Pages

புதன், நவம்பர் 30, 2016

தாய்லாந்தில் புதிய மன்னரும் - தமிழர்களின் வரலாற்று பெருமையும்!

தாய்லாந்து நாட்டில் எழுபது ஆண்டுகாலம் மன்னராக வீற்றிருந்த பூமிபால் அதுல்யதேஜ் கடந்த மாதம் இயற்கை எய்தினார். புதிதாக இளவரசர் மஹா வஜ்ர அலங்காரன் மன்னராக முடிசூடவுள்ளார். இந்த நிகழ்வுக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

மன்னராட்சி நடக்கும் தாய்லாந்து நாட்டில் அரசர்கள் இறைவனின் அவதாரமாகக் கருதப்படுகின்றனர். சிவன் மற்றும் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதி அரசனுக்கு முடிசூட்டும் வழக்கம் அங்கு உள்ளது. இந்த பாரம்பரியம் தமிழ்நாட்டின் பல்லவர்கள் மரபில் இருந்து உருவானதாகும். சோழ மன்னர்கள் இதனை பின்பற்றினர். இப்போதும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிச்சாவரம் மன்னர் பரம்பரையினருக்கு முடிசூடும் இந்த நடைமுறை உள்ளது.

தமிழ்நாட்டின் முடிசூடும் வழக்கத்தை பின்பற்றிதான் தாய்லாந்து நாட்டின் மன்னர்களும் முடிசூடிக்கொள்கின்றனர் என்பதற்கான ஆதாரங்கள் இப்போதும் உள்ளன. அதுகுறித்து காண்போம்:

தாய்லாந்தில் மன்னர் ஆட்சி

ஆசிய பகுதியில் தொடர்ந்து மன்னராட்சி நடைபெற்றுவரும் நாடு தாய்லாந்து ஆகும். அங்கு எழுபது ஆண்டுகாலம் மன்னராக இருந்த மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் கடந்த அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி காலமானார். அவரையடுத்து, இளவரசர் மஹா வஜ்ர அலங்காரன் தாய்லாந்தின் புதிய அரசராக பதவியேற்கும் நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றம் நேற்று (29.11.2016) ஒப்புதல் அளித்ததுள்ளது. நாடாளுமன்றத் தலைவர் அடுத்த சில நாட்களில் இளவரசர் மஹா வஜ்ர அலங்காரனை சந்தித்து, அரியணையேற முறைப்படி கேட்டுக் கொள்வார்
அரசர் பூமிபால் அதுல்யதேஜுடன்  தாய்லாந்து பிரதமர் சந்திப்பு

தாய்லாந்து மக்களுக்கு மன்னனே இறைவன். புத்தமதத்துக்கு மாறினாலும், அங்கு பழங்கால தென்னிந்திய பண்பாடு நீடிக்கிறது. பிரதமர், இராணுவ தளபதி, நீதிபதிகள் என்று எல்லோரும் மன்னருக்கு முன்பாக மண்டியிட்டுதான் பேசுவார்கள். எல்லா அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களிலும் மன்னர் மற்றும் மகாராணியின் புகைப்படங்கள் இருக்கும். காலையில் அதனை வணங்கிவிட்டுதான் பணிகளை தொடங்குகிறார்கள்.

தினமும் மாலை 6 மணிக்கு மன்னரை வாழ்த்தும் பாடல் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் ஒலிக்கும். அப்போது போக்குவரத்து நிறுத்தப்பட்டு, எல்லா மக்களும் தமது வேலைகளை நிறுத்தி, எழுந்து நின்று மன்னரை வாழ்த்தி பாடுகிறார்கள். மன்னரை விமர்சிப்பது தாய்லாந்து நாட்டில் தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

தாய்லாந்து மன்னரும் தமிழும்

தாய்லாந்து நாட்டின் முதன்மை இதிகாசம் 'ராமாகியான்'. இது தமிழ் கம்ப ராமாயணத்தின் தாய்லாந்து வடிவம் ஆகும். அந்நாட்டின் முன்னாள் தலைநகரம் 'அயோத்தியா'. இப்போதைய தலைநகர் பாங்காக்கின் உண்மை பெயர் 'குரங்கு தீபம்'. அங்கு முடிசூடிக்கொள்ளும் மன்னர்கள் எல்லோரும் தம்மை ராமன் என்றே கூறிக்கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக, ஒரு பழங்கால மன்னனின் பெயர் 'ஸ்ரீ சூரியவம்ச ராமன் மாகா தர்ம ராஜாதிராஜன்'.

இப்போதைய மன்னர் வம்சம் 1782 ஆம் ஆண்டில் தொடங்கிய சாக்ரி வம்சம் ஆகும். இதன் முதல் மன்னர் முதலாம் ராமன் (Rama I) என்று அழைக்கப்பட்டார். மறைந்த பூமிபால் அதுல்யதேஜ் ஒன்பதாம் ராமன் (Rama IX) ஆகும். அடுத்து முடிசூடவுள்ள மஹா வஜ்ர அலங்காரன் பத்தாம் ராமன் (Rama X) என்று அழைக்கப்படுவார்.

முடிசூடலும் தமிழும்

தாய்லாந்து மன்னரின் முடிசூடல் நிகழ்ச்சி, தமிழ்நாட்டில் பல்லவர்கள் மற்றும் சோழ மன்னர்களின் முடிசூட்டல் நிகழ்வினை முன்மாதிரியாகக் கொண்டு நடப்பதாகக் கூறப்படுகிறது.
மன்னர் முடிசூடலுக்காக நடராஜர் சிலை முன்பு ஹோமம். 1925 ஏழாவது ராமன் முடிசூடல்

சாதாரண இளவரசனை இறைவனின் அவதாரமாக மாற்றும் வகையில், நடராஜர் சிலைக்கு முன்பாக ஹோமம் வளர்த்து, மந்திரங்கள் ஓதி, ஐந்து ஆறுகளில் இருந்து கொண்டுவரப்படும் புனித நீரால் இளவரசனுக்கு மகா அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னார் அவர் ஊர்வலமாக அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். முடிசூட்டு விழாவில் காதில் திருவெம்பாவை பாடல்களும் திருப்பாவை பாடல்களும் ஓதப்படுகிறது.

தாய்லாந்து அரசரின் அரண்மணையில் இந்த பாடல்கள் பழங்கால தமிழ் கிரந்த எழுத்துகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளன. இந்த தமிழ் மந்திரங்கள் தேவாரம், திருவாசகம், திருப்பாவை பாடல்களாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக;

"தோடுடைய செவியன் விடையேறி யோர் தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனை நாட்பணிந்தேத்தவருள் செய்த
பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மான் இவனன்றே" 

- எனும் சம்பந்தர் தேவாரப் பாடல்களும்,

"பித்தா பிறை சூடி பெருமானே அருளாளாய்
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணெய் நல்லூரருட்துறையுள் 
அத்தாவுனக்காளாயினி அல்லேன் எனலாமே"

- எனும் சுந்தரர் தேவாரப் பாடல்களும் பாடப்படுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளன.
1950 ஆம் ஆண்டில் முடிசூடலின் போது புத்தர் கோவிலில் இறைவனுக்கு முன்பாக அமர வைக்கப்பட்ட அரசர் பூமிபால் அதுல்யதேஜ் (சிதம்பரம் கோவில் முடிசூடலிலும் நடராஜருக்கு முன்பாக மன்னர் அமரவைக்கப்படுகிறார்)

அதாவது, தமிழ் மன்னர்கள் சிதம்பரம் கோவிலில் முடிசூட்டிக்கொண்ட முறைக்கு இணையாக, தாய்லாந்து மன்னர்களும் முடிசூடிக்கொள்கின்றனர். அதுவும் தேவாரம், திருவாசம், திருவெம்பாவை பாடல்கள் ஒலிக்க - அதன் பொருளோ, மொழியோ தெரியாமலேயே - தாய்லாந்து மன்னர்களின் முடிசூட்டு விழா நடக்கிறது.

தேவாரம், திருவாசம், திருவெம்பாவை பாடல்கள் காதில் விழுந்த பின்னரே, மனிதராக இருக்கும் மன்னர், இறைவனாக அவதாரமெடுக்கிறார் என்பது தாய்லாந்து நாட்டின் நம்பிக்கை ஆகும்.

திருவெம்பாவை - திருப்பாவை விழா

முடிசூடலின் போது மட்டுமின்றி, மற்றுமொரு திருவிழாவிலும் இப்பாடல்கள் ஒலிக்கின்றன. திருவெம்பாவை - திருப்பாவை திருவிழா என்பது சிவபெருமானையும் விஷ்ணுவையும் தாய்லாந்துக்கு அழைத்துவந்து ஊஞ்சலில் வைத்து ஆட்டும் திருவிழா ஆகும்.
 பாங்காக்: திருவெம்பாவை - திருப்பாவை ஊஞ்சல்

ஜனவரி மாதத்தில் 10 நாட்கள் நடத்தப்படும் இந்த திருவிழாவுக்காக, ஒரு மாபெரும் ஊஞ்சல் பாங்காக் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. அது அந்த நாட்டின் ஒரு பாரம்பரிய சின்னமாகவும் விளங்குகிறது.

கண்டுகொள்ளாத தமிழகம்

உலகின் எல்லா நாடுகளும் தமது பண்பாட்டு பாரம்பரிய தொடர்புகளை போற்றுகின்றன. ஆனால், தமிழ்நாட்டின் திராவிட ஆட்சியாளர்கள் இதுபோன்ற தமிழ் பண்பாட்டு சிறப்புகளை தேடுவதோ, அடையாளம் காண்பதோ, கொண்டாடுவதோ இல்லை என்பது வேதனையான விடயம் ஆகும்.

ஆதாரம்:

1. Siamese state ceremonies, by Horace Geoffrey Quaritch Wales, 1931

2. Some Aspects of Asian History and Culture, by Upendra Thakur, 1986 

3. God & King, the Devarāja Cult in South Asian Art and Architecture. by Arputha Rani Sengupta, 2001

சனி, நவம்பர் 26, 2016

500 ரூபாய் இல்லை: குழப்பத்தின் உச்சத்தில் மோடி அரசு!

தெரியாமலோ அல்லது திட்டமிட்டோ - இந்திய பொருளாதாரத்தில் மாபெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டார்கள். இரண்டு நாட்களில் 'உங்கள் பணத்தை உங்களுக்கு தருவோம்' என்று சொன்ன மத்திய அரசு - இப்போது புதிய பணமே இல்லாமல் ஒரு மாபெரும் நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறது! 

முதலில், 1000 ரூபாய் தாளை ஒழித்து, அதற்குப் பதிலாக 2000 ரூபாய்த் தாளைக் கொடுத்து - அதை எங்கேயும் மாற்ற முடியாமல் திண்டாட வைத்துள்ளார்கள்.

பின்னர், ஏடிஎம் எந்திரங்களில் எந்த அளவு பணத் தாள்களை வைக்க முடியும் என்கிற அளவே தெரியாமல் - புதிய ரூபாய் தாள்களின் அளவை மாற்றி, ஏடிஎம் எந்திரங்கள் செயல்படாமல் செய்தார்கள்.

இப்போது, 500 ரூபாய் தாள்களுக்கு பதிலாக - புதிய ரூபாய் தாள்களை அச்சடிக்கவே இல்லை என்கிற தகவல் வெளிவந்துள்ளது. அதனால்தான், 500 ரூபாய் தாள்களை தொலைக்காட்சியிலும் வாட்ஸ்அப்பிலும் மட்டும் காட்டுகிறார்கள், கைகளில் காட்டவில்லை. (இந்தியாவின் மொத்த பணத்தில் பாதி அளவாக 500 ரூபாய் தாள்கள் உள்ளன என்பது கூடுதல் தகவல் ஆகும்).

"500 ரூபாய் தாள் இல்லை"

500 ரூபாய் தாள் தொடர்பாக இப்போது வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.

பழைய ரூபாய் தாள்களை தடை செய்யும் முன்பு இருந்த 500 ரூபாய் தாள்களின் எண்ணிக்கை 1660 கோடி தாள்கள் ஆகும். இதன் மொத்த மதிப்பு 8 லட்சத்தி 30 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், இதுவரை மத்திய அரசு அச்சடித்திருக்கும் புதிய 500 ரூபாய் தாளின் எண்ணிக்கை 1 கோடி தாள்கள் மட்டும்தான்! (அதாவது, எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவையோ, அதில் 0.06% மட்டும்தான் அச்சடித்துள்ளார்கள். இதில் அச்சுப்பிழையுடனும் சிலவற்றை அச்சடித்துள்ளனர்).

ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான இரண்டு அச்சகங்களில் ரூபாய் நோட்டு தடைக்கு 2 மாதம் முன்பே  2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க உத்தரவிட்டதாம் மத்திய அரசு. ஆனால், 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் நிதி அமைச்சகத்துக்கு சொந்தமான இரண்டு அச்சகங்களுக்கு, ரூபாய் நோட்டு தடைக்கு ஒருவாரம் முன்னர்தான் உத்தரவிட்டார்களாம்.

(ரிசர்வ் வங்கிக்கும், அச்சகத்துக்கும் இடையேயான மோதல் காரணமாக இந்த தாமதம் என்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த அச்சகங்களுக்கான தலைமைப் பதவிக்கு ஆள் போடாமல் காலியாகவும் வைத்துள்ளதாம் மத்திய அரசு).

ஆக, இந்திய மக்களின் மிக முக்கிய பணப்பரிமாற்றமாக உள்ள, 500 ரூபாய் தாள்கள் 1660 கோடி தாள்கள் தேவைப்படும் நிலையில், வெறும் 1 கோடி தாள்களை மட்டும்தான் இதுவரை அச்சடித்துள்ளார்கள். இன்னும் 1659 கோடி தாள்களை எப்போது அச்சடிப்பார்கள் என்பது யாருக்கும் தெரியாத புதிராக உள்ளது.

திட்டமிட்ட சதியா?

1. ஏடிஎம் எந்திரங்களுக்கு பொருந்தாத வகையில் பணம் வடிவமைப்பு, 2. சில்லரையாக மாற்றமுடியாத 2000 ரூபாய் நோட்டுகள் விநியோகம், 3. முக்கிய தேவையான 500 நோட்டுகளை அச்சடிக்கவே இல்லை - இவை அனைத்தையும் ஒப்பிட்டுப்பார்த்தால், மக்கள் பணத்தை வங்கிகளில் முடக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் எல்லாம் நடப்பதாக தெரிகிறது.

"வங்கிகளுக்கு இடையே தான் பணம் மாற வேண்டும். மக்களுக்கு இடையே பணத்தாளாக மாறக்கூடாது" என்பதில் மோடி அரசு தெளிவாக இருந்துள்ளது.

விஜயமல்லயா போன்ற பெரும் பணக்காரர்களுக்கு கொடுக்கப்பட்ட, வராக்கடனாக போய்விட்ட பணம் 6 லட்சம் கோடிக்கு இணையாக, இப்போது மக்களின் பணம் வங்கிகளில் குவிந்துள்ளது. இதனை மீண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடனாக கொடுக்கலாம்.

இதற்காகத்தான் எல்லா நாடகமும் நடக்கிறதோ!

செய்தி: Mystery of Missing Rs 500 Notes: Who is Responsible? Govt or RBI?

தொடர்புடைய சுட்டிகள்:

1. மோடி அரசின் பண ஒழிப்பு: தேச பக்தியா, தேசத்தின் மீதான தாக்குதலா?

2. மோடி அரசின் பண ஒழிப்பு: இந்திய பொருளாதாரத்தின் மீதான போர்!

3. கருப்பு பண ஒழிப்பு: ஏழைகளிடம் பிடுங்கி பணக்காரர்களுக்கு கொடுக்கும் திட்டமா?

4. மோடி அரசின் சதி: கருப்பு பண ஒழிப்பா? கார்ப்பரேட் கொள்ளையா?


5. புதிய ரூபாய் நோட்டில் ஹிந்தி திணிப்பு: மோடி அரசின் மொழிவெறி!

சென்னை - வடபழனி மேம்பாலம் யாருக்காக காத்திருக்கிறது?

மிகுந்த போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியில், மக்கள் பணத்தில் கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலத்தை திறக்காமல் "யாருக்காகவோ" காத்திருக்கிறார்கள்!

சென்னை வடபழனியில் ஜவகர்லால் சாலை மற்றும் ஆற்காடு சாலை சந்திப்பில் ஒரு மேம்பாலம் கட்டும் திட்டத்தை, 2006 ஆம் ஆண்டில் உருவாக்கி, 2011-ல் ஒப்புதல் அளித்து, 2014-ல் கட்டத்தொடங்கினார்கள்.

ஒருவழியாக கட்டிமுடித்து, இந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் போக்குவரத்துக்கு திறக்கப் போவதாக கூறினார்கள்.

ஆனால், போக்குவரத்துக்கு தயாராக உள்ள இந்த மேம்பாலத்தை கடந்த ஒருமாத காலமாக திறக்காமல் வைத்துள்ளனர்.
தமிழகத்தின் பிறபகுதிகளை கோயம்பேடு பேருந்து நிலையத்துடன் இணைக்கும், 100 அடி சாலை எனப்படும் ஜவகர்லால் நேரு சாலையில் தினமும் 1 லட்சத்து 85 ஆயிரம் வாகனங்கள் பயணிக்கின்றன. சென்னை நகரின் குறுக்காக செல்லும் ஆற்காடு சாலையில் தினமும் 40 ஆயிரம் வாகனங்கள் செல்கின்றன. இதனால், பெரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திண்டாடுகிறது வடபழனி.

ஆனாலும், மக்கள் பணத்தில் கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலத்தை திறக்காமல் "யாருக்காகவோ" காத்திருக்கிறார்கள்!

இதனைக் கண்டித்தும், வடபழனி மேம்பாலத்தை உடனடியாக திறக்கக் கோரியும் தென் சென்னை மேற்கு மாவட்டம் தி.நகர் மேற்கு பகுதி 130 வது வார்டு பா.ம.க சார்பில் கண்டன சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

செய்தி:

Vadapalani flyover ready, govt. to decide inauguration date

Commuters seek early opening of Vadapalani flyover

வியாழன், நவம்பர் 24, 2016

வெட்கக்கேடு: மு.க. ஸ்டாலினின் பொது அறிவு லட்சணம் இதுதானா?

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக உள்ள மு.க. ஸ்டாலினுக்கு, உலக அளவில் புகழ்பெற்ற ஒரு சாதாரண பொது அறிவுக்கேள்விக்கு பதில் தெரியவில்லை. இப்படிப்பட்ட எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுத்ததற்காக தமிழக மக்கள் வெட்கித் தலைக்குனிய வேண்டும்!

சென்னை கொளத்தூர் தொகுதி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் ஆஜரானார். அப்போது கொளத்தூர் தொகுதி தேர்தலில் "திருமங்கலம் பார்முலா'வைப் பயன்படுத்தி வாக்குக்காக பணம் வழங்கப்பட்டதா? என்ற கேள்விக்கு, "திருமங்கலம் பார்முலா' என்றால் என்ன? எனக்கு புரியவில்லை, தெரியவில்லை" என்று மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

"திருமங்கலம் பார்முலா"

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் முறைக்கு உலக அளவில் புகழ்பெற்றது "திருமங்கலம் பார்முலா" ஆகும். 

2009 ஆம் ஆண்டு மதுரை திருமங்கலத்தில் நடந்த தேர்தலில், ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் 5000 ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது. அதுவும் காலை நாளிதழுடன் 'கவருக்குள் பூத் சிலிப்புடன்' பணத்தை வைத்து வீடுவீடாக வழங்கினார்கள்.

இதுகுறித்து, திமுக பிரமுகரும் அப்போதைய மத்திய அமைச்சருமான மு.க. அழகிரிக்கு நெருக்கமான முன்னாள் மேயர் பட்டுராஜன் என்பவர், அமெரிக்க தூதரக அதிகாரியிடம் விரிவாக விளக்கினார். இதனை அமெரிக்க அதிகாரிகள் அமெரிக்க அரசுக்கு அனுப்பினார்கள்.
பின்னர் அமெரிக்காவின் வெளியுறவு ரகசியங்களை வெளிக்கொண்டுவந்த 'விக்கிலீக்ஸ்' மூலம் இது உலகப்புகழ்பெற்ற செய்தியாக மாறியது. எல்லா அரசியல் பத்திரிகைகளும் இது குறித்து எழுதினர்.

இவ்வளவு பிரபலமான ஒரு செய்தி தெரியாத அளவுக்கு, பொது அறிவு இல்லாதவராக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் இருப்பது - தமிழக மக்களுக்கு நேர்ந்த அவமானமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

இணைப்பு: 

விக்கி லீக்ஸ் வெளியிட்ட 'திருமங்கலம் பார்முலா': CASH FOR VOTES IN SOUTH INDIA

லண்டன் பத்திரிகையில் 'திருமங்கலம் பார்முலா': WikiLeaks: Indian politicians 'bought votes with cash tucked inside newspapers'

புதன், நவம்பர் 23, 2016

இடைத்தேர்தல் முடிவுகளும் எதிர்கால அரசியலும்: வடக்கில் இருக்கிறது நம்பிக்கை!

'இருப்பதை இல்லை என்பதும், இல்லாததை இருப்பதாக சொல்வதும்' ஊடகங்களுக்கு கைவந்த கலை! அதனால்தான், 'இடைத்தேர்தல் முடிவுகளில் பாஜக மூன்றவது இடம்' என்று எழுதுகிறார்கள். கூடவே, 'பாமக காணாமல் போய்விட்டது' என்றும் சொல்கிறார்கள். இதையே உண்மை என்று நம்பும் சில பாமக ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் நொந்து புலம்புவதையும் பார்க்க முடிகிறது.

புள்ளி விவரங்கள் உண்மையானவை. ஆனால், அதனை எடுத்துக்காட்டும் விதத்தில் ஏமாற்று வித்தைகளை அரங்கேற்றுகிறார்கள். எனவே, உண்மை என்ன என்பதை பக்க சார்பற்று ஆராய வேண்டும்.

இடைத்தேர்தல் முடிவுகள் காட்டும் 'உண்மை' என்ன?

1. தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றத்தில் மூன்றாவது கட்சிகள் காலியாகிவிட்டன.

திமுக, அதிமுக கட்சிகள் இரண்டும் சேர்த்து, தஞ்சையில் 93.32 %, அரவக்குறிச்சியில் 92.64 %, திருப்பரங்குன்றத்தில் 90.29 % வாக்குகளை பெற்றுள்ளன. இந்த மூன்று தொகுதிகளிலும் திமுக அல்லாத எல்லா எதிர்க்கட்சிகளும் சேர்ந்து 10 % வாக்குகளைக் கூட பெற முடியவில்லை.

அதாவது, நடந்து முடிந்த இடைத்தேர்தலில் - மூன்றாவது கட்சி என்பதே இல்லை என்கிற நிலை நேர்ந்துள்ளது. இந்தத் தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சி, முறையே அரவக்குறிச்சியில் 1.92 %, தஞ்சையில் 2.04 %, திருப்பரங்குன்றத்தில் 3.41 % வாக்குகளை பெற்றுள்ளது.

கண்ணாடி குவளையில் அரைக் குவளை அளவு தண்ணீர் இருந்தால் - "அரைக் குவளை தண்ணீர் இருக்கிறது" என்று நல்ல விதமாகவும் சொல்லலாம். "அரைக் குவளை காலியாக இருக்கிறது" என்று கெட்ட விதமாகவும் சொல்லலாம். 

பாஜக மிகக்குறைந்த அளவு வாக்குகளை வாங்கிய நிலையில் கூட - அந்தக் கட்சிதான் மாற்று என்பது போல, நம்பவைக்கும் கோயபல்ஸ் பிரச்சாரத்தை சங்கப்பரிவாரம் மேற்கொண்டுள்ளது. ஆனால், 2016 சட்டமன்ற தேர்தலில் இதைவிட மிக அதிக அளவு வாக்குகளை வாங்கியுள்ள பாமக, ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

2. பாமகவின் உண்மை நிலை என்ன?

தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய இரண்டு தொகுதிகளில் பாமக போட்டியிட்டது. இந்த தொகுதிகளில் பாமகவுக்கு என ஆதரவு தளம் எதுவும் இல்லை. அங்கு பாமக அமைப்பு ரீதியில் வலிமையாக இல்லை. எனவே, பாமக மிகக் குறைவான வாக்குகளை பெற்றதில் எந்த வியப்பும் இல்லை. (எடுத்துக்காட்டாக, அரவக்குரிச்சியில் பாமக தனித்து போட்டியிட்ட, 1991 தேர்தலில் 550 வாக்குகளையும் 1996 தேர்தலில் 737 வாக்குகளையும் மட்டுமே பெற்றது. இரண்டு தேர்தல்களிலும் தஞ்சாவூரில் பாமக போட்டியிடவே இல்லை)

அதே நேரத்தில், வடக்கு மாவட்டங்கள் அனைத்திலும், பாட்டாளி மக்கள் கட்சி பலமாக இருக்கும் கட்சியாகும். உண்மையில், திமுக - அதிமுக கட்சிகளுடன் மூன்றாவது ஒரு கட்சி மோதும் நிலை வடக்கு மாவட்டங்களில் மட்டுமே உள்ளது. அத்தகைய வலிமையை கொண்டுள்ள ஒரே கட்சி பாமக மட்டுமே.

இந்த இடைத்தேர்தலில் பாஜக அதிகபட்சமாக 3.41% வாக்குகளை வாங்கியதற்கே, அக்கட்சி வலிமை அடைந்து விட்டதாக கூறுகிறவர்கள் - சட்டமன்ற தேர்தலில், பாமக 80 தொகுதிகளில் இதை விட அதிக வாக்கு விழுக்காட்டினை  பெற்றது என்கிற உண்மையை மறைத்து விடுகின்றனர். அதிலும் 50 தொகுதிகளில் 10% வாக்குகளுக்கும் மேலாக பாமக பெற்றது. சில தொகுதிகளில் இது 30% அளவுக்கும் கூடுதலாகும்.

ஒரு தொகுதியில் 3% வாக்கு வாங்கிய பாஜகவே மாற்றாக வந்தது என்றால், 80 தொகுதிகளில் அதை விட அதிக வாக்கு வாங்கிய பாமக மாற்று இல்லையா? பாஜக விடயத்தில் "அரைக் குவளை தண்ணீர் இருக்கிறது" என்று சொல்லும் ஊடகம், பாமக விடயத்தில் "அரைக் குவளை காலியாக இருக்கிறது" என்று பிரச்சாரம் செய்கிறது. இதுதான் உண்மை.

3. இனி வரும் அரசியல் என்ன?

பல கட்சி அரசியல் முறையில் (multi-party system) இருந்து, சர்வாதிகாரமான இரு கட்சி அரசியல் முறைக்கு (two-party system) தமிழ்நாடு மாறுகிறது. அதிமுக - திமுக என்கிற இருகட்சி சர்வாதிகாரத்துக்கு மாற்றாக, மூன்றாவது கட்சி ஒன்று எழுந்தால் மட்டுமே தமிழ்நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும். 
இடைத்தேர்தல் முடிவுகளின் படி - இரண்டாம் இடத்தை பிடித்த திமுகவின் வாக்குகளுடன் அதற்கு பின்னால் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளின் வாக்குகளையும் கூட்டினால் கூட, அது அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிப்பதாக இல்லை. அதாவது, எல்லா எதிர்க்கட்சிகளும் திமுகவுடன் ஓரணியில் நின்றால் கூட, அதிமுகவின் இடைத்தேர்தல் வெற்றியை தடுத்திருக்க முடியாது.

இந்த நிலைமைக்கு மாற்றாக இருப்பது வட தமிழ்நாடும் பாட்டாளி மக்கள் கட்சியும் மட்டும்தான். வெற்றி பெறும் கட்சிக்கும் இரண்டாம் இடத்தை பிடிக்கும் கட்சிக்கும் இடையிலான வாக்கு வேறுபாடுகளை விட, மூன்றாவது கட்சி அதிகமாக வாக்குகளை வாங்கும் நிலைமை வட தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது. அந்த மூன்றாவது கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே உள்ளது.

"வடக்கில் இருக்கிறது நம்பிக்கை!"

வட தமிழ்நாட்டில் பாமக பெற்றுள்ள வலிமையில் இருந்து மட்டுமே - அதிமுக - திமுக என்கிற இருகட்சி சர்வாதிகாரத்துக்கு எதிரான எழுச்சி உருவாக முடியும். அதுதான், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்றும் ஒரே வாய்ப்பாகவும் அமையும்.

அதாவது, வட தமிழ்நாட்டில் பாமக வலிமையான கட்சியாக மாற்றம் பெற வேண்டும். தமிழ்நாடு முழுவதும் திமுக - அதிமுகவுக்கு எதிரான சக்திகள் பாமகவுடன் அணிதிரள வேண்டும். அதுவே தமிழ்நாட்டின் விடிவுக்கு ஒரே வழி.

தொடர்புடைய சுட்டி: 

செவ்வாய், நவம்பர் 22, 2016

இடைத்தேர்தல் முடிவுகளும் தமிழக அரசியலும்: நடப்பது என்ன?

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது. திமுக இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மற்ற கட்சிகள் எதுவும் சொல்லிக்கொள்கிற அளவில் வாக்குகளை வாங்கவில்லை.

ஊடகங்களும், விமர்சகர்கள் என்று கூறிக்கொள்வோரும் தேர்தல் முடிவு கூறித்து பலவித வியாக்கியானங்களை கூறக்கூடும். எனினும், இந்த தேர்தல் முடிவு எதைக் காட்டுகிறது என்பதையும் இதனால் எழுந்துள்ள சவால்களையும் நாம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.

இடைத்தேர்தலில் ஆளும் கட்சிக்கே பலம் அதிகம்

இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெரும் வாய்ப்புதான் அதிகம் என்பது அண்மைக்கால வரலாறாக இருக்கிறது. அதிலும், அதிக பணத்தை கொடுத்த கட்சியும், அதிகாரத்தில் கோலோச்சும் கட்சியுமான அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது. பணத்தை மட்டும் கொடுத்த கட்சியான திமுக இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது.

எனவே, அதிமுகவின் வெற்றி எனும் முடிவு அதிர்ச்சி அளிக்கக் கூடியது அல்ல.

மாற்று இல்லை என்பதுதான் உண்மையான அதிர்ச்சி!

கொள்கை, சித்தாந்தம் என்பதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, வெறும் உள்ளூர் புரோக்கர்களை வைத்து கட்சி நடத்தும் (Clientelistic Politics) முறையை திராவிடக் கட்சிகள் உருவாக்கி வைத்துள்ளன. வாக்காளர்களை வாடிக்கையாளர்களாக நடத்தும் இந்த அரசியல் முறையானது (Clientelism), திமுக, அதிமுக என்கிற இரண்டு பக்க நாணயமாக நடந்து வருகிறது.

தற்போது இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில், அதிமுக, திமுக கட்சிகளுக்கு சவால் விடும் அளவிலான கட்சிகள் எதுவுமே இல்லை என்பதுதான் உண்மையான அதிர்ச்சி ஆகும்.

அதிமுக - திமுக இடையேயான வாக்கு வித்தியாசம்  - தஞ்சாவூரில் 26,846 திருப்பரங்குன்றத்தில் 42,670  அரவக்குறிச்சியில் 23,673 என்பதாக இருக்கிறது. இந்த வாக்கு வித்தியாசத்துக்கு இணையாகக் கூட, மூன்றாவது கட்சி எதுவும் வாக்குகளை வாங்கவில்லை. அதில் பாதி அளவு வாக்குகளைக் கூட வாங்கவில்லை.

அதாவது, இரண்டாம் இடம்பிடித்த திமுகவுடன், மூன்றாவது இடத்தை பிடித்த கட்சியின் வாக்குகளை சேர்த்தால் கூட - வெற்றி இலக்கை எட்டும் அளவிற்கு - எந்தக் கட்சிக்கும் மக்கள் வாக்களிக்கவில்லை.

அமெரிக்க, இங்கிலாந்து தேர்தலைப் போன்று - இருகட்சி ஆட்சி முறைக்கு (two-party system) இணையான தேர்தலாக - இடைத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

(இடைத்தேர்தல் முடிவுகளை வைத்து பொதுத்தேர்தலை கணிக்க முடியாது என்றாலும் கூட - தமிழகத்தின் நிலைமை இதற்கு நெருக்கமாகவே உள்ளது.)

இருகட்சி ஆட்சி முறை: இந்திய ஜனநாயகத்துக்கு எதிரானது

இந்திய ஜனநாயக அமைப்பு என்பது பலகட்சி ஜனநாயக அமைப்பு (multi-party system) ஆகும். இந்தியா இருகட்சி அரசியல் முறைக்கு (two-party system) உகந்த நாடு அல்ல.

பல்வேறு சமூகங்கள், மதங்கள், மொழிகள், நம்பிக்கைகளை கொண்ட நாடு என்பதால் - இந்தியாவின் எல்லா தரப்பு மக்களையும் உள்ளடக்கும் வகையில், பல கட்சிகள் உள்ளன. இரண்டுக்கும் மேற்பட்ட கட்சிகள் வலுவாக இருப்பதால்தான் இந்திய ஜனநாயகம் நீடிக்கிறது. பன்முகத்தன்மை வாய்ந்த சமூகத்தில், இரண்டு தரப்பாக அரசியல் பிரிவது சர்வாதிகாரத்துக்கே இட்டுச்செல்லும்.
இந்தியாவின் தேர்தல் முறையானது 'முதலில் வந்தவரே வெற்றி பெற்றவர்' (First Past The Post - FPTP system) என்கிற முறையில் உள்ளது. தேர்தல் முறை 'விகிதாச்சார முறையில்' (Proportional representation - PR system) இல்லாதது இங்கே ஒரு மிகப்பெரிய குறைபாடு ஆகும். இந்நிலையில், பலகட்சி ஜனநாயகமுறையும் சிதைந்தால் - மிக எளிதாக சர்வாதிகார ஆட்சி நடக்கும் இடமாக மாறிப்போகும்.

பன்முகத்தன்மை கொண்ட மக்கள் வாழும் தமிழ்நாட்டில் அல்லது இந்தியாவில், சர்வாதிகார ஆட்சி என்பது நீண்ட நாள் நீடிக்காது. அது பேரழிவுக்கே இட்டுச்செல்லும். (அரசியல் ரீதியான சர்வாதிகாரம் எத்தகைய பேரழிவுகளை உருவாக்கும் என்பதற்கு இலங்கை, சிரியா போன்ற நாடுகள் எடுத்துக்காட்டுகளாக உள்ளன).

சர்வாதிகாரத்திலிருந்து தப்பிக்க என்ன வழி?

தமிழ்நாடு முழுமைக்கும் ஒரே அரசியல் சமூக நிலை இல்லை. தென் தமிழ்நாட்டிலும் மேற்கு தமிழ்நாட்டிலும் இருகட்சி அரசியல் நிலை வந்துவிட்டாலும் - வட தமிழ்நாட்டில் அந்த நிலை இன்னமும் ஏற்படவில்லை.

முதல் இரண்டு கட்சிகளின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் இடத்தில் வட தமிழ்நாட்டில், மூன்றாவது பெரிய கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி உள்ளது. எடுத்துக்காட்டாக, 2010 பென்னாகரம் இடைத்தேர்தலில், அப்போது ஆட்சியில் இருந்த திமுக வெற்றி பெற்றது. ஆனால், அதிமுகவை மூன்றாம் இடத்துக்கு தள்ளி, பாமக இரண்டாம் இடத்தை பிடித்தது.

கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் கூட, வட தமிழ்நாட்டின் பல தொகுதிகளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பாமக பிடித்தது. இந்த தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சிக்கும் இரண்டாம் இடத்தை பிடித்த கட்சிக்கும் இடையேயான வெற்றி வேறுபாடை விட - கூடுதலான வாக்குகளை பாமக பெற்றது. எடுத்துக்காட்டாக, பாமக சார்பில் நான் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில், 1506 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றது. ஆனால், இங்கு பாமக வாங்கிய வாக்குகள் 24,226 ஆகும்.

ஆக. மொத்தத்தில் வெற்றி பெரும் கட்சியின் வெற்றி வாய்ப்பை பறிக்கக் கூடிய பலத்துடன் மூன்றாவதாக ஒரு கட்சி இருக்கும் நிலை வட தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது.

அதிமுக - திமுகவின் சர்வாதிகாரத்தை ஒழிக்கும் பயணம் - பாமகவின் இந்த வலிமையில் இருந்துதான் முன்னேற வேண்டும். உண்மையில் - அதிமுக திமுக சர்வாதிகாரத்திலிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை பாமகவுக்கு இருக்கிறது என்றும் கூட இதனை எடுத்துக்கொள்ளலாம்.

திங்கள், நவம்பர் 21, 2016

மதன் கைது: புதிய தலைமுறை டிவியில் பரபரப்பான விவாதம்

"மதன் கைது - உண்மையில் நடந்தது என்ன?" என்கிற தலைப்பில் இன்றும் நாளையும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பரபரப்பான தகவல்களுடன் விவாதம் நடக்கவுள்ளது. காணத்தவராதீர்!

மதன் கைதின் பின்னணியில் புதைந்த மர்மங்கள்: விடை தருமா காவல்துறை?

சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மருத்துவ மாணவர் சேர்க்கை மோசடி வழக்கில் கடந்த ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த வேந்தர் மூவீஸ் மதனை சென்னை காவல்துறை கைது செய்திருக்கிறது. காவல்துறையினரின் கைது நடவடிக்கை தாமதிக்கப்பட்டது தான் என்றாலும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு அவசியமான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

ஆனால், மதன் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் ஏராளமான மர்மங்கள் புதைந்து கிடக்கின்றன. மதன் எங்கு, எப்போது, எந்த வகையில் கைது செய்யப்பட்டார் என்பது குறித்த துல்லியமான விவரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை.

காவல்துறையினர் வெளியிட்ட விவரங்கள் நம்பும்படியாகவும் இல்லை. மதன் முதலில் மணிப்பூரில் கைது செய்யப்பட்டதாக காவல்துறையை மேற்கோள்காட்டி, ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், மதன் கைது செய்யப்பட்டது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருப்பூரில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து சென்னை கொண்டுவரப்பட்டு நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 41(பி) பிரிவின்படி ஒருவரை கைது செய்யும்போது முதல் நடவடிக்கையாக கைது அறிக்கை (Memorandum Of Arrest) தயாரிக்கப்படவேண்டும்; அதில் கைது செய்யப்பட்டவரின் குடும்ப உறுப்பினர் ஒருவரோ, கைது செய்யப்படும் இடத்தைச் சேர்ந்த மதிக்கத்தக்க நபரோ சாட்சியாக சான்றொப்பம் அளிக்க வேண்டும்; அதை உறுதி செய்து கைது செய்யப்பட்டவர் கையெழுத்திட வேண்டும். ஆனால், இந்த நடைமுறை மதன் விஷயத்தில் கடைபிடிக்கப்ப்படவில்லை.

அதேபோல், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 56ஆவது பிரிவின்படி, ஒருவரை கைது செய்தவுடன், தாமதம் செய்யாமல் அப்பகுதி நடுவர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று நீதிபதி முன்போ அல்லது அப்பகுதி காவல்நிலைய அதிகாரி முன்போ நேர்நிறுத்தப்பட வேண்டும். ஆனால், அதையும் சென்னை மாநகரக் காவல்துறையினர் செய்யவில்லை.

குற்றவழக்குகளில் ஒருவர் கைது செய்யப்படும் போது, அதுகுறித்து அவரின் நெருங்கிய உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். அதன்படி, மதன் கைது செய்யப்பட்டது குறித்து, அவரை கண்டுபிடிக்கக்கோரி வழக்குத் தொடர்ந்த அவரது தாயாரிடம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அதையும் சென்னை மாநகரக் காவல்துறை செய்யவில்லை.

மதன் அவரது கூட்டாளிகளுடன் உத்தர்காண்ட், மணிப்பூர், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பதுங்கி இருந்ததாகவும், அந்த மாநிலங்களில் மதன் சொத்துக்களை வாங்கிக்குவிக்க அவர்கள் உதவியதாகவும், அவர்களை கண்காணித்ததன் தொடர்ச்சியாகத் தான் மதன் திருப்பூர் வரும் தகவல் அறிந்து அவரை கைது செய்ததாகவும் சென்னை காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதன் கைது செய்யப்பட்டது பண மோசடி தொடர்பான வழக்காகும். மோசடி செய்யப்பட்ட பணத்தைக் கொண்டு மதன் சொத்து வாங்கியது உண்மை என்றால், அதற்கு உதவி செய்தோரை கைது செய்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு அவர்களை கைது செய்யாதது ஏன்?

மதன் எங்கு, எப்போது, யாரால், எப்படி கைது செய்யப்பட்டார் என்ற விவரம் கைது நடவடிக்கை முடிவடைந்த உடன் அறிவிக்கப்பட வேண்டும். அதுவும் செய்யப்படவில்லை. அதுகுறித்த விவரங்கள் காவல்துறையின் செய்திக்குறிப்பிலும் இடம்பெறவில்லை. மதன் கைது செய்யப்பட்ட வழக்கும், அவர் சிலருடன் சேர்ந்து செய்ததாக கூறப்படும் மோசடியும் சாதாரணமான ஒன்றல்ல.
எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் மருத்துவப் படிப்புக்கும், மருத்துவ மேற்படிப்புக்கும் இடம் வாங்கித் தருவதாகக் கூறி 123 பேரிடம் ரூ.84.27 கோடியை மதன் மோசடி செய்திருக்கிறார். அந்த பணத்தை பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவிடம் ஒப்படைத்து விட்டதாகவும் மதன் கூறியிருக்கிறார்.

(பணத்தை பச்சமுத்துவிடம் ஒப்படைத்து விட்டதாக மதன் எழுதிய கடிதத்தை இந்த இணைப்பில் காண்க:  Madhan - The five-page letter)

மதன் மாயமாகி 6 மாதங்களாகி விட்ட நிலையில், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

அதுமட்டுமின்றி, மதனை பச்சமுத்து தான் கடத்திச்சென்று எங்கோ சிறை வைத்திருக்கிறார் என மதனின் தாயாரும், மனைவியும் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதற்கு போட்டியாக, மதன் மாயமானது குறித்து அவரது இரு மனைவிகள் மற்றும் தாயாரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பச்சமுத்துவின் மகன் ரவி பச்சமுத்துவும் உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.

இவற்றில் எது உண்மை? எது பொய்? இரண்டுமே பொய்யா? என்பதையெல்லாம் அறிய, மதன் கைது குறித்த அனைத்து விவரங்களையும் துல்லியமாக வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாததன் மூலம் யாருடைய நலனையோ பாதுகாக்க காவல்துறை முயல்கிறதோ? என்ற சந்தேகம் எழுகிறது.

மதனின் கைது குறித்த எந்த தகவலையும் காவல்துறை உடனடியாக வெளியிடவில்லை என்பதை வைத்துப் பார்க்கும்போது மதன் சில நாட்களுக்கு முன்பே ஏன் கைது செய்யப்பட்டிருக்கக்கூடாது என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. அவ்வாறு முன்பே கைது செய்யப்பட்டிருந்தால், இடைப்பட்ட காலத்தில் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சிலரை காப்பாற்றுவதற்கான பேரம் நடந்திருக்கலாம் என்ற சாத்தியமான யூகத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

சுருக்கமாக கூற வேண்டுமானால் மதன் மாயமானதில் தொடங்கிய மர்மம் அவரது கைதுக்கு பிறகும் நீடிக்கிறது. இந்த மர்மங்களை களைவதற்கான விளக்கத்தை காவல்துறை தான் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த விஷயத்தில் தமிழக அரசு மற்றும் காவல்துறை மீது படிந்துள்ள சந்தேகத்தின் நிழலை அகற்ற முடியாது.

---- மருத்துவர் இராமதாசு அய்யா அறிக்கை---

(குறிப்பு: மேலே உள்ள அறிக்கை மட்டுமே உண்மையானது. அதற்கு மேலே உள்ள 'புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதம்' குறித்த செய்தி நமது கற்பனை ஆகும்.)

சனி, நவம்பர் 19, 2016

மோடி அரசின் பண ஒழிப்பு: தேச பக்தியா, தேசத்தின் மீதான தாக்குதலா?

மோடி அரசின் பண ஒழிப்பு குறித்த விவாதங்களில் - 'இராணுவ வீரர்கள் எல்லையில் நிற்கிறார்கள், குடிமக்களால் வங்கி வாசலில் நிற்கமுடியாதா?' - என்கிற கேள்வியை 'தேசபக்தர்கள்' என்று கூறிக்கொள்வோர் எழுப்புகிறார்கள்!

'இராணுவ வீரர்கள் நாட்டின் நலனுக்காக நிற்கிறார்கள்' என்பது சரிதான். ஆனால், 'வங்கிகளின் வாசலில் காத்திருக்கும் மக்கள் யாருடைய நலனுக்காக நிற்கிறார்கள்?' என்பதுதான் முக்கியமான கேள்வியாகும். 

இந்த கேள்விக்கு சரியான விடை தெரிய வேண்டுமெனில், மோடி அரசின் பண ஒழிப்பு திட்டத்தில் சொல்லப்பட்ட நோக்கங்களை விட, சொல்லாமல் விட்ட 'உண்மை' நோக்கங்களை கவனிக்க வேண்டும்!

மோடி அரசின் உண்மை நோக்கம் என்ன?

மோடி அரசு 'கருப்பு பணத்தையும் கள்ள பணத்தையும்' ஒழிப்பதற்காக 1000 ரூபாய், 500 ரூபாய் தாள்களை ஒழித்ததாக கூறியது. ஆனால், 1. கருப்பு பணத்தை அரசாங்கம் கைப்பற்றவும், 2. மக்கள் பணத்தை கார்ப்பரேட்டுகள் கைப்பற்றவுமே இந்த பண ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது இப்போது தெளிவாகியுள்ளது.

இப்போது வரும் தகவல்களின் படி - செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள 14 லட்சம் கோடி பணத்தில், சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் மோடி அரசுக்கும், சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் பெரும் பணக்காரர்களின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் போகும் எனத்தெரிகிறது. மீதமுள்ள 5 லட்சம் கோடி மக்களின் பணத்தாள் பரிமாற்றத்துக்கு 'மெதுவாக' வரக்கூடும்!

ஆக, கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல - மக்களிடம் புழக்கத்தில் இருந்த பணத்தை மோடி அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் பங்கு போட்டுக்கொள்ளப் போகிறார்கள்!

1. அரசுக்கு போகும் கருப்பு பணம்

14 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 1000 மற்றும் 500 ரூபாய் தாள்கள் திடீரென செல்லாது என அறிவிக்கப்பட்டன. இதன் மூலம் - நல்ல பணமோ அல்லது கள்ள பணமோ - எந்தப் பணமும் அழியவில்லை. மாறாக, மக்களிடம் இருந்த 14 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய் பணம் இப்போது ரிசர்வ் வங்கியின் பணமாக மாறியிருக்கிறது. அவ்வளவுதான் வேறுபாடு.

1000 மற்றும் 500 ரூபாய் தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்பு, பழைய ரூபாய் தாள்களை எரிப்பதாலோ, புதைப்பதாலோ, பதுக்குவதாலோ அந்த பணத்துக்கு எந்த பாதிப்பும் வராது. ஏனென்றல், அவற்றுக்கு இணையான பணத்தை ரிசர்வ் வங்கி புதிதாக அடித்துக்கொள்ளும்.

மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் தாள்களை 'பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு' இப்போது வங்கிகளில் கொடுத்து மாற்றி வருகின்றனர். இதனால், சட்டப்பூர்வமாக பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே மாற்ற முடியும் என்றும், சட்டவிரோதாமாக பணம் வைத்திருப்பவர்கள் மாற்ற முடியாது என்றும் கருதப்படுகிறது.

(இதிலும் கூட அரசில் அங்கம் வகிப்பவர்களால் அரசாங்க துறைகள் மூலமே கருப்பு பணம் மாற்றப்படுவதாக கூறுகிறார்கள். அதாவது, போக்குவரத்து, மின்சாரம் போன்ற அரசுத்துறை நிறுவனங்கள் மக்களிடம் 100 மற்றும் 50 ரூபாய் தாள்களை வாங்கிக்கொண்டு, வங்கிகளின் 1000 மற்றும் 500 ரூபாய் தாள்களாக பணத்தைக் கட்டுகின்றனர்.)

புதிய பணமாற்று விதிகளுக்கு கட்டுப்பட்டு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் வரை மக்கள் மாற்றுவார்கள் என்றும், மீதமுள்ள சுமார் 4 லட்சம் கோடி ரூபாயை மாற்ற முடியாமல் போகும் என்றும் கருதப்படுகிறது (இந்த அளவு கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம். உண்மை மதிப்பு 2017 ஏப்ரல் 1 அன்றுதான் தெரியும்).

எனவே, மக்கள் வங்கிகளில் செலுத்தும் பணத்தாள் மற்றும் அரசுத் துறைகளில் பணமாக ஏற்கனவே இருக்கும் பணத்தாள் - ஆகிய அனைத்தும் 10 லட்சம் கோடி ரூபாய் என்கிற அளவாக இருக்குமானால் - மீதமுள்ள சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் பழைய பணத்தாள் வங்கிகளுக்கு வராமல் போகக்கூடும்.

வங்கிகளுக்கு வராமல் போகும் பணத்தாள் மதிப்பில்லாமல் போவது இல்லை. மாறாக, 2016 டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகளுக்கும், 2017 மார்ச் 31 ஆம் நாளுக்கு முன்பாக  ரிசர்வ் வங்கிக்கும் வந்து சேராத 1000 மற்றும் 500 ரூபாய் பணம் முழுவதுமாக ரிசர்வ் வங்கியின் கணக்கில் தானாகவே சேர்ந்துவிடும். இதனை ரிசர்வ் வங்கி மோடி அரசுக்கு கொடுக்கும். 

ஆக மொத்தத்தில் - மோடி அரசுக்கு புதிதாக 4 லட்சம் கோடி பணம் கிடைக்கும்!

இவ்வாறு, கருப்பு பணத்தை நேரடியாக அரசின் பணமாக மாற்றும் இந்த திட்டத்தை எல்லோரும் வரவேற்கிறார்கள். இது ஒரு வரவேற்க வேண்டிய நல்ல திட்டம் தான்.

2. கார்ப்பரேட்டுகளுக்கு போகும் மக்கள் பணம்.

மக்களிடம் உள்ள 'நல்ல' பணமான சுமார் 10 லட்சம் கோடி பணத்துக்கு இணையான பணத்தாளினை மக்களுக்கு உடனுக்குடன் மோடி அரசு அளிக்குமானால், அது மிகச்சிறந்த கருப்பு பண ஒழிப்பு திட்டமாக இருந்திருக்கும்.

ஆனால், மக்கள் செலுத்தப்போகும் 10 லட்சம் கோடி மதிப்பிலான பணத்தாளுக்கு இணையாக, அதே மதிப்பிலான புதிய பணத்தாளை ரிசர்வ் வங்கி இன்னமும் அச்சிடவே இல்லை. சுமார் 5 லட்சம் கோடிக்கான புதிய பணத்தாளை மட்டுமே ரிசர்வ் வங்கி அச்சிடும் என்று கூறுகின்றனர். அதைக்கூட மக்களுக்கு விநியோகிக்கும் நிலையில் ஏடிஎம் எந்திரங்கள் இல்லை.
மேலும், சில்லரைத் தட்டுப்பாட்டை தடுக்கும் வகையில் 500 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி தாராளமாக வழங்கவில்லை. 2000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே வெளியிட்டு செயற்கையான சில்லரைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளனர்.

இத்தகைய செயற்கையான பணத்தாள் தட்டுப்பாட்டை உருவாக்கி, மக்களின் பணத்தை வங்கிகளில் குவிக்கின்றனர். இனி வங்கி காசோலைகள், மின்னணு பணப்பரிமாற்றம், கடன் அட்டைகள் - ஆகியவற்றின் மூலமாக மட்டுமே பணத்தை செலவிட முடியும், பணத்தாளாக செலவிட முடியாது என்பதன் மூலம், பணம் வலுக்கட்டாயமாக வங்கிகளில் திணிக்கப்படுகிறது.

வங்கிகளில் குவியும் பணம் - மக்களுக்கோ, சிறுதொழில்களுக்கோ, அமைப்புசாராத தொழில்களுக்கோ, விவசாயிகளுக்கோ - இனி கிடைக்காது. இந்தியாவில் வங்கிகள் உருவாக்கி வைத்திருக்கும் மோசமான விதிகளின் காரணமாக, சாதாரண மக்களுக்கு கடன் கிடைக்காது.

வங்கிகளில் குவியும் மக்களின் பணம், இனி கார்ப்பரேட் நிறுவங்களுக்கு கடனாக அளிக்கப்படும். விஜயமல்லையா போன்ற பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் பல ஆயிரம் கோடி கடன் - எதிர் காலத்தில் வராக்கடனாக மாறிப்போகும்.

இவ்வாறு, சாதாரண மக்களின் பணத்தை கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்குவதுதான் 'மோடி அரசின் பண ஒழிப்பு' நடவடிக்கையின் நோக்கம் ஆகும். இது கண்டிக்கத்தக்க, கடுமையாக எதிர்க்க வேண்டிய சதி ஆகும்.

"பொருளாதார படுகொலை"

இந்திய பொருளாதாரம் என்பது ரூபாய் நோட்டுகளால் இயங்கும் பொருளாதாரம் ஆகும். ஒவ்வொரு வீட்டிலும் தங்களது 96% செலவுகளுக்கு பணத்தாள்களையே இந்தியர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்தியாவில் நடக்கும் பணப்பரிமாற்றத்தில் 87% பணத்தாளின் மூலமாக மட்டுமே நடக்கிறது. அதாவது, பணத்தாள் இல்லாவிட்டால் - இந்திய பொருளாதாரம் இயங்காது.

இவ்வாறு, ரூபாய் தாள்களின் மீது இயங்கும் ஒரு பொருளாதாரத்தில் இருந்து, மொத்த பண மதிப்பில் சுமார் 84%  - அதாவது 14 லட்சம் கோடி ரூபாய் - மதிப்பிலான தாள்களை செல்லாது என அறிவித்தது மத்திய அரசு. இந்தப் பணத்தில், சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் மோடி அரசுக்கும், சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் பெரும் பணக்காரர்களின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் போகும் எனத்தெரிகிறது. மீதமுள்ள 5 லட்சம் கோடி மக்களின் பணத்தாள் பரிமாற்றத்துக்கு 'மெதுவாக' வரக்கூடும்!

மக்கள் பயன்பாட்டிலிருந்து பாதியளவுக்கு மேலான பணத்தை பறிப்பது, பெரும் பொருளாதார பேரழிவை உருவாக்கக் கூடும். நாட்டின் 89% மக்களின் வாழ்வாதாரமாக உள்ள சிறுதொழில்கள், அமைப்புசாராத தொழில்கள், விவசாயம் உள்ளிட்டவை பணத்தாள் இன்றி இயங்காது.

இந்திய தேசம் என்பது 'நாடும் அதன் மக்களும்' என்றுதான் இந்திய அரசியல் சாசனம் கூறுகிறது. பெரும்பான்மை மக்கள் மீதான இந்த பொருளாதார தாக்குதலை - தேசபக்தியாக அடையாளப்படுத்துவது உண்மையில் ஒரு தேசத்துரோக செயலே ஆகும்!

என்ன செய்ய வேண்டும்?

அவசர காலங்களின் மக்கள் மனிதாபிமானம் உள்ளவர்களாக மாறுகிறார்கள். ரூபாய் நோட்டு தடைக்கு பின்னர் மக்களின் மனநிலை மாறியுள்ளது. சாதாரண காய்கறி கடைக்காரர்கள், பால் விற்பவர்கள், முடி வெட்டுபவர்கள், மளிகைக் கடைக்காரர்கள், டீக்கடை காரர்கள் என எல்லா எளிய மக்களும், தங்களின் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு தாரளமாக கடன் வழங்குகிறார்கள். ஆனால், இந்த மாற்றம் போதுமானது அல்ல. உண்மையான மாற்றம் மத்திய அரசிடம் ஏற்பட வேண்டும்.
மத்திய அரசுக்கு மக்கள் நலத்தின் மீதும் இந்திய பொருளாதாரத்தின் மீது உண்மையான அக்கறை இருக்குமானால்:

1. பணத்தாள்களை சிறிதும் காலதாமதம் இன்றி மக்களுக்கு வழங்க வேண்டும். மக்கள் 10 லட்சம் கோடி பழைய பணத்தாள்களை வங்கிகளில் செலுத்தினால், அதற்கு இணையான புதிய தாள்களை உடனுக்குடன் வழங்க வேண்டும். அதுவும் ஏற்கனவே புழக்கத்தில் இருந்தது போன்றே, ரூ. 100, ரூ. 500 மதிப்பிலான ரூபாய் தாள்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சில்லரையாக வழங்க வேண்டும்.

2. இந்திய வங்கிகளின் கடன்வழங்கும் முறையில் தலைகீழ் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். பெரிய கடன்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், அதிக அளவில் சிறிய கடன்களை வழங்க வேண்டும். சிறுதொழில்களுக்கும், அமைப்புசாராத தொழில்களுக்கும், விவசாயிகளுக்கும் தாராளமாக கடன்கொடுக்கும் நிலையை உருவாக்க வேண்டும். கடன் வழங்குவதற்கான விதிகளில், மற்ற நாடுகளில் உள்ளது போன்று 'பெரும் சொத்து ஜாமீன்' கேட்காத நிலையை ஏற்படுத்த வேண்டும். அதாவது, சாதாரண வட்டிக்கடைக்காரர்களையும், கந்துவட்டிக் காரர்களையும் நாடாமல் - எல்லோரும் எளிதாக வங்கிகளிடமே கடன் வாங்க வேண்டும். 

வியாழன், நவம்பர் 17, 2016

மோடி அரசின் பண ஒழிப்பு: இந்திய பொருளாதாரத்தின் மீதான போர்!

இந்திய குடும்பங்கள் தங்களது ஆண்டு செலவில் 96% பணத்தாள் மூலமாக செலவிடுகிறார்கள். இந்திய பொருளாதாரம் முழுக்க முழுக்க பணத்தாளின் மூலம் தான் இயங்குகிறது. 

இவ்வளவு முக்கியமான பணத்தாளில் 87% தாள்கள் செல்லாது என்று ஒரே இரவில் அறிவித்துவிட்டது அரசாங்கம். இப்போது, செல்லாது போய்விட்ட பணத்தில் பாதியைக் கூட இனி பணத்தாளாக திருப்பித் தரமுடியாது என்று அடம் பிடிக்கிறது மோடி அரசு.

இது இந்திய பொருளாதாரத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள போர். பெரும் பணக்காரர்களுக்கு ஆதரவாகவும், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எதிராகவும் தொடுக்கப்பட்டுள்ள இந்த தாக்குதலின் விளைவுகள் மிக மோசமாக இருக்கக் கூடும்.

நினைத்தது என்ன?

கருப்பு பணத்தை ஒழிக்கும் ஒரு வழியாக, 1000 ரூபாய், 500 ரூபாய் ஒழிக்கப்பட்டதை நாம் வரவேற்கிறோம். பெரும்பாலான மக்களும் வரவேற்றார்கள். அதாவது, மக்களிடம் பணமாக உள்ள 1000 ரூபாய், 500 ரூபாய் தாள்களை வாங்கிக்கொண்டு, அரசாங்கம் புதிய பணத்தாளை கொடுக்கும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

தற்போது 14 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 500 மற்றும் 1000 ரூபாய் பழைய தாள்கள் புழக்கத்தில் இருப்பதால் - அவற்றில் ஓரிரு லட்சம் கோடிகள் கருப்பு பணம் என்று கருதி ஒதுக்கினாலும் கூட - மீதமுள்ள சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் பழைய தாள்களை அரசாங்கம் பெற்றுக்கொண்டு, உடனடியாக புதிய தாளாக கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பாப்பு.

நடப்பது என்ன?

பழைய 1000 ரூபாய், 500 ரூபாய் தாள்களை எவ்வளவு வேண்டுமானாலும் வங்கிகளில் செலுத்தலாம். ஆனால், குறைந்த அளவுதான் புதிய தாள்களை பெற்றுச்செல்லலாம் - என பணப்பரிமாற்றத்தை ஒருவழி பாதையாக மாற்றி விட்டது மோடி அரசு. 

தற்போதைய மதிப்பீட்டின் படி, இந்திய அரசு புதிதாக வெளியிட்டுள்ள ரூ. 2000 மற்றும் ரூ. 500 தாள்களின் மொத்த அளவு, அதாவது இந்திய ரிசர்வ் வங்கியால் அச்சிட்டு வழங்கக் கூடிய அளவு, அதிகபட்சமாக 5 லட்சம் கோடி என்கிறார்கள். இந்த 5 லட்சம் கோடி ரூபாய் தாள்களைக் கூட, மக்களுக்கு பிரித்துக் கொடுக்கும் சக்தியற்ற நிலையில் வங்கிகளும் ஏடிஎம் எந்திரங்களும் உள்ளன.
அதாவது, ரூ. 12 லட்சம் கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் மக்களுக்கு தேவை. ஆனால், ரிசர்வ் வங்கியால் அளிக்க முடிகிற அதிக பட்ச அளவோ ரூ. 5 லட்சம் கோடி மட்டுமே. அப்படியானால், மீதம் தேவைப்படும் ரூ. 7 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகளுக்கு என்ன செய்யப்போகிறது மத்திய அரசு? 

அரசாங்கத்திடம் புதிய ரூபாய் தாள்கள் போதுமான அளவில் இல்லாததால், ரூபாய் நோட்டுகளுக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்படப்போவது உறுதி என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

நாட்டின் நிலைமை என்ன?

இந்திய பொருளாதாரம் என்பது ரூபாய் நோட்டுகளால் இயங்கும் பொருளாதாரம் ஆகும். இங்கு மக்களின் பணப்பரிமாற்றத்தில் 87% பணத்தாளின் மூலமாக மட்டுமே நடக்கிறது. அதாவது, பணத்தாள் இல்லாவிட்டால் - இந்திய பொருளாதாரம் இயங்காது.

இந்திய மக்களில் ஏதேனும் ஒரு நிதி நிறுவனத்தில் கணக்கு வைத்திருக்கும், 15 வயதுக்கு மேற்பட்ட மக்களின் அளவு 35% மட்டுமே. அவர்களில் 9% மக்கள் மட்டுமே டெபிட் கார்ட் வைத்துள்ளனர். 2% மக்கள் மட்டுமே கிரெடிட் கார்ட் வைத்துள்ளனர். 7% மக்கள் மட்டுமே காசோலையை பயன்படுத்தியுள்ளனர். 2 % மட்டுமே மின்னணு முறையில் பணப்பரிமாற்றம் செய்துள்ளனர். ஆக மொத்தத்தில், இந்தியாவின் எல்லா பணப்பரிமாற்றங்களிலும், வெறும் 5% அளவுக்கு குறைவாகத்தான் மின்னணு முறையில் நடக்கிறது. (ஆதாரம்: THE COST OF CASH IN INDIA, by The Institute for Business in the Global Context)

பணத்தை விட்டுவிட்டு, மின்னணு முறையிலும் காசோலைகள் வாயிலாகவும் பணப்பரிமாற்றம் நடப்பது நல்லதுதான். ஆனால், அதற்கு இன்னமும் இந்திய நாடு தயாராகவில்லை. மின்னணு முறையில் பணப்பரிமாற்றம் செய்வோரும், கிரெடிட் கார்ட் பயன்படுத்துவோரும் கூட - மிக அதிக தேவைகளுக்கு பணத்தாளையே பயன்படுத்துகின்றனர். 

இந்தியாவில் மக்கள் பொருட்களை வாங்கும் கடைகள்/ இடங்களின் எண்ணிக்கை ஒரு கோடி ஆகும். அவற்றில் வெறும் 10 லட்சம் இடங்களில் மட்டும்தான் 'கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட்' அட்டைகளை பயன்படுத்தும் வசதிகள் உள்ளன. இங்கும் கூட மக்கள் பணத்தாளைத்தான் அதிகம் கொடுக்கின்றனர்.

இவ்வாறு, பணத்தாளின் மீது இயங்கும் பொருளாதாரத்தின் மீது - போர் தொடுத்துள்ளது மோடி அரசு. ஒவ்வொரு வீட்டிலும் தங்களது 96% செலவுகளுக்கு பணத்தாள்களையே இந்தியர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். இந்த பணத்தாளை ஒழித்ததன் மூலம் - பொருளாதாரத்தையே முடக்கியுள்ளார்கள்.

மோடி அரசின் வலுக்கட்டாய பணப்பறிப்பு

இந்திய பொருளாதாரத்தில் சுழலும் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் தாளில், குறைந்தபட்சம் 7 லட்சம் கோடியை வங்கிகளின் கணக்கில் குவிக்கப்போகிறது மோடி அரசின் பண ஒழிப்பு திட்டம். இந்தப் பணத்தை பணத்தாளாக தர முடியாது என்று மறுப்பதன் மூலமாக - வங்கிகள் பெரும் பணக்காரர்களுக்கு கடன்களை வாரி வழங்கவும், அவற்றை வராக்கடன் ஆக்கவும் போகிறார்கள்.

மோடி அரசால் இந்திய பொருளாதாரத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த தாக்குதல் முறியடிக்கப்பட வேண்டும்.
குறிப்பு: கருப்பு பணத்தை ஒழிக்க பழைய பணத்துக்கு பதிலாக புதிய தாள்களை தரவேண்டும். அதனை விட்டுவிட்டு, மக்களை கட்டாயப்படுத்தி மின்னணு பணப்பரிமாற்ற முறைக்கு மாற்றலாம் என்பது ஒரு மூடநம்பிக்கை. தடைசெய்யப்பட்ட சுமார் 14 லட்சம் கோடி மதிப்பிலான பணத்தாள்களுக்கு இணையாக, புதிய பணத்தாள் புழக்கத்துக்கு வராமல், இந்திய பொருளாதாரம் ஒருபோதும் சீரடைய வாய்ப்பே இல்லை.

தொடர்புடைய சுட்டிகள்:

1. கருப்பு பண ஒழிப்பு: ஏழைகளிடம் பிடுங்கி பணக்காரர்களுக்கு கொடுக்கும் திட்டமா?

2. மோடி அரசின் சதி: கருப்பு பண ஒழிப்பா? கார்ப்பரேட் கொள்ளையா?

3. புதிய ரூபாய் நோட்டில் ஹிந்தி திணிப்பு: மோடி அரசின் மொழிவெறி!

புதன், நவம்பர் 16, 2016

கருப்பு பண ஒழிப்பு: ஏழைகளிடம் பிடுங்கி பணக்காரர்களுக்கு கொடுக்கும் திட்டமா?

ஒரு கடினமான முயற்சியாக இருந்தாலும், 1000 மற்றும் 500 ரூபாய் தாள்கள் ஒழிக்கப்பட்டதை நாம் வரவேற்கிறோம். அதே நேரத்தில், அரசு முன்னரே திட்டமிட்டிருந்தால் 500 ரூபாய் சில்லரை தட்டுப்பாட்டை பெருமளவு ஒழித்திருக்க முடியும். ஓரளவுக்காவது ஏடிஎம்களை செயல்பட வைத்திருக்க முடியும். மக்களின் துன்பத்தை பெருமளவில் குறைத்திருக்க முடியும் என்பதே பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.

இப்போது நடக்கும் கூத்துகளை பார்க்கும் போது - திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த சில்லரைத் தட்டுப்பாட்டுக்கு பின்னால் வேறு சதிகள் இருக்குமோ என்கிற ஐயம் எழுவது இயல்பானது.

வங்கியில் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம். ஆனால், குறைவான பணத்தை மட்டுமே பணத்தாளாக எடுக்க வேண்டும். செக் மூலமோ, மின்னணு முறையிலோ பணத்தை மாற்ற தடை இல்லை - என்கிறது அரசாங்கம். அதாவது, வங்கிகளில் மட்டுமே மக்களின் பணம் இருக்க வேண்டும் என அரசாங்கம் கட்டாயப்படுத்துகிறது. இந்த வலுக்கட்டாய பணப்பறிப்பு ஏன்?

இந்த முயற்சியின் உண்மை நோக்கம் கருப்ப பண ஒழிப்பு மட்டும்தானா என்கிற கேள்வி தவிர்க்க முடியாதது. குறிப்பாக, சாதாரண மக்களின் பணத்தை அபகரித்து, அதனை பெரும் பணக்காரர்களிடம் அளிக்கும் சதியாக இருக்குமோ என அஞ்ச வேண்டியிருக்கிறது.

அதற்கான சில காரணங்களை பார்ப்போம்:

1. கருப்பு பணம் ஓரிரு லட்சம் கோடி

இந்தியா முழுவதும் சுமார் 15 லட்சம் கோடி மதிப்பிலான பணம் 1000 மற்றும் 500 ரூபாய் தாள்களாக இருப்பதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அதாவது, செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள, 'நல்லப் பணம், கள்ளப் பணம்' ஆகிய அனைத்து ரூபாய் தாள்களின் மொத்த மதிப்பு 15 லட்சம் கோடிகள் மட்டுமே. இவற்றில் எவ்வளவு தான் அதிகப்படியாக மதிப்பிட்டாலும் கூட - பணத்தாளாக உள்ள கருப்பு பணத்தின் மதிப்பு ஓரிரு லட்சம் கோடிகளை தாண்டாது.

(இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பான 125 லட்சம் கோடியில், சுமார் 25% கருப்பு பணமாக இருக்கலாம். ஆனால், மிகப்பெருமளவு கருப்பு பணம் தங்கமாகவும், நிலமாகவும், பினாமி சொத்தாகவும், வெளிநாட்டு முதலீடாகவும் உள்ளது. பணத்தாளாக அதிகம் இல்லை)

2. வராக்கடன் பல லட்சம் கோடி

இந்திய வங்கிகளிடம் பெரும் பணக்காரர்கள் 'பல ஆயிரம் கோடிகளாக கடன் வாங்கி' திருப்பி செலுத்தாத கடன் அளவு - மொத்தமாக 6 லட்சம் கோடிக்கும் கூடுதல் ஆகும். அதாவது, பெரும் கோடீஸ்வரர்கள் திருப்பிச் செலுத்தாத வராக்கடனின் மதிப்பு, பணத்தாளாக உள்ள கருப்பு பணத்தை விட அதிகம். இதனால், இந்தியாவின் வங்கிகள் திவாலாகும் நிலையில் உள்ளன. 

பெரும் பணக்காரர்கள் பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடனில் 2 லட்சத்து 51 ஆயிரம் கோடி ரூபாய், கடந்த 11 ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. யாருடைய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்கிற விவரத்தைக் கூட, உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் மத்திய அரசு வெளியிடவில்லை.

ஆடு, மாடு வாங்க கடன் வாங்கிய விவசாயி பெயரைக் கூட படத்தோடு வெளியிடும் வங்கிகள், ஆயிரக்கணக்கான கோடி பணத்தை பொதுத்துறை வங்கிகளிடம் வாங்கி கட்டாமல் விட்ட பெரும் கோடீஸ்வரகளின் பெயரை, அவர்களின் கடனை தள்ளுபடி செய்த பின்னரும் கூட வெளியிடவில்லை.

3. இந்திய வங்கிகளின் மோசடி கடன்

உலகின் எந்த நாட்டின் வங்கிகளும் செய்யாத மாபெரும் மோசடியை, இந்தியாவின் வங்கிகள் செய்கின்றன. இங்குதான், ஏழைகளிடமும் நடுத்தர மக்களிடமும் உள்ள பணத்தை அபகரித்து, அதனை பணக்காரர்களிடம் கொடுக்கும் வேலையை வங்கிகள் செய்கின்றன. அதாவது, வங்கிகளில் முதலீடு செய்யப்படும் பணம் சாதாரண மக்களுடையது. ஆனால், வங்கிகள் அதனை கடனாகக் கொடுப்பதோ பெரும் பணக்காரர்களுக்கு!

இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துபவை சாதாரண சிறுதொழில்கள், சிறு சேவைகள், வீட்டு தொழில்கள், கடைகள், அமைப்பு சாராத தொழில்கள் போன்றவைதான். 89% மக்களின் வேலை வாய்ப்பாக இத்தகைய தொழில்கள்தான் உள்ளன. Non-corporate sector (comprising partnerships, proprietorships and the self-employed) எனப்படும் இவற்றுக்கு வங்கிகள் போதுமான அளவில் கடன் அளிப்பது இல்லை. மாறாக, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குதான் கடன் அளிக்கின்றன.

இந்திய பொருளாதாரத்தில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு 18% மட்டும்தான். ஆனால், வங்கிகள் அளிக்கும் கடன் தொகையில் 45% கார்ப்பரேட் நிறுவனங்களுக்குதான் அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்திய பொருளாதாரத்தில் Non-corporate sector தொழில்களின் பங்களிப்பு 45% ஆகும். இந்தத் தொழில்களுக்கு வங்கிகள் பெரும்பாலும் கடன் அளிப்பது இல்லை. இத்தகைய தொழில்களை நடத்துவோர் தனியாரிடம் அதிக வட்டிக்கு வாங்கி தொழில் செய்கின்றனர்.
மொத்தத்தில், கார்ப்பரேட் நிறுவங்களுக்கு 45% மற்றும் அரசுக்கு 20% என பணத்தை வங்கிகள் அளிக்கின்றன. மற்ற எல்லா கடன்களுக்கும் 35% பணத்தை மட்டுமே அளிக்கின்றன. அதாவது, மக்களின் சேமிப்புகளை அபகரிக்கும் வங்கிகள் அவற்றை பெரும் நிறுவனங்களுக்கு அரசாங்கத்துக்கும் கொடுத்துவிட்டு - மக்களை வாழ வைக்கும் சிறுதொழில் மற்றும் அமைப்பு சாராத தொழில்களுக்கு நாமம் சாத்துகின்றன.

(இதுகுறித்து விரிவாகக் காண India Uninc, by R. Vaidyanathan எனும் நூலைப் படிக்கவும்)

கார்ப்பரேட் கொள்ளைக்கு வழிசெய்கிறதா மோடி அரசு?

மக்கள் வலுக்கட்டாயமாக வங்கிகளில் பணத்தை வைக்க வேண்டும் என்று நிர்பந்திப்பது யாரின் நலனுக்காக? இப்போது சாதாரண மக்களின் பணம் வங்கிகளில் குவிவதால், இந்தப் பணம் மீண்டும் பெரும் பணக்காரர்களுக்கு கடனாக அளிக்கப்படக்கூடும். 

இந்திய பொருளாதாரத்தின் ஆணிவேரான சாதாரண சிறுதொழில் மற்றும் அமைப்பு சாராத தொழில்களை நடத்துவோருக்கு கடன் அளித்துவரும், வங்கிசாராத கடன் நிறுவனங்கள் இனி இயங்காது. தாளாக பணம் புழங்காததால், இனி தனியாரிடமிருந்து அவசரக் கடன்கள் கிடைக்காது. அமைப்பு சாராத தொழில்களுக்கு வங்கிகளும் கடன் அளிக்காது. இந்தியப் பொருளாதாரம் சிதையும் நிலை இதனால் வரக்கூடும்.

என்ன செய்ய வேண்டும்?

மோடி அரசுக்கு உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்தால்:-

1. பணத்தாளாக உள்ள கருப்பு பணத்தை விட, மிக அதிக தொகையாக உள்ள, பெரும் பணக்காரர்கள் செலுத்த வேண்டிய 6 லட்சம் கோடி வராக்கடனை அவசர சட்டங்கள் மூலமாக வலுக்கட்டாயமாக வசூலிக்க வேண்டும்.

2. இந்திய வங்கிகளின் செயல்பாட்டில் மாற்றம் கொண்டுவந்து, சிறுதொழில் மற்றும் அமைப்பு சாராத தொழில்களுக்கும் சுயதொழில்களுக்கும் தாராளமாக கடன் வழங்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். 

3. உடனடியாக புதிய நோட்டுகளை அதிகம் வெளியிட்டு, பணப்புழக்கத்தை தாராளமாக்கி, வழக்கம் போல பணம் மூலமாகவே மக்கள் பரிவர்த்தனைகளை நடத்த வழி செய்ய வேண்டும். (இந்தியாவில் 87% பணப்பரிமாற்றம், பணத்தாளின் மூலம் நடக்கிறது. இதனை ஒரே இரவில் மாற்றிவிட முடியாது)
எச்சரிக்கை

உலகில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா போன்ற நாடுகளில் எல்லாம் வங்கிகள் மூலம்தானே பணப்பரிவர்த்தனை நடக்கிறது. இங்கு மட்டும் ஏன் பணமாக மாற்ற வேண்டும் என்று கேட்பவர்கள் - அங்கெல்லாம் பொருளாதாரமும், வேலைவாய்ப்பும் கார்ப்பரேட் நிறுவனங்களால் இயங்குகிறது என்பதையும், இங்கு இந்தியாவில் அது அமைப்பு சாராத தொழில்களால் இயங்குகிறது என்பதையும் மறந்துவிடக் கூடாது.

மேலும், மேலைநாடுகளில் வங்கிகள் கடன் அளிக்கும் முறையும், அதனை பெறுவதும் எளிது என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். ஏதேனும் தொழில் நடத்த முன்வந்தால், அந்த தொழிலையேதான் அங்கெல்லாம் வங்கிகள் ஜாமீனாக கருதுகின்றன. இந்தியாவில் கேட்பது போல - மும்மடங்கு சொத்து ஜாமீன் இருந்தால்தான் கடன் தருவேன் என்று வங்கிகள் கூறுவது இல்லை.

மேலை நாடுகளில் - மக்களின் இன்றியமையாத தேவைகளான கல்வி மற்றும் மருத்துவத்துக்கான பெருமளவு செலவுகளை அரசாங்கமே ஏற்கிறது. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிய வருமானம் கிடைப்பதையும் பெருமளவில் அரசாங்கமே உறுதிசெய்கிறது. வருமானத்துக்கு வழி இல்லாதவர்களுக்கு, வேலை கிடைக்கும் வரை அரசாங்கமே ஊதியம் அளிக்கிறது. இவ்வாறான சமூக பாதுகாப்பு இல்லாத இந்தியாவில் - மக்களின் பணப்புழக்கத்தை தடுப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

ஞாயிறு, நவம்பர் 13, 2016

மோடி அரசின் சதி: கருப்பு பண ஒழிப்பா? கார்ப்பரேட் கொள்ளையா?

500 ரூபாய், 1000 ரூபாய் தாள்கள் ஒழிக்கப்பட்டதை பொதுவாக மக்கள் ஆதரித்தனர். ஆனால், இப்போது அதே மக்கள் அரசை எதிர்க்கும் நிலையை உருவாக்கியுள்ளனர். இப்போது நடக்கும் கூத்துகளை பார்க்கும் பொது - மோடி அரசு 'கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில்' இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது.

கார்ப்பரேட் கொள்ளை

சாதாரண ஏழை எளிய மக்களின் வியபாரத்தை ஒழித்து - பன்னாட்டு நிறுவனங்களின் வியபாரத்தையும், இணைய வர்த்தக முறையையும் அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கில் மோடி அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது. சாதாரண கடைகள், உணவகங்கள், சிறு விற்பனையாளர்களிடம் கடன் அட்டைகளை பயன்படுத்தும் வசதி இல்லை. இதனால், கடன் அட்டை வைத்திருப்பவர்கள், சாதாரண தேவைகளுக்கு கூட பெரிய நிறுவனங்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், மின்னணு பண வர்த்தகம், கடன் அட்டை நிறுவங்கள் மற்றும் தனியார் வங்கிகளுக்கு ஆதரவாக மோடி அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது. உயர்நடுத்தர வர்க்கமும், பணம் படைத்தோரும்தான் கடன் அட்டைகளை பயன்படுத்துகின்றனர். சாதாரண எளிய மக்கள் அவற்றை பயன்படுத்தம் நிலை இல்லை. அன்றாடம் சம்பளம் வாங்கும் நிலையிலும், சிறிய வியபாரத்தை நடத்துவோரும் - வங்கிகளில் பணத்தை போட்டு, அதனை வங்கி அட்டை மூலம் செலவிடும் நிலையில் இல்லை. இவர்களை வலுக்கட்டாயமாக மின்னணு பணப்பரிமாற்ற முறைக்கு மாற்றும் வன்முறையில் ஈடுபட்டுள்ளது மோடி அரசு.

அம்பலமாகும் மோடி அரசின் சதி!

மோடி அரசின் 500 ரூபாய், 1000 ரூபாய் தாள்கள் ஒழிப்பு என்பது உண்மையாகவே, கருப்பு பண ஒழிப்பு நோக்கில் இருந்திருந்தால் - இவர்களால் 500 ரூபாய் நோட்டுகளை பெருமளவில் புழக்கத்துக்கு கொண்டுவந்திருக்க முடியும். ஆனால், 2000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே வெளியிட்டு - செயற்கையான சில்லரை தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளனர்.

சிறிய கடையில் 100 ரூபாய்க்கு பொருளை வாங்கிவிட்டோ, எளிய உணவகத்தில் 100 ருபாய்க்கு சாப்பிட்டுவிட்டோ - 2000 ரூபாயை நீட்டினால், அவர்கள் சில்லரைக்கு எங்கே போவார்கள்?
ஒரு அரசு பெரிய நடவடிக்கை எடுக்கும் போது - அதற்கு ஏற்ற வகையில் முன்னேற்பாடுகளை முன்கூட்டியே செய்திருக்க முடியும். புதிய ரூபாய் தாள்களை வழங்கும் வகையில் ஏடிஎம் எந்திரங்களின் மென்பொருளை உடனடியாக மாற்றி சில்லரை தட்டுப்பாடுகளை தடுத்திருக்கலாம். ஆனால், இதற்கு இன்னும் மூன்று வாரங்கள் ஆகும் என்று கூறுவதன் மூலம் - திட்டமிட்டு சில்லரைத் தட்டுப்பாட்டை நீட்டிக்கிறார்கள்.

ஆக, மொத்தத்தில் - பெரிய நிறுவனங்கள், இணையவழி விற்பனையாளர்கள், கடன் அட்டை நிறுவங்கள், தனியார் வங்கிகளுக்கு ஆதரவாகவே - மோடி அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது. இதற்காக 'கருப்பு பண ஒழிப்பு' என்கிற நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.

புதன், நவம்பர் 09, 2016

புதிய ரூபாய் நோட்டில் ஹிந்தி திணிப்பு: மோடி அரசின் மொழிவெறி!

இந்தியாவில் ரூ.1000, ரூ.500 தாள்கள் இனி செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் நோக்குடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. 

ஆனால், இந்த நல்ல நடவடிக்கையின் நடுவே, புதிய ரூபாய் தாளின் வழியாக இந்தி திணிப்பில் மோடி அரசு இறங்கியிருப்பது ஏற்கத்தக்கதல்ல! கண்டிக்கத் தக்கது.

புதிய ரூபாய் தாளில் மொழிவெறி

பழைய ரூபாய் தாளுக்கு பதிலாக, நவம்பர் 10 ஆம் நாள் முதல் புதிய 500 ரூபாய், 2000 ரூபாய் தாள்களை வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ரூபாய் நோட்டுகளில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளையும் இதுவரை சமமாக பயன்படுத்தி வந்தது இந்திய ரிசர்வ் வங்கி. ஆனால், அறிவிக்கப்பட்டுள்ள புதிய 500 ரூபாய், 2000 ரூபாய் தாள்களில் இந்தி மொழிக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் தவிர்க்கப்பட்டுள்ளது.

புதிய ரூபாய் தாள்களில், தூய்மை இந்தியா - தூய்மையை நோக்கி மேலும் ஒரு படி - எனும் பொருள்படும் ஹிந்தி வாசகம் இடம்பெற்றுள்ளது. 

स्वच्छ भारत: 'एक कदम स्वच्छता की ओर' 
(Swachh Bharat: 'ek kadam swachhata ki aur') 

- எனப்படும் இந்த இந்தி வாசகத்துக்கு இணையான, Clean India - A step towards cleanliness என்கிற ஆங்கில வாசகம் இல்லை.


இப்படி, ஹிந்தி வார்த்தைக்கு இணையான ஆங்கில வார்த்தை இல்லாமல் இந்திய ரூபாய் தாள் வெளியிடப்படுவது இதுவே முதன்முறை ஆகும்.

மோடியின் மொழி வெறி ஒழிக!

இந்திய நாட்டில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் தேசிய மொழி இந்தி அல்ல என்று நீதிமன்றங்கள் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டுடனான உறவில் மத்திய அரசு இந்தியை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய சட்டம் கூறும் நிலையில், மாநிலங்களுடனான உறவில் ஆங்கிலம் இந்தி என இரண்டுமே பயன்படுத்தப்படும் என்று ஜவகர்லால் நேரு வாக்குறுதி அளித்துள்ள நிலையில் - புதிய ரூபாய் தாள்களில், இந்திக்கு மட்டும் முன்னுரிமை அளித்தது எப்படி?

மோடி அரசின் மொழி வெறி ஒழிக.வெள்ளி, நவம்பர் 04, 2016

சாதனை: நவம்பர் 4-ல் செயல்பாட்டுக்கு வந்தது பாரீஸ் காலநிலை ஒப்பந்தம்! 

24 ஆண்டு பேச்சுவார்த்தைக்கு பின் சாதனை!
உலகின் சுற்றுச்சூழலைக் காக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பாரீஸ் காலநிலை ஒப்பந்தம் (The Paris Climate Agreement) ஐநா காலநிலை உடன்படிக்கை  நவம்பர் 4 முதல் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. 

இது ஒரு மாபெரும் சாதனை, ஏனெனில் இதற்காக 24 ஆண்டுகளாக உலகெங்கும் போராட்டம் நடக்கிறது.

2000 ஆவது ஆண்டு முதல் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் பசுமைத் தாயகம் அமைப்பு இதற்கான போராட்டங்களையும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் முன்னெடுத்து வருகிறது (படங்களைக் காண்க).  2009 ஆம் ஆண்டு கோபன்ஹெகன் ஐநா காலநிலை மாநாட்டில் (Conference of the Parties - COP 15) மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுடன் நான் கலந்துகொண்டேன். (அதற்கு முன்பு 2002 புதுதில்லி ஐநா காலநிலை மாநாட்டில் (COP 8)  நான் கலந்துகொண்டேன்).

(2015 பாரிஸ் மாநாட்டில் (COP 21) மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் பசுமைத் தாயகம் அமைப்பு பங்கேற்க, ஐநா அழைப்பு அனுப்பியது. ஆனால், சென்னை பெருவெள்ளம் காரணமாக பங்கேற்க இயலவில்லை).
புவி வெப்பம் அதிகரித்து வருவதையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் தடுப்பதற்காக 1992 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஐநா காலநிலை பணித்திட்ட பேரவை (United Nations Framework Convention on Climate Change - UNFCCC) மூலமாக உலகநாடுகள் 23 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. முடிவில் 2015 ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் கூடிய ஐநா காலநிலை மாநாட்டில் (COP21)  'பாரிஸ் காலநிலை உடன்படிக்கை' (Paris Climate Agreement) உலகின் 195 நாடுகளால் ஒருமனதாக ஏற்கப்பட்டது.

நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களை மிதமிஞ்சி பயன்படுத்தியதாலும், காடுகளை அழித்ததாலும் வளிமண்டலத்தில் மாசுக்காற்றின் அடர்த்தி அதிகமாகி, அதனால் பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்துச் செல்கிறது. பெருவெள்ளம், அதிவேக சூறாவளி, பெரும் வறட்சி, நோய்கள் அதிகரிப்பு, வேளாண்மை பாதிப்பு, கடல்வள அழிவு என எண்ணற்ற பாதிப்புகள் இதனால் அதிகமாகியுள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புவியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பை 2 டிகிரி செல்சியஸ் ஆளவுக்கு மிகாமல் மிகக்கீழாக குறைப்பது என்றும், அதற்கு மேலும் 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கீழ் குறைக்க முயற்சிப்பதாகவும் 'பாரிஸ் காலநிலை உடன்படிக்கை' கூறுகிறது.

இந்த உடன்படிக்கையின் மூலம் பெட்ரோல், டீசல், எரிவாயு, நிலக்கரி உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

பின்னணி என்ன? 

காலநிலை மாற்றம் குறித்த பன்னாட்டு அறிவியலாளர்கள் குழு ( (IPCC - Intergovernmental Panel on Climate Change) 1988 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 1992 ஆம் ஆண்டின் ரியோ-டி-ஜெனிரோ புவி உச்சிமாநாட்டில் ஐநா காலநிலை மாற்ற பணித்திட்டப் பேரவை (UNFCCC - United Nations Framework Convention on Climate Change) அமைக்கப்பட்டது. அந்த அமைப்பு சட்டபூர்வமாக 1994 ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்தது முதல், 21 ஆண்டுகளாக 'ஐநா காலநிலை உச்சிமாநாடுகள்' (UNFCCC - Conference of the Parties - COP) ஆண்டுதோரும் கூட்டப்பட்டுள்ளன.

அவற்றில் சில முக்கியத்துவம் வாய்ந்த மாநாடுகள்:

"1997 - கியோட்டோ உடன்படிக்கை"

ஐநா காலநிலை மாற்ற பணித்திட்ட பேரவையின் 3 ஆவது மாநாடு ஜப்பான் நாட்டின் கியோட்டோ நகரில் 1997 ஆம் ஆண்டு கூடிய போது, அங்கு ஒரு புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டது. உலகின் பணக்கார நாடுகள், அதாவது வளிமண்டலத்தில் அதிக மாசுக்காற்றைக் கலக்கவிட்ட நாடுகள், தங்களது நாடுகளில் இருந்து வெளியாகும் கரியமில வாயு அளவைக் குறைக்க ஒப்புக்கொண்டனர்.
உலகை மாசுபடுத்திய நாடுகள் 1990 ஆம் ஆண்டில் எந்த அளவுக்கு கரியமில வாயுவை வெளிவிட்டனவோ, அதற்கு கீழாக 5.2% கரியமில வாயு வெளியாகும் அளவைக் குறைப்பது என ஒப்புக்கொள்ளப்பட்டது (ஒவ்வொரு நாட்டிற்கும் இந்த அளவு மாறுபடும்). இவ்வாறு குறைப்பதற்கான கால அளவு 2008 முதல் 2012 வரை என முடிவெடுக்கப்பட்டது.

உலகின் ஏழை நாடுகள் உடபட எல்லா நாடுகளும் கரியமில வாயுவைக் குறைக்க முன்வந்தால்தான் தாங்களும் குறைக்க ஒப்புக்கொள்வோம் எனக்கூறி, உலகின் மிகப்பெரிய மாசுபடுத்தும் நாடான அமெரிக்கா இந்த உடன்படிக்கையை ஏற்காமல் வெளியேறிவிட்டது.

"2007 - பாலி வழிக்காட்டி"

'காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த 5% கரியமில வாயுவைக் குறைத்தால் போதாது. 85% குறைக்க வேண்டும். அப்போதுதான் உலகைக் காப்பாற்ற முடியும்' என 2007 இல் வெளியான பன்னாட்டு அறிவியலாளர் குழுவின் புதிய மதிப்பீடு சுட்டிக்காட்டியது. இந்த புதிய அவசர நிலைக்கேற்ப தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் புதிய உடன்பாட்டை 2009 ஆம் ஆண்டில் உருவாக்க வேண்டும் என பாலி மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.

மாசுபடுத்திய நாடுகள் மட்டுமே கரியமில வாயுவைக் குறைக்க வேண்டும் என்கிற நிலைபாட்டிற்கு மாறாக, மாசுபடுத்திய நாடுகள் நிதி உதவியும் தொழில்நுட்ப உதவியும் அளித்தால் - மாசுபடுத்தாத ஏழை நாடுகளும் தங்களது நாடுகளில் இருந்து வெளியாகும் கரியமில வாயுவைக் குறைக்க ஒப்புக்கொண்டன.

"2009 - கோபன்ஹெகன் மாநாடு"

உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கோபன்ஹெகன் மாநாடு படுதோல்வியில் முடிந்தது. ஏற்கனவே பாலியில் பேசியபடி கோபன்ஹெகனில் புதிய உடன்படிக்கை உருவாக்கப்படவில்லை. எல்லா நாடுகளும் தங்களது கரியமில வாயுவைக் குறைக்க வேண்டும்.
மாசுபடுத்திய நாடு, மாசுபடுத்தாத நாடு என்கிற பாரபட்சம் வேண்டாம் என பேசப்பட்டது. இதனை ஏற்கும் நாடுகளுக்கு நிதி உதவி கிடைக்கும் என்கிற ஆசை வார்த்தைகள் பேசப்பட்டன. ஆனாலும், எந்த நாடு எவ்வளவு கரியமில வாயுவைக் குறைக்கும் என்கிற கேள்விக்கு பதில் இல்லை.

"2011 - டர்பன் மாநாடு"

ஏற்கனவே 2007 ஆம் ஆண்டு பாலி மாநாட்டின் போது, 2009 கோபன்ஹெகனில் ஒப்பந்தம் செய்வோம் என்று கூறியது போல - இப்போது மீண்டும் 2015 இன் புதிய சட்டபூர்வமான ஒப்பந்தத்தை செய்துகொள்வோம் என்று முடிவு செய்தார்கள்.

ஆனால், இந்த முறை 'எல்லா நாடுகளும்' மாசுக்காற்றைக் குறைக்க வேண்டும் என்று ஒப்புக்கொண்டுவிட்டார்கள்.  மாசுபடுத்திய நாடு, மாசுபடுத்தாத நாடு என்கிற பாரபட்சம் முடிவுக்கு வந்துவிட்டது. வெறும் 4 விழுக்காடு மக்களைக் கொண்டு உலகத்தை 30 விழுக்காடு மாசுபடுத்திய அமெரிக்க நாட்டுக்கும், 17 விழுக்காடு மக்களைக் கொண்டு உலகத்தை வெறும் 3 விழுக்காடு மட்டுமே மாசுபடுத்திய இந்திய நாட்டுக்கும் இனி ஒரேமாதிரி பொறுப்புதான்.

"2015 - பாரிஸ் மாநாடு"

'எல்லா நாடுகளும்' மாசுக்காற்றைக் குறைக்க ஒப்புக்கொள்ளும் ஒப்பந்தம் 2015 பாரிஸ் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2016 நவம்பர் 4 முதல் சட்டபூர்வமாக செயல்பாட்டுக்கு வந்துவிட்டது.