Pages

செவ்வாய், ஜூன் 05, 2012

சூன் 5 உலக சுற்றுச்சூழல் நாள்:பிளாஸ்டிக் பை பயன்படுத்துவது ஒரு படுபாதகச் செயல்!

பிளாஸ்டிக் சாலையால் குப்பை சிக்கல் தீராது - சுற்றுச்சூழல் காக்க நெகிழிப்பைகளை ஒழிக்க வேண்டும்.

பிளாஸ்டிக் பை எனப்படும் நெகிழிப்பைகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடுசெய்கின்றன. பிளாஸ்டிக் சாலை அமைப்பதன் மூலம் இக்கேட்டினை  ஒழிக்க முடியாது. குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பதும் இதற்கு தீர்வு அல்ல. மத்திய அரசின் நெகிழிப்பைக் கட்டுப்படுத்தும் விதிகளை மாநில அரசாங்கம் முழுமையாகச் செயல்படுத்துவதன் மூலமும், நெகிழிப்பைகளை பொதுமக்கள் புறக்கணிப்பதன் மூலமும் இந்தத்தீமையை ஒழிக்க முன்வரவேண்டும்.

சூன் 5 உலக சுற்றுச்சூழல் நாள்

உலகம் முழுவதும் சூன் 5 ஆம் நாள் உலக சுற்றுச்சூழல் நாளாகக் கொண்டாடப்படுகிறது. 1972 ஆம் ஆண்டு ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு (UNEP United Nations Environment Programme) தொடங்கப்பட்ட நாளைக் குறிக்கும் வகையில் உலக சுற்றுச்சூழல் நாள் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு 40 ஆவது உலக சுற்றுச்சூழல் நாள் ஆகும்.

இந்த ஆண்டின் உலக சுற்றுச்சூழல் நாள் முழக்கமாக "பசுமைப் பொருளாதாரம்: அது உங்களையும் உள்ளடக்கியதா?" (Green Economy: Does it include you?) என்கிற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நபரின் வாழ்விலும் வளர்ச்சி என்பது சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதை இந்த முழக்கம் குறிக்கிறது. எப்படி வேண்டுமானாலும் பொருளாதார வளர்ச்சி அமையலாம் என்பதற்கு மாற்றாக, இனி சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மட்டுமே வளர்ச்சி இருக்க வேண்டும். நீடித்திருக்கும் வளர்ச்சி, பசுமை வேலைவாய்ப்புகள், பசுமைக் கட்டடங்கள், பசுமைக் கொள்கை, சுற்றுச்சூழலை பாதிக்காத போக்குவரத்து, தண்ணீர் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை - என எல்லாவற்றையும் உள்ளடக்கியதுதான் "பசுமைப் பொருளாதாரம்" ஆகும். இந்தக் கருத்தை வலியுறுத்தும் ஐ.நா. உலக உச்சி மாநாடு வரும் சூன் 20 முதல் பிரேசில் நாட்டின் ரியோ-டி-செனிரோ நகரில் நடக்கவுள்ளது.

இந்த நேரத்தில் - பசுமைப் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமான "சுழியக் குப்பை" (Zero Waste) எனப்படும் குப்பை ஒழிப்பில் தமிழ்நாடு அரசும், மாநராட்சிகளும், நகராட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு தமிழ்நாட்டை குப்பை - மாசுபாடு இல்லாத மாநிலமாக மாற்றும் உடனடி நடவடிக்கைகளை போர்க்கால அடைப்படையில் நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். அத்தகைய ஒரு முயற்சியில் பொதுமக்களும் இறங்க வேண்டும்.

அதிலும் குறிப்பாக, குப்பை சிக்கலுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கும் "ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப்பைகளை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட" இந்த சுற்றுச்சூழல் நாளில் உறுதி பூண்டிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

நெகிழிப்பை பயன்படுத்துவது ஒரு படுபாதகச் செயல்

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப்பைகளை பயன்படுத்துவது ஒரு படுபாதகச் செயலாகும். ஏனெனில், பொதுமக்கள் பொருட்களை வாங்கி எடுத்துச்செல்ல பயன்படுத்தும் நெகிழிப்பைகளின் சராசரி ஆயுட்காலம் வெறும் 12 நிமிடங்கள் மட்டுமே என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது, அதனை கையில் வாங்குவதற்கும் குப்பையில் எறிவதற்கும் இடையே வெறும் 12 நிமிடங்கள் மட்டுமே நெகிழிப்பை மனிதனுக்கு பயன்படுகிறது. ஆனால், அந்தப் பை அழிவதற்கு 1000 ஆண்டுகள் ஆகும். காலகாலத்திற்கும் அழியாமல் இருந்து சுற்றுச்சூழலை பாழ்படுத்தும். இன்று ஒருவர் தூக்கி எறியும் நெகிழிப்பை அவரது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், அவர்களின் பிள்ளைகள் என பலப்பல தலைமுறையினருக்கு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்.
இப்போதே நெகிழிப்பைகளை உட்கொண்டு ஆண்டுக்கு ஒரு லட்சம் திமிங்கலங்களும், சீல் போன்ற கடல்வாழ் உயிரினங்களும், பத்து லட்சம் பறவைகளும் இறப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. வனவிலங்குகள், கால்நடைகள் எல்லாம் நெகிழிப்பையால் இறப்பது வாடிக்கையாகிவிட்டது. நெகிழிப்பையால் குளங்கள், ஏரிகள், ஆறுகள், நிலத்தடி நீர் என எல்லா நீர்வளமும் கடுமையாக மாசுபடுகிறது.

நெகிழிப்பை சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் வழிகின்றன, சுற்றுப்புறம் மாசுபடுகிறது. சாலையோரங்களில் தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்தி டெங்கு, மலேரியா எனப்பல நோய்களுக்கு காரணமாகிறது. மழைக்காலங்களில் சாலைகள் வெள்ளக்காடாக மாறுவதற்கு நெகிழிக்குப்பையே முதல் காரணம். நெகிழிக்குப்பையை எரிப்பதால் அதிலிருந்து டையாக்சின் வாயு வெளியாகிறது. இது காலகாலத்திற்கும் அழியாமலிருந்து புற்றுநோயை ஏற்படுத்தும் வாயு ஆகும்.

இப்படியாக, ஒருமுறைப் பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப்பைகள் மிகப்பெரும் கேடாகிவிட்டதை குறிப்பிடும் வகையில், "நெகிழிப்பைகள் அணுகுண்டுகளை விட ஆபத்தானவை" என்று இந்திய உச்சநீதி மன்றம் அண்மையில் கூறியுள்ளது.

நெகிழி கலந்து சாலைபோடுவது தீர்வு அல்ல.

'நெகிழிப் பைகள் நல்லதுதான். ஏனென்றால் அவற்றைக் கொண்டு சாலை போடலாம்' என்று ஒரு கருத்து பேசப்படுகிறது. இது முற்றிலும் தவறு. சாலை போடுவதற்காக மிகக்குறைவான அளவுக்குதான் நெகிழிக்குப்பையைப் பயன்படுத்த முடியும்.  சென்னை நகரில் ஓரிரு நாட்களில் தூக்கி எறியப்படும் நெகிழிக்குப்பையைக் கொண்டு ஓரு ஆண்டு முழுவதுக்குமான சாலைகளை போட்டுவிடலாம். மற்ற நாட்களில் தூக்கிஎறியப்படும் நெகிழி குப்பையை என்ன செய்வது?
அதுமட்டுமல்லாமல், சாலை போடும் நெகிழியும் அழியாது. அதுவும் மெல்லிய துணுக்குகளாகி ஆயிரம் ஆண்டுகள் சுற்றுச்சூழலைக் கெடுக்கும். அதுபோலவே, குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களாலும் நெகிழிக்கு தீர்வு இல்லை. நெகிழி எரிக்கப்படும் போது, அது இன்னும் மோசமான நச்சு வாயுவாக மாறி காற்று மண்டலத்தைக் காலகாலத்திற்கும் பாதிக்கும்.

உலகம் முழுவதும் ஆண்டுதோரும் உற்பத்தி செய்யப்படும் ஒட்டுமொத்த நெகிழிப்பைகளில் வெறும் 3 விழுக்காடு கூட மறுசுழற்சி செய்யப்படுவது இல்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. மறுசுழற்சியும் கூட மாசுபடுத்தக் கூடியதுதான்.

நெகிழிப்பை கேடு - என்ன தீர்வு?

நெகிழிப்பைகளைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் ஏற்கெனவே இந்திய அரசால் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த சட்டபூர்வமான விதிமுறைகளை தமிழ்நாடு அரசும், மாநகராட்சிகளும், நகராட்சிகளும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். பொதுமக்கள் தூக்கி எறியும் நெகிழிப்பைகளை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். ஒரு முழுமையாக சுழியக்குப்பை முறையை தமிழ்நாட்டில் போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்துவதுதான் நிரந்தரத் தீர்வாக அமையும்.

இந்திய அரசின் நெகிழிக் குப்பை (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதிகள் 2011 (Plastic waste (management and handling) rules 2011) எனும் அரசாணை 4.2.2011 அன்று வெளியிடப்பட்டது. இந்த உத்தரவின்படி:

- 40 மைக்ரான் அளவுக்கு கீழான நெகிழிப்பைகள் தடை செய்யப்பட்டுள்ளன.


- கடைகளில் இலவசமாக நெகிழிப்பை அளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. நெகிழிப்பைகளின் குறைந்தபட்ச விலையை மாநகராட்சி, நகராட்சிகள் நிர்ணயிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. (இதன்படி நியாயமாகப் பார்த்தால் சுமார் பத்து ரூபாய் விலைக்கு கூடுதலாக நெகிழிப்பைகளுக்கு விலைவைக்க வேண்டும்)

- ஒவ்வொரு நெகிழிப்பையின் மீதும் தயாரிப்பாளர் விவரம், பையின் அளவு, தடிமண், தயாரிக்கப்பட்ட நாள் உள்ளிட்ட விவரங்கள் கட்டாயமாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

- பெரிய நிறுவனங்கள் அவர்களது பொருட்களால் உருவாகும் குப்பையை அவர்களே வாடிக்கையாளரிடமிருந்து திரும்பவும் காசுகொடுத்து வாங்கிக்கொள்ளும் "உற்பத்தியாளரே பொறுப்பேற்கும் கொள்கையை" (EPR - Extended Producers Responsibility) செயல்படுத்த வேண்டும்.

என்று மத்திய அரசு உத்தரவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழ்நாட்டின் ஒரு இடத்திலும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.

எனவே, இனியும் தாமதிக்காமல் தமிழ்நாடு அரசும், மாநகராட்சிகளும், நகராட்சிகளும் இந்த சட்ட விதிகளை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டின் அனைத்து கடை உரிமையாளர்களும் இதனை முழுமூச்சாக செயல்படுத்த முன்வரவேண்டும். நெகிழிப்பைகளை காசுக்கு விற்றால் அது கடை உரிமையாளர்களுக்கும் இலாபம்தான்.
பொதுமக்கள் கடைகளுக்கு போகும்போது கையோடு ஒரு துணிப்பை கொண்டு போகும் பழைய பழக்கத்தை மீண்டும் பின்பற்ற வேண்டும். அதன் மூலம் நெகிழிப்பைகளை முற்றிலுமாக தவிற்க சுற்றுச்சூழல் நாளில் உறுதியேற்க வேண்டும்.

2 கருத்துகள்:

முரளிதீர தொண்டைமான் சொன்னது…

இன்றைய தேதியில் சுற்றுபுற சூழல் மீதான நமது அக்கறை மிகவும் குறைந்துதான் காணப்படுகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை! அதனை பேணிக்காக்கும் பொருட்டு பொதுமக்களாக நமக்கு பெரும் பங்குள்ளது அதன் ஒரு கூறாக பிளாஸ்டிக் பொருட்களை படிப்படியாக உபயோகிப்பதை ஒவ்வொருவரும் குறைத்துகொள்ளவேண்டும்!

இதுசம்பந்தமான உங்களது கட்டுரை மிகவும் அருமை அதுவும் தகுந்த நேரத்தில் இது மிகவும் முக்கியம்!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

, இனியும் தாமதிக்காமல் தமிழ்நாடு அரசும், மாநகராட்சிகளும், நகராட்சிகளும் இந்த சட்ட விதிகளை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும்.