Pages

வியாழன், ஜனவரி 12, 2017

மறைக்கப்பட்ட வரலாறு: யாருமில்லாத காட்டில் சோழர்களின் அடையாளம்!

ஒரு மாபெரும் வரலாற்று நினைவிடம், ஆள் அரவமற்று வெறுமையில் கிடக்கிறது. தென் கிழக்காசியாவை வெற்றி கொண்ட போர்த்துறைமுகம், மாமன்னர்களின் ஆபத்து கால மறைவிடம், சோழப்பேரரசின் கடைசிக் கால தலைமையிடம் - இப்போது வெறும் மண் மேடாக காட்சியளிக்கிறது.

சிதம்பரம் அருகே கடலோரத்தில் உள்ளது தீவுக்கோட்டை. உள்ளூர் மக்களால் 'கோட்டை மேடு' என்றும், வரலாற்று குறிப்புகளில் 'தீவுக்கோட்டை, தேவிக்கோட்டை, ஜலக்கோட்டை' என்று அழைக்கப்படும் இந்த இடம் - உள்ளூர் கோவில் பத்திரிகையில் 'திருத்தீவுக்கோட்டை' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயற்கை சீற்றத்தின் காரணமாக ஒரேயடியாக ஊரைவிட்டு வெளியேறிய கிராம மக்களின் நினைவுகளில் மட்டுமே இன்னமும் இந்த ஊர் வாழ்கிறது. எஞ்சியிருக்கும் கோட்டை மதில்களின் எச்சம், சிறிய காளியம்மன் கோவில், உடைந்து கிடக்கும் பழைய வீடுகள் - இவை மட்டுமே இன்னமும் மீதம் உள்ளன. மக்கள் யாரும் இங்கு வசிக்கவில்லை.
தீவுக்கோட்டை மதில் சுவர்
கடந்த 10.01.2017 ஆம் நாள் சிதம்பரம் கோவில் சோழக மண்டகப்படியின் போது - தீவுக்கோட்டைக்கு தமிழ்ச் சமூக ஊடகப் பேரவையின் சார்பில் வரலாற்று சுற்றுப்பயணம் நடத்தப்பட்டது (தீவுக்கோட்டைக்கு சென்ற முதல் சுற்றுப்பயணக் குழு இது மட்டும் தான்).

இராஜேந்திர சோழன்: தமிழர் வலிமையின் அடையாளம்

மாமன்னன் இராஜேந்திர சோழன், தனது கப்பற்படையின் வலிமையால் தென்கிழக்கு ஆசிய நாடுகளான கடாரம், ஜாவா ,சுமத்திரா, இந்தோனேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை தமிழரின் வர்த்தக மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தான்.

தமிழ்நாட்டின் நகரத்தார்களும் மரைக்காயர்களும் இந்துமாக்கடல், அரேபியக்கடல், வங்கக்கடல் பகுதிகளில் உள்ள நாடுகளுடன் பயமின்றி வணிகம் செய்வதற்கு வழிவகுத்தான். அவனது பலம் வாய்ந்த கடற்படை தான் தமிழர்களின் பன்னாட்டு வர்த்தகத்தை சாத்தியமாக்கியது.

இந்துமாக்கடலையும், வங்கக்கடலையும், அரேபியக்கடலையும் கட்டியாண்ட இராஜேந்திர சோழனின் கடற்படை தளம் அமைந்திருந்த இடம் தீவுக்கோட்டை ஆகும். இந்த இடம் சிதம்பரம் பகுதியில் கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது.
தீவுக்கோட்டை அகழி
கங்கைகொண்ட சோழபுரத்துக்கு தனது தலைநகரை இராஜேந்திர சோழன் மாற்றியதற்கும் கூட, தீவுக்கோட்டையை கடற்படைத் தளமாக கொண்டதே காரணமாக இருக்கும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சோழ மன்னர்களும் சோழர்களின் ஆதரவு பெற்ற பாண்டிய மன்னர்களும் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் காலத்தில் பதுங்கும் இடமாகவும் தீவுக்கோட்டை இருந்துள்ளது.

சோழர் பரம்பரையின் தொடர்ச்சி

மூன்றாம் இராசேந்திரசோழன் காலத்தோடு கி.பி.1279 ஆம் ஆண்டில் சோழராட்சி முடிவுற்றது என்று பழைய வரலாற்று ஆய்வுகள் குறிப்பிட்டன. ஆனால், அதன் பின்னர் கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து இடம்பெயர்ந்து, தீவுக்கோட்டையில் சோழர் ஆட்சி தொடர்ந்திருக்கக் கூடும் என்பதை சமஸ்கிருத நூல்களும், நாயக்கர் வரலாறுகளும் கூறுகின்றன. அதை நிரூபிக்கும் அரண்மணை சிதிலங்களும், கல்வெட்டுகளும் தீவுக்கோட்டையில் இப்போதும் உள்ளன.
பிச்சாவரம் குட்டியாண்டவர் கோவில் கல்வெட்டு
பிச்சாவரம் குட்டியாண்டவர் கோவிலில் இருக்கும் 1583 ஆம் ஆண்டு கல்வெட்டில் 'விட்டலேசுவர சோழகனார்' எனும் மன்னன் குறிப்பிடப்படுகிறார்.

தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்கர், 'தீவுக்கோட்டை சோழகனை வெற்றி பெறவேண்டும்' என்பதையே தனது மிகப்பெரிய லட்சியமாகக் கொண்டிருந்தார். 1615 ஆம் ஆண்டில் பெரும் படை திரட்டிவந்து தீவுக்கோட்டை மீது போர் தொடுத்து அங்கு ஆட்சி செய்த சோழகனை தஞ்சை ரகுநாத நாயக்கன் வென்றார் என்பதை வரலாற்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

மக்கள் வாய்வழி வரலாறு

தீவுக்கோட்டையில் வாழ்ந்து வந்த மக்கள் இப்போது சிதம்பரம் பகுதியில் பல கிராமங்களில் உள்ளனர். அவர்களின் செவிவழி கதைகளிலும், திருவிழாக்களிலும் சோழர்களின் வரலாறு பேசப்படுகிறது.

தீவுக்கோட்டையை ஆட்சி செய்த மன்னன் சோழன் தான் என்று குறிப்பிடும் தீவுக்கோட்டை பரம்பரையினர், சோழ மன்னர் நவராத்திரி கொலு வழிபாட்டில் இருந்த போது, எதிரிப்படைகள் அவரை கொன்றனர் என்று கூறுகின்றனர். அதாவது, மன்னர் தனது ஆயுதங்களை கொலுவில் வைத்திருந்ததாகவும், நவராத்திரி கொலு காலத்தில் போரில் ஈடுபடுவது மரபல்ல என்றும் - இதனை அறிந்த எதிரிப்படையினர் ஆயுதமற்ற காலத்தில் போர் மரபை மீறி தீவுக்கோட்டை சோழனை கொன்றதாக குறிப்பிடுகின்றனர்.

மன்னர் கொலை செய்யப்பட்ட போது, சோழ ராணி தனது குழந்தையுடன் சுரங்கப்பாதை வழியே வெளியேறி, பிச்சாவரத்துக்கு சென்றதாகவும் மக்களின் வாய்வழி வரலாற்று கதைகள் கூறுகின்றன.
காளி கோவில்
இதே போன்று, தீவுக்கோட்டையில் உள்ள காளி கோவில் திருவிழா பத்திரிகையும் - சோழ வரலாற்றை கூறுகிறது. அந்த அழைப்பிதழில் உள்ள 'கோட்டையா வெண்பா' எனும் பாடல்:

"நாட்டுக்கு நாயகன் நற்சோழ பூபதியின் 
கோட்டையின் கீழ்குடிகொண்ட கோட்டையனென் 
முனீஸ்வரன் தாளை மறவாதிருப்போர்க்கு
இன்துற்ற இல்லம் எய்தும்"

- என்று கூறுகிறது. அதாவது 'சோழனின் கோட்டைக்கு அருகே முனீஸ்வரன் கோவில் இருந்ததை' இந்தப் பாடல் குறிப்பிடுகிறது.
காளியம்மன் கோவில் பத்திரிகை
அதே போன்று, "காளியம்மன் துதி" எனும் பாடல்:

"பாராரு மநுநீதி பண்புபெறவே மக்கள் பழமே லெக்ஷ்யமாக 
போராடு படையோடு போறாங்க பாராண்ட சோழமன்னர்
காராருமேனித்தாய் காப்பதுன் கடனென் தன்கோட்டையின் தென்பால் வைத்து 
காலமுறை வாழுவாது கழல் அணிந்தர்சித்த காளிதனை தொழுதுதல் செய்வோம்"

- என்று கூறுகிறது. "பாராண்ட சோழ மன்னர் படையோடு செல்வதையும்", "தனது கோட்டைக்கு அருகே காளிக்கு கோயில் அமைத்து வழிபட்டதையும்" இந்தப் பாடல் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

தொடரும் சோழர் மரபு

சோழ வம்சத்தினர் கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து தீவுக்கோட்டைக்கும், பின்னர் அங்கிருந்து பிச்சாவரத்துக்கும் இடம்பெயர்ந்தனர் என்று நம்பப்படுகிறது. 

இவர்கள்தான் சோழ மரபை பின்பற்றி சிதம்பரம் கோவிலில் முடிசூடிக்கொண்டனர். ஆண்டுக்கு இரண்டுமுறை தேர் தரிசனத்தின் போது சிதம்பரம் கோவிலில் சோழக மண்டகப்படியை நடத்தி வந்தனர். இந்த மரபு இப்போதும் தொடர்கிறது.

தீவுக்கோட்டையும் அதனுடன் தொடர்புடைய இடங்களும் வரலாற்று சுற்றுலா பகுதியாக மாற்றப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை: