Pages

திங்கள், அக்டோபர் 25, 2010

எது ஆதிக்க சாதி? ஒரு எளிய விளக்கம்!

தமிழ்நாட்டளவில் "பார்ப்பனர்கள் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் சாதி, அருந்ததிய இனத்தவர் மற்றவர்களால் ஆதிக்கம் செய்யப்படுகிற சாதி" -  இப்படி விளக்கம் கொடுப்பது எளிது. ஏனெனில் பார்ப்பனர்களை விட உயர்ந்தவர் என்று கூறிக்கொள்கிற சாதியோ, அருந்ததியினரைவிட தாழ்ந்தவர் என்று சுட்டப்படுகிற சாதியோ இருப்பதாகத் தெரியவில்லை.


நல்லவேளையாக மலைவாழ் பழங்குடிமக்கள் சாதியில் சிக்கவில்லை. (ஒரு சாதி உயர்ந்தது மற்றொரு சாதி தாழ்ந்தது என்பது எனது தனிப்பட்ட கருத்து அல்ல - மனிதர் அனைவரும் சரிசமமே.)


இந்த இரு பிரிவினர் தவிர வேறு எந்த ஒரு சாதியைப் பற்றி பேசினாலும் - அந்த சாதியை ஒருசிலர் "மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் சாதி" எனவும், வேறு சிலர் "மற்றவர்களால் ஆதிக்கம் செய்யப்படுகிற சாதி" எனவும் ஏட்டிக்குப் போட்டியான விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. 


எனவே, ஆதிக்க சாதி என்பது எது? என்பதற்கு விளக்கம் தேவைப்படுகிறது.


ஆதிக்கம் என்பது 'நீ தாழ்ந்தவன் - நான் உயர்ந்தவன்' என்பது மட்டுமல்ல. கூடவே கல்வி, வேலை, பொருளாதாரம், அதிகாரம் என அனைத்து நிலைகளிலும் வளம், வாய்ப்பு, அதிகாரத்தில் யார் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதே உண்மையான ஆதிக்கம்.


இன்றைய நிலையில், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி - தமிழ்நாட்டின் "வளம், வாய்ப்பு, அதிகாரம்" அனைத்தும் அவரவர் சாதி மக்கள் தொகைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.


இந்த நிலைபாட்டை ஏற்று, சாதிவாரிக் கணக்கெடுப்பையும் வகுப்புவாரிப் பங்கீட்டையும் வரவேற்கும் சாதிகள் ஆதிக்கத்திற்கு எதிரான சாதிகள்.


சாதிவாரிக் கணக்கெடுப்பையும் வகுப்புவாரிப் பங்கீட்டையும் எதிற்கும் சாதிகள் ஆதிக்க சாதிகள், என்று அடையாளம் காண்பதே சரியாக இருக்கும்.

திங்கள், அக்டோபர் 04, 2010

ராமர் பிறந்த இடம்: அடிப்படை ஆதாரம் யாருக்கு வேண்டும்?

ராமர் பிறந்த இடம் - தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களின் கருத்து:

""நீதிபதி டி.வி.சர்மா வழங்கிய தீர்ப்பில 'சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம்தான். ராமர் ஒரு கடவுள். அவர் தெய்வாம்சம் பொருந்தியவராக வழிபடப்பட்டிருக்கிறார். அங்கு பாபரால் கட்டடம் எழுப்பப்பட்டது. அந்த இடம் ராமர் பிறந்த இடமாகக் கருதி இந்துக்கள் வழிபட்டு வந்துள்ளனர். நினைவு தெரிந்த நாளிலிருந்தே, அதை ஆன்மீகப் புனிதத் தலமாகக் கருதி ஆன்மிகப் பயணம் சென்று வருகிறார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.


ராமர் கிருத யுகத்தில் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. கிருதயுகம் என்பது 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் கொண்டதாகும். இப்படி கற்பனைக்கே எட்டாத எண்ணிக்கை கொண்ட ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியைப் பற்றி, ராமர் பிறந்த இடம் இதுதான் என்று அறுதியிட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.


இந்தத் தீர்ப்பைப் பார்க்கும்போது, சுமார் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது; ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து, தென்னகத்தையே ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த விதத்தையோ, அவன் கல்லறையையோ, அவனுக்காக நினைவுத்தூண் அமைந்த இடத்தையோ அறியமுடியவில்லையே என அகம் நொந்து வருந்ததானே வேண்டியுள்ளது.""

அய்யோ பாவம் முதல்வர். இதெல்லாம் ஒரு பெரிய வேலையா?


ஏதாவது ஒரு பிடிக்காதவரின் இடத்தக்காட்டி அங்குதான் ராஜராஜன் இறந்தான் என்று கட்டுக்கதையை கட்டிவிட்டால் போதாதா?


அப்புறம் இருக்கவே இருக்கு நீதிமன்றம் - மக்கள் நம்புகிறார்கள் என்று தீர்ப்பளித்துவிடாதா?


ஆனால் அவர் ஆதாரங்கள் குறித்து பேசுகிறார்:


""ஆராய்ச்சிகள் மூலமாக தொல்லியல் அறிஞர்கள், மொழியியல் வல்லுநர்கள் திராவிட நாகரீகம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று கருத்துத்தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில், திராவிட இனத்தின் வரலாறு பற்றிய ஆதாரங்களை, பிற வரலாறுகளுடன் ஒப்பிட்டு நோக்கும்போது, திராவிட இனம் அறிவியல் ரீதியாக வாழ்ந்துள்ள உண்மை வரலாற்றினைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.

ஆனால், திராவிட இனத்தைப் புறந்தள்ள முயற்சித்த ஆரிய நாகரீகம் அடிப்படை ஆதாரம் இல்லாமலேயே வெறும் மூடநம்பிக்கையை மக்களிடம் வளர்ப்பதில் மட்டும் முனைப்பாக செயல்பட்டிருக்கிறது.""

என்கிறார் முதலமைச்சர் கருணாநிதி.

தமிழனின் நிலை பரிதாபகரமானது. வரலாற்று ஆதாரங்களின்படி தமிழனுக்கு 3 ஆயிரம் ஆண்டு நாகரீகம் உண்டு. ஆனால், மூடநம்பிக்கை, கட்டுக்கதைகளின் படி ஆரியர்கள் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையவர்கள்.

3 ஆயிரம் பெரிதா? 17 லட்சம் பெரிதா?

அடிப்படை ஆதாரம் யாருக்கு வேண்டும்? அதுதான் மூட நம்பிக்கையே போதுமானது என்று "நீதிமன்றமே" சொல்லிவிட்டதே!

சனி, அக்டோபர் 02, 2010

அயோத்தி: நடந்தது இதுதான்!

1. இராமன் இந்தியாவில் நம்பப்படும் ஆயிரக்கணக்கான சாமிகளில் ஒருவன். ஆனாலும், இராமனே முதன்மையான நாயகன் என்பதுபோல பிற்காலத்தில் நம்பவைக்கப்பட்டான். (இந்தியவின் பெரும்பான்மை மக்களுக்கு இன்றும் இராமன் ஒரு முதன்மை தெய்வம் அல்ல).

2. அயோத்தி இராமர் கோவிலை இசுலாமிய மன்னர்கள் எவரும் இடிக்கவில்லை. இராமர் கோவில் இடிக்கப்பட்டதாகக் கூறப்படும் காலத்தில் வாழ்ந்தவர் துளசி தாசர். அவர் எழுதிய ஆவாதி மொழி இராமாயணத்தில் - கோவில் இடிக்கப்பட்டது பற்றி எந்த குறிப்பும் இல்லை.

3. குறிப்பிட்ட அந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்பது இந்துத்வ சங்கப்பரிவாரம் உருவாக்கிய ஒரு கட்டுக்கதை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

4. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மதச்சண்டையை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் இசுலாமிய மன்னர்கள் இந்துக்கோவிலை இடித்ததாக கட்டுக்கதைகளை பரப்பினர். அதனை பின்னர் இந்துத்வ தீவிரவாதிகளும் பயன்படுத்தி வருகின்றனர். (ஒருமன்னன் மற்றொரு நாட்டின்மீது படையெடுக்கும்போது அங்குள்ள கோவில்களை இடிப்பதோ, எரிப்பதோ, கொள்ளையடிப்பதோ வழக்கம். இதனை பல இந்து மன்னர்களும் செய்துள்ளனர்.)

எனினும், பாபரின் வரலாற்றைக் கூறும் ‘பாபரிநாமா’ ஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை. அதே நூலில் கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :

‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள்.  இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும்.  ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”

“நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது.  மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”

“நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது.  நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும்.  இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும்.  அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”

5. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பாபர் மசூதிக்குள் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராம் லல்லா சிலைகள் சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டன. இந்த அநீதியான செயலை இந்திய அரசு தடுக்கத்தவறியது மட்டுமின்றி, திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட சிலைகளை அப்புறப்படுத்தவும் தவறிவிட்டது.

6. ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதக் கூட்டத்தின் திட்டமிட்ட சதிச்செயலால், 1992 டிசம்பர் 6 அன்று, இந்திய அரசின் பாதுகாப்பில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

7. அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த அலகாபாத் நீதிமன்றம் - அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான இந்துத்வ பயங்கரவாதிகளின் அநீதியான செயல்களை அங்கீகரித்துள்ளது.

படிப்பினை: இந்திய மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமம் அல்ல.

ஒரு குற்றச்செயல் தண்டனைக்குரியதா அல்லது போற்றுதலுக்குரியதா என்பது குற்றமிழைப்பவர் சார்ந்திருக்கும் சாதி, மதத்தைப் பொறுத்தது.

அயோத்தி தீர்ப்பு: புளுகும் இந்துத்வ கூட்டம்.

அயோத்தி தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் “இராமர் பிறந்த இடம்” என்று நீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் அவ்வாறு தீர்ப்பில் கூறப்படவில்லை.
இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. நம்புவது வேறு, உண்மை வேறு. இரண்டும் ஒன்றல்ல.
நீதியரசர் D.V.சர்மா தீர்ப்பு மட்டுமே அது இராமர் பிறந்த இடம் என்கிறது. நீதியரசர் D.V.சர்மாவின் தீர்ப்பு பெரும்பான்மை தீர்ப்பல்ல. மற்ற இரு நீதியரசர்களின் தீர்ப்பே பெரும்பான்மையானது. அதில் “இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது”. அந்த தீர்ப்புகள் இதோ:
GIST OF THE FINDINGS by Justices Sudhir Agarwal:
“The area covered under the central dome of the disputed structure is the birthplace of Lord Rama as per faith and belief of Hindus.”
GIST OF THE FINDINGS by Justices S.U.Khan:
“5. That for a very long time till the construction of the mosque it was treated/believed by Hindus that some where in a very large area of which premises in dispute is a very small part birth place of Lord Ram was situated, however, the belief did not relate to any specified small areawithin that bigger area specifically the premises in dispute.
6. That after some time of construction of the mosque Hindus started identifying the premises in dispute as exact birth place of Lord Ram or a place wherein exact birth place was situated.”
இராமர் அங்குதான் பிறந்தார் என்று நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டதாக பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தினர் பிரச்சாரம் செய்கின்றனர்.
அயோத்தி தீர்ப்புக்கு பின் நீதிமன்ற வாசலில் பேட்டியளித்த பி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் இரவிசங்கர் பிரசாத் “இராமர் பிறந்த இடம் இதுதான் என்று நீதிமன்றம் கூறிவிட்டது” என்று திரித்துப்பேசினார். அது தொலைக்காட்சியில் உடனடியாக ஒளிபரப்பப்பட்டது. பல பத்திரிகைகளும் அதே கருத்தை வெளியிட்டு வருகின்றன.
ஏன் இந்த பித்தலாட்டம்?
இராமர் பிறந்த இடம் இதுதானா என்பது வழக்கே அல்ல. அப்புறம் எதற்கு பச்சைப்பொய் புளுகவேண்டும்?