிக்கட்டை தீவிரமாக ஆதரிக்கிறோம்

நாம் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறோம். அதன் எல்லா நிலைகளிலும் ஆதரிக்கிறோம். ஒரு மதம் சார்ந்ததாகவோ, ஒரு இனம் சார்ந்ததாகவோ, ஒரு சாதி சார்ந்ததாகவோ - எந்த அடிப்படையில் பார்த்தாலும் ஜல்லிக்கட்டு ஆதரிக்கப்பட வேண்டியதே.

சாதி கடந்தோ, மதத்தைக் கடந்தோ - எதற்காக ஜல்லிக்கட்டை பார்க்க வேண்டும்? சாதியையோ, மதத்தையோ அடிப்படையாக வைத்து ஜல்லிக்கட்டை நடத்தினால் என்ன தவறு? முத்தரையர், மறவர், கள்ளர் போன்ற சாதியினர் இதனை தங்களது விழா என்று கொண்டாடினால், அதில் என்ன குற்றம் இருக்கிறது?

தமிழ்நாட்டின் 300 விதமான சாதிகளுக்கும் சம வாய்ப்பு அளித்து எந்த விழாவையும் நடத்த முடியாது. எனவே, சாதி கடந்து, அனைத்து தமிழர்களுக்குமான விழா என்று எதுவும் இருக்க முடியாது! (எல்லோருக்கும் பொதுவான பொங்கல் பண்டிகையைக் கூட, ஒவ்வொரு சாதியிலும் ஒவ்வொரு வகையறாவிலும் ஒவ்வொரு விதமாகத்தான் கொண்டாடுகிறார்கள்.)
திருவிழாக்கள், விளையாட்டுகள், வேளாண்மை, வியாபாரம், தொழில் என எல்லாவற்றிலும் சாதி ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கவே செய்கின்றன. அதற்காக 'திருவிழாக்கள், விளையாட்டுகள், வேளாண்மை, வியாபாரம், தொழில்' என எல்லாவற்றையும் இல்லாமல் செய்துவிட முடியாது. (தீண்டாமை, சாதி அடிமைத்தனம், மனித உரிமை மீறல்கள் எந்த இடத்தில் இருந்தாலும் - அவை களையப்பட வேண்டும்)

ஜல்லிக்கட்டு போன்ற கலாச்சார நிகழ்வுகள் ஒரு இனத்துக்காக, ஒரு சாதிக்காக, ஒரு வம்சத்துகாக, ஒரு குடும்பத்துக்காக என எந்த அளவில் நடந்தாலும் - அதனை அந்த இனத்தின், சாதியின், வம்சத்தின், குடும்பத்தின் உரிமையாக கருதி அதனை பாதுகாக்கவே வேண்டும்.

சாதிகள், இனங்கள், மதங்கள், மொழிகள், நம்பிக்கைகள் என பன்முக அடையாளங்களை அங்கீகரித்துதான் மனித சமூகம் நீடித்திருக்க முடியும். இந்த அடையாளங்களை தொலைத்துவிட்டு, மானுட சமூகம் நீடித்திருக்க வாய்ப்பே இல்லை.


தொடர்புடைய இடுகைகள்:

1. ஜல்லிக்கட்டின் அரசியல்: ஐநா சுற்றுச்சூழல் உடன்படிக்கை கூறுவது என்ன?

2. முஸ்லிம் நாட்டில் ஜல்லிக்கட்டு - எதிர்க்கும் இந்தியா: நீங்கள் அறியாத தகவல்கள்!

3. ஜல்லிக்கட்டு: உலகம் அழியாமல் தடுக்கும் உன்னதப் பண்பாடு!


4. ஜல்லிக்கட்டை எதிர்க்கும் முற்போக்கு - சாதிஒழிப்பு கும்பல்!

திங்கள், ஜனவரி 16, 2017

ஜல்லிக்கட்டின் அரசியல்: ஐநா சுற்றுச்சூழல் உடன்படிக்கை கூறுவது என்ன?

ஐக்கிய நாடுகள் அவையின் மூலம் உயிரின பன்மயத்தைக் காப்பாற்றும் முயற்சியில் உலகநாடுகள் ஈடுபட்டுள்ளன. அந்த முயற்சியில் ஜல்லிக்கட்டும் ஒரு உயிரிப்பன்முகத்தன்மை (biodiversity) முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாரம்பரிய விளையாட்டாக உள்ளது. 

ஆனால், இந்திய அரசும் தமிழக அரசும் இந்த சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை உணராமலும், இதனை உச்சநீதி மன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லாமலும் - ஒரு பாரம்பரிய விளையாட்டுக்கு மூடுவிழா நடத்தப்படுவதை வேடிக்கைப் பார்க்கின்றனர்.

ஜல்லிக்கட்டில் மாடும் மனிதனும் தொடர்புபட்டிருக்கிறார்கள். இந்தத் தொடர்பு வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே தொடங்கிய பந்தம். ஏறுதழுவுதல் என்பது தமிழர் பண்பாட்டில் பன்னெடுங்காலமாக இருந்துவரும் ஒரு பாரம்பரிய விளையாட்டு. சிந்து சமவெளி நாகரிகத்திலும், தொல்தமிழர் ஓவியங்களிலும், நடுகற்களிலும், பழந்தமிழ் இலக்கியங்களிலும் இந்த விளையாட்டு இடம்பெற்றுள்ளது.

மஞ்சு விரட்டு என்பது ஊரில் உள்ள மாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றைச் சுதந்திர வெளியில் திரிய விடுவதாகும். வட மாவட்டங்களில் இவ்விளையாட்டு உயிர்ப்புடன் நிலவுகின்றது. பொங்கல் திருநாளை அடுத்து மாட்டுப் பொங்கல் கொண்டாடிய பின்னர் பொதுவாக பரிசுப் பொருள்கள் கட்டி ஊர்ப் பொதுவிடங்களில் இளைஞர் பிடிக்குமாறு விடும் ஒரு விழாவாக மாடு விரட்டுதல் நடைபெறுகிறது. 

நாமக்கல், சேலம் மாவட்டங்களில் மாடு விடுதல் என்னும் விளையாட்டு நடைபெறுகின்றது. ஒவ்வொரு ஊர் சார்பாக வளர்க்கப்படும் மாடுதான் இந்தப் பந்தயத்தில் பங்கு பெறுகின்றது. எந்த மாடு முதலில் வருகின்றதோ அதற்குப் பரிசு தரப்படுகிறது. அறுவடை முடிந்து மக்கள் மகிழ்ச்சியாக விளையாடி மகிழும் விளையாட்டுக்கள் இவை. இவற்றில் பயன்படுத்தப்படும் மாடுகள் போற்றப்படுகின்றன. அவற்றைப் பேணி வளர்க்கிறார்கள்.
மடகாஸ்கர் நாட்டின் ரூபாய் தாளில் தமிழர்களின் ஜல்லிக்கட்டு

மாடு விரட்டுதல் என்பது மிகச்சில நிமிடங்கள் நடக்கும் ஆபத்தில்லாத விளையாட்டு ஆகும். ஜல்லிக்கட்டு அதைவிட குறைவான நேரமே நடத்தப்படுகிறது. இந்த விளையாட்டில் காயம்படாத காளைகள்தான் இடம்பெற வேண்டும் என்பதும், பங்கேற்கும் காளைகளை காயம்படச் செய்யக் கூடாது என்பது விதிகளாக கடைபிடிக்கப்படுகின்றன.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகளில் கோயில் காளை என்பது முக்கியமானதாகும். ஊரே ஒன்று சேர்ந்து வளர்க்கும் இந்தக் காளையை யாரும் பிடிப்பது கூட இல்லை. ஆண்டில் ஓரிரு முறை மட்டுமே ஜல்லிக்கட்டில் காளைகள் பங்கேற்கின்றன.

மாடுகளை துன்புறுத்தவே வாய்ப்பில்லாத இந்த விளையாட்டை, மாடுகளைத் துன்புறுத்தி கொலை செய்யும் மேற்குலக நாடுகளின் காளைச் சண்டையுடன் தொடர்புபடுத்தி தடை செய்துள்ளனர். உள்ளூர் மக்களின் கலாச்சார மனித உரிமைக்கு இந்தத் தடை எதிரானதாகும். அவ்வாறே உயிரினப் பன்மயப் பாதுகாப்புக்கும் ஜல்லிக்கட்டு தடை ஆபத்தாக மாறியுள்ளது.

ஜல்லிக்கட்டின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம்

உலகைக் காக்க இரண்டு உடனடி நடவடிக்கைகள் தேவைப்படுவதாக அறிவியலாளர்களும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களும் கருதுகின்றனர். காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல், உயிரினப் பன்மயம் அழியாமல் காத்தல் ஆகியனதான் அந்த இரண்டு அதிமுக்கியமான உலகக் கடமைகள். இந்த இரண்டு நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக மேற்கொள்ளப்பட்டாக வேண்டும். தவறினால் உலகம் பேரழிவைச் சந்திக்கும்.

உலகின் உயிரியல் பன்மயத்தை (biodiversity) காப்பதற்கான ஐநா பேரவை 1992 ஆம் ஆண்டு, பிரேசில் நாட்டின் ரியோ - டி - ஜெனிரோ நகரில் கூடிய புவி உச்சி மாநாட்டில் உருவாக்கப்பட்டது. உயிரியல் பன்மயம் மேலும் அழிந்துவிடாமல் காப்பாற்றுதல், வளம் குன்றா வகையில் உயிரியல் பன்மயத்தைப் பயன்படுத்துதல், அதனால் கிடைக்கும் பலன்களை எல்லா மக்களும் நியாயமாகவும் சமமாகவும் பகிர்ந்து கொள்ளுதல் என்பது இந்த உயிரியல் பன்மயப் பேரவை (Convention on Biological Diversity) அமைப்பின் நோக்கமாகும்.

இந்த அமைப்பு 18 ஆண்டுகாலம் பேச்சுவார்த்தை நடத்தி, இறுதியில் 2010 ஆம் ஆண்டில் ஜப்பான் நாட்டின் நகோயா நகரில் ஒரு உடன்பாட்டை எட்டின (Nagoya Protocol). அதன்படி, உயிரினப் பன்மய அழிவைத் தடுத்தல், மரபணு வளங்களை அடைதல் மற்றும் பலன்களைப் பகிர்ந்து கொள்ளுதல் குறித்த செயல்திட்டங்களை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டு கையொப்பம் இட்டுள்ளன. இந்திய நாடும் இந்த உடன்படிக்கையில் கையொப்பம் இட்டு ஏற்றுக்கொண்டுள்ளது.
உயிரியல் பன்மயப் பேரவையின் கீழ் உள்ளூர் மக்கள் உலகின் உயிர்வாழ்க்கையைக் காப்பதில் முதன்மை பங்காற்றுகின்றனர். இந்தப் பேரவையின் விதி 8 பத்தி J இன் கீழ் 'உயிரிப் பன்மயப் பாதுகாப்புடன் தொடர்புடைய பாரம்பரிய அறிவினைக் காப்பாற்றுவதும், மதிப்பதும் அரசாங்கத்தின் கடமை ஆகும்.

Convention on Biological Diversity: Article 8. (j)

Each Contracting Party shall, as far as possible and as appropriate: (j) Subject to its national legislation, respect, preserve and maintain knowledge, innovations and practices of indigenous and local communities embodying traditional lifestyles relevant for the conservation and sustainable use of biological diversity and promote their wider application with the approval and involvement of the holders of such knowledge, innovations and practices and encourage the equitable sharing of the benefits arising from the utilization of such knowledge, innovations and practices;

விதி 10 பத்தி C பிரிவின் கீழ் "பாரம்பரிய கலாச்சார வழக்கங்களுக்காக மரபுவழியில் உயிரியல் வளங்களை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துவதும் பாதுகாப்பதும் அரசாங்கத்தின் கடமை ஆகும்.

Convention on Biological Diversity: Article 10. (c)

Each Contracting Party shall, as far as possible and as appropriate: Protect and encourage customary use of biological resources in accordance with traditional cultural practices that are compatible with conservation or sustainable use requirements;

ஐநா உயிரியல் பன்மய உடன்படிக்கை என்பது உலகநாடுகளால் ஏற்கப்பட்ட பன்னாட்டு சட்டம் ஆகும். எனவே மேற்கண்ட பன்னாட்டு சுற்றுச்சூழல் சட்டப்பிரிவுகள் பிரிவு 8 J மற்றும் பிரிவு 10 C ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய சட்டப்படியான கடமை இந்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் உண்டு.

ஐநா உயிரிப்பன்மய உடன்படிக்கையை நிறைவேற்றும் வகையில் 'ஆய்ச்சி இலக்கு' எனும் வியூகத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது (Aichi Biodiversity Targets). 2011 - 2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் உலகின் உயிரியல் பன்மய அழிவைத் தடுப்பதற்கான செயல்திட்ட வியூக இலக்குகள் இவையாகும்.

இந்த இலக்கின் 13 ஆம் பிரிவு கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இனங்கள் உட்பட, பழக்கப்பட்ட விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களின் மரபின வேறுபாட்டினை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது.

Aichi Biodiversity Targets – 13

By 2020, the genetic diversity of cultivated plants and farmed and domesticated animals and of wild relatives, including other socio-economically as well as culturally valuable species, is maintained, and strategies have been developed and implemented for minimizing genetic erosion and safeguarding their genetic diversity.

இதே இலக்கின் 18 ஆம் பிரிவு 'உயிரிப் பன்மயப் பாதுகாப்புடன் தொடர்புடைய உள்ளூர் மக்களின் பாரம்பரிய அறிவு, பாரம்பரிய கண்டுபிடிப்புகள், பழக்கங்கள் மற்றும் உயிரியல் வளங்களின் மரபுவழி பயன்பாடும் மதிக்கப்பட வேண்டும். உயிரியல் பாதுகாப்பு உடன்படிக்கையை செயல்படுத்துதலில் இவை உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் இணைக்கப்பட வேண்டும்" என்கிறது.

Aichi Biodiversity Targets – 18

By 2020, the traditional knowledge, innovations and practices of indigenous and local communities relevant for the conservation and sustainable use of biodiversity, and their customary use of biological resources, are respected, subject to national legislation and relevant international obligations, and fully integrated and reflected in the implementation of the Convention with the full and effective participation of indigenous and local communities, at all relevant levels.

ஆக, உயிரியல் பன்மயத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற உலகளாவிய முயற்சிகளில், உள்ளூர் மக்களின் அறிவு, அவர்களின் மரபுவழி நம்பிக்கைகள், கலாச்சார நடவடிக்கைகள், அவற்றோடு தொடர்புடைய உயிரினங்களும் இடம்பெற்றுள்ளன.

அந்த வகையில் தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டும் அதனுடன் தொடர்புடைய உள்ளூர் மாட்டு இனங்களும் உலகளாவிய உயிரிப்பன்மய பாதுகாப்பில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.

பாரம்பரிய அறிவு

ஒவ்வொரு நிலப்பகுதியிலும் நிலவும் பருவகாலம், அங்கு உள்ள தாவரங்கள், விலங்குகள், நீர்வாழ்வன, கால்நடைகள் குறித்த அறிவு அந்தப் பகுதியில் காலம் காலமாக வாழ்ந்துவரும் உள்ளூர் மக்களிடம் பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வருகிறது. பேசும் மொழி, பழக்க வழக்கங்கள், திருவிழாக்கள், விளையாட்டுகள், கதைகள், ஓவியங்கள், நம்பிக்கைகள் என பல வழிகளிலும் ஒரு தலைமுறையின் பாரம்பரிய அறிவு அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லப்படுகிறது.

ஐநா உயிரிப்பன்மய உடன்படிக்கையின் கீழ் 'பாரம்பரிய அறிவு' என்பது 'பாரம்பரிய அறிவு, கண்டுபிடிப்பு மற்றும் பழக்கம்' என்று வரையறுக்கப்படுகிறது. பலதலைமுறையினரின் பட்டறிவிலும், செய்முறைகளிலும், பண்பாட்டு நிகழ்வுகளிலும் இந்த அறிவு பொதிந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல், உள்ளூரில் பேசப்படும் மொழிக்கும் இந்த அறிவுக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது.

(Traditional knowledge, innovations and practices of indigenous and local communities describes the body of knowledge built by indigenous and local communities over generations. Developed from experience gained over the millennia and adapted to the local culture and environment, traditional knowledge tends to be collectively owned, transmitted orally from generation to generation and has a diversity of forms ranging from stories and folklore to agricultural and animal husbandry practices.)

எனவேதான், 'உயிரியல் வளங்களின் மரபுவழி பயன்பாடு' என்பதை ஐநா உயிரிப்பன்மய உடன்படிக்கை மதிக்கக் கோருகிறது. 'உள்ளூர் மக்களின் அடையாளம், வாழ்வாதாரம், பண்பாடு, மொழி அனைத்தும் அவர்கள் வாழும் பகுதியின் சுற்றுச்சூழலுடனும் உயிரின வளத்துடனும் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருப்பதால் - உள்ளூர் மக்களின் பண்பாடும் நம்பிக்கைகளும் கூட உயிரியல் பன்மயத்தைக் காப்பதில் ஒரு அங்கம் தான்.

(Customary use of biological resources refers to indigenous and local systems for the control, use and management of natural resources. Customary use of biological resources includes spiritual, cultural, economic and subsistence functions.)

உள்ளூர் மக்களின் பாரம்பரிய அறிவில் கால்நடைகள் வளர்ப்பு குறித்த அறிவு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. பாரம்பரிய கால்நடை இனங்களின் தொடர்ச்சி என்பது ஒரு தனித்த செயல் அல்ல. பாரம்பரிய கால்நடைகளின் இருத்தல் மக்களின் பண்பாடுடனும் அந்தப் பகுதியின் சுற்றுச்சூழலுடனும் இணைந்ததாக இருக்கிறது.
உண்மையில் இந்தியாவின் மரபின கால்நடைகள் அனைத்தும் உள்ளூர் மக்கள் சமூகத்தினரின் பாரம்பரிய கண்டுபிடிப்புகளே ஆகும். அவற்றை இன்றுவரைக் காப்பாற்றி வளர்த்து வருவதும் உள்ளூர் மக்கள்தான்.

உலகளவில் வேறுபட்ட கால்நடை மரபினங்களைக் கொண்டுள்ள நாடுகளில் முதன்மையானது இந்தியா. இங்கு 45 மரபின வகையான மாட்டினங்கள், 4 வகையான ஒட்டக இனங்கள், 19 வகையான ஆட்டு இனங்கள், 39 வகையான செம்மறி ஆட்டு இனங்கள், 19 வகையான கோழியினங்கள், 11 வகையான வாத்து இனங்கள் உள்ளன.

இவை அனைத்தும் பல்லாயிரக் கணக்கான வருடங்களாக உள்ளூர் மக்களின் அறிவு வளத்தால் பராமரிக்கப்பட்டு வரும் பழக்கப்பட்ட வீட்டு விலங்கு வகைகள் ஆகும். கருத்தரிக்கச் செய்தல், சரியான மேய்த்தல், நோய்த்தடுப்பு என எல்லாவித பராமரிப்புகளையும் மேற்கொண்டு உள்ளூர் மக்கள் இவற்றை பாதுகாத்து வந்துள்ளனர்.

தமிழகத்தில் 6 வகையான மாட்டு இனங்கள் உள்ளன. கொங்கு மண்டலத்தில் காங்கேயம், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் பர்கூர் மலைமாடு என்ற இனமும், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் உம்மலச்சேரி என்ற இனமும், மதுரை மாவட்டத்தில் புளியகுளம் என்ற இனமும், தேனி மாவட்டத்தில் மலைமாடு என்ற இனமும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற இடங்களில் ஆலாம்பாடி என்ற இனமும் உள்ளன. இந்த மாட்டு இனங்கள் மக்களின் பண்பாட்டில் ஒரு அங்கமாக இருந்து வருகின்றன.


ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா பந்தயம் போன்ற காளை மாட்டு விளையாட்டு நிகழ்ச்சிகள் பல பாரம்பரிய மாட்டு இனங்கள் வளர்க்கப்படுவதற்கு காரணமாக உள்ளன. ஜல்லிக்கட்டில் கிராமங்கள் சார்பில் நிறுத்தப்படும் காளைகள் அதிகம். இந்த காளைகள் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்லாமல் அந்த கிராமங்களில் உள்ள மாடுகளின் இனப்பெருக்கத்துக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. ஜல்லிக்கட்டு காளைகள் அழிக்கப்பட்டால் தமிழகத்தில் மாட்டு இனமே அழியும் ஆபத்து ஏற்படும்.

ஜல்லிக்கட்டில் காங்கேயம் காளைகள் பிரதானமாக உள்ளன. கூடவே புலிக்குளம், மலைமாடு, கும்பகோணம், உம்பலாச்சேரி ஆகிய உள்ளூர் மாட்டு இனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஜல்லிக்கட்டு இல்லா விட்டால், இந்த மாடுகளை வளர்ப்பதற்கான தேவை இல்லாமல் போய்விடும். இவற்றை வளர்ப்பதற்கான உள்ளூர் மக்களின் பிரத்தியோகமான அறிவும் அழிந்து போகும்.

ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட வேண்டும்

உலகெங்கும் உள்ளூர் மக்களின் பண்பாட்டுடன் கால்நடைகள் பின்னிப்பிணைந்துள்ளன. பண்பாட்டுத் திருவிழாக்களில் கால்நடைகள் பங்கெடுப்பது கால்நடை இனங்களின் வளர்ச்சிக்கும் எதிரானது அல்ல. பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகளான ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட விலங்குகள் மனிதனுடன் இணைந்தே வாழ்கின்றன. மனித பண்பாட்டிலும் பழக்க வழக்கங்களிலும் அவை இணைந்தே பயணிக்கின்றன. 
இன்றைக்கும் கிராமப்புற வீடுகளில் கால்நடைகளை வளர்க்கும் குடும்பத்தினர் கால்நடைகளையும் குடும்ப உறுப்பினராகவே கருதுகின்றனர். உள்ளூர் மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக உள்ள காளைகள் கலாச்சார திருவிழாக்களில் பங்கேற்பதை விலங்குகளின் பாதுகாப்புக்கு எதிரானதாக சித்தரிப்பது முட்டாள்தனமானது மட்டுமல்ல, தவறான உள்நோக்கமும் கொண்டதாகும்.

தமக்கென்று ஒரு கலாச்சாரத்தை வாழ்க்கையாக ஏற்றுக்கொண்டவர்களும் தன்னுடைய கலாச்சாரத்தை இழந்தவர்களும் - இன்னொரு பரம்பரிய கலாச்சாரத்தை அழிக்க முயற்சிப்பது அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானதாகும்.

'விலங்குகளை வதை செய்யாதே' என்று புதிதாகக் கிளம்பியுள்ளவர்கள் எவரும் கால்நடைகளுடன் வாழ்பவர்களும் இல்லை. அதை வளர்ப்பவர்களும் இல்லை. பாரம்பரிய காலநடை வளம், அதன் வளர்ப்பு முறை போன்ற எதையும் இவர்கள் அறிந்தவர்கள் இல்லை. மிஞ்சிப்போனால், வெளிநாட்டு நாய்களை அதிக விலைகொடுத்து வாங்கி, அதனை குளிர்சாதன அறைகளில் வைத்து கொஞ்சுவதுதான் கால்நடைகளுக்கும் இவர்களுக்குமான உறவு.

பன்னெடுங்காலமாக கால்நடைகளும் தாமும் ஒன்றாகவே வாழ்ந்துவரும் பாரம்பரிய மக்களின் பண்பாட்டை இவர்கள் அறிய மாட்டார்கள். தான் பட்டினி கிடந்து மாடுகளுக்கும் உணவளிக்கும் நாட்டுப்புற மக்களின் பண்பாட்டு பழக்கங்களை 'காட்டுமிராண்டித்தனம்' என்று விமர்சிப்பது ஏற்புடையது அல்ல. அதில் நியாயம் ஏதும் இல்லை.

மற்றவர்களின் பண்பாட்டு வேறுபாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் அழிக்க முயல்வதுதான் இனவெறிக்கும், இனப்படுகொலைக்கும் தொடக்கப் புள்ளியாக அமைகிறது. இந்த சகிப்புத்தன்மையற்ற போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

உள்ளூர் மக்களின் பண்பாட்டு வேறுபாடுகளை அழிக்க முயலாமல், அதனை அங்கீகரித்து, பாதுகாக்க முன்வருவதே நாட்டு நலனுக்கும், மக்கள் நலனுக்கும், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும் நன்மை செய்வதாக அமையும்.

எனவே, ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல், மாடு விரட்டுதல், மஞ்சு விரட்டு, ரேக்ளா பந்தயம் போன்ற பாரம்பரிய இனக் கால்நடைகளுடன் இணைந்த பாரம்பரிய பண்பாட்டு விழாக்களை எதிர்ப்பதைக் கைவிட்டு - அவற்றை ஆதரித்து ஜல்லிக்கட்டு தடையை நீக்க அனைவரும் முன்வர வேண்டும்.

மனிதர்களால் தேர்வு செய்யப்பட்டு காலம் காலமாக வளர்க்கப்பட்டு வரும் 'பழக்கப்பட்ட விலங்கான ' (domesticated animals) காளைகளை மத்திய அரசு வனவிலங்காக அறிவித்த செயல் நியாயமற்றது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்திலிருந்து காளைகளை நீக்க வேண்டும். அதன் மூலம் உயர்நீதிமன்றத்தின் தடையையும் நீக்கி, ஜல்லிக்கட்டையும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளையும் ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

வெள்ளி, ஜனவரி 13, 2017

ஜல்லிக்கட்டு: உலகம் அழியாமல் தடுக்கும் உன்னதப் பண்பாடு!


ஜல்லிக்கட்டு எனும் ஏறுதழுவுதல் நிகழ்ச்சிக்கு தடை விதித்து இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழ்ப் பண்பாட்டின் ஒரு அங்கமான ஏறுதழுவுதல் விழாக்களை நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரானதாகும்.

உலகின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தற்போதைய முயற்சிகளில், உயிரிப்பன்மயத்தைக் காப்பது முதன்மையானதாகும். இதற்கான ஐநா உயிரிப்பன்மயப் பேரவை (Convention on Biological Diversity) 1992 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, அதன் கீழ் உலக நாடுகளுக்கு இடையேயான உடன்படிக்கை 2010 ஆம் ஆண்டில் ஐநா அவையால் ஏற்கப்பட்டது.

உள்ளூர் மக்களுக்கும் அவர்கள் வாழும் இயற்கை சூழலுக்கும் இடையேயான பாரம்பரிய அறிவு, உயிரிப்பன்மயத்தைக் காப்பாற்றுவதற்கான ஒரு இன்றியமையாத தேவை என ஐநா உயிரிப்பன்மய உடன்படிக்கை ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்திய அரசு கையொப்பமிட்டு ஏற்றுக்கொண்டுள்ள இந்த பன்னாட்டு சுற்றுச்சூழல் உடன்படிக்கையின் படி - தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டை காப்பாற்றுவது இந்திய அரசின் கடமை ஆகும். ஜல்லிக்கட்டு தடையை விலக்கத் தவறியதன் மூலம் இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தமது கடமையை நிறைவேற்றத் தவறியுள்ளன.

இந்நிலையில், இயற்கையைக் காக்க பாடுபடும் அமைப்புகளும் தனிநபர்களும் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க முன்வர வேண்டும். ‘ஜல்லிக்கட்டு கூடவா ஒரு சுற்றுச்சூழல் சிக்கல்?' என்ற கேள்வி எழுவது இயல்பு.  'உயிரிப்பண்பாட்டுப் பன்மயம்' (Biocultural Diversity) என்பது இந்தக் கேள்விக்கு விடையாக அமைகிறது.

 'உயிரிப்பண்பாட்டுப் பன்மயம்' என்றால் என்ன?

பலகோடி பால்வெளி மண்டலங்களும் அவற்றுள் பலகோடி விண்மீன்களும் அண்டவெளியில் சுழன்றாலும், உயிர்வாழ்க்கை நிலவும் ஒரே இடமாக பூமி மட்டுமே இருக்கிறது. பூமிப்பந்தில் உயிர் வாழ்வை நீடித்திருக்கச் செய்வதுதான் மனிதன் செய்யக்கூடிய எல்லா செயல்களை விடவும், மிக மிக முதன்மையான செயல்.

உயிரினங்கள் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்வதன் மூலமாகவே பூமியில் உயிர்வாழ்க்கை சாத்தியமாகியுள்ளது. எந்த ஒரு உயிரும் தனித்து வாழ இயலாது. இயற்கை அமைப்பில் ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு இடமும் தேவையும் இருக்கிறது. எதுவுமே வீணாகப் படைக்கப்படவில்லை. உயிரினங்களுக்கு இடையே உள்ள தொடர்பு ஒரு மாபெரும் வலைப்பின்னல் ஆகும். இந்த வலைப்பின்னலில் ஒரு கண்ணி அறுந்தால் அது மற்றதையும் பாதிக்கும்.

இவ்வாறு உயிரினங்களின் வலைப்பின்னல் பற்றி பேசினால் - அது பூமியெங்கும் உள்ள நுண்ணுயிர்களையும், தாவரங்களையும், விலங்குகளையும் குறிப்பதாக நினைக்கிறோம். ஆனால், தாவரங்களும் விலங்குகளும் மட்டும் இந்த வலைப்பின்னலில் இல்லை. கூடவே, பல லட்சம் ஆண்டுகளாக மனிதர்களும் இந்த உயிரின வலையத்தில் தான் வாழ்ந்து வருகிறோம்.

மனிதன் இயற்கைக்கு ஏற்ப தன்னை தகவமைத்து வாழ்ந்து வருகிறான். தனது எல்லா தேவைகளையும் இயற்கையிடம் இருந்துதான் பெறுகிறான். மனிதர்களின் மொழி, பழக்கம், பண்பாடு என எல்லாமும் அவன் வாழும் இயற்கைய சூழலை சார்ந்தே வளர்ந்து வந்துள்ளது.

ஆக, பூமியில் வாழும் உயிரினங்களைப் பற்றி பேசுவதை 'உயிரிப்பன்மயம்' (Biodiversity) என்று குறிப்பிடுவது போன்று - உயிரிப்பன்மயத்துடன் மனித வாழ்வும் இணைந்தே இருப்பதை 'உயிரிப்பண்பாட்டு பன்மயம்' (Biocultural Diversity) என அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

உயிரிப்பண்பாட்டுப் பன்மயத்தின் மூன்று அங்கங்கள்.

உயிரிப்பண்பாட்டுப் பன்மயம் (Biocultural Diversity)  என்பதை மூன்று பகுதிகளாக சுற்றுச்சூழல் அறிவியலாளர்கள் பகுத்துள்ளனர். அவை 1. உயிரிப்பன்மயம் (Biodiversity), 2. பண்பாட்டுப் பன்மயம் (Cultural Diversity), 3. மொழிப் பன்மயம் (Linguistic Diversity) ஆகியனவாகும்.

1. உயிரிப்பன்மயம் (Biodiversity)

உயிரிப்பன்மயம் (Biodiversity) அல்லது உயிரியல் பன்மயம் (Biological Diversity) என்பது உயிரினங்களுக்கு இடையே காணப்படும் வேறுபாடுகளைக் குறிப்பது ஆகும். உலகில் வாழுகின்ற நுண்ணுயிர்கள், தாவரங்கள், விலங்குகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தது 'உயிரிப்பன்மயம்' ஆகும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த அளவுக்கு உயிரின வேறுபாடு காணப்படுகிறதோ, அந்த அளவுக்கு அது உயிரிப்பன்மய வளம் மிகுந்த பகுதியாகக் கருதப்படுகிறது.

பூமிப்பந்தில் சுமார் 87 லட்சம் வேறுபட்ட உயிரின வகைகள் இருக்கலாம் என அறிவியலாளர்கள் கணிக்கின்றனர். உலகம் முழுமைக்குமான உயிரினங்களின் வேறுபாட்டை உயிரிக்கோளம் (Biosphere) என்றும் அழைக்கின்றனர்.

2. பண்பாட்டுப் பன்மயம் (Cultural Diversity)

பண்பாட்டுப் பன்மயம் என்பது மனிதர்களுக்கு இடையே காணப்படும் வேறுபாடுகளைக் குறிப்பது ஆகும். மனிதர்களுக்கு இடையே நிலவும் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், வழிபாட்டுமுறை, வாழ்வுமுறை, பேச்சுவழக்கு, உணவுமுறை, உடை என அனைத்தையும் உள்ளடக்கியது பண்பாடு.

உலகம் முழுவதுமான பல்வேறு மனித குழுவுக்கு இடையே இருக்கும் வேறுபட்ட பண்பாடுகள் அனைத்தையும் உள்ளடக்கி மனிதப்பண்பாட்டுக் கோளம் (Ethnosphere) என்று அழைக்கின்றனர்.

இனம், மொழி, மதம், சாதி, வாழும் இடம் என பலவற்றின் அடிப்படையில் ஒருவரே வேறுபட்ட பண்பாட்டுக் குழுக்களில் இடம்பெறக்கூடும் என்பதால், பண்பாட்டு பன்முகத்தன்மையை துள்ளியமாக அளவிட இயலாது.

3. மொழிப் பன்மயம் (Linguistic Diversity)

மொழிப் பன்மயம் என்பது ஒரு குறிப்பிட்ட நாடு அல்லது இடத்தில் எத்தனை மொழிகளைப் பேசுகிறர்கள் என்பதாகும். உலகம் முழுவதும் சுமார் 6500 மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் 85% மொழிகளை பழங்குடியின மக்கள் தான் பேசுகின்றனர். உலகின் அனைத்து மொழிகளையும் உள்ளடக்கி மொழிக்கோளம் (Logosphere) என அழைக்கின்றனர்.

சுற்றுச்சூழலுக்கும் பண்பாட்டுக்கும் என்ன தொடர்பு?

மொழி, பண்பாடு, சுற்றுச்சூழல் இந்த மூன்றுவிதமான பன்மயங்களுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்பது அறிவியலாளர்களின் ஆய்வு முடிவாகும். ஒரு இடத்தில் நிலவும் இயற்கைச் சூழலும் அந்த இடத்தில் வாழும் மக்களின் பண்பாடும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது. இயற்கை பண்பாட்டின் ஆதாரமாக இருக்கிறது. பண்பாடு இயற்கையை காக்கும் மனித அறிவின் ஓர் அங்கமாக இருக்கிறது.

மனிதன் தோன்றியதில் இருந்தே இயற்கையுடன் இணைந்துதான் வாழ்கிறான். உணவு, குடிநீர், காற்று, மருத்துவம், உடை, வீடு என எல்லா பொருட்தேவைகளுக்கும் இயற்கையை சார்ந்தே வாழ்கிறான். மனம் சார்ந்த, நம்பிக்கை சார்ந்த தேவைகளுக்கும் மனிதன் இயற்கையை சார்ந்திருக்கிறான்.

இயற்கையுடனான மனிதனின் இந்த தொடர்பு தாவரங்கள், உயிரினங்கள், பருவகாலம் குறித்த புரிதலையும் அறிவையும் உருவாக்குகிறது. இந்த அறிவு அந்தந்த பகுதிக்கு ஏற்ப அமைகிறது. உள்ளூர் மக்களின் இந்த ஆழ்ந்த அறிவும் அனுபவமும் அந்தப் பகுதியில் பேசப்படும் மொழியில் செறிந்து, அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது.
இவ்வாறாக, ஒரு பகுதியில் இருக்கும் உயிரிச்சூழல், மக்கள் பேசும் மொழி, அவர்களது பண்பாடு ஆகிய அனைத்தும் ஒன்றோடு ஒன்று நெருக்கமான உறவாக நீடிப்பதுடன் - ஒன்று மற்றொன்றை வளப்படுத்துகிறது. மொழியும் பண்பாடும் அழியுமானால், அந்தப் பகுதியின் சுற்றுச்சூழலும் அழிந்து போகும்.

மக்கள் பண்பாட்டில் வேறுபாடும் மொழிகளில் வேறுபாடும் மிகுதியாகக் காணப்படும் இடங்களில்தான் சுற்றுச்சூழல் வளம் அதிகமாக இருக்கிறது. ஒற்றை மக்கள் இனமும் ஒற்றை மொழியும் பேசப்படும் இடங்களில் உயிரின வளமும் குறைவாக இருக்கிறது. ஆக, எங்கே பண்பாட்டில் பன்முகத் தன்மை நீடிக்கிறதோ, அங்கே உயிரியல் பன்மயமும் நீடிக்கும்.  

எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றால் - உயிரியல் பன்மயத்தைக் காப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், பண்பாட்டுப் பன்முகத் தன்மையையும் மொழிப் பன்மயத்தையும் கூட காப்பாற்றியாக வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

உயிரிப் பண்பாட்டு பன்மயத்துக்கு என்ன நடக்கிறது?

உயிரியல் பண்பாட்டு பன்மயச் சூழல் இப்போது அழிந்துகொண்டிருக்கிறது. அறிவியலாளர்கள் கருத்துப்படி மனித இனம் ஆறாவது பிரளத்தை நோக்கிப் பயணிக்கிறது (6th mass extinction of life on earth). அதாவது, இந்த பூமிப்பந்தில் உயிர்வாழ்க்கை இது வரை ஐந்து முறை பேரழிவைச் சந்தித்து மீண்டிருக்கிறது. கடைசியாக 6 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் உயிர்வாழ்க்கை அழிந்தது. அப்போதுதான் டைனோசர்கள் அழிந்தன. அந்தப் பேரழிவில் தப்பித்த மிகச்சில உயிரிகளில் இருந்துதான் மனிதன் தோன்றினான்.

இதற்கு முன்பு நேர்ந்த பிரளயங்களுக்கும் இப்போதைய பேரழிவுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வேறுபாடு என்னவென்றால் - முந்தைய பேரழிவுகள் எல்லாம் இயற்கையாகவே நேர்ந்தன. இப்போதைய உலகப் பேரழிவு மனித செயல்களால் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மனிதனால் உலகம் பேரழிவில் சிக்கியிருப்பதை மெய்ப்பிக்கும் ஆதாரமாக காலநிலை மாற்றத்தையும் உயிரிப்பன்மய அழிவையும் சொல்லலாம்.

உயிரிப்பன்மய அழிவினை தனியாக வெறும் உயிரினங்களின் அழிவு என்று மட்டும் பார்க்க முடியாது. அதனுடன் சேர்த்து பண்பாடும் மொழியும் அழிகிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலகெங்கும் மொழி வேறுபாடும், கலாச்சார வேறுபாடும் அழிந்து - ஒரு சில மொழிகளையும் மிகச்சில கலாச்சாரங்களையும் பின்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

1970 ஆம் ஆண்டுக்கு பின்னாலான காலத்தில் உலக மொழிகளில் 20% அழிந்து போய்விட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது, சிறிய மொழிகளைப் பேசுவோர் அதனைக் கைவிட்டு பெரிய மொழிகளைக் கைக்கொள்வதால் மொழிகள் அழிந்துபோகின்றன.

பண்பாடும் மொழியும் இயற்கையுடன் இணைந்து வாழும் அறிவை ஒரு தலைமுறையிடம் இருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்திவருவது காலம் காலமாக நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் ஒரு பகுதியின் மொழியும் பண்பாடும் அழியும்போது, அந்தப்பகுதியின் இயற்கையுடனான மனித உறவில் விரிசல் ஏற்படுகிறது. இது சுற்றுச்சூழல் அழிவிற்கு வழிவகுக்கிறது.

உயிரிப் பண்பாட்டு பன்மயம் ஏன் அழிகிறது?

உயிரியல் பன்மயம், மொழிகள், பண்பாடு - இவை எப்போதும் ஒரே நிலையில் இருப்பது இல்லை. இயற்கை தொடர்ச்சியாக தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்கிறது. உயிரிச்சூழலிலும், மொழிகளிலும், பண்பாட்டிலும் மாற்றங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. எந்த ஒரு புதுச் சூழ்நிலையிலும் இயற்கை தனக்குத்தானே தகவமைத்துக் கொள்ளும் வல்லமையைப் பெற்றிருக்கிறது. இயற்கையுடன் இணைந்து கலாச்சாரமும் புதுமையடைகிறது.

இந்த மாற்றம் மிக மெதுவாகவும், தேவைக்கான அளவிலும் மட்டுமே இத்தனைக் காலமும் நடந்து வந்திருக்கிறது. மனித இனத்திலும், உயிரினங்களிலும், இயற்கை சூழலிலும் பல தலைமுறைகள் காலத்தில் மெதுவாக மாற்றம் நேர்ந்தது. ஆனால், இப்போது எல்லாமும் திடீரென மாறிவருகின்றன. சமூகம், பொருளாதாரம், அரசியல் என அனைத்திலும் உலகம் முழுவதும் ஒரே பாதைக்கு மாற்றப்படுகிறது. ஒற்றை மயமான உலகம். ஒற்றை மயமான பொருளாதாரக் கொள்கை, ஒற்றை மயமான அரசியல். ஒரு சில மொழிகள் - என வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பதுபோல, உலகில் எல்லாமும் ஒற்றைத் தன்மைக்கு மாற்றப்படுகிறது.

பன்முகப்பட்ட கலாச்சாரம், மொழி, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் என அனைத்தும் மாற்றப்பட்டு - ஒரே வண்ணம் பூசும் நோக்கில் மாற்றங்கள் திணிக்கப்படுகின்றன. ஒரு காட்டில் எல்லா விலங்கும் சிங்கமாக இருந்தால் அங்கு சிங்கங்களின் வாழ்க்கை நீடிக்காது. ஒரு காட்டில் எல்லா மரங்களும் ஒரே வகை மரங்களாக இருந்தால் அந்த காடும் நீடிக்காது. ஒரு நிலத்தில் ஒரே பயிரை தொடர்ந்து பயிரிட்டால் அந்த நிலமும் வளம் இழந்து போகும். அதே போன்றுதான் - மனிதர்களின் சிந்தனையும் பண்பாடும் ஒரே வகையில் இருந்தால், அந்த சமூகமும் அழிந்து போகும்.

மனித நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள இந்த அதிவேக 'ஒற்றை மய' (Monoculture) மாற்றத்திற்கு இயற்கையால் ஈடுகொடுக்க முடியவில்லை. மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவு, பல லட்சம் ஆண்டுகளாக நாட்டுக்கு நாடு, இடத்துக்கு இடம், சமூகங்களுக்கு சமூகம் மாறுபட்ட வழியில் நீடித்து வந்திருப்பதை இன்றைய மனித சமூகம் ஒரே தலைமுறையில் மாற்றியமைக்கிறது.

உயிரிப்பன்மயத்தில் ஒற்றைத் தன்மை என்பது இயற்கையை அழிக்கிறது. பயிரினங்களில் பல வகைகள் அழிந்து இப்போது எல்லாவற்றிலும் ஓரிரு வகைகள் வந்திருப்பதும், கால்நடைகள் வளத்தில் பல வகைகள் அழிந்து இப்போது எல்லா கால்நடைகளும் ஒரு சில வகைகளாக வந்திருப்பதும் - சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மொழி, இனம், நம்பிக்கை, பண்பாடு என்பனவற்றில் ஒற்றைத் தன்மையைத் திணிப்பதால் உலகெங்கும் போர்களும், வன்முறையும் அதிகரித்து உலகை அமைதியற்ற நிலைக்கு கொண்டு செல்கிறது.

அதே நேரத்தில் - உயிரினம், பண்பாடு, மொழி என்பனவற்றின் 'ஒற்றை மய' சீரழிவுகளில் - ஒன்றின் அழிவு மற்றவற்றின் அழிவை வேகப்படுத்துகின்றன. சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகள் பண்பாட்டையும் மொழியையும் பாதிப்பது போலவே, மொழியிலும் பண்பாட்டிலும் ஏற்படும் அழிவு, சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது.

ஜல்லிக்கட்டும் சுற்றுச்சூழலும்

தமிழ்நாட்டின் சூழலில் தமிழ் மொழியும், இங்கு கொண்டாடப்படும் பண்பாட்டு திருவிழாக்களும் இயற்கையுடன் இணைந்து இயங்குகின்றன. ஒவ்வோரு பகுதியின் ஒவ்வொரு பண்பாட்டு நிகழ்வும் பருவ காலங்களுக்கும், மக்களின் ஓய்வுக்கும் ஏற்ற வகையில் நடந்து வருகின்றன. அந்த வகையில் பொங்கல் பண்டிகை தமிழரின் இயற்கை வழிபாட்டில் ஒரு முதன்மை அடையாளமாக விளங்குகிறது.
பொங்கல் பண்டிகையும், அதன் ஒரு அங்கமான ஜல்லிக்கட்டு என்கிற ஏறுதழுவுதல் நிகழ்வும் - வேளாண்மை மற்றும் கால்நடை வளத்தை போற்றும் வகையிலும், அதனை வளர்க்கும் வகையிலும் இருக்கிறது.

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா பந்தயம் என்கிற வகையிலான கால்நடை விளையாட்டுகள், தமிழ்நாட்டின் கால்நடை வளத்தை போற்றி காப்பாற்றும் வகையில் அமைந்துள்ளது.

ஜல்லிக்கட்டை தடை செய்யும் போது, தமிழ்நாட்டின் கால்நடை மரபுச் செல்வமான காங்கேயம் காளை உள்ளிட்ட காளை இனங்களின் தேவை குறைகிறது. இதனால், தனித்துவம் வாய்ந்த இத்தகைய காளைகளை வளர்ப்பதற்கான தேவையும் இல்லாமல் போய் - உலகின் பல்லுயிர் வளத்தில் அரிதான கால்நடை இனங்கள் அழியும் நிலை வருகிறது.

ஒரு உயிரினத்தின் அழிவு அதனோடு முடிந்து போகாது. அது உயிர்ச்சூழல் வலைப்பின்னலில் எல்லா உயிரினங்களையும் பாதிக்கும். ஆகவே, ஜல்லிக்கட்டை காப்பாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை, அடிப்படையில் சுற்றுச்சூழலைக் காக்கும் ஒரு கோரிக்கையே ஆகும்.

என்ன செய்ய வேண்டும்?

பூமிப்பந்தில் உயிர்வாழ்வின் தொடர்ச்சி நீடித்திருக்க - தலைமுறைகளுக்கு இடையே பாரம்பரிய அறிவினை தொடர்வதும், மொழியைத் தொடர்வதும், கலாச்சாரப் பழக்க வழக்கங்களைத் தொடர்வதும் அவசியமாகும்.

உயிரிப்பண்பாட்டு பன்மயத்தைக் காப்பாற்றுவது என்றால், இப்போது எஞ்சியிருக்கும் பன்முகத் தன்மை இதற்கு மேலும் அழிந்துவிடாமல் காப்பதே உடனடித் தேவை ஆகும். இப்போது இருக்கும் உயிரியல் பன்முகத்தன்மை, பண்பாட்டு வேறுபாடு, மொழி வேறுபாடு - ஆகியன இதற்கு மேலும் அழியாமல் காப்பதே உலக மக்களின் முதன்மையான சுற்றுச்சூழல் கடமை ஆகும்.

ஒவ்வொரு சமூகத்தினரும் தம்முடைய பண்பாட்டைக் காப்பாற்ற முன்வர வேண்டும். தன்னுடைய மொழியை காத்து வளப்படுத்த வேண்டும். தான் வாழும் பகுதியின் சுற்றுச்சூழலைக் காப்பாற்ற வேண்டும். சூழல், மொழி, பண்பாடு இந்த மூன்று பாதுகாப்பு நடவடிக்கைகளும் ஒன்றோடு ஒன்று இணைந்தே உள்ள கடமைகள் ஆகும்.

காலாச்சாரம், பண்பாடு, மரபு என்று ஒருகாலத்தில் பேசப்பட்ட சிலவற்றை, புதிய சூழலில் கைவிட நேரலாம். ஒவ்வொரு காலகட்டத்தின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப பழைய பிற்போக்குத்தனங்கள் கைவிடப்பட வேண்டும். ஒரு காலத்தில் சமுதாயங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வு நிலை அங்கீகரிக்கப்பட்டது. இப்போதைய உலகம் அதனை ஏற்பது இல்லை. ஒருகாலத்தில் குழந்தைத் திருமணங்கள் ஏற்கப்பட்டன. இப்போது ஏற்கப்படுவது இல்லை. அந்த வகையில் உள்ளூர் சமூகங்களின் பண்பாட்டு பழக்க வழக்கங்கள் காலந்தோரும் மாறுதலுக்கு உட்பட்டே வந்துள்ளது.

'குளியல் தொட்டியில் உள்ள தண்ணீரை வெளியே ஊற்ற வேண்டும் என்பதற்காக, தொட்டிக்குள் குளித்துக்கொண்டிருக்கும் குழந்தையையும் சேர்த்து வெளியே ஊற்றிவிடக் கூடாது' என்பார்கள். அவ்வாறே, மக்களின் பண்பாட்டில் இணைந்துள்ள பிற்போக்குத் தனங்கள் கைவிடப்பட வேண்டும் என்பதாற்க, பண்பாட்டையே கைவிட்டுவிடக் கூடாது.

1992 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 'கரி ஓகா உள்ளூர் மக்கள் பிரகடனத்தில் (Kari Oka Declaration of the world’s indigenous peoples) "எங்கள் மூதாதையர்கள் வகுத்துத்தந்த பாதையில் நாங்கள் எதிர்காலத்தை நோக்கி நடக்கும் உரிமையைப் பெற்றுள்ளோம்' என் அறிவித்தனர் (“walk toward the future in the footsteps of their ancestors”). 

எனவே, சரியான புதிய பாதை என்பது பாரம்பரிய வழித்தடத்தில் தொடரும் மற்றுமொரு முயற்சியே ஆகும். பழைய பாரம்பரியத்தை அறவே துறந்து புதிய உலகம் அமையாது.

தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் மக்களின் பன்முகப்பட்ட கலாச்சார வேறுபாடுகளை அங்கீகரித்து தொடர வேண்டும். வாழும் இடப்பகுதி, பின்பற்றும் மதம், சார்ந்திருக்கும் சாதி என பல அடிப்படைகளில் மக்களின் பன்முகப்பட்ட அடையாளமும் கலாச்சார வேறுபாடுகளும் மதிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு பகுதியிலும் பேசப்படும் மொழியும், ஒவ்வொரு சமுதாயத்தினர் பேசும் மொழியும் போற்றி பாதுகாக்கப்படவும், வளர்க்கப்படவும் வேண்டும். ஒரு மொழியின் இடத்தில் இன்னொரு மொழியைத் திணிக்கும் அநீதியை ஒருபோதும் ஏற்கக்கூடாது.

நாடெங்கும் சுற்றுச்சூழல் வளம் காப்பாற்றப்பட வேண்டும். நீர், நிலம், காற்று மாசுபடுத்தப்படாமல் தடுத்தல், உயிரின வேறுபாட்டை பாதுகாத்தல், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல் - ஆகிய அனைத்து சூழல் காப்பு நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

மொத்தத்தில் தமிழ்நாடு, இந்தியா, உலகம் என அனைத்து நிலைகளிலும் பண்பாடு, மொழி, சுற்றுச்சூழல் என்கிற அனைத்து வழிகளிலும் உயிரிப்பண்பாட்டுப் பன்மயத்தைக் காப்பாற்றை அனைவரும் முன்வர வேண்டும்.  

சுற்றுச்சூழலை காப்பதில் ஒரு முதன்மை அங்கமாக ஜல்லிக்கட்டு தடை விலக்கப்பட வேண்டும். பாரம்பரிய கால்நடைகளும் அவற்றுக்கான பண்பாட்டு விழாக்களும் போற்றப்பட வேண்டும்.

வியாழன், ஜனவரி 12, 2017

மறைக்கப்பட்ட வரலாறு: யாருமில்லாத காட்டில் சோழர்களின் அடையாளம்!

ஒரு மாபெரும் வரலாற்று நினைவிடம், ஆள் அரவமற்று வெறுமையில் கிடக்கிறது. தென் கிழக்காசியாவை வெற்றி கொண்ட போர்த்துறைமுகம், மாமன்னர்களின் ஆபத்து கால மறைவிடம், சோழப்பேரரசின் கடைசிக் கால தலைமையிடம் - இப்போது வெறும் மண் மேடாக காட்சியளிக்கிறது.

சிதம்பரம் அருகே கடலோரத்தில் உள்ளது தீவுக்கோட்டை. உள்ளூர் மக்களால் 'கோட்டை மேடு' என்றும், வரலாற்று குறிப்புகளில் 'தீவுக்கோட்டை, தேவிக்கோட்டை, ஜலக்கோட்டை' என்று அழைக்கப்படும் இந்த இடம் - உள்ளூர் கோவில் பத்திரிகையில் 'திருத்தீவுக்கோட்டை' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயற்கை சீற்றத்தின் காரணமாக ஒரேயடியாக ஊரைவிட்டு வெளியேறிய கிராம மக்களின் நினைவுகளில் மட்டுமே இன்னமும் இந்த ஊர் வாழ்கிறது. எஞ்சியிருக்கும் கோட்டை மதில்களின் எச்சம், சிறிய காளியம்மன் கோவில், உடைந்து கிடக்கும் பழைய வீடுகள் - இவை மட்டுமே இன்னமும் மீதம் உள்ளன. மக்கள் யாரும் இங்கு வசிக்கவில்லை.
தீவுக்கோட்டை மதில் சுவர்
கடந்த 10.01.2017 ஆம் நாள் சிதம்பரம் கோவில் சோழக மண்டகப்படியின் போது - தீவுக்கோட்டைக்கு தமிழ்ச் சமூக ஊடகப் பேரவையின் சார்பில் வரலாற்று சுற்றுப்பயணம் நடத்தப்பட்டது (தீவுக்கோட்டைக்கு சென்ற முதல் சுற்றுப்பயணக் குழு இது மட்டும் தான்).

இராஜேந்திர சோழன்: தமிழர் வலிமையின் அடையாளம்

மாமன்னன் இராஜேந்திர சோழன், தனது கப்பற்படையின் வலிமையால் தென்கிழக்கு ஆசிய நாடுகளான கடாரம், ஜாவா ,சுமத்திரா, இந்தோனேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை தமிழரின் வர்த்தக மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தான்.

தமிழ்நாட்டின் நகரத்தார்களும் மரைக்காயர்களும் இந்துமாக்கடல், அரேபியக்கடல், வங்கக்கடல் பகுதிகளில் உள்ள நாடுகளுடன் பயமின்றி வணிகம் செய்வதற்கு வழிவகுத்தான். அவனது பலம் வாய்ந்த கடற்படை தான் தமிழர்களின் பன்னாட்டு வர்த்தகத்தை சாத்தியமாக்கியது.

இந்துமாக்கடலையும், வங்கக்கடலையும், அரேபியக்கடலையும் கட்டியாண்ட இராஜேந்திர சோழனின் கடற்படை தளம் அமைந்திருந்த இடம் தீவுக்கோட்டை ஆகும். இந்த இடம் சிதம்பரம் பகுதியில் கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது.
தீவுக்கோட்டை அகழி
கங்கைகொண்ட சோழபுரத்துக்கு தனது தலைநகரை இராஜேந்திர சோழன் மாற்றியதற்கும் கூட, தீவுக்கோட்டையை கடற்படைத் தளமாக கொண்டதே காரணமாக இருக்கும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சோழ மன்னர்களும் சோழர்களின் ஆதரவு பெற்ற பாண்டிய மன்னர்களும் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் காலத்தில் பதுங்கும் இடமாகவும் தீவுக்கோட்டை இருந்துள்ளது.

சோழர் பரம்பரையின் தொடர்ச்சி

மூன்றாம் இராசேந்திரசோழன் காலத்தோடு கி.பி.1279 ஆம் ஆண்டில் சோழராட்சி முடிவுற்றது என்று பழைய வரலாற்று ஆய்வுகள் குறிப்பிட்டன. ஆனால், அதன் பின்னர் கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து இடம்பெயர்ந்து, தீவுக்கோட்டையில் சோழர் ஆட்சி தொடர்ந்திருக்கக் கூடும் என்பதை சமஸ்கிருத நூல்களும், நாயக்கர் வரலாறுகளும் கூறுகின்றன. அதை நிரூபிக்கும் அரண்மணை சிதிலங்களும், கல்வெட்டுகளும் தீவுக்கோட்டையில் இப்போதும் உள்ளன.
பிச்சாவரம் குட்டியாண்டவர் கோவில் கல்வெட்டு
பிச்சாவரம் குட்டியாண்டவர் கோவிலில் இருக்கும் 1583 ஆம் ஆண்டு கல்வெட்டில் 'விட்டலேசுவர சோழகனார்' எனும் மன்னன் குறிப்பிடப்படுகிறார்.

தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்கர், 'தீவுக்கோட்டை சோழகனை வெற்றி பெறவேண்டும்' என்பதையே தனது மிகப்பெரிய லட்சியமாகக் கொண்டிருந்தார். 1615 ஆம் ஆண்டில் பெரும் படை திரட்டிவந்து தீவுக்கோட்டை மீது போர் தொடுத்து அங்கு ஆட்சி செய்த சோழகனை தஞ்சை ரகுநாத நாயக்கன் வென்றார் என்பதை வரலாற்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

மக்கள் வாய்வழி வரலாறு

தீவுக்கோட்டையில் வாழ்ந்து வந்த மக்கள் இப்போது சிதம்பரம் பகுதியில் பல கிராமங்களில் உள்ளனர். அவர்களின் செவிவழி கதைகளிலும், திருவிழாக்களிலும் சோழர்களின் வரலாறு பேசப்படுகிறது.

தீவுக்கோட்டையை ஆட்சி செய்த மன்னன் சோழன் தான் என்று குறிப்பிடும் தீவுக்கோட்டை பரம்பரையினர், சோழ மன்னர் நவராத்திரி கொலு வழிபாட்டில் இருந்த போது, எதிரிப்படைகள் அவரை கொன்றனர் என்று கூறுகின்றனர். அதாவது, மன்னர் தனது ஆயுதங்களை கொலுவில் வைத்திருந்ததாகவும், நவராத்திரி கொலு காலத்தில் போரில் ஈடுபடுவது மரபல்ல என்றும் - இதனை அறிந்த எதிரிப்படையினர் ஆயுதமற்ற காலத்தில் போர் மரபை மீறி தீவுக்கோட்டை சோழனை கொன்றதாக குறிப்பிடுகின்றனர்.

மன்னர் கொலை செய்யப்பட்ட போது, சோழ ராணி தனது குழந்தையுடன் சுரங்கப்பாதை வழியே வெளியேறி, பிச்சாவரத்துக்கு சென்றதாகவும் மக்களின் வாய்வழி வரலாற்று கதைகள் கூறுகின்றன.
காளி கோவில்
இதே போன்று, தீவுக்கோட்டையில் உள்ள காளி கோவில் திருவிழா பத்திரிகையும் - சோழ வரலாற்றை கூறுகிறது. அந்த அழைப்பிதழில் உள்ள 'கோட்டையா வெண்பா' எனும் பாடல்:

"நாட்டுக்கு நாயகன் நற்சோழ பூபதியின் 
கோட்டையின் கீழ்குடிகொண்ட கோட்டையனென் 
முனீஸ்வரன் தாளை மறவாதிருப்போர்க்கு
இன்துற்ற இல்லம் எய்தும்"

- என்று கூறுகிறது. அதாவது 'சோழனின் கோட்டைக்கு அருகே முனீஸ்வரன் கோவில் இருந்ததை' இந்தப் பாடல் குறிப்பிடுகிறது.
காளியம்மன் கோவில் பத்திரிகை
அதே போன்று, "காளியம்மன் துதி" எனும் பாடல்:

"பாராரு மநுநீதி பண்புபெறவே மக்கள் பழமே லெக்ஷ்யமாக 
போராடு படையோடு போறாங்க பாராண்ட சோழமன்னர்
காராருமேனித்தாய் காப்பதுன் கடனென் தன்கோட்டையின் தென்பால் வைத்து 
காலமுறை வாழுவாது கழல் அணிந்தர்சித்த காளிதனை தொழுதுதல் செய்வோம்"

- என்று கூறுகிறது. "பாராண்ட சோழ மன்னர் படையோடு செல்வதையும்", "தனது கோட்டைக்கு அருகே காளிக்கு கோயில் அமைத்து வழிபட்டதையும்" இந்தப் பாடல் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

தொடரும் சோழர் மரபு

சோழ வம்சத்தினர் கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து தீவுக்கோட்டைக்கும், பின்னர் அங்கிருந்து பிச்சாவரத்துக்கும் இடம்பெயர்ந்தனர் என்று நம்பப்படுகிறது. 

இவர்கள்தான் சோழ மரபை பின்பற்றி சிதம்பரம் கோவிலில் முடிசூடிக்கொண்டனர். ஆண்டுக்கு இரண்டுமுறை தேர் தரிசனத்தின் போது சிதம்பரம் கோவிலில் சோழக மண்டகப்படியை நடத்தி வந்தனர். இந்த மரபு இப்போதும் தொடர்கிறது.

தீவுக்கோட்டையும் அதனுடன் தொடர்புடைய இடங்களும் வரலாற்று சுற்றுலா பகுதியாக மாற்றப்பட வேண்டும்.

புதன், ஜனவரி 11, 2017

ஜல்லிக்கட்டை எதிர்க்கும் முற்போக்கு - சாதிஒழிப்பு கும்பல்!

தமிழர் பண்பாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டை, பீட்டா அமைப்பு மட்டும்தான் எதிர்க்கிறது என்பது போல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், கூடவே முற்போக்கு வேடதாரிக் கூட்டமும், நாடகக் காதல் ஆதரவாளர்களும் கூட, ஜல்லிக்கட்டினை கடுமையாக எதிர்க்கின்றனர். 

எடுத்துக்காட்டாக, கீற்று, வினவு உள்ளிட்ட முற்போக்கு வேடம் போடும் இணைய இதழ்கள் ஜல்லிக்கட்டை தீவிரமாக எதிர்க்கின்றன. "ஜல்லிக்கட்டு - தேசிய அவமானம்" (அதிஅசுரன்), "ஜல்லிக்கட்டு தடையால் பதுங்கி இருக்கும் சாதிய வன்மம்" (கீற்று நந்தன்) என்கிற எதிர்ப்பு கட்டுரைகளை கீற்று இணையதளம் வெளியிட்டுள்ளது.

இப்போது மட்டுமல்ல - ஏற்கனவே இந்த 'முற்போக்கு - சாதிஒழிப்பு கும்பல்' ஜல்லிக்கட்டை எதிர்த்துதான் வந்துள்ளது. இதுகுறித்து ஓராண்டுக்கு முன்பு நான் எழுதிய பதிவு கீழே:

ஜல்லிக்கட்டு விவாதம்: ஒரு தரப்பாக நடப்பது ஏன்?

ஜல்லிக்கட்டு தடையை எதிர்ப்பவர்களை மட்டுமே வைத்து தமிழ்நாட்டு ஊடகங்கள் விவாதங்ளை வைக்கிறார்கள். அதற்கு எதிரான தரப்பினரின் கருத்துகளை திட்டமிட்டு மறைக்கின்றனர். இது நியாயம் இல்லை?

ஜல்லிக்கட்டு வேண்டாம் என்று 'பீட்டா' (PeTA) மட்டும்தான் கூறுகிறதா? விலங்குகளை வதையை எதிர்ப்பவர்கள் மட்டும்தான் இதனை எதிர்க்கின்றனரா? சாதி ஒழிப்புப் போராளிகள், இடதுசாரிகள், திராவிட அமைப்பினரும் ஜல்லிக்கட்டை தீவிரமாக எதிர்க்கின்றனர்.

பழங்கால சிலையில் ஜல்லிக்கட்டு
"ஜல்லிக்கட்டுக்கு மல்லுகட்டுவது தான் தமிழர் பண்பாடா?" என்று கேட்கிறது கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலைக் கழகம்.

"ஓட்டுக் கட்சிகளும் ஊடகங்களும் ஊதிப் பெருக்குவது போல, ஜல்லிக்கட்டு என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் அடையாளமல்ல. தென்மாவட்ட ஆதிக்க சாதியினரின் சாதித் திமிரைப் பறைசாற்றும் ஓர் ஆதிக்கப் பண்பாட்டுச் சின்னம்தான்." என்கிறது, ம.க.இ.க அமைப்பின் வினவு.
சிந்து சமவேளி படிமத்தில் ஜல்லிக்கட்டு
"ஜல்லிக்கட்டை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என மத்திய அரசின் விலங்குகள் நல வாரியமும், தலித் எழுத்தாளர்களான ஜல்லிக்கட்டு ஒழிப்புக் குழுவினரை உள்ளடக்கியவர்களும் இணைந்து 1998 -லிருந்து இதனை தடை செய்யப்போராடி வருகிறோம்" என்கிறது "ஜல்லிக்கட்டு : தடையை வரவேற்கிறோம் – ஏன்?" எனும் ஒரு கட்டுரை.

"ஜல்லிக்கட்டு – ஒட்டுமொத்த தமிழர் அடையாளம் என்றால், அது ஏன் தமிழகத்தில் குறிப்பட்ட பகுதியில் மட்டும் நடக்கிறது? குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களே அதிகம் பங்கெடுக்கிறார்கள்?" என்கிறது "வே.மதிமாறன்" என்பவரின் ஒரு கட்டுரை.
பழங்குடி ஓவியத்தில் ஜல்லிக்கட்டு
"ஜல்லிக்கட்டும் ஊரின் ஆதிக்க வகுப்பினருக்கே உரியதாக இருந்து வருகிறது. மக்களின் உணர்வு, பண்பாடு என்ற சொல்லப்படுவதெல்லாம் பெரும்பான்மைச் சாதிசார்ந்ததே ஆகும். இதனாலேயே அரசும் அரசியல் கட்சிகளும் இதற்காகக் காவடி எடுக்கின்றன." என்கிறது "ஜல்லிக்கட்டு: புலப்படாத உண்மை" எனும் 'ஸ்டாலின் ராஜாங்கம்' என்பவரின் ஒரு கட்டுரை.

நாம் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறோம்

சாதி கடந்தோ, மதத்தைக் கடந்தோ - எதற்காக ஜல்லிக்கட்டை பார்க்க வேண்டும்? சாதியையோ, மதத்தையோ அடிப்படையாக வைத்து ஜல்லிக்கட்டை நடத்தினால் என்ன தவறு? முத்தரையர், மறவர், கள்ளர் போன்ற சாதியினர் இதனை தங்களது விழா என்று கொண்டாடினால், அதில் என்ன குற்றம் இருக்கிறது?

ஒரு ஊரில் ஒரு சில சாதிகள் இதனை முன்னின்று நடத்தினால், வேறு சில ஊர்களில், வேறு சில சாதியினர் முன்னின்று நடத்துகின்றனர். சில சாதியினர் இதில் பங்கெடுப்பதே இல்லை - அதற்காக இது தமிழனின் விழா இல்லை என்று சொல்ல முடியுமா?
தமிழ்நாட்டின் 300 விதமான சாதிகளுக்கும் சம வாய்ப்பு அளித்து எந்த விழாவையும் நடத்த முடியாது. எனவே, சாதி கடந்து, அனைத்து தமிழர்களுக்குமான விழா என்று எதுவும் இருக்க முடியாது! (எல்லோருக்கும் பொதுவான பொங்கல் பண்டிகையைக் கூட, ஒவ்வொரு சாதியிலும் ஒவ்வொரு வகையறாவிலும் ஒவ்வொரு விதமாகத்தான் கொண்டாடுகிறார்கள்.)

நாம் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறோம். அதன் எல்லா நிலைகளிலும் ஆதரிக்கிறோம். ஒரு மதம் சார்ந்ததாகவோ, ஒரு இனம் சார்ந்ததாகவோ, ஒரு சாதி சார்ந்ததாகவோ - எந்த அடிப்படையில் பார்த்தாலும் ஜல்லிக்கட்டு ஆதரிக்கப்பட வேண்டியதே.

திருவிழாக்கள், விளையாட்டுகள், வேளாண்மை, வியாபாரம், தொழில் என எல்லாவற்றிலும் சாதி ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கவே செய்கின்றன. அதற்காக 'திருவிழாக்கள், விளையாட்டுகள், வேளாண்மை, வியாபாரம், தொழில்' என எல்லாவற்றையும் இல்லாமல் செய்துவிட முடியாது. (தீண்டாமை, சாதி அடிமைத்தனம், மனித உரிமை மீறல்கள் எந்த இடத்தில் இருந்தாலும் - அவை களையப்பட வேண்டும்)

ஜல்லிக்கட்டு போன்ற கலாச்சார நிகழ்வுகள் ஒரு இனத்துக்காக, ஒரு சாதிக்காக, ஒரு வம்சத்துகாக, ஒரு குடும்பத்துக்காக என எந்த அளவில் நடந்தாலும் - அதனை அந்த இனத்தின், சாதியின், வம்சத்தின், குடும்பத்தின் உரிமையாக கருதி அதனை பாதுகாக்கவே வேண்டும்.

சாதிகள், இனங்கள், மதங்கள், மொழிகள், நம்பிக்கைகள் என பன்முக அடையாளங்களை அங்கீகரித்துதான் மனித சமூகம் நீடித்திருக்க முடியும். இந்த அடையாளங்களை தொலைத்துவிட்டு, மானுட சமூகம் நீடித்திருக்க வாய்ப்பே இல்லை.

இணைப்புகள்:

1. ஜல்லிக்கட்டுக்கு மல்லுகட்டுவது தான் தமிழர் பண்பாடா?,  பெரியார் முழக்கம் 2016

2. ஜல்லிக்கட்டு : தமிழர் பாரம்பரியமா ? ஆதிக்கசாதி அடையாளமா ?, வினவு

3. ஜல்லிக்கட்டு : தடையை வரவேற்கிறோம் – ஏன்?

4. மாட்டுக் கொம்பில் மல்லுக்கட்டும் மனிதம், வே.மதிமாறன்

5. ஜல்லிக்கட்டு: புலப்படாத உண்மை, ஸ்டாலின் ராஜாங்கம், எழுத்தாளர்

வெள்ளி, ஜனவரி 06, 2017

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களுக்கு நாடார் சமூகத்தின் பாராட்டு விழா: ஒரு மாபெரும் தொடக்கம்

மருத்துவர் அய்யா அவர்கள் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக அனைத்து சமூகங்களின் ஒற்றுமைக்காகவும், உரிமைக்காகவும் குரல் கொடுத்து போராடி வருகிறார்கள். அந்த தியாகப் பணிக்காக முதல் முறையாக நாடார் சமூகம் தனது பாராட்டினை தெரிவித்து விழா நடத்தியிருக்கிறது.

இந்த நிகழ்வுக்காக நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். (அதே நேரத்தில் இதுபோன்ற பாராட்டுகள் எதையும் மருத்துவர் அய்யா அவர்கள் எதிர்பார்க்காமல், எப்போதும் 'என்கடன் பணி செய்து கிடப்பதே' என்பதில் உறுதியாக நின்று போராடி வருகிறார்கள் என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்).

காலம் தோரும் மாறும் போராட்டங்கள்

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு விதமான மோதல் போக்கு சமூகத்தில் நிலவுகின்றது.

'இடங்கை - வலங்கை மோதல்

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, 'இடங்கை - வலங்கை சாதி மோதல்' என்பதுதான் தமிழ் மண்ணில் பெரும் போராட்டமாக இருந்தது. எந்த சாதிக்கு என்ன உரிமை, விழாக்களில் பயன்படுத்தும் கொடிகள், சின்னங்கள் என்ன, என்பதெற்கெல்லாம் பெரும் கலவரம் நடந்தது. இன்றைய காலத்தில் "இடங்கை - வலங்கை" பிரச்சினையை கண்டுகொள்ள எவரும் இல்லை.

சூத்திரர் பட்டம்

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, யாரெல்லாம் சூத்திரர் இல்லை. யாரெல்லாம் தீண்டத்தகாதோர் இல்லை என்று மெய்ப்பிப்பதற்கான போராட்டங்கள் தீவிரமாக இருந்தன. தனித்தமிழ் இயக்கம் மற்றும் சமய எழுச்சி இயக்கங்கள் என்பதெல்லாம் கூட சூத்திர பட்டத்தை துறப்பதற்கான வழிகளில் ஒன்றாக இருந்தன. இன்று அந்த போராட்டங்கள் இல்லை.

சத்திரியர் பட்டம்

கடந்த நூற்றாண்டு வரை சத்திரியர் யார் என்கிற போராட்டங்கள் நடந்தன. உண்மையில் சௌந்திரபாண்டியன் நாடார் அவர்கள் சத்திரிய போராட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு, சுயமரியாதை இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவராக மாறியதும் கூட நாடார் சமூகத்தின் விடுதலைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற போராட்ட காலங்கள் கடந்த நூற்றாண்டிலேயே முடிந்துவிட்டன. இடங்கை - வலங்கை போராட்டம், சூத்தர விடுதலை, சத்திரியப் போராட்டம் என்பதெல்லாம் இப்போது வரலாற்று தழும்புகள் மட்டுமே.

1950 ஆம் ஆண்டில் இந்திய அரசியல் சாசனம் ஏற்கபட்ட பின்னர் 'உயர்ந்த சாதி - தாழ்ந்த சாதி' என்கிற பாகுபாடுகளுக்கு சட்டத்தில் இடமில்லை.

இடங்கை - வலங்கை போராட்டம், சத்திரியப் பட்டம் என்பதற்கெல்லாம் இப்போதும் யாராவது குரல் கொடுத்துக் கொண்டிருந்தால் - அவர்கள் நிகழ்காலத்தில் வாழவில்லை. கற்பனையான கடந்த காலத்தில் உழல்கிறார்கள் என்பதே உண்மை ஆகும்

மருத்துவர் அய்யாவின் சமூகநீதி இயக்கம்

சாதி ஏற்றத்தாழ்வு அடிப்படையிலான கருத்துகளை முற்றிலுமாக ஒழித்து, ஒரு நாகரீகமான சமூகத்தை படைப்பதற்கான சமுதாயப் பணியை மருத்துவர் அய்யா அவர்கள் தொடங்கினார்கள்.

சாதி அடிப்படையிலான வகுப்புவாரி இடஒதுக்கீட்டை முதல் கோரிக்கையாக வைத்து, ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தினார்கள். 'ஒவ்வொரு சமூகமும் முன்னேறினால் நாடு தானாகவே முன்னேறியதாகிவிடும்' என தந்தை பெரியார் காட்டிய வழியில் மருத்துவர் அய்யா அவர்களும் போராட்டங்களை முன்வைத்தார்கள்.

தமிழக வரலாற்றின் மாபெரும் சாதனையான மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) இடஒதுக்கீடு எனும் சாதனையை மருத்தவர் அய்யா அவர்கள் படைத்தார்கள். இது 60 ஆண்டுகள் தாமதத்துக்கு பின்னர் கிடைத்த நீதி ஆகும்.

அனைத்து சமூகத்தினரையும் ஒற்றுமைப்படுத்தும் நோக்கில் ஏராளமான சமூக ஒற்றுமை மாநாடுகளை நடத்தினார்கள். தேவேந்திரகுல சமூகத்தினருடன் சேர்ந்து ஒருதாய் மக்கள் மாநாட்டை நடத்தினார்கள். அருந்ததியர், முத்தரையர், இஸ்லாமியர்கள் என ஒவ்வொரு பிரிவினருக்காகவும் மாநாடுகளையும், போராடங்களையும் மருத்துவர் அய்யா நடத்தினார்கள்.

எல்லா சாதிகளும் சமம். ஒவ்வொரு சாதிக்கும் அதன் விகிதாச்சார எண்ணிக்கைக்கு ஏற்ப 'வகுப்புவாரி உரிமை' என்கிற ஒரு உன்னதமான லட்சியத்தை நோக்கி பாடுபடும் மருத்துவர் அய்யா அவர்களுக்கு - இபோதாவது - நாடார் சமூகம் பாராட்டுவிழா நடத்தியிருப்பது ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வு ஆகும்.

உன்னதமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்

வாழுமிடம், சாதி, பிறப்பு, நம்பிக்கை, மொழி என எந்த அடிப்படையிலும் எந்த ஒரு மக்கள் குழுவும் ஒதுக்கப்படாத, புறக்கணிக்கப்படாத (Non-discrimination) ஒரு உன்னதமான தமிழ்நாட்டை மருத்துவர் அய்யா அவர்கள் உருவாக்கி காட்டுவார்கள். அதற்காக நாம் பாடுபடுவோம்.

'ஒருவரும் பின்தங்கவிடப்படாத வளர்ச்சி' (Leaving no one behind) எனும் ஐநா அவையின் உலகளாவிய வளர்ச்சி இலக்கினை (UN Sustainable Development Goals 2030) மருத்துவர் அய்யா அவர்களின் தலைமையின் கீழ் தமிழ்நாட்டில் சாத்தியமாக்குவோம்.