Pages

பதிவர் வட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவர் வட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், மே 04, 2015

மு.க. ஸ்டாலினுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம்: தமிழகத்தை சீரழித்து சிதைத்ததில் தி.மு.க.வுக்கு பங்கில்லையா? 

"இராமாயணத்தை கூனி இல்லாமலும், மகாபாரதத்தை சகுனி இல்லாமலும் எப்படி எழுத முடியாதோ அதேபோல் தமிழகத்தின் சீரழிவு வரலாற்றை தி.மு.க. இல்லாமல் எழுத முடியாது "
அன்புள்ள தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு,

வணக்கம்... நலம், நலம் வாழ வாழ்த்துக்கள்!

தமிழகத்தின் இன்றைய நிலை தொடர்பாக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு நீங்கள் எழுதிய கடிதத்தை படித்தேன்... ஆனால், ரசிக்கவோ, சுவைக்கவோ முடியவில்லை.

ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை

ஆட்சிப் பொறுப்பிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு 46 மாதங்கள் வனவாசம் அனுபவித்ததாலேயே உங்களின் தவறுகளையும், ஊழல்களையும் மக்கள் மறந்திருப்பார்கள் என்ற எண்ணத்தில் ஊழல்கள் குறித்தும், நிர்வாகச் சீர்கேடுகள் குறித்தும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நீங்கள் பாடம் நடத்தியிருப்பதைப் பார்க்கும் போது ‘ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை’ என்ற பழமொழி நினைவுக்கு வந்ததை தடுக்க முடியவில்லை.
(கார்ட்டூன் - ராவணன்)
இராமாயணத்தை கூனி இல்லாமலும், மகாபாரதத்தை சகுனி இல்லாமலும் எப்படி எழுத முடியாதோ அதேபோல் தமிழகத்தின் சீரழிவு வரலாற்றை தி.மு.க. இல்லாமல் எழுத முடியாது என்பது தானே உண்மை. அ.தி.மு.க. ஆட்சியில் முக்கியத்துவம் தரப்படும் ஒரே துறை டாஸ்மாக் தான் என்று கூறியிருக்கிறீர்கள்.

உண்மை தான். ஆனால், அதை சொல்லும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா என்று எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா?

மதுவை திணித்தது திமுக

அரசின் செலவுகளை ஈடுகட்டவும், மலிவுவிலை அரிசித் திட்டத்தை செயல்படுத்தவும் மது விற்பனையைத் தொடங்கலாம் என பேரறிஞர் அண்ணாவிடம் அதிகாரிகள் பரிந்துரைத்த போது, மக்களைக் கெடுக்கும் மதுவை அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

அண்ணாவின் வழியில் நடப்பதாக கூறும் நீங்கள் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் அவரைப் பின்பற்றினீர்களா? மது என்றால் என்ன என்பது ஒரு தலைமுறைக்கே தெரியாமல் இருந்த நிலையில், இராஜாஜி, காமராஜர் போன்ற மூத்த தலைவர்களின் அறிவுரையை மதிக்காமல், 1971 ஆம் ஆண்டில் மதுவிலக்கை ரத்து செய்து சாராயத்தை வெள்ளமென ஓடவிட்டவர் உங்கள் தந்தை கலைஞர் தானே?
மதுவிலக்கை நடைமுறைப்படுத்துங்கள் என்று கோரிய போதெல்லாம் ‘நெருப்பு வளையத்தின் நடுவில் வைத்த கற்பூரம் போல தமிழ்நாடு இருக்கிறது” என்று கூறித் தானே நீங்களும், உங்கள் தந்தை கலைஞரும் தமிழக மக்களை ஏமாற்றினீர்கள். இராஜாஜியும், ஓமந்தூராரும், காமராஜரும், உங்கள் வழிகாட்டியான அண்ணாவும் இந்த நெருப்பு வளையத்திற்குள் வைத்து தானே தமிழ்நாடு என்ற கற்பூரத்தைக் காப்பாற்றினர்.

நீங்கள் துணை முதல்வராக இருந்தபோது மதுவிலக்கை நடைமுறைப் படுத்த முடியாது என்று சட்டப்பேரவையில் கூறவில்லையா? 23.12.2008 அன்று மருத்துவர் அய்யா தலைமையிலான குழுவின் வேண்டுகோளை ஏற்று மது விற்பனை நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்த கலைஞர், படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்தாரே... நடைமுறைப்படுத்தினாரா? இப்போது கூட முழு மதுவிலக்கு குறித்து வாக்குறுதி அளிக்க முடியாத உங்களுக்கு மதுவிலக்கு பற்றி பேச என்னத் தகுதி இருக்கிறது?

தொழில் முதலீடுகள் - திமுகவுக்கு தகுதி உண்டா?

முதலீட்டாளர்கள் மாநாடு குறித்தும், தொழில் முதலீடுகள் குறித்தும் பேசியிருக்கிறீர்கள். நல்லது தான். முந்தைய ஆட்சியில் தொழில்துறை அமைச்சர் பொறுப்பை கூடுதலாக கவனித்த நீங்கள், திமுக ஆட்சியில் ரூ.46,091 கோடி மதிப்புள்ள 37 தொழில்திட்டங்களுக்கு ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டிருப்பதாகவும், அதனால் 2,52,569 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினீர்கள். அப்படி கிடைத்ததா? இதுகுறித்து வெள்ளை அறிக்கை கோரியபோது அதை ஏற்க மறுத்த உங்களுக்கு தொழில் முதலீடுகள் பற்றி பேச என்னத் தகுதி இருக்கிறது?

நீங்கள் என்ன செய்தீர்களோ, அதையே தான் அ.தி.மு.க.வும் செய்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ. 46,602.72 கோடி தொழில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் 2.5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறினார்கள். இதில் ஒரு விழுக்காடு கூட முதலீடு செய்யப்படவில்லை. இதன்மூலம் இரு கட்சிகளுமே மக்களை ஏமாற்றுவதில் ‘ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்பதை நிரூபித்திருக்கின்றன.

தமிழகத்திலுள்ள நிறுவனங்கள் இங்குள்ள ஆலைகளை மூடிவிட்டு வெளி மாநிலங்களில் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கின்றன என்பதும் உண்மை தான்.  இது போன்றதொரு மோசமான நிலை தமிழ்நாட்டில் இதுவரை இருந்தது கிடையாது. இதற்குக் காரணமே நீங்கள் தானே.

வரலாறு காணாத மின்வெட்டுதான் திமுகவின் சாதனை

தமிழ்நாட்டில் வரலாறு காணாத மின்வெட்டு ஏற்படுவதற்குக் காரணமே தி.மு.க. ஆட்சி தானே. முந்தைய ஆட்சியில் வடசென்னை, மேட்டூர் ஆகிய இடங்களில் 1800 மெகாவாட் மின்நிலையங்களை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது மின்துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி, அனைத்து மின்திட்டங்களும் 30 மாதங்களில் முடிக்கப்பட்டு 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால், திமுக ஆட்சியின் பதவிக் காலம் முடிந்த பிறகும் அந்த நிலையங்களின் பணிகள் முடிக்கப்படாதது தான் மின்வெட்டுக்குக் காரணம் என்பது உங்கள் மனசாட்சிக்குத் தெரியாதா?
உடன்குடி மின் திட்டத்திற்கு 2007 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டிய உங்கள் அரசு அதன்பின் 4 ஆண்டுகளாக எதுவுமே செய்யாமல் தூங்கிக் கொண்டிருந்தது உண்மையா... இல்லையா? மின்வெட்டைப் போக்க எதுவுமே செய்யாத  உங்களுக்கு மின்வெட்டு, தொழில் முதலீடு ஆகியவை பற்றியெல்லாம் பேச என்ன உரிமை இருக்கிறது?  இன்றைய நிலையில் தமிழகத்தின் மொத்த மின்தேவை 14,500 மெகாவாட் மட்டுமே. கடந்த 49 ஆண்டுகளாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்துவரும் நீங்களும், அ.தி.மு.க.வும் இந்த அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான திட்டங்களைக் கூட செயல்படுத்தவில்லை என்றால் உங்களுக்கு தொலைநோக்குப் பார்வை இல்லை என்று தானே பொருள்?

தி.மு.க. ஊழல்கள்

ஊழல் குறித்தும் உங்கள் கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. விஞ்ஞான முறையில் ஊழல் செய்வதாக சர்க்காரியா கமிஷனால் சான்றளிக்கப்பட்ட தி.மு.க. ஊழல்கள் குறித்து பேசுவதும், கசாப்புக் கடைக்காரன் அகிம்சை பற்றி பேசுவதும் ஒன்று தான். தி.மு.க. ஆட்சியில் ஊழல்கள் நடைபெறவே இல்லையா? உலக அளவில் இந்தியாவுக்கு மிகப்பெரிய அவப்பெயரைத் தேடித் தந்தது 2ஜி ஊழல் தான். இந்தியா ஊழல் நாடு என்ற தோற்றம் ஏற்பட இது தான் காரணம். ரூ.1.76 லட்சம் கோடி மதிப்புள்ள அந்த ஊழலின் காரணகர்த்தா தி.மு.க. தானே? அதுமட்டுமின்றி தமிழகத்தை நீங்கள் ஆண்டபோது துணைவேந்தர்கள் நியமனம் தொடங்கி அனைத்து பணி நியமனங்களுக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டதா... இல்லையா?

வாக்கு விற்பனை - திருமங்கலம் திட்டம்

இலவசங்களை வாரி இறைத்து மக்களை சோம்பேறிகளாக்கும் கலாச்சாரத்தை வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, 2 ஏக்கர் நிலம் ஆகியவற்றுடன் 2006 ஆம் ஆண்டில் நீங்கள் தொடங்கினீர்கள்.
2011 ஆம் ஆண்டில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, ஆடு-மாடு என ஜெயலலிதா விரிவு படுத்தினார். அதேபோல், தேர்தலில் வாக்குகளை விலைக்கு வாங்குவதற்கான ‘திருமங்கலம் திட்டத்தை’ நீங்கள் அறிமுகம் செய்தீர்கள். அவர்கள் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பணத்துடன் மூக்குத்தி, தோடு வழங்கும் அளவுக்கு விரிவுபடுத்தி ‘திருவரங்கம் திட்டத்தை’ உருவாக்கினார்கள். ஆக மொத்தம் மக்களைக் கெடுப்பதில் இரு கட்சிகளும் போட்டிப் போடுகிறீர்கள்.

இயற்கை வளக் கொள்ளை

இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவது குறித்தும் நீலிக்கண்ணீர் வடித்திருக்கிறீர்கள். இந்தக் கொள்ளையை தொடங்கி வைத்தது தி.மு.க. தானே?  டாட்டா டைட்டானியம் ஆலையை  தூத்துக்குடிக்கு கொண்டுவந்து அங்குள்ள இயற்கை வளங்களை கொள்ளையடிக்க முயன்றது தி.மு.க. தானே? முந்தைய ஆட்சியில் சட்டவிரோதமாக தாது மணலை வெட்டி எடுத்ததாக ஒரு தொழிலதிபரை கைது செய்து கொடுமைப்படுத்திய நீங்கள், திடீரென அவருடன் சமாதானம் ஆகி கை குலுக்கியது ஏன்? நீங்கள் அந்த தொழிலதிபருடன் சமாதானம் செய்து கொண்டீர்கள். இப்போது அ.தி.மு.க.வினர் அவருடன் கூட்டணி அமைத்துக் கொண்டு கொள்ளையடிக்கிறார்கள்.

கிரானைட் கொள்ளையில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் நிறுவனத்தின் சட்டவிரோதச் செயல்களையெல்லாம் கண்டும் காணாமலும் இருந்த நீங்கள் இப்போது கிரானைட் கொள்ளைக்கு எதிராக குரல் கொடுக்கிறோம் என்பது நம்பும்படியாகவா இருக்கிறது? 1996 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த தி.மு.க. கிரானைட் வெட்டி எடுக்க சட்டவிரோதமாக அனுமதி அளித்ததாக கூறி ஜெயலலிதா மீது  வழக்குத் தொடர்ந்தது. அதனடிப்படையில்   ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்காமல் விசாரணை நிலையிலேயே அந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்தது ஏன்? கிரானைட் ஊழல் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இடைப்பட்ட காலத்தில் இரு முறை ஆட்சி செய்த தி.மு.க. இக்கொள்ளையை தடுக்க என்ன செய்தது? கிரானைட் நிறுவனங்களுடன் இருகட்சிகளும் மாறிமாறி கூட்டணி வைத்து இமாலய ஊழல் செய்ததெல்லாம் மக்களுக்கு தெரியாததல்ல.

மணல் கொள்ளை

2003 ஆம் ஆண்டில் ஆற்று மணல் விற்பனையில் புதிய முறையை ஜெயலலிதா புகுத்தினார். அதுவே ஊழல்களுக்கும், மணல் கடத்தலுக்கும் வழிவகுத்தது என்பது உண்மை தான். 2006 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த நீங்கள் ஏன் இந்த முறையை ரத்து செய்யவில்லை? பா.ம.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்த வழக்கில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் அதை செயல்படுத்தாமல் உயர்நீதிமன்ற ஆணையை கிடப்பில் போட்டுவிட்டு மணல் கடத்தலை ஆதரிக்க வில்லையா?

அ.தி.மு.க. ஆட்சியில் எந்த தனி நபர் ஒட்டுமொத்த மணல் விற்பனையையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாரோ, அவர் தானே உங்கள் ஆட்சியிலும் மணல் கொள்ளையை தலைமையேற்று நடத்தினார். அரசியல் ரீதியாக எதிர்த்துக் கொள்ளும் அதிமுகவும், நீங்களும் இது போன்ற முறைகேடுகளில் மட்டும் ஒற்றுமையாய் இருப்பது எப்படி?

ஆவின் பால் கலப்பட ஊழலை செய்த வைத்தியநாதன் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர். ஆனால், ஆவின் நிறுவனத்திற்கு 104 லாரிகள் மூலம் பால் கொண்டு செல்வதற்கான ஒப்பந்தத்தை அவருக்கு வழங்கியது தி.மு.க. அரசு தானே? அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகும் அவருக்கு உரிமம் நீடித்தது என்றால் ஊழல் தொடர்பான விஷயங்களில் இரு கட்சிகளும் ஒரே நிலையில் இருப்பதாகத் தானே பொருள்.

தமிழினத் துரோகம்

இனம், மொழி காப்பதே எங்கள் குறிக்கோள் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க. அதற்காக என்ன செய்தது? இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டதை தடுப்பதற்காக 3 மணி நேர உண்ணாவிரத நாடகம் நடத்தியதைத் தவிர வேறு எதையாவது தி.மு.க. செய்ததா?
(முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட போது, திமுகவினர் சென்னையில் ஒட்டிய சுவரொட்டி)

1985 ஆம் ஆண்டு டெசோ அமைப்பின் சார்பில் தமிழகம் முழுக்க பொதுக்கூட்டங்களை நடத்திய கலைஞர், ‘‘இலங்கையில் தமிழீழம் அமைய ஆதரவு அளிப்போம்’’ என்பது உள்ளிட்ட 5 உறுதிமொழிகளை தி.மு.க. தொண்டர்களுக்கு செய்து வைத்தார். அதையெல்லாம் முதலில் கலைஞரும் நீங்களும் பின்பற்றினீர்களா?

ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்த போதிலும் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஏற்பட்ட எழுச்சியை தண்ணீர் ஊற்றி அணைத்த கட்சி தானே தி.மு.க.

தலைவர் பிரபாகரனின் தாயார்

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் உடல் நலம் முற்றிலுமாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெறுவதற்காக சென்னை வந்தபோது, மனசாட்சியே இல்லாமல், விமானத்திலிருந்து கூட இறங்க விடாமல் திருப்பி அனுப்பினீர்களே இது தான் இனத்தைக் காக்கும் செயலா?
(தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்ட போது, சுப. வீரபாண்டியன் ஒட்டிய சுவரொட்டி)

நீங்கள் பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பினீர்கள்... ஜெயலலிதா பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வந்து தூக்கில் போட வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். நீங்கள் இருவருமே தமிழர்களின் எதிரிகள் என்பதற்கு இதைவிட என்ன உதாரணம் வேண்டும்?

காவிரிப் பிரச்சினை

காவிரிப் பிரச்சினையில் 1974 ஆம் ஆண்டில் புதுப்பித்துக் கொள்ளப்படவேண்டிய காவிரி ஒப்பந்தத்தை அப்போதைய மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்து கைவிட்டது தி.மு.க. ஆட்சி தானே; இப்போது ஏற்பட்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அந்த தவறு தானே காரணம். திமுக ஆட்சியில் தானே காவிரி துணை நதிகளின் குறுக்கே ஹாரங்கி, ஹேமாவதி, கபினி உள்ளிட்ட அணைகள் அனுமதியின்றி கட்டப்பட்டன. இவற்றைத் தடுத்து நிறுத்த தி.மு.க. அரசு ஏதேனும் நடவடிக்கைகளை எடுத்ததா?

அதன்பின் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு அதன் இறுதித் தீர்ப்பு 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நிலையில் அத்தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடவும், அதனடிப்படையில்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக நடவடிக்கை எடுக்கத் தவறியது ஏன்? இப்படிப்பட்ட தி.மு.க.வுக்கு மேகதாது அணை பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?

முல்லைப் பெரியாறு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றபோது தவறான அணுகுமுறையை கடைப்பிடித்து தீர்ப்பு கிடைப்பதை தாமதமாக்கிய பெருமையும்  உங்களைத் தானே சாரும்.

கச்சத்தீவு

தமிழகத்திற்கு சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட போது, மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்து, தன் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழகத்திற்கு துரோகம் செய்தவர் தி.மு.க தலைவர் கலைஞர் தானே? தமிழக மீனவர்கள் இப்போது அனுபவித்துவரும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அந்த துரோகம் தானே காரணம்? பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு 20-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளை கட்டியபோது அதை தடுக்காமல் வேடிக்கைப் பார்த்தது உங்களின் தி.மு.க. அரசும், அ.தி.மு.க. அரசும் தானே?

மீத்தேன் திட்டம்

தமிழ்நாட்டில் மீத்தேன் திட்டம் வருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதே நீங்கள் தான்.  ஆனால், ஆட்சி மாறிய பின் அத்திட்டத்திற்கு எதிராக நீங்களே போராட்டம் நடத்துவது எந்த வகையில் நியாயம்.
(ஸ்டாலின் முன்னிலையில் மீத்தேன் திட்டம் கையொப்பம்)

கல்வி

1967 ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பாகவே தாய்மொழி வழிக் கல்வியை  அறிமுகம் செய்யப்போவதாக தி.மு.க. கூறியது. ஆனால், அதன்பின் 50 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இன்று வரை அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்றீர்கள்... இப்போது எங்கு தமிழ் இருக்கிறது.  இந்தியாவிலேயே தாய்மொழியாம் தமிழை படிக்காமல் பட்டம் பெற்றுவிடலாம் என்ற அவல நிலை தமிழகத்தில் மட்டுமே நிலவுகிறது.

அதைவிடக் கொடுமை முந்தைய தி.மு.க. ஆட்சியில் தான் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விமுறை தொடங்கப்பட்டது. அதை இப்போது அதிமுக அரசு தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தியிருக்கிறது. பத்தாம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால், அதை நிறைவேற்றுவதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக குறைந்த எண்ணிக்கையில் செயல்பட்டு வந்த சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில வழிப்பள்ளிகளை மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்திக் கட்டணக் கொள்ளைக்கு வழிவகுத்தது திமுக தானே?

சீக்காளி சென்னை

நிர்வாக சீர்கேடுகள் குறித்தும் வளர்ச்சிப் பணிகள் தடைபட்டிருப்பது குறித்தும் கவலைத் தெரிவித்திருக்கிறீர்கள்.  சற்றே பின்னோக்கிச் சென்று உங்களின் நிர்வாகம் எப்படி இருந்தது என்பதையும் பாருங்கள். 1996 ஆம் ஆண்டில் சென்னை மாநகர மேயராக பொறுப்பேற்றீர்கள். அப்போது  சென்னையை சிங்காரச் சென்னையாக்குவது தான் நோக்கம் என்றீர்கள். அதை நிறைவேற்றினீர்களா?  மேயராக 5 ஆண்டுகள் இருந்ததுடன், உள்ளாட்சித்துறை அமைச்சராக 5 ஆண்டுகள் சென்னையை நிர்வாகம் செய்துவந்திருக்கிறீர்கள்.

இந்த காலத்தில் சென்னை சிங்காரச் சென்னையாக மாறவில்லை. சீக்காளி சென்னையாகவே மாறியிருக்கிறது.  சென்னையில் எங்கு பார்த்தாலும் குப்பைகள், சாக்கடைக் கழிவுகள், கூவம் நாற்றம், காற்று மாசு, குடிநீர் பிரச்சினை, கொசுத்தொல்லை, போக்குவரத்து நெரிசல் ஆகியவை தான் நிரம்பியுள்ளன. கூவம் ஆற்றை தூய்மைப்படுத்துவதாகக் கூறி ரூ.1400 கோடியில் திட்டம் செயல்படுத்தினீர்களே.... இப்போது கூவம் மணக்கவா செய்கிறது... இப்போது நாற்றம் தானே வீசுகிறது. நீங்களும், அதிமுகவும் கூவத்தை தூய்மைப்படுத்துவதற்கான திட்டங்களைத் தீட்டி உங்கள் பைகளை நிரப்பிக் கொண்டதைத் தவிர வேறு உருப்படியாக வேறு எதையாவது செய்ததுண்டா?

தி.மு.க., அ.தி.மு.க - ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்

தமிழகம் இதுவரை கண்ட ஆட்சிகளில் இப்போதைய அ.தி.மு.க. ஆட்சியை விட மிக மிக மோசமான ஆட்சியைப் பார்க்க முடியாது. இன்றைய நிலையில் தமிழகத்தில் வளர்ச்சிப் பணிகளோ அல்லது மக்கள் நலப்பணிகளோ நடைபெறவில்லை. கோவில்களில் பூஜை செய்தல், தீச்சட்டி ஏந்துதல், காவடி எடுத்தல் போன்ற பணிகள் மட்டுமே நடக்கின்றன.
எங்கும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. நிர்வாக எந்திரம் செயலிழந்து விட்டது. தமிழகத்தின் இன்றைய அவலநிலைக்கு தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே காரணம். ஊழலையும், முறைகேடுகளையும் தி.மு.க. தொடங்கி வைத்தது. அதை அ.தி.மு.க. பிரம்மாண்டமாக்கியிருக்கிறது. இந்த குற்றத்திலிருந்து இரு கட்சிகளுமே தப்பிக்க முடியாது.

நீங்கள் விஞ்ஞானப்பூர்வமாக செய்த ஊழலை நீதிபதி சர்க்காரியா ஆணையம் அம்பலப்படுத்தியது. அதன்பின் 1991&96 ஆட்சியில் செய்த ஊழலுக்காகத் தான் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறையும்,  ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தை சீரழித்ததில் அதிமுகவும், திமுகவும் தனித்தனி கட்சிகள் அல்ல... அவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் தான்.

ஒளிமயமான தமிழ் நாடு: பாமக சாதித்துக் காட்டும்

இன்றைய நிலையில் தமிழகம் மிகுந்த நோய்வாய்ப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில்(ICU)  கவலைக்கிடமாக கிடத்தப்பட்டிருக்கிறது என்று நீங்கள் கவலை தெரிவித்திருக்கிறீர்கள். இனி அந்தக் கவலை உங்களுக்குத் தேவையில்லை. அவசர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடும் நோயாளியைக் கூட காப்பாற்றும் சக்தி மருத்துவர்களுக்கு உண்டு. அந்த வகையில் மக்கள் விருப்பப்படி பா.ம.க. ஆட்சிக்கு வந்தபின்னர் கவலைக்கிடமாக உள்ள தமிழகத்தை மருத்துவராகிய நான் குணப்படுத்தி நல்ல நிலைக்கு கொண்டு வருவேன்.

நன்றி!

தங்கள் அன்புள்ள

மருத்துவர் அன்புமணி இராமதாஸ்

வெள்ளி, டிசம்பர் 06, 2013

பெண் பத்திரிகையாளர்கள் மீது மனுஷ்யபுத்திரன் அபாண்டம்: பாலியல் தொல்லையை சகிப்பது குறுக்குவழியில் முன்னேறும் தந்திரமா?

 
'நடிகையின் ரகசிய வாழ்க்கை - அந்தரங்கம் அம்பலம்!' என்கிற தலைப்புடன் வெளியாகியுள்ள ஒரு வாரம்இருமுறை பத்திரிகையில் பெண் பத்திரிகையாளர்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக மனுஷ்யபுத்திரன் கட்டுரை எழுதியுள்ளார்.

தெகல்கா ஆசிரியரின் பாலியல் வன்கொடுமைக்கு மறைமுக ஆதரவாக எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரையில் ஒரு சில பெண் பத்திரிகையாளர்கள் மீது அபாண்டமாக கூறப்பட்டுள்ளது.

"ஊடகங்களுக்குள் பெண்கள்...தங்களுடைய வேலையைத் தக்க வைத்துக்கொள்வதற்காக...தங்கள் மேல் இழைக்கப்பட்ட வன்முறைகளை சகித்துக்கொண்டு மௌனமாக இருந்துவிடுகின்றனர். ஒரு சில பெண்கள் குறுக்கு வழியில் முன்னேறிச் செல்வதற்கு தங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தவும் செய்கிறார்கள்" - என்று மனுஷ்யபுத்திரன் கூறியுள்ளார்.
  • இவரும் ஒரு பத்திரிகையாளர் என்பதால், அவருக்கு தெரிந்த உண்மையைத்தான் அவர் எழுதியுள்ளார் என்று நாம் எடுத்துக்கொள்ளலாமா? ஒவ்வொரு தொலைக்காட்சியாக 'தலையை ஆட்டி ஆட்டி பேசும்' இவருக்கு சில உண்மைகள் தெரிந்திருக்குமா?
  • பெண் பத்திரிகையாளர்கள் மீது அபாண்டமாக குற்றம்சாட்டும் இந்தக் கருத்தை பத்திரிகையாளர்கள் வேடிக்கைப் பார்ப்பது ஏன்? மௌனம் சம்மதத்துக்கு அடையாளமா?
எனினும், மனுஷ்யபுத்திரன் வாதத்தை நாம் நம்ப முடியாது, நம்பவும் கூடாது. பத்திரிகைகளின் பணியாற்றும் பெண்கள் அநீதியை எதிர்ப்பதில் முன்னணியில் நிற்கிறார்கள். அலுவலகத்தில் பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டால், அதனை அவர்கள் பகிரங்கமாக எதிர்த்து போராடுவார்கள். மாறாக, அதையே ஒரு சாக்காக பயன்படுத்தி முன்னேற்றமடைய ஒருபோதும் நினைக்க மாட்டார்கள். அப்படி யாரும் இங்கு இல்லை,.

புதன், அக்டோபர் 16, 2013

இறை நம்பிக்கையை இழிவுபடுத்தலாமா? மனுஷ்யபுத்திரனின் மதவெறிக் கொடூரம்!

மனுஷ்யபுத்திரன் என்கிற சாதிவெறியர் நடத்தும் பத்திரிகை உயிர்மை. அந்த பத்திரிகையின் 'உயிரோசை' இணைய பக்கத்தில் மிக மோசமான மதவெறிபிடித்த வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

"ஆணுறுப்பின் நூதன அமைப்பு - உயிர்மை புரட்சி!"

உயிர்மை - 'உயிரோசை' இணைய தளத்தில் "நீண்ட ஆணுறுப்பின் நூதன அமைப்பு மற்றும் கற்பின் வரலாறு" (இங்கே காண்க) என்கிற ஒரு ஆபாசக் கட்டுரை வெளியாகியுள்ளது. 'கள்ளக்காதலால் துணைவியின் பெண்குறிக்குள் சென்ற அந்நிய ஆணின் விந்துவை வெளியேற்றும் வகையில் மனித ஆணுறுப்பானது வடிவமைக்கப்பட்டுள்ளது' என்கிற மிகப்பெரிய கண்டுபிடிப்பு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், முன்தோல் நீக்கிய உறுப்பு, அதாவது சுன்னத் செய்யப்பட்ட ஆணுறுப்பு 'நீண்ட நேரம் அதிக விசையூக்கத்துடன்' உடலுறவில் ஈடுபட ஏற்றதாகவும், 'திறனுறுதி மிக்கது' என்றும் கூறப்பட்டுள்ளது.

- இப்படியாக சுன்னத் செய்யப்பட்ட ஆணுறுப்பு மேலானது என்று பேசப்படும் தகவலில் எந்த குற்றமும் காண முடியாது. அதற்கு ஆதாரங்கள் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம், அல்லது அப்படி ஒரு நம்பிக்கையை யாரேனும் கொண்டிருந்தால் அதில் தவறேதும் இல்லை.

(உண்மையில் அறிவியல் ரீதியில் பார்த்தோமானால், சுன்னத் செய்யப்பட்ட ஆணுறுப்பானது ஓரளவுக்கு எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றினைத் தடுக்கும் என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் எய்ட்ஸ் கட்டுப்பாட்டிற்கு சுன்னத் செய்வதும் ஒரு தீர்வாக ஐநா எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு முன்வைக்கிறது: Male circumcision programmes as part of HIV prevention)

எனவே, ஆணுறுப்பின் வடிவமைப்பு கள்ளக்காதலை சமாளிப்பதற்கா? அல்லது முன்தோல் நீக்கிய ஆணுறுப்பு மேலானதா? - என்றெல்லாம் மனுஷ்யபுத்திரனின் உயிர்மை எழுப்பும் அதி முக்கியமான விவாதத்தில் நாம் குறை காணவில்லை.

மனுஷ்ய புத்திரனின் மதவெறி

இந்தக் கட்டுரையில் ஒரு இடத்தில் மிக விஷமமான கருத்தை உயிர்மை கூறியுள்ளது.

"சுன்னத்தைக் கொண்டாடுகிறேன் என்று ராமசேனையினர் விசனிக்க வேண்டாம். முன்தோலை விடுங்கள், உங்களுக்குத்தான் வால் உள்ளதே!" என்கிறது உயிர்மை!

ராமசேனை என்பது ராமனின் படை என்பதாகும். ராமாயணத்தில் உள்ள இந்த படையில் அனுமனின் படை எனப்படும் குரங்கு படையினர் மிகுதியாக இருந்ததால் அது வானர சேனை என்றும் கூறப்பட்டது. (ராமசேனை என்கிற பெயரில் கர்நாடக மாநிலத்தில் சிலர் காதலர் தின எதிர்ப்பு போராட்டங்களை நடத்தினர்).

மனுஷ்யபுத்திரனின் உயிர்மைக் கட்டுரையானது, ஆண்குறி, சுன்னத் என்றெல்லாம் எழுதிவிட்டு - ராமசேனையினரை 'உங்களுக்குத்தான் வால் உள்ளதே' என்று கூறுவதன் மூலம் - ராமசேனையினர் ஆண்குறிக்கு பதிலாக வாலைப் பயன்படுத்தலாம் என்று இந்தக் கட்டுரைக் கூறுகிறது.
தாய்லாந்து பாங்காக் அரண்மனையில் உள்ள இராமசேனை ஓவியம்
இந்துக்களின் வழிபாட்டு தெய்வமாக உள்ள அனுமன், அதாவது ராமாயணத்தில் வரும் ராமசேனையின் தலைவன், ஒரு குரங்குதான். இப்படி இந்துக்களின் நம்பிக்கையாக உள்ள அனுமனையும் இந்துக்கள் வழிபடும் குரங்கையும் மிகக் கேவலமாக இழிவுபடுத்தி மனுஷ்யபுத்திரனின் உயிர்மை எழுதுவது நியாயம்தானா?

இந்துக்களின் இறைநம்பிக்கையுடன் தொடர்புடைய ஒரு இதிகாச சம்பவத்தைக் குறிப்பிட்டு, 'உங்களுக்கு ஆணுறுப்புக்கு பதில் வால் இருக்கிறது' என்று கூறுவது மதநம்பிக்கையை இழிவுபடுத்துவது ஆகாதா? 

சில சாதியினர் மீது, சில மதத்தினர் மீது மனுஷ்யபுத்திரனுக்கும் உயிர்மை கும்பலுக்கும் அடக்கமுடியாத காழ்ப்புணர்ச்சி இருக்கலாம். ஆனால், அதனை இப்படி கேவலமான முறையில் வெளிப்படுத்தக் கூடாது.

மனுஷ்யபுத்திரனின் மதவெறியைக் கண்டிக்கிறேன்!
கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள இராமசேனை சிலை
(குறிப்பு: மனுஷ்யபுத்திரன் சாதிவெறியர் என்று நாம் குறிப்பிடக் காரணம் இவரது மதப்பற்றாலோ சாதிப்பற்றாலோ அல்ல. மாறாக பிற்படுத்தப்பட்ட சாதிகளை வெறிபிடித்து எதிர்க்கும் சாதிவெறியர் இவர் என்பதால்! மனுஷ்யபுத்திரனை எந்த மதமும் தன்னுடன் சேர்க்கவே இல்லை. இந்துக்களை வெறிபிடித்து எதிர்க்கும் மதவெறியர் இவர் என்பதால் இவரை மதவெறியர் என்கிறோம்!)

மேலே உள்ள மனுஷ்யபுத்திரன் ஓவியம் அவரது முகநூல் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.

வியாழன், செப்டம்பர் 12, 2013

பதிவர்களுக்கு எதிராக பத்திரிகையாளர்கள்: ஆனந்த விகடனுக்கு ஒரு நீதி, கிஷோர்சாமிக்கு வேறொரு நீதியா?

கருத்துரிமைக்கு எதிரான கருத்துரிமைப் போராளிகள் சங்கம்!

முகநூலிலும் வலைப்பூவிலும் இன்னபிற சமூக ஊடகங்களிலும் எழுதும் சாதாரண மனிதர்களுக்கு எதிராக தமிழ்நாட்டின் பத்திரிகையாளர்கள் அணிதிரளும் கொடுமை நடக்கிறதோ என்கிற அய்யம் எழுகிறது. கருத்துரிமைக்காக குரல் கொடுக்க வேண்டிய பத்திரிகையாளர்களே கருத்துரிமைக்கு எதிராக அணி திரள்வது என்னவிதமான நியாயம் என்று தெரியவில்லை.

இப்போது எழுந்துள்ள சர்ச்சை 'கிஷோர் கே சாமி' எனும் முகநூல் பதிவரை தலைவனாக்கியுள்ளது. அவர் ஏதோ ஒரு நடிகையையும் ஒரு அமைச்சரையும் தொடர்புபடுத்தி எழுதினாராம். (இங்கே காண்க: அமைச்சர் நீக்கத்துக்கும் நடிகைக்கும் என்ன சம்மந்தம்...?) அதனையும் வேறு ஏதோதோ தனிமனித விமர்சனங்களையும் காரணம் காட்டி பத்திரிகையாளர்கள் காவல்துறையினரிடம் புகார் கொடுத்தார்களாம்.
கருத்துரிமைக்கு எதிரான கருத்துரிமைப் போராளிகள் சங்கம்!
எந்த ஒரு பெண்ணையும் கொச்சைப்படுத்தி எழுதுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆனால், இதில் வலைப்பூ எழுத்தாளர்களுக்கு ஒரு நீதியும் பெரும் பத்திரிகைகளுக்கு வேறொரு நீதியும் இருப்பதை ஏற்க முடியாது. 

அஞ்சலிக்கு கல்யாணம்! ஆனந்த விகடனின் கருத்துரிமை!

"அஞ்சலிக்கு கல்யாணம்! அதிர்ச்சியில் கோடம்பாக்கம்" என்றொரு கவர் ஸ்டோரியை ஆனந்த விகடன் வெளியிட்டது. "நடிகை அஞ்சலி தமிழக அரசியல் அதிரடிப் புள்ளியின் மருமகனை இரண்டாந்தாரமாக திருமணம் முடித்து அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்....அதிரடிப் புள்ளி இந்தியா அறிந்த அரசியல் பிரபலம். அவரின் மகன் சினிமா தயாரிப்பிலும் இருக்கிறார். மகனின் சினிமா தயாரிப்புக்கு உதவியாக இருக்க அனுப்பப்பட்டவர்தான் அவரின் மருமகன்" என்று எழுதியது ஆனந்த விகடன்.

அதற்கான பின்னூட்டத்தில் ஒரு வாசகர் "என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?" என்று எழுதினார். (இங்கே காண்க:அஞ்சலிக்கு கல்யாணம்!)
(ஆனந்த விகடனின் இந்த செய்தியை நடிகை அஞ்சலி மறுத்துள்ளார். இங்கே காண்க: ரகசிய திருமணம் நடந்ததா? நடிகை அஞ்சலி விளக்கம்)

'ஒரு அமைச்சருக்கும் ஒரு நடிகைக்கும் தொடர்பு இருந்ததாக' கிஷோர் சாமி எழுதியது மாபெரும் அவதூறு என்றால், 'ஒரு முன்னாள் அமைச்சரின் மருமகனுடன் நடிகை அஞ்சலி ஓடிவிட்டார், இரண்டாம் தாரமாக/சின்ன வீடாக செட்டில் ஆகிவிட்டார்' என்று எழுதுவதை எந்த விதத்தில் சேர்ப்பது?

சிறிய விளம்பரம் தவறு - பெரிய விளம்பரம் சரியா?

வெறும் 6880 பேர் படிக்கும் வலைப்பூ பக்கத்தில், அதுவும் அவரது நண்பர்களுக்காக மட்டுமே கிஷோர் கே சாமி எழுதுகிறார். 'ஒரு அமைச்சருக்கும் ஒரு நடிகைக்கும் தொடர்பு இருந்ததாக' அவர் தெருத்தெருவாக போஸ்டர் அடித்து ஒட்டவில்லை. தெருவில் போகிற வருகிறவர்களிடம் எல்லாம் இதனைக் கூறவில்லை. அவருடைய 6880 நண்பர்களிடம் மட்டுமே தனிப்பட்ட முறையில் கூறியுள்ளார். (அதுவும் அவர்கள் எல்லோரும் தாமாக விரும்பி அவருடைய பக்கத்தில் இணைந்தவர்கள்தான். எனவே, பொதுவெளியில் கிஷோர் கே சாமி அவதூறாக பேசினார் என்று கூற வழியில்லை)

ஆனால், ஆனந்த விகடனோ பல லட்சக்கணக்கான பிரதிகள் விற்கும் பத்திரிகை. கோடிக்கணக்கானோர் படிக்கும் பத்திரிகையில் 'அமைச்சரின் மருமகனுடன் நடிகை அஞ்சலி சின்ன வீடாக செட்டில் ஆகிவிட்டார்' என்று எழுதியுள்ளது. இதனை பல ஆயிரம் சுவரொட்டிகள் மூலம் விளம்பரப்படுத்தியது. ஜூனியர் விகடனில் ஒரு பக்கம் விளம்பரம் வெளியிட்டது.

இப்படி கோடிக்கணக்கான மக்களிடன் 'நடிகை அஞ்சலியைக் கொச்சைப்படுத்தி விளம்பரம் செய்யப்பட்டதை எதிர்த்துப் பேச துப்பில்லாத கூட்டம்' - இப்போது கிஷோர் சாமிக்கு எதிராக கொடிபிடிப்பது ஏன்?

"மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்." - (மத்தேயு 7:3- 5) புனித பைபிள்.

பதிவர்களுக்கு எதிராக பத்திரிகையாளர்கள் அணிதிரண்டது குறித்த தொலைக்காட்சி செய்தி:
பதிவர்களுக்கு எதிராக பத்திரிகையாளர்கள் அணிதிரண்டது குறித்த ஒரு பதிவு: கிஷோர் கே ஸ்வாமி vs பத்திரிக்கைகள்

தொடர்புடைய சுட்டிகள்:

அம்பலமாகிப் போன கவின்மலரின் அண்டப்புளுகு: தற்கொலைக் கடிதம் இளவரசன் எழுதியதுதான்.

இனவெறிப் போக்கை கைவிடுமா இந்தியா டுடே: கவின்மலரின் வன்னியர் எதிர்ப்பு சாதிவெறி!

இந்தியா டுடேவின் பெண் உடல் வியாபாரமும் கவின்மலரின் இரட்டை வேடமும்: பல துணைகள், உறவுச்சுமை இல்லாத செக்ஸ் புரட்சி!

கௌரவக்கொலை தடுப்புச்சட்டமும் இளவரசனும்: மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப்போடும் பித்தலாட்டக் கூட்டம்!


விகடன் கும்பலின் கொலைவெறி: படுகொலையானது பத்திரிகை தர்மம்!

வியாழன், செப்டம்பர் 05, 2013

மனுஷ்யபுத்திரன் கோரிக்கை: அமைச்சர் வைகைச்செல்வன் நீக்கம்!

செய்தி 1: 'நூல்களைப் பாதுகாக்க ஒரு கொள்கை உருவாக்கப்பட வேண்டும்' என மனுஷ்யபுத்திரன் வேண்டிக் கொண்டார். 'அதன்படி, அரசு விரைவில் புத்தகக் கொள்கை வெளியிட உள்ளது' என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன்.

இங்கே காண்க: தமிழக அரசு விரைவில் புத்தகக் கொள்கை வெளியிடும் - தினமணி செய்தி
மனுஷ்யபுத்திரனின் முகநூல் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட படம்
மனுஷ்யபுத்திரனின் முகநூல் தகவல்: "நேற்று புத்தகத் திருவிழாவின் முதல் தினம். அதிமுக அமைச்சர் வைகைச்செல்வன் தன் பேச்சில் பலமுறை மனுஷ்யபுத்திரன் மனுஷ்யபுத்திரன் சொன்னாற்போல் மனுஷ்யபுத்திரன் எழுதினாற்போல் என்றெல்லாம் குறிப்பிட்டது இன்னொரு சுவை".

செய்தி 2: தமிழகத்தின் பள்ளி கல்விக்கு பொறுப்பான அமைச்சர் வைகைச்செல்வன் இன்று அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இங்கே காண்க: ஆசிரியர் தினத்தில் பள்ளிக் கல்வி அமைச்சர் நீக்கம் - பிபிசி செய்தி

(இன்று இந்தியாவில் ஆசிரியர் தினம் என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல பணி செய்த ஆசிரியர்கள் அரசாங்கத்தால் இன்று கௌரவிக்கப்படுவது வழக்கம்) 

"சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா"

புதன், ஜூலை 24, 2013

ஆடிட்டர் ரமேசும் தர்மபுரி இளவரசனும்: அன்று வன்னியர்கள், இன்று ரியல் எஸ்டேட் - கோயபல்சின் மறுவடிவமாகும் புர்ஜியாளர்கள்

சேலத்தில் நேர்ந்த ஆடிட்டர் ரமேஷ் மரணம், தர்மபுரியில் நிகழ்ந்த இளவரசன் மரணம் - இந்த இரண்டு மரணங்களுமே வருத்தப்பட வேண்டிய உயிரிழப்புகள். இரண்டு இழப்புகளும் தவிர்த்திருக்கப்பட வேண்டியவை.

இதுபோன்ற சோக நிகழ்வுகள் நடக்கும்போது அரசும், ஊடகங்களும், அரசியல் அறிவுஜீவிகளும் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் நடக்க வேண்டியது அவசியம். உண்மை என்ன என்று கண்டறிந்து அதனை மக்களுக்கு அறிவிப்பதும், அந்த உண்மைக்கு ஏற்ப உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம்.

ஆடிட்டர் ரமேஷ் கொலைக்கு பயங்கரவாதமோ, மதவெறியோ காரணமாக இருக்குமா? இருக்காதா? என்கிற விவாதம் இப்போதைக்கு தேவையில்லாதது. காவல்துறை விசாரணையில் உண்மை வெளிவரும் வரைக் காத்திருப்பதுதான் நியாயம். (எப்போதோ 2011 ஆம் ஆண்டின் குற்றத்தில் தொடர்புடையவர்களை இப்போது பார்த்து "சதிகாரர்கள் மூன்று பேர் பற்றி துப்புக் கொடுத்தால் பரிசு" என இந்த நேரத்தில் காவல்துறை அறித்துள்ளதும் தேவையில்லாதது.)

மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட உடனேயே, 'காந்தியை சுட்டது ஒரு இந்து' என்று பகிரங்கமாக அறிவித்தார் ஜவகர்லால் நேரு. அன்றைய தினத்தில் அந்த ஒரு உண்மை மறைக்கப்பட்டிருந்தால், இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான மிகப்பெரிய கலவரம் வெடித்திருக்கும். அந்த பேராபத்து ஓர் உண்மை அறிவிப்பால் தடுக்கப்பட்டது.
ஆனால், இன்றைய தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள இழப்புகளை, தமிழ்நாட்டின் முற்போக்கு வேடதாரிகள் எப்படி வர்ணிக்கின்றனர் என்பதை பார்க்கும்போது வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. 

இளவரசன் பாமகவால் கொல்லப்பட்டார்!

தர்மபுரியில் இளவரசன் தற்கொலை செய்துகொண்டார் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட ஆதாரங்களின் மூலம் இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால், அந்த தற்கொலை நேர்ந்த தருணத்தில் முற்போக்கு வேடதாரிகள் என்ன சொன்னார்கள் என்பதை பாருங்கள்:

மனுஷ்ய புத்திரன் (முகநூலில்): "ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு முதலான அனைத்து சாதிவெறியர்களையும் வன்கொடுமைக் கொலையைத் தூண்டியதற்காகவும், அதற்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுத்ததற்காகவும் கைது செய்ய வேண்டும்!" "இளவரசனின் படுகொலைக்கு நியாயம் வேண்டி மாணவர் சமூகம் போராட வேண்டும். அல்லாவிட்டால் (பிரபாகரன் மகன்) பாலசந்திரனின் மரணத்தை ஒட்டி நீங்கள் நடத்திய போராட்டங்கள் அர்த்தமற்று போகும்."
கவின்மலர் (இந்தியா டுடேவில்): இளவரசனை கடைசியாக எம்.பி.சி பையன் (வன்னியர்) ஒருத்தன் கூட்டீட்டு போனான். இளவரசன் மரணத்தில் பாமகவின் பங்கு உள்ளது.

புதுவை சுகுமாரன் (முகநூலில்): பாமகவின் சாதி வெறி அரசியலுக்கு பலியாகியுள்ளது ஒரு அழகிய, மென்மையான காதல்.

- இதே போன்று, தமிழருவி மணியன், ஞானி, ஆளூர் ஷாநவாஸ், பாலாஜி சக்திவேல், கவிஞர் அருள்மொழி, சுப. வீரபாண்டியன் என்று ஒரு மிகப்பெரிய கூட்டம் நேரடியாகவோ மறைமுகமாகவோ இளவரசன் கொலை செய்யப்பட்டார் எனவும் அதற்கு பாமக தான் காரணம் எனவும் நீட்டி முழக்கினர்.

அதாவது, காவல்துறையினர் உண்மை என்ன என்று விசாரித்து கண்டறிவதற்கு முன்பாகவே - இளவரசன் படுகொலைதான் செய்யப்பட்டார். இதனைச் செய்தவர்கள் மருத்துவர் இராமதாசு அவர்களும் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களும்தான் என்று 'இவர்களே நீதிபதிகளாக மாறி' தீர்ப்பினை வாசித்தார்கள்.

ரமேஷ் ரியல் எஸ்டேட்டால் கொல்லப்பட்டிருக்கலாம்!

இப்போது பாரதீய ஜனதா கட்சியின் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைக்கு 'என்ன காரணம், யார் காரணம்' என எந்த ஒரு துப்பினையும் காவல்துறை இதுவரை கண்டறிந்ததாகத் தெரியவில்லை. அதுகுறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

ஆனால், அதற்குள் தாமாகவே முந்திக்கொண்டு தீர்ப்பினை வாசிக்க முன்வந்துள்ளனர் முற்போக்கு வேடதாரிகள். இவர்களின் அதீத ஆர்வத்தினை கீழே காண்க:

மனுஷ்ய புத்திரன் முகநூலில்): பா.ஜ.க பிரமுகர் படுகொலையை மதவாத வன்முறையாக சித்தரிக்க சில ஊடகங்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன. இது நல்லதல்ல. இதன் மூலம் இந்து-முஸ்லீம் இரண்டு தரப்பிலும் உள்ள அடிப்படைவாத சக்திகள் மிகுந்த ஊக்கமடையும். சாதிய வன்முறையைவிட கொடூரமானது மத வாத வன்முறை.
கவின்மலர் முகநூலில்): கொள்கைக்காக நடந்ததோ அல்லது தனிப்பட்ட காரணங்களால் நடந்ததோ அல்லது வேறு உள் முரண்பாடுகளால் நடந்ததோ... படுகொலைகள் வெறுக்கத்தக்கவை. ஆபத்தானவை. கண்டிக்கத்தக்கவை. ஆனால், நடந்துமுடிந்தவுடன், காரணங்களை ஆராயாமல், உரிய ஆதாரங்கள் ஏதுமில்லாமல், முஸ்லிம்கள் மீது வெறுப்பை வளர்ப்பதற்கு இவற்றை பயன்படுத்த முனையும் இந்துத்துவ அமைப்புகளின் அவசரம் துணுக்குற வைக்கிறது. எச்சரிக்கையைக் கோருகிறது.

புதுவை சுகுமாரன் (முகநூலில்): அரசியல் கட்சித் தலைவர்கள் அரசியலைத் தாண்டி ரியல் எஸ்டேட் என பல வேலைகளில் ஈடுபடுவது இதுபோன்ற கொலைகளுக்குக் காரணம்.

- ஆக, இது தனிப்பட்ட காரணத்துக்கான கொலையாக இருக்கலாம் என்பதுதான் இவர்களின் புதிய தீர்ப்பு. இந்தக்கொலையை மதத்தோடு தொடர்புபடுத்தக் கூடாது என தாமாக முன்வந்து "அப்பன் குதிருக்குள் இல்லை" என்கின்றனர். அதிலும் ஒருபடி மேலே போய் ரியல் எஸ்டேட் கொலையாக இருக்கலாம் என எடுத்துக் கொடுக்கின்றனர்.

முற்போக்கு வேடதாரிகளின் உண்மை நோக்கம் என்ன?

'ஒரு தற்கொலை, ஒரு படுகொலை' இந்த இரண்டுமே ஒரே காலகட்டத்தில் நடந்துள்ள, தமிழ்நாட்டின் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள நிகழ்வுகள். இந்த இரண்டு நிகழ்வுகளை இருவேறு கோணத்தில் முற்போக்கு வேடதாரிகள் பார்ப்பதும், கட்டுக்கதையைக் கட்டுவதும் ஏன்?

தர்மபுரி தற்கொலையை 'அவசரம் அவசரமாக' படுகொலையாக மாற்றிய இந்த கோயபல்சு கூட்டம், சேலம் படுகொலைக்கு பயங்கரவாதம் காரணமல்ல என்று அவசரப்பட்டு கூறுவது ஏன்? ஆடிட்டர் ரமேஷ் கொலையில் அவசரப்பட்டு மதத்தை தொடர்புபடுத்த வேண்டாம் என பொங்கியெழும் முற்போக்கு புர்ஜியாளர்கள் கூட்டம் - இளவரசன் தற்கொலையில் மட்டும் அவசரப்பட்டு பாமகவை இழுத்து விட்டு குளிர்காய்ந்தது ஏன்?

தமிழ்நாட்டில் மத அடிப்படையிலான மோதல் ஏற்படக்கூடாது. ஆனால், சாதி ரீதியாக பிரிந்து எல்லோரும் அடித்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் புர்ஜியாளர்கள் கூட்டத்தின் உள்ளார்ந்த விருப்பமா? அதிலும் குறிப்பாக, இந்து மதத்திற்குள் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் அடித்துக்கொண்டு சாகட்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களா?

இதன் மூலம், வன்னியர்களை எப்பாடுபட்டாவது தனிமைப்படுத்தி, பொது எதிரிகளாக்கி அடக்கி ஒடுக்க வேண்டும் என்பதுதான் உங்களுடைய பேராசையா?

சாதிக் கலவரத்தை தூண்டுவதுதான் உங்கள் மதவாத நோக்கமா?

மனுஷ்ய புத்திரன், ஆளூர் ஷாநவாஸ், கவின் மலர் போன்ற வேறொரு மதம் சார்ந்த கூட்டத்தினரும், லயோலா கல்லூரி போன்ற வேறொரு மதம் சார்ந்த அமைப்புகளும் - இந்து மதத்தின் சாதிப்பிரச்சினையை ஊதிப்பெரிதாக்குவதன் பின்னால் உள்ள சதித்திட்டம் என்ன?

இந்து மதத்திற்குள் இருப்பவர்கள் சாதியால் அடித்துக் கொண்டு சாகட்டும் என்றுதான் மாற்று மதத்தை சேர்ந்த கூட்டத்தினர் சதித்திட்டம் தீட்டி 'தர்மபுரியையும் மரக்காணத்தையும்' ஊதிப் பெரிதாக்குகின்றீர்களா? சாதியால் பிரிந்து அடித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே சாதிக்கலவரங்களை திட்டமிட்டு தூண்டுகிறீர்களா?
'சாதி, மொழி என்கிற வேறுபாடுகளை அந்நியசக்திகள்தான் தூண்டிவிடுகின்றன' என்கிற இந்துத்வ கருத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், 'தர்மபுரியிலும் மரக்காணத்திலும்' ஆட்டம்போடும் முற்போக்கு வேடதாரிகளை மதம் சார்ந்த அமைப்புகள் பின்னால் இருந்து தூண்டிவிடுவதை பார்க்கும்போது சந்தேகம் வருகிறது. இவர்களிடம் இனியாவது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிற உள்ளுணர்வை தருகிறது.

மதவெறி, சாதிவெறியில் ஊறித் திளைத்திருக்கும் முற்போக்கு வேடதாரி ஓநாய்க் கூட்டமே - உங்களது இரத்த வெறிக்கு எங்களது மக்களை பலியாக்காதீர்.

வியாழன், மே 16, 2013

பேஸ்புக்கும் கலப்புத் திருமணமும்: மானங்கெட்ட சாதிவெறியர்களுக்கு ஒரு பதில்!


"பாட்டு ரசிகன்" எனும் வலைப்பூவில் "மானங்கெட்ட ஜாதிவெறியர்கள் கவனத்திற்கு! பேஸ்புக்கில் நடந்த உண்மை சம்பவம்..!" என்று ஒரு பதிவு பின்வருமாறு கூறுகிறது:

"ஜாதி மறுப்புத் திருமணம் வேண்டாம்; காதல் திருமணம் கூடாது என்று முகநூலில் கருத்துக்களை வெளியிடும் அன்பர்களுக்கு சில செய்திகள் பகிர விரும்புகிறோம். பேஸ்புக் உரிமையாளரும் அதை உருவாக்கியவருமான மார்க் எல்லேய்ட் ஜுக்கர்பெர்க், வியட்னாம் நாட்டிலிருந்து...அகதியாக அமெரிக்கா வந்து குடியேறிய பிரிஸ்கில்லா சான் என்ற 18 வயது பெண்ணை காதலித்து மணந்தவர்" - என்று கூறுகிறது.

பின்னர் "அவர் உருவாக்கிய முகநூலில் ஜாதிவெறி, மதவெறியைப் பரப்பி இத்தம்பதிகளை இழிவுபடுத்த வேண்டாம் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த வேற்று நாடு, இனம், மதம், மொழியைச் சார்ந்த பெண்ணைத் திருமணம் செய்யும் 29 வயதே ஆன மார்க் எங்கே? நாங்கள் ஆண்ட பரம்பரை, அந்தப் பரம்பரை, ஆதிக்க ஜாதி, மேல் ஜாதி என்று கொலைவெறியில் திரியும் இவர்கள் எங்கே?" என்று பேசுகிறது.

இந்தப் பதிவு யாரைக் குற்றம் சாட்டுகிறது என்பது எல்லோரும் புரிந்துகொள்ளக் கூடியதுதான். எனவே, இந்த கோயபல்ஸ் பிரச்சாரகருக்கு எனது பதில்.

மார்க் ஜுக்கர்பெர்க்கின் திருமணம் காதல் நாடகம் அல்ல - அது பதின்வயது திருமணமும் அல்ல.

மேலே, "நான் உங்க வீட்டு பிள்ளை" எனும் வலைப்பூவில் குறிப்பிட்டுள்ளது போன்று மணமகளின் வயது 18 அல்ல. மார்க் ஜுக்கர்பெர்க் திருமணம் செய்யும் போது அவரது வயது 28, அவரது காதலி பிரிஸ்கில்லா சானின் வயது 27.  (இருபத்தேழு வயது மணப்பெண்ணை, 18 வயது என்று குறிப்பிடும் கேடுகெட்ட நிலை இந்தப் பதிவருக்கு ஏன் வந்தது?)


இதுபோன்ற - 21 வயதுக்கு மேற்பட்ட காதல் திருமணங்களை இவர்கள் குறிப்பிடும் அமைப்புகள் எதிர்க்கவில்லை. மருத்துவர் இராமதாசு அவர்கள் தலைமையிலான அனைத்து சமுதாயப் பேரியக்கத்தின் தீர்மானத்திலேயே இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மை இவ்வாறிருக்கும் போது - ஏதோ சாதிவெறியில் கலப்புத்திருமணங்களை எதிர்க்கிறார்கள் என்று மற்றவர்களை இட்டுக்கட்டிப்பேசும் இந்த உண்மையான சாதி வெறியர்களை என்ன சொல்வது? 

இந்தக் கூட்டத்திற்கு துணிச்சல் இருந்தால் - கலப்புத்திருமணங்களை உண்மையாகவே எதிர்க்கும் மதவாதிகளைக் கேள்வி கேட்டுப்பார்க்கட்டும்.

சனி, நவம்பர் 17, 2012

தருமபுரி கலவரம்: சட்டவிரோத குழந்தைத் திருமணத்திற்கு இத்தனை பேர் வக்காலத்தா?

தருமபுரி கலவரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் எரிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. மனித உரிமைகளுக்கு எதிரானது. அதே போன்று, அந்தக் கலவரத்திற்கு காரணமாகக் கூறப்படும் "காதல் திருமணமும்" கண்டிக்கத்தக்கது. மனித உரிமைகளுக்கு எதிரானது. ஏனெனில், நடந்திருப்பது ஒரு சட்ட விரோத குழந்தைத் திருமணம்.

"பறையர் வகுப்பைச் சேர்ந்த 23 வயது இளவரசனுக்கும் வன்னியர் சாதியைச் சேர்ந்த 20 வயது திவ்யாவுக்கும் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த காதல் திருமணம்தான் இந்த சாதி வன்முறைக்கான உடனடிக் காரணம்" என்று கூறுகிறது "தர்மபுரி 2012:கீழவெண்மணியை விட மோசமான வன்செயல்" எனும் ஆனந்த் டெல்டும்ப்டே கட்டுரை. இதனை தமிழில் எஸ்.வி.ராஜதுரை மொழிபெயர்த்துள்ளார்.

இக்கட்டுரையில் மணமகன் "23 வயது இளவரசன்" என்று கூறப்பட்டுள்ளது தவறானத் தகவலாகும். இளவரசனின் உண்மை வயது 19 தான். இது சட்டப்படி திருமணம் செய்ய முடியாத வயதாகும்.

இந்த சம்பவம் குறித்த பல கட்டுரைகள் வன்னியர்களைத் தாருமாறாகத் தாக்குகின்றன. "தருமபுரி: தலித் மக்களை சூறையாடிய வன்னிய சாதிவெறி!" என்கிறது வினவு. "தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்" என்கிறார் வே.மதிமாறன் "பாமகவின் சாதிவெறியும் புரட்சிகரக் குழுக்களின் பிழைப்பு வாதமும்" என்கிறார் வன்னி அரசு.  "தருமபுரி சாதியக் கலவரம்: தமிழர்கள் தலைகுனிய வேண்டும்" என்கிறார் இக்பால் செல்வன். "காதல் என்ற மாயை சாதி கலவரமாக மாறியது ஏன்?" என்கிறார் சுவனப் பிரியன். 

இப்படியாக இணையத்தில் வரும் பல பதிவுகள் வன்னியர்களை மிக மோசமாகத் தாக்குகின்றன. இந்த நிகழ்வைக் கண்டித்து சுப. வீரபாண்டியன் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். மே 17 இயக்கம் வன்னியர்களைத் தாக்கி சுவரொட்டி வெளியிட்டுள்ளது. (வன்னியர்கள் மீதான நியாயமான மற்றும் நியாயமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து: தருமபுரி கலவரம்: கட்டுக்கதைகளும் உண்மையும்!).

இப்போதைக்கு தருமபுரி குழந்தைத் திருமணத்திற்கு எல்லா மேதாவிகளும் வக்காலத்து வாங்குவது குறித்து பார்ப்போம்.

குழந்தைத் திருமணம் சட்ட விரோதமானது

குழந்தை வயதினரின் மூளையும் மனதும் முழு வளர்ச்சி அடைந்திருக்காது என்பதால் அவர்களுக்கு வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் உரிமைக் கிடையாது.குழந்தைகள் திருமணத்தைத் தடுத்து திருமண வயதைத் தள்ளிப்போடுவதால் ஏராளமான பயன்கள் கிடைக்கும் என்பது அறிவியல் ரீதியிலான உண்மை. குறிப்பாக உடல் நலம், மனித வள மேம்பாடு, குழந்தை வளர்ப்பு, வறுமை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு என பல நிலைகளிலும் இது நாட்டு முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

எனவே, இந்திய நாட்டில் குழந்தைத் திருமணம் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டின் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் 21 வயது முடிவடையாத ஆண்களும் 18 வயது முடிவடையாத பெண்களும் குழந்தைகள் என்று கருதப்படுகிறார்கள்.


Section 2 (a): "child" means a person who, if a male, has not completed twenty-one years of age, and if a female, has not completed eighteen years of age

இந்த வயதுக்கு கீழ் நடைபெறும் திருமணங்கள் தடுக்கப்பட வேண்டும். நடைபெற்றாலும் மணமக்கள் பிரிக்கப்பட வேண்டும். அதுமட்டுமில்லாமல் இந்த திருமணத்தை நடத்துபவர்கள், துணை நிற்பவர்கள் என அனைவருக்கும் இரண்டு வருடம் சிறைத்தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் தண்டமும் விதிக்கப்பட வேண்டும் என்பது சட்டமாகும்.

தருமபுரியில் நடந்தது குழந்தைத் திருமணம்.

இந்நிலையில், தமிழ்நாட்டின் அனைத்து தலைவர்களும், மனித உரிமை அமைப்புகளும் வக்காலத்து வாங்கும் திருமணம் ஒரு குழந்தைத் திருமணம் ஆகும். இது குறித்து பார்ப்போம்:

திருமணம் செய்து கொண்ட மணமகன் இளவரசன் 19 வயது நிரம்பியவர். அவரது பிரந்த தேதி 3.3.1993. ஆகவே, 2006 ஆம் ஆண்டின் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டபூர்வ திருமண வயதான 21 வயதினை அவர் இன்னமும் எட்டவில்லை.

இளவரசன் இன்னமும் 21 வயதை எட்டவில்லை. 
அவரது வயது 19 மட்டுமே என்பதற்கான ஆதாரம்  இதோ:

இளவரசனின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் - பிறந்த தேதி: 3.3.1993 (வயது 19)

ஆக, இந்திய குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் குழந்தைத் திருமணமாக வரையறுக்கப்பட்டுள்ள ஒரு சட்டவிரோத திருமணத்திற்காகத்தான் எல்லோரும் வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

குழந்தைத் திருமணம் பிரிக்கப்பட வேண்டும் என்பது சட்டத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் - இதனை எல்லோரும் ஆதரிப்பது ஏன் என்று தெரியவில்லை?

சட்டவிரோத குழந்தைத் திருமணத்திற்கு துணை போனவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்ற குழந்தைத் திருமணங்கள் இனியும் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும்.

தொடர்புடைய சுட்டி: தருமபுரி கலவரம்: கட்டுக்கதைகளும் உண்மையும்!

ஞாயிறு, அக்டோபர் 14, 2012

இஸ்லாம் மதத்தைத் திட்டியவர்கள் எங்கே போனார்கள்?


தலிபான்களுக்கு எதிராக வலைதளத்தில் எழுதிய மலலா யூசப்சாய் சுடப்பட்டது உலகெங்கும் பேரதிர்ச்சியை எழுப்பியது. இந்த தருணத்திற்காகவே காத்திருந்தது போல சிலர் "இது இஸ்லாமிய தீவிரவாதம்" என சாயம் பூசினர். ஏதோ "உலகின் எல்லா இஸ்லாமியர்களும் துப்பாக்கிச் சூட்டினை ஆதரிப்பார்கள்" என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றனர்.

"முகம்மதுவின் படத்துக்காக ஒன்றுக் கூடிய பாகிஸ்தானிய கும்பல்கள், தாலிபானின் மனித விரோத செயல்களைக் கண்டிக்க ஒன்றுக் கூடுமா என்பதை பொறுத்திருந்துப் பார்ப்போம்" என்று ஒருவர் தனது வலைப்பூவில் எழுதினார். (இங்கே காண்க: இளம்பெண் வலைப்பதிவர் சுடப்பட்டமைக்குக் கடும் கண்டனங்கள்)
ஆனால், இப்போது உலகின் எல்லா இஸ்லாமியர்களும் துப்பாக்கிச் சூட்டினை எதிர்த்து நிற்கிறார்கள். குறிப்பாக பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் மலலா யூசப்சாய்க்கு ஆதரவான பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. உண்மையில் அமெரிக்க படத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களை விட மலலாவுக்கு ஆதரவாக மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடந்துவருகின்றன.

அதுகுறித்து தி இந்து செய்தியை இங்கே காண்க:

Malala wave sweeps Pakistan

I-am-Malala

இஸ்லாமிய உலகம் "நாங்கள் ஒவ்வொருவரும் மலலா தான்" என்று ஓங்கி ஒலிக்கிறது.

எதற்கெடுத்தாலும் இஸ்லாம் மதத்தை திட்டுபவர்கள் -இந்த முற்போக்கான பக்கத்தை மட்டும் கண்டுகொள்ளாமல் போவது ஏன்?

தொடர்புடைய சுட்டிகள்:



இளம்பெண் வலைப்பதிவர் சுடப்பட்டமைக்கு இஸ்லாம் காரணமா?

மது, மதம், சாதி: மிகத் தீமையானது எது?

புதன், அக்டோபர் 10, 2012

இளம்பெண் வலைப்பதிவர் சுடப்பட்டமைக்கு இஸ்லாம் காரணமா? 


தான் சொந்தமாக நடத்தி வரும் வலைப்பதிவில் தனது எழுத்துப் படைப்புக்கள் மூலம் பெண் சிறுமிகளின் பள்ளிப்படிப்பை தலிபான்கள் தடுத்து நிறுத்திவருவதை வெளி உலகுக்கு கொண்டுவந்த மலலா யூசப்சாய் தலிபான்கள் என நம்பப்படுவோரால் சுடப்பட்டுள்ளார். (மலலா யூசப்சாயின் கட்டுரைகள்: Diary of a Pakistani schoolgirl)
மலலா யூசப்சாய் 
செவ்வாய்க்கிழமை (9.10.2012) பாகிஸ்தான் ஸ்வாட் வெலி பிரதேசத்தில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது அவர் மீது இத்துப்பாக்கிச்சூட்டு தாக்குதலை நடத்தினர். படுகாயமடைந்த மாலலா தற்போது சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றார்.

இதுகுறித்த ஒரு பதிவு "முகம்மதுவின் படத்துக்காக ஒன்றுக் கூடிய பாகிஸ்தானிய கும்பல்கள், தாலிபானின் மனித விரோத செயல்களைக் கண்டிக்க ஒன்றுக் கூடுமா என்பதை பொறுத்திருந்துப் பார்ப்போம்" என்று கூறுகிறது. (இங்கே காண்க: இளம்பெண் வலைப்பதிவர் சுடப்பட்டமைக்குக் கடும் கண்டனங்கள்)

இஸ்லாம் - தலிபான்: யாரருடையக் குற்றம்? 

இந்த துப்பாக்கிச்சூடு நிகழ்வுக்காக இஸ்லாமிய மதம் தூற்றப்படும் வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக இந்தியாவிலும், அமெரிக்காவிலும் தலிபான்களின் செயல் இசுலாமியர்களின் செயலாக வர்ணிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், இஸ்லாம் மதத்தைக் காப்பதற்காக தலிபான்கள் இந்த துப்பாக்கிச்சூட்டினை நடத்தியதாகக் கூறப்படும் அதேநேரத்தில் - இஸ்லாமிய நாடான பாகிஸ்தான் அரசுதான் மலலா யூசப்சாய்க்கு அமைத்திக்கான தேசிய விருதினை அளித்துள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.
காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச்சூடு நிகழ்வுக்காக பாகிஸ்தான் அதிபரும், இராணுவ தளபதியும் மற்ற தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். (Attack on Malala Yousafzai widely condemned)

பாகிஸ்தானின் பெஷாவர், முல்தான், மிங்கோரா எனப் பலநகரங்களில் எதிர்ப்பு ஊர்வலங்கள் நடைபெற்றுள்ளன.  ஸ்வாட் வெலி பள்ளத்தாக்கில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் எல்லா பள்ளிகளிலும் மலலா யூசப்சாய் குணமடைய வேண்டும் என்று வழிபாடுகள் நடந்து வருகின்றன. (Malala Yousafzai: Pakistan bullet surgery 'successful')
பாகிஸ்தானின் செய்தி ஊடகங்கள் இந்த நிகழ்வைக் கடுமையாக கண்டித்துள்ளன. (Pakistan media condemn attack on Malala Yousafzai)

எனவே, இந்த நிகழ்வுக்காக இஸ்லாமிய மதத்தை யாரேனும் குற்றம் சொல்வார்களேயானால் - அது மிகப்பிழையான கருத்தாகவே இருக்கும்.

மதமும் மனிதனும்

மதம் என்று பார்க்கும் போது - உலகின் எல்லா மதங்களையும் ஏதோ ஒரு காரணத்திற்காக குற்றம் சாட்ட முடியும். அதே நேரத்தில் மிகப் பெரும்பான்மையான மனிதர்களுக்கு மதம் தேவையான ஒன்றாகவும் இருக்கிறது.

ஒருபக்கம் மதம் தேவைதான், மறுபக்கம் அதனால் தொந்தரவும் இருக்கிறது என்று கருதுவோமானால் - அவர்வர் பின்பற்றும் மதத்தின் கேடுகளை அந்தந்த மதத்தினர் எதிர்க்க முற்படுவதுதான் ஒரே வாய்ப்பு.

மதத்தின் பேரால் மேற்கொள்ளப்படும் கொடூரங்களை எல்லோரும் கண்டிக்க வேண்டும். அதாவது கொடூரங்களை கண்டிக்க வேண்டும், மதத்தை அல்ல.

தொடர்புடைய சுட்டி:

செவ்வாய், செப்டம்பர் 11, 2012

வினவும் விமரிசனமும் - பதிவுலகில் எதிரொலிக்கும் ஒரு 'நீதிமன்ற' அதிசயம்! 


உயிரழப்பைத் தடுக்க அமெரிக்கா எதிர்ப்பு, ஆஸ்திரேலிய ஆதரவு!

அமெரிக்கா-ஆஸ்திரேலியா இந்த இரண்டு நாடுகளின் நீதிமன்றங்கள் ஒன்றுகொன்று எதிரான தீர்ப்புகளை அளித்துள்ளன. இதுகுறித்து தமிழ் பதிவுலகில் இன்று (11.09.2012) எழுதப்பட்டுள்ளது. அமெரிக்கா-ஆஸ்திரேலியா இரண்டும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் வாழும் நாடு. ஆனாலும், அமெரிக்காவை விட பல விடயங்களில் ஆஸ்திரேலியா முற்போக்காகவே இருந்து வருகிறது.

புகையிலைப் பொருட்கள் மீது எதற்காக எச்சரிக்கைப் படங்கள்?

புகையிலைப் பொருட்களால் ஏற்படும் பேரிழப்புகளைத் தடுக்க, அவற்றின் மீது எச்சரிக்கைப் படங்களை அச்சிடுவது மிகச்சிறந்த பயனளிக்கும் என்பது அறிவியல் பூர்வமாக மெய்ப்பிக்கப்பட்டதாகும். அது குறித்து இங்கே காணலாம்: TOBACCO WARNING LABELS: EVIDENCE OF EFFECTIVENESS

புகையிலைப் பொருட்கள் மீது எதற்காக எச்சரிக்கைப் படங்கள் வெளியிடப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை இங்கே காணலாம்:

உலகெங்கும் இதுவரை வெளியிடப்பட்ட எச்சரிக்கப்படங்கள் குறித்த அறிக்கை:

ஆஸ்திரேலியாவில் புதிய புரட்சி: PLAIN PACKAGING

புகையிலைப் பொருட்கள் மீது எச்சரிக்கைப் படங்கள்  வெளியிடுவதில் ஒரு மிகப்பெரிய முற்போக்குப் பாய்ச்சலாக - எந்தவிதமான லோகோ அல்லது வடிவமைப்பு விளம்பரங்கள் எதுவும் இல்லாமல், எல்லா சிகரெட் பாக்கெட்டுகளும் ஒரே மாதிரியாக, வெறுமனே எச்சரிக்கைப் படத்துடன் இருக்க வேண்டும் என்கிற புரட்சிகரமான உத்தரவை பிறப்பித்துள்ளது ஆஸ்திரேலிய அரசு. Tobacco plain packaging and new health warnings

இதற்கு எதிராக சிகரெட் நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்த போது அரசுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது ஆஸ்திரேலிய நீதிமன்றம்.

இதுகுறித்து ஒரு பதிவு தமிழ்ப் பதிவுலகில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. (விமரிசனம் – காவிரிமைந்தன்)

டாக்டர் அன்புமணி மீண்டும் மத்திய அமைச்சர் ஆனால்தான் இது நடக்குமா ?

அமெரிக்காவின் பிற்போக்குத்தனம்.

ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடும் போது, மிகச்சாதாரணமான வடிவத்தில் ஒரு எச்சரிக்கை விளம்பரத்தை வெளியிட ஆணையிட்டது அமெரிக்க அரசு. அதனை எதிர்த்து சிகரெட் நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்த போது அரசுக்கு எதிராக தீர்ப்பளித்தது அமெரிக்க நீதிமன்றம்.

இதுகுறித்தும் ஒரு பதிவு தமிழ்ப் பதிவுலகில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. (வினவு)

‘இனி பயப்படாமல் தம் அடிக்கலாம்’ – அமெரிக்க நீதிமன்றம்!

ஒரே நாளில், புகையிலைக் குறித்த இரண்டு முற்போக்கான பதிவுகள் தமிழ் பதிவுலகில் வெளியாவது ஒரு மிகச்சிறந்த வரவேற்கத்தக்க மாற்றம் தான். இப்பதிவுகளை எழுதிய "வினவு" "விமரிசனம் – காவிரிமைந்தன்" ஆகியோருக்கு நன்றி.

திங்கள், ஆகஸ்ட் 27, 2012

மது, மதம், சாதி: மிகத் தீமையானது எது?

தமிழ் பதிவுலகின் மதுபான விவாதம் குறித்து கருத்து சொன்னவர்கள் ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதால்  "மதுபானம் தீமை என்றால் மதம் மட்டும் தீமையில்லையா?" என்று கேட்கப்பட்டது. இதுகுறித்து நான் "குடியால் அழியுமா பதிவுலகம்?" என்று எழுதியபோது என்னை 'சாதிவெறியன்' என்று சொல்லி சிலர் "ஜாதி மதத்தை விடக்கொடியது" என்றார்கள். ஆக மது, மதம், சாதி என்கிற மூன்றும் இணைத்து பேசப்பட்டுள்ளதால் இவை மூன்றிலும் மிகவும் தீமையானது எது என்கிற கேள்வி எழுகிறது.

மது, மதம், சாதி இவை மூன்றையும் ஒன்றாக இணைக்கும் புள்ளி என்று ஏதாவது ஒன்று இருக்குமானால் அது 'அடையாளம்' ஒன்று மட்டும்தான். இவர் இந்த சாதி, இவர் இந்த மதம், இவர் ஒரு குடிகாரர் - என்கிற ஏதோ ஒரு அடையாத்தை இவை ஏற்படுத்துகின்றன. சிலருக்கு இந்த மூன்று அடையாளங்களும் ஒன்றாக அமையலாம்.

ஆனாலும், இத்தகைய ஒரு அடையாளம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதும் அந்த அடையாளத்தை தவிர்க்க முடியுமா என்பதும் அடிப்படையில் மாறுபட்டதாகும்.

1. சாதி அடையாளம் 

சாதி என்கிற அடையாளத்தை ஒருவர் உருவாக்குவதும் இல்லை. அவர் அதை நீக்க முடிவதும் இல்லை. அது நம்முடையக் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகும். பிறக்கும் போது சாதியுடனே இந்தியாவில் குழந்தைகள் பிறக்கின்றன. இறந்து சுடுகாட்டில் அடக்கம் நடக்கும் வரை சாதி இந்தியர்களை விட்டு அகலுவதில்லை. அகற்ற முடிவதும் இல்லை. எனவே, சாதி தேர்ந்தெடுக்கும் உரிமைக்கு அப்பாற்பட்டதாகும். (மதமாற்றம் ஒரு சில நிகழ்வுகளில், ஒரே தலைமுறையில் சாதியை அகற்றுகிறதா? என்பது விவாதத்திற்கு உரியது. ஒப்பீட்டளவில் இஸ்லாம் சாதி ஏற்றத்தாழ்வை களைந்துள்ளது)

2. மத அடையாளம் 

மதம் என்கிற அடையாளம் பெரும்பாலும் பிறக்கும்போதே வருகிறது. ஆனாலும், பிறந்த மதத்தை விட்டு வெளியேறி வேறு மதத்திற்கு செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த வாய்ப்பு ஒப்பீட்டளவில் இரண்டு மதங்களில் இல்லை. இஸ்லாம் எவரையும் வெளியேற அனுமதிப்பது இல்லை என்று நான் எங்கோ படித்ததாக ஞாபகம். இந்துமதம் வெளியிலிருந்து எவரையும் தனது மதத்தில் சேர்த்துக்கொள்வது இல்லை (எந்த சாதியில் சேர்ப்பது என்கிற குழப்பமே இதற்கு காரணமாகும்).  எனவே, மதத்தினை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு.

("இஸ்லாம் தன்னில் இருந்து மக்களை வெளியேற அனுமதிக்கவில்லை என்பது இஸ்லாமிய அடிப்படையில் சரியான புரிதல் கிடையாது" என்று இஸ்லாமிய சகோதரர்கள் கூறியுள்ளனர். விளக்கத்திற்கு நன்றி. இஸ்லாமிய நண்பர்கள் சுட்டிக்காட்டியதைப் போன்று, திருக்குர்ஆன் அத்யாயம் 2 அல் பகறாவில் "தீனில் (இறைநெறியை மேற்கொள்வதில்) யாதொரு கட்டாயமோ - நிர்பந்தமோ இல்லை" என்று கூறப்பட்டுள்ளது. (2:256) "There shall be no compulsion in [acceptance of] the religion.")

3. குடிகாரர் அடையாளம் 

குடிகாரர் என்கிற அடையாளம் முற்றிலும் வேறுபட்ட ஒரு அடையாளம் ஆகும். இது பிறப்பினால் வருவது இல்லை. தேர்ந்தெடுப்பதன் மூலம் மட்டுமே வருகிறது. வந்தபின் இந்த அடையாளம் போவது இல்லை. எனவே, குடிகாரன் என்கிற அடையாளத்தை தேர்வு செய்ய முடியும், கைவிடுவது மிக மிகக் கடினம்.

சட்டமும் அடையாளங்களும்

அடையாளங்களில் மாறுபாடு இருப்பது போலவே, சட்டத்தின் பார்வையிலும் இந்த அடையாளங்கள் மாறுகின்றன.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி மதமற்றவர்கள் என்று எவருமே கிடையாது. எவரெல்லாம் - இஸ்லாமியர், கிறித்தவர், பார்சி, சீக்கியர் இல்லையோ, அவர்கள் எல்லாம் இந்துக்கள். எனவே, இந்தியாவில் எவரேனும் ஒருவர் தனக்கு மதம் இல்லை என்று சொன்னால் - அவர் சட்டப்படி இந்து மதத்தைச் சேர்ந்தவர்.

மற்றபடி - இந்தியாவில் ஒவ்வொருவரும் எந்த ஒரு மதத்தையும் பின்பற்ற, பரப்ப உரிமை உண்டு. அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி மதம் ஒரு அடிப்படை உரிமை ஆகும்.

சாதியைப் பொருத்த வரை ஒருவர் தன்னை சாதி இல்லாதவன் என்று கூறிக்கொள்ளலாம். ஆனாலும், இதற்கென்று தனிப்பிரிவு இல்லை. கல்வி, வேலை வாய்ப்புகளில் இவர்கள் பொதுப்பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அதாவது இடஒதுக்கீட்டு சட்டங்களின் முன்பாக பார்ப்பனரும் சாதி அற்றவரும் ஒன்றுதான்.

அதே நேரத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடும் சிறப்பு முன்னேற்றத் திட்டங்களும் செயல்படுத்தப்பட வேண்டும் என்பது அரசியல் சட்டப்பிரிவுகள் 15 (4), 16 (4), 340 ஆகியவற்றின் கீழ் அரசின் கடமை ஆகும். மக்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்கு சாதியே அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. எனவே, சாதி அடையாளம் அரசின் பார்வையில் ஒரு முக்கியமான மேம்பாடு மற்றும் நீதிக்கான அளவுகோள் ஆகும்.

குடிகாரர் என்கிற அடையாளம் முற்றிலும் வேறுபட்ட ஒரு அடையாளம். அரசியல் சட்டத்தின் 47 ஏழாம் பிரிவு மதுபானத்தை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. எனினும், இந்தப் பிரிவு வழிகாட்டிநெறி என்பதால் இதனை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்றத் தேவை இல்லை.

எது மிக மோசமானத் தீமை?

மது, மதம், சாதி என்கிற மூன்று தீமைகளில்:

1. மதம் 

மதம் ஒரு தீமை என்பது தவறான பதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில், உலகின் எந்த இடத்திலும் எந்த சட்டத்திலும் மதம் ஒரு தீமை என்று குறிப்பிடப்படவில்லை. அதிலும் இந்தியாவில் மதம் என்பது ஒரு அடிப்படை உரிமை.
CONSTITUTION OF INDIA Article 25: "all persons are equally entitled to freedom of conscience and the right freely to profess, practise and propagate religion"

உலகில் மிக உயர்வான சட்ட அடிப்படையாக மதிக்கப்படும் பன்னாட்டு மனிதஉரிமைகள் பிரகடனத்தில் மதம் ஒரு உரிமையாக ஏற்கப்பட்டுள்ளது.

UNIVERSAL DECLARATION OF HUMAN RIGHTS Article 18: "Everyone has the right to freedom of thought, conscience and religion; this right includes freedom to change his religion or belief, and freedom, either alone or in community with others and in public or private, to manifest his religion or belief in teaching, practice, worship and observance."

எனவே, உலகெங்கும் அடிப்படை உரிமை என்று கூறப்பட்டுள்ள மதத்தை 'தீமை' என்று கூறுவது மிகத்தவறான, மனிதஉரிமைக்கு எதிரான வாதமாகும்.

மதம் குறித்து வீசப்படும் குற்றச்சாட்டுகள் எல்லாமும் உண்மையில் மதவாதம் அல்லது வகுப்புவாதம் எனப்படுகிற COMMUNALISM ஆகும். தமிழ்நாட்டின் 95 விழுக்காட்டிற்கும் மேலான மக்கள் ஏதோ ஒரு சமயத்தை நம்புகிறார்கள். அவர்களில் 0.001 அளவினர் கூட வகுப்புவாதிகள் அல்ல. எனவே, COMMUNALISM வேறு, RELIGION வேறு என்று புரிந்துகொள்ளாதவர்களிடம் பேசிப் பயன் இல்லை. விரிவாகக் காண: RELIGION AND COMMUNALISM by Asghar Ali Engineer

மதவாதம் என்று வரும்போது அதனை ஒரு குறிப்பிட்ட மதத்துடன் இணைத்துப் பார்ப்பது தவறு. மதவாதிகள் என்றால் இஸ்லாமியர்கள் என்பதும், மதக்கலவரம் என்றாலே அது இஸ்லாமியர்களின் வேலை என்பதும் ஒருவகையான பார்வைக் கோளாறு.
இந்தியாவில் இஸ்லாம் ஒரு சிறுபான்மை மதம். அதுமட்டுமல்லாமல், இஸ்லாமியர்கள் எல்லாவிதமான மனித மேம்பாட்டு அளவுகோளிலும் மிக மிக பின்தங்கி இருப்பவர்கள். எனவே, "ஒருபக்கம் மக்கள் தொகையில் சிறுபான்மை, மறுபக்கம் சமூக பொருளாதார நிலையில் மிக மிக பின்தங்கிய நிலை" என்கிற இரட்டைத் தாக்குதல். இதுவல்லாமல், "அதிகரித்துவரும் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரம்" - இவற்றுக்கு இடையே "இஸ்லாமியர்கள் மத அடையாளத்தின் பேரில் ஒன்றிணைவதும் உரிமைக் கேட்பதும்" தவிர்க்க முடியாததும் நியாயமானதும் ஆகும். 

இந்த நியாயமானக் குரல்தான் பலநேரங்களில் 'மதத்தீமை' என்று மற்றவர்களால், குறிப்பாக சில இந்துக்களால் புரிந்து கொள்ளப்படுகிறது. இது இந்துக்களின் பார்வைக் கோளாறுதானே தவிர இஸ்லாமியர்களின் தவறு அல்ல. (அதே நேர்த்தில் மதத் தீவிரவாதம் என்பது இந்தியாவில் முதன்மையாக இந்துமதத்திலும் இரண்டாவதாக இஸ்லாமிலும் ஓரளவிற்கு இருக்கிறது என்பதை மறைக்க முடியாது. இந்துத்வ தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம் எனும் இரண்டு தீவிரவாதக் கூட்டமும் ஒன்றை ஒன்று வளர்த்து விடுவதால் - இரண்டும் ஒன்றுக்கொன்று ஆதரவானக் கூட்டம்தான்).
2. மதுபானம் 

மதுபானம் ஒரு மிகப்பெரிய தீமையாக வளர்ந்து வருகிறது. வகுப்புவாதம் அல்லது சாதியுடன் ஒப்பிட்டால் - ஒப்பீட்டளவில் மதுபானத் தீமை எளிதானது. அதாவது மதுபானத்தால் ஏற்படும் கேடு பெரிது என்றாலும் அதை ஒழிப்பதோ கட்டுக்குள் வைப்பதோ சாத்தியமானதே ஆகும். (இதுகுறித்து எனது முந்தைய பதிவில் குறிப்பிட்டுள்ளேன்)
3. சாதிதான் மிகப்பெரிய தீமை

மதுபானம், மதவெறி - இவற்றுடன் ஒரு பேச்சுக்காக ஒப்பிட்டோமானால் - இந்தியாவில் சாதிதான் மிகப்பெரிய தீமை.

சாதி என்பது மிகக்கடுமையான ஒரு இடஒதுக்கீட்டு முறையாக கடந்த 2000 ஆம் ஆண்டுகளாக இருந்துவருகிறது. ஒருவர் பிறக்கிற சாதியின் அடிப்படையிலேயே அவருக்கான பலவிதமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை பார்ப்பனராக பிறப்பவருக்கு கிடைக்கும் வாய்ப்பும் மதிப்பும் வேறாகவும், ஒரு பிணம் எரிக்கும் சாதியில் பிறக்கும் நபருக்கு கிடைக்கும் வாய்ப்பும் மதிப்பும் வேறாகவும் இருந்துள்ளது. குறைவான உழைப்புக்கு அதிக மதிப்பு, மரியாதை, ஊதியம். ஆனால், கடின உழைப்புக்கு குறைந்த மதிப்பு, இழிவுத்தன்மை, குறைந்த ஊதியம் என்கிற நிலையை சாதி ஏற்படுத்தி வைத்திருந்தது.

அதைவிடக் கொடுமையாக - எந்த ஒரு வேலையும் பரம்பரை பரம்பரையாகத் திணிக்கப்பட்டது. தனக்கான வேலையைத் தானே தேர்ந்தெடுக்கும் ஒரு அடிப்படை உரிமையை சாதி முற்றிலுமாக மறுத்தது. கல்வி, வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்தல், வழிபாட்டு உரிமை என எல்லாவற்றையும் சாதி மறுத்தது. உணவு, உடை, வாழ்விடம் என எல்லாவற்றையும் சாதியே தீர்மானித்தது

சாதியின் இந்த பெருங்கேடு இப்போதும் பெரிதாக மாறிவிடவில்லை. 

கல்வியில் சாதி

2005 -06 ஆம்ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்பநல கணக்கெடுப்பில் பின்வரும் புள்ளிவிவரங்கள் உள்ளன:

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவரின் படிப்பு: 
மேல்நிலைப் பள்ளி (+2) படிப்புக்கும் கீழாக படித்தோர் ஒவ்வொரு பிரிவிலும் எவ்வளவு பேர்?
(அதாவது சாதியின் மக்கள்தொகையில் குறைவாகப் படித்தோர்)

பட்டியல் இனத்தவர் = 92 %

பழங்குடி இனத்தவர் = 94 %

இதர பிறடுத்தப்பட்ட வகுப்பினர் = 87 %

முன்னேறிய வகுப்பினர் = 45 %

வேலைவாய்ப்பில் சாதி

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவரின் வேலை:
அதிகவருவாய் கிடைக்கும் தொழில்முறை, தொழில்நுட்ப, மேலாண்மைப் பணிகளில் இருப்போர் ஒவ்வொரு பிரிவிலும் எவ்வளவு பேர்?
 (அதாவது சாதியின் மக்கள்தொகையில் மிக அதிகமாக சம்பாதிப்போர்)

பட்டியல் இனத்தவர் = 5 %

பழங்குடி இனத்தவர் = 0 %

இதர பிறடுத்தப்பட்ட வகுப்பினர் = 8 %

முன்னேறிய வகுப்பினர் = 44 %

ஆக, நல்ல வேலையில் இல்லை, போதுமான படிப்பும் இல்லை என்கிற கீழான நிலையில் மிகப்பெரிய மக்கள் கூட்டத்தினர் SC/ST/OBC பிரிவினர் இன்றும் வாழ்வதற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது சாதிதான்.

தனியார் நிறுவனங்களில் சாதி

பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராக உள்ள சுக்தியோ தொராட் என்பவர், 2005 - 2007 ஆண்டுகளில் பத்திரிகைகளில் வெளியான தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்பு விளம்பரங்களுக்கு, ஒரே மாதிரியான உயர் படிப்பு தகுதிகளுடன் விண்ணப்பங்களை தயார் செய்து - சாதியை மட்டும் உயர்சாதி, தாழ்த்தப்பட்ட சாதி என மாற்றி அனுப்பி - எத்தனை பேருக்கு நேர்காணல் அழைப்பு வருகிறது என ஆய்வு செய்தார்.

உயர் சாதியினர் 100 பேருக்கு நேர்காணல் அழைப்பு வந்தால், தாழ்த்தப்பட்ட சாதியினர் 67 பேருக்கு மட்டுமே நேர்காணல் அழைப்பு வந்தது.

அதாவது தகுதிகள் அனைத்தும் ஒன்று, சாதி மட்டும் வேறு என்பதற்காகவே - நேர்காணல் அழைப்பு அனுப்பப்படவில்லை. நேர்காணல் அழைப்புக்கே இந்த நிலை என்றால், நேர்காணலில் என்ன நடக்கும் என்று சொல்லத்தேவை இல்லை.

இந்தியாவின் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படும் - முதன்மையான 1000 நிறுவனங்ளின் கார்ப்பரேட் நிர்வாக உறுப்பினர்களாக (Corporate Board Members) இருப்பவர்களின் சாதி எது? என ஒரு ஆய்வு 2010 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. அதில் பின்வரும் புள்ளி விவரங்கள் தெரியவந்தன.

Corporate Board Members in Top 1000 Indian Companies:

பட்டியல் இனத்தவர்/பழங்குடி இனத்தவர் = 3.5 %

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் = 3.8 %

முன்னேறிய வகுப்பினர் = 92.6 %

இப்படியாக பொருளாதாரம் மற்றும் வாய்ப்புகளில் இப்போதும் சாதிதான் முன்னேற்றத்தைத் தீர்மானிக்கிறது.
சாதியும் மதிப்பும்

வெறும் வெருமானம் மட்டுமல்ல - மதிப்பு, மரியாதை, இதர தேவைகள் என எதை எடுத்தாலும் தடைக்கல்லாக இருப்பது சாதிதான்.

சென்னை நகரில் தான் ஒரு தாழ்த்தப்பட்டு பிரிவு ஆள் என்று சொல்லி வாடகைக்கு வீடு தேடிப்பாருங்கள். சாதியின் நிலை என்ன என்று தெரியும்.

சென்னை தமிழ் பதிவர் சந்திப்பில் மூத்தபதிவர்களுக்கு பொன்னாடை போர்த்திய நிகழ்வைத் தொகுத்து வழங்கிய நண்பர் ஒரு கதை சொன்னார்.

'டெல்லி கணேஷ் எனும் நடிகர் ஏவிஎம் திரைப்பட நிறுவனத்தின் பின்புற சுடுகாட்டில் இருந்த ஒரு வெட்டியா'ன்' இடம் பேசிக்கொண்டிருந்தார். நடிகர் ஒருநாள் சாலையில் சென்ற போது அங்குவந்த வெட்டியா'ன்' சுடுகாட்டுக்கு எப்ப வருவீங்க' என்று கேட்டா'ன்'" - என்று ஒரு நகைச்சுவை கதை சொன்னார்.

இதுவே, மைலாப்பூர் சிவன் கோவில் பார்ப்பன பூசாரியை டெல்லி கணேஷ் சந்தித்திருந்தால் இந்தக்கதை எப்படி இருந்திருக்கும்?

'டெல்லி கணேஷ் எனும் நடிகர் மைலாப்பூர் சிவன் கோவிலில் இருந்த ஒரு அய்ய'ர்' இடம் பேசிக்கொண்டிருந்தார். நடிகர் ஒருநாள் சாலையில் சென்ற போது அங்குவந்த அய்ய'ர்'  கோவிலுக்கு எப்ப வருவீங்க' என்று கேட்டா'ர்'" - என்று கதை சொல்லியிருப்பார்.

இதற்காக இந்த தொகுப்பாளரை நாம் குறைசொல்ல முடியாது. கோவிலில் பூசை செய்யும் சாதி மதிப்பு மிக்கது. பிணத்தை எரிக்கும் சாதி கீழானது என்பது நமது பொது புத்தியில் பதிந்துள்ளது.

சாதிக் கேடு ஒழிய இன்னும் பல தலை முறைகள் ஆகலாம். இப்போது உயிரோடு இருப்பவர்கள் தமது வாழ்நாளில் சாதி ஏற்றத்தாழ்வை களைய முடியாது. எனவே - எல்லாக் கேடுகளிலும் பெருங்கேடு என்பது சாதியால் நேரும் கேடே ஆகும்.