Pages

செவ்வாய், ஜூன் 13, 2017

ஏமாளி மு.க. ஸ்டாலின்: டுபாக்கூர் கும்பலிடம் சிக்கிய தலைவர்கள்!

மக்களை ஏமாற்றுவதில் கை தேர்ந்தவர்கள் திராவிட அரசியல் தலைவர்கள். ஆனால், இந்த தலைவர்களையே ஏமாற்றும் மாபெரும் மோசடிகளும் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. இதற்கு முன்பு ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், மு.க. ஸ்டாலின் ஆகியோரை சில டுபாக்கூர் பேர்விழிகள் படுமோசமாக ஏமாற்றினர். இப்போதும் மு.க. ஸ்டாலின் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளார்.

ஸ்டாம்பிடம் ஏமாந்த கலைஞர் கருணாநிதி, கிறித்தவ மதபோதனை அமைப்பிடம் ஏமாந்த விஜயகாந்த், போலி ஐநா விருதிடம் ஏமாந்த ஜெயலலிதா, நடக்காத கூட்டத்திற்கு மறுப்பு எழுதிய மு.க. ஸ்டாலின் - இப்படிப்பட்ட தலைவர்களிடம் தான் தமிழக மக்களும் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்!

ஜெயலலிதா: 'தங்கத்தாரகை' விருது

2004 ஆம் ஆண்டில் ஜெயலலிதாவுக்கு தங்கத்தாரகை எனும் டுபாக்கூர் விருதை அளித்து ஏமாற்றினார்கள். அப்பொது, ஐநா சபையே விருது வழங்குவதாகக் கூறி, நாளிதழிகளில் அதிமுக அமைச்சர்கள் 100 பக்கங்களில் முழுபக்க விளம்பரம் கொடுத்தார்கள். அதை ஐநா விருதென்று அப்பொது ஜெயலலிதா ஏமாளித்தனமாக நம்பினார்.

உக்ரைன் நாட்டில் உள்ள சர்வதேச மனித உரிமைப் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பு ஜெயலலிதாவுக்கு தங்கத்தாரகை விருது வழங்குவதாகவும், அது ஐ.நா சபையின் அதிகாரப்பூர்வமான ஆலோசனை அமைப்பு என்றும் பீலா விட்டர்கள் (Golden Star of Honour and Dignity Award by the International Human Rights Defense Committee, Ukraine). ஆனால், அந்த அமைப்பு டுபாக்கூர் அமைப்பாகும். ஐநாவின் ஆலோசனை அமைப்புகளின் பட்டியலில் அப்படி ஒரு அமைப்பே இல்லை. (தமிழ்நாட்டின் பசுமைத் தாயகம் அமைப்புக் கூட ஐநா பட்டியலில் இருக்கிறது. ஆனால், ஜெயலலிதாவுக்கு தங்கத்தாரகை விருது வழங்கிய அமைப்பு இல்லவே இல்லை)

கருணாநிதி: ஆஸ்திரியா ஸ்டாம்பு

"தலைவர் கலைஞரின் தமிழ்ப் பணி - சமுதாயப் பணியைப் பாராட்டி "கலைஞர் 90" அஞ்சல் தலை. ஆஸ்திரிய நாடு ஜூன் 3 அன்று வெளியிட்டு கௌரவித்துள்ளது! உலகத் தமிழர்கள் மகிழ்ச்சி" என 5.6.2013 அன்று முரசொலி செய்தி வெளியிட்டது. "என்னுடைய தமிழ்ப் பணி - சமுதாயப் பணியைப் பாராட்டி ஆஸ்திரிய நாடு ஜூன் 3 அன்று வெளியிட்ட "கலைஞர் 90’’ அஞ்சல் தலையை பெற்றபோது" என்று 21.7.2013 அன்று இதுகுறித்த ஒரு படத்தையும் கருணாநிதி வெளியிட்டார்.


ஆஸ்திரியாவில் நமக்குப் பிடித்தவர்களின் படத்துடன் தபால் தலை வெளியிட அனுமதி உண்டு. அந்தவகையில் ஆஸ்திரிய தபால் துறைக்கு சிறப்புக் கட்டணம் செலுத்தி நமக்கு பிடித்தவர்களின் முகங்களை தபால் தலையாக வெளியிடலாம். இது ஒரு மிகச் சாதாரணமான காரியம் ஆகும்.

ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் துறையிடம் பணம் செலுத்தி நாம் எந்த புகைப்படத்தை வேண்டுமானாலும் அஞ்சல் தலையாக வெளியிட முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தை, பூனை, நாய் அல்லது ஒரு கார்ட்டூன் போன்ற எதை வேண்டுமானாலும் வெளியிட முடியும். இதற்கு சுமார் 222 யூரோ பணம் கட்டினால் போதும். அப்படி ஒரு ஸ்டாம்பினை வாங்கிக் கொடுத்து யாரோ சிலர் கலைஞர் கருணாநிதியை நன்றாக ஏமாற்றினார்கள்.

விஜயகாந்த்: டாக்டர் பட்டம்

"அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தின் ஐ.ஐ.சி.எம் பல்கலைக்கழகம் வழங்கும் டாக்டர் பட்டம்" என்று 3.12.2010 அன்று பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக தேமுதிகவினர் விளம்பரம் செய்திருந்தனர். ஆனால், இணையத்தின் மூலம் கிறித்தவ மதத்தை பரப்புவதற்கான ஒரு அமைப்பான "பன்னாட்டு கிறித்தவ தேவாலய மேலாண்மை நிறுவனம் - ஐ.ஐ.சி.எம்" (International Institute of Church Management Inc.) விஜயகாந்த்திற்கு டாக்டர் பட்டம் அளித்தது.
பைபிள் படிப்பு, தேவாலய நிருவாகம், கிறித்துவ தலைமைத்துவம், கிறித்துவ இறைப்பணி இதிலெல்லாம் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு இந்த அமைப்பினர் டாக்டர் பட்டம் தருகின்றனர். இப்படி முழுக்க முழுக்க மத பிரச்சாரம் செய்வதற்கான ஒரு அமைப்பிடம் தான் விஜயகாந்த் டாக்டர் பட்டம் பெற்றார்.

அமெரிக்காவில் ஐ.ஐ.சி.எம் என்பது பல்கலைக் கழகமாகவோ, கல்வி அமைப்பாகவோ பதிவுசெய்யப்படவும் இல்லை, இயங்கவும் இல்லை. சென்னை நகரில்தான் அது ஒரு 'கல்வி அறக்கட்டளை' (Educational Trust) என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடவே, டாக்டர் பட்டம் பெற வேண்டுமானால், அதற்கு செலுத்த வேண்டிய ரூ. 1000 வாழ்நாள் உறுப்பினர் கட்டணத்தை - ஐ.ஐ.சி.எம் கல்வி அறக்கட்டளை, 240 ரூபி டவர், வேளச்சேரி முதன்மைச் சாலை, சேலையூர், சென்னை - 73 எனும் முகவரிக்கு அனுப்பக் கூறியுள்ளனர். ஆக, இந்திய கிறித்துவ கல்வி அறக்கட்டளை ஒன்றிடம் பட்டம் "வாங்கி" - அதனை 'அமெரிக்க பல்கலைக்கழகத்திடம் வாங்கியதாக' பெருமை பேசினர் தேமுதிகவினர்.

மு.க. ஸ்டாலின்: கென்டகி கர்னல் 

அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் பொதுச்சேவைக்காக பணம் திரட்டுவதற்காக கென்டகி கர்னல் எனும் விருதை வைத்துள்ளார்கள். இந்த அமைப்புக்கு நிதி உதவி அளிப்பவர்களுக்கு கென்டகி கர்னல் எனும் விருதினை வழங்குவார்கள். இப்படி, மு.க. ஸ்டாலின் பெயரில் பணம் கட்டி, விருது வாங்கினர் திமுகவினர். இதை வைத்து தமிழ்நாட்டில் பக்கம் பக்கமாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர், பாராட்டு விழாக்களை நடத்தினர். இப்போதும் கூட கென்டகி கர்னலே என்று ஸ்டாலினை அழைக்கின்றனர் உடன் பிறப்புகள்!

மு.க. ஸ்டாலின்: ஐநா அவை மனித உரிமைகள் பேரவையில் கூட்டம்

தற்பொழுது ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் விவகாரம் குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை. இப்படி இல்லவே இல்லாத ஒரு கூட்டத்தில் 'தான் கலந்துகொள்ள இயலவில்லை' என்று ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு மு.க. ஸ்டாலின் 'காமெடி' கடிதம் எழுதினார்.
"தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் பங்கேற்று ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனித உரிமைகள் குறித்து உரையாற்றுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். என்றாலும், தமிழகத்தில் உள்ள சட்டமன்ற அலுவல்கள் காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை" - என்று ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் துணை ஆணையாளருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதாக ஊடகங்கள் பெரிதாக செய்தி வெளியிட்டன.

நடக்காத கூட்டத்திற்கே மறுப்பு எழுதும் அளவுக்கு யாரோ சிலரால் படு கேவலாமாக ஏமாற்றப்பட்டுள்ளார் மு.க. ஸ்டாலின்.

ஏமாளி மக்களுக்கு ஏமாளி தலைவர்கள்

ஸ்டாம்பிடம் ஏமாந்த கலைஞர் கருணாநிதி, கிறித்தவ மதபோதனை அமைப்பிடம் ஏமாந்த விஜயகாந்த், போலி ஐநா விருதிடம் ஏமாந்த ஜெயலலிதா, நடக்காத கூட்டத்திற்கு மறுப்பு எழுதிய மு.க. ஸ்டாலின் - இப்படிப்பட்ட தலைவர்களிடம் தான் தமிழக மக்களும் 200 ரூபாய்க்கு வாக்குகளை விற்று ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்!

கருத்துகள் இல்லை: