Pages

வன்னியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வன்னியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூலை 06, 2017

மறைக்கப்பட்ட உலகின் முதல் சத்தியாகிரத் தியாகம்: இன்று 108 ஆம் ஆண்டு நினைவு நாள்

எந்த ஒரு போராட்டத்திலும் முதலாவதாக உயிரிழப்பவர் மாபெரும் தியாகியாக போற்றப்படுவார். அவருக்கு சிலை, நினைவிடம், அருங்காட்சியகம், அவர் பெயரில் விருதுகள் என அவரது நினைவு என்றென்றும் போற்றப்படும். உலக வரலாற்றின் மிகப்பெரிய சனநாயகப் போராட்டமாக கருதப்படுவது மகாத்மா காந்தியின் சத்தியாகிரக போராட்டம் ஆகும். இப்போராட்டத்தில் முதன்முதலில் பலியான உலகின் முதல் சத்தியாகிரகத் தியாகியை எல்லோரும் மறந்துவிட்டனர்.

'இறந்தாலும் என்றென்றும் ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் வாழ்வார்' என மகாத்மா காந்தியால் புகழப்பட்ட அந்த தியாகி இந்திய வரலாற்றில் இடம் பெறவில்லை. ஒரு மாபெரும் தியாகி மறக்கப்பட்டது ஏன்?

மகாத்மா காந்தியின் முதல் சத்தியாகிரகப் போராட்டம்.

1906 ஆம் ஆண்டு டிரான்சுவால் காலனி அரசாங்கம் அங்கு வாழ்ந்த இந்தியர்கள் தமது பெயரை அரசாங்கத்திடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றுகூறும் ஏசியாடிக் பதிவு சட்டத்தை கொண்டுவந்தது. இந்தியர்கள் தமது பெயரையும் கைரேகையையும் பதிவு செய்து கொண்ட ஆவணத்தை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். வேலை, தங்குமிடம் என எல்லா இடத்திலும் இந்தியர்கள் தனியாக பிரித்து வைக்கப்படுவார்கள். புதிதாக இந்தியர்கள் எவரும் டிரான்சுவால் மாகாணத்திற்குள் குடியேறக்கூடாது, மூன்று பவுண்ட் வரி செலுத்த வேண்டும், இந்தியர்களின் திருமணங்கள் சட்டபடி செல்லாது என்று பல விதிமுறைகளை முன்வைத்தது அச்சட்டம்.

இந்திய வம்சாவழியினருக்கு எதிரான இச்சட்டம் இந்தியர்களை துன்புருத்துவதாகவும் கண்ணியத்தை குலைப்பதாகவும் இருப்பதாகக் கூறிய காந்தி, விளைவுகள் எதுவானாலும் அதைப்பற்றி கவலைகொள்ளாமல் இந்தியர்கள் இச்சட்டத்தை எதிர்க்க அழைப்புவிடுத்தார்.
1906ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள் ஜொகனஸ்பர்க் நகரில் சுமார் மூன்றாயிரம் இந்தியர்கள் கூடிய பொதுக்கூட்டத்தில் தனது அறவழிப்போராட்டத்தை அறிமுகப்படுத்தினார். அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல், ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். அதாவது, இச்சட்டம் செயலுக்கு வந்தால் இந்தியர்கள் தமது பெயரை பதிவு செய்துகொள்ளக்கூடாது. சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும் என்று காந்தி வலியுறுத்தினார்.

மகாத்மா காந்தியின் வடிவமைப்பில் உருவான உலகின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் இதுதான். 1907 ஆம் ஆண்டு சூலை மாதம் டிரான்சுவால் காலனி அரசாங்கம் ஏசியாட்டிக் பதிவு சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. தனது பெயரை பதிவு செய்யாத இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். 1906 ஆம் ஆண்டு தொடங்கி 1914 ஆம் ஆண்டுவரை எட்டு ஆண்டுகள் இப்போராட்டம் நீடித்து கடைசியில் வெற்றி பெற்றது. அந்தவகையில் காந்தி வெற்றி பெற்ற முதல் போராட்டமும் இதுதான்.

காந்தி முதல் முறையாக சிறை சென்றதும் இந்த போராட்டத்திற்காகத்தான். மகாத்மா காந்தி "சத்தியாகிரகம்" என்கிற போராட்டமுறையை வடிவமைத்ததும் இப்போராட்டத்தில்தான். இந்த முதல் சத்தியாகிரக போராட்டமே இந்திய விடுதலைப் போருக்கு வழிகாட்டியாக அமைந்தது. மேலும், நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் உள்ளிட்ட பலரது அறப்போராட்டங்களுக்கு முன்னோடியாக விளங்கியது ஜொகனஸ்பர்க் சத்தியாகிரகம் என கருதலாம்.

மறக்கப்பட்ட மாபெரும் தியாகம்: சாமி நாகப்பன் படையாட்சி!

ஜொகனஸ்பர்க் சத்தியாகிரக காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். "இந்தியர்கள் சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும்" என்ற காந்தியின் கட்டளைக்கு ஏற்ப "பெயரை பதிவு செய்ய மறுத்து சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால்" 1909 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 ஆம் நாள் கைது செய்யப்பட்டார் தமிழரான சாமி நாகப்பன் படையாட்சி. அவருக்கு மூன்று பவுண்ட் தண்டம் அல்லது 10 நாள் கடின உழைப்புடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், தண்டத் தொகையைக் கட்டாமல் சிறைத் தண்டனையை ஏற்பதே சத்தியாகிரகப் போராட்டம் என்பதால் சிறைக்குச் சென்றார்.
கான்சிடியூசன் மலை சிறை

முதல் நாள் இரவு ஜொகனஸ்பர்க ஃபோர்ட் சிறையில் அடைக்கப்பட்டார் சாமி நாகப்பன் படையாட்சி. (இதே சிறையில்தான் காந்தியும், பின்னாளில் நெல்சன் மண்டேலாவும் அடைக்கப்பட்டனர். 'கான்சிடியூசன் மலை' என்று அழைக்கப்படும் அந்த இடம் இப்போது ஜொகனெஸ்பர்க் நீதிமன்றமாகவும், அருங்காட்சியகமாகவும் இருக்கிறது). அடுத்த நாள் 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுக்ஸ்கெய் சாலை சிறை முகாம் எனும் இடதிற்கு நடத்தியே அழைத்துச் செல்லபட்டார். அங்கு அவர் சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டார். கடும்குளிரில் திறந்தவேளி கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டார். சரியான உணவும் இல்லை. உடல் நலம் பாதிப்படைந்த நிலையிலும் சாலை அமைத்தல், அதற்காக கல் உடைத்தல் போன்ற கடுமையான வேலைகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டன. உடல்நலப் பாதிப்பிற்கு சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை.

ஏறக்குறைய கொலை செய்யப்பட்டவராக சூன் 30 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் இரட்டை நிமோனியாவால் இதயம் செயலிழது மரணத்தை தழுவினார்.

1909 ஆம் ஆண்டு சூலை 7 ஆம் நாள் ஜொகனஸ்பர்க் இந்தியர்கள் அவர் உடலை ஒரு பொது நிகழ்ச்சியாக பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்தனர்.

அந்த சமயத்தில் டிரான்சுவால் இந்தியர்களின் போராட்டம் குறித்து பிரச்சாரம் செய்வதற்காகான பிரதிநிதியாக லண்டன் சென்றிருந்தார் காந்தி. சாமி நாகப்பன் படையாட்சி கைது செய்யப்பட்ட சூன் 21 ஆம் நாள் அன்றுதான் காந்தி ஜொகனஸ்பர்க் நகரிலிருந்து லண்டனுக்கு கிளம்பினார். அவர் சூலை 10 அன்று லண்டன் சென்று சேர்வதற்குள் சாமி நாகப்பன் படையாட்சி வீரமரணம் அடைந்துவிட்டார். காந்தியிடம் சூலை 12 ஆம் நாள் தந்தி மூலமாக அவரது தியாக மரணம் தெரிவிக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்க இந்தியர்களும் ஜொகனஸ்பர்க் நகரின் வெள்ளையின கிறித்தவ தலைவர்களும் சாமி நாகப்பன் படையாட்சி சிறைவாசத்தால் கொல்லப்பட்டது குறித்து பொதுவிசாரணை நடத்தக் கோரினர்.

1909 ஆம் ஆண்டு சூலை 19 அன்று மாஜிஸ்ட்ரேட் மேஜர் டிக்சன் என்பவரது தலைமையில் "சாமி நாகப்பன் படையாட்சி சிறைவாசத்தால் கொல்லப்பட்டது" குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் அளிக்கப்பட்ட விசாரணை அறிக்கை சிறை அதிகாரிகள் குற்றமற்றவர்கள் என்றது. இதற்கு இந்திய வம்சாவழியினர் திரண்ட ஜொகனஸ்பர்க் பொதுக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அரசாங்கத்திற்கு காந்தி எழுதிய கடிதத்தில் விசாரணை அறிக்கையில் உள்ள விடயங்களே நாகப்பன் சிறைவாசத்தால் கொல்லப்பட்டதை உறுதி செய்வதாக தெரிவித்தார்.

சாமி நாகப்பன் படையாட்சி சத்யாகிரகியாக சிறை சென்று உயிர்தியாகம் செய்யும் போது அவரது வயது பதினெட்டு. அந்த இளம் வயதில் சம உரிமைக்காக தனது உயிரை தந்தார் அவர்.

1914 ஆம் ஆண்டு சூலை 18 ஆம் நாள், தனது 21 ஆண்டுகால தென் ஆப்பிரிக்க வாழ்வை முடித்துக்கொண்டு, காந்தி லண்டன் வழியாக இந்தியாவுக்கு கிளம்பினார். அதற்கு மூன்று நாள் முன்னதாக, சாமி நாகப்பன் படையாட்சி இறந்து ஐந்தாண்டுகளுக்கு பின்னர், சூலை 15 அன்று தென் ஆப்பிரிக்காவின் ஜொகனஸ்பர் நகரில் உள்ள பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடத்தை திறந்துவைத்தார் மகாத்மா காந்தி. (அதனுடன் வள்ளியம்மா முனுசாமி முதலியார் நினைவிடத்தையும் அன்று திறந்தார் காந்தி). அதுதான் மகாத்மா காந்தியின் கடைசி தென் ஆப்பிரிக்க நிகழ்ச்சி.

தென்னாப்பிரிக்க இனவெறி ஆட்சி காலத்தில் சாமி நாகப்பன் படையாட்சி நினைவிடம் சிதைக்கப்பட்டது, தென் ஆப்பிரிக்காவில் 1994 இல் நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் 20.4.1997 அன்று மீண்டும் சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடம் மறுசீரமைக்கப்பட்டது.
அதனை விடுதலைப் போராட்ட வீரரும் நெல்சன் மண்டேலாவின் நண்பருமான வால்டர் சிசுலு மற்றும் இந்திய தூதரும் காந்தியின் பேரனுமான கோபாலகிருட்டின காந்தியும் திறந்து வைத்தனர்.

காந்தியின் நிறைவேறாத கனவுகள்!

தனது சத்தியாகிரகப் போராட்டத்தில் உயிர்நீத்த முதல் தியாகி சாமி நாகப்பன் படையாட்சியின் வீரமரணம் காந்தியின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்பதை அவரது பேச்சுகளில் இருந்தும் எழுத்துகளில் இருந்தும் அறியமுடியும். தென் ஆப்பிரிக்காவில் காந்தியின் எழுத்தும் பேச்சும் இந்தியன் ஒப்பீனியனில் தொடர்ந்து வெளியானது.

தனது மகன் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று முதன்முதலாக சிறை சென்ற போது - நாகப்பன் தியாகத்தோடு ஒப்பிட்டால், தனது மகனின் சிறைவாசம் பெரிதல்ல என்று 14.12.1909 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார் காந்தி.

தனது சகோதரர் இறந்த போது - நாகப்பன் உயிரிழப்பு தனக்கு ஏற்படுத்திய மன வலியுடன் ஒப்பிட்டால் தனது சகோதரன் இறப்பால் ஏற்படும் வலி பெரிதல்ல என்று 18.3.1914 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார் காந்தி.

சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகத்தை போற்ற வேண்டும் என காந்தி விரும்பினார். முதலாவதாக, 6.10.1909 அன்று போலக் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் சாமி நாகப்பன் நிழற்படம் கிடைத்ததைக் குறிப்பிட்டு, உடனடியாக அதனை சென்னையிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்று காந்தி தெரிவித்தார். இதன் மூலம் தமிழ்மக்களிடம் நாகப்பன் தியாகத்தை கொண்டுசெல்ல வேண்டும் என அவர் நினைத்தார். அந்த விருப்பம் நிறைவேறவில்லை.

அடுத்ததாக, நாகப்பன் தியாகத்தை போற்றும் வகையில் ஜொகனஸ்பர்க் நகரில் ஒரு கல்வி உதவித்தொகை நினைவு நிதியை உருவாக்க விரும்பினார். அதற்காக திருமதி.வோகல் என்பவர் நிதிதிரட்ட முன்வந்த போது காந்தி அதனை வரவேற்று ஆதரித்து 9.12.1911 மற்றும் 14.6.1912 தேதிகளில் இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகையில் எழுதினார். அதுமட்டுமல்லாமல் சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களிலும் நாகப்பன் நினைவு நிதியை உருவாக்க வேண்டும் என்றார் காந்தி. அதுவும் நடக்கவில்லை.
தென் ஆப்பிரிக்காவில் ஜொகனஸ்பர்க் அருங்காட்சியகத்தில் உள்ள சாமி நாகப்பன் படையாட்சி படம்
காந்தி இந்தியா திரும்பிய பின்னர் - இந்திய சுதந்திரப் போராட்டம் எப்படி அமையவேண்டும் என்பதற்கு - போராட வருவோர் நாகப்பனை முன்னுதாரணமாக கொண்டு அவர் காட்டிய பதையில் பயணிக்க வேண்டும் என்றார் காந்தி.

சென்னை, மதுரை, தூத்துக்குடி, நாகப்பட்டிணம் என தமிழ்நாட்டில் தான் பங்கேற்ற கூட்டங்களில் எல்லாம் நாகப்பன் தியாகத்தை புகழ்ந்து பேசினார் காந்தி.

இத்தனைக்கு பிறகும் விடுதலை அடைந்த இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில், சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகம் வெளியே தெரியாமல் மறைந்து போனது எப்படி?

குறிப்பு: சாமி நாகப்பன் படையாட்சி தமிழ்நாட்டில் மயிலாடுதுறை பகுதிய சேர்ந்தவர். அவரது சொந்த ஊர் திருநாகேஸ்வரம் ஆக இருக்கலாம்.

சனி, ஏப்ரல் 15, 2017

தமிழகத்தில் மதக்கலவரம் நடத்த சதி: வன்னியர்களின் வீரம் துலுக்கனிடம் செல்லுமா?

தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால், இங்கும் பெரிய மதக்கலவரம் நடக்க வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள். ஆனால், இந்த மதக்கலவரத்தில் பிராமணர்களோ, முன்னேறிய சாதியினரோ பலியாகக் கூடாது. அதற்கு பதிலாக 'எளிதில் உணர்ச்சிவசப்படும்' வன்னியர்களை பலி கொடுக்க திட்டமிட்டு முனைந்துள்ளார்கள். இதற்கான கூட்டம் ஒன்று 'சத்திரியர் சாம்ராஜ்யம்' என்கிற பெயரில் திருக்கழுகுன்றத்தில் 9.4.2017 அன்று நடந்துள்ளது.

இக்கூட்டத்தில் பிராமணரான வகுப்பை சேர்ந்தவரும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகருமான ஆர்.பி.வி.எஸ் மணியன் தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் படுமோசமாகப் பேசியுள்ளார். "முஸ்லிம்களுடன் வன்னியர்கள் சண்டை போட வேண்டும். கிறிஸ்தவ வன்னியர்களை புறக்கணிக்க வேண்டும். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தேவை இல்லை" என்று அவர் பேசியுள்ளார்.

ஆர்.பி.வி.எஸ் மணியனின் மதவெறி பேச்சு:

மணியனின் மதவெறி பேச்சு: “சிவத்துரோகம் செய்கிறவன் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் அத்தனை பேரையும் வெட்டி வீழ்த்துவோம். இதுதான் வன்னியனுடைய பாரம்பரியம். ஆனால், இன்றைய வன்னியர்கள் சிலர் மதம் மாறிப்போயிருக்கிறார்கள். மதம் மாறிப்போய், மானம் கெட்டுப்போன அந்தக் கிறிஸ்தவர்களையும் சேர்த்துக்கொள்கிறோம் வன்னியன் என்பதாகச் சொல்லி. அவன் உண்மையாகவே ஹிந்துவாக இருந்தால் தானே வன்னியன். அன்னியனாகப் போனதற்கு பின்னாலே வன்னியன் என்னடா உறவு, வன்னியன். கிறித்தவ வன்னியர்களிடம் எக்காரணம் கொண்டும் நாம் உறவு கொண்டாடக் கூடாது. வன்னியர்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்களாக இருந்தால் அவர்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும். ஜாதி பகிஷ்காரம் செய்ய  வேண்டும். 
அதுமட்டுமல்ல .... போராடுகிறோம், பெரிய வீர பாரம்பரியம் என்பதாகச் சொல்கிறோம். வன்னியனுக்கு இருக்கக் கூடிய வீரம் தெரியுமா? அவனுடைய வாளின் வலிமை தெரியுமா? அவனுடைய துணிச்சல் தெரியுமா? இதெல்லாம் நானும் பார்த்து விட்டேன். நம்ம ஊர்ல இருக்கிற ஒரு சில ஜாதிக்காரன் கிட்டதான் இந்த வன்னியனுடைய திமிர், இந்த வன்னியனுடைய அகம்பாவம் எல்லாம் செல்லும். யார்கிட்ட செல்வதில்லை தெரியுமா?  துலுக்கன் கிட்ட செல்லுவதே இல்லை. துலுக்கன் கிட்ட செல்லுவதே இல்லை. இஸ்லாமியனை பகைத்துக்கொண்டு வன்னியனுக்காக வாதாடுவதற்கு, போராடுவதற்கு, குரல் கொடுப்பதற்கு அமைப்புகள் இல்லை. அப்படிப்பட்ட நிலையில வெறும் அரசியல் ரீதியாக நாம பிளந்து கிடந்தால் நிச்சயமாக வன்னியச் சமுதாயத்துக்கு வலிமை கிடையாது. ஆன்மீக ரீதியாக கலாச்சார ரீதியாக சமுதாய ரீதியாக ஹிந்து என்கின்ற கண்ணோட்டத்தில் தான் நாம் அத்தனை வன்னியர்களையும் ஒருங்கிணைத்து போராட வேண்டும். அப்படி ஊரிய இரத்தம் என் உடம்பில் ஓடுகிறது.

ஆனால், இன்றைக்கு Most Backward (MBC) என்பதாகச் சொல்லி, நான் நான்கு பேர் கிட்ட கையேந்தினேனா? சத்திரியன் எப்படிடா கையேந்தறது? சத்திரியர்கள் எவர் கிட்டயாவது போய் ரிசர்வேஷன் கேட்பானா? சத்திரியன் தானே மற்றவர்களுக்கே வேலை கொடுக்க வேண்டியவன்? அப்படி வேலை கொடுக்க வேண்டிய சத்திரியன் இன்றைய தினம் கை நீட்டுகிறான். எனக்கு 20 சதவீதம் கொடு என்று.

நான் வேலூரில் பேசுகிற போது சொன்னேன். வன்னியர்கள் மத்தியிலும் சொன்னேன். உண்மையிலேயே நீ கேட்க வேண்டியது அரசாங்கத்திடம் 20 சதவீதம் அல்ல. மெடிக்கல் காலேஜில் 20 சதவீதம் அல்ல.

மாறாக, நீ கேட்க வேண்டியது எங்கே தெரியுமா? வேலூரில் பஜாரில் துலுக்கன் கடை வச்சிருக்கான் டா. நம்மைச் சுற்றியிலும் துலுக்கன் வியாபாரத்தில் பெருகிக் கொண்டே போகிறான். ஆனால், வன்னியரில் எத்தனை பேர்கள் வியாபாரிகள்? எத்தனை பேரிடத்தில் பணம் இருக்கிறது? ஆகவே நீங்கள் அத்தனை பேரும் வேலூர் பஜாரில் வன்னியர் மக்கள் தொகைக்கு ஏற்ப கடைகளை ஒதுக்கு. எனக்கு கடைகளைக் கட்டிக் கொடு. வியாபாரத்திற்கு பணம் கொடு. அப்படி தான் டா கேட்கனும்"

- இவ்வாறு ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஆர்.பி.வி.எஸ் மணியன் பேசியுள்ளார். Youtube காணொலியாக இந்த இணைப்பில் காண்க: https://youtu.be/W70LfxkUXak


வன்னியர் உரிமைக்கு குரல் கொடுக்குமா ஆர்.எஸ்.எஸ்?

முஸ்லிம்கள் சொத்தில் வன்னியர்கள் பங்கு கேட்கவேண்டும் என்று சொல்லும் இதே ஆர்.எஸ்.எஸ் கும்பல்தான், வன்னியர்களின் உரிமையை அபகரித்து வைத்துள்ளது. 

சிதம்பரம் நடராஜர் கோவில் வன்னியர்களான பிச்சாவரம் மன்னர் பரம்பரையினருக்கு சொந்தமானதாகும். தினமும் இரவு பூஜை முடிந்த பிறகு பூஜை செய்யும் தீட்சிதர்கள், கோவிலை பூட்டி அதன் சாவியை பல்லக்கில் வைத்து மன்னர் குடும்பத்தின் அரண்மனையில் ஒப்படைப்பார்கள். காலையில் மீண்டும் அவ்வாறே வாங்கி வந்து கோவிலை திறப்பார்கள்.
காலப்போக்கில் மன்னர் குடும்பம் நலிவடைந்ததால், சாவியை பிராமணர்களான தீட்சிதர்களே வைத்துக்கொண்டனர். பின்னர், உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மூலம் வழக்குத் தொடுத்து - இந்தக் கோவில் பிராமணர்களுக்கே சொந்தம் என்கிற மோசடி தீர்ப்பையும் பெற்றுவிட்டார்கள்.

இப்போது, பாஜகவின் துணை அமைப்பான சத்திரியர் சாம்ராஜ்யத்தின் சார்பில், சிதம்பரம் கோவில் உரிமையை மீண்டும் பிச்சாவரம் மன்னர் குடும்பத்திடமே அளிக்க வேண்டும் என்று கோர முடியுமா?

அப்படி சிதம்பரம் கோவிலில் வன்னியர்களின் உரிமைப் பற்றி பேச வக்கற்றுப் போன இந்த கும்பல் தான் -  வன்னியர் உரிமையை அபகரித்த பிராமணர்களை விட்டுவிட்டு, சம்பந்தமே இல்லாத முஸ்லிம்களிடம் சண்டை போடுங்கள் என்று மூளைச்சலவை செய்கிறது.
திருக்கழுகுன்றத்தில் நடந்த கூட்டத்தில் ஆர்.பி.வி.எஸ் மணியன், மற்றும் கல்யாணராமன் (நடுவில்)

பாஜகவின் துணை அமைப்பான சத்திரியர் சாம்ராஜ்யத்தின் தலைவராக, பாஜக சார்பில் 2016 தேர்தலில் திருப்போரூர் தொகுதியில் தாமரைச் சின்னத்தில் போட்டியிட்டு 2605 ஓட்டுகள் வாங்கிய வ.கோ. ரங்கசாமி உள்ளார். 'விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் ஒரு தமிழ் இனத்துரோகி,  போதைப்பொருள் கடத்தல்காரன்' என்று அவதூறு பிரச்சாரம் செய்த கல்யாணராமன் தான் இந்த அமைப்பின் ஆலோசகர் ஆகும் (நாயுடு வகுப்பை சேர்ந்த இவர் தன்னை வன்னியர் என்று கூறிக்கொள்வதாக சொல்கிறார்கள்).

மதவெறியை தடுக்க தமிழகம் ஒன்றிணைய வேண்டும்

வன்னியர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே சண்டை மூட்டும் இந்த படுபயங்கர மதக்கலவர சதியை தடுக்காமல் விட்டால், ஆயிரக்கணக்கான வன்னியர்களும், முஸ்லிம்களும் பலியாகும் ஆபத்து விரைவில் வரக்கூடும். இதனை வருமுன் தடுப்பதே, தமிழகத்தின் அனைத்து தரப்பினருக்கும் நலமானதாக இருக்கும்.

தொடர்புடைய சுட்டி:

திங்கள், ஏப்ரல் 10, 2017

எச்சரிக்கை: வன்னியர்களை பலிகொடுக்கத் துடிக்கும் மதவெறி கும்பல்!

'கிறிஸ்தவர்களுடனும் இஸ்லாமியர்களுடனும் வன்னியர்கள் போரிட வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்கிற இடஒதுக்கீட்டை அகற்ற வேண்டும்' என்கிற கோரிக்கைகளை முன்வைத்து பாரதீய ஜனதா கட்சி 'சத்திரியர் சாம்ராஜ்யம்' என்கிற பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கிறது. 

'கிருஸ்துவ வன்னியர்களை வன்னியர் சமூகத்திலிருந்து விலக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக வன்னியர்கள் தாக்குதல் நடத்தி கலவரம் செய்ய வேண்டும்' என்று சத்திரியர் சாம்ராஜயம் எனும் பாஜக துணை அமைப்பின் கூட்டத்தில் ஞாயிற்றுக் கிழமை (9.4.2017) அன்று பகிரங்கமாக பேசியிருக்கின்றனர். (வீடியோ ஆதாரம் உள்ளது)

இது வன்னியர்களுக்குள் பிரிவினையை உண்டாக்கும் தந்திரம். பாஜக மற்றும் முன்னேறிய சாதியினரின் சுயநலத்துக்காக, தமிழகத்தில் பாஜக காலூன்ற வேண்டும் என்கிற நோக்கத்திற்காக, வன்னியர்களை இஸ்லாமியர்களுடனும், கிறிஸ்தவர்களுடனும் கலவரத்தில் இறக்கிவிட செய்யப்படும் சதி இதுவாகும். இந்தச் சதிக்கு வன்னியர்கள் எவரும் பலியாக மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

வன்னியர்களும் மதமும் - ஓர் வரலாற்றுப் பார்வை

வன்னியர் என்கிற அடையாளத்துக்கு மதம் தடையாக இருந்தது இல்லை. வன்னியர்கள் எப்போதும் - அதாவது எப்போது சாதி தோன்றியதோ அப்போதிருந்து - வன்னியர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், வன்னியர்கள் எல்லோரும் எல்லா காலத்திலும் ஒற்றை மத அடையாளத்துடன் மட்டுமே இருக்கவில்லை என்பதே உண்மை.
வன்னியர்கள் அக்னியில் இருந்து உதித்தவர்கள் என்பது வன்னியர்களுடைய தனிப்பட்ட இனக்குழு அடையாளம். வன்னியர்கள் மட்டும்தான் நெருப்பில் தோன்றியதாகக் கருதப்படும் திரௌபதி அம்மனுக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்துகின்றனர். இந்துக்களில் மற்றவர்கள் இதனைச் செய்வது இல்லை.

சமண மதமும் வன்னியர்களும்

இந்து மதம் என்கிற ஒன்று உருவாவதற்கு முன்பிருந்தே வன்னியர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்துமத ஆதிக்கம் வருவதற்கு முன்பு சமணமும் பவுத்தமும் மேலோங்கி இருந்தது என்பதுதான் வரலாற்று உண்மை. (வன்னியர்கள் பள்ளி என்று அழைக்கப்பட்டதற்கு அவர்கள் சமணர்களாக இருந்ததே காரணம் என்று தேவநேயப் பாவாணர் கூறுகிறார்).

வன்னிய புராணத்தின் கதாநாயகனாக இருப்பது வாதாபி வென்ற நரசிம்மவர்ம பல்லவன். வன்னியர்களின் வரலாற்றில் மிக முக்கிய இடத்தை பிடித்திருக்கும் நரசிம்ம வர்மனின் தந்தை மகேந்திரவர்மன் முதலில் சமணராக இருந்து பின்னர் இந்து மதத்திற்கு மாறினார் என்று பெரியபுராணம் கூறுகிறது.

பௌத்த மதமும் வன்னியர்களும்

பல்லவ பாரம்பரியத்தில் வந்தவர்கள் இன்றைக்கும் வன்னியர்கள் என்றே கூறிக்கொள்கின்றனர். சீனாவுக்கும் ஜப்பானுக்கும் பவுத்த மதத்தை பரப்பிய 'போதி தர்மன்' அதே பல்லவ வம்சம்தான். அந்த போதி தர்மன் ஒரு பவுத்தனாக இருந்தார்.

இஸ்லாமும் வன்னியர்களும்

'சேரமான் பெருமாள் நாயனார்' என்பவர் ஒரு வன்னிய மன்னர் என்று கருதப்படுகிறது.  நபிகள் நாயகம் வாழ்ந்த அதே காலத்தில் சேரமான் பெருமாள் மக்காவுக்கு சென்று நபிகளை நேரில் சந்தித்தவர். அவர்தான் இந்தியாவில் முதன் முதலாக இஸ்லாத்தை பரப்பினார்.
கேரளாவில் சேரமான் மசூதி
அவரது பெயரால் அமைந்த சேரமான் மசூதிதான் இந்தியாவின் முதல் மசூதி ஆகும். அதுவே உலகின் இரண்டாவது மசூதியும் கூட. சேரமான் என்பவரை "பள்ளி பாண பெருமாள்" என்றும் கூறுகிறார்கள். சேலம் கவிச்சிங்கம் அர்த்தநாரீச வர்மா அவர்கள் 'சேரமான் பெருமாள் நாயனார்' பெயரில்தான் இந்திய விடுதலைக்கான தீவிரவாதிகள் அமைப்பை உருவாக்கினார்.

சேரமான் பெருமான் அரேபிய மண்ணிலேயே மறைந்தார் என்று கருதப்படுகிறது. அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் ஓமன் நாட்டின் சலாலா நகரில் தர்காவாக உள்ளது.  (Dargah Name: Hazrat Syedina Tajuddin (Razi Allahu Thaalahu Anhu), Also famous as Cheraman Perumal ( Indian King) in Salalah, Sultanate of Oman)

திரௌபதி அம்மன் வழிபாட்டில் போத்துராஜா போர்மன்னன் மற்றும் முத்தால ராவுத்தன் ஆகியோர் திரௌபதியின் பாதுகாவலனாகக் கூறி வழிபடப்படுகின்றனர். இதில் போத்துராஜா என்பது பல்லவ மன்னரைக் குறிக்கும். முத்தால ராவுத்தன் என்பது ஒரு முஸ்லீம் வீரனைக் குறிக்கிறது. இந்த வழிபாட்டு முறை வன்னியர்களின் தனிப்பட்ட பண்பாடாகும்.
இஸ்லாமிய தர்காவில் திரௌபதி கரகம், பெங்களூரு
திரௌபதி அம்மன் வழிபாடு மிகப்பெரிய அளவில் நடப்பது பெங்களூரில் தான். அங்கு பெங்களூருவின் பிரதான பகுதிகளில் நகர்வலமாக செல்லும் திரௌபதி கரக ஊர்வலம், Hazrat Takwal Mastan எனும் இஸ்லாமிய தர்காவில் நின்று, மூன்று முறை சுற்றி, ஒரு எலுமிச்சைப் பழத்தை தர்காவிற்கு அளித்து, அங்கிருந்து ஒரு எழுமிச்சைப் பழத்தை வாங்கிச் செல்வது பாரம்பரிய வழக்கமாகும்.

கிறித்தவ மதமும் வன்னியர்களும்

காடவராயர் வம்சத்தில் வந்த விருதாச்சலம் முகாசாபரூர் கச்சிராயர்கள், தமிழ்நாட்டில் கிறித்தவத்தை பரப்பியதில் முக்கிய பங்கு வகிக்கும் வீரமாமுனிவரை ஆதரித்தார்கள். அதற்காக கோணான் குப்பத்தில் 18 ஆம் நூற்றாண்டில் புனித பெரியநாயகி தேவாலயத்தை அமைத்தார்கள். இன்றைக்கும் இந்தக் கிறித்தவ கோவில் விழாக்களில் இந்து கச்சிராயர்களே மதிக்கப்படுகின்றனர்.
கச்சிராயர் கட்டிய கோணான் குப்பம் புனித பெரியநாயகி தேவாலயம்
இந்த தேவாலயத்தில் ஆண்டு தோறும் தேர் திருவிழா நடத்தப்படும். அப்போது வீரமாமுனிவரை ஆதரித்து கோயில் கட்ட இடமும் கொடுத்த முகாசா பரூர் பல்லவ அரசர்களை கவுரவிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அரசர் அரண்மனையில் இருந்து அரச உடையுடன்  மேள தாள முழக்கங்களுடன் கோயிலுக்கு ஊர்வலமாக வருவார். அவர் வடம் தொட்ட பின்பே தேரோட்டம் தொடங்கும். இந்த பாரம்பரிய நிகழ்ச்சி இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
படையாட்சி கட்டிய கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயம்
இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்த கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம் எனும் கிறித்தவ தேவாலயத்தை கட்டியவர் தொண்டி சீனிக்குப்பன் படையாட்சி என்பவர்தான்.

இத்தாலியில் ரோம் நகரில் உள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் மிக உயர்ந்த பதவியான போப்பாண்டவருக்கு அடுத்ததாக உள்ள பதவி கார்டினல் என்பதாகும். கார்டினல்கள்தான் போப்பாண்டவரையே தேர்வு செய்கின்றனர். இந்தியாவில் இருந்து கார்டினலாக தேர்வான ஒரே நபர் மறைந்த கர்தினால் லூர்துசாமி. ஒரு வன்னியர் கிறித்தவ மதத்தின் மிக உயரிய பதவியை அடைந்ததைப் போற்றி கணல் பத்திரிகையில் எழுதப்பட்டது.

மருத்துவர் அய்யா அவர்கள் 1980 ஆம் ஆண்டு அனைத்து வன்னிய தலைவர்களையும் ஒன்று சேர்த்து வன்னியர் சங்கத்தை உருவாக்கிய போது, அதில் முக்கியமாக இடம் பெற்றிருந்தவர் முன்னாள் தமிழக அரசு தலைமைச் செயலாளர் ராயப்பா ஐ.ஏ.எஸ்., இவர் ஒரு கிறித்தவ வன்னியர்.

எனவே, வன்னியர் என்கிற அடையாளத்திற்கு மதம் ஒரு தடையாக எந்த காலத்திலும் இருந்ததில்லை. 

மருத்துவர் அய்யாவும் - கிறித்தவ வன்னியர்களும் 

திண்டுக்கல்லில் உள்ள மிகப்பெரிய தேவாலயமான புனித வளனார் ஆலயத்தில் 'கிறித்தவ வன்னியர்களுக்கும் - கிறித்தவ ஆதிதிராவிடர்களுக்கும்' இடையே சர்ச்சை உருவானது. இதனால், வன்னியர்கள் வழிபட்டுவந்த புனித வளனார் தேவாலயம் மூடப்பட்டது.

2000 ஆவது ஆண்டுவாக்கில், மூடப்பட்ட புனித வளனார் தேவாலயத்தை திறக்க வேண்டும் என்கிற போராட்டத்தில் மருத்துவர் அய்யா அவர்கள் கலந்துகொண்டார்கள். அப்போது மருத்துவர் அய்யா அவர்கள் இரண்டு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்தார்கள்:

"1. மூடப்பட்ட தேவாலயத்தை உடனடியாக திறக்காவிட்டால், மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் புனித வளனார் தேவாலயம் திறக்கப்படும்.

2. தமிழ்நாட்டு கிறித்தவர்களில் வன்னியர்கள் ஒரு முதன்மையான சமுதாயமாக இருப்பதால் - பிஷப் எனப்படும் மறைமாவட்ட ஆயர்களாக வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்களையும் நியமிக்க வேண்டும்" - என்கிற கோரிக்கைகளுக்காக மருத்துவர் அய்யா போராடினார்கள்.
மருத்துவர் அய்யா அவர்களின் போராட்டத்தை தொடர்ந்து புனித வளனார் தேவாலயம் திறக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், வன்னியர் சமுதாயத்தில் ஒரு பிஷப் கூட இல்லை என்கிற கோரிக்கையையும் போப்பாண்டவரின் வாட்டிகன் அலுவலகம் கவனத்தில் கொண்டது. இது குறித்து அப்போதைய வாட்டிகன் பிரதிநிதி கார்டினல் சைமன் லூர்துசாமி அவர்கள் திண்டுக்கல் வந்து ஆய்வு செய்தார் (அவரும் ஒரு வன்னியர்).
கர்தினால் லூர்துசாமி
இதைத் தொடர்ந்து, 2003 ஆம் ஆண்டில் திண்டுக்கல் மறை மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு, வன்னியர் ஒருவர் பிஷப் ஆக நியமிக்கப்பட்டார். ரோமன் கத்தோலிக்க மதத்தில் தமிழகத்தில் 20 மறை மாவட்டங்கள் உள்ளன. இவை மூன்று உயர் மறைமாவட்டங்களாக (ஆர்ச் பிஷப்) பிரிக்கப்பட்டுள்ளன.

மருத்துவர் அய்யா அவர்கள் போராடிய போது, வன்னியர் சமூகத்தில் ஒரே ஒரு பிஷப் கூட இல்லை. ஆனால், இப்போது தமிழ்நாட்டில் 4 பிஷப்கள் வன்னியர்கள். (20 மறை மாவட்டங்களும் 3 உயர்மறை மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளன. பிஷப்களுக்கும் மேலான இந்த 3 ஆர்ச் பிஷப் பதவிகளில்  2 இல் வன்னியர்கள் உள்ளனர்.)

அதுமட்டுமல்லாமல், தமிழகத்தின் ஒட்டுமொத்த 20 மறைமாவட்டங்களுக்கும் தலைவராகவும் - பிஷப் கவுன்சில் தலைவர் எனும் உயர் பொறுப்பில் வன்னியரான அந்தோணி பாப்புசாமி உள்ளார்.

மருத்துவர் அய்யா அவர்களின் அரசியல் போராட்டங்களின் விளைவாகவே கத்தோலிக்க கிறித்தவ மதத்தில் வன்னியர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கிறித்தவ வன்னியர்கள் கருதுகின்றனர்.

"திண்டுக்கல் - கரியாம்பட்டி" 

2013 ஆம் ஆண்டில் திண்டுக்கல் அருகே கரியாம்பட்டியில் வன்னிய பெண்ணை கேலி செய்தது தொடர்பாக "வன்னியர் - அருந்ததியினர்" இடையே மோதல் நிகழ்ந்தது. இந்த சர்ச்சையில் தொடர்புடைய வன்னியர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள். அருந்ததியினரும் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வன்னியர்கள் என்பதால் திண்டுக்கல் பகுதியில் உள்ள வன்னிய கிராமங்களின் ஊர்த்தலைவர்கள் உடனடியாக ஒன்று கூடினர்.

திண்டுக்கல் பகுதியில் சுமார் மூன்று லட்சம் வன்னியர்கள் உள்ளனர். அவர்களில் 75% கிறித்தவர்கள். திண்டுக்கல் பகுதி வன்னியர்களில் மிகப் பெரும்பான்மையினர் கிறித்தவர்களாக இருந்தாலும், அனைத்து கிறித்தவ வன்னிய கிராம ஊர்த்தலைவர்களும், இந்து வன்னியர்களுக்கு ஆதரவாக திரண்டனர்.

எந்த மதத்தில் இருந்தாலும் நாங்கள் வன்னியர்கள் என்கிற உணர்வுடன் அனைவரும் ஒன்றுபட்டதனால் அப்பகுதியில் வன்னியர்கள் காப்பாற்றப்பட்டனர்.

"கற்றுக்கொண்ட பாடம்"

# கரியாம்பட்டி போராட்டத்தில் "இந்துக்களுக்குள்" வன்னியர் - அருந்ததியினர் இடையே சண்டை, நமக்கேன் வம்பு என கிறித்தவ வன்னியர்கள் ஒதுங்கிப் போகவில்லை.

# திண்டுக்கல் போராட்டத்தில் "கிறித்தவர்களுக்குள்" வன்னியர் - ஆதிதிராவிடர் இடையே சண்டை, நமக்கேன் வம்பு என இந்துவான மருத்துவர் அய்யா அவர்கள் ஒதுங்கிப் போகவில்லை.

மதத்தைத் தாண்டி, வன்னியர்கள் எல்லோரும் உறவினர்களாக ஒன்றுபட்டு நின்றார்கள். ஒற்றுமையே வலிமை என்பதை நிரூபித்தார்கள்.

மதவெறி கலவரத்தில் வன்னியர்களா?

'கிருஸ்துவ வன்னியர்களை வன்னியர் சமூகத்திலிருந்து விலக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக வன்னியர்கள் தாக்குதல் நடத்தி கலவரம் செய்ய வேண்டும்' என்று சத்திரியர் சாம்ராஜயம் எனும் பாஜக துணை அமைப்பின் கூட்டத்தில் ஞாயிற்றுக் கிழமை (9.4.2017) அன்று பகிரங்கமாக பேசப்பட்டிருப்பது மிகவும் ஆபத்தானதாகும்.

வன்னியர்கள் எல்லா மாற்றுக் கட்சிகளிலும் இருக்கிறார்கள். அரசியல் ரீதியில் எதிர்எதிர் இடங்களில் இருந்தாலும், அவர்களுக்குள் உறவினர் என்கிற அடிப்படையில் மோதல் இல்லை. மருத்துவர் அய்யா அவர்கள் கைது செய்யப்பட்டபோது, பல மாற்றுக்கட்சி வன்னியர்கள் துடிதுடித்தார்கள்.

ஆனால், பாஜக ஆதரவு வன்னியர்கள் மட்டும்தான் 'இந்துக்கள் என்றும் கிறித்தவர்கள் என்றும்' வன்னியர்களுக்குள் பிளவினை ஏற்படுத்த துடிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், கிறித்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக அப்பாவி வன்னியர்களை அடியாட்களாக மாற்றத் துடிக்கின்றனர். 
முப்பதாண்டுகளுக்கு முன்பு, தெலுங்கானா போன்று இடதுசாரி நக்சலைட் தீவிரவாதிகளாக வன்னியர்கள் மாறாமல் தடுத்து அவர்களை நல்வழிக்கு திருப்பியவர் மருத்துவர் அய்யா அவர்கள் தான். அது போல இப்போது மதவெறி அரசியலுக்காக வன்னியர்களை பலிகொடுக்கும் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.

‘மதவெறி அரசியலின் மூலமாக பாஜக வளர வேண்டும் என்பதற்காக வன்னியச் சாதியை பலி கொடுக்கத் துடிக்கும்' இந்த மாபெரும் சதியை மருத்துவர் அய்யா அவர்கள் முறியடிப்பார்கள்.

சனி, மார்ச் 11, 2017

சிவபெருமானின் தந்தை வீர வல்லாள மகாராஜா

அருள்மிகு அண்ணாமலையார் மகனாக அவதரித்து மகனின் கடமை ஆற்றும் மாசி மகம் திருநாள்!
மூன்றாம் வீர வல்லாள மகாராஜா. நடுநாடு எனப்பட்ட திருவண்ணாமலை பகுதியை ஆண்ட அரசர்களில் புகழ்பெற்றவர். வல்லாள ராஜன் கோபுரம் எனப்படும் திருவண்ணாமலை ஆலயத்தின் ராஜ கோபுரத்தை நிர்மாணித்தவர். இவருக்கு சிவபெருமானே மகனாக வந்து பிறந்தார் என்பது நம்பிக்கை ஆகும். இறந்து போன தனது தந்தை வல்லாள மகராஜனுக்கு மாசி மகம் நாளில் சிவபெருமானே திதி கொடுக்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை கோவிலில் நடந்து வருகிறது.

பின்னணி

ஹோய்சாளப் பேரரசு என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய அரச மரபின் கடைசி மாமன்னர் வீர வல்லாள மகாராஜா. கி.பி 1291 -ல் தொடங்கி, கி.பி. 1343 ஆம் ஆண்டுவரை கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளையும் வட தமிழ்நாட்டையும் ஆந்திராவின் சில பகுதிகளையும் ஆட்சி செய்தார். இப்பேரரசின் தலைநகரம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹளபேடு. இவரது இரண்டாம் தலைநகரம் திருவண்ணாமலை.
வல்லாள மகாராஜா சிலை, திருவண்ணாமலை கோவில்.

ஹோய்சாள மன்னர்கள் சோழர்களுடனும் பாண்டியர்களுடனும் திருமண உறவு கொண்டிருந்தனர். அவர்களால் மாமன் உறவில் அழைக்கப்பட்டனர். சோழப்பேரரசை பாண்டியர்களிடமிருந்தும் காடவர்களிடமிருந்தும் இவர்கள் காப்பாற்றினர். மூன்றாம் குலோத்துங்கச் சோழனும், மூன்றாம் இராசராசனும் வல்லாள இளவரசிகளை மணந்தனர். இரண்டாம் வல்லாளன் சோழ இளவரசியை மணந்தார். மூன்றாம் வீரவல்லாளனின் தாத்தாவான ஹோய்சாள சோமேஸ்வரன் கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழர்களின் அரண்மணையில் வாழ்ந்தார். திருச்சிக்கு அருகே கண்ணனூரில் தலைநகரை அமைத்தார்.

வீர வன்னியர் மரபு

வன்னியர்கள் வடபால் முனிவரின் யாகத்தீயில் இருந்து உதித்தவர்கள் என்பது வன்னிய புராணம் குறிப்பிடும் செய்தி ஆகும். இதே தொன்மக்கதையை ஹோய்சாளர்களும் கொண்டிருந்தனர்.

கி.மு. 4 ஆம் நூற்றாண்டு வாக்கில் எருமை நகரம் எனப்பட்ட மைசூர் அருகே துவரை நகரை இருங்கோவேள் என்னும் தமிழச் சிற்றரசன் ஆண்டுவந்தான். இவனைப்பற்றி புறநானூறு பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது:

"நீயே, வடபான் முனிவன் தடவினுட் டோன்றிச்
செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறற்போ ரண்ணல்
தாரணி யானைச் சேட்டிருங் கோவே
ஆண்க னுடைமையிற் பாண்கட னாற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்" (புறநானுறு  201)

வடபால் முனிவன் எனப்படும் சம்புமுனிவரின் ஓம குண்டத்தில் தோன்றித் துவரை நகரை நாற்பத்தொன்பது தலைமுறையாகத் தொன்றுதொட்டு ஆண்டுவந்தவன் இருங்கோவேள் ஆகும். இவனே புலிக்கடிமால் எனப்பட்டான். பாரியின் மகளிராகிய அங்கவை, சங்கவை என்பவரைக் கபிலர் இருங்கோவேள் அரசனிடம் அழைத்து வந்து மணஞ் செய்து கொள்ளும்படி கேட்டார். இருங்கோவேள் மறுத்துவிட்டான் என்று புறநானூறு கூறுகிறது.
புலியை வீழ்த்தும் வீரன் புலிக்கடிமால் சின்னம், பேலூர்

சம்புமுனிவரின் யாகத்தீயில் தோன்றிய இருங்கோவேள் அரசன், தபங்கர் என்னும் முனிவர் தவம் செய்கையில் பாயவந்த புலியை 'ஹொய்சள' என்று கூறிய முனிவர் ஆணைப்படிக் கொன்றதால் அவன் புலிகடிமால் என்று பெயர் பெற்றான். இந்த வம்சத்தில் வந்தவர்களே ஹொய்சாளர்கள் என்பது உ.வே. சாமிநாத அய்யர், ஞா. தேவநேயப் பாவாணர், மயிலை சீனி. வேங்கடசாமி ஆகிய அறிஞர்களின் கருத்தாகும்.

புலியை வீழ்த்தும் வீரன் புலிக்கடிமால் என்று புறநானூற்றில் உள்ள தொன்மக்கதையை ஹொய்சாளர்கள் தங்களது சின்னமாகக் கொண்டனர். பேலூர் கோவிலிலும், அவர்கள் கட்டிய திருவண்ணாமலை கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும் புலிக்கடிமால் சின்னத்தை சிலையாக வடித்துள்ளனர். புறநானூற்றில் உள்ள அதே துவரை நகரம் தான் ஹொய்சாளர்களின் தலைநகரமாக விளங்கியது. முதலில் துவாரசமுத்திரம் என்றும் பின்ன ஹளபேடு (பழைய நகரம்) என்றும் அழைக்கப்பட்டது.
புலியை வீழ்த்தும் வீரன் புலிக்கடிமால் சின்னம், திருவண்ணாமலை கோவில்.

வன்னிய புராணம் குறிப்பிடும் வன்னியர்கள் யாகத்தீயில் தோன்றியவர்கள் என்கிற தொன்மமும், புறநானூறு குறிப்பிடும் ஹொய்சாளர்கள் யாகத்தீயில் தோன்றியவர்கள் என்கிற நம்பிக்கையும் ஒன்றாக இருப்பது வியப்பளிக்கக் கூடியது ஆகும். கல்வெட்டுகளும் அருணாசலபுராணமும் ஹொய்சாளர்களை வன்னியர்கள் என்று குறிப்பிடுகின்றன.

கர்நாடக மாநிலம் பேலூர் கல்வெட்டு ஹொய்சாளர்களை வன்னிய புத்திரர்கள் என்கிறது. கோலாரில் உள்ள 1291 ஆம் ஆண்டு தமிழ் கல்வெட்டு ஹொய்சாளர்கள் காலத்தை வன்னியர் காலம் என்று குறிப்பிடுகிறது.

திருவண்ணாமலை கோவில் புராணமான கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் அருணாச்சலபுராணம், ஹோய்சால வீரவல்லாள மகாராஜாவை "வன்னி குலத்தினில் வரு மன்னா" என்று குறிப்பிடுகிறது. 

சிவன் மகனாக பிறந்த கதை

வல்லாள மகாராஜாவுக்கு பிள்ளை இல்லை என்கிற குறை இருந்தது. இதனை அறிந்த சிவபெருமான் தானே மகனாக பிறக்கும் திருவிடையாலை நிகழ்த்தினார்.

திருவண்ணாமலையில் இருந்த எல்லா தேவதாசிகள் வீட்டுக்கும் சிவகணங்களை அனுப்பிய சிவபெருமான், வல்லாள மகாராஜாவிடம் சைவத் துறவி கோலத்தில் வந்து தனக்கு ஒரு தேவதாசி வேண்டும் என்று கேட்டார். வல்லாள மகாராஜாவும் தேவதாசியை அனுப்புவதாக வாக்களித்தார். ஆனால், ஊரில் உள்ள எல்லா தேவதாசிகளும் சிவகணங்களுடன் இருந்ததால் - வல்லாள மகாராஜாவால் தேவதாசியை கொண்டுவர முடியவில்லை. மன்னனின் கவலை அறிந்த வல்லாள மகாராஜாவின் இளைய ராணி, தானே தேவதாசியாக சிவனிடம் செல்ல முன்வந்தார். துறவி வேடத்தில் சிவன் இருந்த அறைக்குள் ராணி நுழைந்த போது - குழந்தையாக சிவபெருமான் காட்சியளித்தார். ராணியும் மகாராஜாவும் சிவபெருமானை தமது குழந்தையாக ஏற்றனர்.

பின்னர், வீர வல்லாள மகராஜன், மதுரை சுல்தான் மீது போர் தொடுத்தபோது கொலை செய்யப்பட்டார். வீர வல்லாள மகாராஜாவின் இறுதி கடனை இறைவனே திருவண்ணாமலையின் கீழ்த்திசையில் ஓடும் கௌதம நதிக்கரையில் செய்து முடித்தார். வன்னியப்பெருமக்கள் அருள்மிகு அண்ணாமலையானை சம்மந்திமுறை ஏற்று தலைக்கட்டு நடத்தினர். வன்னியர்கள் வாழ்ந்த அந்த ஊருக்கு "சம்மந்தனூர்" என்ற பெயர் வழங்க பெற்றது.

அப்போது முதல் பள்ளிகொண்டாபட்டு கௌதம நதிக்கரையில் சிவபெருமான் தனது தந்தைக்கு திதிகொடுக்கும் மாசி மக திருவிழா கொண்டாடப்படுகிறது. சம்மந்தனூர் வன்னியர்கள் சம்மந்தி உரிமையில் சிவனுக்கு பட்டாடை சாத்துகின்றனர். மறுநாள் வீர வல்லாள மகாராஜனுக்கு பதிலாக திருவண்ணாமலையில் சிவபெருமான் மன்னராக முடிசூடிக்கொள்கிறார். இந்த நிகழ்விலும் வன்னியர்களே காலம் காலமாக பங்கேற்கின்றனர்.

2017 ஆம் ஆண்டு, சிவபெருமான் வல்லாள மகராஜனுக்கு திதி கொடுக்கும் மாசி மகம் திருநாள் 11.3.3017 ஆம் நாளிலும், சிவபெருமானுக்கு முடிசூட்டு விழா 12.3.2017 ஆம் நாளிலும் நடைபெறுகிறது.

வியாழன், ஜனவரி 12, 2017

மறைக்கப்பட்ட வரலாறு: யாருமில்லாத காட்டில் சோழர்களின் அடையாளம்!

ஒரு மாபெரும் வரலாற்று நினைவிடம், ஆள் அரவமற்று வெறுமையில் கிடக்கிறது. தென் கிழக்காசியாவை வெற்றி கொண்ட போர்த்துறைமுகம், மாமன்னர்களின் ஆபத்து கால மறைவிடம், சோழப்பேரரசின் கடைசிக் கால தலைமையிடம் - இப்போது வெறும் மண் மேடாக காட்சியளிக்கிறது.

சிதம்பரம் அருகே கடலோரத்தில் உள்ளது தீவுக்கோட்டை. உள்ளூர் மக்களால் 'கோட்டை மேடு' என்றும், வரலாற்று குறிப்புகளில் 'தீவுக்கோட்டை, தேவிக்கோட்டை, ஜலக்கோட்டை' என்று அழைக்கப்படும் இந்த இடம் - உள்ளூர் கோவில் பத்திரிகையில் 'திருத்தீவுக்கோட்டை' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயற்கை சீற்றத்தின் காரணமாக ஒரேயடியாக ஊரைவிட்டு வெளியேறிய கிராம மக்களின் நினைவுகளில் மட்டுமே இன்னமும் இந்த ஊர் வாழ்கிறது. எஞ்சியிருக்கும் கோட்டை மதில்களின் எச்சம், சிறிய காளியம்மன் கோவில், உடைந்து கிடக்கும் பழைய வீடுகள் - இவை மட்டுமே இன்னமும் மீதம் உள்ளன. மக்கள் யாரும் இங்கு வசிக்கவில்லை.
தீவுக்கோட்டை மதில் சுவர்
கடந்த 10.01.2017 ஆம் நாள் சிதம்பரம் கோவில் சோழக மண்டகப்படியின் போது - தீவுக்கோட்டைக்கு தமிழ்ச் சமூக ஊடகப் பேரவையின் சார்பில் வரலாற்று சுற்றுப்பயணம் நடத்தப்பட்டது (தீவுக்கோட்டைக்கு சென்ற முதல் சுற்றுப்பயணக் குழு இது மட்டும் தான்).

இராஜேந்திர சோழன்: தமிழர் வலிமையின் அடையாளம்

மாமன்னன் இராஜேந்திர சோழன், தனது கப்பற்படையின் வலிமையால் தென்கிழக்கு ஆசிய நாடுகளான கடாரம், ஜாவா ,சுமத்திரா, இந்தோனேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை தமிழரின் வர்த்தக மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தான்.

தமிழ்நாட்டின் நகரத்தார்களும் மரைக்காயர்களும் இந்துமாக்கடல், அரேபியக்கடல், வங்கக்கடல் பகுதிகளில் உள்ள நாடுகளுடன் பயமின்றி வணிகம் செய்வதற்கு வழிவகுத்தான். அவனது பலம் வாய்ந்த கடற்படை தான் தமிழர்களின் பன்னாட்டு வர்த்தகத்தை சாத்தியமாக்கியது.

இந்துமாக்கடலையும், வங்கக்கடலையும், அரேபியக்கடலையும் கட்டியாண்ட இராஜேந்திர சோழனின் கடற்படை தளம் அமைந்திருந்த இடம் தீவுக்கோட்டை ஆகும். இந்த இடம் சிதம்பரம் பகுதியில் கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது.
தீவுக்கோட்டை அகழி
கங்கைகொண்ட சோழபுரத்துக்கு தனது தலைநகரை இராஜேந்திர சோழன் மாற்றியதற்கும் கூட, தீவுக்கோட்டையை கடற்படைத் தளமாக கொண்டதே காரணமாக இருக்கும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சோழ மன்னர்களும் சோழர்களின் ஆதரவு பெற்ற பாண்டிய மன்னர்களும் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் காலத்தில் பதுங்கும் இடமாகவும் தீவுக்கோட்டை இருந்துள்ளது.

சோழர் பரம்பரையின் தொடர்ச்சி

மூன்றாம் இராசேந்திரசோழன் காலத்தோடு கி.பி.1279 ஆம் ஆண்டில் சோழராட்சி முடிவுற்றது என்று பழைய வரலாற்று ஆய்வுகள் குறிப்பிட்டன. ஆனால், அதன் பின்னர் கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து இடம்பெயர்ந்து, தீவுக்கோட்டையில் சோழர் ஆட்சி தொடர்ந்திருக்கக் கூடும் என்பதை சமஸ்கிருத நூல்களும், நாயக்கர் வரலாறுகளும் கூறுகின்றன. அதை நிரூபிக்கும் அரண்மணை சிதிலங்களும், கல்வெட்டுகளும் தீவுக்கோட்டையில் இப்போதும் உள்ளன.
பிச்சாவரம் குட்டியாண்டவர் கோவில் கல்வெட்டு
பிச்சாவரம் குட்டியாண்டவர் கோவிலில் இருக்கும் 1583 ஆம் ஆண்டு கல்வெட்டில் 'விட்டலேசுவர சோழகனார்' எனும் மன்னன் குறிப்பிடப்படுகிறார்.

தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்கர், 'தீவுக்கோட்டை சோழகனை வெற்றி பெறவேண்டும்' என்பதையே தனது மிகப்பெரிய லட்சியமாகக் கொண்டிருந்தார். 1615 ஆம் ஆண்டில் பெரும் படை திரட்டிவந்து தீவுக்கோட்டை மீது போர் தொடுத்து அங்கு ஆட்சி செய்த சோழகனை தஞ்சை ரகுநாத நாயக்கன் வென்றார் என்பதை வரலாற்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

மக்கள் வாய்வழி வரலாறு

தீவுக்கோட்டையில் வாழ்ந்து வந்த மக்கள் இப்போது சிதம்பரம் பகுதியில் பல கிராமங்களில் உள்ளனர். அவர்களின் செவிவழி கதைகளிலும், திருவிழாக்களிலும் சோழர்களின் வரலாறு பேசப்படுகிறது.

தீவுக்கோட்டையை ஆட்சி செய்த மன்னன் சோழன் தான் என்று குறிப்பிடும் தீவுக்கோட்டை பரம்பரையினர், சோழ மன்னர் நவராத்திரி கொலு வழிபாட்டில் இருந்த போது, எதிரிப்படைகள் அவரை கொன்றனர் என்று கூறுகின்றனர். அதாவது, மன்னர் தனது ஆயுதங்களை கொலுவில் வைத்திருந்ததாகவும், நவராத்திரி கொலு காலத்தில் போரில் ஈடுபடுவது மரபல்ல என்றும் - இதனை அறிந்த எதிரிப்படையினர் ஆயுதமற்ற காலத்தில் போர் மரபை மீறி தீவுக்கோட்டை சோழனை கொன்றதாக குறிப்பிடுகின்றனர்.

மன்னர் கொலை செய்யப்பட்ட போது, சோழ ராணி தனது குழந்தையுடன் சுரங்கப்பாதை வழியே வெளியேறி, பிச்சாவரத்துக்கு சென்றதாகவும் மக்களின் வாய்வழி வரலாற்று கதைகள் கூறுகின்றன.
காளி கோவில்
இதே போன்று, தீவுக்கோட்டையில் உள்ள காளி கோவில் திருவிழா பத்திரிகையும் - சோழ வரலாற்றை கூறுகிறது. அந்த அழைப்பிதழில் உள்ள 'கோட்டையா வெண்பா' எனும் பாடல்:

"நாட்டுக்கு நாயகன் நற்சோழ பூபதியின் 
கோட்டையின் கீழ்குடிகொண்ட கோட்டையனென் 
முனீஸ்வரன் தாளை மறவாதிருப்போர்க்கு
இன்துற்ற இல்லம் எய்தும்"

- என்று கூறுகிறது. அதாவது 'சோழனின் கோட்டைக்கு அருகே முனீஸ்வரன் கோவில் இருந்ததை' இந்தப் பாடல் குறிப்பிடுகிறது.
காளியம்மன் கோவில் பத்திரிகை
அதே போன்று, "காளியம்மன் துதி" எனும் பாடல்:

"பாராரு மநுநீதி பண்புபெறவே மக்கள் பழமே லெக்ஷ்யமாக 
போராடு படையோடு போறாங்க பாராண்ட சோழமன்னர்
காராருமேனித்தாய் காப்பதுன் கடனென் தன்கோட்டையின் தென்பால் வைத்து 
காலமுறை வாழுவாது கழல் அணிந்தர்சித்த காளிதனை தொழுதுதல் செய்வோம்"

- என்று கூறுகிறது. "பாராண்ட சோழ மன்னர் படையோடு செல்வதையும்", "தனது கோட்டைக்கு அருகே காளிக்கு கோயில் அமைத்து வழிபட்டதையும்" இந்தப் பாடல் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

தொடரும் சோழர் மரபு

சோழ வம்சத்தினர் கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து தீவுக்கோட்டைக்கும், பின்னர் அங்கிருந்து பிச்சாவரத்துக்கும் இடம்பெயர்ந்தனர் என்று நம்பப்படுகிறது. 

இவர்கள்தான் சோழ மரபை பின்பற்றி சிதம்பரம் கோவிலில் முடிசூடிக்கொண்டனர். ஆண்டுக்கு இரண்டுமுறை தேர் தரிசனத்தின் போது சிதம்பரம் கோவிலில் சோழக மண்டகப்படியை நடத்தி வந்தனர். இந்த மரபு இப்போதும் தொடர்கிறது.

தீவுக்கோட்டையும் அதனுடன் தொடர்புடைய இடங்களும் வரலாற்று சுற்றுலா பகுதியாக மாற்றப்பட வேண்டும்.

சனி, டிசம்பர் 31, 2016

தி இந்து கும்பலின் சாதிவெறி: மருத்துவர் அன்புமணிக்கு சாதிப்பட்டம்!

'தி இந்து' வெளிவராத புத்தகங்கள்- 2016 என்ற தலைப்பில் தமிழகத்தின் தலைவர்களை விமர்சனம் செய்துள்ளது. தமிழ்நாட்டின் இதர தலைவர்களை பொதுவாக விமர்சனம் செய்துள்ள அப்பத்திரிகை, பாமகவின் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் MP அவர்களை மட்டும் சாதி பொருள் படும்படி "பள்ளி" என்று விமர்சனம் செய்துள்ளது.  

ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும் மட்டம் தட்டி, தி இந்து தனது சாதி வெறி அரிப்பை தீர்த்துக் கொண்டுள்ளது. இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டும். ஊடகத்தில் இருக்கும்  பிராமண சாதியினர் தொடர்ந்து தமிழர் உரிமைக்காக பாடுபடும் தலைவர்களை குறிவைத்து தாக்குவது மோசமான விளைவை ஏற்படுத்தும்.

பள்ளி என்பது வழக்கொழிந்துபோன சொல்.

பார்ப்பான் என்கிற பெயரை பிராமணர் பயன்படுத்த விரும்புவதில்லை. அதுபோல இன்னும் பல சமூகங்கள் அவரவர் சாதியின் 'கொச்சையானது என்று கருதப்படும் பெயர்சொற்களை' பயன்படுத்துவது இல்லை (அந்த நீண்ட பட்டியலை இங்கே குறிப்பிடும் தேவையும் இல்லை).

அதுபோல, ஒருகாலத்தில் பள்ளி என்கிற வார்த்தை மன்னர் பரம்பரை என்கிற பெயரில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் - விஜயநகர பேரரசின் ஊடுருவலுக்கு பின்பு, வன்னியர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர், பள்ளி என்கிற வார்த்தை சாதாரண வழக்கத்தில் பயன்படுத்தப்படுவது இல்லை.

இதன் உச்சமாக, 1850 ஆண்டு வாக்கில், சாதிவாரி கணக்கெடுப்பில் பள்ளி என்கிற பெயரை கீழான சாதி என்கிற வரையறையின் கீழ் கொண்டுவர ஆங்கிலேய ஆட்சியாளர்கள் முயன்றனர். இதனை எதிர்த்து, 1888 ஆம் ஆண்டு வன்னியகுல சத்திரிய மகா சங்கம் தொடங்கப்பட்டது. இச்சங்கத்தின் முதன்மை நோக்கம், பள்ளி என்கிற பெயரை சாதிவாரி கணக்கெடுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்பதுதான். அந்த நோக்கத்தில் வெற்றியும் அடைந்தனர்.

பள்ளி என்று அழைப்பதை இன்றைக்கும் திட்டும் வார்த்தையாகவே வன்னியர்கள் எடுத்துக்கொள்கின்றனர். இதனால், பெரும் சண்டைகளும், கொலைகளும் கூட நடந்துள்ளன.

இலக்கியங்களில் பள்ளி எனும் சொல்

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 1950 ஆம் ஆண்டில் எழுதிய 'சௌந்தர கோகிலம்' எனும் நாவலில் - பள்ளி என்பதும் பாப்பான் என்பதும் கொச்சையான சொல் - என்று பொருள்படும் பின்வரும் வாசகம் இடம்பெற்றுள்ளது:
'ஒகோ! அப்படியா சங்கதி "கண்டால் காமாட்சி நாயக்கர், காணாவிட்டால் பள்ளிப்பயல்" என்றும், "கண்டால் சாமி சாமி, கானாவிட்டால் பாப்பான்" என்றும் சிலர் நடந்து கொள்வதுண்டு. அதுபோல இருக்கிறது காரியம். சொந்தக்காரர் இல்லா விட்டால், அவர்களுடைய பெயரை எப்படி வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளுகிறது. அவர்கள் இருந்தால் அவர்களிடம் நிரம்பவும் மரியாதையாக நடந்து கொள்ளுகிறது. இந்த மாதிரி நியாயம் மூட ஜனங்களிடத்தில் இருக்கத் தகுந்ததென்றல்லவா நான் நினைத்தேன். நாகரீகம் கண்ணியம் முதலியவை வாய்ந்த நம்மைப் போன்றவர்களிடத்தில்கூட இந்த நியாயம் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது'. 
- இவ்வாறு 'சௌந்தர கோகிலம்' நாவல் கூறுகிறது.

வன்னிய புராணம் வசன வடிவிலான காவியத்திலும் பள்ளி என்கிற சொல் கொச்சையான சொல்லாக கீழ்கண்டவாறு அடையாள படுத்தப்பட்டுள்ளது:
தேவேந்திரன் அங்குவந்து "பள்ளியாரே! பரமசிவன் வரத்தால் பிறந்த உங்களுக்கு இந்த அல்லல் வந்தது என்ன" என்று விளையாட்டாகக் கேட்டான்.

உடனே வன்னிய குமாரர்கள் கோபமுற்று, "எங்களைப் பள்ளி என்று சொல்லி நீர் பழிக்கலாகுமோ? உம் தேகத்தை இப்போதே வெட்டி வீழ்த்தி எமதூதர் கையிலே கொடுக்கிறோம் பாரும்!" என்று கூறி கண்களாலே நெருப்புப் பொறி பறக்க வீரமீசைகள் படபடக்க ஆத்திரத்துடன் வீரவாள்களை உருவினார்கள். 
- இவ்வாறு வன்னிய புராணம்' கூறுகிறது.

இந்துவை கண்டிக்க வேண்டும்.

சுமார் கடந்த இருநூறு ஆண்டுகளாக வன்னியர்களை பழிக்கும் விதத்தில் பயன்படுத்தப்படும் 'பள்ளி' என்கிற சொல்லைக்கொண்டு, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்களை கேலி செய்துள்ளது தி இந்து.

பள்ளி என்பது ஒரு அரசபரம்பரை சொல்தான். ஆனால், அந்த சொல் அதே பொருளில் இப்போது பயன்பாட்டில் இல்லை. அதிலும் குறிப்பாக, சாதியை சொல்லி மருத்துவர் அன்புமணி அவர்களை திட்டவேண்டும் என்கிற இழிநோக்கில்தான் தி இந்து இதனை எழுதியுள்ளது. எனவே, இதனை வன்மையாக கண்டிக்க வேண்டும்.

திங்கள், டிசம்பர் 26, 2016

வன்னியர்களை தோற்கடித்த தெலுங்கு மன்னன்: மாபெரும் தமிழர் வீழ்ச்சியின் தொடக்கம்

பாஜகவுக்கு காவடி தூக்கும் வன்னியர்கள் சிலபேர், அப்படியே இந்து விஜயநகரப் பேரரசுக்கும் சேர்ந்து ஜால்ரா அடிக்கிறார்கள். ஆனால், இதே இந்து விஜயநகரப் பேரரசால்தான் வன்னியர்கள் பேரழிவுக்கு ஆளானார்கள்.

இன்று வரை தொடரும் வன்னியரின் வீழ்ச்சி விஜயநகரப் பேரரசின் ஊடுருவலில்தான் தொடங்கியது.

தெலுங்கு ஆதிக்கத்தின் தொடக்கம்

துங்கபத்திரை நதிக்கரையில் சங்கம மரபினரான ஹரிஹரன்-புக்கன் உள்ளிட்ட சகோதரர்களால் விஜயநகர அரசு 1336-ல் உருவானது. இந்த புக்கனின் மகன்தான் குமார கம்பணன். விஜயநகர சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்துவதற்காக தமிழகத்தின் மீது படையெடுத்தான் குமார கம்பணன். அப்போது அவனது சாம்ராஜ்ய விரிவாக்கத்துக்கு மிகப்பெரிய தடையாக இருந்தவர்கள் வன்னியர்கள்.

அப்போது - தொண்டை மண்டலத்தை ஆண்டு கொண்டிருந்தவர் சம்புவராயர் மரபைச் சேர்ந்த இராஜ நாராயணன் (கி.பி.1339 - 1363) என்பவர். சம்புவராயர்களின் அரசிற்குப் படைவீடு ராச்சியம் என்று பெயர். இராஜ நாராயணனின் தலைநகரம் வேலூர் மாவட்டத்திலுள்ள விரிஞ்சிபுரம். இன்றைய காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் அடங்கியது படைவீடு ராச்சியம். சம்புவராயர்களது முன்னோர் திண்டிவனப் பகுதியில் (கிடங்கில்) இருந்த ஓய்மா நாட்டிலிருந்து வந்தவர்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட படையாட்சிகள் எனப்படும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சம்புவராயர்கள்.

எல்லை காத்த வன்னியர்கள்

தமிழ்நாட்டைக் கைப்பற்ற வேண்டுமென்றால் - அதற்கு வன்னியர் ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் குமார கம்பணனின் முக்கிய இலக்காக இருந்தது. இதனை 1380 ஆண்டு வாக்கில் எழுதப்பட்ட மதுராவிஜயம் எனும் சமற்கிருத காவியம் குறிப்பிடுகிறது.
'தமிழ்நாட்டை வெற்றியடைய வேண்டுமானால் நீ முதலில் வன்னியர் ஆட்சியை வீழ்த்த வேண்டும்' என்று குமார கம்பணனிடம் அவனது தந்தை புக்கன் அறிவுரைக் கூறினான். அதனை ஏற்று வன்னியர் ஆட்சியை வீழ்த்தினான் என்கிறது குமார கம்பணனின் மனைவி கங்காதேவி எழுதிய மதுரா விஜயம் நூல்.

தனது தெலுங்கு - இந்து இராஜ்யத்தை விரிவுபடுத்தவே குமார கம்பணன் தமிழ்நாட்டை கைப்பற்றினான், வடதமிழ்நாட்டை ஆட்சி செய்த வன்னிய மன்னர்களை தோற்கடித்தான். அதன்பின்னர் மதுரையை ஆண்ட முஸ்லிம் சுல்தான்களை வெற்றி கொண்டான். அதுவே தமிழ்நாட்டில் தெலுங்கு சாம்ராஜ்ய ஆதிக்கமாக விரிவடைந்தது.
ஹரிஹர சாஸ்திரி, சுப்ரமணிய சாஸ்திரி ஆகிய வரலாற்று அறிஞர்கள் 1924 ஆம் ஆண்டில் எழுதிய 'மதுராவிஜயம்' குறித்த ஆய்வு நூலில், முதலில் வன்னிய ராஜாவை தோற்கடித்து அதன் பின்னர் துருக்க ராஜாவை தோற்கடிக்க வேண்டும் என்று குமார கம்பணனின் தந்தை ஆலோசனை கூறியதை குறிப்பிட்டுள்ளனர். (attack and conquer the "Vannyarajas" further south and the Turushkarajas reigning at Madhura - Madhura Vijaya or Virakamparaya Charita - An Historical Kavya by Ganga Devi, by G. Harihara Sastri and V. Srinivasa Sastri 1924. படம் 1.)
இதே கருத்தை 'வன்னியர்களின் தலைவன் சம்புவராயனை தோற்கடிக்க வேண்டும்' என்று குமார கம்பணனின் தந்தை ஆலோசனை கூறியதாக கர்நாடக பல்கலைக்கழகத்தின் கங்காதேவியின் மதுராவிஜயம் எனும் ஆய்வு நூலும் குறிப்பிடுகிறது. (Bukka I advised his son Kumara Kampana to march against the Shambuvaraya...The Sambuvaraya is the leader of "Vanniyas", Gangadevi's Madhravijayam - A Critical Study, by BA. Dodamani, Karnataka University 1991 படம் 2.)

தொடரும் தெலுங்கு ஆதிக்கம்

கி.பி.1362 -ல் இராஜ நாராயணச் சம்புவராயரை தோற்கடித்து தொண்டை நாட்டைக் கைப்பற்றினான் குமார கம்பணன். அடுத்த சில ஆண்டுகளில் தஞ்சையைச் சிற்றரசர்களிடமிருந்தும், மதுரையைச் சுல்தான் அலாவுதீன் சிக்கந்தரிடமிருந்தும் (கி.பி.1377) கைப்பற்றி தமிழகம் முழுவதையும் விஜயநகரப் பேரரசிற்கு உட்படுத்தினான்.

விஜயநகர அரசர்கள் நாட்டிலுள்ள நிலமனைத்தும் நாடாளும் மன்னர்க்கே உரியது என்ற கொள்கை உடையவர்கள். இது தமிழகத்தில் ஏற்கனவே நிலவி வந்த தனிநபருக்கு உரிமையுள்ளதும் தத்தம் இரத்த உறவுகளுக்குள் மட்டுமே பரிமாற்றம் செய்துகொள்ளத் தக்கதுமான காணியாட்சி முறைமைக்கு முற்றிலும் மாறுபட்டது. விஜயநகர அரசர்கள் தமக்கு நம்பிக்கையான தெலுங்கு படைத்தலைவர்களுக்கு நிலங்களை வழங்கினர். இப்படித்தான் தெலுங்கு நாயக்கர்களின் ஆக்கிரமிப்பின் கீழ் தமிழ்நாடு சென்றது.

அன்று வன்னிய ராஜ்யத்தினை வீழ்த்தியதில் தொடங்கிய தெலுங்கு ஆட்சியும் தமிழகக் கொள்ளையடிப்பும் இன்று  ராம மோகன ராவ், சேகர் ரெட்டி வரை தொடருகிறது!

இந்த ஆதிக்க போக்கிற்கு இந்து சாம்ராஜ்யம் என்கிற போர்வையை போர்த்தி ஏமாற்றுகிறது இந்துத்வ கும்பல்!

வெள்ளி, டிசம்பர் 23, 2016

அதிமுகவின் சாதி அரசியலும் - உயர்நீதி மன்றத்தின் அதிரடியும்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (TNPSC) உறுப்பினர்கள் நியமனம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம், அதிமுக அரசின் அப்பட்டமான சாதி அரசியலுக்கு தற்காலிக தடை ஏற்பட்டுள்ளது. 

அமைச்சரவையில் சாதி

ஜெயலலிதாவின் தோழி சசிகலா கட்டுப்பாட்டில் இருக்கும் அதிமுக ஆட்சியில் முக்குலத்தோர் சமுதாயத்துக்கே அதிகாரமிக்க பதவிகள் அளிக்கப்படுகின்றன. 32 அமைச்சர்கள் உள்ள தமிழக அமைச்சரவையில் 9 பேர் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். அதில் முதலமைச்சர் பதவியும் அடங்கும்.

அதாவது, முதலமைச்சருடன் சேர்த்து 28 % அமைச்சரவை பதவிகள் முக்குலத்தோர் சமூகத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. முக்குலத்தோரை விட அதிக எண்ணிக்கையில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கு வெறும் 9 % இடம் (3 பேர்) அளிக்கப்பட்டுள்ளதுடன் ஒப்பிட்டு பார்த்தால் - அதிமுகவின் சாதி அரசியல் தெரியும்.

அரசுப்பணி தேர்வில் சாதி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது தமிழகத்தின் அரசு நிர்வாகத்திற்கு தேவையான எழுத்தர்கள் முதல் மாவட்ட துணை ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் வரையிலான அனைத்து பணிகளுக்கும் ஆட்களை தேர்வு செய்யும் முக்கிய அமைப்பாகும்.

அரசு வேலை வாய்ப்புகளுக்கான தேர்வுகளின் மதிப்பெண் மட்டுமல்லாமல், நேர்முகத்தேர்வு என்கிற வழியில் அளிக்கப்படும் மதிப்பெண்களும் சேர்க்கப்பட்டு - கூட்டு மதிப்பீட்டின் படி அரசுப்பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அரசாங்க வேலைக்கான பணி நியமனங்களை மேற்கொள்ளும் இந்த இடத்தில் இருப்பவர்கள் நினைத்தால் - 'என்ன நடக்கும்' என்பது எல்லோரும் அறிந்ததுதான். இப்படிப்பட்ட முக்கியமான இடத்துக்கு - தேர்தல் தேதி அறிப்புக்கு முன்பாக, அவசரம் அவசரமாக 2016 ஜனவரி மாதம் ஒரு விடுமுறை நாளில் 11 உறுப்பினர்களை நியமித்தனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய 11 உறுப்பினர்களில்:

முக்குலத்தோர் 7 பேர்
நாயுடு 1
கொங்கு வெள்ளாளர் 1
யாதவர் 1
தாழ்த்தப்பட்டவர் 1

அதாவது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களில் 64 % முக்குலத்தோர் ஆகும். வன்னியர், முத்தரையர், வெள்ளாளர், முஸ்லிம்கள் போன்றவர்களுக்கு ஒரு இடம் கூட இல்லை.

தகுதியற்ற நியமனம்

இந்த நியமனத்தில் 'சாதிசார்பு நியமனத்தை விட பெரிய கொடுமை', தகுதியற்ற நபர்களுக்கு இந்த பதவிகளை வழங்கியதுதான்.

'அரசு ஊழியர்களை தேர்ந்தெடுத்து நியமிப்பதற்கான அரசியல் சட்ட அதிகாரம் கொண்ட ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்படும் தார்மீக தகுதி அவர்களுக்கு இல்லை' என்பதை சுட்டிக்காட்டி மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் 1.2.2016 அன்று அறிக்கை வெளியிட்டார்கள் .

பாமகவின் சட்டப்பிரிவான, வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை சார்பில் வழக்கறிஞர் பாலு பொதுநல வழக்குத் தொடுத்தார். பின்னர், இதே பிரச்சினைக்காக திமுகவும், புதிய தமிழகம் கட்சியும் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுக்களும் பாமக பொதுநல வழக்குடன் இணைத்து விசாரிக்கப்பட்டன.
இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு 'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு 11 புதிய  உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டது செல்லாது' என்று கூறி அவர்களின் நியமனத்தை ரத்து செய்திருக்கிறது. 

‘‘ தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய உறுப்பினர்கள் எவரும் இந்திய அரசியலமைப்புச் சட்ட விதிகளை பின்பற்றி நியமிக்கப்படவில்லை. இதுதொடர்பாக முறையாக கலந்தாய்வுகள் செய்யப்படவில்லை. உறுப்பினர்களுக்கு முறையான தகுதிகள் இல்லை’’ என்று சென்னை உயர்நீதிமன்றம் அதன் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது.

சாதி ஆதிக்கத்துக்கு தற்காலிக தடை!

பாட்டாளி மக்கள் கட்சியின் முன்முயற்சியின் காரணமாக, சென்னை உயர்நீதி மன்றத்தீர்ப்பின் படி, அரசுப் பணியாளர் தேர்வில் சாதி ஆதிக்கம் நிகழாவண்ணம் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரே சாதிக்கு 64 % உறுப்பினர் பதவிகள் அளிக்கப்பட்ட சமூக அநீதிக்கு அடி கிடைத்துள்ளது.

ஒரு சாதி சார்பாக தேர்வு செய்யப்பட்டவர்கள் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் முக்கிய பதவிகளுக்கான நபர்களை தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தால் - அது மிகப்பெரிய சமூக அநீதிக்கு வழிசெய்திருக்கும். அந்த ஆபத்து தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது.

இனியாவது, அதிமுக அரசு தனது சாதி அரசியல் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். அனைத்து சமூகங்களுக்கும் அனைத்து பதவிகளிலும் உரிய விகிதாச்சார பங்கினை அளிக்க முன்வர வேண்டும். கூடவே, ஊழலுக்காக அல்லாமல், தகுதி அடிப்படையில் அதிகாரப் பதவிகளுக்கான நியமனங்களை அளிக்க வேண்டும்.

குறிப்பு: முக்குலத்தோர் சமுதாயம் ஒரு பின்தள்ளப்பட்ட சமுதாயம் ஆகும். அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை நாம் ஆதரிக்கிறோம். மக்கள் தொகை விழுக்காட்டுக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில், அனைத்து சமூகங்களுக்கும் உரிய அதிகாரம் தேவை என்பதே நமது நிலைப்பாடு. அதே நேரத்தில், தமது உரிமைக்கு அதிகமாக எந்த ஒரு சமூகமும் அதிகாரத்தில் கோலோச்சுவது சாதி மேலாதிக்கத்துக்கே வழி செய்யும். அது சமூகநீதிக்கு எதிரானதாகும். (மேலும், முக்குலத்தோரிலும் கூட, கள்ளர், மறவர் போன்று அகமுடையோருக்கும் உரிய இடம் அளிக்கப்பட வேண்டும்).

திங்கள், அக்டோபர் 31, 2016

மாவீரன் பண்டார வன்னியன் 213 : வரலாற்று அடையாளம் பாதுகாக்கப்படுமா?

விடுதலைப் புலிகளின் வழிகட்டியாக, தமிழீழத்தின் வீர அடையாளமாக இருப்பது வன்னியர் ஆட்சியும் அதன் கடைசி மன்னன் பண்டார வன்னியனும் ஆகும். 213 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (அக்டோபர் 31) பண்டார வன்னியன் துரோகத்தால் தோற்கடிக்கப்பட்டான். ஈழத்தில் இன்று, வன்னிய ஆட்சியின் அடையாளங்களை அழிக்கும் சதிகள் நடந்துகொண்டிருக்கின்றன!

"பண்டார வன்னியன் வழியில் போரிடுகிறோம்" - பிரபாகரன்

முள்ளிவாய்க்கால் இறுதிகட்ட போரின் நாட்களில் தேசியத்தலைவர் பிரபாகரன் பின்வருமாறு கூறினார்:

"விடுதலைபோராட்டத்தில் ஒருவேளை நாங்கள் தோற்றுப்போகலாம். ஆனால் நாங்கள் விட்டுச்செல்லும் வாள், ‘கூர்மையானதாக’ விட்டுச்செல்லவேண்டும். ஒரு காலத்தில் பண்டாரவன்னியன் இந்த மண்ணின் விடுதலைக்காகப் போராடினான். அவன் காட்டிய வழியில் நாங்கள் போரிடுகின்றோம். எங்களால் முடியாவிட்டால் நாளை இன்னொரு சந்ததி வரும். அது எமது போராட்டத்தினைத் தொடர்ந்து கொண்டுசெல்லும்.” என்றார் பிரபாகரன்.

வன்னி: ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் அடங்காத சுதந்திர பூமி

தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவர்கள் ஈழத்து வன்னிய அரசர்கள். கி.பி ஆறாம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட அக்கபோதிமன்னன் காலத்திலேயே வன்னியர்கள் வன்னியை ஆண்டுள்ளனர் என சில ஆய்வுகள் கூறுகின்றனர். சோழர்கள் காலத்தில் வன்னியர்கள் ஈழத்துக்கு வந்ததாக யாழ்ப்பாண வைபவ மாலை கூறுகிறது. வன்னி பெருநிலத்தில் வன்னியர் ஆட்சி, 1803 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நீண்டிருந்தது.

அன்னியருக்குக் கட்டுப்படாமல் மிகநெடுங்காலம் வன்னிய ஆட்சி நீடித்ததால், அப்பகுதி அடங்காப்பற்று என்று அழைக்கப்பட்டது. போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என எல்லா அன்னியர்களையும் முறியடித்த மாவீரர்கள் வன்னியர்கள். (விடுதலைப் புலிகளின் ஈழப்போர் கடைசிவரை நீடித்திருந்ததும் வன்னியில்தான்).

1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது.

டச்சுக்காரர்கள் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும் ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தின் முற்பகுதியிலும் வன்னிராச்சியத்தை ஆண்ட மன்னன் பண்டாரவன்னியன். ஆயிரமாண்டு வன்னிய அரசப் பாரம்பரியத்தின் கடைசி மன்னர். இவரது முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன்.
டச்சுக்காரர்கள் காலத்திலும் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தும் மன்னார், திரிகோணமலை, வன்னிக்காடுகள் என வன்னியர்கள் இடைவிடா கொரில்லா போர் நடத்தி வந்தனர். அவர்களில் ஒளிவிடும் மாணிக்கமாய் வந்த மாவீரன்தான் பண்டார வன்னியன்.

1782-ல் வன்னியை கைப்பற்ற டச்சுக்காரர்கள் நடத்திய போர் பற்றி எழுதும் லூயி என்ற வரலாற்று ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: “டச்சுக்காரர்கள் எத்தனையோ நாடுகளில் போர் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் வன்னியர்களைப் போன்று இப்படி வீரத்துடன் போரிட்டவர்களை உலகில் எங்கும் அவர்கள் காணவில்லை”

வன்னிராச்சியத்தில் தோற்கடிக்கப்படாத மன்னாக திகழ்ந்த பண்டாரவன்னியன் காக்கை வன்னியனின் காட்டிக்கொடுப்பினால் ஆங்கிலேய தளபதி லெப். வொன் டெரிபோர்க்கினால், இதே நாளில் 31.10.1803 அன்று தோற்கடிக்கப்பட்டான்.

பண்டார வன்னியன் கொலை செய்யப்படவில்லை!

பண்டார வன்னியன் நினைவு நாள் "1803 ஆகஸ்ட் 25" என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். ஏனெனில், முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள். அப்போது பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி நடைபெற்று வந்தது. வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கினான். அத்தாக்குதலில் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றினான். அந்த நாள்தான் 1803 ஆகஸ்ட் 25. எனவே, பண்டார வன்னியனின் உச்சபட்சமான போர் வெற்றியே அவரது நினைவு நாளும் ஆகும்!
பண்டார வன்னியன் கொலைசெய்யப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் உறுதியாக இல்லை. பண்டாரவன்னியன் 1803 ஆம் ஆண்டில் தோற்கடிக்கப்பட்டதை வைத்தே, அவன் இறந்த நாள்  (அக்டோபர் 31)  என்று கணக்கிடுகின்றனர். ஆனால், 1810 ஆம் ஆண்டு வரை அவர் உயிரோடு இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், போரில் ஏற்பட்ட காயங்களின் விளைவாக அவர் 1811 ஆம் ஆண்டில் பனங்காமத்தில் இறந்திருப்பார் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அந்த வகையில், பண்டார வன்னியனின் வரலாறும் பிரபாகரனின் ஒன்றாக இருப்பது வியப்பானதாகும்!

அழிகப்படும் வன்னியின் வரலாற்று அடையாளம்

இலங்கை அரசு வன்னியர்களின் வரலாற்று இடங்களை முஸ்லிம்களுக்கு அளிக்கத்தொடங்கியிருக்கிறது. இது ஈழத்தின் வரலாற்றை சிதைக்கும் முயற்சி ஆகும்.

தமிழீழத்தில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தமிழர்களாக கருதப்படுவது இல்லை. விடுதலைப் போரின் போது 1990 ஆம் ஆண்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 1000 முஸ்லிம் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர். முஸ்லிம்களை வெளியேறும் நிலை ஏற்பட்டது தவறு என்று பிற்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒப்புக்கொண்டு, முஸ்லிம்களை மீண்டும் வருகை தருமாறு அழைத்தனர். பின்னர் போரினால் எல்லாம் சின்னபின்னம் ஆனது.
இப்போது, முஸ்லிம்கள் மீள் குடியேற்றம் நடக்கின்றன. ஆனால், கரைதுறைப்பற்று எனும் பிரிவில் மட்டும் 1032 குடும்பங்கள் தாங்கள் விட்டுச்சென்ற இடத்துக்கான ஆதாரங்களை அளித்ததன் அடிப்படையில் அவர்களது பழைய நிலம் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 1455 குடும்பங்கள் நிலமற்றவர்களாக அறிவிக்கப்பட்டு - அவர்களுக்கு புதிய நிலத்தை அளிக்கும் பணியை அரசாங்கம் செய்கிறது. இதற்கு மேலும் 448 குடும்பங்கள் புதிதாக நிலத்தைக் கோரியுள்ளன.

ஆக மொத்தத்தில், 1990 ஆம் ஆண்டில் 1000 குடும்பங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வெளியேறிய நிலையில் - இப்போது கரைதுறைப்பற்று என்கிற ஒரு பகுதியில் மட்டும் சுமார் 3000 குடும்பங்கள் உரிமை கோருகின்றனர். அவர்களில் சுமார் 2000 குடும்பங்கள் புதிதாக நிலம் கோருகிறார்கள். இதற்காக வன்னிக்காட்டை அழித்து, புதிய நிலத்தை அளிக்கிறது இலங்கை அரசு.

இவ்வாறு முஸ்லிம்களுக்கு இலவசமாக வழங்கப்படும் நிலங்களில் ஒரு பகுதி 'வன்னியன் மேடு' என்கிற இடம் ஆகும்! வன்னியர்கள் 'அடங்காபற்று முள்ளியவளை வன்னியர்கள் என்றுதான் அழைக்கப்பட்டனர். அவர்களது ஆதிக்கம் மிகுந்திருந்த பகுதிதான் இப்போது முஸ்லிம்களுக்கு அளிக்கப்படுகிறது.

வன்னியன் மேட்டு பகுதியில்தான் பண்டார வன்னியன் தனது படைகளை நிறுத்தியிருந்தார். இதே காட்டுப்பகுதிக்கு படையெடுத்து வந்த வொன் டெரிபோர்க் என்ற ஆங்கிலேய படைத்தளபதியை பண்டார வன்னியனின் தளபதி குலசேகரன் கைது செய்தார். தனது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட வொன் டெரிபோர்க்கை - பண்டார வன்னியன் மன்னித்து விடுதலை செய்த இடம்தான் வன்னியன் மேடு. பின்னாளில் அதே வொன் டெரிபோர்க் தான் பண்டார வன்னியனை தோற்கடித்தான்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க வன்னியன் மேடு பகுதியை, முஸ்லிம்களின் குடியேற்றப் பகுதியாக மாற்றி வருகிறது இலங்கை அரசு.

இந்த வரலாற்று அழிப்பு தடுக்கப்பட வேண்டும்.

வியாழன், அக்டோபர் 27, 2016

தமிழக அரசின் சட்டத்துக்கு நீதிமன்றம் தடை: தமிழக கட்சிகளின் கள்ள மவுனம் ஏன்?

"யார் வேண்டுமானாலும் சட்டக் கல்லூரி தொடங்கலாம். ஆனால், வன்னியர் சங்கம் மட்டும் தொடங்கக் கூடாது" - என்கிற கொடூரமான இனவெறியுடன் எட்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக தடை விதித்தன திமுக, அதிமுக கட்சிகள். இதற்காக, சட்டமன்றத்தில் தனியாக ஒரு சட்டமே இயற்றி, ஆளுநரின் ஒப்புதலையும் பெற்று சட்டமாக்கின திராவிடக் கட்சிகள்.

ஒரு சமுதாயத்தை ஒதுக்க வேண்டும், ஒழிக்க வேண்டும், முன்னேற விடவேகூடாது என்பதற்காக அரசாங்கம் தனியாக சட்டம் இயற்றுவது, உலகத்திலேயே தமிழ்நாட்டில்தான் நடந்துள்ளது.

சில சாதிகளை குற்றப்பரம்பரையினர் என்று குற்றம் சாட்டி - தனியாக சட்டம் கொண்டுவந்த ஆங்கிலேய காலனியாதிக்க அரசாங்கத்துக்கும், ஒரு சாதி முன்னேறக் கூடாது என்பதற்காகவே சட்டம் கொண்டுவந்த திராவிடக் கட்சி அரசாங்கத்துக்கும் - அடிப்படை வேறுபாடு எதுவும் இல்லை!

வன்னியர் அறக்கட்டளை கல்லூரிக்கு தடைவிதிக்க வேண்டும் என்பதற்காகவே பிரத்தியோகமாகக் கொண்டுவரப்பட்ட தமிழக அரசின் 'தனியார் சட்டக்கல்லூரி தடைச் சட்டம் செல்லாது' என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் எட்டாண்டு சட்டப் போராட்டத்தின் விளைவாக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

அரசின் சட்டத்தை நீதிமன்றம் தடை செய்வது என்பது மிக முக்கியமான நிகழ்வு. ஆனால், தமிழ்நாடு அரசுக்கு எதிரான இந்த மாபெரும் தீர்ப்பு குறித்து, தமிழகத்தின் கட்சிகள் அனைத்தும் மவுனம் காக்கின்றன! பாட்டாளி மக்கள் கட்சி தவிர, வேறு எந்தக் கட்சியும் இது குறித்து எந்தக் கருத்தும் கூறவில்லை!

ஏன் இந்த கள்ள மவுனம்?

தமிழ்நாட்டில் எது நடந்தாலும் துள்ளிக்குதிக்கும் கட்சிகள், இப்போது எதுவும் சொல்லாமல் இருப்பது ஏன்? 

தமிழக அரசின் சட்டத்தையே நீதிமன்றம் தடை செய்துள்ள நிலையில், அரசாங்கத்தை எதிர்க்கும் நிலையில் உள்ள கட்சிகள் கூட வாய்மூடி மவுனம் காப்பது ஏன்?

இதற்கான பதிலில் தான் - தமிழ்நாட்டில் புரையோடிப் போயிருக்கும் சாதிவெறியும், இனவெறியும் ஒளிந்திருக்கிறது!

ஊடக செய்திகள்:

The Hindu: High Court quashes Act prohibiting private law colleges

HC imposes Rs. 20,000 costs on TN govt.

Verdict a milestone: PMK

Times of India: Can't ban new private law colleges, says HC

DECCAN CHRONICLE: Tamil Nadu can’t stop private law colleges: Madras High Court

New Indian Express: Act barring private colleges from opening law schools struck down in Tamil Nadu

Business Standard: TN act banning new private law colleges quashed

அம்பேத்கர் பல்கலைக்கழகத்துக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்: தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்க விதிக்கப்பட்ட தடை நீங்கியது - உயர் நீதிமன்றம் உத்தரவு

தனியார் சட்ட கல்லூரிகள் தொடங்க உயர் நீதிமன்றம் அனுமதி: தமிழக அரசின் தடை சட்டம் ரத்து

தனியார் சட்டக்கல்லூரி அனுமதி மறுப்பு சட்டத்தை ரத்து செய்து சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

தனியார் சட்டக் கல்லூரி தொடங்க அனுமதியில்லை என்ற சட்டம் ரத்து: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சட்டக்கல்லூரிக்கு அனுமதி: நீண்ட சட்ட போராட்டத்தில் சமூகநீதிக்கு வெற்றி! ராமதாஸ்

தனியார் சட்டக் கல்லூரி அமைக்க தடை விதிக்கும் தமிழக அரசின் புதிய சட்டம் ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்க விதிக்கப்பட்ட தடை ரத்து : உயர்நீதிமன்றம் உத்தரவு