Pages

சனி, நவம்பர் 19, 2016

மோடி அரசின் பண ஒழிப்பு: தேச பக்தியா, தேசத்தின் மீதான தாக்குதலா?

மோடி அரசின் பண ஒழிப்பு குறித்த விவாதங்களில் - 'இராணுவ வீரர்கள் எல்லையில் நிற்கிறார்கள், குடிமக்களால் வங்கி வாசலில் நிற்கமுடியாதா?' - என்கிற கேள்வியை 'தேசபக்தர்கள்' என்று கூறிக்கொள்வோர் எழுப்புகிறார்கள்!

'இராணுவ வீரர்கள் நாட்டின் நலனுக்காக நிற்கிறார்கள்' என்பது சரிதான். ஆனால், 'வங்கிகளின் வாசலில் காத்திருக்கும் மக்கள் யாருடைய நலனுக்காக நிற்கிறார்கள்?' என்பதுதான் முக்கியமான கேள்வியாகும். 

இந்த கேள்விக்கு சரியான விடை தெரிய வேண்டுமெனில், மோடி அரசின் பண ஒழிப்பு திட்டத்தில் சொல்லப்பட்ட நோக்கங்களை விட, சொல்லாமல் விட்ட 'உண்மை' நோக்கங்களை கவனிக்க வேண்டும்!

மோடி அரசின் உண்மை நோக்கம் என்ன?

மோடி அரசு 'கருப்பு பணத்தையும் கள்ள பணத்தையும்' ஒழிப்பதற்காக 1000 ரூபாய், 500 ரூபாய் தாள்களை ஒழித்ததாக கூறியது. ஆனால், 1. கருப்பு பணத்தை அரசாங்கம் கைப்பற்றவும், 2. மக்கள் பணத்தை கார்ப்பரேட்டுகள் கைப்பற்றவுமே இந்த பண ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது இப்போது தெளிவாகியுள்ளது.

இப்போது வரும் தகவல்களின் படி - செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள 14 லட்சம் கோடி பணத்தில், சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் மோடி அரசுக்கும், சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் பெரும் பணக்காரர்களின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் போகும் எனத்தெரிகிறது. மீதமுள்ள 5 லட்சம் கோடி மக்களின் பணத்தாள் பரிமாற்றத்துக்கு 'மெதுவாக' வரக்கூடும்!

ஆக, கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல - மக்களிடம் புழக்கத்தில் இருந்த பணத்தை மோடி அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் பங்கு போட்டுக்கொள்ளப் போகிறார்கள்!

1. அரசுக்கு போகும் கருப்பு பணம்

14 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 1000 மற்றும் 500 ரூபாய் தாள்கள் திடீரென செல்லாது என அறிவிக்கப்பட்டன. இதன் மூலம் - நல்ல பணமோ அல்லது கள்ள பணமோ - எந்தப் பணமும் அழியவில்லை. மாறாக, மக்களிடம் இருந்த 14 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய் பணம் இப்போது ரிசர்வ் வங்கியின் பணமாக மாறியிருக்கிறது. அவ்வளவுதான் வேறுபாடு.

1000 மற்றும் 500 ரூபாய் தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்பு, பழைய ரூபாய் தாள்களை எரிப்பதாலோ, புதைப்பதாலோ, பதுக்குவதாலோ அந்த பணத்துக்கு எந்த பாதிப்பும் வராது. ஏனென்றல், அவற்றுக்கு இணையான பணத்தை ரிசர்வ் வங்கி புதிதாக அடித்துக்கொள்ளும்.

மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் தாள்களை 'பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு' இப்போது வங்கிகளில் கொடுத்து மாற்றி வருகின்றனர். இதனால், சட்டப்பூர்வமாக பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே மாற்ற முடியும் என்றும், சட்டவிரோதாமாக பணம் வைத்திருப்பவர்கள் மாற்ற முடியாது என்றும் கருதப்படுகிறது.

(இதிலும் கூட அரசில் அங்கம் வகிப்பவர்களால் அரசாங்க துறைகள் மூலமே கருப்பு பணம் மாற்றப்படுவதாக கூறுகிறார்கள். அதாவது, போக்குவரத்து, மின்சாரம் போன்ற அரசுத்துறை நிறுவனங்கள் மக்களிடம் 100 மற்றும் 50 ரூபாய் தாள்களை வாங்கிக்கொண்டு, வங்கிகளின் 1000 மற்றும் 500 ரூபாய் தாள்களாக பணத்தைக் கட்டுகின்றனர்.)

புதிய பணமாற்று விதிகளுக்கு கட்டுப்பட்டு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் வரை மக்கள் மாற்றுவார்கள் என்றும், மீதமுள்ள சுமார் 4 லட்சம் கோடி ரூபாயை மாற்ற முடியாமல் போகும் என்றும் கருதப்படுகிறது (இந்த அளவு கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம். உண்மை மதிப்பு 2017 ஏப்ரல் 1 அன்றுதான் தெரியும்).

எனவே, மக்கள் வங்கிகளில் செலுத்தும் பணத்தாள் மற்றும் அரசுத் துறைகளில் பணமாக ஏற்கனவே இருக்கும் பணத்தாள் - ஆகிய அனைத்தும் 10 லட்சம் கோடி ரூபாய் என்கிற அளவாக இருக்குமானால் - மீதமுள்ள சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் பழைய பணத்தாள் வங்கிகளுக்கு வராமல் போகக்கூடும்.

வங்கிகளுக்கு வராமல் போகும் பணத்தாள் மதிப்பில்லாமல் போவது இல்லை. மாறாக, 2016 டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகளுக்கும், 2017 மார்ச் 31 ஆம் நாளுக்கு முன்பாக  ரிசர்வ் வங்கிக்கும் வந்து சேராத 1000 மற்றும் 500 ரூபாய் பணம் முழுவதுமாக ரிசர்வ் வங்கியின் கணக்கில் தானாகவே சேர்ந்துவிடும். இதனை ரிசர்வ் வங்கி மோடி அரசுக்கு கொடுக்கும். 

ஆக மொத்தத்தில் - மோடி அரசுக்கு புதிதாக 4 லட்சம் கோடி பணம் கிடைக்கும்!

இவ்வாறு, கருப்பு பணத்தை நேரடியாக அரசின் பணமாக மாற்றும் இந்த திட்டத்தை எல்லோரும் வரவேற்கிறார்கள். இது ஒரு வரவேற்க வேண்டிய நல்ல திட்டம் தான்.

2. கார்ப்பரேட்டுகளுக்கு போகும் மக்கள் பணம்.

மக்களிடம் உள்ள 'நல்ல' பணமான சுமார் 10 லட்சம் கோடி பணத்துக்கு இணையான பணத்தாளினை மக்களுக்கு உடனுக்குடன் மோடி அரசு அளிக்குமானால், அது மிகச்சிறந்த கருப்பு பண ஒழிப்பு திட்டமாக இருந்திருக்கும்.

ஆனால், மக்கள் செலுத்தப்போகும் 10 லட்சம் கோடி மதிப்பிலான பணத்தாளுக்கு இணையாக, அதே மதிப்பிலான புதிய பணத்தாளை ரிசர்வ் வங்கி இன்னமும் அச்சிடவே இல்லை. சுமார் 5 லட்சம் கோடிக்கான புதிய பணத்தாளை மட்டுமே ரிசர்வ் வங்கி அச்சிடும் என்று கூறுகின்றனர். அதைக்கூட மக்களுக்கு விநியோகிக்கும் நிலையில் ஏடிஎம் எந்திரங்கள் இல்லை.
மேலும், சில்லரைத் தட்டுப்பாட்டை தடுக்கும் வகையில் 500 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி தாராளமாக வழங்கவில்லை. 2000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே வெளியிட்டு செயற்கையான சில்லரைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளனர்.

இத்தகைய செயற்கையான பணத்தாள் தட்டுப்பாட்டை உருவாக்கி, மக்களின் பணத்தை வங்கிகளில் குவிக்கின்றனர். இனி வங்கி காசோலைகள், மின்னணு பணப்பரிமாற்றம், கடன் அட்டைகள் - ஆகியவற்றின் மூலமாக மட்டுமே பணத்தை செலவிட முடியும், பணத்தாளாக செலவிட முடியாது என்பதன் மூலம், பணம் வலுக்கட்டாயமாக வங்கிகளில் திணிக்கப்படுகிறது.

வங்கிகளில் குவியும் பணம் - மக்களுக்கோ, சிறுதொழில்களுக்கோ, அமைப்புசாராத தொழில்களுக்கோ, விவசாயிகளுக்கோ - இனி கிடைக்காது. இந்தியாவில் வங்கிகள் உருவாக்கி வைத்திருக்கும் மோசமான விதிகளின் காரணமாக, சாதாரண மக்களுக்கு கடன் கிடைக்காது.

வங்கிகளில் குவியும் மக்களின் பணம், இனி கார்ப்பரேட் நிறுவங்களுக்கு கடனாக அளிக்கப்படும். விஜயமல்லையா போன்ற பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் பல ஆயிரம் கோடி கடன் - எதிர் காலத்தில் வராக்கடனாக மாறிப்போகும்.

இவ்வாறு, சாதாரண மக்களின் பணத்தை கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்குவதுதான் 'மோடி அரசின் பண ஒழிப்பு' நடவடிக்கையின் நோக்கம் ஆகும். இது கண்டிக்கத்தக்க, கடுமையாக எதிர்க்க வேண்டிய சதி ஆகும்.

"பொருளாதார படுகொலை"

இந்திய பொருளாதாரம் என்பது ரூபாய் நோட்டுகளால் இயங்கும் பொருளாதாரம் ஆகும். ஒவ்வொரு வீட்டிலும் தங்களது 96% செலவுகளுக்கு பணத்தாள்களையே இந்தியர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்தியாவில் நடக்கும் பணப்பரிமாற்றத்தில் 87% பணத்தாளின் மூலமாக மட்டுமே நடக்கிறது. அதாவது, பணத்தாள் இல்லாவிட்டால் - இந்திய பொருளாதாரம் இயங்காது.

இவ்வாறு, ரூபாய் தாள்களின் மீது இயங்கும் ஒரு பொருளாதாரத்தில் இருந்து, மொத்த பண மதிப்பில் சுமார் 84%  - அதாவது 14 லட்சம் கோடி ரூபாய் - மதிப்பிலான தாள்களை செல்லாது என அறிவித்தது மத்திய அரசு. இந்தப் பணத்தில், சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் மோடி அரசுக்கும், சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் பெரும் பணக்காரர்களின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் போகும் எனத்தெரிகிறது. மீதமுள்ள 5 லட்சம் கோடி மக்களின் பணத்தாள் பரிமாற்றத்துக்கு 'மெதுவாக' வரக்கூடும்!

மக்கள் பயன்பாட்டிலிருந்து பாதியளவுக்கு மேலான பணத்தை பறிப்பது, பெரும் பொருளாதார பேரழிவை உருவாக்கக் கூடும். நாட்டின் 89% மக்களின் வாழ்வாதாரமாக உள்ள சிறுதொழில்கள், அமைப்புசாராத தொழில்கள், விவசாயம் உள்ளிட்டவை பணத்தாள் இன்றி இயங்காது.

இந்திய தேசம் என்பது 'நாடும் அதன் மக்களும்' என்றுதான் இந்திய அரசியல் சாசனம் கூறுகிறது. பெரும்பான்மை மக்கள் மீதான இந்த பொருளாதார தாக்குதலை - தேசபக்தியாக அடையாளப்படுத்துவது உண்மையில் ஒரு தேசத்துரோக செயலே ஆகும்!

என்ன செய்ய வேண்டும்?

அவசர காலங்களின் மக்கள் மனிதாபிமானம் உள்ளவர்களாக மாறுகிறார்கள். ரூபாய் நோட்டு தடைக்கு பின்னர் மக்களின் மனநிலை மாறியுள்ளது. சாதாரண காய்கறி கடைக்காரர்கள், பால் விற்பவர்கள், முடி வெட்டுபவர்கள், மளிகைக் கடைக்காரர்கள், டீக்கடை காரர்கள் என எல்லா எளிய மக்களும், தங்களின் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு தாரளமாக கடன் வழங்குகிறார்கள். ஆனால், இந்த மாற்றம் போதுமானது அல்ல. உண்மையான மாற்றம் மத்திய அரசிடம் ஏற்பட வேண்டும்.
மத்திய அரசுக்கு மக்கள் நலத்தின் மீதும் இந்திய பொருளாதாரத்தின் மீது உண்மையான அக்கறை இருக்குமானால்:

1. பணத்தாள்களை சிறிதும் காலதாமதம் இன்றி மக்களுக்கு வழங்க வேண்டும். மக்கள் 10 லட்சம் கோடி பழைய பணத்தாள்களை வங்கிகளில் செலுத்தினால், அதற்கு இணையான புதிய தாள்களை உடனுக்குடன் வழங்க வேண்டும். அதுவும் ஏற்கனவே புழக்கத்தில் இருந்தது போன்றே, ரூ. 100, ரூ. 500 மதிப்பிலான ரூபாய் தாள்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சில்லரையாக வழங்க வேண்டும்.

2. இந்திய வங்கிகளின் கடன்வழங்கும் முறையில் தலைகீழ் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். பெரிய கடன்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், அதிக அளவில் சிறிய கடன்களை வழங்க வேண்டும். சிறுதொழில்களுக்கும், அமைப்புசாராத தொழில்களுக்கும், விவசாயிகளுக்கும் தாராளமாக கடன்கொடுக்கும் நிலையை உருவாக்க வேண்டும். கடன் வழங்குவதற்கான விதிகளில், மற்ற நாடுகளில் உள்ளது போன்று 'பெரும் சொத்து ஜாமீன்' கேட்காத நிலையை ஏற்படுத்த வேண்டும். அதாவது, சாதாரண வட்டிக்கடைக்காரர்களையும், கந்துவட்டிக் காரர்களையும் நாடாமல் - எல்லோரும் எளிதாக வங்கிகளிடமே கடன் வாங்க வேண்டும். 

கருத்துகள் இல்லை: