Pages

அணுசக்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அணுசக்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மே 07, 2013

கூடங்குளத்தில் 2,27,350 பேர் மீதுவழக்கு: மருத்துவர் இராமதாசு ஒருவர் மட்டும் கைது - உச்சநீதிமன்றத்தை அவமதித்தது தமிழ்நாடு அரசு!

கூடங்குளம் போராட்டம் இதுவரை தொடர்பாக 2 லட்சத்து 27 ஆயிரத்து 350 பேர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றில் மருத்துவர் அய்யா அவர்கள் ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி இடிந்தகரையில் நடந்த போராட்டத்தில் கூடங்குளம் போராட்டக்குழுத் தலைவர் சுப. உதயகுமார் அவர்களுடன் மருத்துவர் இராமதாசு கலந்து கொண்டு கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இடிந்த கரையில் விதிக்கப்பட்டிருந்த 144 தடையை மீறியதாக பல அரசியல் கட்சித் தலைவர்கள் மீது வழக்குத்தொடர்ந்துள்ளது போலவே, மருத்துவர் அய்யா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், வேறு ஒருவர் கூட கைது செய்யப்படாத நிலையில், மருத்துவர் அய்யா ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்.

கூடங்குளம் போராட்டம் தொடர்பாக தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று (6.05.2013) உத்தரவிட்டது. அதனை அவமதித்து இன்று கூடங்குளம்  வழக்கில் மருத்துவர் அய்யாவை கைது செய்துள்ளது தமிழ்நாடு அரசு.
 உச்சநீதிமன்ற உத்தரவு (6.05.2013) 

இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:

"மரக்காணம் கலவரத்திற்கு நீதி கேட்டு போராடியதற்காக கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யாவை அடுத்தடுத்து பொய் வழக்குகளில் தமிழக அரசு கைது செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற வழக்கில் மருத்துவர் அய்யாவை காவல்துறை இன்று கைது செய்துள்ளது.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் இடிந்தகரையில் நடத்தி வரும் அறவழிப் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார். இதன் ஒரு கட்டமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி இடிந்தகரையில் நடந்த போராட்டத்தில் மருத்துவர் அய்யா தடையை மீறி பங்கேற்று அணு உலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்காக மருத்துவர் அய்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை மருத்துவர் அய்யா சட்டப்படி சந்தித்து வருகிறார். மருத்துவர் அய்யாவைப் போலவே, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சித்தலைவர்கள் இடிந்தகரையில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவை மீறித் தான் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவ்வாறு கலந்து கொண்ட தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டதற்காக இன்று வரை  2 லட்சத்து 27 ஆயிரம் பேர் மீது 350 வழக்குகள் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. இவர்களில் ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்படவில்லை. குற்றஞ்சாற்றப்பட்டவர்களில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 700 பேரின் அடையாளம் கூட இதுவரைக் கண்டறியப்படவில்லை. இந்த நிலையில், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யாவை மட்டும் அரசு கைது செய்திருக்கிறது. இதிலிருந்தே மருத்துவர் அய்யாவுக்கு எதிராக தமிழக ஆட்சியாளர்கள் எத்தகைய கொடூரமான பழிவாங்கும் போக்கை கடைபிடித்து வருகிறார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள முடியும்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ‘‘கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைதியும் இயல்பு நிலையும் திரும்புவதற்கு வசதியாக போராட்டத்தில் பங்கேற்ற அனைவர் மீதும் தொடரப்பட்ட  குற்ற வழக்குகளைத் திரும்பப்பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’’ என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

இத்தகைய தீர்ப்பு வெளியானதற்கு அடுத்த நாளே கூடங்குளம் போராட்டம் தொடர்பான வழக்கில் மருத்துவர் அய்யாவை கைது செய்வதென்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்பது மட்டுமின்றி, உச்சநீதிமன்றம் கூறிய அமைதியையும், இயல்பு நிலையையும் நிலைநாட்டுவதில் தமிழக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பது தெளிவாகிறது.

மருத்துவர் அய்யா மீதான 4 வழக்குகளில், மூன்றில் இதுவரை பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ஒரு வழக்கில் பிணை கிடைத்தாலும் அவர் விடுதலை ஆகி விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான் இப்போது இன்னொரு வழக்கில் அவரை கைது செய்திருக்கிறார்கள். பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யாவை பழிவாங்கும் விஷயத்தில் சட்டம், நீதி, மனித உரிமை உள்ளிட்ட அனைத்தையும் தமிழக அரசு காலில் போட்டு மிதித்துவருகிறது.

தமிழக அரசின் இந்த சட்டத்தை மதிக்காத, சர்வாதிகாரத்தனமான, அடக்குமுறைப் போக்கிற்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைமை நிலையம் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறது."


தொடர்புடைய சுட்டி: 

கூடங்குளம் வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல்: அணுஉலை வேண்டாம் என்று சொல்வதே கொடுங்குற்றமா? 

திங்கள், மே 06, 2013

கூடங்குளம் வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல்: அணுஉலை வேண்டாம் என்று சொல்வதே கொடுங்குற்றமா? 

(கூடங்குளம் வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் -247 பக்கம்- கீழே)

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக திரு. உதயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள். அதற்காக இப்போது மருத்துவர் இராமதாசு மீது வழக்குத் தொடர்ந்துள்ளது தமிழ்நாடு அரசு. (மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் தற்போது சிறையில் வாடுகிறார்.) அணுஉலை வேண்டாம் என்று சொல்வதே கொடுங்குற்றமா?

கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவான இலட்சக்கணக்கான ரூபாய்க்கான விளம்பரங்களை மக்கள் தொலைக்காட்சிக்கு கொடுத்த போது அதை வேண்டாம் என்று மறுத்த ஒரே தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி மட்டும்தான்.

கூடங்குளம் வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் முழுவதும் (247 பக்கம்) - இதோ! (கீழே உள்ள நகல்மீது சொடுக்கவும்)http://www.scribd.com/doc/139721944/Kudankulam-Judgment

கூடங்குளம் அணுவுலை செயல்பட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு அளித்தது.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் தொடர்ந்த இந்த வழக்கில், இன்று காலை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், தீபக் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

கூடங்குளம் அணுவுலை செயல்பட அனுமதி அளித்துத் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், இந்தியாவின் அணுசக்திக் கொள்கையை மதிப்பதாகத் தெரிவித்தது. மேலும், எரிசக்தித் தேவைக்காக அணுவுலையில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை பாதுகாப்பாக சேமிக்கும் முறையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியது.

கூடங்குளம் பாதுகாப்பாக உள்ளது. நாட்டின் மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்பவும், பொது நலன் கருதியும், நாட்டின் வளர்ச்சி கருதியும் கூடங்குளம் திட்டம் அவசியத் தேவை. அணுவுலைகள் நம் நாட்டின் மின்சாரத் தேவைக்கு அவசியம் தேவை. இன்றைய சந்ததிக்கும் எதிர்கால சந்ததிக்கும் அணு மின்சாரம் தேவை என்று கூறியது உச்ச நீதிமன்றம்.

அணுவுலை தொடர்பான பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட அனைத்துக் குழுக்களும் ஒரே மாதிரியான கருத்தையே தெரிவித்துள்ளதாகத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், அணுவுலை பாதுகாப்பாக இருப்பதாகவும், பாதுகாப்பாக செயல்படத் தேவையான அனைத்து அம்சங்களும் பின்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருப்பதை கவனத்தில் கொள்வதாகவும் கூறியது. (செய்தி: தினமணி)
தொடர்புடைய சுட்டி:


அணுமின்சாரக் கட்டுக்கதைகளும் கூடங்குளமும்

புதன், நவம்பர் 09, 2011

அணுமின்சாரக் கட்டுக்கதைகளும் கூடங்குளமும்


கூடங்குளத்தில் அணுமின்நிலைய போராட்டம் தீவிரமடைந்துவரும் நிலையில் அணுமின்சாரம் குறித்த கட்டுக்கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

அணுமின் நிலையங்கள் பாதுகாப்பானவை, உலகின் பலநாடுகளால் விரும்பப்படுபவை, இதைவிட்டால் இந்தியாவில் மின் தேவையை ஈடுசெய்ய வேறுவழியே இல்லை - இப்படியாக நீள்கின்றன கட்டுக்கதைகள். இந்த கோயபல்சு பிரச்சாரத்திற்கு இப்போது தலைமையேற்றுள்ளார் அப்துல்கலாம்!

எனவே, உண்மை நிலையை அறியவேண்டியது அவசியம். (அணுமிசாரம் குறித்த எனது விரிவான கட்டுரையை இங்கே PDF வடிவில் காண்க.)
கட்டுக்கதை 1. அணுமின்சாரம் சிறந்தது, எனவே, உலக நாடுகள் அதை விரும்புகின்றன.

உண்மை: அணுமின்சாரம் சிறந்த மின்சாரமாக இருந்திருந்தால் உலகநாடுகள் அதிக அளவில் அணு உலைகளை அமைத்திருக்கும். ஆனால், உலகின் 31 நாடுகளில் மட்டுமே அணு உலைகள் அமைக்கப்பட்டன. அதிலும் ஒருநாடு, லிதுவேனியா தனது கடைசி அணு உலையை மூடிவிட்டது. இப்போது ஐ.நா. அவையில் உறுப்புநாடுகளாக உள்ள 192 நாடுகளில் வெறும் 30 நாடுகளில் மட்டுமே அணு உலைகள் உள்ளன.

அதிலும் உலகின் அணு உலைகளில் முக்கால் பங்கு வெறும் 6 நாடுகளில் மட்டுமே உள்ளன. அவை. அமெரிக்கா, பிரான்சு, ஜப்பான், ரசியா, செர்மனி, தென் கொரியா. இவற்றில் - செர்மனி, ஜப்பான் நாடுகள் அணு உலைகளுக்கு விடைகொடுக்கப்போவதாக அறிவித்துள்ளன.

2002 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 444 அணு உலைகள் இருந்தன. இப்போது 437 அணு உலைகள் மட்டுமே உள்ளன. அதாவது - உலகளவில் அணுமின் திட்டங்கள் அதிகமாகவில்லை. குறைந்து வருகின்றன.

கட்டுக்கதை 2: அணுமின்சாரம்தான் எதிர்காலத்தின் மின்சாரம்.

உண்மை: "அணுமின்சாரம்தான் எதிர்காலத்தின் மின்சாரம்" என்பது ஒரு அயோக்கியத்தனமான கூற்று. இதனை அப்துல் கலாம் அவர்கள் கூறிவருகிறார். இப்போது சுமார் 4,800 மெகாவாட் அளவாக உள்ள இந்திய அணுமின் உற்பத்தியை 50,000 மெகாவாட் அளவாக அதிகரிக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
ஆனால், இந்திய அணுசக்தி துறை 1970 ஆம் ஆண்டில் வெளியிட்ட கணிப்பில் 2000 ஆவது ஆண்டில் இந்தியாவில் 43,000 மெகாவாட் அணுமின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று கூறியது. ஆனால், 2011 ஆம் ஆண்டில் கூட 4,870 மெகாவாட் அளவுதான் எட்ட முடிந்தது.

உலகளவில் 2000 ஆம் ஆண்டில் 4,450 ஜிகாவாட் (ஒரு ஜிகாவாட் = 1000 மெகாவாட்) அளவு அணுமின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று பன்னாட்டு அணுசக்தி முகமை 1974 ஆம் ஆண்டிலேயே அறிவித்தது. ஆனால், 2011 ஆம் ஆண்டில் கூட 375 ஜிகாவாட் அளவுதான் உலகம் முழுவது அணுமின்சாரம் உற்பத்தி ஆகிறது.

அமெரிக்காவில் 1973 ஆம் ஆண்டில் அந்நாட்டு அதிபர் நிக்சன் அங்கு 1000 அணு உலைகள் அமைக்கப்போவதாகக் கூறினார். ஆனால், அங்கு ஒட்டுமொத்தமாக 253 அணு உலைகள் தொடங்க உத்தரவிடப்பட்டு, 71 நிலையங்கள் தொடங்குவதற்கு முன்பே கைவிடப்பட்டன, 50 நிலையங்கள் கட்டுமானம் தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்டன. 28 நிலையங்கள் தொடங்கிய பின்னர் பாதியில் நிறுத்தப்பட்டன. இப்போது 104 அணுமின் நிலையங்கள் மட்டுமே உள்ளன. அதுமட்டுமல்லாமல் கடந்த 37 ஆண்டுகளாக அமெரிக்காவில் புதிய அணுமின் நிலையம் தொடங்கப்படவில்லை.
உலகிலேயே அதிக அணு உலைகள் உள்ள பகுதி மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஆகும். அங்குள்ள 18 நாடுகளில் எட்டு நாடுகள் அணுமின்சாரத்திட்டங்கள் இல்லாத பகுதி என அறிவித்து விட்டன. 4 நாடுகள் புதிய அணு உலைகள் தொடங்க மாட்டோம் எனக் கூறிவிட்டன. செர்மனி நாடு 2022 க்குள் அனைத்து அணுமின் நிலையங்களையும் மூடப்போவதாகக் கூறிவிட்டது. அங்கு வெறும் மூன்று நாடுகள் மட்டுமே அணுமின்சாரத்தை ஆதரிக்கின்றன. ஐரோப்பா முழுவதிலும் கடந்த 30 ஆண்டுகளாக புதிய அணுமின் திட்டம் எதுவும் தொடங்கப்படவில்லை.

இப்போது உலகின் மொத்த மின் உற்பத்தியில் 13% அணுமின்சாரம் ஆகும். இது 2050 ஆம் ஆண்டில் 6% ஆகக் குறையும் என மதிப்பிட்டுள்ளது பன்னாட்டு அணுசக்தி முகமை. எனவே, அணுமின்சாரம்தான் எதிர்கால மின்சாரம் என்பது காதில் பூ சுற்றும் வேலை.

அணுமின்சாரம் பாதுகாப்பானதா? மலிவானதா? தூய்மையானதா? அணுமிசாரத்திற்கு மாற்றே இல்லையா? : இந்தக் கேள்விகளுக்கெல்லாம்  பதிலை PDF வடிவில் இங்கே காண்க:

http://www.scribd.com/fullscreen/72120961?access_key=key-1l58hvqnghuv47o9q84r

செவ்வாய், மே 31, 2011

இந்தியாவின் மூடத்தனமும் ஜெர்மனியின் முன் எச்சரிக்கையும்!


உலக வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வொன்று ஜெர்மன் நாட்டில் நடந்துள்ளது. அறிவியல் தொழில்நுட்பத்தில் உலகின் மிகமுன்னேறிய நாடான ஜெர்மனி "அணுசக்திக்கு விடை கொடுப்பதாக" அறிவித்துள்ளது. அதாவது, ஜெர்மனியுடன் ஒப்பிடும்போது தொழில்நுட்பத்தில் பின் தங்கியுள்ள இந்தியா புதிய அணுசக்தி திட்டங்களை தொடங்கும் இந்த காலகட்டத்தில் ஜெர்மன் நாடு அதை ஒரே அடியாக ஒழிக்க முன்வந்துள்ளது.

ஜெர்மன் மட்டுமல்ல, ஜப்பான் நாடும் கூட அண்மை சுனாமியில் சிக்கி சீரழிந்த பின்னர் புத்திவந்து 38 அணு உலைகளை மூடிவருகிறது.

மக்கள் எழுச்சி

ஜெர்மன் நாட்டின் அணுமின் நிலையங்கள் மூடும் திட்டம் தானாக வந்ததல்ல. அது மக்கள் எழுச்சியால் உருவானது. செர்னோபில் அணு உலை கதிர்வீச்சால் ஜெர்மனி கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போதிருந்தே ஆயிரக்கணக்கானோர் அணுமின் நிலையங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ஆளும் கிறித்தவ ஜனநாயகக் கட்சியின் அணுசக்தி ஆதரவு திட்டங்களை ஜெர்மன் பசுமைக் கட்சி கடுமையாக எதிர்த்தது. மார்ச் 2011 இல் நடந்த Baden-Wuerttemberg எனும் மாநிலத் தேர்தலில் கிறித்தவ ஜனநாயகக் கட்சி படுதோல்வியடைந்து பசுமைக் கட்சி ஆட்சியை பிடித்தது. (உலகிலேயே பசுமைக் கட்சி ஒரு மாநில ஆட்சியை பிடிப்பது இதுதான் முதல் முறை).
ஜெர்மனியில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தனது கோள்கைகள் வலுவிழந்து வருவதை உணர்ந்த ஆளும் ஜெர்மன் தேசிய அரசாங்கம், இப்போது அணுசக்திக்கு முடிவு கட்ட முன்வந்துள்ளது. இதன்படி, இப்போதுள்ள அணுமின் நிலையங்கள் அனைத்தையும் 2022-க்குள் மூடிவிட அந்நாடு முடிவு எடுத்துள்ளது.

ஜெர்மன் அரசின் அறிவிப்பு

அணுசக்தி பிரச்னை தொடர்பாக 30.05.2011 அன்று நடந்த கூட்டத்தில் 'அணுமின் நிலையங்களை ஒரேயடியாக மூடுவது' என்று எடுக்கப்பட்ட முடிவை அறிவித்த கிறித்தவ ஜனநாயகக் கட்சி பிரதமர் ஏஞ்செலா மெர்கெல் "எதிர்காலத்தில் மின்சாரம் என்பது பாதுகாப்பானதாகவும், நம்பத்தகுந்ததாகவும், பொருளாதாரரீதியில் கட்டுப்படியானதாகவும் இருக்க வேண்டும். ஜப்பானில் சுனாமிக்குப் பின் நிகழ்ந்த சம்பவங்கள் கண்களைத் திறந்துவிட்டன" என்று கூறியுள்ளார்.

இது குறித்து சுற்றுச்சூழல் அமைச்சர் நார்பெர்ட் ரோட்ஜென் "இந்த முடிவு இறுதியானது. மாற்றப்படாதது. நாட்டில் மொத்தம் 17 அணுமின் நிலையங்கள் உள்ளன. அவற்றில், பழைமையான 8 அணுமின் நிலையங்களின் செயல்பாடு உடனடியாக நிறுத்தப்படும். 6 அணுமின் நிலையங்கள் 2021-லும், 3 அதிநவீன அணுமின் நிலையங்கள் 2022-லும் மூடப்படும்" என்று கூறியுள்ளார்.
அணுமின் உற்பத்தியின் இழப்பை ஈடுகட்டும் வகையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு ஜெர்மனி மாற வேண்டியுள்ளது. இதற்காக எரிசக்தித் துறையில் ஆராய்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி நாட்டின் 40 சதவீத மின் தேவையை அணுமின் நிலையங்கள் பூர்த்தி செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய உயிர் மலிவானது!

இந்தியாவின் மின் தேவையில் வெறும் 2.5 சதவீதத்தை மட்டுமே இந்தியாவின் இப்போதைய 20 அணுமின் திட்டங்கள் நிறைவு செய்கின்றன. இதனை 2050 ஆண்டு வாக்கில் 25 சதவீதமாக அதிகரிக்கப் போகிறார்களாம். பொருளாதாரத்திலும் தொழில்நுபத்திலும் இந்தியாவைவிட பன்மடங்கு முன்னேறியுள்ள ஜெர்மனியிலேயே "அணுசக்தி பாதுகாப்பானதாகவும், நம்பத்தகுந்ததாகவும், பொருளாதாரரீதியில் கட்டுப்படியானதாகவும் இருக்காது" என்றால் - அது பின் தங்கிய இந்தியாவில் மட்டும் எப்படி நன்மையானதாக அமையும்?

தங்கள்து மின் தேவையில் 40 சதவீத மின்சாரத்திற்கு மாற்று வழியை ஜெர்மனி தேடும் போது, வெறும் 2.5 சதவீத மின்சக்திக்கு மாற்றுவழி கண்டுபிடிக்க இந்தியாவால் முடியாதா? அணுசக்தி முட்டாள்தனத்தை இந்திய ஆட்சியாளர்கள் எப்போது கைவிடுவார்களோ?

அமெரிக்க நிறுவனங்களின் லாபத்தைவிட இந்திய மக்களின் உயிர் மலிவானது என்கிற நிலை நீடிக்கும் வரை இந்த மூடத்தனம் தொடரவே செய்யும்.