Pages

வெள்ளி, ஜனவரி 13, 2017

ஜல்லிக்கட்டு: உலகம் அழியாமல் தடுக்கும் உன்னதப் பண்பாடு!


ஜல்லிக்கட்டு எனும் ஏறுதழுவுதல் நிகழ்ச்சிக்கு தடை விதித்து இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழ்ப் பண்பாட்டின் ஒரு அங்கமான ஏறுதழுவுதல் விழாக்களை நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரானதாகும்.

உலகின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தற்போதைய முயற்சிகளில், உயிரிப்பன்மயத்தைக் காப்பது முதன்மையானதாகும். இதற்கான ஐநா உயிரிப்பன்மயப் பேரவை (Convention on Biological Diversity) 1992 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, அதன் கீழ் உலக நாடுகளுக்கு இடையேயான உடன்படிக்கை 2010 ஆம் ஆண்டில் ஐநா அவையால் ஏற்கப்பட்டது.

உள்ளூர் மக்களுக்கும் அவர்கள் வாழும் இயற்கை சூழலுக்கும் இடையேயான பாரம்பரிய அறிவு, உயிரிப்பன்மயத்தைக் காப்பாற்றுவதற்கான ஒரு இன்றியமையாத தேவை என ஐநா உயிரிப்பன்மய உடன்படிக்கை ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்திய அரசு கையொப்பமிட்டு ஏற்றுக்கொண்டுள்ள இந்த பன்னாட்டு சுற்றுச்சூழல் உடன்படிக்கையின் படி - தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டை காப்பாற்றுவது இந்திய அரசின் கடமை ஆகும். ஜல்லிக்கட்டு தடையை விலக்கத் தவறியதன் மூலம் இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தமது கடமையை நிறைவேற்றத் தவறியுள்ளன.

இந்நிலையில், இயற்கையைக் காக்க பாடுபடும் அமைப்புகளும் தனிநபர்களும் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க முன்வர வேண்டும். ‘ஜல்லிக்கட்டு கூடவா ஒரு சுற்றுச்சூழல் சிக்கல்?' என்ற கேள்வி எழுவது இயல்பு.  'உயிரிப்பண்பாட்டுப் பன்மயம்' (Biocultural Diversity) என்பது இந்தக் கேள்விக்கு விடையாக அமைகிறது.

 'உயிரிப்பண்பாட்டுப் பன்மயம்' என்றால் என்ன?

பலகோடி பால்வெளி மண்டலங்களும் அவற்றுள் பலகோடி விண்மீன்களும் அண்டவெளியில் சுழன்றாலும், உயிர்வாழ்க்கை நிலவும் ஒரே இடமாக பூமி மட்டுமே இருக்கிறது. பூமிப்பந்தில் உயிர் வாழ்வை நீடித்திருக்கச் செய்வதுதான் மனிதன் செய்யக்கூடிய எல்லா செயல்களை விடவும், மிக மிக முதன்மையான செயல்.

உயிரினங்கள் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்வதன் மூலமாகவே பூமியில் உயிர்வாழ்க்கை சாத்தியமாகியுள்ளது. எந்த ஒரு உயிரும் தனித்து வாழ இயலாது. இயற்கை அமைப்பில் ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு இடமும் தேவையும் இருக்கிறது. எதுவுமே வீணாகப் படைக்கப்படவில்லை. உயிரினங்களுக்கு இடையே உள்ள தொடர்பு ஒரு மாபெரும் வலைப்பின்னல் ஆகும். இந்த வலைப்பின்னலில் ஒரு கண்ணி அறுந்தால் அது மற்றதையும் பாதிக்கும்.

இவ்வாறு உயிரினங்களின் வலைப்பின்னல் பற்றி பேசினால் - அது பூமியெங்கும் உள்ள நுண்ணுயிர்களையும், தாவரங்களையும், விலங்குகளையும் குறிப்பதாக நினைக்கிறோம். ஆனால், தாவரங்களும் விலங்குகளும் மட்டும் இந்த வலைப்பின்னலில் இல்லை. கூடவே, பல லட்சம் ஆண்டுகளாக மனிதர்களும் இந்த உயிரின வலையத்தில் தான் வாழ்ந்து வருகிறோம்.

மனிதன் இயற்கைக்கு ஏற்ப தன்னை தகவமைத்து வாழ்ந்து வருகிறான். தனது எல்லா தேவைகளையும் இயற்கையிடம் இருந்துதான் பெறுகிறான். மனிதர்களின் மொழி, பழக்கம், பண்பாடு என எல்லாமும் அவன் வாழும் இயற்கைய சூழலை சார்ந்தே வளர்ந்து வந்துள்ளது.

ஆக, பூமியில் வாழும் உயிரினங்களைப் பற்றி பேசுவதை 'உயிரிப்பன்மயம்' (Biodiversity) என்று குறிப்பிடுவது போன்று - உயிரிப்பன்மயத்துடன் மனித வாழ்வும் இணைந்தே இருப்பதை 'உயிரிப்பண்பாட்டு பன்மயம்' (Biocultural Diversity) என அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

உயிரிப்பண்பாட்டுப் பன்மயத்தின் மூன்று அங்கங்கள்.

உயிரிப்பண்பாட்டுப் பன்மயம் (Biocultural Diversity)  என்பதை மூன்று பகுதிகளாக சுற்றுச்சூழல் அறிவியலாளர்கள் பகுத்துள்ளனர். அவை 1. உயிரிப்பன்மயம் (Biodiversity), 2. பண்பாட்டுப் பன்மயம் (Cultural Diversity), 3. மொழிப் பன்மயம் (Linguistic Diversity) ஆகியனவாகும்.

1. உயிரிப்பன்மயம் (Biodiversity)

உயிரிப்பன்மயம் (Biodiversity) அல்லது உயிரியல் பன்மயம் (Biological Diversity) என்பது உயிரினங்களுக்கு இடையே காணப்படும் வேறுபாடுகளைக் குறிப்பது ஆகும். உலகில் வாழுகின்ற நுண்ணுயிர்கள், தாவரங்கள், விலங்குகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தது 'உயிரிப்பன்மயம்' ஆகும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த அளவுக்கு உயிரின வேறுபாடு காணப்படுகிறதோ, அந்த அளவுக்கு அது உயிரிப்பன்மய வளம் மிகுந்த பகுதியாகக் கருதப்படுகிறது.

பூமிப்பந்தில் சுமார் 87 லட்சம் வேறுபட்ட உயிரின வகைகள் இருக்கலாம் என அறிவியலாளர்கள் கணிக்கின்றனர். உலகம் முழுமைக்குமான உயிரினங்களின் வேறுபாட்டை உயிரிக்கோளம் (Biosphere) என்றும் அழைக்கின்றனர்.

2. பண்பாட்டுப் பன்மயம் (Cultural Diversity)

பண்பாட்டுப் பன்மயம் என்பது மனிதர்களுக்கு இடையே காணப்படும் வேறுபாடுகளைக் குறிப்பது ஆகும். மனிதர்களுக்கு இடையே நிலவும் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், வழிபாட்டுமுறை, வாழ்வுமுறை, பேச்சுவழக்கு, உணவுமுறை, உடை என அனைத்தையும் உள்ளடக்கியது பண்பாடு.

உலகம் முழுவதுமான பல்வேறு மனித குழுவுக்கு இடையே இருக்கும் வேறுபட்ட பண்பாடுகள் அனைத்தையும் உள்ளடக்கி மனிதப்பண்பாட்டுக் கோளம் (Ethnosphere) என்று அழைக்கின்றனர்.

இனம், மொழி, மதம், சாதி, வாழும் இடம் என பலவற்றின் அடிப்படையில் ஒருவரே வேறுபட்ட பண்பாட்டுக் குழுக்களில் இடம்பெறக்கூடும் என்பதால், பண்பாட்டு பன்முகத்தன்மையை துள்ளியமாக அளவிட இயலாது.

3. மொழிப் பன்மயம் (Linguistic Diversity)

மொழிப் பன்மயம் என்பது ஒரு குறிப்பிட்ட நாடு அல்லது இடத்தில் எத்தனை மொழிகளைப் பேசுகிறர்கள் என்பதாகும். உலகம் முழுவதும் சுமார் 6500 மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் 85% மொழிகளை பழங்குடியின மக்கள் தான் பேசுகின்றனர். உலகின் அனைத்து மொழிகளையும் உள்ளடக்கி மொழிக்கோளம் (Logosphere) என அழைக்கின்றனர்.

சுற்றுச்சூழலுக்கும் பண்பாட்டுக்கும் என்ன தொடர்பு?

மொழி, பண்பாடு, சுற்றுச்சூழல் இந்த மூன்றுவிதமான பன்மயங்களுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்பது அறிவியலாளர்களின் ஆய்வு முடிவாகும். ஒரு இடத்தில் நிலவும் இயற்கைச் சூழலும் அந்த இடத்தில் வாழும் மக்களின் பண்பாடும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது. இயற்கை பண்பாட்டின் ஆதாரமாக இருக்கிறது. பண்பாடு இயற்கையை காக்கும் மனித அறிவின் ஓர் அங்கமாக இருக்கிறது.

மனிதன் தோன்றியதில் இருந்தே இயற்கையுடன் இணைந்துதான் வாழ்கிறான். உணவு, குடிநீர், காற்று, மருத்துவம், உடை, வீடு என எல்லா பொருட்தேவைகளுக்கும் இயற்கையை சார்ந்தே வாழ்கிறான். மனம் சார்ந்த, நம்பிக்கை சார்ந்த தேவைகளுக்கும் மனிதன் இயற்கையை சார்ந்திருக்கிறான்.

இயற்கையுடனான மனிதனின் இந்த தொடர்பு தாவரங்கள், உயிரினங்கள், பருவகாலம் குறித்த புரிதலையும் அறிவையும் உருவாக்குகிறது. இந்த அறிவு அந்தந்த பகுதிக்கு ஏற்ப அமைகிறது. உள்ளூர் மக்களின் இந்த ஆழ்ந்த அறிவும் அனுபவமும் அந்தப் பகுதியில் பேசப்படும் மொழியில் செறிந்து, அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது.
இவ்வாறாக, ஒரு பகுதியில் இருக்கும் உயிரிச்சூழல், மக்கள் பேசும் மொழி, அவர்களது பண்பாடு ஆகிய அனைத்தும் ஒன்றோடு ஒன்று நெருக்கமான உறவாக நீடிப்பதுடன் - ஒன்று மற்றொன்றை வளப்படுத்துகிறது. மொழியும் பண்பாடும் அழியுமானால், அந்தப் பகுதியின் சுற்றுச்சூழலும் அழிந்து போகும்.

மக்கள் பண்பாட்டில் வேறுபாடும் மொழிகளில் வேறுபாடும் மிகுதியாகக் காணப்படும் இடங்களில்தான் சுற்றுச்சூழல் வளம் அதிகமாக இருக்கிறது. ஒற்றை மக்கள் இனமும் ஒற்றை மொழியும் பேசப்படும் இடங்களில் உயிரின வளமும் குறைவாக இருக்கிறது. ஆக, எங்கே பண்பாட்டில் பன்முகத் தன்மை நீடிக்கிறதோ, அங்கே உயிரியல் பன்மயமும் நீடிக்கும்.  

எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றால் - உயிரியல் பன்மயத்தைக் காப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், பண்பாட்டுப் பன்முகத் தன்மையையும் மொழிப் பன்மயத்தையும் கூட காப்பாற்றியாக வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

உயிரிப் பண்பாட்டு பன்மயத்துக்கு என்ன நடக்கிறது?

உயிரியல் பண்பாட்டு பன்மயச் சூழல் இப்போது அழிந்துகொண்டிருக்கிறது. அறிவியலாளர்கள் கருத்துப்படி மனித இனம் ஆறாவது பிரளத்தை நோக்கிப் பயணிக்கிறது (6th mass extinction of life on earth). அதாவது, இந்த பூமிப்பந்தில் உயிர்வாழ்க்கை இது வரை ஐந்து முறை பேரழிவைச் சந்தித்து மீண்டிருக்கிறது. கடைசியாக 6 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் உயிர்வாழ்க்கை அழிந்தது. அப்போதுதான் டைனோசர்கள் அழிந்தன. அந்தப் பேரழிவில் தப்பித்த மிகச்சில உயிரிகளில் இருந்துதான் மனிதன் தோன்றினான்.

இதற்கு முன்பு நேர்ந்த பிரளயங்களுக்கும் இப்போதைய பேரழிவுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வேறுபாடு என்னவென்றால் - முந்தைய பேரழிவுகள் எல்லாம் இயற்கையாகவே நேர்ந்தன. இப்போதைய உலகப் பேரழிவு மனித செயல்களால் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மனிதனால் உலகம் பேரழிவில் சிக்கியிருப்பதை மெய்ப்பிக்கும் ஆதாரமாக காலநிலை மாற்றத்தையும் உயிரிப்பன்மய அழிவையும் சொல்லலாம்.

உயிரிப்பன்மய அழிவினை தனியாக வெறும் உயிரினங்களின் அழிவு என்று மட்டும் பார்க்க முடியாது. அதனுடன் சேர்த்து பண்பாடும் மொழியும் அழிகிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலகெங்கும் மொழி வேறுபாடும், கலாச்சார வேறுபாடும் அழிந்து - ஒரு சில மொழிகளையும் மிகச்சில கலாச்சாரங்களையும் பின்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

1970 ஆம் ஆண்டுக்கு பின்னாலான காலத்தில் உலக மொழிகளில் 20% அழிந்து போய்விட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது, சிறிய மொழிகளைப் பேசுவோர் அதனைக் கைவிட்டு பெரிய மொழிகளைக் கைக்கொள்வதால் மொழிகள் அழிந்துபோகின்றன.

பண்பாடும் மொழியும் இயற்கையுடன் இணைந்து வாழும் அறிவை ஒரு தலைமுறையிடம் இருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்திவருவது காலம் காலமாக நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் ஒரு பகுதியின் மொழியும் பண்பாடும் அழியும்போது, அந்தப்பகுதியின் இயற்கையுடனான மனித உறவில் விரிசல் ஏற்படுகிறது. இது சுற்றுச்சூழல் அழிவிற்கு வழிவகுக்கிறது.

உயிரிப் பண்பாட்டு பன்மயம் ஏன் அழிகிறது?

உயிரியல் பன்மயம், மொழிகள், பண்பாடு - இவை எப்போதும் ஒரே நிலையில் இருப்பது இல்லை. இயற்கை தொடர்ச்சியாக தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்கிறது. உயிரிச்சூழலிலும், மொழிகளிலும், பண்பாட்டிலும் மாற்றங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. எந்த ஒரு புதுச் சூழ்நிலையிலும் இயற்கை தனக்குத்தானே தகவமைத்துக் கொள்ளும் வல்லமையைப் பெற்றிருக்கிறது. இயற்கையுடன் இணைந்து கலாச்சாரமும் புதுமையடைகிறது.

இந்த மாற்றம் மிக மெதுவாகவும், தேவைக்கான அளவிலும் மட்டுமே இத்தனைக் காலமும் நடந்து வந்திருக்கிறது. மனித இனத்திலும், உயிரினங்களிலும், இயற்கை சூழலிலும் பல தலைமுறைகள் காலத்தில் மெதுவாக மாற்றம் நேர்ந்தது. ஆனால், இப்போது எல்லாமும் திடீரென மாறிவருகின்றன. சமூகம், பொருளாதாரம், அரசியல் என அனைத்திலும் உலகம் முழுவதும் ஒரே பாதைக்கு மாற்றப்படுகிறது. ஒற்றை மயமான உலகம். ஒற்றை மயமான பொருளாதாரக் கொள்கை, ஒற்றை மயமான அரசியல். ஒரு சில மொழிகள் - என வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பதுபோல, உலகில் எல்லாமும் ஒற்றைத் தன்மைக்கு மாற்றப்படுகிறது.

பன்முகப்பட்ட கலாச்சாரம், மொழி, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் என அனைத்தும் மாற்றப்பட்டு - ஒரே வண்ணம் பூசும் நோக்கில் மாற்றங்கள் திணிக்கப்படுகின்றன. ஒரு காட்டில் எல்லா விலங்கும் சிங்கமாக இருந்தால் அங்கு சிங்கங்களின் வாழ்க்கை நீடிக்காது. ஒரு காட்டில் எல்லா மரங்களும் ஒரே வகை மரங்களாக இருந்தால் அந்த காடும் நீடிக்காது. ஒரு நிலத்தில் ஒரே பயிரை தொடர்ந்து பயிரிட்டால் அந்த நிலமும் வளம் இழந்து போகும். அதே போன்றுதான் - மனிதர்களின் சிந்தனையும் பண்பாடும் ஒரே வகையில் இருந்தால், அந்த சமூகமும் அழிந்து போகும்.

மனித நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள இந்த அதிவேக 'ஒற்றை மய' (Monoculture) மாற்றத்திற்கு இயற்கையால் ஈடுகொடுக்க முடியவில்லை. மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவு, பல லட்சம் ஆண்டுகளாக நாட்டுக்கு நாடு, இடத்துக்கு இடம், சமூகங்களுக்கு சமூகம் மாறுபட்ட வழியில் நீடித்து வந்திருப்பதை இன்றைய மனித சமூகம் ஒரே தலைமுறையில் மாற்றியமைக்கிறது.

உயிரிப்பன்மயத்தில் ஒற்றைத் தன்மை என்பது இயற்கையை அழிக்கிறது. பயிரினங்களில் பல வகைகள் அழிந்து இப்போது எல்லாவற்றிலும் ஓரிரு வகைகள் வந்திருப்பதும், கால்நடைகள் வளத்தில் பல வகைகள் அழிந்து இப்போது எல்லா கால்நடைகளும் ஒரு சில வகைகளாக வந்திருப்பதும் - சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மொழி, இனம், நம்பிக்கை, பண்பாடு என்பனவற்றில் ஒற்றைத் தன்மையைத் திணிப்பதால் உலகெங்கும் போர்களும், வன்முறையும் அதிகரித்து உலகை அமைதியற்ற நிலைக்கு கொண்டு செல்கிறது.

அதே நேரத்தில் - உயிரினம், பண்பாடு, மொழி என்பனவற்றின் 'ஒற்றை மய' சீரழிவுகளில் - ஒன்றின் அழிவு மற்றவற்றின் அழிவை வேகப்படுத்துகின்றன. சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகள் பண்பாட்டையும் மொழியையும் பாதிப்பது போலவே, மொழியிலும் பண்பாட்டிலும் ஏற்படும் அழிவு, சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது.

ஜல்லிக்கட்டும் சுற்றுச்சூழலும்

தமிழ்நாட்டின் சூழலில் தமிழ் மொழியும், இங்கு கொண்டாடப்படும் பண்பாட்டு திருவிழாக்களும் இயற்கையுடன் இணைந்து இயங்குகின்றன. ஒவ்வோரு பகுதியின் ஒவ்வொரு பண்பாட்டு நிகழ்வும் பருவ காலங்களுக்கும், மக்களின் ஓய்வுக்கும் ஏற்ற வகையில் நடந்து வருகின்றன. அந்த வகையில் பொங்கல் பண்டிகை தமிழரின் இயற்கை வழிபாட்டில் ஒரு முதன்மை அடையாளமாக விளங்குகிறது.
பொங்கல் பண்டிகையும், அதன் ஒரு அங்கமான ஜல்லிக்கட்டு என்கிற ஏறுதழுவுதல் நிகழ்வும் - வேளாண்மை மற்றும் கால்நடை வளத்தை போற்றும் வகையிலும், அதனை வளர்க்கும் வகையிலும் இருக்கிறது.

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா பந்தயம் என்கிற வகையிலான கால்நடை விளையாட்டுகள், தமிழ்நாட்டின் கால்நடை வளத்தை போற்றி காப்பாற்றும் வகையில் அமைந்துள்ளது.

ஜல்லிக்கட்டை தடை செய்யும் போது, தமிழ்நாட்டின் கால்நடை மரபுச் செல்வமான காங்கேயம் காளை உள்ளிட்ட காளை இனங்களின் தேவை குறைகிறது. இதனால், தனித்துவம் வாய்ந்த இத்தகைய காளைகளை வளர்ப்பதற்கான தேவையும் இல்லாமல் போய் - உலகின் பல்லுயிர் வளத்தில் அரிதான கால்நடை இனங்கள் அழியும் நிலை வருகிறது.

ஒரு உயிரினத்தின் அழிவு அதனோடு முடிந்து போகாது. அது உயிர்ச்சூழல் வலைப்பின்னலில் எல்லா உயிரினங்களையும் பாதிக்கும். ஆகவே, ஜல்லிக்கட்டை காப்பாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை, அடிப்படையில் சுற்றுச்சூழலைக் காக்கும் ஒரு கோரிக்கையே ஆகும்.

என்ன செய்ய வேண்டும்?

பூமிப்பந்தில் உயிர்வாழ்வின் தொடர்ச்சி நீடித்திருக்க - தலைமுறைகளுக்கு இடையே பாரம்பரிய அறிவினை தொடர்வதும், மொழியைத் தொடர்வதும், கலாச்சாரப் பழக்க வழக்கங்களைத் தொடர்வதும் அவசியமாகும்.

உயிரிப்பண்பாட்டு பன்மயத்தைக் காப்பாற்றுவது என்றால், இப்போது எஞ்சியிருக்கும் பன்முகத் தன்மை இதற்கு மேலும் அழிந்துவிடாமல் காப்பதே உடனடித் தேவை ஆகும். இப்போது இருக்கும் உயிரியல் பன்முகத்தன்மை, பண்பாட்டு வேறுபாடு, மொழி வேறுபாடு - ஆகியன இதற்கு மேலும் அழியாமல் காப்பதே உலக மக்களின் முதன்மையான சுற்றுச்சூழல் கடமை ஆகும்.

ஒவ்வொரு சமூகத்தினரும் தம்முடைய பண்பாட்டைக் காப்பாற்ற முன்வர வேண்டும். தன்னுடைய மொழியை காத்து வளப்படுத்த வேண்டும். தான் வாழும் பகுதியின் சுற்றுச்சூழலைக் காப்பாற்ற வேண்டும். சூழல், மொழி, பண்பாடு இந்த மூன்று பாதுகாப்பு நடவடிக்கைகளும் ஒன்றோடு ஒன்று இணைந்தே உள்ள கடமைகள் ஆகும்.

காலாச்சாரம், பண்பாடு, மரபு என்று ஒருகாலத்தில் பேசப்பட்ட சிலவற்றை, புதிய சூழலில் கைவிட நேரலாம். ஒவ்வொரு காலகட்டத்தின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப பழைய பிற்போக்குத்தனங்கள் கைவிடப்பட வேண்டும். ஒரு காலத்தில் சமுதாயங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வு நிலை அங்கீகரிக்கப்பட்டது. இப்போதைய உலகம் அதனை ஏற்பது இல்லை. ஒருகாலத்தில் குழந்தைத் திருமணங்கள் ஏற்கப்பட்டன. இப்போது ஏற்கப்படுவது இல்லை. அந்த வகையில் உள்ளூர் சமூகங்களின் பண்பாட்டு பழக்க வழக்கங்கள் காலந்தோரும் மாறுதலுக்கு உட்பட்டே வந்துள்ளது.

'குளியல் தொட்டியில் உள்ள தண்ணீரை வெளியே ஊற்ற வேண்டும் என்பதற்காக, தொட்டிக்குள் குளித்துக்கொண்டிருக்கும் குழந்தையையும் சேர்த்து வெளியே ஊற்றிவிடக் கூடாது' என்பார்கள். அவ்வாறே, மக்களின் பண்பாட்டில் இணைந்துள்ள பிற்போக்குத் தனங்கள் கைவிடப்பட வேண்டும் என்பதாற்க, பண்பாட்டையே கைவிட்டுவிடக் கூடாது.

1992 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 'கரி ஓகா உள்ளூர் மக்கள் பிரகடனத்தில் (Kari Oka Declaration of the world’s indigenous peoples) "எங்கள் மூதாதையர்கள் வகுத்துத்தந்த பாதையில் நாங்கள் எதிர்காலத்தை நோக்கி நடக்கும் உரிமையைப் பெற்றுள்ளோம்' என் அறிவித்தனர் (“walk toward the future in the footsteps of their ancestors”). 

எனவே, சரியான புதிய பாதை என்பது பாரம்பரிய வழித்தடத்தில் தொடரும் மற்றுமொரு முயற்சியே ஆகும். பழைய பாரம்பரியத்தை அறவே துறந்து புதிய உலகம் அமையாது.

தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் மக்களின் பன்முகப்பட்ட கலாச்சார வேறுபாடுகளை அங்கீகரித்து தொடர வேண்டும். வாழும் இடப்பகுதி, பின்பற்றும் மதம், சார்ந்திருக்கும் சாதி என பல அடிப்படைகளில் மக்களின் பன்முகப்பட்ட அடையாளமும் கலாச்சார வேறுபாடுகளும் மதிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு பகுதியிலும் பேசப்படும் மொழியும், ஒவ்வொரு சமுதாயத்தினர் பேசும் மொழியும் போற்றி பாதுகாக்கப்படவும், வளர்க்கப்படவும் வேண்டும். ஒரு மொழியின் இடத்தில் இன்னொரு மொழியைத் திணிக்கும் அநீதியை ஒருபோதும் ஏற்கக்கூடாது.

நாடெங்கும் சுற்றுச்சூழல் வளம் காப்பாற்றப்பட வேண்டும். நீர், நிலம், காற்று மாசுபடுத்தப்படாமல் தடுத்தல், உயிரின வேறுபாட்டை பாதுகாத்தல், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல் - ஆகிய அனைத்து சூழல் காப்பு நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

மொத்தத்தில் தமிழ்நாடு, இந்தியா, உலகம் என அனைத்து நிலைகளிலும் பண்பாடு, மொழி, சுற்றுச்சூழல் என்கிற அனைத்து வழிகளிலும் உயிரிப்பண்பாட்டுப் பன்மயத்தைக் காப்பாற்றை அனைவரும் முன்வர வேண்டும்.  

சுற்றுச்சூழலை காப்பதில் ஒரு முதன்மை அங்கமாக ஜல்லிக்கட்டு தடை விலக்கப்பட வேண்டும். பாரம்பரிய கால்நடைகளும் அவற்றுக்கான பண்பாட்டு விழாக்களும் போற்றப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை: