Pages

சனி, ஜூன் 17, 2017

ரஜினிக்கு திருமாவளவன் ஆதரவு: சாதி தான் காரணமா?


தந்தி தொலைக்காட்சி ரங்கராஜ் பாண்டே நடத்தும் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் "அடுத்தது ரஜினிதான்" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூறுவதாக செய்திகள் வருகின்றன.

தமிழ்நாட்டின் முதல்வராக தமிழ்நாட்டை சேர்ந்தவரே வரவேண்டும் என்கிற உரிமைக்குரலுக்கு எதிராக - மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒரு தலித் தமிழ்நாட்டின் முதல்வராக வரவேண்டும் என தெரிவிப்பதன் மூலம் - தனது சாதிப்பற்றை வெளிப்படுத்துகிறார் திருமாவளவன். தண்ணீரை விட இரத்தமே அடர்த்தியானது (blood is thicker than water) என்கிற வாக்கை உண்மையாக்கும் விதத்தில், மாநில உரிமையை விட தன் சாதிப்பற்றுதான் மேலானது என்பதை மெய்ப்பித்துள்ளார் திருமாவளவன்.

ரஜினி: தலித் தலைவர் 

அண்ணல் அம்பேத்கர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மகர் சமூகத்தில் பிறந்தவர். அதே மகர் சமூகத்தை சேர்ந்தவர்தான் நடிகர் ரஜினி காந்த் ஆகும். மகர் சமூகத்தவர் ஜாதவ், போஸ்லே, கெய்க்வாட் எனும் பல பட்டப்பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். அதில் கெய்க்வாட் பட்டப்பெயரை கொண்டவர் ரஜினி காந்த்.

உண்மையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தலித் இயக்கத்தில் பலர் கெய்க்வாட் எனும் பட்டப்பெயருடன் இருந்தனர். அவர்களில் - தாதாசாகிப் பாவுராவ் கெய்க்வாட் (தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பின் மும்பை மாகாணத் தலைவர். அம்பேத்கருடன் இணைந்து குடியரசு கட்சியை தோற்றுவித்தவர்), சாம்பாஜி துக்காராம் கெய்க்வாட் (மகர் பஞ்சாயத் சமிதி எனும் அமைப்பை தோற்றுவித்தவர்) - போன்றவர்கள் முதன்மையானவர்கள்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் பணியாற்றியவர்களின் அதே கெய்க்வாட் சமுதாயத்தில் பிறந்தவரான, சிவாஜி ராவ் கெய்க்வாட் எனும் இயற்பெயர் கொண்ட ரஜினி காந்த், இப்போது அவர் நடிக்கும் காலா திரைப்படத்தில் - அண்ணல் அம்பேத்கரின் மாபெரும் புரட்சியான 1956 ஆம் ஆண்டில், அவர் மராட்டிய மாநிலத்தில் பல்லாயிரக் கணக்கான தலித்துகளுடன் பௌத்த மதத்திற்கு மாறியதை குறிக்கும் வகையில் "MH BR 1956" (Maharashtra BR Ambedkar 1956) எனும் வாகன எண்ணை குறியீடாக பயன்படுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசிய அடையாளம் என்ன?

இந்தியாவில் எல்லோரும் இந்தியர்கள் தான் என்பது இந்திய தேசியவாதிகள் கூறும் அயோக்கியத்தனமான வாதம். நடைமுறையில் ஒரு மாநிலத்தை சேர்ந்தவர்கள் இன்னொரு மாநிலத்தில் கோலோச்ச முடியாது. ஆந்திராவிலோ, கேரளாவிலோ, கர்நாடக மாநிலத்திலோ - தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் முதல்வராவது கனவிலும் நடக்காது. ஆனால், தன்னுடைய தலித் இனத்தை சேர்ந்தவர் என்கிற ஒரே காரணத்தால் - ரஜினியை தமிழ்நாட்டின் முதல்வராக்க முயற்சிக்கிறார் திருமாவளவன்.

தமிழ்த் தேசிய அடையாளம் என்பது இன்னும் பிறக்காத குழந்தை. சிலர் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் மட்டுமே தமிழர்கள் என்கின்றனர். வேறு சிலர் குறிப்பிட்ட காலமாக (எடுத்துக்காட்டாக 1956 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்து) தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் மற்றும் அவர்களின் சந்ததியினர் மட்டுமே தமிழர்கள் என்கிறனர். இந்தக் கருத்துக்கள் விவாதத்திற்கு உரியவை. தமிழ்நாட்டை சேர்ந்தவராக ஒருவரை அடையாளப்படுத்த - சாதி, இனம், மதம், தாய்மொழி போன்ற எதுவுமே தடையாக இருக்கக் கூடாது என்பதுதான் நமது விருப்பம்.

அதே நேரத்தில், தமிழ்நாடு என்கிற நாட்டின் மீதும், தமிழக மக்கள் மீதும் சிறிதளவும் பற்றில்லாதவர் - தமிழக மக்களின் பணத்தை பிடுங்கி, கர்நாடக மாநிலத்தில் முதலீடு செய்திருப்பவர் - காவிரிக்காக கன்னடநடிகனை மாவீரன் வீரப்பனார் கடத்திய போது, வீரப்பனாரை அரக்கன் என கடுமையாக திட்டியவர் - தமிழ்நாட்டின் அடிப்படை அரசியல் சிக்கல்களில் கருத்து ஏதும் கொண்டிராதவரான ரஜினிகாந்த், தன்னை தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக காட்டிக்கொள்ள முயல்வது, தமிழக மக்களின் தன்மானத்துக்கு விடப்பட்டுள்ள சவால்.

சாதிப்பற்றின் காரணமாக மட்டுமே ரஜினியை தமிழகத்தின் முதல்வராக்கும் முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை: