Pages

வெள்ளி, டிசம்பர் 25, 2015

கனிமொழி அவர்களே வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்.. உங்களை எம்.பி. ஆக்கியதே பா.ம.க தான்!

அ.தி.மு.க.வை விட பா.ம.க.வை எதிர்ப்பது தான் தி.மு.க.வின் முதன்மைப் பணியாக மாறியிருக்கிறது.  அந்த வகையில் அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி மிகப்பெரிய உண்மையை கண்டுபிடித்ததாக கருதிக் கொண்டு புளித்துப் போன விஷயத்தை பேசியிருக்கிறார்.
'பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்புமணி இராமதாஸ் அவர்களை மாநிலங்களவை உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் ஆக்கியது தி.மு.க. தானாம்'. அய்யோ பாவம். பா.ம.க.வுக்கு எதிராக முன்வைக்க எந்தக் குற்றச்சாற்றுமே இல்லாததால் மீண்டும்...மீண்டும் இதையே பேசிக் கொண்டிருக்கிறார்கள் தி.மு.க.வினர்.

2011 ஆம் ஆண்டில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என பா.ம.க. பொதுக்குழுவில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுமே இந்த குற்றச்சாற்றை கலைஞர் முன்வைத்தார். அதற்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அப்போதே புள்ளி விவரங்களுடன் பதிலடி கொடுத்தார். ஆனால், பாவம்... அந்த நேரத்தில் அக்கா கனிமொழி 2ஜி ஊழல் வழக்கிலும், கலைஞர் தொலைக்காட்சிக்கு ஊழல் பணத்தை கொண்டு வந்த வழக்கிலும் சிக்கி தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் இந்த விவரம் அவருக்கு தெரியாமல் போயிருந்திருக்கலாம்.
அதன்பிறகு கடந்த மே மாதம் திமுக பொருளாளரும், கனிமொழியின் சகோதருமான மு.க.ஸ்டாலினுக்கு  மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் எழுதினார். அதற்கு பதில் எழுத துப்பில்லாத ஸ்டாலின், தனது துதிபாடிகளில் ஒருவரான தாமரைச்செல்வன் என்ற அடிமை மூலம் பதில் அளித்தார். அதில் இதே குற்றச்சாற்றை அவர் முன்வைத்திருந்தார். அதை மறுத்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ், தாம் எம்.பி. ஆனது எப்படி? என்பது குறித்து ஸ்டாலினுக்கு மீண்டும் கடிதம் எழுதினார். இது பத்திரிகைகளிலும் வெளிவந்தது. அதை படிக்க முடியாத அளவுக்கு அந்த நேரத்தில் கனிமொழி எங்கிருந்தார் என்பது தெரியவில்லை.

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்பது தி.மு.க. கொடுத்த சலுகை அல்ல. 2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் திமுக, பா.ம.க., காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. 1999 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக - பா.ம.க. கூட்டணியில் இருந்த பா.ஜ.க. வெளியேறி அதற்கு பதிலாக காங்கிரசும், இடதுசாரி கட்சிகளும் இணைந்தன. அதனால் ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கு 1999 தேர்தலில் வழங்கப்பட்ட இடங்களை விட ஒரு இடத்தை குறைத்து வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி 1999 தேர்தலில் 5 இடங்களில் போட்டியிட்ட மதிமுகவுக்கு 4 இடங்கள் வழங்கப்பட்டன. 1999 தேர்தலில் 8 இடங்களில் போட்டியிட்ட  பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளை வழங்கியிருக்க வேண்டும். ஆனால்,  6 தொகுதிகள் மட்டுமே இருந்ததால், அத்துடன் ஒரு மாநிலங்களவை  இடம் வழங்கப்படும் என்று ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

அதன்படி தான் அடுத்து வந்த மாநிலங்களவைத் தேர்தலில் மருத்துவர் அன்புமணி இராமதாசுக்கு தி.மு.க. ஆதரவு அளித்தது. அப்போது கூட முழுக்க முழுக்க தி.மு.க. ஆதரவில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெற்றி பெறவில்லை. அந்த நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மொத்தம் 20 சட்டமன்ற உறுப்பினர்கள்  இருந்தனர். கூடுதலாக தேவைப்பட்ட 14 உறுப்பினர்களின் ஆதரவை மட்டும் தான் தி.மு.க. வழங்கியது.

ஆனால், அதன்பிறகு  2007, 2008, 2010 ஆகிய தேர்தல்களில் பா.ம.க.வின் 18 உறுப்பினர்கள் ஆதரவுடன் தான் தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். ஒருமுறை பா.ம.க.வுக்கு தி.மு.க. ஆதரவு கொடுத்ததற்காக 3 முறை திமுகவுக்கு பா.ம.க. ஆதரவு கொடுத்திருக்கிறது. 

இன்னும் கேட்டால் 2007 ஆம் ஆண்டில் கனிமொழி மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதே பா.ம.க.வின் 18 உறுப்பினர்களின் ஆதரவுடன் தான். அக்கா கனிமொழி இதை மறந்து விட்டது ஏன்? எனத் தெரியவில்லை.
அதற்குப் பிறகு 2013 ஆம் ஆண்டு தேர்தலில் கனிமொழியை மீண்டும் எம்.பியாக்குவதற்காக பா.ம.க. உறுப்பினர்களின் ஆதரவை கேட்பதற்காக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் இல்லத்திற்கு வெளியே மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் பல மணி நேரம் காத்துக்கிடந்த வரலாறு கனிமொழிக்கு தெரியாது போலிருக்கிறது.

அதேபோல், 2004 ஆம் ஆண்டில் பா.ம.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைப்படி தான் மருத்துவர் அன்புமணி இராமதாசுக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்பட்டது. அதை தி.மு.க. வாங்கித் தரவில்லை. ஆனால், 2006 ஆம் ஆண்டில் பெரும்பான்மை இல்லாத தி.மு.க. தமிழகத்தில் ஆட்சி அமைக்க நிபந்தனையின்றி ஆதரவளிப்பதாக ஆளுனரிடம் முதன்முதலில் கடிதம் கொடுத்தது பா.ம.க. தான். 

அவ்வகையில் கலைஞரை முதல்வராகவும், ஸ்டாலினை துணை முதல்வராகவும் ஆக்கியது பா.ம.க. தான். அவ்வளவு ஏன்... 2020 ஆம் ஆண்டில் கனிமொழியின் பதவிக்காலம் முடிவடையும் போது மீண்டும் எம்.பியாக்குவதற்காக பா.ம.க.வின் ஆதரவைத் தேடி வரவேண்டிய நிலை ஏற்படலாம்.  எனவே.... அக்கா கனிமொழி கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது!

கருத்துகள் இல்லை: