Pages

சனி, ஜூன் 18, 2011

குற்றவாளிகளே நீதிபதிகளான கொடுமை: சாதிவெறியில் சிக்கிய சமச்சீர்கல்வி!


தனியார் பள்ளிகளின் கொடுமையிலிருந்து குழந்தைகளை விடுவித்து, எல்லோருக்கும் நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது. ஆனால், இப்போது உச்சநீதிமன்ற உத்தரவின் கீழ் தமிழ்நாடு அரசு நியமித்துள்ள குழுவில் தனியார் பள்ளி முதலாளிகளே 'கல்வி நிபுணர்' போர்வையில் இடம் பிடித்துள்ளனர். அதிலும் ஆதிக்க உயர்சாதிக் கூட்டமே இக்குழுவை பெருமளவுக்கு ஆக்கிரமித்துள்ளனர். 

இதுகுறித்து மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் அறிக்கை:

"சமச்சீர்க் கல்வி பற்றி முடிவெடுக்க உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் கல்வியாளர்கள் என்ற பிரிவில் டி.ஏ.வி. பள்ளிகள் குழுமத்தின் நிறுவனர் ஜெயதேவும், பத்மாசேஷாத்திரி பாலபவன் பள்ளிகளின் முதல்வர் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதியும் சேர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

சமச்சீர்க் கல்வி தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுபற்றி முடிவெடுப்பதற்காக அமைக்கப்படும் 9 பேர் கொண்ட குழுவில் கல்வியாளர்கள் இவரும் இடம் பெற வேண்டும் என்று ஆணையிட்டதன் நோக்கமே சமச்சீர்க் கல்வி பற்றிய அனைத்து அம்சங்களையும் அவர்கள் அறிந்திருப்பார்கள் என்பதுதான். அவர்கள் தம் கருத்துகளின் அடிப்படையில் சமச்சீர்க் கல்வி பற்றி 9 பேர் கொண்ட குழு சரியான முடிவுக்கு வர இயலும் என்ற நோக்குடன்தான் உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை அளித்தது.

ஆனால், கல்வியாளர்கள் என்ற பெயரில் சமச்சீர்க் குழுவில் அமர்த்தப்பட்ட இருவரும் சென்னையிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் இரண்டு பள்ளிகளின் முதலாளிகள் ஆவர். கல்வியாளர் என்பதற்கான எந்த வரையறையுமே இவர்களுக்கு பொருந்தாது. லட்சக்கணக்கில் நன்கொடையும் கட்டணமும் வாங்கி பள்ளிகளை நடத்தும் இவர்களுக்கு, தரமான கல்வி கற்க ஏழைகள் படும் பாடு குறித்து எதுவும் தெரியாது.

அதுமட்டுமின்றி சமச்சீர்க் கல்வி முறை பிரபலமடைந்தால் தனியார் பள்ளிகளுக்கு உள்ள வரவேற்பு போய்விடும் என்ற நிலையில் இவர்கள் எந்த அளவிற்கு நடுநிலையோடு செயல்படுவார்கள் என்பது ஐயமே.
சமச்சீர்க் கல்வி முறை பற்றி கரைத்து குடித்த எத்தனையோ கல்வியாளர்கள் தமிழகத்தில் இக்கும் போது, அவர்களையெல்லாம் விட்டுவிட்டு இவர்கள் இருவரையும் குழுவில் உறுப்பினர்களாக அமர்த்தியது வியப்பளிக்கிறது.

தமிழ்நாட்டில் சமச்சீர்க் கல்வி முறையை கொண்டுவந்துவிடக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

சமச்சீர்க் கல்வி தொடர்பான சிக்கலில் தமிழக அரசு காட்டிவரும் பிடிவாதத்தால் மாணவ, மாணவியர் இதுவரை எவ்வளவோ பாதிப்புகளை எதிர்கொண்டுவிட்டனர். எனவே இந்த விசயத்தில் தமிழக அரசு அதன் ஒசார்பு போக்கை கைவிட்டுவிட்டு, நடுநிலை கடைபிடிக்க வேண்டும். மாணவர்களின் நலன் சம்மந்தபட்ட 9 பேர் குழுவிலிருந்து தனியார் பள்ளி முதலாளிகளை நீக்கிவிட்டு, சமச்சீர்க் கல்வி முறை பற்றி நன்கறிந்த கல்வியாளர்களை உறுப்பினர்களாக அமர்த்த வேண்டும்". என்று வலியுறுத்துவதாக மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வியாழன், ஜூன் 16, 2011

"பழைய பாடத்திட்டம்" இனி இல்லவே இல்லை - உண்மையை சொல்ல தமிழகஅரசு தயங்குவது ஏன்?


"பாடத்திட்டம் குறித்த முடிவு தெரியும் வரை மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டிய பாடங்கள் எவை?" எனும் 16.6.2011 செய்தியில் "தமிழகத்தில் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டுவிட்டன. ஆனால் சமச்சீர் கல்வி கற்பிப்பதா அல்லது பழைய பாடபுத்தகங்கள் படி சொல்லித்தருவதா என்பதில் முடிவு காணப்படவில்லை." என செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி.

அதே பக்க செய்தியில் "பள்ளிகளில் சமச்சீர் கல்வியா? பழைய பாடத்திட்டமா? 3 வாரங்களுக்கு என்ன பாடம் நடத்தப்போகிறார்கள் என்பது குறித்து ஆசிரியர்கள் வெளியில் யாரிடமும் கருத்துச் சொல்லக்கூடாது என்று கல்வித்துறை அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர்" என கூறப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி, மெட்ரி குலேசன் பள்ளி முதலாளிகள் தொலைக்காட்சி பேட்டிகளில் "பாடத்திட்டத்தை முடிவு செய்யும் வரையில் நாங்கள் பழைய பாடங்களையே நடத்துவோம்" என்று வேறு கூறியுள்ளனர்.

ஏன் இந்த 'தேவையில்லாத' குழப்பம்?

சமச்சீர் கல்வி குறித்த குழப்பத்தில், உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பின்பு ஒரு செய்தி தெளிவாக இருக்கிறது. 'இனி ஒருபோதும் பழைய பாடங்களுக்கு வேலை இல்லை' என்பதுதான் அந்த தெளிவான செய்தி.

அதாவது "பள்ளிகளில் சமச்சீர் கல்வியா? பழைய பாடத்திட்டமா?" என்ற கேள்விக்கு இனி வேலையே இல்லை. மாறாக "சமச்சீர் கல்விக்கு இப்போது அச்சடிக்கப்பட்ட புத்தகங்களா? அல்லது வேறு புதிய புத்தகங்களா? எதைப் பயன்படுத்தப் போகின்றனர்?" என்பதுதான் இப்போதுள்ள கேள்வி.

சமச்சீர் கல்விக்கு முந்தைய பழைய புத்தகங்களை தமிழ்நாடு அரசு அச்சிட்டாலும் கூட அவற்றை இனி பயன்படுத்த முடியாது. உச்சநீதி மன்றம் அதற்கு முடிவு கட்டிவிட்டது.

இதுகுறித்து ஆங்கில பத்திரிகைகள் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளன:


1. Indian Express: Hearing the state government’s challenge against the HC order, a vacation bench of Justices B S Chauhan and Swatanter Kumar decided on the expert panel to “examine ways and means to implement the Unified System of School Education”.

2. India Education Review: The Supreme Court of India has directed the Tamil Nadu government to set up an expert committee to examine ways and means to implement the Uniform System of School Education in the state.

3. The Hindu: It made it clear that since the validity of the Act had been upheld by the High Court and the Supreme Court, the committee could not go into the issue of change of the system. It said the committee should consider how to implement the directions of the High Court given in April 2010 for the implementation of the Act. It should complete the proceedings to enable the High Court to decide the writ petition expeditiously.
பழைய புத்தகங்கள் இனி வராது, அவற்றை பள்ளிகளில் நடத்தவோ, மாணவர்கள் படிக்கவோ வேண்டாம். பெற்றொர்கள் அவற்றை தேடிப்பிடித்து வாங்கவும் வேண்டாம் - என்கிற எளிதான உண்மையை தமிழக அரசோ தமிழ் பத்திரிகைகளோ இன்னமும் மக்களிடம் எடுத்துச் சொல்லி, பெற்றோரையும் மாணவர்களையும் குழப்பத்திலிருந்து விடுவிக்காமல் இருப்பது வியப்பளிக்கிறது.

அடுத்தக்கட்ட சோதனை.

பழைய பாட புத்தகங்கள் செல்லாது என்கிற நிலையில் -

1. சமச்சீர் கல்வி பட புத்தகங்களை 'சிலவற்றை நீக்கிவிட்டு' ஏற்க வேண்டும், அல்லது

2. புதிதாக பாட புத்தகங்களை எழுத வேண்டும்

 - என்கிற இரண்டு வாய்ப்புகள்தான் தமிழக கல்வித்துறைக்கு இருக்கிறது.

சமச்சீர் கல்வி பட புத்தகங்களை 'சிலவற்றை நீக்கிவிட்டு' ஏற்றால் இன்னும் ஒருமாத 'உள்ளிருப்பு விடுமுறைக்கு பின்' பள்ளிகள் நடத்தலாம். 


அதைவிட்டுவிட்டு 'புதிதாக பாட புத்தகங்களை எழுத வேண்டும்' என்று முடிவெடுத்தால் - உள்ளிருப்பு விடுமுறையை 4 மாதங்கள் நீட்டிக்க வேண்டியதுதான்.

பெற்றோர் மாணவர் மன உளைச்சலுக்கு ஓட்டுப்போட்ட மக்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்!


"The Apex Court said that the present case was a glaring example of a legislative enactment affecting the future of two crore students who are studying in Tamil Nadu schools." - India Education Review
புதன், ஜூன் 15, 2011

இனி சமச்சீர் கல்விதான் - உச்சநீதிமன்ற தீர்ப்பும் உண்மையை மறைக்கும் பத்திரிகைகளும்


தினமணியின் வெளியே தெரியும் பூணூல்.

சமச்சீர் கல்வி தொடர்பான செய்திகளில் தமிழக பத்திரிகைகள் தங்களது பூணூலை வெளியே போட்டு எழுதிவருகின்றன. அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது தினமணி.

சமச்சீர் கல்வி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை முடிந்தவரை மென்று முழுங்கி - ஆளுங்கட்சிக்கு விழுந்த அடியை மலர்மாலையாக மாற்ற முயற்சிக்கிறது தினமணி. "அரசுக்கு 3 வாரம் அவகாசம்" என்று தலைப்பிட்டுள்ள தினமணி, அதில் "தமிழ்நாடு அரசு மிக நன்றாகவும் வேகமாகவும் செயல்படுகிறது" என்பதாக வேறு உச்சநீதிமன்றம் கூறியதாகவும் பாராட்டு மழை பொழிகிறது தினமணி.

சொல்ல மறந்த கதை.

இப்படியெல்லாம் பூசி மெழுகினாலும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் மூக்கு உடைக்கப்பட்டிருக்கிறது.

1. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை இல்லை: சமச்சீர் கல்வி திட்டத்தை இந்த ஆண்டே செயல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. அந்த உத்தரவிற்கு தடைவிதிக்கக் கோரிதான் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், தமிழ்நாடு அரசு கேட்டபடி தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

2. சமச்சீர் கல்வி தொடரும்: உச்சநீதிமன்றமும் 1 மற்றும் 6ஆம் வகுப்புகளில் உடனடியாக சமச்சீர் கல்வியை தொடர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3. திமுக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி சட்டம் 2010 குறித்த வழக்கில் ஏற்கனவே உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் சமச்சீர் கல்விக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததையும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

4. இப்போது 2,3,4,5,7,8,9,10 ஆம் வகுப்புகளில் சமச்சீர் கல்வியை செயல்படுத்த வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவெடுக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிடவில்லை. மாறாக, சமச்சீர் கல்வியை எப்படி செயல்படுத்துவது? என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

It made it clear that since the validity of the Act had been upheld by the High Court and the Supreme Court, the committee could not go into the issue of change of the system. It said the committee should consider how to implement the directions of the High Court given in April 2010 for the implementation of the Act. It should complete the proceedings to enable the High Court to decide the writ petition expeditiously.

இனி சமச்சீர் கல்விதான்

அதாவது, புதிய நிபுணர் குழு - சமச்சீர் கல்வி வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து ஆராயப்போவது இல்லை. மாறாக, சமச்சீர் கல்விமுறையை எவ்வாறு சிறப்பாக செயல்படுத்துவது என்பது குறித்துதான் ஆராயப் போகிறார்கள்.

உண்மை இவ்வாறு இருந்தாலும் - பூணூல் கூட்டத்தின் 'ஆளுக்கொரு கல்வி முறையை' முடிந்தவரை 'கோயபல்ஸ்' பிரச்சாரம் மூலம் சாதித்துவிட நினைக்கிறார்கள்.

செவ்வாய், ஜூன் 14, 2011

ஒருமாத காலத்திற்கு பள்ளிகளில் பாடம் நடத்தவேண்டாம் - உச்சநீதிமன்றம் அதிரடி!


பள்ளிக்குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான செய்தி. சுமார் ஒருமாத காலத்திற்கு பாடம் எதுவும் நடத்தவேண்டாம் என்று உச்சநீதி மன்றமே கூறியுள்ளது. ஆனால், இந்த மகிழ்ச்சி 1 மற்றும் 6ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு இல்லையாம்.


இதில் பரிதாபத்துக்கு உரியவர்கள் 10 ஆம் வகுப்பு மாணவர்கள்தான். மிகமுக்கியமான தேர்வை சந்திக்க இருக்கும் அவர்கள் ஒருமாத காலத்தை குழப்பத்தில் கழிக்க போகிறார்கள். அவர்களது மன உளைச்சலுக்கு யார் பொறுப்பு? பலபள்ளிகள் 9 ஆம் வகுப்பிலேயே 10 ஆம் வகுப்பு பாடத்தை நடத்தி தங்களது பள்ளிகள்தாம் பெஸ்ட் என்று ஃபிலிம் காட்டுவார்கள். அவர்களுக்கும் இது அதிர்ச்சிதான்.
"தமிழக தலைமைச் செயலர் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். இக்குழு இருவார காலத்திற்குள் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையின் மீது ஒரு வாரத்திற்குள் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது."

ஆக, எந்த பாடத்தில் படிக்கப்போகிறோம் என்று அறிய 3 வாரங்கள் 2,3,4,5,7,8,9,10ஆம் வகுப்பு மாணவர்கள் காத்திருக்க வேண்டும். புதிய ஆட்சியில் நிபுணர்கள் எப்படி அறிக்கை அளிப்பார்கள் என்பது ஓரளவுக்கு எதிர்பார்க்கக் கூடியதுதான்.

ஒருவேளை நல்வாய்ப்பாக எல்லா வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி என்று தீர்ப்பு வந்தால் மாணவர்கள் தப்பிப்பார்கள். மாறாக, பழைய பாடத்திட்டம் என்றால், உடனுக்குடன் பாட புத்தகங்கள் கிடைப்பது கேள்விக்குறிதான்!

அப்புறம் தீர்ப்பு எதுவானாலும் அதற்குமேல் மேல்முறையீடு, வழக்கு என பலவும் இருக்கிறது.

என்னவோ போங்கள் - பணக்காரர்களும் மேல்சாதியினரும் படித்தால் போதும் எனநினைத்து ஆளுக்கொரு கல்வி அளிக்க அரசாங்கமே விரும்பும்போது இப்படித்தான் நடக்கும்.

வாழ்க சனநாயகம்.

காண்க: 

ஞாயிறு, ஜூன் 05, 2011

எதிர்காலத்தை மாற்றப்போகும் இரண்டு வார்த்தைகள்!

மிகப்பெரிய மாற்றங்கள் நேரும்போது அது சட்டென்று தெரியாது. ஒரு பூ மலர்வது போன்று அது நிகழ்ந்து முடிந்திருக்கும்! சில நேரங்களில் மாற்றம் என்பது தன்னிச்சையானதாக இல்லாமல் பலரது கூட்டு முயற்சியால் நிகழ்ந்திருக்கும்.

"மிகப்பெரிய மாற்றத்திற்கான முன்முயற்சியை நீங்கள் தொடங்கும்போது அது முடிக்கவே முடியாத செயலாகத் தோன்றும், ஆனால் முடிக்கும்போது நீங்களே நினைத்தாலும் அந்த சாதனை தடுக்க முடியாததாக ஆகிவிடும்" என்றார் பசுமைஅமைதி இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான பாப் ஹன்டர்.

அத்தகைய மாபெரும் சாதனைகளாக மாறப்போகும் இரண்டு வார்த்தைகள் - 1. பசுமைப் பொருளாதாரம், 2. பசுமை அரசியல்.

இன்று இந்த வார்த்தைகள் ஏதோ அகராதியில் காணப்படும் அறியாத வார்த்தைகளாகத் தோன்றலாம். ஆனால், இன்னும் சிலவருடங்களில் இவை விசுவரூபம் எடுப்பதை நீங்கள் காண்பீர்கள். எனவே, இந்த கருத்துக்களை விரிவாக விளக்கும் எனது இரண்டு கட்டுரைகளை கீழே அளித்துள்ளேன்.
1. பசுமை பொருளாதாரம்: இந்த வார்த்தை ஐ.நா. அவையால் முன்னெடுக்கப்படுகிறது. இன்றிலிருந்து (5.6.2011) சரியாக ஒரு ஆண்டு கழித்து அடுத்த 2012 ஜூன் 4 ஆம் நாள் பிரேசில் நாட்டில் தொடங்கும் ஐ.நா.புவி உச்சி மாநாட்டின் அடிப்படைக் கருத்தாக பசுமைப் பொருளாதாரம் இருக்கப் போகிறது. உலகின் எல்லா நாட்டு தலைவர்களும் அங்கு கூடி பசுமைப்பொருளாதாரம் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர். இந்த சூழலில் பசுமைப் பொருளாதாரம் குறித்து விரிவாக விளக்குகிறது கீழே அளிக்கப்பட்டுள்ள முதல் கட்டுரை.
2. பசுமை அரசியல்: உலகில் பொதுவுடைமை, சமூக ஜனநாயகம், பழமைவாதம், தாராளவாதம் என்கிற அடிப்படைகளில் பல கட்சிகள் உள்ளன. ஆனால், இயற்கையை காப்பது, சமூகநீதி ஆகியவற்றை முதன்மையாக வைத்து புதிய அரசியல் கட்சிகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. குறிப்பாக பசுமைக்கட்சி உலகில் முதன்முதலாக ஜெர்மன் நாட்டின் ஒரு மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்ததன் விளைவாக ஜெர்மனியில் அணுசக்திக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.

இது ஐரோப்பிய ஒன்றியம் முழுவதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓராண்டுக்கு முன்பு உலகில் ஒருநாடு அணுமின் திட்டங்களை வேண்டாம் என்று கூறுவது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத சாதனை. அது இப்போது நனவாகியுள்ளது. இந்த சூழலில் பசுமை அரசியல் குறித்து விரிவாக விளக்குகிறது கீழே அளிக்கப்பட்டுள்ள இரண்டாவது கட்டுரை.


1. பசுமை பொருளாதாரம்
Green Economy-By Arul, Tamil

2. பசுமை அரசியல்
Green Politics-By Arul, Tamil

மக்கள் டிவியில் நான்-சங்கப்பலகை-ஞாயிறு  இரவு 10.30

மக்கள் டிவியில் நான் - சங்கப்பலகை 5.6.2011 இரவு 10.30

மக்கள் தொலைக்காட்சி - தோழர் தியாகு அவர்களின் சங்கப்பலகை நிகழ்ச்சியில் நான் பங்கேற்கிறேன். நாள்: 05.06.2011 ஞாயிறு இரவு 10 மணி செய்திகளுக்கு பிறகு.

காண வேண்டுகிறேன்.

சனி, ஜூன் 04, 2011

உலக சுற்றுச்சூழல் நாள் - ஜூன் 5


மனித வாழ்க்கையின் ஆதாரமான சுற்றுச்சூழல் காப்பாற்றப்படுவதில் தான் நிகழ்காலமும் எதிர்காலமும் இருக்கிறது. 


"இந்த பூமி எல்லோரது தேவைகளையும் நிறைவு செய்யும், ஆனால் எல்லோரது பேராசையையும் பூமியால் நிறைவேற்ற முடியாது" என்றார் அண்ணல் காந்தி.  


"இந்த உலகம் நமது முன்னோர்கள் விட்டுச்சென்ற சொத்து அல்ல. மாறாக, நமது எதிர்கால சந்ததியினரிடம் நாம் வாங்கியிருக்கும் கடன். அதனை அவர்களுக்கு பாதுகாப்பாக விட்டுச்செல்ல வேண்டியது நமது கடமை" என்கிறது ஒரு கென்ய முதுமொழி.

1972 ஆம் ஆண்டில் உலகளாவிய முதல் சுற்றுச்சூழல் மாநாடு சுவீடனின் ஸ்டாக்கோம் நகரில் கூடியதைக் குறிக்கும் வகையில் ஜூன் 5 ஆம் நாள் உலக சுற்றுச்சூழல் நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
நோபல்அமைதி பரிசுபெற்ற 'பசுமைப்போராளி' வங்காரி மத்தாயுடன் நான் - இடம், கென்யா

2011 ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் நாள் முழக்கமாக "காடுகள்: உங்கள் சேவையில் இயற்கை" என்பது முன்வைக்கப்பட்டுள்ளது.

பூமியின் மேற்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு இடம் காடுகளாக உள்ளது. பூமியின் சுவாசப்பைகளாக கருதப்படும் காடுகள் மனிதனுக்கு இன்றியமையாத கொடைகளை அளித்து வருகிறது. சுமார் 160 கோடி மக்கள் தமது வாழ்வாதாரமாக காடுகளைக் கொண்டுள்ளனர். கரியமில வாயுவை உறிஞ்சி காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் முக்கிய பணியில் காடுகளே முன்நிற்கின்றன.

உலகின் 50% மாநகரங்களின் தண்ணீர் தேவையை நிறைவு செய்பவை காடுகள்தான். மண்வளம் காத்தல், புயலின் வேகத்தைக் குறைத்தல், வெள்ள்ச் சேதத்தை தடுத்தல் எனப் பல பணிகளைக் காடுகள் செய்கின்றன. உலகின் உயிரின வளத்தைக் காப்பதிலும் காடுகளே முதன்மை இடத்தைப் பிடித்துள்ளன.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த காடுகள் ஆண்டுக்கு 1 கோடியே 30 லட்சம் எக்டேர் பரப்பளவுக்கு அழிந்து வருகின்றன. இப்போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே இந்த ஆண்டின் சுற்றுச்சூழல் நாள் செய்தி ஆகும்.

வெள்ளி, ஜூன் 03, 2011

சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.

சென்னை நகர் முழுவதையும் அடையக்கூடிய வகையில் முந்தைய அரசால் தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 45 கிலோ மீட்டர் தொலைவுடன் நிறுத்தப்படும் என்று புதிய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுமாம்.

அதுவும் முதற்கட்டமாக 111 கிலோ மீட்டர் தொலைவும் அதன் நீட்டிப்பாக மொத்தம் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமைக்கப்படுமாம். இதைப் படிக்கும் போது மயக்கமே வந்துவிடும் போலிருக்கிறது.

சென்னை மோனோ ரயில் - ஒரு உலக அதிசயம்

மோனோ ரயில் திட்டத்தில் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.

அவை இதோ:

1. உலகம் முழுவதும் மொத்தம் 60 மோனோ ரயில் திட்டங்களே உள்ளன (தற்போது புதிதாக அமைக்கப் படுபவைகளையும் சேர்த்து). அவற்றின் ஒட்டுமொத்த தூரம் வெறும் 400 கிலோ மீட்டர் மட்டும்தான்.

உலகிலேயே அதிக மோனோ ரயில் திட்டங்கள் உள்ள நாடு ஜப்பான் - அங்கு மொத்தம் 108 கிலோ மீட்டருக்கு மோனோ ரயில் உள்ளது. சீனா உள்ளிட்ட அனைத்து ஆசிய நாடுகளிலும் மொத்தம் 164 கிலோ மீட்டர், அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் மொத்தம் 38 கிலோ மீட்டர், அனைத்து வட அமெரிக்க நாடுகளிலும் மொத்தம் 54 கிலோ மீட்டர், அனைத்து தென் அமெரிக்க நாடுகளிலும் மொத்தம் 24 கிலோ மீட்டர், ஆப்பிரிக்காவில் 6 கிலோ மீட்டர், ஆஸ்திரேலியாவில் 7 கிலோ மீட்டர் என்ற அளவில் மட்டுமே மோனோ ரயில் திட்டங்கள் உள்ளன.

ஆனால், சென்னையில் மட்டுமே 300 கிலோ மீட்டருக்கு தமிழ்நாடு அரசு மோனோ ரயில் திட்டத்தை அமைக்கப் போகிறதாம்!

2. உலகின் பெரும்பாலான திட்டங்கள் 2 அல்லது 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு மட்டுமே அமைக்கப் பட்டுள்ளன. வெறும் 12 திட்டங்கள் மட்டுமே 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு கூடுதலாக உள்ளன. 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு அதிகமாக ஒரேஒரு திட்டம் கூட இல்லை. 

உலகின் மிகப்பெரிய மோனோ ரயில் திட்டம் என கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ள திட்டம் ஜப்பானின் ஒசாகா மோனோ ரயில் ஆகும். இதன் நீளம் வெறும் 28 கிலோ மீட்டர்தான்.

உலக நிலவரம் இப்படி இருக்கையில் - சென்னையில் முதற்கட்டமாக 111 கிலோ மீட்டர் தொலைவும் அதன் நீட்டிப்பாக மொத்தம் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமைக்கப்படுமாம்.


மோனோ ரயில் - கேடுகளே அதிகம்.

உலகில் மோனோ ரயில் என்பது சுற்றுலா இடங்களை சுற்றிப் பார்க்க சின்னஞ்சிறு அளவில் அமைக்கப் படுபவை. பயணிகள் போக்குவரத்திற்காக அமைக்கப்படும் எல்லா திட்டங்களும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. மலேசியாவின் கோலாலம்பூர், இந்தோனேசியாவின் ஜாகர்த்தா, அமெரிக்காவின் சீயாட்டில் என எல்லா திட்டங்களும் காலதாமதம் மற்றும் நிதிச்சுமை என்கிற சுழலில் சிக்கித்தவிக்கின்றன.
மலேசியாவின் 9 கிலோ மீட்டர் மோனோ ரயிலை அமைக்க 5 ஆண்டுகள் ஆயின. அதனை 8 மாதம் இயக்குவதற்கு மட்டும் 61 கோடி ரூபாய் செலவானது. இப்போது அந்த நிறுவனம் திவாலாகி 1215 கோடி ரூபாய் கடனில் மூழ்கிவிட்டது.

சீயாட்டில் நகர மோனோ ரயில் திட்டத்துக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 450 கோடி ரூபாய் செலவானது. இதனால் 22 கிலோ மீட்டருக்கு தொடங்கப்பட்ட திட்டம் பாதியில் கைவிடப்பட்டது.

இப்படி உலகெங்கும் மொனோ ரயில் திட்டங்கள் பல்லிளிக்கின்றன. ஆனாலும், மலேசியாவில் உள்ள மோனோ ரயில் நிறுவனங்கள் உலகின் இதர நாடுகளில் பலவிதமான தந்திரங்களைக் கையாண்டும், பொய்யான கட்டுக்கதைகளை பரப்பி ஆசை வார்த்தைக் காட்டியும் ஏமாற்றி வருகின்றன.

இப்போது - மலேசியா மற்றும் ஜப்பானின் மோனோ ரயில் நிறுவனங்களுக்கு "உலகிலேயே மிகப்பெரிய இரை" சிக்கியிருக்கிறது. அது வேறு யாருமல்ல - அப்பாவி தமிழ்நாட்டு மக்கள்தான். ஒருபோதும் சாத்தியமே இல்லாத ஒரு திட்டத்திற்காக பல்லாயிரம் கோடி பணத்தை தமிழக மக்கள் இழக்க இருக்கின்றனர்.

வாழ்க ஜனநாயகம்!

கூவாகம் - அலிகள் திருவிழா எனும் கட்டுக்கதை.


கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் இந்தியா முழுவதும் உள்ள அரவாணிகளின் சாமி எனவும், அங்கு நடைபெரும் சித்திரை மாதத்திருவிழாதான் அரவாணிகளின் மிக முக்கிய திருவிழா எனவும் எல்லோராலும் பேசப்படுகிறது. இந்திய ஊடகங்களும் பல்வேறு அமைப்புகளும் கூத்தாண்டவரை அலிகளின் குலதெய்வம் ஆக்கிவிட்டனர். ஆனால், அது உண்மை அல்ல.

"மகாபாரதப் போர் தொடங்கும் முன் பாண்டவர்கள் போரில் வெற்றிபெற 32 லட்சணங்களும் முழுமையாகக் கொண்ட ஆண்மகன் ஒருவன் பலியிடப்பட வேண்டும். இதற்காக தெரிவு செய்யப்பட்டவன் தான் அரவான். ஆனால் அவனுக்குத் திருமணமாகாத குறை இருக்கிறது. இதனைப் போக்கினால்தான் அவன் முழு ஆண்மகன் ஆவான். அடுத்த நாள் சாகப் பொகிறவனுக்கு யார் பெண் தருவார்கள். எனவே கண்ணனே பெண்ணாக உருமாறி அரவானைத் திருமணம் செய்துகொள்கிறான்" என்று போகிறது கதை. இதில் உள்ள ஆண் பெண்ணாக மாறும் கதையை வைத்து கூத்தாண்டவரை அரவான் எனவும் அலிகளின் தெய்வம் எனவும் ஆக்கிவிட்டனர்.

கூத்தாண்டவர் - ஒரு விளக்கம்.

தலையை அறுத்து பலிகொடுப்பது என்பது பழங்காலத்தில் ஒரு வீரச்செயலாக கருதப்பட்டது. அவ்வாறு தலையை அறுத்துக் கொள்பவர்கள் வழிபாட்டுக்கு உரியவர்களாக ஆயினர். இந்த நாட்டார் கதைகள் மகாபாரதக் கதையிலும் இணைக்கப்பட்டது. இந்தியா முழுவதுமே பல்வேறு இடங்களில் அரவான் பலிகொடுக்கப்பட்ட கதை பல பெயர்களில் இருக்கிறது.

இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருக்கும் கதைகளில் அரவான் இரண்டு வரங்கள் கேட்டதாக வருகிறது. "முதல் வரம் - பலிகொடுக்கப்பட்ட பின்பும் பாரதப் போரை பார்க்க வேண்டும், இரண்டாவது வரம் - கடைசி நாள் போரில் போரிட வேண்டும்" ஆகியன தான் அந்த வரங்கள். ஆனால், தமிழ்நாட்டின் அரவான் மூன்றாவதாக "ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும்" என்று கேட்பதாகக் கூறப்படுகிறது.

இந்த திருமணக் கதை மகாபாரதத்தில் இல்லாதக் கதையாகும். குறிப்பாக, தமிழ்நாட்டின் முதன்மை பாரதக் கதையான 'வில்லிபுத்தூரார் பாரதத்தில்' இந்த திருமணக் கதை இல்லை.

பாரதக் கதையின் பின்னணி.

தமிழ்நாட்டின் மக்கள் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடிக்கும் ஒரு நிகழ்வு சாளுக்கிய மன்னன் புலிகேசிக்கும் பல்லவர்களுக்கும் நடந்த போராகும். பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டு காஞ்சியிலிருந்து துரத்தப்பட்டான். இதற்கு பழிவாங்க சபதமேற்ற அவனது மகன் நரசிம்மவர்ம்மன், இதற்காக மக்களுக்கு போர்க்குணம் ஏற்படச் செய்யவேண்டும் என்பதற்காக பாரதம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினான் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இதன் பலனாக கி.பி.642 ஆம் ஆண்டில் புலிகேசியின் பாதாமி நகர் தாக்கப்பட்டு அவன் தோற்கடிக்கப்பட்டான் (கருநாடக மாநிலத்தில் உள்ள நகரம் - தமிழில் வாதாபி) .
பாதாமி நகர்
நரசிம்மவர்மனது படைவீரர்களாக இருந்தவர்கள் வன்னியர்கள். பாதாமியை வென்ற படைக்கு தலைமையேற்ற பரஞ்சோதி என்கிற சிறுதொண்டரும் வன்னியர்தான். அவர்தான் பாதாமியில் இருந்து விநாயகர் சிலையை தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்தவர் (வாதாபி கணபதி).
சிறுதொண்டர் கொண்டுவந்த வாதாபி கணபதி - நன்னிலத்திற்கு அருகில் உள்ள திருச்செங்காட்டங்குடியில் உள்ளது 

வன்னியர்கள் வாழும்பகுதிகளில் இப்போதும் பாரதம் படிக்கும் பழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. பாரதம் படிக்கும் பழக்கத்திலிருந்து பாரதக்கூத்து வந்துள்ளது. இத்தகைய தெருக்கூத்து முறைகள் வளர்ந்ததும் வன்னியர் சமூகத்தினரிடையேதான். பாரதக்கதையின் பாதிப்பால் வன்னியர்கள் வாழும் பகுதிகளில் திரௌபதி அம்மன் கோவில்கள் உருவாயின.

வன்னிய புராணம்

வாதாபி சூரனை அழிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட வன்னிய புராணம் மறுபுறம் வன்னியர்களிடையே கதையாக பரவியிருந்தது. வன்னியர்களின் தலைவன் வீரவன்னிய ராசன்.
வாதாபியை அழிப்பதற்காக சிவனால் தோற்றுவிக்கப்பட்டவர். வாதாபி அரக்கனை அழிக்கப்புறப்படும் போது அவருடைய மனைவி மந்திரமாலா போரின் விளைவு என்னவாகுமோ என கவலைப் படுகிறாள். அதற்கு வன்னியராசன் "என்னுடன் நாய் வருகிறது. நான் போரில் இறந்தால் நாய் திரும்பிவரும், வீட்டில் ஏற்றப்பட்ட காமாட்சி விளக்கு அணையும், மல்லிகைப் பூ வாடும்" என்று சொல்லிவிட்டு செல்கிறார்.

வன்னியராசன் செல்லும் வழியில் ஆறு குறுக்கிடுகிறது. அவர் ஆற்றைக் கடந்து சென்றுவிடுகிறார். ஆனால் நாய் கடக்க முடியாமல் திரும்பி விடுகிறது. நாயைப் பார்த்த மந்திரமாலா கணவர் இறந்துவிட்டதாகக் கருதி தாலியை அறுத்துவிடுகிறாள். வீட்டில் விளக்கு அணையாததையும், மலர் வாடாதைதையும் அவள் கவனிக்கவில்லை.

போரில் வெற்றிபெற்று திரும்பும் வீரவன்னிய ராசன் தன் மனைவி விதவைக் கோலத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். நடந்ததை அறிந்து மீண்டும் தாலி கட்டுகிறான். இதுதான் வன்னியக் கூத்து ஆகும்.

இப்படி தாலியை அறுத்துக்கட்டக்கூடிய பழக்கம் வன்னியர்களிடையே இருக்கிறது. இன்றைக்கும் ஆடி 18 அன்று தாலியை அறுத்துக்கட்டும் சடங்கை பல வன்னியர்கள் செய்கின்றனர்.

இப்படியாக வன்னியர் புராணத்தில் உள்ள ஒரு கதை - பாரதக் கதையில் உட்புகுத்தப்பட்டு கடைசியில் அரவாணிகள் கதை ஆகிவிட்டது.

கூத்தாண்டவர் - வன்னியர்களின் சாமி

கூவாகம், கொத்தட்டை, அண்ணாமைலை நகர், தேவனாம் பட்டினம், தைலாபுரம், பிள்ளையார் குப்பம் ஆகிய கடலூர், விழுப்புரம், புதுவை பகுதிகளில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. கோவை சிங்காநல்லூர் மற்றும் தருமபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது.

அனைத்து கூத்தாண்டவர் கோவில்களும் வன்னியர்களின் கோவிலாக உள்ளன. அவற்றில் பூசாரிகளாக இருப்பதும் வன்னியர்கள்தான். இக்கோவிலுக்கு வழிபட வரும் சுற்றுக்கிராம மக்கள் அரவாணிகள் அல்ல. அவர்கள் சாதாரண மக்கள். தமது வேண்டுதலுக்காக தாலி கட்டிக்கொள்கின்றனர்.

வன்னிய புராணம், பாரதக் கதை - இவை இரண்டுமே வன்னிய மக்களுக்கு போர்க்குணம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பல்லவ மன்னனால் திட்டமிட்டு உருவாக்கப் பட்டவை. பாரதம் படிப்பதற்கென்று பல மானியங்களை மன்னர்கள் அளித்துள்ளதை கல்வெட்டுகள் காட்டுகின்றன.

பாரதக் கதையின் பாதிப்பால் திரௌபதை அம்மன் கோவில்கள் உருவாயின. எல்லா திரௌபதியம்மன் ஆலயங்களும் வன்னியர் கோவில்களாக நீடிக்கின்றன. வன்னியர்களே பூசாரிகளாக உள்ளனர்.  பெங்களூரின் முக்கிய விழாவான தர்மராஜா கோவிலின் கரகா திருவிழா இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
பெங்களூர் தர்மராஜா கோவில் 

வன்னிய புராணத்தின் கதை பாரதக்கதையில் கலந்து கூத்தாண்டவர் அரவானாக ஆக்கப்பட்டுள்ளார். 1885 ஆம் ஆண்டில் வெளியான எட்கர் தர்ஸ்டனின் "தென்னிந்திய குலங்களும் குடிகளும்" என்கிற நூல் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாவை ஒரு வன்னியர் விழாவாகவே குறிப்பிடுகிறது. அதில் எந்த இடத்திலும் அரவாணிகள் குறித்த குறிப்பு இல்லை.

மொத்தத்தில் கூவாகம் கூத்தாண்டவர் அரவாணிகள் சாமியும் அல்ல, அது அரவாணிகள் விழாவும் அல்ல. வன்னியர் மரபான நாட்டார் தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சியே கூத்தாண்டவர் ஆகும். குறிப்பாக, போருக்காகவும் நாட்டைக் காக்கவும் மக்களைத் திரட்டி அவர்களுக்கு வீரத்தையும் தியாகத்தையும் கற்பித்த ஒரு வரலாற்று நிகழ்வின் எச்சம் அதுவாகும்.

ஆதாரம்: 
1. நாட்டுப்புறத் தெய்வங்கள் களஞ்சியம் - சு. சண்முகசுந்தரம் 2009, 
2. தமிழ்ச் சமுதாயமும் நாட்டுப்புறப் பண்பாடும் - துளசி. இராமசாமி 1997, 
3. தென்னிந்திய குலங்களும் குடிகளும் - எட்கர் தர்ஸ்டன் 1885, 
4. வன்னிய புராணம், சைவ.கி.வீரப்பிள்ளை 1938, 
5. Draupadi among Rajputs, Muslims and Dalits - Alf Hiltebeitel 1999

வியாழன், ஜூன் 02, 2011

தைவான், பிலிப்பைன்ஸ் - எனது அனுபவம்

ஒரு நாடு குறித்து எண்ணெற்ற தகவல்கள் இப்போது இணையத்தின் மூலம் கிடைத்தாலும் - நேரில் காணும் அனுபவம் புதுமையாகவே அமையும். அந்த வகையில் தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் குறித்த எனது பயண அனுபவத்தை இங்கே பகிர விரும்புகிறேன்.
தைப்பே 101
தைப்பே 101 முன்பு நான் 
தைப்பே - தைவான்.

தைவான் ஒரு சின்னஞ்சிறு நாடு. புத்த மதத்தை பின்பற்றும் நாடு. அதன் தலைநகர் தைப்பே அழகிய ஊர்.  தைவான் நாட்டினர் தம்மை அதிகாரப்பூர்வமாக "சீனக் குடியரசு" என்று அழைத்துக் கொள்கின்றனர் (சீனா தன்னை மக்கள் குடியரசு என்று அழைத்துக்கொள்கிறது).

தனிநாடாக இருப்பினும் சீனாவால் தமது மாநிலம் என்று அழைக்கப்படும் தைவான் நாட்டு மக்கள் சீனாவை எதிர்த்து நிற்பது ஆச்சர்யமானது. ஒரே நாளில் தைவானை சீனாவால் நசுக்கி விட முடியும். ஆனாலும், சீனாவை அவர்கள் எதிர்த்து நிற்கின்றனர். அவர்களது மிக முக்கிய கனவு ஐ.நா. அவையில் ஒரு உறுப்பினர் ஆவதுதான் (அது நடக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி).
தைவான் ஐ.நா. உறுப்பினர் கனவு

தைவான் நாட்டில் மக்களின் பொது ஒழுங்கு

உலகின் இரண்டாவது மிக உயரமான கட்டடம் தைப்பே 101 அங்கு உள்ளது. ஒரு வளர்ந்த நாட்டுக்கு இணையான பொருளாதார முன்னேற்றம், கட்டமைப்பு வசதிகள் என வளமாக வாழும் தைவான் நாட்டில் மக்களின் பொது ஒழுங்குதான் அங்கு கவரக்கூடிய முக்கிய அம்சம் என நான் கருதுகிறேன்.

எந்த ஒரு இடத்திலும் எவரும் முண்டியடித்து ஓடியதை பார்க்கவே முடியவில்லை. பேருந்து நிறுத்தம். கடைகள் என எந்த ஒரு இடத்திலும் மக்கள் வரிசையாக நின்றே எதையும் வாங்குகிறார்கள். சாலையோரங்களில் உள்ள சின்னஞ்சிறு கடைகளில் கூட வெறும் 2 அல்லது 3 பேர் இருந்தால் கூட அவர்களும் வரிசையில்தான் நிற்கின்றனர்.
மெட்ரோ நகரும் படிக்கட்டுகளில் 1
மெட்ரோ நகரும் படிக்கட்டுகளில் 2
மெட்ரோ தொடர்வண்டிகளிலிருந்து இறங்கி நகரும் படிக்கட்டுகளில் அவர்கள் பயணிக்கும் ஒழுங்கை ஒர் பாடமாகவே கருதலாம். சுரங்கப்பாதையில் இயங்கும் மெட்ரோவிலிருந்து இறங்கும் மக்கள் மேலே செல்லும் நகரும் படிகளுக்கு வரும் போது வரிசையாக வருகின்றனர். இரண்டுபேர் செல்லும் அளவுள்ள நகரும் படிக்கட்டில் ஒரு ஆள் வரிசையில் மட்டுமே மக்கள் நிற்கின்றனர். இன்னொரு ஆள் செல்லும் இடத்தை காலியாக விட்டுள்ளனர். 

இதன் காரணமாக, ஏதேனும் அவசர பணிக்காச செல்ல வேண்டியவர்கள் ஒன்றிரண்டுபேர் மட்டும் அந்த காலி இடத்தில் வேகமாக ஓடி முன்னதாக செல்கின்றனர்.

தைவானிடம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பழக்கம் அவர்களது ஒழுங்கு முறைகள் தான்.


பிலிப்பைன்ஸ் - ஒரு வலிமிகுந்த வரலாறு.

தனக்கென்ற ஒரு அடையாளத்தை இழந்துநிற்கும் மக்களுக்கு பிலிப்பைன்ஸ் ஒரு எடுத்துக்காட்டு (எதிர்கால தமிழ்நாடு இப்படித்தான் ஆகுமோ?!). பிலிப்பைன்ஸ் என்கிற பெயரே காலனியாதிக்க நாடான ஸ்பெயின் நாட்டு அரசன் இரண்டாம் பிலிப் பெயரைக் குறிப்பதாகும்.
ஸ்பெயினை எதிர்த்து போராடிய விடுதலை வீரர்கள் நினைவுத்தூண் முன்பு நான்

சுமார் ஐநூறு வருடங்களுக்கு முன்பு போர்த்துகீசியர்கள் மற்றும் மெக்சிகோ நாட்டினர் மூலம் ஸ்பெயின் அரசருக்கு காலனி நாடாக ஆக்கப்பட்டதுதான் பிலிப்பைன்ஸ். எனினும் தொடர்ந்து ஆங்கிலேயர்களுக்கும் ஸ்பானியர்களுக்குமான மோதலில் பாதிக்கப்பட்டது. கடைசியில் 1898 இல் தனக்குத்தானே விடுதலையை அறிவித்த போது 2 கோடி டாலருக்கு ஸ்பெயினால் அமெரிக்காவுக்கு விற்கப்பட்டது. பல ஆண்டுகளாக ஸ்பெயினோடு மோதி பின்னர் அமெரிக்காவுடன் சண்டையிட்டனர் பிலிப்பைன்ஸ் மக்கள்.

1935 ஆம் ஆண்டிற்கு பின் மீண்டும் விடுதலைபெரும் தருணத்தில் ஜப்பானால் கைப்பற்றப்பட்டது பிலிப்பைன்ஸ். 1945 இல் இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான மோதலில் சிக்கி சின்னாபின்னமானார்கள் பிலிப்பைன்ஸ் நாட்டினர். ஐரோப்பிய வார்சா நகருக்கு அடுத்ததாக பிலிப்பைசின் மணிலா நகர மக்கள் தான் அதிகமாகக் கொல்லப்பட்டனர்.
உலகப்போரில் இறந்த அமெரிக்க வீரர்கள் நினைவிடம் முன்பு நான்

இரண்டாம் உலகப்போர் ஐரோப்பிய நாடுகளை மையமாக வைத்து நடந்த நிலையில், எங்கோ மூலையில் கிடந்த மணிலா நகரில் ஒரு லட்சம் அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டனர். எல்லாவிதமான ஊடுருவலுக்கும் காலனியாதிக்கத்துக்கும் ஆளான பிலிப்பைன்ஸ் இன்றும் அமெரிக்க அரசின் இராணுவ ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறது. அமெரிக்க இராணுவ தளம் பிலிப்பைன்சில் உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டு சட்டம் அங்குள்ள அமெரிக்க வீரர்களைக் கட்டுப்படுத்தாது! (உலகப்போரின் போது அதிக அமெரிக்க போர்வீரர்கள் கொல்லப்பட்ட நாடு பிலிப்பைன்ஸ் தான்.)

காலனியாதிக்கத்தின் விளைவுகளை இன்றும் பிலிப்பின்சில் காணலாம். மக்களின் தாய் மொழி தகலோக் பொதுவாக பேசப்படுவது இல்லை. ஸ்பானிஷ், ஆங்கிலம் இரண்டையுமே சரளமாக பேசுகின்றன். இவை எல்லாவற்றையும் கலந்து பிலிப்பினோ மொழிதான் ஆட்சிமொழி என்கின்றனர். மொழி மட்டுமல்ல இனமும் கலப்பினம் தான். பெரும்பாலானோரின் தாத்தா பாட்டிகளின் பட்டியலில் சீனர், ஸ்பானியர், அமெரிக்கர் ஆகியோர் உள்ளனர். அதாவது காலனியாதிக்கம் அரசியல் அதிகாரத்தோடு நிற்கவில்லை. சகட்டுமேனிக்கு எல்லோரும் பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களோடு திருமண உறவும் கொண்டிருக்கின்றனர். எனவே, இன்றைய மக்கள் எல்லாம் கலந்த இனமாக காட்சியளிக்கின்றனர்.

இன்றைய மணிலா.
இன்றைய மணிலா நகரம் ஒரு எழில்மிகு நகரம்தான். உலகப்போரின் போது விமான ஓடுபாதையாக இருந்த இடம்தான் இப்போது நகரின் பிரதான வீதியாக இருக்கிறது. மணிலா நகரின் நடைபாதைத் திட்டம் அவர்களைப் பார்த்து பொறாமைப் படவைக்கும் ஒரு திட்டமாக இருக்கிறது. 

மணிலா பெருநகரின் முக்கிய பகுதி மக்காட்டி நகரம். இங்குதான் மணிலா நகரின் முக்கிய அலுவலகங்கள், வணிகப்பகுதிகள் உள்ளன. இந்த நகரின் அலுவலகங்களுக்கும் கடைகளுக்கும் செல்லும் மக்களில் மிகப்பெருமளவினர் நடந்தே செல்கின்றனர். இதற்கான அற்புத திட்டத்தை அந்நாட்டு அரசு வடிவமைத்துள்ளது.

மணிலா நகரின் நடைபாதை.

மக்காட்டி நகரின் நடைபாதை திட்டம் நகரின் எல்லா முக்கிய இடங்களையும் இணைக்கிறது. இது சுரங்கப்பாதை - தரை அளவு - முதல் தளம் என்கிற மூன்று தள அளவுகளில் இடத்திற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையின் சிறப்பம்சம் - எந்த இடத்திலும் சாலைமீது நடக்கத்தேவை இல்லை என்பதுதான்.
முக்கிய இடங்களை இணைக்கும் சுரங்க நடைபாதை 
மணிலா நகர நடைபாதையில் நான் 

அகலமான நடைபாதை, வெய்யிலோ மழையோ பாதிக்காத மேற்க்கூரை, மேலே ஏற - கீழே இறங்க நகரும் படிக்கட்டுகள் என தனிவழியாக நடபாதைகள் உள்ளன. இந்த நடைபாதை மூலமாக நகரின் பெரும்பாலான வணிக நிறுவனங்கள், அங்காடிகளுக்கு அவற்றின் முதல் மாடிக்குள் நேராக செல்ல முடியும்.
முக்கிய இடங்களை முதல் மாடி உயரத்தில் இணைக்கும் நடைபாதைகள்
முக்கிய இடங்களை முதல் மாடி உயரத்தில் இணைக்கும் நடைபாதைகள்
ஒரு எடுத்துக்காட்டுக்கு சென்னையை எடுத்துக்கொண்டால் - சத்யம் திரையரங்கம், எக்ஸ்பிரஸ் அவென்யூ, ஸ்பென்சர் பிளாசா ஆகிய மூன்றுக்கும் செல்ல வேண்டுமானால் - சாலையில் இறங்கவே தேவை இல்லை. இவை ஒவ்வொன்றின் முதல் மாடியில் இருந்தும் அதே முதல் மாடி உயரத்தில் உள்ள நடைபாதையில் நடந்து அனைத்து இடங்களுக்கும் எளிதில் செல்லலாம்.

திநகர் என்றால், அங்குள்ள எல்லா கடைகளுக்கும் முதல் தளத்துக்கு இணையாக உள்ள நடைபாதைகள் மூலம் எல்லா கடைகளுக்கும் நடந்தே செல்ல முடியும். கீழே சாலையில் இறங்கி நடக்க வேண்டாம்.

இந்த வசதியான நடைபாதையால் மக்கள் மிக எளிதாக நகரின் முக்கிய இடங்களுக்கு நடந்து செல்கிறார்கள். இதுபோன்ற திட்டங்கள் சென்னைக்கு அவசியம்.

புகையிலையின் அறியப்படாத வரலாறு!


புகையிலைக் கண்டுபிடிப்பு

புகையிலை புதிய பொருள் அல்ல. கி.மு. 6000 ஆண்டுகள் வாக்கிலேயே தென் அமெரிக்க கண்டத்தில் புகையிலை காணப்பட்டதாகக் கருதப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்கள் புகையிலையை மெல்லுவது, உடலின் மீது பூசிக்கொள்வது, புகைப்பது என பலவழிகளிலும் பயன்படுத்தக் கற்றிருந்தனர்.

"பூமி வறண்டு, மனிதர்கள் பசியால் துடித்த போது கடவுள் ஒரு தேவதையை பூமிக்கு அனுப்பினார். அந்த தேவதையின் வலது கரங்கள் பட்ட இடங்களில் எல்லாம் உருளைக் கிழங்கு விளைந்தது. இடது கரங்கள் பட்ட இடங்களில் எல்லாம் சோளம் விளைந்தது. எங்கெல்லாம் தேவதை உட்கார்ந்து எழுந்தாளோ அங்கெல்லாம் புகையிலை விளைந்தது" என்பது தென்அமெரிக்க பழங்குடிகளின் பழங்கதை.

மதுப்பழக்கத்தை சாடும் புத்த, இசுலாமிய, கிறித்தவ மதநூல்கள் புகையிலைப் பழக்கத்தை நேரடியாக சாடுவதில்லை. இதற்காக அந்த மதங்கள் புகையிலையை ஆதரிக்கின்றன என்று கூறிவிட முடியாது. மாறாக இந்த மதங்கள் உருவான காலத்தில் உருவான நாடுகளில் புகையிலை என்கிற பொருளே இல்லை.
பதினைந்தாம் நூற்றாண்டில் அமெரிக்காவை கண்டறிந்த கொலம்பஸ் தான் முதன்முதலில் புகையிலைச் செடியை 1492 இல் ஐரோப்பிய கண்டத்திற்கு கொண்டுவந்தார். அதன்பிறகே புகையிலை உலகின் இதர பகுதிகளுக்கு பரவியது.

இந்தியாவில் புகையிலை

இந்தியாவிற்கு புகையிலையை அறிமுகப்படுத்தியது ஐரோப்பியர்கள் தான். 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அக்பரின் ஆட்சி காலத்தின் போது, போர்த்துகீசியர்கள் இந்தியாவுக்கு புகையிலைச் செடியைக் கொண்டுவந்தனர். 1618 ஆம் ஆண்டளவில் பீஜப்பூர் கோல்கொண்டா பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு புகையிலைப் பயிரிடப்பட்டதாக அறியப்படுகிறது.
"பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் இரு ஆண்டுகளில் சென்னையிலிருந்து மைசூர் கர்நாடகம், மலபார் ஆகிய பகுதிகளில் பயணம் மேற்கொண்ட பிரான்சிஸ் புக்கானன் கர்நாடகத்திலும், மலபார், கோயமுத்தூ பகுதிகளிலும் மைசூர் சமஸ்தானத்திலும் பரந்த அளவில் புகையிலை பயிர் செய்யப்பட்டு வந்ததாக குறிப்பிடுகிறார்.

மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய பகுதிகளிலும் புகையிலை சிறப்பாக பயிர் செய்யப்பட்டு வந்தது. அழகன்குளம், பரத்தை வயல். காங்கேயம், யாழ்ப்பாணம் ஆகியவற்றை புகையிலை சிறப்பாக விளையும் இடங்களால 'புகையிலை விடு தூது' ஆசிரியர் குறிப்பார்" என்கிறார் ஆய்வாளர் ஆ.இரா. வெங்கடாசலபதி.

புகையிலையும் புராணமும்

எல்லாவற்றுக்கும் புராணக்கதைகள் உள்ளது போல புகையிலைக்கும் புராணக்கதை இருந்துள்ளது. "சிவபெருமான், திருமால், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் இடையே தம்முள் யார் பெரியவர் என்ற வாதம் எழுந்ததாம். அதைத் தீர்க்க வழக்கம்போல் அவர்கள் தேவர் அவைக்கு சென்றனராம். அங்கே வழக்கை பின்பு தீர்க்கலாம், முதலில் ஒவ்வொருவருக்கும் ஒரு பத்திர பொருள் தருவோம் என்று கூறி சிவனுக்கு வில்வமும், திருமாலுக்கு துளசியும், பிரமனுக்கு புகையிலையும் கொடுத்தனராம்.

சிவனிடம் கொடுத்த வில்வத்தை கங்கை கொண்டுபோக, திருமாலிடம் கொடுத்த துளசி பார்க்கடலில் அமிழ்ந்து போனதாம். தேவர்கள் பத்திரப் பொருளை திருப்பிக்கேட்ட போது சிவனும் திருமாலும் அவற்றை திருப்பித்தர இயலவில்லை, பிரமன் மட்டும் 'நமது பத்திரம் போகவில்லை என்று கூறினாராம்". இவ்வாறு போகவில்லை என்று பிரமன் கூறியது புகையிலை என்று மறுவியதாக புராணக்கதை கூறுகிறதாம்.

ஆக, பதினைந்தாம் நூற்றாண்டில் கொலம்பசால் கண்டறியப்பட்ட புகையிலைக்கும் நம்மவர்கள் கட்டுக்கதையை அள்ளி விட்டுள்ளனர்.

புகையில மூடநம்பிக்கைகள்

16 ஆம் நூற்றாண்டுவாக்கில் புகையிலை ஒரு மருந்து பொருளாக கருதப்பட்டது. தலைவலி, நோய்த்தடுப்பு என பலவற்றுக்கும் பயன்படுத்தப்பட்டது. ஞாபக மறதிக்கு கூட புகையிலை பரிந்துரைக்கப்பட்டது. 1865 ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகளில் பிளேக் நோய் தாக்கிய போது புகையிலையும் மருந்தாக கொடுக்கப்பட்டது. இங்கிலாந்தின் கல்லூரிகளில் புகைபிடிக்காத மாணவர்களுக்கு கசையடி தண்டனைக்கூட அளிக்கப்பட்டது.

அக்காலத்தில் தமிழ்நாட்டிலும் புகைலை குறித்த மூடநம்பிக்கைகள் நிலவின. இசிவு நோய், வீக்கம், கரப்பான், கட்டி, பல்வலி, சொறி சிரங்கு, மலச்சிக்கல் போன்ற நோய்களுக்கு புகையிலை பயன்படுத்தலாம் என்ற கருத்து இருந்துள்ளது.

புகையிலையின் தீமை கண்டுபிடிப்பு

சுமார் எட்டாயிரம் ஆண்டுகளாக தென் அமெரிக்க கண்டத்தில் மட்டுமே இருந்த புகையிலையை உலகின் மற்ற பகுதிகளுக்கு கொலம்பஸ் தான் அறிமுகப்படுத்தினார். அந்த வகையில் அவர் உலக மக்களுக்கு செய்த இரண்டாவது பெரும் கேடு என்று இதனை அழைக்கலாம் (முதலாவது பெரும்கேடு அமெரிக்காவை கண்டறிந்தது). கொலபஸ் ஐரோப்பாவுக்கு புகையிலையைக் கொண்டுவந்து 500 ஆண்டுகளில் அது உலகையே அடிமைப் படுத்திவிட்டது.

புகையிலை தீமையானதுதான் என்று பழங்காலத்திலேயே ஓரளவு உணர்ந்திருந்தனர். டச்சுக்காரர்கள் புகையிலையால் ஆண்மைக்குறைவு நேரும் எனக்கூறினர்.

17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சீன அறிஞர் ஃபங்யாஷி என்பவர் புகையிலை நுரையீரலை சுரண்டும் என்று கூறினார்.

தமிழ்நாட்டிலும் புகையிலைக்கு எதிரான கருத்துகள் இருந்தன.

"மருந்தை முறித்து விடும் வாய் வறளச்செய்யும்
திருந்து பலவீனம் சேர்க்கும் - பொருந்து பித்தம்
உண்டாக்கும் விந்தழிக்கும் ஓது புகையிலைக் 
கண்டார்க்கும் ஆகாது காண்"

எனும் அகத்தியர் குணபாட சூத்திரம் புகையிலைத் தீமையை விளக்குகிறது.

"புகையிலை காட்டுத்தீ போல் பரவி பாரத தேசத்தில் குமரி முதல் இமயம் வரை எங்கும் பரவிவிட்டது. இந்தியர்களின் ஆயுளையும், ஊக்கத்தையும், இரத்தத்தையும் கூற்றைப் போல உறிஞ்சி, ஆண்மையில்லாப் பேடிகளைப் போல் ஆட்டுவிக்கிறது. ஐயோ! பட்டணங்களில் பகலிலும் கொள்ளிவாய்ப் பிசாசு ஞாபகம் வந்துவிடுகிறது. நாட்டுப்புறத்திலும் இது புகுந்துவிட்டது. ஆங்கிலம் பயிலும் மாணவர்கள் 100 பேருக்கு 90 பேர் பையில் சிகரெட் பெட்டியும் நெருப்புப் பெட்டியும் இல்லாமலிரார். இதுதான் நாகரீகம், தற்கால அநாகரீகம்" என்கிறது 1926 ஆம் ஆண்டு வெளியான மாருதி எனும் இதழ்.

இப்படியெல்லம் இருந்தாலும் 1950 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் மருத்துவ அறிஞர் ரிச்சர்ட் டால் என்பவர்தான் முதன் முதலாக புகைப் பிடிப்பதால் நுரையீரல் புற்று நோய் வரும் என்பதை அறிவியல் பூர்வமாக மெய்ப்பித்தார்.

இப்போது புகையிலை தீமைகள் ஐயத்துக்கு இடமின்றி தெளிவாக்கப்பட்டுள்ளன. இது ஒவ்வொரு நாளும் 2500 இந்தியர்களைக் கொலை செய்கிறது.

புதன், ஜூன் 01, 2011

உங்கள் சிறுசெயலும் உலகைக் காக்க உதவும்

புவி வெப்பமடைவதன் விளைவாக ஏற்படும் காலநிலை மாற்றத்தால் உலகம் அழிவின் விளிம்பில் நிற்கிறது. எதிர்கால தலைமுறையினர் மட்டுமின்றி இப்போதைய தலைமுறையினரே எதிர்பாராத இயற்கை சீற்றத்தின் கடும் விளவுகளை சந்திக்கத் தொடங்கியுள்ளோம். பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களை பெருமளவில் பயன்படுத்துவதே இன்றைய சிக்கல்களுக்கு காரணம்.

புதைபடிவ எரிபொருட்களின் மிதமிஞ்சிய பயன்பாட்டால் வளிமண்டல கரியமில வாயு அடர்த்தி கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு 275 ppm ஆக இருந்த கரியமில வாயு அடர்த்தி இப்போது 393 ஆக அதிகரித்து விட்டது (1 ppm என்பது பத்து லட்சத்தில் ஒரு பகுதி). கரியமிலவாயு சூரிய வெப்பத்தை பிடித்து வைத்துக்கொள்ளும் சக்தி வாய்ந்தது என்பதால், பூமியின் மேற்பரப்பு வெப்பமும் அதிகரித்து வருகிறது.

இதனால் புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்கள் அளவுக்கு அதிகமாக தாக்குகின்றன. எனவே, உலகைக் காக்க கரியமில வாயு அடர்த்தி மென்மேலும் அதிகரிக்காமல் தடுக்க வேண்டும்.

நீங்கள் என்ன செய்யலாம்?

புவி வெப்பம் அதிகரிப்பதை தடுக்க அரசின் கொள்கைகளில் மாற்றம், தொழில் நிறுவனங்களின் நடவடிக்கைகளில் மாற்றம் எனப் பல நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. அவற்றுடன் - தனிமனித பழக்க வழக்கங்களிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் அவசியம். அந்த வகையில் பின்வரும் எளிய செயல்களின் மூலம் நாம் மாபெரும் பங்களிப்பை அளிக்க முடியும். உலகைக் காக்க ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய சில முன்முயற்சிகள் இதோ:
1. மின்கருவிகளை அணையுங்கள்: 
தேவையில்லாத இடத்தில் தேவையற்ற நேரத்தில் இயங்கும் மின்விசிறி, மின்விளக்கு, குளிரூட்டி (AC), தொலைக்காட்சி, கணினி போன்ற அனைத்து மின் கருவிகளையும் அணையுங்கள்.
2. ரிமோட் கருவிகளை முழுவதுமாக அணையுங்கள்: 
தொலையுணர்வு கருவி (ரிமோட்) மூலம் இயங்கக் கூடிய தொலைக்காட்சி பெட்டி போன்றவற்றை Standby-இல் வைக்காதீர்கள். ஏனெனில் Standby-இல் வைப்பதால் அக்கருவிகள் வெளிப்பார்வைக்கு அணைக்கப்பட்டாலும் அவை உள்ளுக்குள் இயங்குகின்றன. இப்படி Standby-இல் வைப்பதால் மட்டும் வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரத்தில் 10% முதல் 15% வரை வீணாகிறது. எனவே, Standby வேண்டாம். Switch off செய்யுங்கள்.
3. குண்டு பல்பை மாற்றுங்கள்: 
மின்விளக்கால் வெளியாகும் கரியமில வாயுவில் 88% குண்டு பல்புகளில் இருந்துதான் வருகிறது. இதற்கு பதில் CFL பல்புகளைப் பொருத்தினால் அது புவி வெப்பமடைவதைத் தடுக்க உதவும். குண்டு பல்பை விட 80% குறைவான மின்சக்தியைக் கொண்டு CFL பல்பு அதே வெளிச்சத்தை தரும்.
4. மின் சாதனங்களை கவனித்து வாங்குங்கள்:  
குழல் விளக்குகள், குளிர் சாதனப் பெட்டிகள் (பிரிட்ஜ்), குளிரூட்டிகள் (AC) போன்ற எந்த மின்சாதனத்தை வாங்கினாலும் அதில் இந்திய அரசின் ஆற்றல் சிக்கன அமைப்பின் BEE முத்திரை உள்ளதா எனப் பார்த்து வாங்குங்கள், அதிலும் 4 அல்லது 5 என அதிக நட்சத்திரங்கள் கொண்ட மின்சாதனங்களே சிறந்தவை.
5. குப்பையை குறையுங்கள்: 
புவி வெப்பமடைய குப்பை ஒரு முக்கிய காரணம். 10 நெகிழி (பிளாஸ்டிக்) பைகள் தயாரிக்க ஒரு கிலோ மீட்டர் மகிழுந்து பயணத்துக்கு ஈடான எண்ணெய் தேவை. குப்பை மேடுகளில் குப்பைகளை அழிகிப்போக விடுவதால் அதிலிருந்து புவியை சூடாக்கும் மீத்தேன் வாயு வெளியாகிறது. எனவே, பிளாஸ்டிக்/பாலிதீன் பைகளை ஒழிப்பதும் - குப்பை உருவாகாமல் குறைத்தல், மறு பயன்பாடு, மறு சுழற்சி என குப்பையைக் குறைப்பதும் பூமியைக் காக்கும்.
6. புதிதாக சமைத்த உணவை சாப்பிடுங்கள்: 
உள்ளூர் உணவு வகைகளை சாப்பிடுங்கள். பொட்டலங்களிலோ, டப்பாக்களிலோ அடைக்கப்பட்டு விற்கப்படும் முன் தயாரிப்பு உணவுப்பொருட்களை புறக்கணியுங்கள். அந்தந்த பருவகாலங்களில் கிடைக்கும் பழம் காய்கறிகளை வாங்குங்கள். இறக்குமதி செய்யப்பட்ட உணவுகளை ஒதுக்குங்கள்.
7. புவி வெப்பமடைவது குறித்த விழிப்புணர்வை மற்றவரிடம் பரப்புங்கள்.
விழிப்புணர்வு செயல்பட தூண்டும். சுற்றுச்சூழல் காக்க உதவும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பே உயிர்வாழ்வின் ஆதாரம் - இன்றே செயல்படுங்கள்.