Pages

வெள்ளி, செப்டம்பர் 22, 2017

மாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி!

திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் "மாநில சுயாட்சி" எனும் கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் இப்படி ஒரு வெட்கம் கெட்ட கோரிக்கையை முன்வைப்பது என்பது வியப்பளிக்கிறது! 1957 ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் முதல் கோரிக்கை "மாநிலங்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும்" என்பதாகும்.

நம் நாடு பத்திரிகை செய்தி 1957


எந்த ஒரு மாநிலமும் எப்போது வேண்டுமானாலும் இந்திய யூனியனில் இருந்து பிரிந்து சென்று தனித்து இயங்கலாம் என்கிற திருத்தம் இந்திய அரசியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுதான் திமுகவின் முதல் கோரிக்கை ஆகும்.

இந்திய யூனியனில் எல்லா மாநிலங்களுக்கும் சமத்துவம் வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கை ஆகும். அதாவது, மக்கள் தொகைக்கு ஏற்ப அல்லாமல் - எல்லா மாநிலங்களுக்கும் சம எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டும் என்பது 1957 ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையின் இரண்டாவது கோரிக்கை.

மத்திய ஆட்சி அதிகாரங்களுக்கு வரம்பு வேண்டும் என்பது மூன்றாவது கோரிக்கை. அதாவது, மாநில உரிமைகளுக்கு மத்திய அரசு வரம்பு விதிப்பதற்கு பதிலாக, மத்திய அரசின் அதிகாரத்தை குறைத்து வரம்பு வைக்க வேண்டும் என்பது 1957 ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையின் மூன்றாவது கோரிக்கை.
திமுக தேர்தல் அறிக்கை 1957

1962, 1967, 1971 என பின்வந்த தேர்தல்களிலும் மாநில சுயாட்சி கோரிக்கையை தேர்தல் அறிக்கையாக வைத்தது திமுக.

60 ஆண்டுகளாக திமுக கிழித்தது என்ன?

1957 ஆம் ஆண்டில் மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து போட்டியிட்ட திமுக, இப்போது 60 ஆண்டுகள் கழித்து மீண்டும் மாநில சுயாட்சி கோரிக்கையை முன் வைக்கிறது. மாநிலங்களுக்கு சம அதிகாரம், மத்திய அரசின் அதிகாரங்கள் குறைப்பு என இப்போதும் தீர்மானம் நிறைவேற்றுகிறது திமுக.

கடந்த 60 ஆண்டுகளில் மாநிலத்திலும் மத்தியிலும் அதிகாரத்தில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம், அதன் செயல்தலைவர் முக ஸ்டாலின் - மாநில சுயாட்சிக்காகவும் 1957, 1962, 1967, 1971-ல் முன்வைத்த தேர்தல் அறிக்கைகளுக்காகவும் இத்தனை நாட்களாக கிழித்தது என்ன?

அதிகாரத்தில் இருந்தபோது, காங்கிரசு கட்சியிடம் தமிழ்நாட்டின் நலன்களை அடகுவைத்த திமுக - இப்போது அதே காங்கிரசுடன் சேர்ந்து மாநில சுயாட்சிக்காக நீலிக்கண்ணீர் வடிப்பது எதற்காக?

முக ஸ்டாலினுக்கு ஏனிந்த வெட்கம் கெட்ட வேலை?