Pages

திங்கள், டிசம்பர் 28, 2015

பத்திரிகைகாரங்களா நீங்க....த்தூ: ஊடகங்களுக்குத் தேவை ஆத்மபரிசோதனை!

ஆடு வளர்ப்பவனை நம்பாது.... கசாப்புக்கடைக் காரணத்தைத் தான் நம்பும் என்பதற்கு சென்னையில் நேற்று புதிய உதாரணம் படைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் கட்சித் (கட்சி பெயரில் உள்ள எழுத்துக்களின் அடிப்படையில் தான்) தலைவரான நடிகர் விஜயகாந்த் செய்தியாளர்கள் மீது ‘த்த்தூதூ’ என காறித் துப்பியிருக்கிறார்.  ("பத்திரிகைகாரங்களா நீங்க....த்தூ" - இது விஜயகாந்த் வாசகம்)
ஓர் அரசியல் கட்சித் தலைவர் எப்படியெல்லாம் நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது. இனி இப்படி ஒரு அசிங்கம் அரங்கேறக் கூடாது என்று விரும்புவோம்.

விதைத்ததை அறுவடை செய்

விஜயகாந்தின் செயல் கண்டிக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இந்த அவமதிப்புக்கு ஊடகவியலாளர்கள் தகுதியானவர்கள் தான். அவர்கள் விதைத்ததை அவர்களே அறுவடை செய்திருக்கிறார்கள். ஒரு ஜீரோவை ஹீரோவாக்க பாடுபட்ட பத்திரிகையாளர்கள் இப்போது காமெடியன்களை விட கீழானவர்களாக மாறியிருக்கிறார்கள்.

விஜயகாந்தின் கடந்த கால செயல்பாடுகளைப் பார்த்தாலே அவர் எப்படிப்பட்டவர் என்பது தெரிந்து விடும். சென்னை விமான நிலையத்தில் கேள்வி கேட்ட மூத்த பத்திரிகையாளர் ஒருவரை, ‘‘ஏண்டா... உன் பத்திரிகையா எனக்கு சம்பளம் தருகிறது? போடா நாயி’’ என்று திட்டியது, தில்லியில் செய்தியாளர் சந்திப்பின் போது, ‘‘அப்படியே... மைக்கை தூக்கி அடிச்சிடுவேன்’’ என்று மிரட்டியது, சென்னையில் கட்சி அலுவலகத்தில் செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களைப் பார்த்து,‘‘ உங்களை நாங்களாய்யா கூப்பிட்டோம்....கூப்பிடாமலேயே ஏன்ய்யா இங்க வரீங்க?’’ என்று விரட்டியது என பத்திரிகையாளர்களை விஜயகாந்த் இழிவுபடுத்திய நிகழ்வுகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

அறிவிருக்கா? என்று கேட்டதற்காக இளையராஜாவை கடுமையாக விமர்சித்த ஊடகக் காரர்களும், கருத்துரிமை போராளிகளும் விஜயகாந்தின் இந்த செயல்களுக்காக அவரை கண்டித்ததே இல்லை.

தன்மானம் பற்றி வாய்கிழிய பேசும் பத்திரிகையாளர்களுக்கு, உண்மையாகவே அப்படி ஒன்று இருந்திருந்தால் விஜயகாந்த் பற்றிய செய்திகளையும், அவரது நிகழ்வுகளையும் புறக்கணித்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை ஒருமுறை கூட அப்படி செய்யவில்லை... செய்யவும் மாட்டார்கள். காரணம் பத்திரிகையாளர்கள் சிக்கியுள்ள டிசைன் அப்படி.

விஜயகாந்தை பாதுகாக்கும் ஊடகங்கள்

ஒரு பெரிய கோட்டை சிறிய கோடாக மாற்ற வேண்டும் என்றால் அதற்கு அருகில் அதைவிட பெரிய கோட்டை கிழிக்க வேண்டும். அதுவே, ஒரு சிறிய கோட்டை பெரிய கோடாக மாற்ற வேண்டுமானால் அதற்கு அருகில் அதைவிட சிறிய கோட்டை போட வேண்டும். விஜயகாந்த் என்ற சிறிய கோட்டை பெரிய கோடாக மாற்ற நடக்கும் டிசைனில் ஊடகங்களும் ஓர் அங்கம் என்பதால் தான் அவருக்கு எதிராக ஊடகங்கள் வாய் திறப்பதில்லை.

விஜயகாந்த் காறி துப்பிய பிறகும் கூட அவரிடம் பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ‘‘இந்த கேள்வியையெல்லாம் ஜெயலலிதாவிடம் கேட்க உங்களுக்கு துப்பில்லையா?’’ என விஜயகாந்த் கேட்டார். இந்த கேள்வி சரியானது தான். ஆனால், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு அரசின் சலுகைகள் அனைத்தையும் அனுபவிக்கும் விஜயகாந்த் ஆட்சியின் அவலங்களைப் பற்றி ஒருமுறையாவது சட்டப்பேரவையில் பேசியிருப்பாரா? இதைப் பற்றி விஜயகாந்திடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பியிருக்க வேண்டுமல்லவா? அதை செய்தார்களா? செய்யவில்லையே?

2014 நாடாளுமன்றத் தேர்தலாக இருக்கட்டும், 2016 சட்டமன்றத் தேர்தலாக இருக்கட்டும், எந்த கொள்கையுமே இல்லாமல் ஒரே நேரத்தில் மூன்று தரப்புடன் கூட்டணி பேசி டிமாண்டை அதிகரித்துக் கொள்ளும் விஜயகாந்தின் வணிக நோக்கத்தை ஏதாவது ஊடகங்கள் அம்பலப்படுத்தி இருக்குமா?  அம்பலப்படுத்தவில்லையே?
மாறாக, கொள்கைக் கோமாளியை கிங் மேக்கராகத் தானே ஊடகங்கள் தூக்கி வைத்துக் கொண்டாடின. தமிழகத்தின் முக்கியமான பிரச்சினைகளில் தே.மு.தி.க. கட்சியின் நிலைப்பாடு என்னவென்று விஜயகாந்துக்கு தெரியுமா? அதைப்பற்றி எந்த ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கின்றனவா? எழுப்பவில்லையே?

காரணம் என்ன? 
அது தான் மில்லியன் டாலர் கேள்வி

ஒரு கடையில் இரு பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவை இரண்டுமே அழுகிப் போன பழங்கள். அதன் அருகில் ஒரு நல்ல பழத்தை விற்பனைக்கு வைத்தால் அந்த பழம் தான் விற்பனையாகும். ஆனால், வியாபாரியின் நோக்கம் நல்ல பழத்தை விற்பதல்ல... அழுகிப் போன பழங்களை விற்பது தான் நோக்கம். அப்படியானால் அழுகிய பழங்களை விற்க என்ன செய்வது?  வேறென்ன... மீண்டும் சிறிய கோடு... பெரிய கோடு தத்துவம் தான்.

அழுகிப் போன பழங்களை விட மோசமான பழத்தை விற்பனைக்கு வைத்தால் அழுகிய பழமே பரவாயில்லை என்று வாங்கிச் செல்வார்கள் அல்லவா? அதனால் தான் இரு திராவிடப் பழங்களை நல்லவையாக்க இன்னொரு தேசிய திராவிடப் பழத்தை முன்வைக்கிறார்கள் ஊடக நிறுவன வியாபாரிகள். நல்ல பழம் எதுவும்  வாடிக்கையாளர்களின் கண்களில் பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தாம் ‘மாம்பழத்தை’ மறைத்து வைக்கிறார்கள்.

விஜயகாந்த் விஷயத்தில் ஊடகங்கள் தங்களின் செயலை ஆத்மபரிசோதனை செய்து கொள்ள இதுவே சரியான தருணம். ஆனால், ஊடகங்கள் அதற்கு தயாராக இருக்காது. இதற்கு முன் விஜயகாந்தின் அவமதிப்புகள் எப்படி ஊடகங்களை பாதிக்கவில்லையோ, அதேபோல் இந்த காறித் துப்பலும் பாதிக்காது. இதற்குப் பிறகும்  விஜயகாந்தை  ஊடகங்கள் தூக்கிப் பிடிக்கவே செய்யும். விஜயகாந்தும் ஊடகங்களை காறித் துப்பிக் கொண்டு தான் இருப்பார்.

துப்புங்க கேப்டன் துப்புங்க.... ரொம்ப நல்லாவே காறித் துப்புங்க!

ஞாயிறு, டிசம்பர் 27, 2015

காறித்துப்பும் விஜயகாந்த் - காலில் விழும் பத்திரிகைகள்: இவரை நம்பிதான் ஊடகங்களின் பிழைத்தாக வேண்டும்!

"இந்த கேள்வியை நீங்க ஜெயலலிதாகிட்ட போய் கேட்க முடியுமா? கேட்கவே மாட்டீங்களே.. பயப்படுவீங்க, பத்திரிகைகாரங்களா நீங்க....த்தூ" என்று காறி துப்பி பத்திரிகைகளை அவமதித்துள்ளார் நடிகர் விஜயகாந்த்.

'நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்" என்றார் சுவாமி விவேகானந்தர். தமிழக பத்திரிகைகள் விஜயகாந்தின் கழிசடை அரசியலை போற்றிப்புகழ்ந்தார்கள். இன்று, அதே கழிசடை அரசியலுக்கான பலனை பெற்றிருக்கிறார்கள். இதில் வியப்படைய எதுவும் இல்லை.

  • "அறிவிருக்கா" என்று கேட்ட இசைஞானி இளையராஜா மீது பாய்ந்தது போல... "பத்திரிகைகளா நீங்க'... த்தூ..." என்று காறி உமிழ்ந்த விஜயகாந்தின் மீது பத்திரிகைகளால் பாய முடியாது. 


  • இளையராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியது போல... விஜயகாந்த மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பத்திரிகைகளால் கோர முடியாது.

ஏனென்றால், இந்த ஊடகங்களை நம்பி விஜயகாந்தின் பிழைப்பு இல்லை. ஆனால், விஜயகாந்தை வைத்துதான் அடுத்த ஐந்து மாதங்களுக்கு பத்திரிகைகள் பிழைப்பு நடத்தியாக வேண்டும்.
--------------------------------
"பால், பீர் அபிசேகம் ரசிகனின் கலாச்சாரம் மட்டுமல்ல... பத்திரிகையாளனின் கலாச்சாரமும் தான்!" - என்று நேற்று பதிவிட்டிருந்தேன். அதில்:

"நடிகனைப் புகழ்ந்து அவன் ரசிகன் துண்டு நோட்டீஸ் அச்சிட்டு வெளியிடுவதைப் போல, நடிக அரசியல்வாதியின் அத்தனை பிழைப்பு வாதத்தையும் அவரது பெருமை போல நாளிதழில் அச்சிட்டு வெளியிடுவது தான் ஒரு பத்திரிகையாளனின் பிழைப்பு என்றால், அந்த பத்திரிகையாளனுக்கும், பீர் அபிசேகம் செய்யும் ரசிகனுக்கும் இடையே ஆறு வித்தியாசங்கள் அல்ல... ஒரே ஒரு வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியாது. வாழ்க... கோமாளிகளுக்கு கொடி பிடிக்கும் இதழியல் தர்மம்!" - என்று குறிப்பிட்டிருந்தேன்.

கோமாளிகளுக்கு கொடி பிடிக்கும் இதழியல் தர்மத்துக்கு இன்று பலன் கிடைத்துள்ளது. இனி இன்னும் அதிகமாக கிடைக்கும்.

சாதி மாநாட்டுக்கு ஜெயலலிதா வாழ்த்து: திராவிடக் கட்சிகளின் சாதி அரசியல்!

அதிமுக - திமுக கட்சிகள் தற்போது போட்டிப்போட்டுக் கொண்டு சாதிச் சங்க மாநாடுகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. பாமகவை சாதிக்கட்சி என்று பேசும் திராவிடக் கட்சிகள்  'தெலுங்கு செட்டியார்' சாதிச்சங்க மாநாடுகளை நடத்துகின்றன. முதலமைச்சர் ஜெயலலிதா இந்த சாதி மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிமுக தெலுங்கு செட்டியார் மாநாடு

மதுரையில் இன்று நடைபெறும் 24 மனை தெலுங்கு செட்டியார் சங்க மாநாட்டுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில், "மதுரையில் தங்களுடைய அமைப்பின் சார்பில் 27.12.2015 அன்று நடைபெறும் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பு மாநாடு வெற்றி பெற எனது நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களிடையே கல்வி, பொருளாதார, அரசியல் விழிப்புணர்ச்சியை உருவாக்கி, அதன் மூலம் அனைவருக்கும் நலம் பயக்கும் செயல்கள் நடைபெறத் தாங்கள் நடத்தும் மாநாடு பயன் அளிக்கும் என்று உறுதிபட நம்புகிறேன்." என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

(இதே போன்று "கல்வி, பொருளாதார, அரசியல் விழிப்புணர்ச்சியை" உருவாக்கும் நோக்கில்தான் வன்னியர் சங்க மாநாடுகளும் நடந்தன. அவற்றை எல்லாம் திராவிடக் கட்சிகள் தூற்றியது ஏன்?)


திமுக தெலுங்கு செட்டியார் மாநாடு

அதிமுக ஆதரவு தெலுங்கு செட்டியார் மாநாட்டுக்கு போட்டியாக, ஒருவாரம் முன்பு 20.12.2015 அன்று திண்டுக்கல்லில், திமுகவின் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கே.சி. பழனிச்சாமி தலைமையில் அதே 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சாதிச்சங்க மாநாட்டை நடத்தியுள்ளனர்.
இந்த மாநாட்டில் "24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சமுதாயத்திற்கு உள்ளேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும்" - என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.


திராவிடக் கட்சிகளின் சாதி அரசியல்: முற்போக்கு வேடதாரிகள் ஓடி ஒளிந்தது எங்கே?

'24 மனை தெலுங்கு செட்டியார்கள் தலைமைச் சங்கம்' என்ற பெயரில் திமுகவினரும், ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவுக்கு ஓட்டுக்கேட்ட '24 மனை தெலுங்கு செட்டியார்கள் ஒருங்கிணைப்புச் சங்கம்' என்ற பெயரில் அதிமுகவினரும் சாதிச்சங்க மாநாட்டை நடத்துகின்றனர்.

"24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சமுதாயத்திற்கு உள்ளேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும்" என்று தீர்மானமும் நிறைவேற்றுகிறார்கள்.

பாமகவை பார்த்து 'சாதி அரசியல்' என்று கொந்தளிக்கும் முற்போக்கு வேடதாரிகள் இப்போது ஓடி ஒளிந்திருப்பது எங்கே
-----------------------------------
(குறிப்பு: எந்த ஒரு சாதிச்சங்க மாநாட்டையும் நாம் எதிர்க்கவில்லை. ஒவ்வொரு சாதியும் அணி திரள்வதை ஆதரிக்கிறோம். மாறாக, திராவிடக் கட்சிகள் மற்றும் முற்போக்கு வேடதாரிகளின் போலி வேடத்தையே விமர்சிக்கிறோம்).

சனி, டிசம்பர் 26, 2015

பால், பீர் அபிசேகம் ரசிகனின் கலாச்சாரம் மட்டுமல்ல... பத்திரிகையாளனின் கலாச்சாரமும் தான்!

பிடித்த நடிகர்களின் திரைப்படங்கள் வெளியானால் அவர்களுக்கு கட்-அவுட் வைப்பதும், அதற்கு பால் அபிசேகம், பீர் அபிசேகம் ஆகியவற்றை செய்வதும் ரசிகர்களின் கலாச்சாரம்.  இதுபோன்ற செயல்களை கடுமையாக விமர்சித்து எழுதினால் அவர்கள் புரட்சிகர பத்திரிகையாளர்கள் என்று போற்றப்படுவார்கள் என்பதால் இதுபற்றியெல்லாம் கடுமையாக விமர்சித்து எழுதுவார்கள்.

ஆனால், காலம் மாறிவிட்டது. ரசிகர்களின் செயல்களை கடுமையாக விமர்சித்த பத்திரிகையாளர்களில் சிலரே இப்போது நடிக அரசியல்வாதிகளை புகழ்ச்சி என்னும் பீரும், பாராட்டு என்னும் பாலும் கலந்து அபிசேகம் செய்து கொண்டிருக்கிறார்கள் வெட்கமில்லாமல்!

செய்தியா? கற்பனையா?

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜயகாந்த் தான் கிங் மேக்கர் என்றும் அவரது கூட்டணிக்காக மற்ற கட்சிகள் தவம் கிடக்கிறார்கள் என்றும் பாரம்பரியமிக்க ஆங்கில நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது. கேப்டனுக்கு பல வாய்ப்புகள் இருந்தாலும் தி.மு.கவுடன் சேர வேண்டும் என்பது தான் அவரது கட்சியினரின் விருப்பமாக இருக்கிறது என்று அந்த நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

விஜயகாந்த் கட்சியில் யாருக்கு திமுகவுடன் சேர விருப்பம் இருக்கிறது? என்பது தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அதைக் கட்சித் தலைமையிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காமல் இந்த பத்திரிக்கையிடம் வந்து சொன்னார்களா? என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. பல பத்திரிகையாளர்கள் சில அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகளாக மாறி விட்ட நிலையில், அவர்கள் தங்களின் விருப்பங்களை கட்சிகளின் விருப்பங்களாக எழுதுவதாகவே தோன்றுகிறது.

ஒரு பத்திரிக்கை இப்படி எழுதியுள்ள நிலையில், அதற்கு எதிரான இன்னொரு பத்திரிக்கையோ, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைக்க விஜயகாந்த் முடிவு செய்து செய்துவிட்டதாக எழுதுகிறது. கூட்டணி பற்றி விஜயகாந்துடன் பேசுவதற்காக அவரை தலைவர்கள் சென்று சந்தித்தது நிச்சயமாக செய்தி தான். ஒருவேளை யாருடன் கூட்டணி என்பதை முடிவெடுத்து விஜயகாந்த் அறிவித்தால் அது முக்கியமான செய்தி தான்.

ஆனால், விஜயகாந்த் தமது முடிவு என்ன? என்பது குறித்து எதுவுமே சொல்லாத நிலையில் அதைப் பற்றி கற்பனையாக, விஜயகாந்த் தான் தமிழகத்தை காக்க வந்த தடவுள் என்கிற ரீதியில் எழுதுவது ஊடக தர்மமா? என்பதை பத்திரிகைகள் தான் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆலையில்லாத ஊரில் இலுப்பைப் பூ சர்க்கரை

விஜயகாந்துடன் கூட்டணி அமைக்க டிமாண்ட் இருப்பது உண்மை தான். அது ஆலையில்லாத ஊரில் இலுப்பைப் பூ சர்க்கரை என்பது போல, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியாமல் தவிக்கும் சில கட்சிகள், தங்களுடன் கூட்டணி அமைக்க பெரிய கட்சிகள் எதுவும் முன்வராத நிலையில் விஜயகாந்த் கட்சியையாவது சேர்த்துக் கொள்ளலாம் என நினைப்பது தான் இதற்கான முக்கியக் காரணம்.

எப்போதுமே தேவை அதிகரிக்கும் போது அதற்கேற்ற இருப்பு இல்லாவிட்டால் விலை அதிகரிக்கும். அது தான் தமிழகத்தில் இப்போது நடைபெறுகிறது.  தமிழ்நாட்டில் இதுவரை 4 அணிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இது ஐந்தாகக் கூட மாறலாம். இத்தகைய சூழலில் கூட்டணியில் சேரத் தயாராக இருக்கும் கட்சிகள் ஒன்றிரண்டு தான். அவற்றில்  சில கட்சிகள் சில அணிகளில் சேர முடியாது. காரணம் கொள்கைகள் தடுக்கும். ஆனால், எந்தக் கட்சியுடனும் சேரத் தயாராக இருக்கும் கட்சி தே.மு.தி.க. தான். அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க எந்த கட்சிகளுக்கும் கொள்கைத் தடை இருக்காது.

ஒருவேளை தேசியக் கட்சிகளுடன் தான் கூட்டணி என சில கட்சிகள் முடிவு செய்தால் திராவிடக் கட்சிகளுக்கு கிராக்கி கிடைக்காது அல்லது திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி என்று சில கட்சிகள் முடிவு செய்தால் தேசியக்கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்காது. இப்படி எந்த முடிவு எடுத்தாலும் தமது கட்சியுடன் கூட்டணி அமைக்க முன்வர வேண்டும் என்பதற்காகத் தான் தமது கட்சியில் தேசியம், திராவிடம் ஆகிய இரு வார்த்தைகளும் வரும்படி பெயர் வைத்திருக்கிறார் நமது புத்திசாலிக் கேப்டன்.

ஊடக அதர்மம்

ஒருவேளை விஜயகாந்த் சேரும் அணி வெற்றி பெறுவதாக (கடல் வற்றினாலும் இது நடக்காது என்பது வேறு விஷயம்) வைத்துக் கொண்டால் கூட எந்த கொள்கை அடிப்படையில் அந்த கூட்டணி அமைகிறது என்பது பற்றி ஆராய வேண்டியது, அதில் உள்ள சந்தர்ப்பவாதத்தை அம்பலப்படுத்த வேண்டியதும் ஊடகங்களின் கடமை.

 அதையெல்லாம் செய்யாமல், நடிகனைப் புகழ்ந்து அவன் ரசிகன் துண்டு நோட்டீஸ் அச்சிட்டு வெளியிடுவதைப் போல, நடிக அரசியல்வாதியின் அத்தனை பிழைப்பு வாதத்தையும் அவரது பெருமை போல நாளிதழில் அச்சிட்டு வெளியிடுவது தான் ஒரு பத்திரிகையாளனின் பிழைப்பு என்றால், அந்த பத்திரிகையாளனுக்கும், பீர் அபிசேகம் செய்யும் ரசிகனுக்கும் இடையே ஆறு வித்தியாசங்கள் அல்ல... ஒரே ஒரு வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியாது.

வாழ்க... கோமாளிகளுக்கு கொடி பிடிக்கும் இதழியல் தர்மம்!

வெள்ளி, டிசம்பர் 25, 2015

கனிமொழி அவர்களே வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்.. உங்களை எம்.பி. ஆக்கியதே பா.ம.க தான்!

அ.தி.மு.க.வை விட பா.ம.க.வை எதிர்ப்பது தான் தி.மு.க.வின் முதன்மைப் பணியாக மாறியிருக்கிறது.  அந்த வகையில் அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி மிகப்பெரிய உண்மையை கண்டுபிடித்ததாக கருதிக் கொண்டு புளித்துப் போன விஷயத்தை பேசியிருக்கிறார்.
'பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்புமணி இராமதாஸ் அவர்களை மாநிலங்களவை உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் ஆக்கியது தி.மு.க. தானாம்'. அய்யோ பாவம். பா.ம.க.வுக்கு எதிராக முன்வைக்க எந்தக் குற்றச்சாற்றுமே இல்லாததால் மீண்டும்...மீண்டும் இதையே பேசிக் கொண்டிருக்கிறார்கள் தி.மு.க.வினர்.

2011 ஆம் ஆண்டில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என பா.ம.க. பொதுக்குழுவில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுமே இந்த குற்றச்சாற்றை கலைஞர் முன்வைத்தார். அதற்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அப்போதே புள்ளி விவரங்களுடன் பதிலடி கொடுத்தார். ஆனால், பாவம்... அந்த நேரத்தில் அக்கா கனிமொழி 2ஜி ஊழல் வழக்கிலும், கலைஞர் தொலைக்காட்சிக்கு ஊழல் பணத்தை கொண்டு வந்த வழக்கிலும் சிக்கி தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் இந்த விவரம் அவருக்கு தெரியாமல் போயிருந்திருக்கலாம்.
அதன்பிறகு கடந்த மே மாதம் திமுக பொருளாளரும், கனிமொழியின் சகோதருமான மு.க.ஸ்டாலினுக்கு  மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் எழுதினார். அதற்கு பதில் எழுத துப்பில்லாத ஸ்டாலின், தனது துதிபாடிகளில் ஒருவரான தாமரைச்செல்வன் என்ற அடிமை மூலம் பதில் அளித்தார். அதில் இதே குற்றச்சாற்றை அவர் முன்வைத்திருந்தார். அதை மறுத்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ், தாம் எம்.பி. ஆனது எப்படி? என்பது குறித்து ஸ்டாலினுக்கு மீண்டும் கடிதம் எழுதினார். இது பத்திரிகைகளிலும் வெளிவந்தது. அதை படிக்க முடியாத அளவுக்கு அந்த நேரத்தில் கனிமொழி எங்கிருந்தார் என்பது தெரியவில்லை.

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்பது தி.மு.க. கொடுத்த சலுகை அல்ல. 2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் திமுக, பா.ம.க., காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. 1999 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக - பா.ம.க. கூட்டணியில் இருந்த பா.ஜ.க. வெளியேறி அதற்கு பதிலாக காங்கிரசும், இடதுசாரி கட்சிகளும் இணைந்தன. அதனால் ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கு 1999 தேர்தலில் வழங்கப்பட்ட இடங்களை விட ஒரு இடத்தை குறைத்து வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி 1999 தேர்தலில் 5 இடங்களில் போட்டியிட்ட மதிமுகவுக்கு 4 இடங்கள் வழங்கப்பட்டன. 1999 தேர்தலில் 8 இடங்களில் போட்டியிட்ட  பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளை வழங்கியிருக்க வேண்டும். ஆனால்,  6 தொகுதிகள் மட்டுமே இருந்ததால், அத்துடன் ஒரு மாநிலங்களவை  இடம் வழங்கப்படும் என்று ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

அதன்படி தான் அடுத்து வந்த மாநிலங்களவைத் தேர்தலில் மருத்துவர் அன்புமணி இராமதாசுக்கு தி.மு.க. ஆதரவு அளித்தது. அப்போது கூட முழுக்க முழுக்க தி.மு.க. ஆதரவில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெற்றி பெறவில்லை. அந்த நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மொத்தம் 20 சட்டமன்ற உறுப்பினர்கள்  இருந்தனர். கூடுதலாக தேவைப்பட்ட 14 உறுப்பினர்களின் ஆதரவை மட்டும் தான் தி.மு.க. வழங்கியது.

ஆனால், அதன்பிறகு  2007, 2008, 2010 ஆகிய தேர்தல்களில் பா.ம.க.வின் 18 உறுப்பினர்கள் ஆதரவுடன் தான் தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். ஒருமுறை பா.ம.க.வுக்கு தி.மு.க. ஆதரவு கொடுத்ததற்காக 3 முறை திமுகவுக்கு பா.ம.க. ஆதரவு கொடுத்திருக்கிறது. 

இன்னும் கேட்டால் 2007 ஆம் ஆண்டில் கனிமொழி மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதே பா.ம.க.வின் 18 உறுப்பினர்களின் ஆதரவுடன் தான். அக்கா கனிமொழி இதை மறந்து விட்டது ஏன்? எனத் தெரியவில்லை.
அதற்குப் பிறகு 2013 ஆம் ஆண்டு தேர்தலில் கனிமொழியை மீண்டும் எம்.பியாக்குவதற்காக பா.ம.க. உறுப்பினர்களின் ஆதரவை கேட்பதற்காக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் இல்லத்திற்கு வெளியே மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் பல மணி நேரம் காத்துக்கிடந்த வரலாறு கனிமொழிக்கு தெரியாது போலிருக்கிறது.

அதேபோல், 2004 ஆம் ஆண்டில் பா.ம.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைப்படி தான் மருத்துவர் அன்புமணி இராமதாசுக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்பட்டது. அதை தி.மு.க. வாங்கித் தரவில்லை. ஆனால், 2006 ஆம் ஆண்டில் பெரும்பான்மை இல்லாத தி.மு.க. தமிழகத்தில் ஆட்சி அமைக்க நிபந்தனையின்றி ஆதரவளிப்பதாக ஆளுனரிடம் முதன்முதலில் கடிதம் கொடுத்தது பா.ம.க. தான். 

அவ்வகையில் கலைஞரை முதல்வராகவும், ஸ்டாலினை துணை முதல்வராகவும் ஆக்கியது பா.ம.க. தான். அவ்வளவு ஏன்... 2020 ஆம் ஆண்டில் கனிமொழியின் பதவிக்காலம் முடிவடையும் போது மீண்டும் எம்.பியாக்குவதற்காக பா.ம.க.வின் ஆதரவைத் தேடி வரவேண்டிய நிலை ஏற்படலாம்.  எனவே.... அக்கா கனிமொழி கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது!

வியாழன், டிசம்பர் 24, 2015

ம.ந.கூ: காரியக்கார மீனவனும், 4 தூண்டில் புழுக்களும்!

தமிழக அரசியலின் மிகப் பெரிய சக்தியான மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள், தங்களை விட சக்தி வாய்ந்த மிக மிகப்பெரிய சக்தியான நடிகரை அவரது அலுவலகத்துக்கு தேடிச் சென்று சந்தித்து பேசியிருக்கிறார்கள். 
இதனால் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக சந்திக்கச் சென்ற தலைவர்கள் கற்பனைக் குதிரையை கயிற்றைப் பிடிக்காமலேயே ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் செல்வதற்காக கோயம்பேடு அலுவலகத்தின் கதவு திறந்ததை ஏதோ கூட்டணிக் கதவே திறந்து விட்டதாகக் கருதி தாழ்ப்பாள் போடாமலேயே தன்மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாவம்.... தாங்கள் அனைவரும் மீனை பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் மண்புழுக்கள் என்பதை அறியாமலேயே!

மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள 4 கட்சிகளுமே தாங்கள் தான் கொள்கைக் கோமான்கள் என்று கூறிக்கொள்வார்கள். ஆனால், இடதுசாரிக் கட்சிகளின் கொள்கை என்பது எப்படியாவது, யார் காலிலாவது விழுந்தாவது 8 முதல் 10 எம்.எல்.ஏக்களை பெற்று விட வேண்டும் என்பது தான். விடுதலை சிறுத்தைகளுக்கு கொஞ்சம் பணமும், கொஞ்சம் இடமும் வாங்கி விட வேண்டும்  என்பதை விட சிறந்த கொள்கை இருக்க முடியாது.

புரட்சிப் புயலுக்கோ நமக்கு இரு கண்கள் போனாலும் பரவாயில்லை... அடுத்தவர்களுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்பது தான் கொள்கை. சரி... அவை கிடக்கட்டும். அவர்களுக்கு கொள்கை இருப்பதாகவாவது கூறிக் கொள்கிறார்களே.  அப்படிப்பட்ட 4 கட்சிகளும் தஞ்சம் தேடி சென்றிருப்பது யாரைத் தெரியுமா? தனது கட்சியின் கொள்கைகள் என்னவென்று தனக்கே தெரியாது என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விடும் தலைவர் தலைமையிலான கட்சியிடம் தான். தே.மு.தி.க. தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனாலும் இதுவரை அந்த கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்படவில்லை. அந்த அளவுக்கு அந்தக் கட்சி கொள்கைக் குன்று!

காற்றில் பறந்த குப்பை கோபுரத்தில் அமர்ந்ததைப் போல கடந்த தேர்தலில், தி.மு.க. மீது மக்களுக்கு  ஏற்பட்ட அதிருப்தி காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் ஆனவர் விஜயகாந்த். நான்கரை ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் அவர் இதுவரை நான்கரை நாட்கள் கூட சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றதில்லை. அவைக்கு சென்ற நாட்களில் கூட நாக்கைத் துறுத்திக் காட்டியதையும், ‘ஒண்டிக்கு ஒண்டி வாங்கடா’ என்று சவால் விட்டதையும் தவிர வேறு எதையும் செய்ததில்லை.
சரி.... அவைக்கு உள்ளே நடந்ததை விடுங்கள்... வெளியில் அவர் சாதித்தது என்ன? சென்னை விமான நிலையத்தில் மூத்த பத்திரிக்கையாளரை தாக்கியது, தில்லி பத்திரிகையாளர்கள் சந்திப்பில், ‘‘அப்படியே... மைக்கை தூக்கி அடிச்சிடுவேன்’’ என்று மிரட்டியது, வெள்ள பாதிப்பு பற்றி கேட்டபோது, அதுபற்றியெல்லாம் சென்னைக்கு போய் தான் சொல்லுவேன் என்று சென்னை விமான நிலையத்தில் நின்று கொண்டே கூறியது, சிங்கப்பூரில் தமது மகன் நடித்த சகாப்தம் படப்பிடிப்புக்காக சென்று திரும்பியவரிடம் அரசியல் நிலவரம் பற்றி கேட்ட போது, ‘‘நான் ஒரு மாதமாக பத்திரிகைகளே படிக்க வில்லை. தமிழ் தொலைக்காட்சி செய்திகளும் பார்க்கவில்லை’’ என்று பொறுப்பாக பதில் கூறியது, நடிகை மஞ்சுளாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கச் சென்று விட்டு, ‘‘அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த நன்றிகள்’’ என்று உளறியது என எதிர்க்கட்சித் தலைவராக ஆற்றிய பணிகளுக்கு ஏராளமான உதாரணங்களைக் கூறலாம்.

இன்னொரு பக்கம் கொள்கைக்காகவே வாழ்வதாகக் கூறிக்கொள்ளும் இடதுசாரிகள், நேற்று வரை முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பது ஜனநாயக விரோதம் என்று முழங்கி வந்தனர். இன்றோ, மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த இணைந்தால் முதலமைச்சர் வேட்பாளர் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று கோயம்பேடு அலுவலக வளாகத்தில் நின்று ஆசை காட்டியிருக்கின்றனர். அதற்கு முன்பே முதல்வர் வேட்பாளர் உள்ளிட்ட விஜயகாந்தின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவோம் என்று இந்து நாளிதழ் மூலம் தூது விட்டார். அவர்களைப் பொறுத்தவரை அன்புமணி இராமதாசை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தால் அது ஜனநாயக விரோதம்... அதுவே விஜயகாந்த் முதலமைச்சர் வேட்பாளர் என்றால் அது சீன சித்தாந்தத்தை விட சிறந்த கொள்கை. அய்யா இடதுசாரிகளே... உங்கள் கொள்கைக் கோவணம் கிழிந்து தொங்கி நீண்ட நாட்களாகி விட்டதை உணர்ந்து கொள்ளுங்கள்.

தம்மை சந்திக்க வந்த பாரதிய ஜனதா தலைவர்களை ஒரு மணி நேரம் காக்க வைத்த நடிகர், உங்களை வழியனுப்ப வாசல் வரை வந்ததை நினைத்து நீங்கள் புளங்காகிதம் அடையாதீர்கள். அது உங்களுக்கான மரியாதை அல்ல. தனக்கு எவ்வளவு மரியாதை தேவை என வேறு சிலருக்கு தெரிவிப்பதற்கான சிக்னல்.
நடிகர் விஜயகாந்த் வேறு சில இடங்களில் இருந்து வேறு சிலவற்றை எதிர்பார்க்கிறார். அவை கிடைக்க வேண்டுமானால் தனக்கு அதிக கிராக்கி இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும். ஜப்பானில் சாக்கி சான் கூப்பிட்டாக.... அமெரிக்காவில் மைக்கேல் சாக்சன் கூப்பிட்டாக... இங்கிலாந்தில் இருந்து எமி ஜாக்சன் கூப்பிட்டாக... என்கிற ரேஞ்சில் சீன் கேட்டால் நடிகர் எதிர்பார்ப்பது நடக்கும்.

ஒரு பெரிய மீனை பிடிப்பதற்கான தூண்டிலில் குத்தப்பட்டிருக்க புழுக்கள் தான் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள். இந்த சந்திப்புக்கு பிறகு மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் துள்ளிக் குதித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.ஆனால், அது உற்சாகத்தால் அல்ல... தூண்டிலில் குத்தப்பட்டதால் ஏற்பட்ட வலியால் தான்.... என்பது விரைவில் புரியும்!