Pages

வெள்ளி, ஜூன் 29, 2012

ஒரு கம்யூனிஸ்ட் காமெடி: மதுஒழிப்பு நல்லகண்ணு, மதுதிணிப்பு தா.பாண்டியன்!

கம்யூனிஸ்ட் கட்சிகளில் எதைப்பற்றி பேசினாலும் பொலிட் பீரோவில் பேசி முடிவெடுத்துதான் கொள்கை அடிப்படையில் பேசுவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால், பாரம்பரியம் வாய்ந்த இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர்கள் ஒருவருக்கு எதிராக மற்றொருவர் பேசுவது வியப்பளிக்கிறது.

28.06.2012 தேதியிட்ட தினமணி நாளிதழில்: பூரண மதுவிலக்கு கோரி நடத்தப்பட உள்ள 'ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை' தொடக்கிவைத்து இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கையெழுத்திட்டார் என்று ஒரு செய்தி மூன்றாம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளிவந்துள்ளது.
மதுஒழிப்பு நல்லகண்ணு - தினமணி 3ஆம் பக்கம்
அதே 28.06.2012 தேதியிட்ட தினமணி நாளிதழில்: "தமிழகத்தில் மதுக் கடைகளை மூடத் தேவையில்லை" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் கருத்து தெரிவித்தார் என்று மற்றொரு செய்தியும் ஏழாம் பக்கத்தில்வெளிவந்துள்ளது.
மதுதிணிப்பு தா.பாண்டியன்-தினமணி 7ஆம் பக்கம்
"தமிழகத்தில் அரசு மதுக் கடைகளை மூடினால் புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களுக்குச் சென்று மது குடித்துவிட்டு வருவார்கள். எனவே, தமிழகத்தில் மதுக் கடைகளை மூடத் தேவையில்லை. தமிழகத்தைப் போன்றே மதுபானக் கடைகளைத் திறக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது" என்று தா.பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.
மது வேண்டாம்-கம்யூனிஸ்ட் நாடாக சோவியத் ரஷ்யா இருந்தபோது அங்கு கம்யூனிஸ்டு அரசு மேற்கொண்ட மது எதிர்ப்பு பிரச்சாரம்
இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால், 02-06- 2012 அன்று காந்தீய மக்கள் இயக்கம் நடத்திய மதுவிலக்கு மாநாட்டில் தா.பாண்டியன் கலந்து கொண்டு மதுவை ஒழிக்க சிறப்புரை ஆற்றியிருக்கிறார்.
மதுவிலக்கு மாநாட்டில் தா.பாண்டியன் -மதுவை ஒழிக்க சிறப்புரை

ஒரு பக்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு மதுவிலக்கு கோரி கையெழுத்திடுகிறார். தா.பாண்டியனோ,"தமிழகத்தில் மதுக்கடைகளை மூடத் தேவையில்லை" என்கிறார்.

ஏன் இந்த முரண்பாடு.  ​"தா.பாண்டியன் மாநிலங்களவை உறுப்பினராக அம்மாவின் கடைக்கண் பார்வைக்காக அவர் காத்திருப்பதாக" தகவல்கள் வருகிறதாம் என்று விளக்கம் தருகிறது "ஓயாத அலைகள்" எனும் வலைப்பக்கம்.

பாட்டாளி மக்கள் கட்சி - மது ஒழிப்புக் கொள்கை

எது எப்படியோ - பாட்டாளி மக்கள் கட்சி மது ஒழிப்பை தனது முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது.

முழுமையான மதுவிலக்கு பாமகவின் லட்சியம் என்றாலும் - அரசாங்கம் அதற்கு உடனடியாக முன்வராத நிலையில் 'படிப்படியாக மதுவை ஒழிப்பதற்கான தெளிவான திட்டத்தையும் அளித்துள்ளது பாட்டாளி மக்கள் கட்சி - அதனை இங்கே காண்க:


வியாழன், ஜூன் 21, 2012

கம்யூனிஸ்டுகளும் சாதிவாரிக் கணக்கெடுப்பும்: சாதி மறுப்பு மனிதர்களின் நேர்மைக்கு ஒரு சவால்!

தமிழ்நாட்டின் பொதுவான மனநிலையைப் பார்க்கும்போது 'சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஆதரவான நிலைதான் உள்ளது' என்பது பத்திரிகைகளின் கணிப்பாகும்.

இந்நிலையில் சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து கம்யூனிஸ்டுகள் என்ன நினைக்கிறார்கள் என்று தேடினால் - அங்கு தெளிவாக எதும் தெரியவில்லை. (பிரதான கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்).
வினவு போன்ற இடதுசாரி இணைய தளங்களிலும் பெரிதாக எதுவும் காணோம். ஆனால், வினவோடு தொடர்புடைய அமைப்பான "மக்கள் கலை இலக்கிய கழகம்" பின்வருமாறு சுவரொட்டி ஒடியுள்ளது:

"சாதிவாரிக் கணக்கெடுப்பு- உழைப்பைச் சுரண்டுபவர்களுக்குப் பாதுகாப்பு! உழைக்கும் வர்க்கத்துக்கோ பேரிழப்பு!"  (அதனை இங்கே காண்க)
ஆக, தீவிர இடதுசாரிகள் - குறிப்பாக வினவு, மகஇக அமைப்பினர் - சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்க்கின்றனர். (இது ஒரு தகவல் - அவ்வளவுதான்- கீழே உள்ள கருத்துகளுக்கும் இதற்கும் தொடர்பில்லை.)

சாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன்?

இந்திய அரசால் பிற்படுத்தப்பட்ட மக்கள் மூன்று பிரிவினராக வரிசைப் படுத்தப்பட்டனர்.

1. பட்டியல் இனத்தவர் (SC), 
2. பழங்குடி இனத்தவர் (ST), 
3. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். (OBC எனப்படுவதன் பின்னணி இதுவே).

ஆனால், சாதிவாரியாக புள்ளி விவரம் இல்லை என்பதுதான் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு முழுமையான அளவில் இடஒதுக்கீடு அளிக்கப்பட தடையாக இருந்தது.

அரசியல் அமைப்பின் 340 ஆம் பிரிவு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வழி செய்கிறது. இதன் கீழ் அமைக்கப்பட்ட கலேல்கர் குழு, மண்டல் குழு - ஆகிய இரண்டு அறிக்கைகளும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தக்கோரின.
சாதிவாரிக் கணக்கெடுப்பின் மூலம் அனைத்து சாதிகளையும் அவரவர் சமூக, கல்வி, பொருளாதார நிலைக்கு ஏற்ப தொகுப்புகளாக பிரிக்க முடியும். ஒவ்வொரு தொகுப்பினரின் மக்கள்தொகை விழுக்காட்டிற்கு ஏற்ப இடஒதுக்கீடு அளிக்க முடியும். அதனையும் கூட பெரிய சாதிகளின் விழுக்காட்டிற்கு ஏற்ப உள் ஒதுக்கீடாக பிரித்து அளிக்க முடியும்.

எனவே, சாதிவாரிக் கணக்கெடுப்பு மிக மிக அவசியமானது.

விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்பது வெறும் இடஒதுக்கீட்டுடன் முடிவது இல்லை. தனியார்துறை இடஒதுக்கீடு, வங்கிக்கடன், அரசின் ஒப்பந்தங்கள், அரசின் நிதி ஒதுக்கீட்டில் யாருக்கு நன்மை? என உரிமைக்கான கோரிக்கைகள் நீளும்.


சாதி மறுப்பு மனிதர்களின் நேர்மைக்கு ஒரு சவால்!

சாதி மறுப்பு மனிதர்கள் என்று கூற விரும்புகிறவர்கள் சுயமரியாதையுள்ள, நாணயம், நேர்மை, வாக்கு சுத்தம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ஆனாலும், சாதி மறுப்பு மனிதர்களில் பலவகையான மனிதர்கள் அடங்கியிருப்பார்கள் என்பதால் - அவர்களின் அறிவு, நேர்மை, நாணயம் ஒவ்வொரு கூட்டத்திற்கும் மாறுபடக்கூடும். அதனை பின்வருமாறு பிரிக்கலாம்:

(இந்த இடத்தில் சாதி  மறுப்பாளர்களாக சாதிவாரிக் கணக்கெடுப்பின் போது 'சாதி இல்லை' என்று சொல்வோரை மட்டுமே குறிப்பிடுகிறேன். மாறாக, திருமணம் போன்ற வேறு விடயங்களைக் குறிக்கவில்லை)

1. பார்ப்பனர்கள், முன்னேறிய சாதியினர்

இவர்கள் சாதி மறுப்பாளர்களாக மாறுவதால் யாருக்கும் ஒரு பயனும் இல்லை. அவர்களுக்கும் ஒரு இழப்பும் இல்லை. ஏனெனில், "பார்ப்பனர்கள், முன்னேறிய சாதியினர்" கணக்கெடுக்கப்பட்டாலும் கணக்கெடுக்காமல் போனாலும் - அவர்களுக்கு புதிதாகக் கிடைக்க எதுவும் இல்லை.

மற்ற சாதியினரின் உரிமைகளை ஏற்கனவே அபகரித்த கூட்டத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் என்பதால் "சாதி மறுப்பு மனிதர்கள்" என்று கூறுவது இவர்களுக்கு மிகச் சாதாரணமானதுதான்.

எனவே, பார்ப்பனர்கள், முன்னேறிய சாதியினரின் நேர்மையில் சந்தேகம் இல்லை.

2. பட்டியல் இனத்தவர் (SC), பழங்குடி இனத்தவர் (ST)

இவர்கள் சாதி மறுப்பாளர்களாக மாறுவதால் யாருக்கும் ஒரு பாதிப்பும் இல்லை. அவர்களுக்கும் ஒரு இழப்பும் இல்லை.

ஏனெனில், "பட்டியல் இனத்தவர் (SC), பழங்குடி இனத்தவர் (ST)" ஏற்கனவே மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் வலுக்கட்டாயமாக கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களது சமூக பொருளாதார நிலை குறித்து தெளிவான புள்ளி விவரங்கள் உள்ளன. எனவே, இவர்கள் தம்மை "சாதி மறுப்பு மனிதர்கள்" என்று கூறுவதால் ஒரு பாதிப்பும் இல்லை.

எனவே, பட்டியல் இனத்தவர் (SC), பழங்குடி இனத்தவர் (ST) நேர்மையில் சந்தேகம் இல்லை.

3. பிற்படுத்தப்பட்ட சாதியினர் (MBC/BC)

இவர்கள் சாதி மறுப்பாளர்களாக மாறுவதுதான் ஆபத்தானது. இதனால், பிற்படுத்தப்பட்ட சாதியினரின் உண்மையான நிலை அறியப்படுவது தடைபடும். அதனால், சமூக நீதிப்போராட்டத்திற்கு கேடு நேரும்.

"MBC, BC பிற்படுத்தப்பட்ட சாதியினர்" தம்மை "சாதி மறுப்பு மனிதர்கள்" என்று கூறுவது ஏமாளித்தனத்தின் காரணமாகவே இருக்கக்கூடும். இவர்கள் மேல்சாதிக் கூட்டத்தின் தந்திரத்தால் இப்படிப் பேசக்கூடும். இந்த அறியாமை போக்கப்பட வேண்டும்.

இல்லை, இல்லை - நாங்கள் மனமறிந்து சுய நினைவோடுதான் "சாதி மறுப்பு மனிதர்கள்" என்று கூறுகிறோம் என்று மிகவும் பிற்படுத்தப்பட்ட(MBC), பிற்படுத்தப்பட்ட (BC) வகுப்பினர் கூறுவார்களேயானால், அவர்கள் "நாணயம், நேர்மை, வாக்கு சுத்தம்" உள்ளவர்களாக இருக்க வேண்டும்.


MBC அல்லது BC வகுப்பினர் சாதிவாரிக் கணக்கெடுப்பின் போது தாம் "சாதி மறுப்பு மனிதர்கள்" என்று கூறுவதற்கு முன்பாக -

1. தாமோ, தமது குடும்பத்தினரோ MBC, BC இடஒதுக்கீட்டின் மூலம் ஏதேனும் வேலைவாய்ப்பினைப் பெற்றிருந்தால் அந்த பதவியில் இருந்து விலக வேண்டும்.

2. தாமோ, தமது குடும்பத்தினரோ MBC, BC இடஒதுக்கீட்டின் மூலம் ஏதேனும் கல்வி இடங்களை பெற்றிருந்தால் அந்த படிப்புச் சான்றிதழை கிழித்து எறிய வேண்டும் (இதற்காக அரசு செலவிட்ட பணத்தை திருப்பித்தர வேண்டும்). அந்த சான்றிதழால் வேலைவாய்ப்பினைப் பெற்றிருந்தால் அந்த பதவியில் இருந்து விலக வேண்டும்

3. இப்போது கல்லூரிகளில் MBC, BC இடஒதுக்கீட்டில் படிக்கும் தமது குடும்ப மாணவர்களை படிப்பைக் கைவிடச் சொல்ல வேண்டும். (இதற்காக அரசு செலவிட்ட பணத்தை திருப்பித்தர வேண்டும்).

4. இனி எல்லா இடங்களிலும் தம்மை "பொதுப்பட்டியல் (OC)" பிரிவினைச் சேர்ந்தோர் என்று மட்டுமே குறிப்பிட வேண்டும். தப்பித்தவறிக் கூட MBC, BC என்று குறிப்பிடக் கூடாது. (தெம்பிருந்தால் அரசிடம் "சாதி மறுப்பு மனிதர்கள்" என்ற தனி பிரிவினைக் கோருங்கள்)

--இதையெல்லாம் செய்துவிட்டு அதன்பிறகு MBC மற்றும் BC பிரிவினர் தம்மை "சாதி மறுப்பு மனிதர்கள்" என்று தாராளமாக குறிப்பிட்டுக்கொள்ளுங்கள்.

அதை விட்டுவிட்டு, MBC, BC வகுப்புகளுக்கான உரிமைகள் மட்டும் வேண்டும், ஆனால், நாங்கள் "சாதி மறுப்பு மனிதர்கள்" என்று வெளிவேடமிட்டு துரோகம் இழைக்காதீர்.

சாதியை மறுக்கும் MBC, BC பிரிவினரே, கொஞ்சமாவது சூடு சொரணையுடன் நடந்து கொள்ளுங்கள்


தொடர்புடைய சுட்டிகள்:



1. சாதிவாரிக் கணக்கெடுப்பு: பிற்போக்கா? முற்போக்கா? 


2. சாதிவாரிக் கணக்கெடுப்பு-ஏப்ரல் 23 முதல் நடக்கிறது: வன்னியர்களின் கடமை என்ன?


3. சாதிவாரிக் கணக்கெடுப்பு: முற்போக்கு வேடதாரிகளின் மூக்கை உடைக்கிறார் கி.வீரமணி!


4. மே 17 இயக்கத்தின் சாதிவெறி: வன்னியர்களை தமிழ்நாட்டைவிட்டு விரட்ட வேண்டுமாம்!


புதன், ஜூன் 20, 2012

நம்பள்கி எனும் வேடிக்கை பதிவர்! - இந்தியாவில் புகைபிடித்தால் தப்பேயில்லை!!

பதிவுலகில் 'நம்பள்கி' எனும் ஒரு பதிவர் இருக்கிறார். அவர் அமெரிக்காவில் இருக்கிறாராம். மருத்துவராம்.  அவர் "பொது இடத்தில சிகரெட் பிடிக்கக்கூடாது! ஆனால்,கழியலாம்!" என்று ஒரு பதிவு எழுதினார்.

அதில் "டே, முட்டாப் பசங்களா, நம்ம ஜனங்களுக்கு வேண்டிய Roti, Kapda & Makaan-கிடைக்க வழி செய்யுங்கள்! அதை விட்டு விட்டு இதுக்கு வந்துட்டானுங்க! சிகரெட் குடித்தால் தப்பாம். இதைக் கேட்டுட்டு எதுல சிரிக்கறது என்று தெரியவில்லை!" என்று எழுதினார்.

எதற்கு எதனை எடுத்துக்காட்டாக ஒப்பிடுவது என்று தெரியாமல் 'குண்டக்க மண்டக்க' எழுதுவதற்கு 'நம்பள்கி நினைவுகள்' பதிவை ஒரு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

பெரிய மருத்துவமனைகளில் நீரிழிவுக்கு தனிப்பிரிவு, இதய பாதிப்புகளுக்கு தனிப்பிரிவு, பல்லுக்கு தனிப்பிரிவு, கண்ணுக்கு தனிப்பிரிவு, மூச்சுக்குழல் நோய்களுக்கு தனிப்பிரிவு - எனப் பல தனிப்பிரிவுகளும் அதற்கென்று சிறப்பு மருத்துவர்களும் உள்ளனர். தமிழ்நாடு அரசாங்கத்தில் விவசாயம், பொதுப்பணி, மின்சாரம், நலவாழ்வு, போக்குவரத்து எனப் பல தனித்துறைகளும் அதற்கென்று அமைச்சர்களும் உள்ளனர். பள்ளி பாடநூலில் மொழி, கணக்கு, இயற்பியல், வேதியல் எனப் பல தனிப்பாடங்களும் அதற்கென்று சிறப்பு ஆசிரியர்களும் இருக்கின்றனர்.

இப்போது திடீரென்று ஒருவர் வந்து - "மருத்துவ மனைகளில் பல பிரிவுகள் வேண்டாம், எல்லா மருத்துவர்களும் நீரிழிவு நோய்க்கு மட்டுமே சிகிச்சை பாருங்கள். மற்ற நோய்களை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்" என்றும் - "தமிழக அரசாங்கத்தில் பல துறைகள் வேண்டாம், எல்லா துறைகளும் போக்குவரத்தை மட்டுமே பாருங்கள். மற்ற துறைகளை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்" என்றும் - "பள்ளி பாடநூலில் பல பாடங்கள் வேண்டாம், எல்லா ஆசிரியர்களும் இயற்பியல் மட்டுமே கற்பியுங்கள். மற்ற பாடங்களை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்" என்றும் - சொன்னால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட ஒரு கூத்துதான் இது!

கழிவறை இல்லாமை - புகை பிடித்தல்: இரண்டு பெரும் சிக்கல்கள்

கழிவறை இல்லாமை - புகை பிடித்தல்: இவை இரண்டுமே முக்கியமான சிக்கல்கள்தான். இரண்டுமே உடல்நலம் தொடர்பானவை, இரண்டுமே உலகளவில் 'உலக சுகாதார நிறுவனத்தால்' ஒருங்கிணைக்கப் படுபவை. இரண்டுமே இந்திய மக்களை கடுமையாகப் பாதிப்பவை.

'அனைவருக்கும் கழிப்பிட வசதிகள் வேண்டும்' என்பது ஒரு மிகப்பெரிய இயக்கமாக நடத்தப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் தொடங்கி, கிராம பஞ்சாயத்து வரை அதற்கான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த முயற்சிகள் உரிய இலக்கை அடையவில்லை என்பதற்காக மற்ற எந்த முயற்சியும் கூடாது என்பது என்ன தத்துவமோ!
அதே போன்றுதான் - 'புகையிலைத் தீமையை ஒழிக்க வேண்டும்' என்பதற்காகவும் ஐக்கிய நாடுகள் தொடங்கி, கிராம பஞ்சாயத்து வரை அதற்கான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த முயற்சிகளும் கூட உரிய இலக்கை அடையவில்லை. அதற்காக மற்ற எந்த முயற்சியும் கூடாது என்று கூறமுடியுமா?

இந்த இரண்டு சிக்கலில் எது மிக முக்கியமானது என்று முடிவெடுக்க முடியாது. இதற்கான பதில் ஆளுக்கேற்ப மாறுபடலாம்.

சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர்களைக் கேட்டால் "கழிப்பறை இல்லாததுதான் முக்கிய சிக்கல். ஏனெனில் ஏராளமான குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் சாகிறார்கள்" என்பார்கள். (எந்த குழந்தைகள் மருத்துவரும் புற்றுநோய் முக்கியமான வியாதி இல்லை என்று சொல்லமாட்டார்.)
அதுவே சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர்களைக் கேட்டால் "புகையிலைதான் முக்கிய சிக்கல். ஏனெனில் ஏராளமான மக்கள் புற்றுநோயினால் சாகிறார்கள்" என்பார்கள். (எந்த புற்றுநோய் மருத்துவரும் குழந்தைகள் வயிற்றுப்போக்கால் பாதிப்பது முக்கியமான வியாதி இல்லை என்று சொல்லமாட்டார்.)
பொதுமக்களின் பார்வையில் இரண்டுமே முக்கிய சிக்கலாகத்தான் இருக்க முடியும். ஒருமனிதனுக்கு கண், காது, வாய் மூன்றுமே முக்கியமானதுதான். இதில் ஏதாவது ஒன்றுதான் முக்கியம் என்று கருதினால் - அந்தக்கருத்தை என்னவென்று சொல்வது?

கழிப்பறை இல்லாமை - ஒரு கேடு

உலகிலேயே கழிப்பிட வசதி இல்லாதோர் மிக அதிகம் உள்ள நாடு இந்தியாதான். உலகெங்கும் 260 கோடி பேர் போதுமான துப்புரவு வசதி இல்லாமல் வாழ்கின்றனர். இதில் 120 கோடி பேர்  திறந்தவெளியையே கழிப்பிடங்களாக பயன்படுத்துகின்றனர்.

இந்திய மக்களில் 58% மக்கள், அதாவது சுமார் 63 கோடி பேர் திறந்தவெளியைக் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். விடுதலை அடைந்து 64 ஆண்டுகள் கடந்த பின்னரும் பெரும்பான்மை மக்கள் கழிப்பிடம் கூட இல்லாமல் இருப்பது ஒரு தேசிய அவமானம்.
இந்த கழிப்பிடக் கொடுமையால் தினமும் 1000 குழந்தைகளுக்கும் மேல் வயிற்றுப்போக்கு நோயால் மாண்டு போகின்றனர்.

ஐ.நா. பொதுச்சபை - அனைவருக்கும் துப்புரவு வசதி என்பதை 2000 ஆவது ஆண்டிலேயே "புத்தாயிரமாண்டு இலக்கு 7.இ" என்ற பிரிவில் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையால் உருவாக்கப்பட்ட புத்தாயிரமாண்டு இலக்குகளில் 1990 - 2015 ஆம் ஆண்டிற்கு இடையே மேம்படுத்தப்பட்ட கழிப்பிட வசதிகள் கிடைக்காதோரின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க வேண்டும்" என்பது தெளிவானதொரு இலக்காக வைக்கப்பட்டுள்ளது.

Millennium Development Goals: 

Target 7C: Halve, by 2015, the proportion of the population without sustainable access to safe drinking water and basic sanitation.

Measurable indicator: Proportion of population using an improved sanitation facility

புகையிலை - மற்றொரு கேடு

உலகிலேயே புகையிலை பயன்படுத்துவோர் மிக அதிகம் உள்ள இரண்டாவது நாடு இந்தியாதான் (முதலிடம் சீனா). புகையிலைதான் உலகின் மிகப்பெரிய உயிர்க்கொல்லி. புகைபிடிப்பதாலும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதாலும், அடுத்தவர் விடும் புகையை சுவாசிக்க நேருவதாலும் ஆண்டுக்கு சுமார் 60 லட்சம்பேர் அகால மரணமடைகின்றனர். இந்தியாவில் மட்டும் இதனால் 10 லட்சம் பேர் உரிய வயதாகும் முன்பே இறந்து போகிறார்கள். தினமும் 2500 இந்தியர்களை புகையிலைக் கொலை செய்கிறது.
உலகிலேயே வாய்ப்புற்றுநோய் மிக அதிகமாக உள்ள நாடு இந்தியா. உலகின் ஒட்டுமொத்த வாய்ப்புற்றுநோயில் மூன்றில் ஒருபங்கு இந்தியாவில் தாக்குகிறது. 90% வாய்ப்புற்று நோய்க்கு குட்கா, பான்மசாலா, கைனி உள்ளிட்ட மெல்லும் வகைப் புகையிலையே காரணம்.

தற்போது புகையிலைப் பொருட்களை பயன்படுத்தி வருபவர்களில் - இரண்டுபேரில் ஒருவர் அதனாலேயே பாதிக்கப்பட்டு கடும் துன்பத்திற்கு பிறகு கொடிய மரணத்தை சந்திப்பார்கள் என்கிறது உலக சுகாதார அமைப்பு. அதாவது, இப்போது நமது கண்ணெதிரில் இரண்டுபேர் புகையிலையப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள் என்றால், அதில் ஒருவரை அந்த புகையிலையே கொடூரமாகக் கொலை செய்துவிடும்.

ஐக்கிய நாடுகள் அவையின் ஒரு அங்கமான உலக நலவாழ்வு அமைப்பால் உருவாக்கப்பட்ட 2004 ஆம் ஆண்டின் 'புகையிலைக் கட்டுப்பாட்டு உடன்படிக்கை' உலக நாடுகள் புகையிலைத் தீமையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கட்டாயமாக்கியுள்ளது.

'நம்பள்கி'யின் சவால்

நிலைமை இப்படி இருக்கும்போது - இந்தியாவில் மக்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டிய "நம்பள்கி" பதிவர் ""டே, முட்டாப் பசங்களா, நம்ம ஜனங்களுக்கு வேண்டிய Roti, Kapda & Makaan-கிடைக்க வழி செய்யுங்கள்! அதை விட்டு விட்டு இதுக்கு வந்துட்டானுங்க! சிகரெட் குடித்தால் தப்பாம். இதைக் கேட்டுட்டு எதுல சிரிக்கறது என்று தெரியவில்லை!"" என்று கூறியதால் --

-- அதற்கு நான் "இப்படி ஒரு முட்டாள் தனமான கருத்தை முன்வைக்கும் உங்களது சுயபுத்தியை நினைத்து வியக்கிறேன்" என்று சொல்லி புகைபிடிப்பதன் தீமைகளை விளக்கினேன்.

அதற்கு அவர் "உங்களுக்கு பதில்கள் கொடுக்கிறேன்! எனது வரும் இரண்டு பதிவுகளில். ஒன்றில், நான் ஒரு மருத்துவர் என்ற முறையில்! இரண்டில், நான், ஒரு மெட்ராஸ் தமிழன் என்கிற முறையில்! இந்த இரண்டு பதிவிலும், நீங்கள், அருள் கலந்து கொள்ளவேண்டும்!....எனது பதிலில், வேகம் இருக்கும், நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்! சொல்வீர்கள் என்று எதிர்பார்கிறேன்!" என்று கூறியிருந்தார்.

அதன்படி "இந்தியாவில் புகைபிடித்தால் தப்பேயில்லை; தொடர், பகுதி 1" எனும் பதிவை நம்பள்கி இட்டுள்ளார்.

அதில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

"நமது விவாதப் பொருள், “இந்தியாவில் சிகரெட் குடிக்கலாமா? கூடாதா?” என்பது தான். என்னுடைய வாதம் "கட்டாயம் இந்தியாவில் சிகரெட் குடிக்ககலாம்!""...

"ஒன்றும் அறியா பச்சிளம் பாலகர்கள் பருவ வயது அடையுமுன் (திறந்தவெளிக் கழிப்பிட பாதிப்பால்) பலியாவதை தடுக்கும் வரை, சிகரெட் குடிப்பது தவறு என்று கூறுபவர்களை தண்டியுங்கள் நீதிபதி ஐயா அவர்களே! அல்லது குறைந்த பட்சம் அவர்கள் வாய்க்கு நிரந்தர பிளாஸ்திரியாவது போடுங்கள் நீதிபதி அவர்களே!" -- என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நம்பள்கி பதிவிற்கு எனது பதில்:

நீ இடது பக்கம் போகிறாயா? - வலது பக்கம் போகிறாயா?
கோக் வேணுமா? - பெப்சி வேணுமா?
கே.எஃப்.சியா? - மெக்டொனால்டா?
ரஜினியா? - கமலா?
அம்மாவா? - கலைஞரா?
குடியரசுக் கட்சியா? - ஜனநாயகக் கட்சியா?

--- மேற்கண்ட கேள்விகளில் எல்லாம் அறிவுக்கு பொருத்தமான ஒரு நியாயம் தெரிகிறது.

ஆனால், "மலக் குழியில் இறங்குவதா? அல்லது சிகரட் குடிப்பதா?" என்பதில் ஒரு தொடர்பும் பிடிபடவில்லையே! மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது என்பது இதுதானோ?!

என்னைப் பொறுத்தவரை, கழிப்பரை வசதி இல்லை என்பதால் சாவதும், புகைபிடித்து சாவதும் மக்களைப் பாதிக்கும் இரண்டு சிக்கல்கள் என்றே கருதுகிறேன். இரண்டுக்கு எதிராகவுமே நான் இருக்கிறேன். அதுமட்டுமின்றி, தண்ணீர் இல்லாமை, வீட்டுவசதி இல்லாமை, மருத்துவ வசதி இல்லாமை, கல்வி நிலையங்கள் போதாமை, சாலை விபத்துகள், சாராயச் சாவுகள் என பலப்பல கேடுகள் உள்ளன.

இந்தியாவில் கழிப்பறைகள் இல்லை என்பதற்காக ஒரு பதிவிட்டால் அதனை நான் ஆதரித்துதான் எழுதுவேன். ஆனால், இதற்காக "புகைபிடிப்பதை" என்னால் ஆதரிக்க முடியாது. (எனது ஆதரவு, எதிர்ப்புக்கு எந்த மதிப்பும் இல்லை).

தெருவில் பேண்டு வைப்பதைவிட சிகரெட் சுகாதாரக் கேடு "பெரியதென்று" என்று நான் கூறவில்லை. ஆனால், பொதுஇடத்தில் புகைபிடிப்பது தெருவில் பேண்டு வைப்பதைவிடக் "குறைவான" கேடு அல்ல என்று என்னால் கூறமுடியும். பொதுஇடங்களில் புகைபிடிக்கும் பழக்கத்தால் புகைபிடிக்காத அப்பாவிகள் உடல்நலம் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அது சமூகநீதிக்கும் எதிரானது.

மற்றபடி, பொதுஇடங்களில் கழியக்கூடாது என்கிற உங்களது கருத்து நியாயமானது. அதற்காக போராடுபவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். அதே நேரத்தில், நீங்கள் எதற்காக போராட வேண்டும் என்று நான் உத்தரவிட முடியாது. நான் எதற்காக போராட வேண்டும் என்று நீங்கள் உத்தரவிட முடியாது.

என்னுடையக் கருத்து மிகத்தெளிவானது. இந்தியாவில் பொதுஇடங்களில் புகைபிடிப்பது தவறு, சட்டப்படி குற்றம். இந்த தவறை ஆதரிப்போர் இந்திய இறையாண்மைக்கும் நியாயத்துக்கும் சமூகநீதிக்கும் பொதுநலனுக்கும் எதிரானவர்கள்.

நான் சொல்வது ஒருபக்கம் இருக்கட்டும். புகையிலையால் பாதிக்கப்பட்டோர் அதுபற்றி என்ன சொல்கின்றனர் என்று இங்கே காண்க: http://www.vovindia.org/

குறிப்பு: 14.6.2014 அன்று பதிவிடப்பட்ட இந்தப் பதிவு கவனக்குறைவால் நீக்கப்பட்டு, மீண்டும் பதிவேற்றப்பட்டுள்ளது. இதற்கு உதவியாக இருந்த www.haaram.com இணையதளத்திற்கு நன்றி.

செவ்வாய், ஜூன் 19, 2012


புதிய தலைமுறையின் முட்டாள் படைப்பாளிகள்!

புதிய தலைமுறை வார ஏடு இந்திய சினிமாவின் நூற்றாண்டு குறித்து ஒரு அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் "ஒரு அரசியல்வாதி சினிமாவில் ஹீரோக்கள் சிகரெட் பிடிப்பதால்தான் இளைஞர்கள் சிகரெட் பிடிக்கிறார்கள் என்று முட்டாள்தனமாக அறிவித்தார்" என்று கே. ஹரிஹரன் (இவர் எல்.வி.பிரசாத் ஃபிலிம் & டி.வி. அகாதமியின் இயக்குனராம்) என்பவர் எழுதியுள்ளார். (பக்கம் 10, புதிய தலைமுறை 21 ஜூன் 2012)
கே. ஹரிஹரன்
இக்கட்டுரையை எழுதிய கே. ஹரிஹரன், அதனை வெளியிட்ட புதிய தலைமுறை ஆகியோர் குறிப்பிடும் 'அரசியல்வாதி' மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள்தான் என்பதை எளிதில் யூகிக்க முடியும். ஆனால், அது இங்கே முக்கியமில்லை. மாறாக "முட்டாள்தனமான கருத்தைக் கூறுவது யார்?" என்பதுதான் முக்கியமாகும்.

முட்டாள் என்பதற்கு "அறிவில் குறைந்த நபர்" என்கிறது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி. அப்படியானால், "சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகள் கூடாது" என்கிற கருத்தில் - யார் முட்டாள்தனமாக நடப்பவர்? யார் அறிவில் குறைந்தவர்? 

புகைபிடிக்கும் காட்சி வேண்டாம் என்று வலியுறுத்துபவரா? அல்லது புகைபிடிக்கும் காட்சி வேண்டும் என்பவரா? - இக்கேள்விக்கு திருவாளர் கே. ஹரிஹரனும், புதிய தலைமுறையும் பதில்சொல்ல வேண்டும்.
நடிகர்கள் புகைப்பழக்கத்தை திணிக்கின்றனர்.

"ஹீரோக்கள் சிகரெட் பிடிப்பதால் இளைஞர்கள் சிகரெட் பிடிக்கிறார்கள்" என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் இதோ:

1. புகழ்பெற்ற மருத்துவ ஆய்வு பத்திரிகையான லான்செட் 2003 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில் புகைபிடிக்க தொடங்கும் இளம் வயதினரில் 52% பேர் திரைப்படங்களை பார்த்து புகைபிடிக்க கற்றுகொள்வதாகக் கூறியது. (அதனை இங்கே காண்க: Effect of Smoking on Movies - THE LANCET 2003)

உலகப்புகழ்பெற்ற லான்செட் பத்திரிகை 'முட்டாள்தனமான பத்திரிகை' என்று புதிய தலைமுறை சொல்கிறதா?

2. உலக சுகாதார நிறுவனம் 2003 ஆம் ஆண்டு வெளியிட்ட "பாலிவுட்: பலியா அல்லது நண்பனா" எனும் ஆய்வில் இந்தியத் திரைப்படங்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை திணிக்கின்றன என்பதை தெளிவாக எடுத்துரைத்தது. கூடவே, சிகரெட் நிறுவனங்களிடம் திருட்டுத்தனமாக லஞ்சம் வாங்கிக்கொண்டு இக்காட்சிகள் திணிக்கப்படுகின்றன என்பதையும் அந்த ஆய்வு வெளிக்கொண்டுவந்தது. (அதனை இங்கே காண்க:“BOLLYWOOD” VICTIM OR ALLY- WHO 2003)
4. உலக சுகாதார நிறுவனம் 2009 ஆம் ஆண்டு வெளியிட்ட "புகையில்லா திரைப்படங்கள்: ஆதாரங்களில் இருந்து செயல்பாட்டுக்கு" எனும் நூலில் - திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் பெரும் கேடாக மாறிவிட்டதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி, நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது. (அதனை இங்கே காண்க: Smoke-free movies- from evidence to action WHO 2009)

உலக சுகாதார நிறுவனம் 'முட்டாள்தனமான அமைப்பு' என்று புதிய தலைமுறை சொல்கிறதா?

5. "பாலிவுட் படங்களில் புகையிலை பயன்பாடும், விளம்பரமும், அவற்றால் இந்திய இளைஞர்களின் புகையிலைப் பழக்கமும்" எனும் 2011 ஆம் ஆண்டு ஆய்வுக்கட்டுரை, திரைப்படம் பார்க்கும் இந்திய இளைஞர்கள் புகையிலைக்கு அதிகம் அடிமையாவதை நிரூபித்துள்ளது. (அதனை இங்கே காண்க: Tobacco use in Bollywood movies, association with tobacco use among Indian adolescents)

இந்த ஆய்வுக்கட்டுரையை எழுதிய சிறீநாத் ரெட்டி ஒரு புகழ்பெற்ற இதய சிகிச்சை நிபுணர். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் மருத்துவர் அவர்தான்.

இந்த மதிப்புவாய்ந்த ஆய்வாளர்களை 'முட்டாள்கள்' என்று சொல்கிறதா புதிய தலைமுறை?

6. 26.03.2012 அன்று கேரள உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், "திரைப்படங்கள் மூலம் திணிக்கப்படும் மறைமுக புகையிலை விளம்பரங்கள் சமுதாயத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன". "திரைப்படங்களில் புகைபிடிப்பதை கட்டுப்படுத்தாவிட்டால், இந்திய அரசியல் அமைப்பின் 21 ஆம் பிரிவில் உறுதியளிக்கப்பட்டுள்ள குடிமக்களின் உயிர்வாழும் உரிமை பாதிக்கப்படும்", "திரைப்படங்களில் புகைபிடிப்பதைக் கட்டுப்படுத்தும் விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது.  (அதனை இங்கே காண்க: Kerala Voluntary Health Services Vs. Union of India)

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு 'முட்டாள்தனமான தீர்ப்பு' என்று புதிய தலைமுறை சொல்கிறதா?

அறிவு நாணயம், நேர்மை இருப்பின் புதிய தலைமுறையும் கே.ஹரிஹரனும்  இதற்கு பதில்சொல்ல வேண்டும்.

சனி, ஜூன் 16, 2012

பாவம் பிரணாப் முகர்ஜி: அவரது ஆசை நிறைவேற இனி வாய்ப்பே இல்லை!

பிரணாப் முகர்ஜி - ஒரு மிகச்சிறந்த ராஜதந்திரவாதி! அவரை இந்தியாவின் மாக்கியவல்லி, அரசியல் சாணக்கியர் என்றெல்லாம் சொல்லலாம் (சாணக்கியரும் மாக்கியவல்லியும் நல்லவர்களா? என்று கேட்காதீர்).

டிசம்பர் 11, 1935 அன்று பிறந்த பிரணாப் முகர்ஜி 1969 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். அதுதொடங்கி இந்தியாவின் அதிகாரமிக்க பதவிகள் பலவற்றையும் வகித்த அவர் 2004 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகவே இருந்தார். அதாவது ஒருமுறைக் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலேயே அதிகாரத்தின் உச்சத்தில் நீண்ட நாள் இருந்தவர் அவர் எனலாம்.

இப்படி 35 ஆண்டுகள் தேர்தலை சந்திக்காமலேயே நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல உயர்ந்த பதவிகளிலும் இருந்த அவர் 2004 ஆம் ஆண்டு முதன் முதலாக மேற்கு வங்கத்தின் சாங்கிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

நிறைவேறாத கனவு - பிரதமர் பதவி!

அதிகாரத்தின் உச்சத்தில் நீண்டநாட்கள் இருந்தாலும் பிரணாப் முகர்ஜியின் நீண்டநாள் கனவென்பது பிரதமர் பதவிதான். 

Troubleshooter Pranab Mukherjee wants to become prime minister

என்றாவது ஒருநாள்  பிரதமர் இருக்கையில் அமரலாம் என்று காத்திருந்தவருக்கு - ஜனாதிபதி பதவியை அளித்ததன் மூலம் நிரந்தரமாக வழியை அடைத்துவிட்டனர் சோனியாவும் மன்மோகன் சிங்கும்.

அதுமட்டுமல்லாமல் - காங்கிரசு கட்சியிலும், அமைச்சரவையிலும், நாடாளுமன்றத்திலும் பிரணாப் முகர்ஜியின் ஆதிக்கம்தான் நீடித்தது. இன்னும் சொல்லப்போனால், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் ஆகிய மூன்று பேரும் யாராவது ஒருவரைக் கண்டு கொஞ்சமாவது பயந்தார்கள் என்றால் அது பிரணாப் மட்டும்தான். இப்போது காங்கிரசு கட்சி, அமைச்சரவை, நாடாளுமன்றம் என்கிற மூன்று இடங்களிலிருந்தும் அவரை வெளியேற்றிவிட்டார்கள்.

அதுமட்டுமல்ல, கட்சிப்பதவிக்கோ, அமைச்சர் பதவிக்கோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ இனி ஒருபோதும் அவரால் வரவே முடியாது. ஒருமுறை குடியரசுத் தலைவர் ஆனால் அப்புறம் வேறு பதவிக்கு போவது மரபல்ல. அப்புறம் இனி எங்கே பிரதமர் ஆவது?

புகையிலை எதிர்ப்புக்கு எதிர்ப்பு

முந்தைய ஆட்சியில் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் நலவாழ்வு அமைச்சராக இருந்த போது - புகையிலைப் பொருட்கள் மீது மண்டை ஓட்டுடன் கூடிய எச்சரிக்கைப் படத்தை சிகரெட் பெட்டியின் இரண்டு பக்கத்திலும் பாதியளவு இடத்தில் கொண்டுவர ஆணையிட்டார்.
ஆனால், அப்போதுதான் பிரணாப் முகர்ஜி முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். வாய்ப்புக்கேடாக இந்தியாவிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான பீடி சுற்றுவோர் பிரணாப் முகர்ஜியின் சாங்கிப்பூர் தொகுதியில் இருந்தார்கள். சிகரெட் கம்பெனிகள் பீடித்தொழிலாளர்களைப் பிடித்தனர். அவர்கள் பிரணாப் முகர்ஜியைப் பிடித்தனர். பிரணாப் மன்மோகனைப் பிடித்தார். மன்மோகன் இந்த சிக்கலில் முடிவெடுக்கும் அமைச்சர்கள் குழுவை அமைத்து அதற்கு பிரணாப் முகர்ஜியைத் தலைவர் ஆக்கினார்.

அப்புறம் என்ன? சிகரெட் பெட்டியின் இரண்டு பக்கத்திலும் எச்சரிக்கை படம் என்பது ஒருபக்கம் ஆனது. பாதி இடம் என்பது 40% ஆக ஆனது. மண்டை ஓடு கைவிடப்பட்டது. கோரமான படம் நீக்கப்பட்டது. ஒன்றுக்கும் தொடர்பில்லாத தேள் படம் எச்சரிக்கைப் படம் ஆனது - பான்பராக போடுவோர் "தேள் படம் இருந்தால் அது 'ஸ்ட்ராங்கானது' என புரிந்து கொண்டனர்".
மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் கொண்டுவந்த எச்சரிக்கைப் படம்
பிரணாப் முகர்ஜி அவர்களால் மாற்றப்பட்ட எச்சரிக்கைப் படம்

தமிழினத்தின் சோகம்

புகையிலைக் கட்டுப்பாட்டிற்கு தடங்கல் ஏற்பட்டது என்பதை, தமிழ் இனத்துக்கு ஏற்பட்ட பேரழிவோடு கொஞ்சமும் ஒப்பிட முடியாது.

தமிழ்நாடு ஈழத்தமிழர்களுக்கு இழைத்த மாபெரும் வரலாற்று குற்றம் என்பது - பிரணாப் முகர்ஜியோடு தொடர்புடையது.

ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் ஏற்பட்ட பேரிழப்பை தடுக்கும் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 14 அன்று வந்தது. அன்றுதான் ஈழத்தமிழர்கள் அழிப்பை இந்தியா இரண்டு வாரங்களில் தடுக்காவிட்டால், தமிழ்நாட்டின் எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வது என்று அப்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த எல்லா கட்சிகளும் ஒருமனதாக முடிவெடுத்தனர்.

2008 அக்டோபர் 14:
End Lanka war in two weeks, else TN MPs will quit: Karunanidhi

அந்த ஒரு முடிவுமட்டும் நிறைவேற்றப் பட்டிருந்தால் - இலங்கையில் மாபெரும் மனிதப் பேரழிவு நிகழ்ந்திருக்காது.

ஆனால். அக்டோபர் 26 அன்று காலை பிரணாப் முகர்ஜி இலங்கையின் பசில் ராஜபட்சேவுடன் பேச்சு நடத்தினார். பின்னர் சென்னை வந்து கலைஞரிடம் மூன்று மணி நேரம் பேசினார். பின்னர் - திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ராஜினாமா செய்ய மாட்டார்கள் - என்று பிரணாப் முகர்ஜி அறிவித்தார். அதுமட்டுமல்ல, ஈழத்தில் நடக்கும் போரையும் தடுக்க மாட்டோம் என்றும் அவர் அறிவித்தார்.

2008 அக்டோபர் 26:
Karunanidhi will not insist on MPs' resignation: Mukherjee 

DMK resignation threat blows over

ஈழத்தமிழினம் பேரழிவில் இருந்து காப்பாற்றப்படும் கடைசி வாய்ப்பு 'எதற்காகவோ' கைவிடப்பட்டது. இந்த வரலாற்று பெரும்பழி ஒருநாளும் மறையாது.


திங்கள், ஜூன் 11, 2012

இந்தி தேசிய மொழியாம் - திராவிடக்கட்சிகளின் வெளிவேடம்!

திராவிடக் கட்சிகள் தமக்கென்று ஒரு மொழிக்கொள்கையைக் கொண்டிருக்கவில்லை. ஆனாலும் 'இந்தித்திணிப்பை எதிர்த்தால் அரசியல் ஆதாயம் கிடைக்கும்' என்கிற தெளிவில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி பல தமிழர்களைத் பலியிட்டு இந்தித் திணிப்பு தடுக்கப்பட்டது.
'இந்தி'யர்கள் தமிழ்நாட்டுடன் தொடர்புகொள்ள அல்லது தமிழ்நாட்டினர் 'இந்தி'யருடன் தொடர்பு கொள்ள இருமொழிக்குமிடையே மொழிப் பெயர்ப்பாளர்கள் போதும் என்று தெரிந்தும் ஆங்கிலத்தை தொடர்புமொழியாக ஆக்கினார்கள்.

ஆங்கிலம் என்பது மொழிபெயர்ப்பு கருவியா? இல்லை, அதுவும் ஒரு ஆதிக்க மொழி. 'திராவிடர்' எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில் தனியார்பள்ளிகளைக் கொழிக்கவிட்டு ஆங்கிலத்தை கல்வி மொழியாகவும் ஆக்கினார்கள்

மொத்தமாக ஆராய்ந்து பார்த்தால் 'திராவிடர்களின்' மொழிக்கொள்கை என்பது 'தமிழ் மொழி ஒழிப்புக்கொள்கை' தான் என்பதை அறியமுடியும்.

"திராவிடர்கள்" வேறு என்னதான் செய்ய முடியும்? தமிழ்நாட்டில் தெலுங்கை ஆட்சிமொழி ஆக்க முடியாது. தமிழ்நாட்டில் கன்னடத்தை ஆட்சிமொழி ஆக்க முடியாது. தமிழ்நாட்டில் மலையாளத்தை ஆட்சிமொழி ஆக்க முடியாது. ஆக, அவர்களால் செய்ய முடிந்ததெல்லாம் - தமிழை அழிப்பதுதான். தனக்கு பிள்ளை இல்லை என்பதற்காக அடுத்தவர் பிள்ளையைக் கொலை செய்யும் காட்சிகளும் உண்டுதானே!

இந்தி தேசிய மொழியா?

இந்தியாவில் தேசிய மொழி என்று எதுவும் கிடையாது.

இந்திய அரசியல் அமைப்பின் கீழ் தேவநாகரி வடிவிலான இந்தி அலுவல் மொழி எனவும், ஆங்கிலம் துணை அலுவல் மொழி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை இங்கே காண்க: Official language of the Union.

மேலும், அரசியல் சட்டத்தின் 8ஆவது அட்டவணையின் கீழ் தமிழ் உட்பட 22 மொழிகள் அட்டவணை மொழிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அதனை இங்கே காண்க: EIGHTH SCHEDULE

ஆக, இந்தியாவில் இந்தி, ஆங்கிலம் ஆகிய அலுவல் மொழிகளும், மேலும் 22 அட்டவணை மொழிகளும் அதிகாரப்பூர்வமான மொழிகள் ஆகும். இவற்றில் எந்த ஒரு மொழியும் நாட்டின் தேசிய மொழி அல்ல.
இந்தி நமது தேசிய மொழி அல்ல 
இந்தி இந்திய நாட்டின் தேசிய மொழி அல்ல என்பதை 13.01.2010 அன்று குஜராத் நீதிமன்ற தீர்ப்பும் உறுதி செய்துள்ளது. (“there is nothing on the record to suggest that any provision has been made or order issued declaring Hindi as a national language of the country”) அதனை இங்கே காண்க: Sureshbhai vs Union on 13 January, 2010

இதுகுறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் அஜய் மக்கான் 03.03.2010 அன்று அளித்த பதிலில் "இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவிக்க அரசியல் சட்டத்தில் இடமில்லை' என்று குறிப்பிட்டுள்ளார். அதனை இங்கே காண்க: Rajya Sabha 3.3.2010

தமிழ்நாட்டு பாடநூலில் வரலாற்றுப் பிழை: இந்தி தேசிய மொழியாம்.

இந்திய அரசின் உள்துறை அமைச்சகமும் குஜராத் நீதிமன்றமும் இந்தி தேசிய மொழி அல்ல என்று அறிவித்த பின்னரும், தமிழ்நாட்டின் சமச்சீர் கல்வி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலின் 253 ஆம் பக்கத்தில் "தேவநாகரி வடிவிலான இந்தி, இந்தியாவின் தேசிய மொழியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அதாவது இந்தித் திணிப்பை எதிர்த்ததாகக் கூறிக்கொள்ளும் திராவிடக் கட்சிகளின் ஆட்சி நடக்கும் மாநிலத்தின் அரசு பாடநூல் "இந்தி தேசிய மொழி" என்று அறிவிக்கிறது. இது திராவிடக் கட்சிகளின் தமிழ் ஒழிப்பு கொள்கையின் வெளிப்பாடன்றி வேறு என்ன?

"இந்தி தேசிய மொழி" எனக்கூறும் பாடநூல் பக்கம் இதோ

இதுகுறித்து மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தி ஒரு தேசிய மொழியா? சமச்சீர் கல்வி புத்தகத்தில் தவறு

சனி, ஜூன் 09, 2012

குழப்பும் வினவு: கார்களைக் கட்டுப்படுத்தினால் ஏழைகளுக்கு ஆபத்தாம்!  

வினவு வலைதளத்தில் "சென்னைக்கு வருகிறது ”டிராபிக் ஜாம்” வரி!" எனும் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையின் போக்குவரத்து சிக்கலை விளக்கும் இந்த கட்டுரை - அந்த சிக்கலுக்கான ஒரு நியாயமான தீர்வினை அநியாயம் என்று விளாசுகிறது! இது என்னவகையான 'இசம்' என்று விளங்கவில்லை!
வினவின் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

"சென்னை மற்றும் புறநகர் சாலைகளில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தத் தனியார் வாகனங்கள் மீது ”டிராபிக் ஜாம்” வரி விதிக்கும் திட்டத்தைக் தமிழக அரசு கொண்டு வரவிருக்கிறது.


சென்னை நகரிலும், அதன் புறநகர் சாலைகளிலும் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தத் தனியார் வாகனங்கள் மீது நெரிசல் வரி விதிக்கும் திட்டத்தைக் கொண்டுவரப் போவதாகவும்; இத்திட்டத்தின் முதல் கட்டமாக, சென்னை மாநகருக்குள் அமைந்துள்ள அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜவஹர்லால் நேரு சாலை ஆகிய மூன்றிலும் இவ்வரி விதிக்கும் நடைமுறை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தொடங்கிவிடுமென்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.


இந்த வரி விதிப்பைத் தவிர்க்க எண்ணும் தனியார் வாகன ஓட்டிகள், இந்தச் சாலைகளுக்குள் நுழையாமல் சுற்றிச் செல்ல வேண்டும்; இல்லையேல், அவர்கள் இந்தச் சாலைகளில் செல்லப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.  இதன் மூலம் இச்சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்துவிட முடியும் என அரசு வாதிடுகிறது"

-- என்கிறது வினவின் கட்டுரை.

கூடவே, "போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வரி போடும் திட்டம் ஏற்கெனவே சிங்கப்பூர், ஹாங்ஹாங், இலண்டன், நியூயார்க் போன்ற நகரங்களில் செயல்படுத்தப்படுகிறது.  அக்கொள்ளையைத் தமிழகத்திலும் இறக்குமதி செய்ய எத்தணிக்கிறது, பாசிச ஜெயா கும்பல்." என்கிறது வினவு!

தமிழக அரசின் மேற்கண்ட வாதத்தில் எந்த தவறும் இருப்பதாகக் கருத முடியாது. ஆனாலும், வினவு இக்கருத்தினை எதற்காக எதிர்க்கிறது என்பது விளங்கவில்லை. மாறாக, தமிழக அரசின் இந்த முயற்சி சரிதான் என்பதை நியாயப்படுத்துவதற்கான பல கருத்துகள் வினவின் கட்டுரையிலேயே உள்ளன என்பது ஒரு முரண்நகையாகும்.

எடுத்துக்காட்டாக, "போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எந்தவொரு இடத்தை அவதானித்தாலும், பொது வாகனங்களைவிட, தனியாருக்குச் சொந்தமான மோட்டார் வாகனங்கள்தான் முண்டியடித்துக்கொண்டு உருமி நிற்பதைக் காணமுடியும்.  இந்தத் தனியார் வாகனங்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவோ, அவைகள் நகரத்தின் நெரிசல் நிறைந்த பகுதிகளில் வந்து போவதற்கு கட்டுப்பாடு விதிக்கவோ விரும்பாத அரசு" என்று குறிப்பிடுகிறது வினவு.

தனியார் வாகனங்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், அவைகள் நகரத்தின் நெரிசல் நிறைந்த பகுதிகளில் வந்து போவதற்கு கட்டுப்பாடு விதிக்கவும் கூடிய ஒரு முறைதான் "நெரிசல் கட்டணம்" என்று வினவுக்கு விளங்காமல் போனது எப்படி?

நெரிசல் கட்டணம் - மிகச்சிறந்த தீர்வு

பொதுப்போக்குவரத்தை மேம்படுத்துவதில் "நெரிசல் கட்டணம்" விதிப்பது ஒரு மிகச்சிறந்த முறையாகும் (அது மட்டுமே தீர்வு அல்ல, அதுவும் ஒரு தீர்வு).
இன்றைய போக்குவரத்து கொள்கை அல்லது போக்குவரத்து முன்னுரிமையில் வாகனங்கள் மட்டுமே முன்னிலைப் படுத்தப்படுகின்றன. இதற்கு மாறாக, மக்களை முன்னிலைப் படுத்துவதே சரியான, நீதியான முறையாகும். 'வாக்களிக்க மட்டும் ஒரு ஆளுக்கு ஒரு ஓட்டு' என்பது போதாது, சாலையிலும் ஒவ்வொருவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும்.

சென்னையின் சாலையில் சுமார் 80 விழுக்காடு இடத்தை கார்களும், இருசக்கர வாகனங்களும் அடைத்துச் செல்கின்றன. ஆனால், மொத்த பயணிகளில் சுமார் 25 விழுக்காட்டினர் மட்டுமே கார்களிலும் இருசக்கர ஊர்திகளிலும் பயணிக்கின்றனர். மீதமுள்ள 75 விழுக்காடு மக்களின் பயணம் பேருந்து, மிதிவண்டி, நடைபயணத்தின் வழிதான் நடக்கிறது.

ஒரு பேருந்தின் இடத்தை 3 கார்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. ஒரு பேருந்தில் 60 – 70 பேர் செல்லும் நிலையில், 3 கார்களில் சராசரியாக 6 பேர்தான் செல்கிறார்கள். எல்லோருக்கும் பொதுவான இடத்தை பணம் படைத்தவர் ஆக்கிரமிப்பது என்ன நீதி?
கார், பேருந்து, மிதிவண்டி - ஒரே அளவு மக்கள் பயணிக்க சாலையில் தேவைப்படும் இடம்.

சாலை என்பது அரசின் பணத்தில், மக்கள் பணத்தில் போடப்படுகிறது. அதில் ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒரே அளவுதான் உரிமை உண்டு. அளவுக்கதிகமாக பொது இடத்தை ஆக்கிரமிப்பவர் மீது அதற்கான உண்மைச் செலவை வசூலித்து அதனை ஏழைக்கான போக்குவரத்துக்கு செலவிட வேண்டும் என்பதுதான் நெரிசல் கட்டணத்தின் தத்துவம் ஆகும்.

தனியார் கார்களுக்கு கட்டணம் விதப்பதென்பது அவற்றை சாலைகளில் இருந்து அப்புறப்படுத்தி – பொதுப்போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்த வேண்டும் என்பதுதற்காகத்தான். மேலும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தனியார் கார்கள் மீது விதிக்கும் கட்டணத்தை பொதுப்போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக செலவிடுகின்றனர்.
காரில் போகிறவன் அவனுக்கு உரிமையானதை விட அதிக இடத்தை அக்கிரமிக்கிறான். அப்படிப்பட்ட மிதமிஞ்சிய பயன்பாட்டினால் காசில்லாதவனுக்கு இடம் கிடைக்காமல் போகிறது. இந்நிலையில் காரில் போகிறவன்மீது கட்டணம் விதிப்பது எவ்வாறு காசில்லாதவனுக்கு எதிரானதாகும்?

சிங்கப்பூர் காட்டும் சிறந்த வழி

சிங்கப்பூர் முதலாளித்துவ நாடு. ஆனால், பணம் படைத்தோரின் கார்களைக் கட்டுப்படுத்துவதில் அது மிகச்சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறது.சிங்கப்பூரில் நினைத்தபோதெல்லாம் கார் வாங்கிவிட முடியாது. மாறாக, இந்த மாதம் இத்தனைக் கார்கள்தான் புதிதாக வாங்கப்படலாம் என்கிற உச்ச அளவை அரசாங்கமே நிர்ணயிக்கிறது. அதற்கான அனுமதிச் சீட்டுகளை ஏலத்திற்கு விடுகிறார்கள். 1000 அனுமதிச் சீட்டுகள் உண்டென்றால், ஏலம் கேட்பவர்களை கேட்கும் தொகைக்கு ஏற்ப பட்டியலிடுகின்றனர். முதலாமவர் ஒரு சீட்டினை 2 கோடிக்கு கேட்கிறார்,1000 ஆவது நபர் 20 லட்சத்துக்கு கேட்கிறார் என்றால் -  மொத்தமுள்ள 1000 அனுமதிச் சீட்டுகள் விலையும் 20 லடசம்தான். இவ்வாறாக கடந்த மார்ச் மாதம் ஒரு அனுமதிச் சீட்டு இந்திய மதிப்பில் 39 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டது.

ஆக, முதலில் 39 லட்சம் அரசுக்கு பணம் செலுத்தி ஒதுக்கீட்டு அனுமதிச் சீட்டு வாங்கிய பின்புதான் - அதைக்காட்டி கார் வங்க முடியும். அப்படி கார் வாங்கினாலும், அதனை நினைத்தபடி ஓட்டிவிட முடியாது. நெரிசலான சாலையில் பயணிக்கும் பொது நெரிசலான நேரத்துக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும். எப்படி, செல்பேசியில் பேசப் பேச கட்டணம் பிடிக்கப்படுகிறதோ, அதுபோல - நெரிசலான நேரத்தில் பயணம் செய்வதற்கான கட்டணத்தை கார் வைத்திருப்போரிடம் மின்னணு முறையில் தானாகவே வசூல் செய்துவிடுவார்கள்.

அதுமட்டுமில்லாமல் - சாலைகளிலோ, கட்டடங்களிலோ இலவச வாகன நிறுத்தம் என்பது எதுவும் இல்லாத அளவுக்கு ஒழித்துவிட்டார்கள். எனவே, காரை எடுத்துச்சென்று எங்கு நிறுத்தினாலும் அதற்கு மணிக்கணக்கில் கட்டணம் செலுத்த வேண்டும்.

இப்படியாக கார் முதலாளிகளிடம் வசூலிக்கும் பணத்தில் - பேருந்து, தொடர்வண்டி, நடைபாதை வசதிகளை மிகப்பெரிய அளவில் செய்துதருகிறார்கள். இப்போது சிங்கப்பூரில் ஒரு இடத்திலிருந்து நகரின் வேறு எந்த இடத்திற்கும் மிக நவீனமான நடைபாதையில் நடந்து போக முடியும். கார் மூலம் சென்றடைவதைவிட வேகமாக தொடர்வண்டி மூலம் நகரின் எந்த மூலைக்கும் பயணிக்க முடியும்.

இப்படியெல்லாம் கார்கள் மீது கட்டுப்பாடுகள் விதிப்பதால் ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் நன்மைதானே தவிற, கேடு எதுவும் இல்லை.

சென்னை நகரின் தேவை என்ன ?

சென்னை நகரில் 'நெரிசல் கட்டணம்' கட்டாயமாக நடமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனாலும் பலப்பல பன்னாட்டு கார் நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள ஒரு மாநிலத்தில் இதனை அரசு விரும்புமா? அதற்கு கார் நிறுவனங்கள் அனுமதிக்குமா? என்பது கேள்விக்குறியது. சென்னையில் சொந்த வாகன நிறுத்தம் உள்ளவர்கள் மட்டுமே புதிதாக கார் வாங்கலாம் என்கிற விதியைக் கட்டாயமாக்குவது குறித்து நீண்டகாலமாக பேசுகிறார்கள். ஆனால் இன்னமும் அதைக்கூட நடைமுறைப் படுத்தவில்லை.

சென்ன நகருக்கான சரியான போக்குவரத்து என்பது பின்வரும் நிலைகளின் மூலம் அடையப்பட வேண்டும். (பாட்டாளி மக்கள் கட்சியின் "சென்னை பெருநகருக்கான மாற்று போக்குவரத்து திட்டம்" எனும் ஆவணத்தில் இதுகுறித்து விரிவாகக் காணலாம்:

1. எல்லா சாலைகளிலும் சரியான நடைபாதை,
2. மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கையை 8000 ஆக அதிகரித்தல்,
3. முதன்மை சாலைகளில் இலவச வாகன நிறுத்தங்களை ஒழித்தல்,
4. அகமதாபாத் நகரில் உள்ளது போல பேருந்து விரைவு போக்குவரத்து திட்டம் (BRT),
5. தனியார் கார்கள் மீது நெரிசல் கட்டணம் (இருசக்கர வண்டிகள் மீதல்ல),
6. பள்ளிகளிச் சேர்க்கையில் “அண்மைப்பள்ளி முறையை” கட்டாயமாக்குதல்

- இவைதான் நெரிசலைத் தீர்க்கும்.

மேலே குறிப்பிட்டுள்ள அடிப்படையில்தான் முன்னுரிமைகளும் அமைய வேண்டும். இதில் எதைச்செய்தாலும் அது ஒட்டுமொத்த போக்குவரத்துக்கு நன்மையாகவே அமையும்.

ஆனால், இதையெல்லாம் விட்டுவிட்டு மேம்பாலம், அடுக்குமாடி வாகன நிறுத்தம், கூடுதல் சாலை, மோனோ ரயில் என்று நிலைமையை இன்னும் மோசமாக்கக்கூடிய திட்டங்களைத்தான் அரசாங்கமும் பன்னாட்டு நிறுவனங்களும் முன்வைக்கின்றன.

இந்நிலையில், உழைக்கும் மக்களுக்காக பேசுவதாகக் கூறும் வினவு நெரிசல் கட்டணத்தை எதிர்ப்பதில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை.

வியாழன், ஜூன் 07, 2012

குட்கா - பான் மசாலாவுக்கு தடை: இதுவே தக்க தருணம்!

கடந்த 2001 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் நாள், இன்றைய முதல்வர் செல்வி. ஜெயலாலிதா அவர்கள் தலைமையிலான  தமிழ்நாடு அரசு ஒரு புரட்சிகரமான உத்தரவை (G.O.No.301) செயல்படுத்தியது. அன்று முதல் தமிழ்நாட்டில் பான்மசாலா, குட்கா, மெல்லும் வகை புகையிலைப் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. ஆனால், 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றம், "பான்மசாலா, குட்கா, மெல்லும் வகை புகையிலைப் பொருட்களுக்கு தடைவிதிக்க மாநில அரசுக்கு அரசியல் சட்டப்படி அதிகாரமில்லை" என்று கூறி தடையை நீக்கி உத்தரவிட்டது (Gutkha ban unconstitutional: court)

தமிழ்நாடு அரசின் அன்றைய தடை நீட்டிக்கப்பட்டிருந்தால், இன்று பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும்.

குட்கா - பான் மசாலா படுகொலைகள்

2010 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 5, 56, 000 பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர். (Cancer killed 5.56 lakh in India in 2010) புற்றுநோய் தாக்குவதற்கான முதன்மைக் காரணமாக இருப்பது புகையிலை. ஆண்களில் 45 விழுக்காடு வரையிலும் பெண்களில் 20 விழுக்காடு வரையிலும் புற்றுநோய்க்கு காரணமாக இருப்பது புகையிலைப் பொருட்கள்தான்.

உலக அளவில் மிக அதிக வாய்ப்புற்று நோய் தாக்கப்படும் நாடாக இந்தியா உள்ளது. உலகின் ஒட்டுமொத்த வாய் புற்றுநோய் பாதிப்பில் 25 விழுக்காடு பாதிப்புகள் இந்தியாவில்தான் ஏற்படுகின்றது. இந்திய புற்றுநோய் பதிவேட்டின் படி நாட்டிலேயே அதிக வாய் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆட்பட்ட நகரமாக சென்னை அடையாளம் காணப்பட்டுள்ளது.

வாய், தொண்டை, கழுத்து புற்றுநோய் தாக்குவதற்கு பான்மசாலா, குட்கா, கைனி உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைதான் 90 விழுக்காடு காரணமாகும். அதாவது பான்மசாலா, குட்கா, கைனி இல்லையென்றால் 90 விழுக்காடு வாய் தொண்டை, கழுத்து புற்றுநோய் தடுக்கப்பட்டுவிடும்.

இப்போதையக் கணிப்பின்படி சென்னையில் மட்டும் 2012 - 2016 ஆம் ஆண்டுகளுக்கு இடையே 32 விழுக்காடு அளவிற்கு புற்றுநோய் தாக்குதல் அதிகமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. (Article predicts 32% increase in total cancer burden in Chennai) இதுபோல தமிழ்நாடு முழுவதும் புற்றுநோய் தாக்குதல் அதிகமாகிவருகிறது. ஆண்டுதோரும் புதிதாக 55,000 பேர் புற்றுநோயால் தாக்கப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே மிகப்பரிய ஆபத்தாகும்.

எனவே, தமிழ்நாட்டு மக்களை புற்றுநோயிலிருந்து பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய கடமை தமிழ்நாடு அரசுக்கு உள்ளது. அதற்கான சாதகமான சூழலும் இப்போது ஏற்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டில் இன்றைய முதல்வர் செல்வி. செயலாலிதா அவர்களின் ஆட்சியில்தான் பான்மசாலா, குட்கா உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைக்கு தடைவிதிக்கப்பட்டது. அப்போதைய சூழலில் 'மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை, மத்திய அரசுக்குதான் அதிகாரம் உள்ளது' என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் தடையை நீக்கியது. ஆனால் இப்போது மத்திய அரசின் உத்தரவே பான்மசாலா, குட்கா, கைனி உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைப் பொருட்களை தடைசெய்வதற்கான எளிதான சூழலை உருவாக்கியுள்ளது.

இந்திய அரசின் புதிய உத்தரவு என்ன?

இந்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம் (FSSAI) கடந்த 1.8.2011 அன்று 'உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் விதிமுறைகள் 2011' (Food Safety and Standards-Prohibition and Restrictions on Sales-Regulations, 2011) எனும் அறிவிக்கையை வெளியிட்டது. அதன் 2.3.4 ஆம் பிரிவில், "உணவுப் பொருளில் உடல்நலத்திற்கு தீங்கு செய்யும் பொருட்கள் இடம்பெறக்கூடாது: புகையிலை மற்றும் நிக்கோட்டின் உணவுப்பொருள் எதிலும் கலக்கப்படக்கூடாது" என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் மனிதர்கள் உண்பதற்காகவோ குடிப்பதற்காகவோ உருவாக்கப்படும் பதப்படுத்தப்பட்ட, அரைகுறையாக பதப்படுத்தப்பட்ட, பதப்படுத்தப்படாத அனைத்து பொருட்களும் உணவுப்பொருட்கள்தான் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட உத்தரவு பான் மசாலா, குட்காவைத் தடைசெய்கிறது.

பான் மசாலா, குட்கா தடை: உச்ச நீதிமன்றம் கூறுவது என்ன?

பான் மசாலா, குட்கா உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைப் பொருட்கள் உணவுப்பொருட்கள் என்கிற வரையறைக்குள் வருமா, வராதா என்கிற வினாவிற்கு இந்திய உச்சநீதிமன்றம் தெளிவாக விளக்கம் அளித்துள்ளது. "கொடவாட் பான் மசாலா பொருட்கள் நிறுவனம் எதிர். இந்திய அரசு" எனும் வழக்கில் 2004 ஆம் ஆண்டு தீர்ப்பளித்த இந்திய உச்சநீதிமன்றம் "பான் மசாலா, குட்கா, சுபாரி ஆகியன சுவைக்காகவும் அவற்றின் சத்துக்களுக்காகவும் சாப்பிடப்படுவதால் அவை இந்திய உணவு கலப்படத் தடுப்புச்சட்டத்தின் வரையறைப் படி உணவுப்பொருட்கள்தான்" என்று உத்தரவிட்டுள்ளது. ("Since pan masala, gutka or supari are eaten for taste and nourishment, they are all food within the meaning of Section 2(v) of the Act" Godawat Pan Masala Products I.P. ... vs Union Of India & Ors on 2 August, 2004)
இதேபோன்று மத்திய அரசு குட்கா, பான் மசாலாவுக்கு தடைவிதிக்க முடியுமா என்பது குறித்து 2009 ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் "உணவுப்பொருளில் தீங்கு செய்யும் பொருட்கள் இடம்பெறாமல் தடை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு" என்று தீர்ப்பளித்தது. இதன்மூலம், குட்கா, பான் மசாலாவுக்கு மத்திய அரசு தடைவிதிக்க முடியும் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.

கேரளா, பீகார், மத்திய பிரதேசத்தில் தடை

இந்திய அரசின் 'உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் விதிமுறைகள் 2011'  2.3.4 ஆம் பிரிவில், "உணவுப் பொருளில் உடல்நலத்திற்கு தீங்கு செய்யும் பொருட்கள் இடம்பெறக்கூடாது: புகையிலை மற்றும் நிக்கோட்டின் உணவுப்பொருள் எதிலும் கலக்கப்படக்கூடாது" (2.3.4: Product not to contain any substance which may be injurious to health: Tobacco and nicotine shall not be used as ingredients in any food products) என்று உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து கேரளா, பீகார் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் பான்மசாலா, குட்கா, கைனி உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைப் பொருட்களை தடைசெய்துள்ளன. 

மத்திய பிரதேச மாநில அரசின் உணவு பாதுகாப்பு ஆணையர் 31.3.2012 அன்று வெளியிட்ட உத்தரவிலும் (Gutka Ban Order – Madhya Pradesh), கேரள மாநில அரசின் உணவு பாதுகாப்பு ஆணையர் 22.5.2012 அன்று வெளியிட்ட உத்தரவிலும் (Gutka Ban Order – Kerala),  பீகார் மாநில அரசின் உணவு பாதுகாப்பு ஆணையர் 30.5.2012 அன்று வெளியிட்ட உத்தரவிலும் (Gutka Ban Order – Bihar) அந்தந்த மாநிலங்களில் இந்திய அரசின் 'உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் விதிமுறைகள் 2011'  2.3.4 ஆம் பிரிவினை செயல்படுத்தி உத்தரவிட்டுள்ளனர்.

இதன்படி கேரளா, பீகார், மத்திய பிரதேச மாநிலங்களில் பான்மசாலா, குட்கா, கைனி உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைப் பொருட்களை உற்பத்தி செய்யவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்?

தமிழ்நாடு அரசு 2001 ஆம் ஆண்டிலேயே பான்மசாலா, குட்காவைத் தடைசெய்து முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளது. அப்போதைய நல்ல முயற்சி நீதிமன்ற உத்தரவால் தடுக்கப்பட்டாலும், இப்போது சூழல் முற்றிலுமாக மாறியுள்ளது.
பான்மசாலா, குட்கா, கைனி உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைப் பொருட்களை தடை செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் விதிமுறைகள் 2011 இன் 2.3.4 ஆம் பிரிவில் பான்மசாலா, குட்கா, கைனி உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைப் பொருட்களுக்கு தடையும் விதித்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசுக்கு இப்போது பான்மசாலா, குட்காவைத் தடைசெய்ய முழு அதிகாரம் உள்ளது.

தமிழ்நாடு அரசின் உணவுப் பாதுகாப்பு ஆணையர் இந்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் விதிமுறைகள் 2011 இன் 2.3.4 ஆம் பிரிவினை செயல்படுத்தி இப்போது உத்தரவிட்டால் போதும். அத்தகைய ஒரு சட்டபூர்வமான உத்தரவின் மூலம் தமிழ்நாட்டில் பான்மசாலா, குட்கா, கைனி உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைப் பொருட்கள் மீதானத் தடை செயலுக்கு வந்துவிடும்.

அப்படிப்பட்ட ஒரு உத்தரவினை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும். மக்கள் நலனில் அக்கறை உள்ள அனைவரும் அதற்காக குரல் கொடுக்க வேண்டும்.

செவ்வாய், ஜூன் 05, 2012

சூன் 5 உலக சுற்றுச்சூழல் நாள்:பிளாஸ்டிக் பை பயன்படுத்துவது ஒரு படுபாதகச் செயல்!

பிளாஸ்டிக் சாலையால் குப்பை சிக்கல் தீராது - சுற்றுச்சூழல் காக்க நெகிழிப்பைகளை ஒழிக்க வேண்டும்.

பிளாஸ்டிக் பை எனப்படும் நெகிழிப்பைகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடுசெய்கின்றன. பிளாஸ்டிக் சாலை அமைப்பதன் மூலம் இக்கேட்டினை  ஒழிக்க முடியாது. குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பதும் இதற்கு தீர்வு அல்ல. மத்திய அரசின் நெகிழிப்பைக் கட்டுப்படுத்தும் விதிகளை மாநில அரசாங்கம் முழுமையாகச் செயல்படுத்துவதன் மூலமும், நெகிழிப்பைகளை பொதுமக்கள் புறக்கணிப்பதன் மூலமும் இந்தத்தீமையை ஒழிக்க முன்வரவேண்டும்.

சூன் 5 உலக சுற்றுச்சூழல் நாள்

உலகம் முழுவதும் சூன் 5 ஆம் நாள் உலக சுற்றுச்சூழல் நாளாகக் கொண்டாடப்படுகிறது. 1972 ஆம் ஆண்டு ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு (UNEP United Nations Environment Programme) தொடங்கப்பட்ட நாளைக் குறிக்கும் வகையில் உலக சுற்றுச்சூழல் நாள் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு 40 ஆவது உலக சுற்றுச்சூழல் நாள் ஆகும்.

இந்த ஆண்டின் உலக சுற்றுச்சூழல் நாள் முழக்கமாக "பசுமைப் பொருளாதாரம்: அது உங்களையும் உள்ளடக்கியதா?" (Green Economy: Does it include you?) என்கிற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நபரின் வாழ்விலும் வளர்ச்சி என்பது சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதை இந்த முழக்கம் குறிக்கிறது. எப்படி வேண்டுமானாலும் பொருளாதார வளர்ச்சி அமையலாம் என்பதற்கு மாற்றாக, இனி சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மட்டுமே வளர்ச்சி இருக்க வேண்டும். நீடித்திருக்கும் வளர்ச்சி, பசுமை வேலைவாய்ப்புகள், பசுமைக் கட்டடங்கள், பசுமைக் கொள்கை, சுற்றுச்சூழலை பாதிக்காத போக்குவரத்து, தண்ணீர் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை - என எல்லாவற்றையும் உள்ளடக்கியதுதான் "பசுமைப் பொருளாதாரம்" ஆகும். இந்தக் கருத்தை வலியுறுத்தும் ஐ.நா. உலக உச்சி மாநாடு வரும் சூன் 20 முதல் பிரேசில் நாட்டின் ரியோ-டி-செனிரோ நகரில் நடக்கவுள்ளது.

இந்த நேரத்தில் - பசுமைப் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமான "சுழியக் குப்பை" (Zero Waste) எனப்படும் குப்பை ஒழிப்பில் தமிழ்நாடு அரசும், மாநராட்சிகளும், நகராட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு தமிழ்நாட்டை குப்பை - மாசுபாடு இல்லாத மாநிலமாக மாற்றும் உடனடி நடவடிக்கைகளை போர்க்கால அடைப்படையில் நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். அத்தகைய ஒரு முயற்சியில் பொதுமக்களும் இறங்க வேண்டும்.

அதிலும் குறிப்பாக, குப்பை சிக்கலுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கும் "ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப்பைகளை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட" இந்த சுற்றுச்சூழல் நாளில் உறுதி பூண்டிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

நெகிழிப்பை பயன்படுத்துவது ஒரு படுபாதகச் செயல்

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப்பைகளை பயன்படுத்துவது ஒரு படுபாதகச் செயலாகும். ஏனெனில், பொதுமக்கள் பொருட்களை வாங்கி எடுத்துச்செல்ல பயன்படுத்தும் நெகிழிப்பைகளின் சராசரி ஆயுட்காலம் வெறும் 12 நிமிடங்கள் மட்டுமே என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது, அதனை கையில் வாங்குவதற்கும் குப்பையில் எறிவதற்கும் இடையே வெறும் 12 நிமிடங்கள் மட்டுமே நெகிழிப்பை மனிதனுக்கு பயன்படுகிறது. ஆனால், அந்தப் பை அழிவதற்கு 1000 ஆண்டுகள் ஆகும். காலகாலத்திற்கும் அழியாமல் இருந்து சுற்றுச்சூழலை பாழ்படுத்தும். இன்று ஒருவர் தூக்கி எறியும் நெகிழிப்பை அவரது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், அவர்களின் பிள்ளைகள் என பலப்பல தலைமுறையினருக்கு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்.
இப்போதே நெகிழிப்பைகளை உட்கொண்டு ஆண்டுக்கு ஒரு லட்சம் திமிங்கலங்களும், சீல் போன்ற கடல்வாழ் உயிரினங்களும், பத்து லட்சம் பறவைகளும் இறப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. வனவிலங்குகள், கால்நடைகள் எல்லாம் நெகிழிப்பையால் இறப்பது வாடிக்கையாகிவிட்டது. நெகிழிப்பையால் குளங்கள், ஏரிகள், ஆறுகள், நிலத்தடி நீர் என எல்லா நீர்வளமும் கடுமையாக மாசுபடுகிறது.

நெகிழிப்பை சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் வழிகின்றன, சுற்றுப்புறம் மாசுபடுகிறது. சாலையோரங்களில் தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்தி டெங்கு, மலேரியா எனப்பல நோய்களுக்கு காரணமாகிறது. மழைக்காலங்களில் சாலைகள் வெள்ளக்காடாக மாறுவதற்கு நெகிழிக்குப்பையே முதல் காரணம். நெகிழிக்குப்பையை எரிப்பதால் அதிலிருந்து டையாக்சின் வாயு வெளியாகிறது. இது காலகாலத்திற்கும் அழியாமலிருந்து புற்றுநோயை ஏற்படுத்தும் வாயு ஆகும்.

இப்படியாக, ஒருமுறைப் பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப்பைகள் மிகப்பெரும் கேடாகிவிட்டதை குறிப்பிடும் வகையில், "நெகிழிப்பைகள் அணுகுண்டுகளை விட ஆபத்தானவை" என்று இந்திய உச்சநீதி மன்றம் அண்மையில் கூறியுள்ளது.

நெகிழி கலந்து சாலைபோடுவது தீர்வு அல்ல.

'நெகிழிப் பைகள் நல்லதுதான். ஏனென்றால் அவற்றைக் கொண்டு சாலை போடலாம்' என்று ஒரு கருத்து பேசப்படுகிறது. இது முற்றிலும் தவறு. சாலை போடுவதற்காக மிகக்குறைவான அளவுக்குதான் நெகிழிக்குப்பையைப் பயன்படுத்த முடியும்.  சென்னை நகரில் ஓரிரு நாட்களில் தூக்கி எறியப்படும் நெகிழிக்குப்பையைக் கொண்டு ஓரு ஆண்டு முழுவதுக்குமான சாலைகளை போட்டுவிடலாம். மற்ற நாட்களில் தூக்கிஎறியப்படும் நெகிழி குப்பையை என்ன செய்வது?
அதுமட்டுமல்லாமல், சாலை போடும் நெகிழியும் அழியாது. அதுவும் மெல்லிய துணுக்குகளாகி ஆயிரம் ஆண்டுகள் சுற்றுச்சூழலைக் கெடுக்கும். அதுபோலவே, குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களாலும் நெகிழிக்கு தீர்வு இல்லை. நெகிழி எரிக்கப்படும் போது, அது இன்னும் மோசமான நச்சு வாயுவாக மாறி காற்று மண்டலத்தைக் காலகாலத்திற்கும் பாதிக்கும்.

உலகம் முழுவதும் ஆண்டுதோரும் உற்பத்தி செய்யப்படும் ஒட்டுமொத்த நெகிழிப்பைகளில் வெறும் 3 விழுக்காடு கூட மறுசுழற்சி செய்யப்படுவது இல்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. மறுசுழற்சியும் கூட மாசுபடுத்தக் கூடியதுதான்.

நெகிழிப்பை கேடு - என்ன தீர்வு?

நெகிழிப்பைகளைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் ஏற்கெனவே இந்திய அரசால் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த சட்டபூர்வமான விதிமுறைகளை தமிழ்நாடு அரசும், மாநகராட்சிகளும், நகராட்சிகளும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். பொதுமக்கள் தூக்கி எறியும் நெகிழிப்பைகளை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். ஒரு முழுமையாக சுழியக்குப்பை முறையை தமிழ்நாட்டில் போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்துவதுதான் நிரந்தரத் தீர்வாக அமையும்.

இந்திய அரசின் நெகிழிக் குப்பை (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதிகள் 2011 (Plastic waste (management and handling) rules 2011) எனும் அரசாணை 4.2.2011 அன்று வெளியிடப்பட்டது. இந்த உத்தரவின்படி:

- 40 மைக்ரான் அளவுக்கு கீழான நெகிழிப்பைகள் தடை செய்யப்பட்டுள்ளன.


- கடைகளில் இலவசமாக நெகிழிப்பை அளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. நெகிழிப்பைகளின் குறைந்தபட்ச விலையை மாநகராட்சி, நகராட்சிகள் நிர்ணயிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. (இதன்படி நியாயமாகப் பார்த்தால் சுமார் பத்து ரூபாய் விலைக்கு கூடுதலாக நெகிழிப்பைகளுக்கு விலைவைக்க வேண்டும்)

- ஒவ்வொரு நெகிழிப்பையின் மீதும் தயாரிப்பாளர் விவரம், பையின் அளவு, தடிமண், தயாரிக்கப்பட்ட நாள் உள்ளிட்ட விவரங்கள் கட்டாயமாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

- பெரிய நிறுவனங்கள் அவர்களது பொருட்களால் உருவாகும் குப்பையை அவர்களே வாடிக்கையாளரிடமிருந்து திரும்பவும் காசுகொடுத்து வாங்கிக்கொள்ளும் "உற்பத்தியாளரே பொறுப்பேற்கும் கொள்கையை" (EPR - Extended Producers Responsibility) செயல்படுத்த வேண்டும்.

என்று மத்திய அரசு உத்தரவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழ்நாட்டின் ஒரு இடத்திலும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.

எனவே, இனியும் தாமதிக்காமல் தமிழ்நாடு அரசும், மாநகராட்சிகளும், நகராட்சிகளும் இந்த சட்ட விதிகளை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டின் அனைத்து கடை உரிமையாளர்களும் இதனை முழுமூச்சாக செயல்படுத்த முன்வரவேண்டும். நெகிழிப்பைகளை காசுக்கு விற்றால் அது கடை உரிமையாளர்களுக்கும் இலாபம்தான்.
பொதுமக்கள் கடைகளுக்கு போகும்போது கையோடு ஒரு துணிப்பை கொண்டு போகும் பழைய பழக்கத்தை மீண்டும் பின்பற்ற வேண்டும். அதன் மூலம் நெகிழிப்பைகளை முற்றிலுமாக தவிற்க சுற்றுச்சூழல் நாளில் உறுதியேற்க வேண்டும்.