Pages

இலங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜூன் 17, 2017

ரஜினிக்கு திருமாவளவன் ஆதரவு: சாதி தான் காரணமா?


தந்தி தொலைக்காட்சி ரங்கராஜ் பாண்டே நடத்தும் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் "அடுத்தது ரஜினிதான்" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூறுவதாக செய்திகள் வருகின்றன.

தமிழ்நாட்டின் முதல்வராக தமிழ்நாட்டை சேர்ந்தவரே வரவேண்டும் என்கிற உரிமைக்குரலுக்கு எதிராக - மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒரு தலித் தமிழ்நாட்டின் முதல்வராக வரவேண்டும் என தெரிவிப்பதன் மூலம் - தனது சாதிப்பற்றை வெளிப்படுத்துகிறார் திருமாவளவன். தண்ணீரை விட இரத்தமே அடர்த்தியானது (blood is thicker than water) என்கிற வாக்கை உண்மையாக்கும் விதத்தில், மாநில உரிமையை விட தன் சாதிப்பற்றுதான் மேலானது என்பதை மெய்ப்பித்துள்ளார் திருமாவளவன்.

ரஜினி: தலித் தலைவர் 

அண்ணல் அம்பேத்கர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மகர் சமூகத்தில் பிறந்தவர். அதே மகர் சமூகத்தை சேர்ந்தவர்தான் நடிகர் ரஜினி காந்த் ஆகும். மகர் சமூகத்தவர் ஜாதவ், போஸ்லே, கெய்க்வாட் எனும் பல பட்டப்பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். அதில் கெய்க்வாட் பட்டப்பெயரை கொண்டவர் ரஜினி காந்த்.

உண்மையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தலித் இயக்கத்தில் பலர் கெய்க்வாட் எனும் பட்டப்பெயருடன் இருந்தனர். அவர்களில் - தாதாசாகிப் பாவுராவ் கெய்க்வாட் (தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பின் மும்பை மாகாணத் தலைவர். அம்பேத்கருடன் இணைந்து குடியரசு கட்சியை தோற்றுவித்தவர்), சாம்பாஜி துக்காராம் கெய்க்வாட் (மகர் பஞ்சாயத் சமிதி எனும் அமைப்பை தோற்றுவித்தவர்) - போன்றவர்கள் முதன்மையானவர்கள்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் பணியாற்றியவர்களின் அதே கெய்க்வாட் சமுதாயத்தில் பிறந்தவரான, சிவாஜி ராவ் கெய்க்வாட் எனும் இயற்பெயர் கொண்ட ரஜினி காந்த், இப்போது அவர் நடிக்கும் காலா திரைப்படத்தில் - அண்ணல் அம்பேத்கரின் மாபெரும் புரட்சியான 1956 ஆம் ஆண்டில், அவர் மராட்டிய மாநிலத்தில் பல்லாயிரக் கணக்கான தலித்துகளுடன் பௌத்த மதத்திற்கு மாறியதை குறிக்கும் வகையில் "MH BR 1956" (Maharashtra BR Ambedkar 1956) எனும் வாகன எண்ணை குறியீடாக பயன்படுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசிய அடையாளம் என்ன?

இந்தியாவில் எல்லோரும் இந்தியர்கள் தான் என்பது இந்திய தேசியவாதிகள் கூறும் அயோக்கியத்தனமான வாதம். நடைமுறையில் ஒரு மாநிலத்தை சேர்ந்தவர்கள் இன்னொரு மாநிலத்தில் கோலோச்ச முடியாது. ஆந்திராவிலோ, கேரளாவிலோ, கர்நாடக மாநிலத்திலோ - தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் முதல்வராவது கனவிலும் நடக்காது. ஆனால், தன்னுடைய தலித் இனத்தை சேர்ந்தவர் என்கிற ஒரே காரணத்தால் - ரஜினியை தமிழ்நாட்டின் முதல்வராக்க முயற்சிக்கிறார் திருமாவளவன்.

தமிழ்த் தேசிய அடையாளம் என்பது இன்னும் பிறக்காத குழந்தை. சிலர் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் மட்டுமே தமிழர்கள் என்கின்றனர். வேறு சிலர் குறிப்பிட்ட காலமாக (எடுத்துக்காட்டாக 1956 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்து) தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் மற்றும் அவர்களின் சந்ததியினர் மட்டுமே தமிழர்கள் என்கிறனர். இந்தக் கருத்துக்கள் விவாதத்திற்கு உரியவை. தமிழ்நாட்டை சேர்ந்தவராக ஒருவரை அடையாளப்படுத்த - சாதி, இனம், மதம், தாய்மொழி போன்ற எதுவுமே தடையாக இருக்கக் கூடாது என்பதுதான் நமது விருப்பம்.

அதே நேரத்தில், தமிழ்நாடு என்கிற நாட்டின் மீதும், தமிழக மக்கள் மீதும் சிறிதளவும் பற்றில்லாதவர் - தமிழக மக்களின் பணத்தை பிடுங்கி, கர்நாடக மாநிலத்தில் முதலீடு செய்திருப்பவர் - காவிரிக்காக கன்னடநடிகனை மாவீரன் வீரப்பனார் கடத்திய போது, வீரப்பனாரை அரக்கன் என கடுமையாக திட்டியவர் - தமிழ்நாட்டின் அடிப்படை அரசியல் சிக்கல்களில் கருத்து ஏதும் கொண்டிராதவரான ரஜினிகாந்த், தன்னை தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக காட்டிக்கொள்ள முயல்வது, தமிழக மக்களின் தன்மானத்துக்கு விடப்பட்டுள்ள சவால்.

சாதிப்பற்றின் காரணமாக மட்டுமே ரஜினியை தமிழகத்தின் முதல்வராக்கும் முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்.

திங்கள், ஜூன் 12, 2017

மு.க. ஸ்டாலின் அண்டப்புளுகு: ஐ.நா மனித உரிமை கவுன்சிலை வைத்து ஈழ வியாபாரம்!

ஜெனீவா ஐநா மனித உரிமைகள் பேரவையில் நடக்கவே நடக்காத ஒரு கூட்டத்திற்கு, மு.க. ஸ்டாலின் அழைக்கப்பட்டது போலவும், தமிழ்நாட்டில் சட்டமன்றம் கூடுவதால் அதற்கு வர இயலவில்லை என அவர் மறுத்ததாகவும் - ஒரு மிகப்பெரிய மோசடி நாடகத்தை திமுகவினர் நடத்துகின்றனர்.
இது தொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் பங்கேற்று ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனித உரிமைகள் குறித்து உரையாற்றுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். என்றாலும், தமிழகத்தில் உள்ள சட்டமன்ற அலுவல்கள் காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை" - ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் துணை ஆணையாளருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடக்காத கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லையாம்!

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் விவகாரம் குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை. இப்படி இல்லவே இல்லாத ஒரு கூட்டத்தில் 'தான் கலந்துகொள்ள இயலவில்லை' என்று ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு மு.க. ஸ்டாலின் 'காமெடி' கடிதம் எழுதியுள்ளார்.
ஐநா மனித உரிமைப் பேரவையின் 35 ஆம் கூட்டத்தொடர் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் இல்லை.

கூடவே மேலும் ஒரு கருத்தையும் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்: "இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தின் இந்த முக்கியமான 35வது அமர்வில், ஈழத்தமிழர்கள் விரும்பும் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவும் பயனுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புகிறேன்" என்று மு.க. ஸ்டாலின் தனது 'அண்டப்புளுகு' அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்ச்சி நிரலிலேயே இல்லாத கற்பனை கூட்டத்தால் எப்படி நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பது மு.க. ஸ்டாலினுக்கே வெளிச்சம்!

உண்மையில் நடப்பது என்ன?

ஈழத்தமிழர் சிக்கலோ இலங்கை விவகாரமோ இப்போதைய 35 ஆவது கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவே இல்லை. அடுத்து ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத்தில் தான் இலங்கை விவகாரம் விவாதிக்கப்படவுள்ளது. அதுவரை பேரவையின் பிரதானக் கூட்டத்தில் ஈழச்சிக்கல் பேசப்பட வாய்ப்பு இல்லை.

ஐநா மனித உரிமைப் பேரவையில் அங்கீகரிக்கப்பட்ட அரசு சாரா அமைப்புகள் NGO துணைக் கூட்டங்களை நடத்த அனுமதி உண்டு. இது போன்ற பலக்கூட்டங்களை ஐநா மனித உரிமைகள் பேரவையில் பசுமைத் தாயகம் அமைப்பு நடத்தியுள்ளது. இவ்வாறான கூட்டங்கள் அனைத்தும் அரசு சாரா அமைப்புகளின் முழுக்கட்டுப்பாட்டில் அவர்களே நடத்தும் கூட்டங்கள் ஆகும். இக்கூட்டங்களுக்கு யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம்.
ஸ்டாலின் அழைக்கப்பட்ட Tamil Uzagam NGO துணை நிகழ்ச்சி விவரம்.

அது போல Tamil Uzhagam எனும் ஒரு NGO அமைப்பின் சார்பில் ஜூன் மாதம் 19 ஆம் தேதி "இலங்கையில் மனித உரிமை" எனும் கூட்டத்துக்கு கூட்ட அரங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்துக்கு இதே Tamil Uzhagam NGO அமைப்பினால் மு.க. ஸ்டாலின் அழைக்கப்பட்டுள்ளார். இதற்கும் ஐநா மனித உரிமை பேரவைக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை.

மருத்துவர் அன்புமணியும் மு.க. ஸ்டாலினும்

கடந்த மார்ச் மாதம் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள், ஐநா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆம் கூட்டத்தில், ஐநா மனித உரிமைகள் ஆணையரின் முன்பாக, பேரவையின் தலைவர் அழைப்பின் பேரில் இலங்கை மீதான நேரடி விவாதத்தில் பங்கேற்று பேசினார். இது போன்ற ஐநா மனித உரிமைப் பேரவையின் நேரடி விவாதத்திற்கு மு.க. ஸ்டாலின் அழைக்கப்படவில்லை. மாறாக, ஒரு அரசு சாராத NGO அமைப்பின் பிரத்தியோக கூட்டத்திற்கு தான் மு.க. ஸ்டாலின் அழைக்கப்பட்டார்.
NGO அமைப்பின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட மு.க. ஸ்டாலின், அதில் கலந்துகொள்ள இயலவில்லை என்றால், அந்த Tamil Uzhagam NGO அமைப்புக்குத் தான் பதில் சொல்ல வேண்டும். அதை விடுத்து ஐநா மனித உரிமைகள் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாகக் கூறுவதன் மூலம் - ஐநா அவைக் கூட்டத்திற்கே அவர் அழைக்கப்பட்டத்தைப் பொன்று, ஒரு போலியான மோசடி தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரே இப்படி போலியான கட்டுக்கதைகளை வெளியிடுவது தமிழக மக்களை அவமானப்படுத்தும் செயல் ஆகும்.

தொடர்புடைய சுட்டிகள்:

1. ஐநாவில் மு.க. ஸ்டாலின்: திமுகவின் அண்டப்புளுகும் உண்மையும்!

2. மதிமுகவின் பொய்ப்பிரச்சரம்: வைகோ கோரிக்கையை ஐநா மன்றம் ஏற்றதா?

திங்கள், மே 01, 2017

ஐநாவில் மு.க. ஸ்டாலின்: திமுகவின் அண்டப்புளுகும் உண்மையும்!

ஐநா கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார் என்று, திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை இன்று (01.05.2017) சில ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

அதில் "ஐநா மனித உரிமைகள் கூட்டத்தில் ஈழத்தமிழருக்காக மு.க.ஸ்டாலின் பேசுவார்" என்றும், "2012 ஆம் ஆண்டிலேயே அவர் ஜெனீவாவில் ஐநா கூட்டத்தில் பங்கேற்றார்" என்றும், "ஐநா ஆண்டறிக்கையில் திமுகவின் டெசோ அறிக்கை வெளியாகியுள்ளது" என்றும் அப்பட்டமான கட்டுக்கதைகளை கூறியுள்ளனர்.

மு.க.ஸ்டாலின் = வைகோ 2.0

அண்மையில், 'வைகோ வேண்டுகோளை ஐநா பொதுச்செயலரின் ஒப்புதலோடு ஐநா மன்றம் சுற்றுக்கு வைத்துள்ளது' என்றும், 'ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 34 ஆவது கூட்டத்தில் வைகோ விடுத்த வேண்டுகோள் இரண்டாவது நிகழ்ச்சி நிரலாக வைக்கப்பட்டது' என்றும் மதிமுக பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டது. (இங்கே காண்க: மதிமுகவின் பொய்ப்பிரச்சரம்: வைகோ கோரிக்கையை ஐநா மன்றம் ஏற்றதா?). அதற்கு போட்டியாக இப்போது திமுகவின் கட்டுக்கதை முன்வைக்கப்பட்டுள்ளது.
திமுகவின் அறிக்கை

மு.க. ஸ்டாலின்: கட்டுக்கதையும் உண்மையும்

கட்டுக்கதை 1: "ஐநாவின் ஜெனீவா கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகிறாரா?"

திமுக அறிக்கை: "ஜெனீவாவில் நடைபெற உள்ள மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜெனீவாவில் வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள, 35வது மனித உரிமைகள் ஆய்வுக்கூட்டத்தில் தமிழீழ மக்களின் பிரச்னைகள் குறித்து மு.க.ஸ்டாலின் உரையாற்ற போகிறார். இதற்காக கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்." 
 ஐநாவில் ஸ்டாலின் எனும் தினகரன் பத்திரிகை செய்தி

உண்மை: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளது போன்று ஜூன் 12 முதல் 20 வரை ஜெனீவாவில் 35 ஆவது ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் நடக்கவில்லை. மாறாக, ஜூன் 6 முதல் 23 வரை இக்கூட்டம் நடக்கிறது. இந்த ஆண்டு நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் இடம்பெறவில்லை. இனி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் 37 ஆவது கூட்டத்தில் தான் இலங்கை விவாதிக்கப்படும்.

கட்டுக்கதை 2: "மு.க.ஸ்டாலின் 2012 ஐநா கூட்டத்தில் பங்கேற்றாரா?"

திமுக அறிக்கை: "மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் 03.11.2012 அன்று ஜெனிவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை பாதுகாப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர்."

உண்மை: இது பொய்யான தகவல். 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த காலமுறை ஆய்வு நடைபெற்ற போது மு.க. ஸ்டாலின் அங்கு வரவில்லை. உண்மையில் அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர் பாமக தலைவர் ஜி.கே. மணி அவர்கள் ஆகும்.

கட்டுக்கதை 3: "ஐநா அறிக்கையில் டெசோ தீர்மானமா?"

திமுக அறிக்கை: "மு.க.ஸ்டாலின் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் சமர்ப்பித்த 'டெசோ' மாநாட்டுத் தீர்மானங்கள் இந்தாண்டுக்கான ஐநா ஆண்டறிக்கையில் இடம்பெற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் 2017 - 18 ஆண்டு அறிக்கையில், ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் டெசோ அமைப்பு இணைந்து நிறைவேற்றிய தீர்மானங்கள் பதிவாகி, வெளியிடப்பட்டு இருக்கிறது"

உண்மை: ஐநா ஆண்டறிக்கை 2017 - 18 என்பதாக எந்த ஒரு அறிக்கையையும் ஐநா மன்றம் வெளியிடவில்லை. வெளியிடாத அறிக்கையில் டெசோ மாநாட்டு தீர்மானம் எவ்வாறு இடம்பெற்றது என்பதை மு.க. ஸ்டாலின் தான் விளக்க வேண்டும்.

ஐநாவில் செயலாற்றியது யார்?

ஈழத்தமிழர்கள் விடயத்தில் தமிழக கட்சிகள் எவ்வாறு கற்பனைக் கதைகளை கட்டிவிடுகின்றன என்பதற்கு மதிமுகவின் அறிக்கை போன்றே, திமுகவின் கட்டுக்கதையையும் எடுத்துக்காட்டாக கூறலாம்.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் தமிழகத்தின் சார்பில் 2009 முதல் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் நிறுவிய பசுமைத் தாயகம் அமைப்பு செயலாற்றி வருகிறது. மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள் 2013, 2015, 2017 ஆம் ஆண்டுகளில், ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் நேரடியாக உரை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
2017 ஐநா மனித உரிமைகள் பேரவையில் கனடா நாட்டின் தமிழ் MP கேரி அனந்தசங்கரியுடன் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP.

மருத்துவர் அன்புமணி அவர்களின் பங்களிப்பை யாரும் கொண்டாட்டமாக கொண்டாடியது இல்லை. அதனை அவர் விரும்பவும் இல்லை. ஆனால், ஐநாவில் பங்கேற்காத மு.க. ஸ்டாலினுக்கு 2012 ஆம் ஆண்டில் என்ன நடந்தது என்பதை திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் அறிக்கை பின்வருமாறு குறிப்பிடுகிறது: 

"இந்தியாவுக்குத்திரும்பிய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை, தலைவர் கலைஞர் அவர்களும், இனமான பேராசிரியர் அவர்களும் விமான நிலையத்திற்கு நேரடியாகச் சென்று, தாரை தப்பட்டைகள் முழங்க ஆளுயர மாலை அணிவித்து வரவேற்றதுடன், அன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தமிழ் அமைப்புகள் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத் தக்கது." - என்கிறது திமுக அறிக்கை!

திமுக, மதிமுக போன்ற கட்டுக்கதை கட்சிகளை நம்பும் அப்பாவி ஈழத்தமிழர்கள் இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும்.

தொடர்புடைய சுட்டி:

மதிமுகவின் பொய்ப்பிரச்சரம்: வைகோ கோரிக்கையை ஐநா மன்றம் ஏற்றதா?

வெள்ளி, ஏப்ரல் 28, 2017

மதிமுகவின் பொய்ப்பிரச்சரம்: வைகோ கோரிக்கையை ஐநா மன்றம் ஏற்றதா?

'வைகோ வேண்டுகோளை ஐநா பொதுச்செயலரின் ஒப்புதலோடு ஐநா மன்றம் சுற்று வைத்துள்ளது' என்றும், 'ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 34 ஆவது கூட்டத்தில் வைகோ விடுத்த வேண்டுகோள் இரண்டாவது நிகழ்ச்சி நிரலாக வைக்கப்பட்டது' என்றும் மதிமுக பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

மதிமுக பொய்ப்பிரச்சாரம்

"தனித் தமிழ் ஈழம் அமைப்பதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - என்கிற வைகோ வேண்டுகோளை ஐநா மன்றம் சுற்று அறிக்கையாக முன் வைத்துள்ளது" - என்று மதிமுக கட்சியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 34 ஆவது கூட்டத்தில் ஐநா பொதுச்செயலரின் ஒப்புதலோடு 'வைகோ விடுத்த வேண்டுகோள் இரண்டாவது நிகழ்ச்சி நிரலாக' வைக்கபட்டதாகவும், அதன் படி வைகோ அவர்களின் கோரிக்கை ஐநா மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பினர்களுக்கு ஆய்வுக்காக சுற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மதிமுகவின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

உண்மை என்ன?

ஈழத்தமிழர்கள் விடயத்தில் தமிழக கட்சிகள் எவ்வாறு கற்பனைக் கதைகளை கட்டிவிடுகின்றன என்பதற்கு மதிமுகவின் இந்த அறிக்கையை எடுத்துக்காட்டாக கூறலாம்.

ஐநா அவையின் விதிகளின் படி, மதிமுக தலைவர் வைகோவின் கடிதத்தை சுற்றுக்கு விடவோ, ஆய்வுக்கு உட்படுத்தவோ இடம் ஏதும் இல்லை. அப்படி ஒரு சம்பவம் நடக்கவும் இல்லை.

ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் உறுப்பு நாடுகள், உறுப்பினர் அல்லாத நாடுகள், ஐநா அமைப்புகள், அங்கீகரிக்கப்பட்ட அரசு சாரா நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இந்த பங்கேற்பின் வழியாக மூன்று வழிகளில் கருத்துக்களை முன்வைக்கலாம். 1. எழுத்துபூர்வமான அறிக்கைகள் சமர்ப்பிப்பது (NGO Written Statement). 2. மனித உரிமைகள் கூட்டத்தில் நேரடியாக பேசுவது (NGO Oral Statement). 3. துணைக்கூட்டங்கள் (NGO Side-Event) நடத்துவது - ஆகியனவே பங்கேற்கும் வழிகள் ஆகும்.

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு, ஐநா அவையின் அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனை அமைப்பாக 2005 ஆம் ஆண்டுமுதல் செயலாற்றி வருகிறது. 2009 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஈழத்தமிழர் நீதிக்கான குரலை ஐநா மனித உரிமைகள் பேரவையில் எழுப்பி வருகிறது.

மதிமுக குறிப்பிட்டுள்ள அதே 34 ஆம் கூட்டத்தில் - பசுமைத் தாயகம் சார்பில் இரண்டு எழுத்துபூர்வமான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. ஆறு முறை மனித உரிமைகள் கூட்டத்தில் நேரடியாக பேசப்பட்டது. மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்களும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் குமாரும் பேசினர்.  இரண்டு துணைக்கூட்டங்கள் பசுமைத் தாயகம் சார்பில் நடத்தப்பட்டன.

வைகோவின் கோரிக்கை விவகாரம் என்ன?

மதிமுக ஐநாவின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு அல்ல. எனவே, அவர்கள் ஐநா மனித உரிமைகள் பேரவையில் கோரிக்கைகளை எழுப்பும் வாய்ப்பு இல்லை. அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனை அமைப்புகள் எழுத்துபூர்வமான அறிக்கைகளை வைக்கலாம் என்கிற வகையில் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் 2 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதனை ஐநா மனித உரிமைகள் பேரவை சுற்றுக்கு விட்டது. இதுபோன்று, 34 ஆம் கூட்டத்தொடரில் மொத்தம் 259 அறிக்கைகள் சுற்றுக்கு விடப்பட்டன.
பசுமைத் தாயகம் அறிக்கை, பசுமைத் தாயகம் பெயரில் HRC/34/NGO/141 by the Pasumai Thaayagam
பசுமைத் தாயகம் அறிக்கை, பசுமைத் தாயகம் பெயரில் HRC/34/NGO/143 by the Pasumai Thaayagam

ஐநா மனித உரிமைகள் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் 10 தலைப்புகளாக பிரிக்கப்படும். அதில் எந்த ஒரு தலைப்பின் கீழும் அறிக்கைகள் சமர்ப்பிக்கலாம். பசுமைத் தாயகம் அமைப்பின் அறிக்கைகள் முறையே நிகழ்ச்சி நிரல் 2 மற்றும் 4 ஆவது தலைப்பின் கீழ் சுற்றுக்கு விடப்பட்டன. (எண்: HRC/34/NGO/141 by the Pasumai Thaayagam) மற்றும் HRC/34/NGO/143 by the Pasumai Thaayagam)

இதே போன்று - வைகோ அவர்களின் கடிதமும், ஆப்பிரிக்கா மற்றும் பிரான்சில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனை அமைப்புகள் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது (எண்: HRC/34/NGO/240 by the Association Bharathi Centre Culturel Franco-Tamoul, Association Burkinabé pour la Survie de l'Enfance,). பசுமைத் தாயகம் அறிக்கை சுற்றுக்கு விடபட்டது போலவே, இந்த அறிக்கையும் சுற்றுக்கு விடப்பட்டுள்ளது.
வைகோ கடிதம் - ஆப்பிரிக்கா மற்றும் பிரான்ஸ் அமைப்புகளின் பெயரில்  HRC/34/NGO/240 by the Association Bharathi Centre Culturel Franco-Tamoul, Association Burkinabé pour la Survie de l'Enfance

அதாவது, வைகோ அவர்களின் கடித்ததை ஐநா மன்றம் சுற்றுக்கு விடவில்லை. மாறாக, ஆப்பிரிக்கா மற்றும் பிரான்சில் உள்ள அரசுசாரா அமைப்புகளின் அறிக்கைதான் சுற்றுக்கு விடப்பட்டது. அந்த அறிக்கைக்குள் வைகோ அவர்களின் கடிதம்  அறிக்கையாக குறிப்பிடப்பட்டுள்ளது. 34 ஆம் கூட்டத்தொடரின் 259 அறிக்கைகளில் இதுவும் ஒன்று.

அதுமட்டுமல்லாமல் - //ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 34 ஆவது கூட்டத்தில் ஐநா பொதுச்செயலரின் ஒப்புதலோடு 'வைகோ விடுத்த வேண்டுகோள் இரண்டாவது நிகழ்ச்சி நிரலாக'//  வைக்கப்படவில்லை. 259 அறிக்கைகளை தலைப்பு வாரியாக பிரிக்கும் வகையில், ஆப்பிரிக்கா மற்றும் பிரான்ஸ் அமைப்புகளின் அறிக்கை 2 ஆவது தலைப்பின் கீழ் உள்ளது.

பசுமைத் தாயகத்தின் பணி

2009 ஆம் ஆண்டு முதல் ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டங்களில் அறிக்கை, நேரடி பேச்சு, துணைக்கூட்டம் என எல்லா வழிகளிலும் பசுமைத் தாயகம் பங்கேற்று வருகிறது. இதுவரை 40-க்கும் மேற்பட்ட அறிக்கைகள், 50-க்கும் மேற்பட்ட நேரடியாக உரைகள், 10 துணைக் கூட்டங்களை நேரடியாக நடத்தியுள்ளது பசுமைத் தாயகம்.

ஆனால், ஒரு முறை வேறு அமைப்புகள் மூலம் அறிக்கையை சமர்ப்பித்துவிட்டு, அதனை ஐநா ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுத்தது போல மதிமுக அறிக்கை விடுவது வியப்பளிக்கிறது!.

அதிலும் 'வைகோ வேண்டுகோளை ஐநா பொதுச்செயலரின் ஒப்புதலோடு ஐநா மன்றம் சுற்று வைத்துள்ளது என்றும், ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 34 ஆவது கூட்டத்தில் 'வைகோ விடுத்த வேண்டுகோள் இரண்டாவது நிகழ்ச்சி நிரலாக' வைக்கப்பட்டது என்றும் கூறுவது அப்பட்டமான பொய்ப்பிரச்சாரம் தவிர வேறு எதுவும் இல்லை.

(குறிப்பு: வைகோவின் கோரிக்கையை ஆப்பிரிக்கா மற்றும் பிரான்ஸ் அமைப்புகள் ஐநா மனித உரிமைகள் பேரவையில் அறிக்கையாக சமர்ப்பித்ததை வரவேற்கிறோம். ஆனால், அது குறித்த மிகையான கட்டுக்கதைகள் நியாயமற்றவை).

திங்கள், மார்ச் 06, 2017

ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கை: உண்மை நிலை என்ன?

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆம் கூட்டத்தொடரில் இலங்கை மீதான விவாதம் 2017 மார்ச் 22 ஆம் நாள் வர இருக்கிறது. இதுகுறித்த சில கேள்விகளும் பதிலும் கீழே:

1. ஐநா மனித உரிமைகள் பேரவையில் 34 ஆம் கூட்டத்தில் என்ன நடக்கும்?

இக்கூட்டத்தொடரில் மார்ச் 22 ஆம் நாள் இலங்கை மீதான 30/1 தீர்மானத்தின் நடவடிக்கைள் குறித்த ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை முன்வைக்கப்பட்டு, அதன் மீது விவாதம் நடக்கும். அதற்கு அடுத்த நாள் மார் 23 ஆம் நாள் இலங்கை மீதான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படலாம்.

மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சித்தரவதை மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான ஐநா சிறப்பு தூதுவர்கள் இலங்கையின் நிலைமை குறித்த அறிக்கைகளை இக்கூட்டத்தொடரில் முன்வைத்துள்ளனர்.

2. இலங்கை மீதான தீர்மானத்தில் என்ன இருக்கும்?

இலங்கை மீதான புதிய தீர்மானத்தில் என்ன இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. 2015-ல் நிறைவேற்றப்பட்டு இப்போது நடைமுறையில் உள்ள 30/1 தீர்மானத்தை ஐநா மனித உரிமைகள் பேரவை கண்காணித்து வருவதை தொடரும் வகையில், அதற்கான கால எல்லையை நீட்டித்து புதிய தீர்மானம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3. புதிய தீர்மானம் குறித்து பல்வேறு தரப்பினரின் நிலைப்பாடு என்ன?

நடைமுறையில் உள்ள 30/1 தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசை விடுவிக்க வேண்டும், அல்லது பன்னாட்டு நீதிபதிகள் என்பதையாவது நீக்க வேண்டும் என்பது இலங்கை அரசின் விருப்பம் ஆகும்.

அதே நேரத்தில், 30/1 தீர்மானத்தை நீர்த்துப்போக செய்யக்கூடாது. அதனை குறித்த காலத்திற்குள் நிறைவேற்றும் வகையில் கால அட்டவனையை உருவாக்க வேண்டும் என்பது பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்புகளின் கோரிக்கை ஆகும்.

கால நீட்டிப்பு கூடாது என்றும் ஐநா பொதுச்சபைக்கு நீட்டிக்க வேண்டும் என்பதும் சில தமிழர் அமைப்புகளின் கோரிக்கை ஆகும்.

4. இலங்கை அரசின் கோரிக்கை சரிதானா?

மிக மோசமான கோரிக்கையை இலங்கை அரசு முன்வைக்கிறது. இலங்கை அரசு தானே முன்னின்று 2015 கொண்டுவந்த தீர்மானத்தை தானே மறுப்பது நியாயம் அல்ல. இலங்கை அரசின் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும்.

5. பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளின் கோரிக்கை சரிதானா?

சரிதான். 30/1 தீர்மானத்தில் ஒரு வார்த்தையைக் கூட கைவிடாமல், அதனை முழுவதுமாக நிறைவேற்ற வேண்டும் என்கிற நிலைப்பாடு மிகச் சரியானதாகும். இதற்கான குறிப்பிட்ட கால எல்லையையும் தீர்மானிக்க வேண்டும் என்பதும் சரியான கோரிக்கையே ஆகும். ஐநா மனித உரிமைகள் ஆணையரும் தனது அறிக்கையில் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

6. தமிழர் அமைப்புகளின் கோரிக்கை சரிதானா?

இலங்கை விவகாரத்தை ஐநா பொதுச்சபைக்கும் பாதுகாப்பு மன்றத்துக்கும் நீட்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கை சரியானது. ஆனால் 'கால அவகாசம்' என்கிற வார்த்தையை தமிழர் அமைப்புகள் குழப்பமான பொருளில் பயன்படுத்துகின்றன.

7. 'கால அவகாசம்' என்கிற வார்த்தையில் என்ன குழப்பம்?

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தை பொருத்தவரை, கால அவகாசம் என்பது சரியான பொருளில் பயன்படுத்தபடவில்லை. ஐநா மேற்பார்வைக்கான காலத்தை நீட்டிப்பது என்பதையே பலரும் இலங்கைக்கான கால அவகாசம் என தவறாக பொருள் கொள்கின்றனர்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆம் கூட்டத்தொடருடன் இலங்கை விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடாது. இதனை எதிர்வரும் கூட்டங்களுக்கு விரிவுபடுத்தி, இலங்கையை பன்னாட்டு நிகழ்ச்சி நிரலில் வைத்திருக்க வேண்டும். இதுதான் இப்போது மிக முக்கியமானது ஆகும். மேலும், ஏற்கனவே உள்ள தீர்மானத்திலுருந்து கீழிறங்காமல், மேலும் வலுவான நிலையில் மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பும் பங்களிப்பும் தொடர வேண்டும்.

அதாவது, இப்போது மனித உரிமைகள் பேரவையில் பேசப்படும் கால நீட்டிப்பு என்பது - ஐநா மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்புக்குத்தான். இலங்கை அரசுக்கு அல்ல.

8. அப்படியானால் 'இலங்கை அரசுக்கு கால நீட்டிப்பு' வழங்கலாமா?

ஐநா மனித உரிமைகள் பேரவையில் புதிய தீர்மானம் வேண்டும் என்பதை இலங்கைக்கான கால நீட்டிப்பு என்பதாக புரிந்துகொள்வது ஒரு தவறான பார்வை.

உண்மையில் 30/1 தீர்மானத்தில் இலங்கை அரசின் செயல்பாட்டுக்கு கால எல்லை எதுவும் வகுக்கப்படவில்லை. இலங்கை அரசுக்கு 25 செயல் திட்டங்கள் அளிக்கப்பட்டன. சில செயல்திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தக்கூடியவை. சில செயல்திட்டங்களை செயலாக்க ஒரு சிலஆண்டுகள் கூட ஆகலாம். எடுத்துக்காட்டாக, புதிய அரசியல் சாசனம், இராணுவத்தை மாற்றியமைத்தல், அரசியல் தீர்வு என்பனவெல்லாம் 18 மாதத்தில் முடியக்கூடிய வேலைகள் இல்லை.

எனவே, 30/1 தீர்மானத்தை இலங்கை அரசு எந்த அளவுக்கு நிறைவேற்றியுள்ளது என்பதை 18 மாதங்கள் கடந்து 34 ஆம் கூட்டத்தில் ஆராய வேண்டும் என்றுதான் 2015 அக்டோபர் தீர்மானம் கூறியது. மாறாக, 18 மாதங்களில் 25 செயல்திட்டங்களையும் நிறைவேற்றியாக வேண்டும் என்று கூறவில்லை.

(HRC/RES/30/1: Requests the Office of the High Commissioner to continue to assess progress on the implementation of its recommendations and other relevant processes... and to present ... a comprehensive report followed by discussion on the implementation of the present resolution at its thirty-fourth session)

9. ஐநா 2015 தீர்மானத்தின் தற்போதைய நிலைமை என்ன?

2015 தீர்மானத்தின் நிலைமை குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையர் தமது அறிக்கையை வெளியிட்டுள்ளார். 'கவலை கொள்ளும் அளவுக்கு இலங்கை அரசு காலதாமதம் செய்வதாகவும், எதையெல்லாம் செய்ய முடியுமோ, அவற்றைக்கூட செய்யவில்லை எனவும்' கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். எனவேதான், உரிய கால வரையறையுடன் கூடிய செயல்திட்டம் தேவை என்று கூறியுள்ளார்.

(HRC/34/20) Present a comprehensive strategy on transitional justice, with a time-bound plan to implement the commitments welcomed by the Human Rights Council in its resolution 30/1 and the recommendations contained in the present and previous reports of the High Commissioner to the Council

இதே கோரிக்கையை பல பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்புகளும் முன்வைத்துள்ளன.

அதாவது - இதுவரை கால அட்டவணை இல்லாத நிலையில் இலங்கை மீதான தீர்மானம் இருந்தது. இப்போது ஐநா மனித உரிமைகள் ஆணையர் ஒரு கால அட்டவணையை கோரியுள்ளார். எனவே, ஐநாவின் கண்காணிப்பு தொடர வேண்டும் என்பதும், கால அட்டவணை வேண்டும் என்பது நீதிக்கான பயணத்தில் ஒரு முன்னேற்றமே ஆகும்.

10. ஐநா மனித உரிமைகள் ஆணையர் இலங்கை மீது குற்றவிசாரணைக்கு உத்தரவிட முடியாதா?

முடியாது. அந்த அதிகாரம் அவருக்கு இல்லை. ஐநா மனித உரிமை பேரவைக்கும் கூட அந்த அதிகாரம் இல்லை. ரோம் உடன் படிக்கையில் கையொப்பமிடாத நாடுகள் மீது பன்னாட்டு குற்றவிசாரணைக்கு ஐநா பாதுகாப்பு மன்றம் மட்டுமே உத்தரவிட முடியும்.
11. ஐநா மனித உரிமைகள் ஆணையர் கேட்டபடி கால அட்டவணையாவது உருவாகுமா?

அப்படியும் கூறிவிட முடியாது. ஐநா மனித உரிமைகள் ஆணையர் தனது பரிந்துரைகளை தெரிவித்துள்ளார். அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ஐநா மனித உரிமைகள் பேரவைதான் முடிவெடுக்க வேண்டும். அதாவது, அடுத்தக்கட்டத்தை தீர்மானம் செய்ய வேண்டியது 47 உறுப்பு நாடுகள்தான்.

ஐநா மனித உரிமைப் பேரவை என்பது ஒரு அரசியல் அவை மட்டுமே. அது நீதிமன்றமும் அல்ல. எனவே, பன்னாட்டு சட்டமும் நியாயத்துக்கான கோரிக்கைகளும் ஒருபக்கம் இருந்தாலும் -  பன்னாட்டு புவிஅரசியல் வியூகங்களுக்கு ஏற்பவும், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் போக்கினை கவனித்தும், தத்தமது நாடுகளின் நலனுக்கு ஏற்பவுமே உறுப்பு நாடுகள் முடிவு செய்யும்.

12. இலங்கை விவகாரத்தை ஐநா பொதுச்சபைக்கு 'மாற்ற' வேண்டுமா?

இலங்கை விவகாரத்தை ஐநா பொதுச்சபைக்கு 'மாற்ற' வேண்டும் என்பது தவறான பொருள்படும் கோரிக்கை ஆகும். மாறாக, ஐநா பொதுச்சபைக்கும் பாதுகாப்பு மன்றத்துக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பதே சரியான கருத்தாகும்.

அதாவது, ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் நீட்டிக்கப்படும் அதே நேரத்தில், இதனை ஐநா பொதுச்சபைக்கும் ஐநா பாதுகாப்பு மன்றத்துக்கும் விரிவாக்க வேண்டும்.

13. ஐநா பொதுச்சபைக்கு மாற்றுவதால் பயன் இருக்குமா?

உடனடிப் பலன் எதுவும் இருக்காது. ஏனெனில், ஐநா பொதுச்சபையானது இதனை பாதுகாப்பு மன்றத்துக்கு பரிந்துரை செய்யலாம். அங்கு சீனாவும் ரஷ்யாவும் தமது வீட்டோ அதிகாரத்தால் தடை செய்யும். இப்படியாக பல ஆண்டுகள் நீடிக்கலாம். அதே நேரத்தில் இலங்கை விவகாரம் பன்னாட்டு அரங்கில் ஒரு பேசு பொருளாக இருப்பது மட்டும் ஒரு பயனாக இருக்கக் கூடும்.

14. ஐநா மனித உரிமைப் பேரவை பொதுச்சபைக்கு பரிந்துரைக்குமா?

இந்த 34 ஆம் கூட்டத்தொடரில் அப்படி ஒரு பரிந்துரையை ஐநா மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ளாது. ஏனெனில், இப்போது உறுப்பினர்களாக இருக்கும் 47 நாடுகளில் ஒரு நாடுகூட இந்தக் கோரிக்கையை ஏற்பதாக இதுவரை கூறவில்லை.

15. ஐநா மனித உரிமைகள் பேரவை 30/1 தீர்மானத்தின் காலத்தை நீட்டிக்கக் கூடாது என்பது சரியா?

மிகத் தவறான கோரிக்கை. இதற்கு பதிலாக 'இலங்கை அரசுக்கு முழு விடுதலை அளிக்க வேண்டும்' என்று நேரடியாகவே சொல்லி விடலாம். ஐநா மனித உரிமைப் பேரவையில் மார்ச் 23 ஆம் நாள் இலங்கை மீது ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால் - இலங்கை அரசினை கேள்வி கேட்க இனி எவருமே இருக்க மாட்டார்கள்.

அதாவது, அடுத்த தீர்மானம் வராவிட்டால் - பன்னாட்டு குற்றவியல் விசாரணை நெருக்கடியில் இருந்தும், ஐநாவின் நேரடி கண்காணிப்பில் இருந்தும் இலங்கை ஒரேயடியாக விலக்கப்பட்டுவிடும். இலங்கையில் தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளிகள் முழுவதுமாக தப்பி விடுவார்கள்.

15. இப்போது என்ன தான் தேவை?

தமிழீழம் அமைய வேண்டும் என்பது ஒரு உறுதியான லட்சியம். அதற்காக ஈழத்தமிழர் இடையே ஒரு பொது வாக்கெடுப்பு வேண்டும் என்பது தமிழர்களின் கோரிக்கை. இந்த கோரிக்கை நடக்க வேண்டும் என்றால் - இலங்கை விவகாரம் சர்வதேச அரசியலில் நீடித்திருப்பது முக்கியம் ஆகும்.

ஐநா அவையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை அரசு நீடிக்க வேண்டும் என்றால் - ஐநா மனித உரிமைப் பேரவையின் 2015 தீர்மானத்தின் காலத்தை நீட்டிக்கும் புதிய தீர்மானத்தை கொண்டுவர வேண்டும்.

ஏற்கனவே இருக்கும் தீர்மானத்தின் ஒரு வார்த்தையைக் கூட மாற்றவோ நீர்த்துப்போகச் செய்யவோ கூடாது. மாறாக, அதன் அனைத்து செயல்திட்டங்களுக்கும் உறுதியான கால எல்லையை கட்டாயமாக்க வேண்டும். மேலும், இத்தீர்மானத்தின் செயல்பாட்டை ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் கண்காணித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் மனித உரிமைகள் பேரவைக்கு தெரிவிக்க வேண்டும். அதன் மீது தொடர் நடவடிக்கைகளை தீர்மானிக்க வேண்டும் - இவை அனைத்தும் புதிய தீர்மானத்தில் இடம் பெற வேண்டும்.

மேலும், இலங்கை விவகாரத்தை ஐநா பொதுச்சபைக்கு விரிவாக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் வலியுறுத்தலாம்.

16. வடகொரிய விவகாரம் போன்று இலங்கையை கையாளக் கூடாதா?

வடகொரியா போன்று இலங்கையையும் நடத்த ஐநா அவையைக் கோரலாம். ஆனால், வடகொரிய விவகாரத்தை ஐநா பொதுச்சபைக்கும் பாதுகாப்பு மன்றத்துக்கும் பரிந்துரை செய்ததால், ஐநா மனித உரிமைப் பேரவையில் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

வட கொரிய அதிபர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று 2014 ஆம் ஆண்டில் பொதுச்சபைக்கும், அதன் வழியே பாதுகாப்பு மன்றத்துக்கும் ஐநா மனித உரிமைப் பேரவை பரிந்துரை செய்தது. அந்த விவகாரம் முன்று ஆண்டுகளாக ஐநா பாதுகாப்பு மன்றத்தில் ஆண்டுதோரும் விவாதிக்கப்படுகிறது. ஆனால், இதுவரை சர்வதேச குற்றவியல் நீதிவிசாரணைக்கு பரிந்துரை செய்யப்படவில்லை.

இதனிடையே - வடகொரியா மீது ஆண்டுதோரும் பழைய தீர்மானங்களை தொடர்ந்து ஐநா மனித உரிமைப் பேரவையும் நிறைவேற்றி வருகிறது. 2016 ஆம் ஆண்டில் இரண்டு சிறப்பு நிபுணர்களை நியமனம் செய்து, வடகொரிய அதிபரை சர்வதேச சட்டங்களின் கீழ் தண்டிப்பதற்கான வழிகளை ஆராயுமாறு பணித்தது. தென் கொரியாவில் ஒரு சிறப்பு அலுவலகத்தையும் அமைத்துள்ளது.

அதாவது, பொதுச்சபைக்கும், அதன் வழியே பாதுகாப்பு மன்றத்துக்கும் வடகொரிய விவகாரத்தை பரிந்துரைத்த பின்னரும் கூட - தமது பழைய நிலைப்பாட்டை மேலும் வலுவாக்கும் தீர்மானங்களை ஐநா மனித உரிமைப் பேரவை நிறைவேற்றி வருகிறது.

அந்த வகையில் - இலங்கை மீது ஐநா மனித உரிமைகள் பேரவையின் அழுத்தம் மென்மேலும் அதிகமாக வேண்டும் என்பதே முதன்மையான தேவை ஆகும்.
படம்: ஐநா மனித உரிமைகள் ஆணையருக்கு எதிராக இலங்கை சிங்கள இனவெறியர்களின் போராட்டம்.

குறிப்பு: ஐநா பாதுகாப்பு சபைக்கு போனால், இனப்படுகொலை உறுதியாகும். அதன் வழியே பொது வாக்கெடுப்பு நடக்கும். தமிழீழம் அமையும் என்கிற நம்பிக்கை பரவலாக பேசப்படுகிறது. ஆனால், விடுதலைக்கான பாதை இப்படி நேரானதாகவும் தெளிவானதாகவும் இல்லை என்பதே உண்மை.

ஐநா மனித உரிமைப் பேரவையில் இப்போதே, உடனடியாக 'ஐநா பொதுச்சபைக்கு பரிந்துரைக்கும் தீர்மானம்' நிறைவேற்றப்பட்டால் கூட, ஐநா பாதுகாப்பு அவையில் இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குள் இலங்கைக்கு எதிரான தீர்மானம் எதுவும் நிறைவேற வாய்ப்பு இல்லை.  ஏனெனில், அவற்றை மிக எளிதாக வீட்டோ அதிகாரம் மூலம் சீனாவும் ரஷ்யாவும் முறியடித்துவிடும்.

ஒருவேளை அவ்வாறு ஒரு தீர்மானம் வந்த பின்பும் கூட - அது நேரடியாக பொது வாக்கெடுப்புக்கு அழைத்துச் செல்லாது. இனப்படுகொலை நடந்த நாட்டில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கிற நேரடி விதிகள் எதுவும் இல்லை.

ஒரு புதிய நாடு அமைவது அந்த காலத்துக்கு ஏற்ற புவி அரசியல் சூழலைப் பொருத்துதான் சாத்தியம் ஆகும். குறிப்பாக, இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் ஏற்படும் மாற்றம் மட்டுமே சாதகமான புவிஅரசியல் சூழலை உருவாக்கும்.

நீதிக்கான போராட்டம் என்பது ஒரு நெடிய பயணம். சர்வதேச அரங்கில் இப்போது தமிழர்களுக்கான இடம் ஐநா மனித உரிமைப் பேரவையில் மட்டுமே இருக்கிறது. இதனை மென்மேலும் வலிமையாக்கி கொண்டு - அடுத்தக் கட்டத்திற்கும் முயற்சிக்க வேண்டும்.

"வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்." - குறள்

(செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்.)

சனி, மார்ச் 04, 2017

ஐநாவில் இலங்கையை தண்டிக்க இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும்! மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அறிக்கை

ஜெனிவா நகரில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமைப் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை இறுதிப்போரின் போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்காக அந்நாட்டு அரசின் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் தாக்கல் செய்துள்ளார். இதனடிப்படையில் இலங்கை மீதான விவாதம் மார்ச் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்கான இலங்கையின் செயல்பாடுகள் மனநிறைவு தரவில்லை  என்றும் ஆணையர் அவரது அறிக்கையில் கூறியுள்ளார். ‘‘இலங்கையின் ஒப்புதலுடன் 2015-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை, கவலைக்கொள்ளும் அளவுக்கு மிகவும் காலதாமதம் செய்யப்பட்டுள்ளது. ஐநா தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இலங்கை அதிபர், பிரதமர், அமைச்சர்கள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசுவது கண்டிக்கத்தக்கது. இனியும் தாமதிக்காமல் தீர்மானத்தை செயல்படுத்த  திட்டம் வகுக்கப்பட வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இலங்கையில் அமைப்பு ரீதியில் நடத்தப்பட்ட பன்னாட்டு குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிபதிகளைக் கொண்டு கலப்பு நீதிமன்றம் அமைப்பது கட்டாயமான தேவை. இத்தகைய குற்றங்களை விசாரிக்கும் வகையில் உள்நாட்டு சட்டங்களை உடனடியாக மாற்ற வேண்டும். மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலங்களை உடனடியாக திருப்பி அளிக்க வேண்டும், குடிமக்கள் விவகாரங்களில் இருந்து இராணுவம் முழுவதுமாக விலக்கப்பட வேண்டும். இலங்கை அரசின் நடவடிக்கைகளை முழுமையாக செயலாக்க ஐநா மனித உரிமைகள் ஆணையரின் நேரடி அலுவலகத்தை இலங்கையில் நிறுவ வேண்டும். போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலையை விசாரிப்பதற்கான ரோம் உடன்படிக்கையில் இலங்கை உடனடியாக கையொப்பம் இடவேண்டும். இலங்கை அரசின் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் ஐநா மனித உரிமை ஆணையர் பரிந்துரைத்துள்ளார்.

2015 ஆம் ஆண்டின் பேரவை தீர்மானத்தில் நிலைமாற்ற நீதி பொறிமுறை என்பதை இலங்கை அரசு ஏற்றது. இதில் உண்மையை வெளிக்கொணர்தல், குற்றவாளிகளைத் தண்டித்தல், இழப்புகளுக்கு பரிகாரம் தேடுதல், குற்றம் நடந்ததற்கான காரணங்களைக் கண்டுபிடித்து அமைப்புகளை மாற்றுதல் என நான்கு அங்கங்கள் உள்ளன. ஆனால், உண்மை, பரிகாரம் என இரு வழிமுறைகளை மட்டுமே இலங்கை அரசு ஓரளவுக்கு ஏற்பது போன்று தெரிவதாகவும், குற்றவாளிகளைத் தண்டிக்காமல் தவிர்க்க முயல்வதாகவும் ஆணையர் குற்றஞ்சாற்றியிருக்கிறார். இலங்கை அரசே அமைத்த ஆலோசனைக் குழுவின் அறிக்கையை ஏற்று செயல்படுத்த வேண்டும் என்றும் இந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்காமல் ஏமாற்ற இலங்கை அரசு நடத்தும் நாடகம் மனித உரிமை ஆணையர் அறிக்கை மூலம் தெளிவாகியுள்ளது. இதற்கு மேலும் இலங்கை அரசின் ஏமாற்று சதிகளுக்கு சர்வதேச சமூகம் பலியாகக் கூடாது. 2015-ஆம் ஆண்டு மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல், ஒருசிலவற்றை மட்டும் நிறைவேற்ற ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மாறாக, மனித உரிமை பேரவையின் நடவடிக்கைகளை தீவிரமாக்குவதுடன், ஐநா பொது அவைக்கும், பாதுகாப்பு மன்றத்துக்கும் இலங்கை விவகாரத்தை கொண்டு செல்ல வேண்டும்.

குறிப்பாக, இலங்கையை காப்பாற்றும் முயற்சிகளில் இந்தியா இனியும் ஈடுபடக்கூடாது. மாறாக,  நீதியின் பக்கம் நிற்க முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, ஐ.நா. மனித உரிமை பேரவையில் 2015-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தின் அம்சங்களை நிறைவேற்றாமல் காலந்தாழ்த்தும் இலங்கை அரசைக் கண்டிக்கும் வகையிலான தீர்மானத்தை இந்திய அரசே கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள - பன்னாட்டு நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் அமைப்பது உள்ளிட்ட - அனைத்து பரிந்துரைகளையும், உரிய காலக்கெடுவுக்குள் நிறைவேற்றுவதற்கான செயல்திட்டத்தையும் இந்திய அரசு அதன் தீர்மானத்தில் முன்வைக்க வேண்டும்.

கடந்த காலங்களில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் போன்ற பன்னாட்டு அமைப்புகளில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை. இத்தகைய சூழலில், மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அம்சங்களை இலங்கை அரசு செயல்படுத்துவதை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் தொடர்ச்சியாக கண்காணிப்பதையும், குறிப்பிட்ட கால இடைவெளியில் மனித உரிமைப் பேரவையில் விவாதிப்பதையும் உறுதி செய்யும்படி இந்தியத் தீர்மானம் வலியுறுத்த வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் மேலாக, இலங்கை இறுதிப்போரில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட  போர்குற்றங்களுக்கு நீதி பெற்றுத் தரும் நோக்குடன், இலங்கை சிக்கலை ஐநா பொது அவையின் மூலம் ஐநா பாதுகாப்பு மன்றத்துக்கு கொண்டு செல்லும்படியும் ஐநா மனித உரிமை பேரவையை இந்தியா கோர வேண்டும். 

ஈழத் தமிழர்கள் இந்தியாவை தந்தை நாடாக கருதுவதாலும், ஈழத்தமிழரை தொப்புள் கொடி உறவாக இந்தியத் தமிழர்கள் கருதுவதாலும் அவர்களுக்கு நீதிபெற்றுத் தருவதற்கான தார்மீக கடமையும், பொறுப்பும் இந்தியாவுக்கு உண்டு. ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில்  பொருத்தமான தீர்மானத்தைக் கொண்டு வந்து நட்பு நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றுவதன் மூலம் இந்தக் கடமையை இந்தியா நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
#PMK #AnbumaniRamadoss #UNHRC #HRC34 #SriLanka

புதன், மார்ச் 01, 2017

ஐநாவில் ஈழத்தமிழர் நீதி: குழப்பமும் தெளிவும்!

தற்போது ஐநா மனித உரிமைப் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில், வரும் மார்ச் 22-ல் இலங்கை மீதான விவாதம் அங்கு நடைபெறவுள்ள சூழலில் - ஐநா மனித உரிமைப் பேரவையின் 2015 தீர்மானத்தின் அடுத்தக் கட்டம் குறித்த தமிழர்களின் பார்வை இப்போது ஓரளவுக்கு தெளிவாகி வருகிறது. இது வரவேற்க தக்கதாகும்.

இலங்கை மீதான குற்றச்சாட்டுகளை ஐநா பாதுகாப்பு அவைக்கு அனுப்ப வேண்டும் என்கிற கோரிக்கைக்கு மத்தியில், "ஐநா மனித உரிமைப் பேரவையின் தற்போதைய தீர்மானத்தின் காலத்தினை மேலும் நீட்டிக்க வேண்டும்" என்றும் "அதனை ஐநா மனித உரிமைகள் பேரவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்" நாடுகடந்த தமிழீழ அரசு ஏற்படுத்திய வல்லுநர் குழு 28.02.2017-ல் பரிந்துரை செய்துள்ளது. ("calls on the HRC to extend its mandate so as to review regularly the GSL’s compliance with HRC Resolution 30/1" -  Sri Lanka Monitoring and Accountability Panel)

இதே கோரிக்கைதான் கடந்த 25.02.2017-ல் சென்னையில் பசுமைத் தாயகம் நடத்திய - ஐநா மனித உரிமைப் பேரவையும் ஈழத்தமிழர் நீதியும்: அடுத்தது என்ன? UNHRC 34 ஆவது கூட்டத்தொடர் குறித்த கலந்துரையாடல் - கூட்டத்திலும் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP, கவிஞர் காசி ஆனந்தன், தேவசகாயம் இ.ஆ.ப., இயக்குனர் வ. கௌதமன், தியாகு, பேராசிரியர் மணிவண்ணன், பேராசிரியர் சரசுவதி, டி.எஸ்.எஸ். மணி, அய்யநாதன்

குழப்பம் என்ன?

2015 ஐநா மனித உரிமைப் பேரவை தீர்மானத்தினை செயல்படுத்த இலங்கை அரசுக்கு மேலும் கால நீட்டிப்பு வழங்கக் கூடாது எனவும், இந்த விவகாரத்தை ஐநா பொதுச்சபைக்கு அனுப்ப வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை வைத்தனர். இது நியாயமான கருத்தே ஆகும்.

எனினும், ஐநா மனித உரிமைப் பேரவையில் இன்னொரு தீர்மானமே வரக்கூடாது என்பது போலவும், இந்த விடயத்தை ஒரேயடியாக ஐநா மனித உரிமைப் பேரவை கைக்கழுவ வேண்டும் என்பது போலவும் சிலர் பேசத்தொடங்கினர் (அதாவது, பொதுச்சபைக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்ட பின்னர், மனித உரிமைப் பேரவையில் வேலை இல்லை என்பதான தவறான புரிதல் உருவானது).

இதன் அடுத்தக்கட்டமாக, "இலங்கை மீது ஒரு தீர்மானத்தை முன் வைக்கப்போவதாக இங்கிலாந்து அரசு கூறுவதே தவறு" என்றும், அத்தகைய தீர்மானத்தை அந்த நாடு பின் வாங்க வேண்டும் என்றும் பேசினர். கடைசியில், "இன்னொரு ஐநா தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் தமிழினத் துரோகிகள்" என்கிற அளவுக்கு தவறான பிரச்சாரம் சென்றது.

'உண்மை என்ன?"

2015 ஆம் ஆண்டில் வெளியான ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலக விசாரணைக் குழுவின் அறிக்கை (OISL) மீதான சர்வதேச நடவடிக்கைகளை - நியூயார்க்கில் உள்ள ஐநா பொதுச்சபைக்கும், ஐநா பாதுகாப்பு அவைக்கும் - விரிவாக்க வேண்டும் என்பது சரியான வியூகம்தான். அதற்காக, ஜெனீவாவில் உள்ள ஐநா மனித உரிமைப் பேரவையில் இருந்து இதனை கைவிட வேண்டும் என்பது மிகத் தவறான வாதம் ஆகும்.

இப்போதைக்கு, ஜெனீவாவில் மட்டுமே இலங்கை விவகாரம் உயிர்ப்புடன் உள்ளது. அதுமட்டுமல்லாமல், மனித உரிமைகள் மற்றும் நிலைமாற்ற நீதி (transitional justice) விவகாரங்களில் உலகின் உச்சமான அமைப்பு இதுதான். இந்த அவையில் இலங்கை தொடர்ச்சியாக விவாதிக்கப்படுவதும், கண்காணிக்கப்படுவதும் மிக மிக மிக அவசியம் ஆகும். இதற்கு வரும் மார்ச் 23 ஆம் நாளன்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டே ஆக வேண்டும். அப்படி ஒரு தீர்மானம் வராமல் போய்விட்டால், இனி இலங்கையை கேள்வி கேட்பதற்கு ஒரு பன்னாட்டு அரங்கம் இல்லாமலேயே பொய்விடும்.

எனவே, 'தீர்மானத்தில் என்ன இருக்கப்போகிறது' என்பதுதான் தமிழர்களின் கோரிக்கையாக இருக்க வேண்டுமே தவிர, 'புதிய தீர்மானமே தேவையில்லை' என்பது அல்ல. மிகக் குறைந்த கோரிக்கையாக பார்த்தால் கூட, 2015 தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்யக் கூடாது என்பதும், பழைய தீர்மானம் உடனடியாகவும் முழுமையாகவும் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதும்தான் முக்கியமானதாகும்.

அதே நேரத்தில், இந்த விவகாரத்தை ஐநா பொதுச்சபைக்கு அனுப்ப வேண்டும் என்கிற தமிழர்களின் கோரிக்கைக்கு 47 உறுப்பு நாடுகளில் ஒரே ஒரு நாடு கூட இதுவரை ஆதரவு அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

"குழப்பம் தவிர்க்க வேண்டும்"

ஈழத்தமிழர் நீதிக்கான போராட்டத்தினை ஐநாவினை இலக்காக வைத்து நடத்தும் போது, பல தவறான கருத்துகள் உருவாக்கப்படுகின்றன.

குழப்பம் 1. போர்க்குற்றம் என்று சொல்லாதே!

போர்க்குற்றம், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகிய மூன்றுமே கொடூரமான குற்றங்கள்தான் என்கிற நிலையில் 'போர்க்குற்றம்' என்று சொல்லாதே என்று சிலர் முழங்கினர்.

குழப்பம் 2. அமெரிக்க தீர்மானம் அயோக்கிய தீர்மானம்! 

இலங்கையில் நடந்த குற்றங்கள் குறித்து ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலகம் விசாரணை நடத்த வேண்டும் என்கிற தீர்மானத்தை 2014-ல் அமெரிக்கா கொண்டு வந்தபோது - "அமெரிக்க தீர்மானம் அயோக்கிய தீர்மானம்" - என்கிற பிரச்சாரம் நடத்தப்பட்டது.
சென்னையில் அமெரிக்க நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆனால், அந்த தீர்மானத்தால் கிடைத்த விசாரணை அறிக்கைதான் (OISL Report 2015) இப்போது பன்னாட்டு அரங்கில் ஏற்கபட்ட ஒரே ஆயுதமாக உள்ளது.

2015-ல் தற்போதைய தீர்மானத்தினையும் சிலர் எதிர்த்தார்கள். அதனை தீயிட்டுக் கொளுத்தினார்கள். ஆனால், இன்னமும் அந்த ஒரே ஒரு தீர்மானம்தான் இந்த சிக்கலை சர்வதேச அரங்கில் நிலைநிறுத்தியுள்ளது.

குழப்பம் 3. நிலைமாற்ற நீதி தேவையில்லை!

பின்னர் 'நிலைமாற்ற நீதிப் பொறிமுறை' (transitional justice mechanisms) என்பதையும் சிலர் எதிர்த்தனர்.

அதாவது, சர்வதேசத்தின் பார்வையில் ஈழத்தமிழர் நீதிக்கான போராட்டத்தை எவையெல்லாம் நீடித்திருக்க செய்யுமோ - அவை எல்லாவற்றையுமே இல்லாமல் செய்யும் கோரிக்கைகள் அவ்வப்போது எழுவது வாடிக்கையாக உள்ளது (இவ்வாறான கோரிக்கைகளை முன் வைப்பவர்கள் - இதற்கான மாற்று எதையும் முன் வைப்பது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்)

குழப்பம் 4. புதிய தீர்மானம் தேவையில்லை!

அந்த பட்டியலில் ஒன்றாகத்தான் - தற்பொது நடைபெறும் ஐநா மனித உரிமைப் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் புதிதாக தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது.

"வட கொரிய முன்மாதிரி"

வட கொரிய விவகாரம் 2004 ஆம் ஆண்டிலிருந்து ஜெனீவா நிகழ்ச்சி நிரலில் உள்ளது. இந்தச் சிக்கலை 2014 ஆம் ஆண்டிலேயே ஐநா பொதுச்சபைக்கு அனுப்பும் தீர்மானத்தை ஐநா மனித உரிமைப் பேரவை நிறைவேற்றியது. ஆனால், அதன் பின்னரும் ஆண்டுதோரும் ஜெனீவாவில் வடகொரியா குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அந்த வரிசையில் 2016 ஆம் ஆண்டில், ஒரு சிறப்பு அலுவலகத்தை அமைத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. (அதாவது, வட கொரிய விவகாரத்தை ஐநா பொதுச்சபைக்கு கொண்டு போனதன் காரணமாக ஐநா மனித உரிமைப் பேரவை அதனைக் கைவிடவில்லை).

"என்ன செய்ய வேண்டும்?"

"ஐநா மனித உரிமைப் பேரவையின் தற்போதைய தீர்மானத்தின் காலத்தினை மேலும் நீட்டிக்க வேண்டும்" என்றும் "அதனை ஐநா மனித உரிமைகள் பேரவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்" நாடுகடந்த தமிழீழ அரசு ஏற்படுத்திய வல்லுநர் குழு  28.02.2017-ல் பரிந்துரை செய்துள்ளது வரவேற்கக் கூடியதாகும். (calls on the HRC to extend its mandate so as to review regularly the GSL’s compliance with HRC Resolution 30/1)

பொதுச்சபைக்கும், பாதுகாப்பு அவைக்கும் இலங்கையைக் கொண்டு செல்லும் கோரிக்கைகளை ஒருபக்கம் எழுப்பும் அதே வேளையில் - இப்போது உடனடியாக "ஐநா மனித உரிமைப் பேரவையின் 2015 ஆம் ஆண்டு தீர்மானத்தை எந்த வகையிலும் குறைக்காமல் மறு உறுதி செய்யும் வகையிலும், மேலும் வலுவாக்கும் வகையிலும், காலதாமதமின்றி செயலாக்கும் வகையிலும், சர்வதேசத்தை ஏமாற்றிவரும் இலங்கையை கண்டிக்கும் வகையிலும், ஒரு புதிய தீர்மானத்தை ஐநா மனித உரிமைப் பேரவையின் 34 ஆம் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும்.

கூடவே, ஐநா மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் செயலாக்கப்படுவதை ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் தொடர்ச்சியாக கண்காணித்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் மனித உரிமைப் பேரவையில் தெரிவிக்க வேண்டும். அதன் மீது விவாதித்து கூடுதல் முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதுவே உடனடித் தேவை ஆகும்.

திங்கள், அக்டோபர் 31, 2016

மாவீரன் பண்டார வன்னியன் 213 : வரலாற்று அடையாளம் பாதுகாக்கப்படுமா?

விடுதலைப் புலிகளின் வழிகட்டியாக, தமிழீழத்தின் வீர அடையாளமாக இருப்பது வன்னியர் ஆட்சியும் அதன் கடைசி மன்னன் பண்டார வன்னியனும் ஆகும். 213 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (அக்டோபர் 31) பண்டார வன்னியன் துரோகத்தால் தோற்கடிக்கப்பட்டான். ஈழத்தில் இன்று, வன்னிய ஆட்சியின் அடையாளங்களை அழிக்கும் சதிகள் நடந்துகொண்டிருக்கின்றன!

"பண்டார வன்னியன் வழியில் போரிடுகிறோம்" - பிரபாகரன்

முள்ளிவாய்க்கால் இறுதிகட்ட போரின் நாட்களில் தேசியத்தலைவர் பிரபாகரன் பின்வருமாறு கூறினார்:

"விடுதலைபோராட்டத்தில் ஒருவேளை நாங்கள் தோற்றுப்போகலாம். ஆனால் நாங்கள் விட்டுச்செல்லும் வாள், ‘கூர்மையானதாக’ விட்டுச்செல்லவேண்டும். ஒரு காலத்தில் பண்டாரவன்னியன் இந்த மண்ணின் விடுதலைக்காகப் போராடினான். அவன் காட்டிய வழியில் நாங்கள் போரிடுகின்றோம். எங்களால் முடியாவிட்டால் நாளை இன்னொரு சந்ததி வரும். அது எமது போராட்டத்தினைத் தொடர்ந்து கொண்டுசெல்லும்.” என்றார் பிரபாகரன்.

வன்னி: ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் அடங்காத சுதந்திர பூமி

தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவர்கள் ஈழத்து வன்னிய அரசர்கள். கி.பி ஆறாம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட அக்கபோதிமன்னன் காலத்திலேயே வன்னியர்கள் வன்னியை ஆண்டுள்ளனர் என சில ஆய்வுகள் கூறுகின்றனர். சோழர்கள் காலத்தில் வன்னியர்கள் ஈழத்துக்கு வந்ததாக யாழ்ப்பாண வைபவ மாலை கூறுகிறது. வன்னி பெருநிலத்தில் வன்னியர் ஆட்சி, 1803 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நீண்டிருந்தது.

அன்னியருக்குக் கட்டுப்படாமல் மிகநெடுங்காலம் வன்னிய ஆட்சி நீடித்ததால், அப்பகுதி அடங்காப்பற்று என்று அழைக்கப்பட்டது. போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என எல்லா அன்னியர்களையும் முறியடித்த மாவீரர்கள் வன்னியர்கள். (விடுதலைப் புலிகளின் ஈழப்போர் கடைசிவரை நீடித்திருந்ததும் வன்னியில்தான்).

1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது.

டச்சுக்காரர்கள் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும் ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தின் முற்பகுதியிலும் வன்னிராச்சியத்தை ஆண்ட மன்னன் பண்டாரவன்னியன். ஆயிரமாண்டு வன்னிய அரசப் பாரம்பரியத்தின் கடைசி மன்னர். இவரது முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன்.
டச்சுக்காரர்கள் காலத்திலும் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தும் மன்னார், திரிகோணமலை, வன்னிக்காடுகள் என வன்னியர்கள் இடைவிடா கொரில்லா போர் நடத்தி வந்தனர். அவர்களில் ஒளிவிடும் மாணிக்கமாய் வந்த மாவீரன்தான் பண்டார வன்னியன்.

1782-ல் வன்னியை கைப்பற்ற டச்சுக்காரர்கள் நடத்திய போர் பற்றி எழுதும் லூயி என்ற வரலாற்று ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: “டச்சுக்காரர்கள் எத்தனையோ நாடுகளில் போர் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் வன்னியர்களைப் போன்று இப்படி வீரத்துடன் போரிட்டவர்களை உலகில் எங்கும் அவர்கள் காணவில்லை”

வன்னிராச்சியத்தில் தோற்கடிக்கப்படாத மன்னாக திகழ்ந்த பண்டாரவன்னியன் காக்கை வன்னியனின் காட்டிக்கொடுப்பினால் ஆங்கிலேய தளபதி லெப். வொன் டெரிபோர்க்கினால், இதே நாளில் 31.10.1803 அன்று தோற்கடிக்கப்பட்டான்.

பண்டார வன்னியன் கொலை செய்யப்படவில்லை!

பண்டார வன்னியன் நினைவு நாள் "1803 ஆகஸ்ட் 25" என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். ஏனெனில், முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள். அப்போது பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி நடைபெற்று வந்தது. வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கினான். அத்தாக்குதலில் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றினான். அந்த நாள்தான் 1803 ஆகஸ்ட் 25. எனவே, பண்டார வன்னியனின் உச்சபட்சமான போர் வெற்றியே அவரது நினைவு நாளும் ஆகும்!
பண்டார வன்னியன் கொலைசெய்யப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் உறுதியாக இல்லை. பண்டாரவன்னியன் 1803 ஆம் ஆண்டில் தோற்கடிக்கப்பட்டதை வைத்தே, அவன் இறந்த நாள்  (அக்டோபர் 31)  என்று கணக்கிடுகின்றனர். ஆனால், 1810 ஆம் ஆண்டு வரை அவர் உயிரோடு இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், போரில் ஏற்பட்ட காயங்களின் விளைவாக அவர் 1811 ஆம் ஆண்டில் பனங்காமத்தில் இறந்திருப்பார் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அந்த வகையில், பண்டார வன்னியனின் வரலாறும் பிரபாகரனின் ஒன்றாக இருப்பது வியப்பானதாகும்!

அழிகப்படும் வன்னியின் வரலாற்று அடையாளம்

இலங்கை அரசு வன்னியர்களின் வரலாற்று இடங்களை முஸ்லிம்களுக்கு அளிக்கத்தொடங்கியிருக்கிறது. இது ஈழத்தின் வரலாற்றை சிதைக்கும் முயற்சி ஆகும்.

தமிழீழத்தில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தமிழர்களாக கருதப்படுவது இல்லை. விடுதலைப் போரின் போது 1990 ஆம் ஆண்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 1000 முஸ்லிம் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர். முஸ்லிம்களை வெளியேறும் நிலை ஏற்பட்டது தவறு என்று பிற்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒப்புக்கொண்டு, முஸ்லிம்களை மீண்டும் வருகை தருமாறு அழைத்தனர். பின்னர் போரினால் எல்லாம் சின்னபின்னம் ஆனது.
இப்போது, முஸ்லிம்கள் மீள் குடியேற்றம் நடக்கின்றன. ஆனால், கரைதுறைப்பற்று எனும் பிரிவில் மட்டும் 1032 குடும்பங்கள் தாங்கள் விட்டுச்சென்ற இடத்துக்கான ஆதாரங்களை அளித்ததன் அடிப்படையில் அவர்களது பழைய நிலம் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 1455 குடும்பங்கள் நிலமற்றவர்களாக அறிவிக்கப்பட்டு - அவர்களுக்கு புதிய நிலத்தை அளிக்கும் பணியை அரசாங்கம் செய்கிறது. இதற்கு மேலும் 448 குடும்பங்கள் புதிதாக நிலத்தைக் கோரியுள்ளன.

ஆக மொத்தத்தில், 1990 ஆம் ஆண்டில் 1000 குடும்பங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வெளியேறிய நிலையில் - இப்போது கரைதுறைப்பற்று என்கிற ஒரு பகுதியில் மட்டும் சுமார் 3000 குடும்பங்கள் உரிமை கோருகின்றனர். அவர்களில் சுமார் 2000 குடும்பங்கள் புதிதாக நிலம் கோருகிறார்கள். இதற்காக வன்னிக்காட்டை அழித்து, புதிய நிலத்தை அளிக்கிறது இலங்கை அரசு.

இவ்வாறு முஸ்லிம்களுக்கு இலவசமாக வழங்கப்படும் நிலங்களில் ஒரு பகுதி 'வன்னியன் மேடு' என்கிற இடம் ஆகும்! வன்னியர்கள் 'அடங்காபற்று முள்ளியவளை வன்னியர்கள் என்றுதான் அழைக்கப்பட்டனர். அவர்களது ஆதிக்கம் மிகுந்திருந்த பகுதிதான் இப்போது முஸ்லிம்களுக்கு அளிக்கப்படுகிறது.

வன்னியன் மேட்டு பகுதியில்தான் பண்டார வன்னியன் தனது படைகளை நிறுத்தியிருந்தார். இதே காட்டுப்பகுதிக்கு படையெடுத்து வந்த வொன் டெரிபோர்க் என்ற ஆங்கிலேய படைத்தளபதியை பண்டார வன்னியனின் தளபதி குலசேகரன் கைது செய்தார். தனது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட வொன் டெரிபோர்க்கை - பண்டார வன்னியன் மன்னித்து விடுதலை செய்த இடம்தான் வன்னியன் மேடு. பின்னாளில் அதே வொன் டெரிபோர்க் தான் பண்டார வன்னியனை தோற்கடித்தான்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க வன்னியன் மேடு பகுதியை, முஸ்லிம்களின் குடியேற்றப் பகுதியாக மாற்றி வருகிறது இலங்கை அரசு.

இந்த வரலாற்று அழிப்பு தடுக்கப்பட வேண்டும்.

சனி, அக்டோபர் 29, 2016

மாபெரும் வெற்றி: மனித உரிமைப் பேரவையில் இருந்து ரஷ்யா வெளியேற்றம்!

இலங்கை அரசுக்கு பன்னாட்டு அரங்கில் அதிதீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்த ரஷ்ய நாடு -ஐநா மனித உரிமைப் பேரவைக்கு நடந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை மீதான விவாதம் மீண்டும் 2017 மார்ச் மாதம் மனிதஉரிமைப் பேரவையில் வரவுள்ள நிலையில், ரஷ்யாவின் தோல்வி இலங்கை அரசுக்கு ஒரு பின்னடைவே ஆகும்.

47 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா மனித உரிமைப் பேரவைக்கு (UN Human Rights Council), 2017 ஆம் ஆண்டுக்காக 14 உறுப்பினர்கள் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டார்கள். ஐநா அவையில் வெள்ளிக்கிழமை (28.9.2016) நடந்த தேர்தலில் உலகின் அனைத்து நாடுகளும் ரகசிய வாக்கெடுப்பு முறையில் வாக்களித்தன. அதில் ரஷ்ய நாடு தோற்கடிக்கப்பட்டுள்ளது. 

உலகின் அனைத்து மனித உரிமை அமைப்புகளும் ரஷ்யாவுக்கு எதிரான பிரச்சாரம் செய்தன. சிரியா நாட்டில், நேரடியாக போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ள ரஷ்யா எவ்வாறு மனித உரிமைப் பேரவையில் உறுப்பினர் ஆகலாம்? என்கிற கேள்வியை அவை முன்வைத்தன.

எனினும், பன்னாட்டு அரசியலில் ரஷ்யாவுக்கு இருக்கும் பலத்தை வைத்து, அந்த நாடு வெற்றிபெரும் என்றே பெரும்பாலான ஊடகங்கள் கருத்து தெரிவித்தன. ஆனால், அனைத்து நம்பிக்கைகளையும் மீறி, ரஷ்யா தோற்கடிக்கப்பட்டுள்ளது.
ஐநாவில் ரஷ்ய அதிபர் புதின்
ஐநா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் ரஷ்யா, மனித உரிமைப் பேரவைக்கான தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போயிருப்பது சர்வதேச அளவில் அதிர்வலையை உண்டாக்கி இருக்கிறது.

மனித உரிமைப் பேரவை உறுப்பினர் பதவி என்பது மூன்று ஆண்டுகளுக்கான உறுப்பினர் தகுதி ஆகும். தொடர்ந்து இரண்டு முறை உறுப்பினராக இருந்த நாடுகள் மூன்றாவது தேர்தலில் போட்டியிட முடியாது. ஒரு ஆண்டு இடைவெளிவிட்டு மீண்டும் தேர்தலில் நிற்கலாம்.

அமெரிக்கா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் இந்த தேர்தலில் வெற்றிபெற்றுள்ளன. 2016 ஆம் ஆண்டில் உறுப்பினராக இல்லாத அமெரிக்கா, இந்த தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் 2017 ஆம் ஆண்டுமுதல் ஐநா மனித உரிமைப் பேரவையில் உறுப்பினராக சேர்கிறது. இந்தியா ஏற்கனவே, உறுப்பு நாடாக இருந்துவருகிறது.

புதன், செப்டம்பர் 21, 2016

ஈழத்தில் தொடரும் இனப்படுகொலை: ஐநாவில் தமிழர்களின் சிறப்புக் கூட்டம்

இலங்கை அரசு திருந்தி விட்டதாக ஐநா அவையில் நாடகமாடுகிறது. ஆனால், ஈழத்தில் தொடர்ந்து இனப்படுகொலையை அரங்கேற்றுகிறது. குறிப்பாக நிலத்தை பறித்தும் பண்பாட்டை அழித்தும் இன அழிப்பினை தொடர்கிறது மைத்ரிபால சிறிசேன அரசு.

இதனை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக்காட்டும் வகையில் - "இலங்கையில் இராணுவமயமாக்கலும் நில அபகரிப்பும்" (MILITARISATION AND LAND GRAB IN SRI LANKA) என்கிற சிறப்புக் கூட்டம் ஒன்றினை ஜெனீவா ஐநா மனித உரிமைப் பேரவையில் நாளை (22.09.2016) நடத்துகிறது பசுமைத் தாயகம் அமைப்பு.

தற்போது நடைபெற்று வரும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத்தொடரின் இணைக் கூட்டமாக இந்த நிகழ்வு ஜெனீவாவில் உள்ள ஐநா அரங்கில் நடக்கிறது.

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு, பிரித்தானிய தமிழர் பேரவை (British Tamils Forum - BTF), அமெரிக்க தமிழர் அரசியல் செயற்பேரவை (United States Tamil Political Action Council- USTPAC) ஆகிய அமைப்புகள் கூட்டாக இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
ஐநா மனித உரிமைகள் பேரவை (UNHRC)
அமெரிக்க ஓக்லாந்து நிறுவனத்தின் (The Oakland Institute, USA) அனுராதா மிட்டல், இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் Wes Streeting MP மற்றும் Paul Scully MP ஆகியோர் இக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளனர்.

அம்பலமாக்கப்படும் இலங்கை அரசின் பொய்கள்

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு பின்னர், தமிழர்களிடம் இராணுவம் பறித்த நிலத்தை திருப்பி அளித்து வருவதாக ஐநாவில் அறிக்கை வாசித்தது இலங்கை அரசு. ஆனால், மகிந்த ராஜபக்சே அரசு 70,000 ஏக்கர் நிலத்தை பறித்துக்கொண்ட நிலையில், இன்றைய நிலையிலும் 67,500 ஏக்கர் தமிழரின் நிலம் இராணுவத்திடம் இருக்கிறது.
தமிழர்களின் தாயகத்தில் புத்தமத கோவில்கள்
அதுமட்டுமல்லாமல், தமிழர்களின் தாயகம் முழுவதும் ஏராளமான புத்தர் சிலைகளையும் புத்தமத கோவில்களையும் அமைத்து வருகிறது இலங்கை அரசு. ஊருக்கு ஊர் இத்தகைய புத்தர் கோவில்கள் தமிழர் பகுதிகளில் தொடந்து அமைக்கப்படுகிறது.

தொடரும் இலங்கை அரசின் அக்கிரமங்கள் இக்கூட்டத்தின் மூலம் - ஐநா மனித உரிமைப் பேரவையில் எடுத்துவைக்கப்படும். இலங்கையில் தொடரும் இராணுவமயமாக்கல்,நில அபகரிப்பு, புத்தமத கோவில்கள் குறித்த ஆவணம் ஒன்றும் இக்கூட்டத்தில் வெளியிடப்பட உள்ளது. 

வியாழன், மார்ச் 31, 2016

விடுதலைப்புலிகள் பெண் போராளிகளை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தினர் - என்றவருக்கு திமுகவில் எம்.எல்.ஏ சீட்!

"விடுதலைப்புலிகள் மீது "பெண் போராளிகளை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தினர்" என்று அபாண்டமாக குற்றம் சாட்டியவருக்கு திமுக கூட்டணியில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் சீட் கொடுக்கப்பட்டுள்ளது!

இதுவரை விடுதலைப்புலிகள் மீது, 'பெண்களை கற்பழித்தார்கள் என்றோ, பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தினார்கள்' என்றோ சிங்கள பேரினவாதிகள் கூட குற்றம் சாட்டியதில்லை. 

ஆனால், பெண் புலிகளை ஆண்களின் இச்சைக்காகவே படைகளில் பயன்படுத்தினார்கள் என்று வெளிப்படையாக குற்றம் சுமத்தினார் சிவகாமி ஐஏஎஸ். புதியதலைமுறை டிவியில் பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அந்த சிவகாமிக்கு திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒரு இடம் அளிக்கப்பட்டுள்ளது.
"விடுதலைப்புலிகள் பெண் போராளிகளை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தினர்" அபாண்ட பேச்சு  https://youtu.be/lVpSJUF6ixQ
சிவகாமிக்கு ஒரு சீட்: கலைஞரின் வஞ்சம் தீர்க்கும் முயற்சி!

விடுதலைப் புலிகள் அமைப்பினர் எம்ஜிஆருடன் இணக்கமாக இருந்தனர் என்கிற ஒரே காரணத்திற்காக அவர்களை பழி தீர்க்க அலைந்தார் கலைஞர் என்று கூறப்படுகிறது. தனிப்பட்ட வன்மத்தின் காரணமாக ஈழ இனப்படுகொலையில் காங்கிரசுக் கட்சி ஈடுபட்ட போது; அதற்கு துணை போனார் கலைஞர் என்கிற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.

இத்தனைக்கு பிறகும் மனம் ஆறாத கலைஞர், இப்போது "விடுதலைப்புலிகள் பெண் போராளிகளை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தினர்" என்று சொன்ன சிவகாமி என்பவருக்கு திமுகவில் எம்.எல்.ஏ சீட் கொடுத்துள்ளார். (செய்தி: DMK gives seat to party led by ex-IAS officer http://goo.gl/L6wpgW  )

உன்னதமான இயக்கத்தின் மீது அபாண்டமான புகார்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்து பேட்டியெடுத்த பிரபல ஊடகவியலார் அனிதா பிரதாப் குறிப்பிட்டது 'தான் ஒரு இரவு முழுவதும் 20க்குமே மேற்பட்ட விடுதலை புலிகளுடன் தங்கியிருந்ததாகவும் ஒரு நொடிகூட தான் ஒரு பெண் என்ற அச்சமேற்படாதாவாறு அவர்கள் பார்த்துக்கொண்டார்கள்' என்றும் வியந்து போற்றிய ஒரு இயக்கம் பற்றி தான், எதிரியான சிங்களனே வைக்காத ஒரு குற்றச்சாட்டை சிவகாமி ஐஏஎஸ் வைத்துள்ளார்.

இன்று வரை பல நாடுகளின் ராணுவங்களில் பெண்கள் உதவியாளர்களாகவும், நர்ஸ், டாக்டர் போன்ற பணிகளையும் மட்டுமே செய்து வருகிறார்கள், ஆனால் புலிகள் இயக்கம் தான் பெண்களை போர்களத்திற்கு அனுப்பியது, மாலதி படையணி, சோதியா படையணி போன்ற அணிகள் ஆண் போராளிகளுக்கு இணையாக பல போர்களில் பங்கேற்றனர்.

ஈழப்போரின் கடைசி நாட்களான 2009 ஏப்ரல் மாதம் 1,2,3ம் நாட்களில் நடந்த போரில் புலிகளின் பெண்கள் அணி சிங்கள ராணுவத்துக்கு பேரழிவை ஏற்படுத்தியது என்று சிங்கள ராணுவதளபதிகளே குறிப்பிட்டனர். இப்படி போர்களத்தில் பங்கேற்று போராடிய ஒரு இயக்கத்தை பற்றி தான் சிவகாமி ஐஏஎஸ், 'பாலியல் இச்சை' எனும் கடும் குற்றச்சாட்டை வைத்துள்ளார். அவருக்கு திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒரு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழினத்தை இகழ்ந்த திமுகவை மன்னிக்கலாமா?

"தமிழை இகழ்ந்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்" என்றார் பாவேந்தர் பாரதிதாசன்

தமிழினத்தை பழித்தவருக்கு சட்டமன்ற தேர்தலில் இடம் கொடுத்த திமுகவை யார் தடுத்தாலும் விடக்கூடாது என உறுதி ஏற்பதே மானமுள்ள தமிழர்களின் கடமை ஆகும்.

திங்கள், பிப்ரவரி 15, 2016

திமுகவிடம் மண்டியிட்டு மானம் இழந்தும் வாய்க்கொழுப்பு அடங்காத இளங்கோவன்

முனிவர்கள் கோபத்தில் வாய் திறந்தால் சாபம் வரும்... சில அரசியல் கட்சித் தலைவர்கள் வாயைத் திறந்தால் கூவம் தான் வரும். அத்தகையத் தலைவர்களில் முதன்மையானவர் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன். வாய் மட்டும் இல்லை என்றால் நாய் தூக்கிச் சென்று விடும் என்று சிலரைப் பார்த்து வேடிக்கையாகக் கூறுவது உண்டு. ஆனால், இன்னும் சிலர் வாய் பேசுவதைப் பார்த்தால் நாய்கள் கூட திரும்பிப் பார்க்காது. அத்தகையவர்களிலும் இவருக்கு இடம் உண்டு.
இத்தகைய பெருமைகளுக்கு உரிய இளங்கோவனிடம் நேற்று செய்தியாளர்கள் ஒரு வினா எழுப்பினார். ‘‘பலம் இல்லாத கட்சிகள் தான் கூட்டணி அமைக்கும். பா.ம.க. பலம் உள்ள கட்சி. 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு கூறியிருக்கிறாரே? இதுபற்றிய உங்கள் கருத்து என்ன?’’ என்று கேட்டார். பா.ம.க.வின் நிலைப்பாடு பற்றிய மருத்துவர் அய்யாவின் கருத்துக்கு இளங்கோவன் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை. அது அவர்கள் கட்சியின் கருத்து என்று கூறி ஒதுங்கியிருக்கலாம்.

உண்மையாகவே தமிழக நலனில் அக்கறை இருந்திருந்தால், தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தனித்து போட்டியிடும் பா.ம.க.வின் நிலைப்பாட்டை பாராட்டியிருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல், ‘‘ரொம்ப சந்தோஷம்... அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுவதும் போட்டியிடட்டும்’’ என்று நக்கல் செய்திருக்கிறார். வாய்க்கொழுப்புக்காரர்களிடம் இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

ஆனால், இந்த இளங்கோவன் கடந்த காலங்களில் பேசிய பேச்சுக்கள் என்ன தெரியுமா? 

சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் பற்றி கலைஞர் ஏதோ கூற, அதற்கு பதிலளித்த இளங்கோவன், ‘‘எதையும் ஊதி ஊதிப் பெரிதாக்குவது தான் கலைஞரின் தொழில்’’ என்று அவரது குலத்தொழிலை இழுத்து கொச்சைப்படுத்தினார்.

2013 ஆம் ஆண்டில் தி.மு.க. & காங்கிரஸ் கூட்டணி உடைந்த போது,‘‘கூட்டணி கிடையாது என்ற, கருணாநிதியின் அறிவிப்பால், பெரிய சுமை நீங்கி விட்டதாகக் கருதுகிறோம்; அவர்களால், எங்களுக்கு ஏற்பட்ட கறை நீக்கப்பட்டதாக உணருகிறோம். மறுபடி சமரசம் கிடையாது. காங்கிரசுக்கு சுயமரியாதை இருக்கிறது. தி.மு.க., தான் எங்களுக்கு துரோகம் இழைத்து விட்டது. காங்கிரஸ் ஆதரவுடன் மைனாரிட்டி தி.மு.க., அரசு, ஐந்து ஆண்டு காலம் ஆட்சி நடத்தியது.  சி.பி.ஐ.,யை தவறாக பயன்படுத்தவில்லை. சி.பி.ஐ., என்பது தனி ஆளுமை நிறுவனம். காங்கிரசை குற்றம் சொல்வது, பா.ஜ.,வுக்கு ஒத்து ஊதுவது போல் உள்ளது. இந்த அழுக்கு மூட்டையை, முதுகில் சுமக்க, பா.ஜ., தயாராக இருக்காது. ஊழல் கறை படிந்த, தி.மு.க.,வை, பா.ஜ., சேர்ப்பது சந்தேகம் தான்’’ என்று இளங்கோவன் கூறினார். இப்போது அதே அழுக்கு மூட்டையான திமுகவைத் தான் கோபாலபுரத்துக்குச் சென்று தோளில் சுமந்து கொண்டிருக்கிறார் இவர்.
நடிகர் தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தில் ஆந்திர தாதா சுமனும், தமிழகத்திலிருந்து சென்று தாதா போல நடிக்கும் விவேக்கும் பேசிக் கொள்வது போல ஒரு டயலாக் வரும்.‘‘ ஹைதராபாத்  உன்னுது... செகந்திராபாத் என்னுது. குண்டூர் உன்னுது... நெல்லூர் என்னுது. கடப்பா உன்னுது... மடப்பா என்னுது. காக்கிநாடா உன்னுது... பாவாடை நாடா என்னுது. ஓ.கேன்னா டீலு. இல்லன்னா  பிரியாணி சாப்பிட்டு பெட்ரோல் கன்வேயன்ஸ் வாங்கிட்டு போய்க்கிட்டே இருப்பான் இந்த கேங் லீடர்’’ என்று வீர வசனம் பேசுவார் விவேக். இறுதியில் தன்நிலை உணர்ந்து ஆந்திர தாதாவின் கால்களை அமுக்கி விடுவார்.

கிட்டத்தட்ட அதே பாணியில் தான் இளங்கோவனும் பேசினார். ‘தமிழகத்தில் ஆட்சியில் பங்கு தந்தால் மட்டும் தான் திமுகவுடன் கூட்டணி அமைப்போம். திமுகவுக்கு முதலமைச்சர் பதவி என்றால் எங்களுக்கு துணை முதலமைச்சர் பதவி வேண்டும். அவர்களுக்கு பொதுப்பணித்துறை என்றால் எங்களுக்கு போக்குவரத்துத் துறை... அவர்களுக்கு உள்துறை என்றால் எங்களுக்கு உள்ளாட்சித் துறை. இதற்கு ஒப்புக்கொண்டால் திமுகவுடன் கூட்டணி.. இல்லாவிட்டால் தனித்து போட்டி’’ என்று  வீர வசனம் பேசினார் இளங்கோவன்.
ஆனால், நடிகர் விவேக் செய்வதைப் போலவே கலைஞரின் கால்களை அமுக்கி விட்டு  கூட்டணி ஆட்சியும் வேண்டாம்... ஒன்றும் வேண்டாம். நீங்க கொடுக்கும் சீட்டுகளைக் கொடுங்க வாங்கிக் கொள்கிறோம் என்று சரணாகதி அடைந்திருக்கிறார் இளங்கோவன். இரு மாதங்களுக்கு முன்பு வரை பெரியாரின் பேரனாக இருந்த இளங்கோவன் இப்போது ஓ.பி.எஸ் நண்பராக மாறி முழங்கால் வரை குனிந்து கலைஞருக்கு வணக்கம் வைக்கிறார்.

இவ்வளவு நாள் காமராஜர் ஆட்சி என்று பேசி வந்த இளங்கோவனும் அவரது கூட்டாளிகளும் இப்போது கலைஞர் ஆட்சி என்று முழங்குகிறார். ஏன் என்று கேட்டால் ‘‘குஷ்புவின் உருவத்தில் அன்னை இந்திராவை காண்கிறேன்" என்று கூறியதைப் போல கலைஞரின் வடிவில் காமராஜரை காண்பதாக கூறினாலும் கூறக்கூடும். 

எனவே, நமது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் இது போன்ற இழிபிறவிகளிடம் எல்லாம் வைத்துக் கொள்ளக்கூடாது. தொடரட்டும் இளங்கோவனின் உளறல்கள். அவற்றுக்கு சரியான பதிலடி தருவார்கள் தமிழ்நாட்டு வாக்காள பெருமக்கள்!