Pages

திரை விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரை விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஆகஸ்ட் 15, 2013

ஆதலால் காதல் செய்வீர்: அற்புதமான திரைக்காவியம்

இது காதலை ஆதரிக்கும் படமென்றோ அல்லது எதிர்க்கும் படமென்றோ வகைப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. இது உண்மைக் காதலைச் சொல்லும் படமா அல்லது நாடகக் காதலைச் சொல்லும் படமா என்றும் தெரியவில்லை. படத்தின் கிளைமாக்ஸ் என்பது சுபமான முடிவா அல்லது டிராஜடி முடிவா என்று கூட தெரியவில்லை.

ஆனால், காதலிக்க நினைப்பவர்கள், காதலிப்பவர்கள், காதலிப்போரின் நண்பர்கள், காதலிப்போரின் பெற்றோர்கள், காதலை ஆதரிப்போர், காதலை எதிர்ப்போர் - என எல்லோரும் கட்டாயமாக பார்க்க வேண்டிய திரைப்படம் என்று கட்டாயமாகச் சொல்லலாம்.
படிக்கும் வயதில் இருவர் காதலில் வீழ்கின்றனர், நண்பர்கள் முழு மனதோடு உதவுகின்றனர், அவர்களது காதலை குடும்பத்தினர் எதிர்க்கின்றனர், பின்னர் ஆதரிக்கின்றனர், இவர்களின் காதலில் சாதி தலையிடுகிறது, அரசியல்வாதிகள் தலையிடுகின்றனர் - பின்னர் இவர்களின் காதல் என்ன ஆனது என்பதைச் சுற்றிவளைக்காமல், சுருக்கமாகவேக் கூறி படத்தை முடித்து விடுகின்றனர்.

ஆனால், காதல் என்பது இரண்டு தனி மனிதர்களின் தனிப்பட்ட சொந்த வாழ்க்கை மட்டுமல்ல, அதில் அவர்களது குடும்பத்தினர், சொந்தக்காரர்கள் என ஏராளமான உயிர்களின் வாழ்க்கையும் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை பொட்டில் அடித்தாற்போல நன்றாக உறைக்கும்படி சொல்கிறார்கள்.

இது போரடிக்கும் படம் அல்ல. விருவிருப்பான படம்தான். கட்டாயம் பாருங்கள்.

புதன், ஆகஸ்ட் 07, 2013

சட்டத்தை மீறும் வேந்தர் மூவிஸ் தலைவா திரைப்படம்: பதில் சொல்வாரா விஜய்?

அரசின் சட்டங்கள், விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை விஜய் நடித்த தலைவா திரைப்படம் அப்பட்டமாக மீறியுள்ளதாகத் தெரிகிறது. இந்தத் திரைப்படத்தை புதிய தலைமுறை தொலைக்காட்சியை நடத்தும் பாரிவேந்தரின்  'வேந்தர் மூவிஸ்' வெளியிடுகிறது.
விஜய் நடித்த தலைவா திரைப்படம் வெள்ளிக்கிழமை (ஆக.9)வெளியாக உள்ளது. ஆனால் அரசின் ஒத்துழைப்பும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே இந்தப் படத்தை வெளியிடுவோம் என்று திரையரங்க உரிமையாளர்கள் கூறியுள்ளனர். 

இந்நிலையில் சென்னை நகரில் உள்ள திரையரங்குகள் தலைவா பட நுழைவுச் சீட்டு முன்பதிவை திடீர் என்று இன்று நிறுத்தியுள்ளன என்றும் செய்திகள் வந்தன. மறுபுறம் சென்னையில் உள்ள திரையரங்குகளுக்கு தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப்படை என்ற அமைப்பினர் பெயரில் வெடிகுண்டு மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

சட்டத்தை மீறும் தலைவா திரைப்படம்

விஜய் நடிப்பில், புதிய தலைமுறை தொலைக்காட்சியை நடத்தும் பாரிவேந்தரின்  'வேந்தர் மூவிஸ்' வெளியீட்டில் வெளியாகும் தலைவா திரைப்படத்துக்கான விளம்பர பதாகைகள் சட்டத்துக்கு புறம்பான வகையில் சென்னை நகரில் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஒற்றன்செய்தி எனும் இணையச் செய்தியில் வெளியாகியுள்ள தகவல்:
"சில வருடங்களுக்கு முன்பு அதாவது 2007-ல் ரஜினிகாந்தின் சிவாஜி படத்தின் பிரமாண்ட பேனர்கள் சென்னை மாநகரை அலங்கரித்து. அதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு சினிமா மற்றும் வணிக ரீதியான பேனர்கள் மற்றும் பிரமாண்ட விளம்பர பலகைகளை பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் வைக்க கூடாது என்றும், வைத்தாலும் அதிகபட்சம் மூன்று நாட்கள் மட்டுமே வைத்து, பின் அகற்றிவிட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

இதற்கு அரசிடமிருந்து எழுத்துபூர்வமாக அனுமதி கடிதம்  பெறவேண்டும். அரசியல் கட்சிகள் கூட இரண்டு மூன்று நாட்களில் பேனர்களை அகற்றி விடுகிறது. இந்த மாதிரி பேனர்கள் வாகன ஓட்டிகள் கவனத்தை சிதறடித்து, விபத்துகள் உருவாவதற்கு காரணமாகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் மிஸ்ரி ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் தலைவா படம் ஆகஸ்ட் 9ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பிரமாண்டமான, அகலமான பேனர்கள் சென்னை நகரின் முக்கிய சாலைகளிலும், பெரிய கட்டிடங்களின் மேலும் வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி சட்ட அதிகாரியிடம், பேனர்கள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? என்று கேட்டதற்கு அவர் ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள சொன்னார். சென்னை மாநகரில் பேனர்கள் வைப்பதற்கு தயாரிப்பாளர்கள் சார்பில் எந்த அனுமதியும் கோரப்படவும் இல்லை, நாங்கள் அனுமதியும் கொடுக்கவில்லை என்று ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

சட்டத்திற்கு புறம்பாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றவும், சட்டத்தை மீறியவர்கள் மீது தகுந்த நடவடிக்கையும் எடுப்பார்களா சம்பந்தபட்ட அதிகாரிகள்?" - என்று கேட்கிறது ஒற்றன்செய்தி!

ஒற்றன்செய்தி: சென்னை நகரை அனுமதியின்றி ஆக்கிரமித்திருக்கும் விஜய்’யின் “தலைவா” விளம்பர பலகைகள்

சனி, ஜனவரி 26, 2013

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடையை நீக்க வேண்டும் - மருத்துவர் இராமதாசு அய்யா

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடையை நீக்க வேண்டும் என மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரியுள்ளார்:

"தமிழ்நாடு உட்பட உலகம் முழுவதும் நேற்று வெளியிடப்படுவதாக இருந்த நடிகர் கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழக அரசு திடீரென தடை விதித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து ஆந்திரா மற்றும் கர்நாடகத்தின் சில பகுதிகளிலும் இப்படத்தை வெளியிடுவதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
விஸ்வரூபம் திரைப்படத்தில் இஸ்லாமிய சமுதாயத்தினரின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் சில காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக பல்வேறு அமைப்புகள் புகார் அளித்திருப்பதாகவும், அதனால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படலாம் என்பதால் தான் இப்படத்திற்கு தற்காலிக தடை விதிக்கப் பட்டிருப்பதாகவும் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்தின் கதை பற்றியோ அல்லது காட்சி அமைப்புகள் பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது என்பதாலும், இது குறித்த வழக்கு  நீதிமன்றத்தில் இருப்பதாலும் இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

ஆனால், நடிகர் கமலஹாசன் மதங்களைக் கடந்த கலைஞர். எந்த மதத்தினர் எந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுப்பவர். 1992 -ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த கலவரங்களில் இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, அதை கடுமையாக கண்டித்ததுடன், அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவை நேரில் சந்தித்து , இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தை தடுத்து நிறுத்தும்படி வலியுறுத்தியவர். 
இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்காக பாடுபடும் ஹார்மோனி இந்தியா அமைப்பிலும் முக்கியப் பொறுப்பில் இருந்து பல்வேறு நல்லெண்ண நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இப்படிப்பட்ட கமலஹாசன் இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் திரைப்படம் எடுத்திருக்க மாட்டார் என்று நம்பலாம். அதுமட்டுமின்றி , விஸ்வரூபம் திரைப்படம்  நடுநிலையான இஸ்லாமியர்களை பெருமையடையச் செய்யும் விதத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது என்று கமலஹாசன் கூறியுள்ள நிலையில், இதை பொதுவான இஸ்லாமியர்கள் உள்ளிட்ட ரசிகர்களின் முடிவுக்கே விட்டுவிடுவது தான் சரியானதாக இருக்கும். மாறாக படத்தை முடக்க முயல்வது எதிர்மறையான எண்ணத்தையே ஏற்படுத்தும்.
இத்திரைப்படத்திற்கு தமிழக அரசு திடீரென தடைவிதித்ததன் பின்னணியில் அரசியலும் கலந்திருப்பதாக கருதுகிறேன். விஸ்வரூபம் படத்திற்கு தணிக்கை வாரியம் அனுமதி அளித்துவிட்ட நிலையில் , தமிழக அரசு தலையிட்டு, யாருடைய கருத்தையும் கேட்காமல் தடை விதித்திருப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதாகும். 

அண்மைக்காலமாகவே தமிழக அரசு கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல்களில் ஈடுபட்டுவருகிறது. சட்டம் - ஒழுங்கிற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்றால், அதை சமாளிக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும்; இதற்காக திரைப்படத்திற்கு தடை விதிப்பது முறையல்ல.

எனவே, விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழக அரசு உடனடியாக நீக்கவேண்டும். எனது அன்பிற்குரிய இஸ்லாமிய அமைப்புகளும் இந்தப் பிரச்சினையை உணர்ச்சி வேகத்தில் அணுகாமல் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி யதார்த்தமான தீர்வை எட்ட முன்வரவேண்டும்."

- என மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரியுள்ளார்:

வியாழன், ஜனவரி 10, 2013

பாவத்தைக் கழுவியதா ஆனந்த விகடன்: சமந்தாவுக்கு சிறந்த நடிகை விருது!

நீதானே என் பொன்வசந்தம் திரைப்படம் குறித்து அநியாயமாக எதிர்ப்பு விமர்சனத்தை பத்திரிகைகளும் வலைப்பூ விமர்சகர்களும் எழுதினர். கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்று வள்ளலார் சொன்னது போல, கௌதம் மேனனின் படத்தை உள்வாங்கும் திறன் விமர்சர்களுக்கு இல்லை என்பதை இப்படம் மெய்ப்பித்தது. 

ஆனால், தாமதமாக வந்த பல வலைப்பூ விமர்சனங்கள் நீதானே என் பொன்வசந்தம் மிகச்சிறந்த திரைப்படம் என எடுத்துக்கூறின. (1. வீடு திரும்பல்,  2. யுவகிருஷ்ணா, 3. நீதானே என் பொன்வசந்தம்: 2012-ன் மிகச்சிறந்த காவியம்!)
மிகச்சிறந்த இப்படத்திற்கு 40 மதிப்பெண்கள் மட்டுமே கொடுத்து பாவம் தேடிக்கொண்டது ஆனந்த விகடன். ஆனால், நல்ல வேலையாக 2012 ஆம் ஆண்டின் சிறந்த நடிகை என்று "நீதானே என் பொன்வசந்தம்" கதாநாயகி சமந்தாவிற்கு விருது வழங்கியுள்ளது ஆனந்த விகடன்.

"வீடு திரும்பல்" வலைப்பூவிலிருந்து ஒரு பின்னூட்டம்:

"வெளியேதெரியாமல் அமுங்கிப்போன சில நல்ல படங்களை தேடிப்பிடித்து பார்க்கவைத்தவர்கள் நம் இணையதள விமர்சகர்கள் இவர்கள் விமர்சனம் தரமானது, உண்மையானது. ஆனந்தவிகடன் போன்ற பத்திரிக்கைகள் தரமான படங்களுக்கு 45 மதிப்பெண்னும், குப்பை படங்களுக்கு 42 மதிப்பெண்னும் வாரி வழங்கும் வருமான விசுவாசம் இங்கே இருக்காது. இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து இருந்த நீதானே என் பொன் வசந்தத்திற்கு இவர்களின் எதிர்மறையான விமர்சனம் படத்தின் மீதான எனது ஆர்வத்தை குறைத்துவிட்டது. 
"அம் மனநிலையிலேயே படத்தை பார்த்தேன். ஆனால் படம் ஓட ஓட என்னை முழுதும் ஆக்ரமித்துவிட்டது. படம் முடிந்தும் அதில் இருந்து வெளிவர முடியவில்லை. சமந்தா- சமகால நடிகைகளிடம் இல்லாத ஒரு ஈர்ப்பு. கணகள் முழுவதும் காதல். காதலை வெளிப்படுத்தும் பொழுதும், பிரியும்பொழுதும் அவரின் துடிப்பு அழகு. கடைசி 30 நிமிடம் fentastic. 
ஜீவாவின் திருமண வரவேர்ப்பிற்கு சென்று அங்கு அவரின் துடிப்பு மனதை பிசைகிறது. இங்கே இளையராஜா வேறு... ஐயோ...பூங்காவில் ஜீவா திருமணத்தை பற்றி பேசும்போது...அது உன்னை பத்தி பேசுனது, கல்யாணத்த பத்தி இல்ல என்று கூறும் காட்சி...இன்னும் திரும்ப திரும்ப இப்படத்தை பார்த்துகொண்டே இருக்கின்றேன். கௌதமின் படைப்புகளில் மிகத்தரமான படைப்பும் இதுதான் என்பது என் இரசனையின் முடிவு, விண்ணைதாண்டி வருவாயாவை விட. I hate web reviewers. என்ன ஆச்சி உங்களுக்கு. சறுக்கியது கௌதம் அல்ல.- ரசிகர்கள்தான்." என்று அந்த வலைப்பூவில் கூறப்பட்டிருந்தது.

கொஞ்சமாவது பாவத்தைக் கழுவிய ஆனந்த விகடனுக்கு நன்றி.

வெள்ளி, ஜனவரி 04, 2013

ரஜினி ஒரு மாமனிதர் - எனது அனுபவம்!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பிறந்த நாள் செய்தியாக "தயவு செய்து சிகரெட் பிடிக்காதீர்கள். அதை இன்றே, இப்போதே விட்டு விடுங்கள்" என்று கேட்டுக்கொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள் சிகரெட் பழக்கத்தை கைவிட்டனர்.

சைதாப்பேட்டையில் ரசிகர்கள் சிகரெட் பாக்கெட்டுகளை எரித்தனர். பொன்னேரி பகுதியில் ரசிகர்கள் சிகரெட் பழக்கத்தை கைவிட வற்புறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினார்கள்.இந்த நிலையில் ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார் ரஜினி.
ரசிகர்கள் கூறும்போது, "தினமும் ஆறு பாக்கெட் சிகரெட் பிடிப்போம். உங்கள் அறிவுரையை ஏற்று அப்பழக்கத்தை விட்டுவிட்டோம். இதனால் தினமும் ரூ. 300 வரை மிச்சமாகிறது. குடும்பத்தினர் சந்தோஷப்படுகிறார்கள்" என்றனர். ரொம்ப மகிழ்ச்சி என்று கூறிய ரஜினி, இதைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றார்" என்று செய்திகள் கூறுகின்றன. (இங்கே காண்க: புகைப் பழக்கத்தைக் கைவிட்ட ரசிகர்களை நேரில் பாராட்டிய ரஜினி!)

இந்த நிகழ்வினை கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட ஒரு மாபெரும் மாற்றம் என்று நான் கருதுகிறேன்.

ஓர் நெகிழ்ச்சியான அனுபவம்.

1998 ஆம் ஆண்டு வாக்கில் மருத்துவர் அய்யா அவர்கள், புகையிலை தீமையை எதிர்த்து பசுமைத் தாயகம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள ஆணையிட்டார்கள். அது தொடர்பான வேலைகளில் ஈடுபட்ட காலத்தில் 2000 ஆவது ஆண்டுவாக்கில், 'சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகளால் புகைபிடிக்கும் பழக்கம் அதிகமாகிறது' என சில அறிவியல் ஆய்வுகள் வெளிவந்ததைக் காண முடிந்தது. எனவே, பசுமைத் தாயகம் சார்பில் 'சினிமாவும் புகைபிடிக்கும் பழக்கமும்' என்கிற கருத்தில் நாட்டம் செலுத்தத் தொடங்கினோம்.

நடிகர் சூர்யா புகைபிடிக்கும் காட்சி - உலகின் முதல் போராட்டம்!

2002 ஆம் ஆண்டு ஜூலை 19 அன்று நடிகர் சூர்யா நடித்த 'ஸ்ரீ' திரைப்படம் வெளிவர இருந்தது. இதற்கான மிகப்பெரிய விளம்பர பேனர்,  நடிகர் சூர்யா புகைபிடிக்கும் காட்சியுடன் சென்னை அண்ணா சாலையில் தேவி திரையரங்கின் எதிரே மே மாதமே அமைக்கப்பட்டிருந்தது. அதனை எதிர்த்து போராட வேண்டும் என்று மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் தெரிவித்தார்கள்.
மே 31 உலக புகையில எதிர்ப்பு நாளை முன்னிட்டு அந்த பதாகையை மறைத்து பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் எதிர்ப்பு பதாகையைக் கட்டப்பட்டது. மறுநாள் பத்திரிகைகளில் அது செய்தியாக வெளியானது. உண்மையில் சினிமாவில் புகைபிடிப்பதை எதிர்த்து உலகில் நடந்த முதல் போராட்டம் அதுதான்.

பாபா பட எதிர்ப்பு போராட்டம்

2002 ஆகஸ்ட் 15 அன்று வெளிவர இருந்த பாபா திரைப்படத்தின் முதன்மை விளம்பரம் நடிகர் ரஜினிகாந்த் புகைபிடிக்கும் படத்துடன் வெளிவந்திருந்தது. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட வேண்டும் என்று மருத்துவர் அய்யா அவர்களிடம் பசுமைத் தாயகம் சார்பில் கோரப்பட்டது. பாபா திரைப்படத்தின் புகைபிடிக்கும் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர் அய்யா அவர்கள் 2002 ஆகஸ்ட் 11 அன்று பூம்புகாரில் நடந்த மாநாட்டில்  பேசினார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் மிகப்பெரிய ஒரு அரசியல் சக்தியாக பார்க்கப்பட்ட அக்காலத்தில் மருத்துவர் அய்யா அவர்களின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக உருவெடுத்தது. மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மருத்துவர் அய்யா அவர்களை சட்ட ரீதியில் எதிர்கொள்வேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
பின்னர், சினிமாவில் புகைபிடிப்பதற்கு எதிரான ஆய்வுகளும் வெளியாயின. புகழ்பெற்ற மருத்துவ ஆய்வு பத்திரிகையான லான்செட் 2003 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில் புகைபிடிக்க தொடங்கும் இளம் வயதினரில் 52% பேர் திரைப்படங்களை பார்த்து புகைபிடிக்க கற்றுகொள்வதாகக் கூறியது. (Effect of Smoking on Movies - THE LANCET 2003) இந்தியத் திரைப்படங்களில் சிகரெட் நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு புகைபிடிக்கும் காட்சிகள் திணிக்கப்படுகின்றன என்று உலக சுகாதார நிறுவனம் 2003 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை கூறியது. (“BOLLYWOOD” VICTIM OR ALLY- WHO 2003)
அதே ஆண்டில் (2003) உலக புகையிலை எதிர்ப்பு நாள் முழக்கமாக "புகையில்லா சினிமா" எனும் கருத்தை முன்வைத்தது உலக சுகாதார நிறுவனம். (World No Tobacco Day 2003: Tobacco free film)

அதன் பிறகு, திரைப்படங்களில் புகைபிடிக்கும் எல்லா நடிகர்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து பசுமைத் தாயகம் போராடியது. தமிழ் திரைப்பட நடிகர்களில் திரு. கமலஹாசன், திரு. சூர்யா, திரு. விஜய், திரு. விக்ரம் ஆகியோர் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று வெளிப்படையாக அறிவித்தனர். ஏ.வி.எம் நிறுவனம் புகைபிடிக்கும் காட்சிகளுடன் இனி திரைப்படங்கள் எடுக்க மாட்டோம் என்று அறிவித்தது.
(மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் இந்திய நலவாழ்வுத் துறை அமைச்சராக பதவியேற்ற பின்னர் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிக்கு எதிராக சட்ட விதிகளை உண்டாக்கினார். பலவிதமான சட்ட போராட்டங்களுக்கு பின்னர் இப்போது - திரைப்படங்களில் புகையிலை எச்சரிக்கை, விழிப்புணர்வு விளம்பரம், புகைபிடிக்கும் காட்சி வரும்போது அதற்குள் எச்சரிக்கை என அந்த விதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.)
விஜய் 'துப்பாக்கி' படத்தில் புகைபிடிக்கும் காட்சியுடன் சுவரொட்டி வெளியானதற்கு பசுமைத் தாயகம் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்படத்தில் அக்காட்சி இடம்பெறவில்லை.

ரஜினி - மாபெரும் மனமாற்றம்

மருத்துவர் அய்யா அவர்களின் கட்டளையின் பேரில், சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகளுக்கு எதிராக பசுமைத் தாயகம் அமைப்பு தொடர்ச்சியாக போராடிவரும் நிலையில், தனது 63ஆவது பிறந்த நாள் விழாவில் பேசிய ரஜினிகாந்த் அவர்கள் "சிகரெட் பிடித்தனால் எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. நுரையீரல் பாதிப்பைத் தொடர்ந்து கிட்னியில் பிரச்சினை ஏற்பட்டது. முதலில் சென்னையிலும், பிறகு சிங்கப்பூரிலும் சிகிச்சை பெற்றேன். இந்த நேரத்தில் நான் ரசிகர்களிடம் கேட்டுக்கொள்வது இதுதான். தயவு செய்து சிகரெட் பிடிக்காதீர்கள். அதை இன்றே, இப்போதே விட்டுவிடுங்கள்" என்று கோரினார்.

இதே நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் அவர்கள், முன்பு அவர் 'பாபா' படத்தில் புகைபிடிக்கும் காட்சியில் நடித்தற்கு மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை சூசகமாகக் குறிப்பிட்டு "ஆவர் சொன்ன கருத்து ரொம்ப நல்ல கருத்து. அதற்கு பிறகு நான் நடிக்கின்ற படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சியை வைக்கவில்லை" என்றும் குறிப்பிட்டார்.

மருத்துவர் அய்யா அவர்கள் ரஜினிகாந்த் அவர்களைத் தனிப்பட்ட முறையிலோ, உள்நோக்கத்துடனோ எதிர்க்கவில்லை. ஒரு நியாயமான நோக்கத்திற்காக, ரஜினிகாந்த் எதிர்க்கவே முடியாதவர் என்று கருதப்பட்ட நேரத்தில், இதற்காக பலராலும் தூற்றப்படுவோம் என்று தெரிந்தும் மருத்துவர் அய்யா அவர்கள் ரஜினிகாந்த் புகைபிடிக்கும் காட்சிகளை எதிர்த்தார். அன்று பலரும் மருத்துவர் அய்யாவுக்கு ஏன் இந்த வேலை என்று கேட்டனர். அந்தக் கேள்விக்கு இன்று ரஜினிகாந்த் அவர்களே பதில் சொல்லிவிட்டார்.

ஒருகாலத்தில் புகைபிடிப்பதை ஒரு ஸ்டைலாக அறிமுகப்படுத்திய ரஜினிகாந்த அவர்கள், இன்று புகைபிடிப்பதைக் கைவிடுவதற்கான அடையாளமாக பார்க்கப்படுகிறார். இந்த மாற்றம் வரவேற்க தக்கதாகும். அதுமட்டுமில்லாமல், தவறான நிலைபாடுகளில் வீம்பாக இருக்கும் சராசரி மனிதர்களைப் போன்று இல்லாமல் - தவறுதான் என தன்னைத் திருத்திக்கொண்டு, தவறு செய்யவேண்டாம் என அடுத்தவருக்கும் போதிக்கும் ரஜினிகாந்த் அவர்கள் மாமனிதர்தான்.
மேலே உள்ள சுவரொட்டி ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி தெரிவித்து சென்னையில் ஒட்டப்பட்டது. இதனைப் பார்த்துவிட்டு மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்ட ரஜினிகாந்த் அவர்கள் 'நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்' என்று கூறினாராம். வாழ்க ரஜினி.

சனி, டிசம்பர் 29, 2012

நீதானே என் பொன்வசந்தம்: 2012-ன் மிகச்சிறந்த காவியம்!

'நீதானே என் பொன்வசந்தம்' இந்த ஆண்டின் மிகச்சிறந்த ஆற்புதமான தமிழ்த் திரைப்படம். ஒரு நல்ல திரைப்படத்தை ஆனந்த விகடனும் சில முன்னணி வலைப்பூ விமர்சகர்களும் எதற்காக மோசமாக சித்தரித்தனர் என்பது புரியாத புதிராகவுள்ளது! வலையுலகின் திரை விமர்சனங்களையும் பத்திரிகை விமர்சனங்களையும் அப்படியே நம்பிவிடக்கூடாது என்கிற ஞானோதயத்தை அளித்திருக்கிறது இத்திரைப்படம்.

மென்மையான காதல் கதைகளை முன்வைத்து ஆபாசமில்லாமல் மிகச்சிறந்த காவியமாக திரைப்படங்கள் அமைய முடியும் என்பதற்கு 'தில்வாலே துல்ஹனியா லே ஜயாங்கே' இந்தி படத்திற்கு அடுத்ததாக வந்துள்ள மிகச்சிறந்த திரைப்படம் 'நீதானே என் பொன்வசந்தம்' என்று கருதுகிறேன். ஒரு அழகான காட்சிக் கவிதையாக, நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட ஒரு சிலையை வடிப்பது போன்று திரையில் செதுக்கப்பட்ட கலைவடிவம் என்று கூட இப்படத்தைச் சொல்லலாம்.
'படம் என்றால் அது மெசேஜ் சொல்ல வேண்டும். சமூக சீர்திருத்தத்திற்கு பாடுபட வேண்டும்' என்கிற எதிர்பார்ப்பெல்லாம் எனக்கு இல்லை. தவறான பழக்கங்களைத் திணிக்காத வகையில், ஆபாசத்தை அள்ளி வீசாத அளவுக்கு திரைப்படங்கள் இருந்தால் போதும்.

புதிய படங்கள் வெளிவரும்போது அவசரப்பட்டு பார்க்காமல், வலைப்பூ விமர்சனங்களையும் பத்திரிகை விமர்சனங்களையும் படித்துவிட்டு படம் பார்க்க போவது உண்டு. அந்தவகையில்  'நீதானே என் பொன்வசந்தம்' குறித்த சில வலைப்பூ விமர்சனங்களும் ஆனந்தவிகடன் விமர்சனமும் அப்படத்தை மோசமாகவே சித்தரித்திருந்தன. ஆனால், திரையில் படத்தைப் பார்த்தபோது அந்த விமர்சனங்கள்தான் மோசமாக தெரிந்தன. (ஆனாலும், சில வலைப்பூ விமர்சகர்கள் இது மிகச்சிறந்த படம் என்றும் கூறியுள்ளனர்)

'நீதானே என் பொன்வசந்தம்' மிகச்சிறந்த படம்

இப்போது எந்த திரைப்படத்துக்கு போனாலும், முதலில் 'புகைபிடித்தால் புற்றுநோய் வரும், புகையிலை உயிரைக் கொல்லும்' என்று விளக்கம் சொல்லி அதற்கு ஒரு சிறு படமும் போடுவார்கள் (இதற்காக போராடி நடைமுறைப் படுத்தியதில் எனக்கும் பங்குண்டு).

ஆனால், அந்த புகையிலை எதிர்ப்பு செய்தி 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் இல்லை. காரணம் புகைபிடிக்கும் காட்சியோ, புகையிலைப் பொருட்களோ எதுவும் இப்படத்தில் சிறிதளவும் இல்லை. குடிக்கிற காட்சி கூட ஒரே ஒரு காட்சியில் மறைமுகமாக உள்ளது. ஆபாசமோ, குத்தாட்டமோ கூட இல்லை. (சந்தானம் மட்டும்தான் சில இரட்டை அர்த்த வசனங்களையும் குடியையும் பேசுகிறார். அவர் நமது அன்புக்கு பாத்திரமானவர் என்பதால், அதைக் கண்டுகொள்ள தேவையில்லை)
இப்படி கெட்ட அம்சங்கள் எதுவும் இல்லாமல் ஒரு சிறந்த பொழுதுபோக்கு படத்தை அளிக்க முடியும் என்று மெய்ப்பித்துள்ளார் கௌதம் மேனன். படத்தில் வில்லனோ, அடிதடி சண்டையோ கூட இல்லை.

ஒவ்வொரு காட்சியும் கவிதை

ஒரு ஆண், ஒரு பெண் - இவர்களுக்கு இடையே குழந்தை, பள்ளிச் சிறுவர், கல்லூரி, வேலை, திருமணம் என வாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை அற்புதமாக கோர்த்துள்ளார் இயக்குனர். (இதெல்லாம் இயல்பு வாழ்க்கையில் எல்லோருக்கும் நடந்திருக்கும் என்று கருத வேண்டியது இல்லை. அப்படி நடக்க வேண்டிய தேவையும் இல்லை என்பதை இப்படத்தை பார்க்கும்போது நம்மால் உணர முடியும்.)

சிறுவயதில் விளையாடும் குழந்தைகள் கோபித்திக் கொண்டு பிரிவது, பள்ளி வயதில் சந்திப்பது, பிரியக்கூடாது என்பதற்காக பள்ளி மாறி சேர்வது, மீண்டும் பிரிவது - என பிரிவோம், சந்திப்போமாக ஒரே பாதையில்தான் கதை பயணிக்கிறது. ஆனால், ஒவ்வொரு காட்சி அமைப்பிலும் உணர்ச்சிகளை அற்புதமாக வடிவமைத்துள்ளனர். 
உன்னதமான சில கவிதைகளைப் படிக்கும் போது நமது கற்பனையில் மட்டுமே காணக்கூடிய நிகழ்வுகளை நிஜத்தில் கொண்டுவந்துள்ளனர். உண்மையில் கௌதம் மேனன், இளையராஜா, சமந்தா மூன்று பேரும் ஒரு மாயாஜால கூட்டணியை அமைத்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

கவனத்துடன் பார்க்காவிட்டால், இந்த படத்தில் பல நிகழ்வுகளை பார்க்காமல் விட்டுவிடும் வாய்ப்பு உள்ளது. படத்தின் மீது ஈடுபாட்டுடன் பார்த்தால் - ஆணின் ஏக்கம், பெண்ணின் ஏக்கம், துக்கம், மகிழ்ச்சி என எல்லாவற்றையும் பார்வையாளரின் மனதிற்குள் மென்மையாக புகுத்தி விடுகின்றனர். இந்த மாயத்தை செய்வதில் கௌதம் மேனன், இளையராஜா, சமந்தா, ஜீவா, சந்தானம் ஆகியோரின் திறமை வெளிப்படுகிறது. அவரவர் பங்கினை அவரவர் அற்புதமாக நிகழ்த்தியுள்ளனர் (இதையெல்லாம் சொல்வதற்கு திரைப்படத் துறை குறித்து நிபுணராக இருக்க வேண்டிய தேவை இல்லை).
நம்மை நாம் இன்னொருவராக மாற்றிப் பார்க்கும் தருணம் எப்போதாவதுதான் நேரும். அது துக்கமாக இருக்கலாம், வலியாக இருக்கலாம், மகிழ்ச்சியாக இருக்கலாம். உண்மையில் மனிதனுக்கு இன்பம் என்பதே இன்னொன்றாக மாறுவதுதான் என்று ஜே.கே எனப்படும் ஜெ. கிருஷ்ணமூர்த்தி குறிப்பிடுவார்.

ஒரு குழந்தை கல்லில் இடித்துக்கொண்டு கத்தினால், அதை பார்த்த அந்த நொடியில் நமக்கும் வலிக்கும். ஒரு அழகான பூ, குழந்தையின் சிரிப்பு, கடலின் நீல நிறம், பேருந்தின் சன்னலுக்கு வெளியே தெரியும் இயற்கை காட்சி, வானில் தெரியும் முழுநிலவு - இப்படி எல்லாமும் மனிதனுக்கு மகிழ்ச்சியைத் தரலாம். அந்த மகிழ்ச்சி என்பது ஒரு வினாடி நேரம் தான். அந்த கண் இமைக்கும் நேரத்தில் அவன் 'தான்' என்பதிலிருந்து 'அதுவாக' மாறிவிடுகிறான்'.

ஒரு குழந்தையின் சிரிப்பு உங்களுக்கு இன்பத்தை தரும் அந்த ஒரு வினாடியில் நீங்கள் என்பது இல்லாமல் போய்விடுகிறது. அந்த சிரிப்பு மட்டும்தான் இருக்கிறது, நீங்கள் இல்லை. அப்படி மறந்து போகும் அந்த தருணம்தான் மகிழ்ச்சி, அன்பு எல்லாமும் என்பார் ஜே,கே. (உண்மையில் அரசியல், போராட்டம், இயக்கம், தியாகம் என்பதெல்லாம் ஒருவன் இன்னொருவனாக மாறி மற்றவரது துக்கத்தை உணர்வதுதான்).

படத்தில் தோன்றும் பாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளரும் உணரும் இடத்தில்தான் 'நீதானே என் பொன்வசந்தம்' உன்னதமான  படமாக அமைகிறது. இப்படம் குறித்த விமர்சனங்கள் பலவும் அவரவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை ஏதாவது ஒரு இடத்தில் பிரதிபலிப்பதாக கூறியுள்ளன. ஆனால், உங்களுக்கு தொடர்பு இருக்கிறதோ இல்லையோ, நீங்கள் ஆணோ, பெண்ணோ - எப்படியிருந்தாலும் இப்படத்தில் வரும் கதாநாயகி, கதாநாயகன் என இருவரது உணர்வுகளையும் உங்களாலும் உணர முடியும்.
இந்த படத்தில் உள்ள முக்கியமான திருப்பம் என்பது, இளம் வயதில் எதிர்காலம் குறித்த முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய தருணத்தில் - கடமைக்கும் எதிர்கால நலனுக்கும் முன்னுரிமை கொடுக்கிறோமா? அல்லது அந்தக் கால கட்டத்தின் உணர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கிறோமா? என்பதுதான்.

அதைவிட முக்கியமாக, இரண்டில் ஒன்றை தேர்வு செய்வதற்கான லாஜிக், அந்த முடிவு நன்மையாக முடியும் என்று நம்புவதற்கான காரணங்கள் சிக்கலானவை.

இதுபோன்ற தருணங்களில், முடிவெடுத்தல் என்பது மிக மிக வலி மிகுந்தது. அந்த வலிதான் இப்படத்தில் மையக்கரு என்று நான் நினைக்கிறேன்.

The Road Not Taken

எனக்கு ஆங்கிலக் கவிதைகள் அவ்வளவாக புரியாது. ஆனாலும், The Road Not Taken எனும் ஒரு கவிதை - இருவழி பாதையில் நிற்கும் ஒருவனது உணர்வை, குழப்பத்தை, நல்ல முடிவுதான் என்கிற சமாதானத்தை படிப்பவனின் விருப்ப்ம் போல உணர வைக்கும். (இங்கே காண்க:The Road Not Taken).
அந்த புகழ்பெற்ற கவிதையின் உணர்வை காட்சியாக அளிக்கிறது நீதானே என் பொன்வசந்தம்.

ஒரு நல்ல திரையரங்கில் கட்டாயம் பாருங்கள் 'நீதானே என் பொன்வசந்தம்' (குழந்தைகளை அழைத்துப் போக வேண்டாம்).