Pages

பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, டிசம்பர் 02, 2016

தமிழர்களின் மார்கழி மாதமும் - தாய்லாந்தின் மாபெரும் ஊஞ்சலும்!

தாய்லாந்து நாட்டில் புதிய மன்னர் முடிசூடவுள்ளார். தமிழ்நாட்டில் பல்லவர்களும் சோழர்களும் முடிசூடிய வழக்கத்தை பின்பற்றிதான் தாய்லாந்து நாட்டின் மன்னர்களும் முடிசூடிக்கொள்கின்றனர். குறிப்பாக, சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிச்சாவரம் மன்னர் பரம்பரையினருக்கு முடிசூடும் முறையில் தாய்லாந்திலும் மன்னர் முடிசூடும் விழா நடக்கிறது.

(இதுகுறித்து "தாய்லாந்தில் புதிய மன்னரும் - தமிழர்களின் வரலாற்று பெருமையும்!" எனும் பதிவில் விரிவாகக் காண்க)

தமிழ்நாட்டின் கோவில்களில் மார்கழி மாதத்தில் திருவெம்பாவை, திருப்பாவை பாடல்கள் பாடப்படுகின்றன. மார்கழி ஊஞ்சல் உற்சவங்கள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டின் பண்பாட்டை பின்பற்றி, தாய்லாந்து நாட்டிலும் மார்கழி மாதத்தில் திருவெம்பாவை பாடும் நிகழ்ச்சியும் மார்கழி ஊஞ்சல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதுகுறித்து காண்போம்:

தமிழர்களின் மார்கழி மாதம்

மார்கழி மாதம் தமிழகப் பண்பாட்டில் இணைந்திருக்கும் ஒரு முதன்மை மாதம் ஆகும். பாவை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, பொங்கலை வரவேற்கும் விதமாக வாசலில் பெண்கள் கோலம் போட்டு பூவைத்தல் என பலவாறாக மார்கழி மாதம் கொண்டாடப்படுகிறது.

ஆண்டாளின் திருப்பாவை மார்கழி நீராடலைக் காட்டுகிறது. சங்க இலக்கியங்கள் தைநீராடலை குறிப்பிடுகின்றன. 'மார்கழி திங்கள் மதிநிறை நன்னாளில்' தொடங்கி தைப்பூசம் முழுமதி நாள் வரை தொடரும் விழாக்காலம் தமிழர் பண்பாட்டில் இருக்கிறது! இதனோடு இளம்பெண்கள் கொண்டாடும் சிறுவீட்டு பொங்கலும் இருக்கிறது.

திருவெம்பாவை நோன்பு என்பது மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன் தொடங்குகிறது. பெண்கள் அதிகாலையில் எழுந்து நீராடி சிவன் கோயிலுக்கு சென்று நடராஜரை வழிபடுவதும், திருவெம்பாவை பாடல்களை பாடுவதும் வழக்கம்.

'சிதம்பரத்தில் நடராஜப்பெருமான் மார்கழி திருவாதிரை நாளில்தான் பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாத முனிவருக்கும் காட்சி தந்து நடனம் ஆடிக் காண்பித்தார். இதே நாளில் தான், மாணிக்கவாசகரின் திருவெம்பாவை நிறைவுற்று அவர் ஈசனை தரிசித்தார்' - என்பது நம்பிக்கை.

மார்கழி மாதத்தில் தமிழ்நாட்டின் சிவாலயங்களிலும் அதிகாலையில் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை இசைக்கப்படுகின்றது. பல ஆலயங்களில் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி பத்து நாள் திருவெம்பாவை விழா நடைபெறுகின்றது. சிதம்பரம் நகரில் மார்கழி மாதத்தில் நடராஜருக்கு முன்னால் திருவெம்பாவை எழுதிய மாணிக்கவாசகர் நின்று பாடும் நிகழ்ச்சி பத்து நாட்கள் நடக்கின்றன.

பல ஆலயங்களில் மார்கழி ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது. இந்த விழாக்களில் மாணிக்கவாசர் எழுதிய "திருப்பொன் ஊசல் பதிகம்" பாடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் திருவெம்பாவை விழாவில் கபாலீஸ்வரரரும், கற்பகாம்பாளும் பொன்னூஞ்சல் ஆடும் திருவிழா நடக்கிறது. சிதம்பரத்தில் மார்கழி தரிசன விழாவின் போது திருவாபரண அலங்கார ஊஞ்சல் விழா நடக்கிறது.
அம்மன் ஊஞ்சல் விழா
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், காஞ்சிபுர ஏகாம்பரேஸ்வரர் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி ஆலயம், கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயம் உள்ளிட்ட இடங்களில் மார்கழி மாத ஊஞ்சல் விழா நடக்கிறது. வைணவ ஆலயங்களிலும் இந்த விழாக்கள் நடக்கின்றன். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நதியில் ஆண்டாள், ரங்க மன்னருடன் ஊஞ்சலில் காட்சிதரும் நிகழ்ச்சி நடக்கிறது.

தாய்லாந்தில் திருவெம்பாவையும் ஊஞ்சலும்

தாய்லாந்து நாட்டில் மார்கழி மாதத்தில் பத்து நாட்கள் திருவெம்பாவை, திருப்பாவை விழா நடத்தப்படுகிறது. தாய்லாந்து மன்னர் குடும்பத்தின் 12 பாரம்பரிய விழாக்களில் திருப்பாவை, திருவெம்பாவை ஊஞ்சல் நிகழ்ச்சியும் ஒன்றாகும்.

இந்த நாட்களில் சிவபெருமானும் விஷ்ணுவும் பூமிக்கு வருவதாகவும், அவர்கள் ஊஞ்சலில் ஆடுவதாகவும் கருதி விழா நடத்தப்படுகிறது. அப்போது திருவெம்பாவை பாடல்கள் பாடப்படுகின்றன. முதலில் தமிழ் - கிரந்த எழுத்துகளில் எழுதப்பட்டிருந்த இப்பாடல்கள், தற்போது தாய்லாந்து மொழி எழுத்துகளின் வழியாக பாடப்படுகிறது.

மிகப்பெரிய ஊஞ்சலில் சிவனாக வேடமிட்டவர்கள் அமர்ந்து ஆடும் வகையில் தாய்லாந்தின் பல பகுதிகளிலும் இந்த விழா 1932 ஆம் ஆண்டுவரை கொண்டாடப்பட்டது. ஆனால், இதனால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் பெரிய ஊஞ்சலில் ஆபத்தாக ஆடும் வழக்கம் தடைசெய்யப்பட்டது. பாங்காக் நகரின் கோவிலுக்குள் தற்போது இந்த விழா நடத்தப்படுகிறது.
ஊஞ்சல் திருவிழா 1919 ஆம் ஆண்டு
உண்மையில், இந்த விழா தாய்லாந்து நாட்டின் எல்லா புராதான நகரங்களிலும் நடந்துள்ளது. அயோத்யா, சுக்கோத்தாய், சவாங்லோக், பிட்சானுலோக், நகோர்ன்-சிரிதமராஜ் என்கிற பழங்கால நகரங்களில் கி.பி. 1300 ஆம் ஆண்டுகளில் இருந்து திருவெம்பாவை, திருப்பாவை ஊஞ்சல் விழா நடந்ததற்கான ஆதராங்கள் உள்ளன.

கி.பி. 1784 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட, பழங்கால மாபெரும் ஊஞ்சல் இன்னமும் பாங்காக் நகரில் இருக்கிறது. பாங்காக் நகரின் ஒரு பாரம்பரிய அடையாளச் சின்னமாக இப்போதும் திருப்பாவை, திருவெம்பாவை ஊஞ்சல் காட்சியளிக்கிறது.

தொடரும் பண்பாடு

மார்கழியும் பாவை நோன்பும் தமிழர் பண்பாட்டில் நெடுங்காலமாக நீடித்து வருகிறது. சைவ மதத்தில் திருவெம்பாவையாகவும் வைணவத்தில் திருப்பாவையாகவும் ஊஞ்சல் திருவிழாவாகவும் மாற்றமடைந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழிசை விழாவும் கர்நாடக சங்கீத விழாக்களும் நடத்தப்படும் மாதமாக மார்கழி இருக்கிறது.

தமிழர்கள் எங்கு சென்றாலும், பண்பாட்டையும் கொண்டு சென்றார்கள் என்பதற்கான அடையாளமாக தாய்லாந்தின் திருவெம்பாவை - திருப்பாவை விழா காட்சியளிக்கிறது. சிதம்பரம் கோவிலின் சோழ மன்னர் முடிசூடலை பின்பற்றும் தாய்லாந்து மன்னர்கள், அதே சிதம்பரம் கோவில் உள்ளிட்ட இடங்களில் நடக்கும் மார்கழி திருவெம்பாவை நிகழ்ச்சியையும் கொண்டாடுவது வியப்பளிக்கும் ஒற்றுமை ஆகும்.
பாங்காக் நகரின் மாபெரும் ஊஞ்சல் 1784 ஆம் ஆண்டு தாய்லாந்து மன்னர் முதலாம் இராமரால் அமைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் ஒன்பதாம் இராமரால் புதிதாக மாற்றப்பட்டது. இதன் உயரம் 21.15 மீட்டர் ஆகும்.

தொடர்புடைய சுட்டி:

தாய்லாந்தில் புதிய மன்னரும் - தமிழர்களின் வரலாற்று பெருமையும்!

ஆதாரம்:

1. Siamese state ceremonies - their history and function, by Horace Geoffrey Quaritch Wales (1931)

2. Some Aspects of Asian History and Culture, by Upendra Thakur, (1986) 

3. A comparative study of Tiruvempavai: Tradition in Thailand and Tamil Nadu in Historical and musical contexts, by Pannipa Kaveetanathum (1995)

4. God & King, the Devarāja Cult in South Asian Art and Architecture. by Arputha Rani Sengupta, (2001)

புதன், நவம்பர் 30, 2016

தாய்லாந்தில் புதிய மன்னரும் - தமிழர்களின் வரலாற்று பெருமையும்!

தாய்லாந்து நாட்டில் எழுபது ஆண்டுகாலம் மன்னராக வீற்றிருந்த பூமிபால் அதுல்யதேஜ் கடந்த மாதம் இயற்கை எய்தினார். புதிதாக இளவரசர் மஹா வஜ்ர அலங்காரன் மன்னராக முடிசூடவுள்ளார். இந்த நிகழ்வுக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

மன்னராட்சி நடக்கும் தாய்லாந்து நாட்டில் அரசர்கள் இறைவனின் அவதாரமாகக் கருதப்படுகின்றனர். சிவன் மற்றும் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதி அரசனுக்கு முடிசூட்டும் வழக்கம் அங்கு உள்ளது. இந்த பாரம்பரியம் தமிழ்நாட்டின் பல்லவர்கள் மரபில் இருந்து உருவானதாகும். சோழ மன்னர்கள் இதனை பின்பற்றினர். இப்போதும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிச்சாவரம் மன்னர் பரம்பரையினருக்கு முடிசூடும் இந்த நடைமுறை உள்ளது.

தமிழ்நாட்டின் முடிசூடும் வழக்கத்தை பின்பற்றிதான் தாய்லாந்து நாட்டின் மன்னர்களும் முடிசூடிக்கொள்கின்றனர் என்பதற்கான ஆதாரங்கள் இப்போதும் உள்ளன. அதுகுறித்து காண்போம்:

தாய்லாந்தில் மன்னர் ஆட்சி

ஆசிய பகுதியில் தொடர்ந்து மன்னராட்சி நடைபெற்றுவரும் நாடு தாய்லாந்து ஆகும். அங்கு எழுபது ஆண்டுகாலம் மன்னராக இருந்த மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் கடந்த அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி காலமானார். அவரையடுத்து, இளவரசர் மஹா வஜ்ர அலங்காரன் தாய்லாந்தின் புதிய அரசராக பதவியேற்கும் நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றம் நேற்று (29.11.2016) ஒப்புதல் அளித்ததுள்ளது. நாடாளுமன்றத் தலைவர் அடுத்த சில நாட்களில் இளவரசர் மஹா வஜ்ர அலங்காரனை சந்தித்து, அரியணையேற முறைப்படி கேட்டுக் கொள்வார்
அரசர் பூமிபால் அதுல்யதேஜுடன்  தாய்லாந்து பிரதமர் சந்திப்பு

தாய்லாந்து மக்களுக்கு மன்னனே இறைவன். புத்தமதத்துக்கு மாறினாலும், அங்கு பழங்கால தென்னிந்திய பண்பாடு நீடிக்கிறது. பிரதமர், இராணுவ தளபதி, நீதிபதிகள் என்று எல்லோரும் மன்னருக்கு முன்பாக மண்டியிட்டுதான் பேசுவார்கள். எல்லா அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களிலும் மன்னர் மற்றும் மகாராணியின் புகைப்படங்கள் இருக்கும். காலையில் அதனை வணங்கிவிட்டுதான் பணிகளை தொடங்குகிறார்கள்.

தினமும் மாலை 6 மணிக்கு மன்னரை வாழ்த்தும் பாடல் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் ஒலிக்கும். அப்போது போக்குவரத்து நிறுத்தப்பட்டு, எல்லா மக்களும் தமது வேலைகளை நிறுத்தி, எழுந்து நின்று மன்னரை வாழ்த்தி பாடுகிறார்கள். மன்னரை விமர்சிப்பது தாய்லாந்து நாட்டில் தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

தாய்லாந்து மன்னரும் தமிழும்

தாய்லாந்து நாட்டின் முதன்மை இதிகாசம் 'ராமாகியான்'. இது தமிழ் கம்ப ராமாயணத்தின் தாய்லாந்து வடிவம் ஆகும். அந்நாட்டின் முன்னாள் தலைநகரம் 'அயோத்தியா'. இப்போதைய தலைநகர் பாங்காக்கின் உண்மை பெயர் 'குரங்கு தீபம்'. அங்கு முடிசூடிக்கொள்ளும் மன்னர்கள் எல்லோரும் தம்மை ராமன் என்றே கூறிக்கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக, ஒரு பழங்கால மன்னனின் பெயர் 'ஸ்ரீ சூரியவம்ச ராமன் மாகா தர்ம ராஜாதிராஜன்'.

இப்போதைய மன்னர் வம்சம் 1782 ஆம் ஆண்டில் தொடங்கிய சாக்ரி வம்சம் ஆகும். இதன் முதல் மன்னர் முதலாம் ராமன் (Rama I) என்று அழைக்கப்பட்டார். மறைந்த பூமிபால் அதுல்யதேஜ் ஒன்பதாம் ராமன் (Rama IX) ஆகும். அடுத்து முடிசூடவுள்ள மஹா வஜ்ர அலங்காரன் பத்தாம் ராமன் (Rama X) என்று அழைக்கப்படுவார்.

முடிசூடலும் தமிழும்

தாய்லாந்து மன்னரின் முடிசூடல் நிகழ்ச்சி, தமிழ்நாட்டில் பல்லவர்கள் மற்றும் சோழ மன்னர்களின் முடிசூட்டல் நிகழ்வினை முன்மாதிரியாகக் கொண்டு நடப்பதாகக் கூறப்படுகிறது.
மன்னர் முடிசூடலுக்காக நடராஜர் சிலை முன்பு ஹோமம். 1925 ஏழாவது ராமன் முடிசூடல்

சாதாரண இளவரசனை இறைவனின் அவதாரமாக மாற்றும் வகையில், நடராஜர் சிலைக்கு முன்பாக ஹோமம் வளர்த்து, மந்திரங்கள் ஓதி, ஐந்து ஆறுகளில் இருந்து கொண்டுவரப்படும் புனித நீரால் இளவரசனுக்கு மகா அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னார் அவர் ஊர்வலமாக அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். முடிசூட்டு விழாவில் காதில் திருவெம்பாவை பாடல்களும் திருப்பாவை பாடல்களும் ஓதப்படுகிறது.

தாய்லாந்து அரசரின் அரண்மணையில் இந்த பாடல்கள் பழங்கால தமிழ் கிரந்த எழுத்துகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளன. இந்த தமிழ் மந்திரங்கள் தேவாரம், திருவாசகம், திருப்பாவை பாடல்களாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக;

"தோடுடைய செவியன் விடையேறி யோர் தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனை நாட்பணிந்தேத்தவருள் செய்த
பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மான் இவனன்றே" 

- எனும் சம்பந்தர் தேவாரப் பாடல்களும்,

"பித்தா பிறை சூடி பெருமானே அருளாளாய்
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணெய் நல்லூரருட்துறையுள் 
அத்தாவுனக்காளாயினி அல்லேன் எனலாமே"

- எனும் சுந்தரர் தேவாரப் பாடல்களும் பாடப்படுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளன.
1950 ஆம் ஆண்டில் முடிசூடலின் போது புத்தர் கோவிலில் இறைவனுக்கு முன்பாக அமர வைக்கப்பட்ட அரசர் பூமிபால் அதுல்யதேஜ் (சிதம்பரம் கோவில் முடிசூடலிலும் நடராஜருக்கு முன்பாக மன்னர் அமரவைக்கப்படுகிறார்)

அதாவது, தமிழ் மன்னர்கள் சிதம்பரம் கோவிலில் முடிசூட்டிக்கொண்ட முறைக்கு இணையாக, தாய்லாந்து மன்னர்களும் முடிசூடிக்கொள்கின்றனர். அதுவும் தேவாரம், திருவாசம், திருவெம்பாவை பாடல்கள் ஒலிக்க - அதன் பொருளோ, மொழியோ தெரியாமலேயே - தாய்லாந்து மன்னர்களின் முடிசூட்டு விழா நடக்கிறது.

தேவாரம், திருவாசம், திருவெம்பாவை பாடல்கள் காதில் விழுந்த பின்னரே, மனிதராக இருக்கும் மன்னர், இறைவனாக அவதாரமெடுக்கிறார் என்பது தாய்லாந்து நாட்டின் நம்பிக்கை ஆகும்.

திருவெம்பாவை - திருப்பாவை விழா

முடிசூடலின் போது மட்டுமின்றி, மற்றுமொரு திருவிழாவிலும் இப்பாடல்கள் ஒலிக்கின்றன. திருவெம்பாவை - திருப்பாவை திருவிழா என்பது சிவபெருமானையும் விஷ்ணுவையும் தாய்லாந்துக்கு அழைத்துவந்து ஊஞ்சலில் வைத்து ஆட்டும் திருவிழா ஆகும்.
 பாங்காக்: திருவெம்பாவை - திருப்பாவை ஊஞ்சல்

ஜனவரி மாதத்தில் 10 நாட்கள் நடத்தப்படும் இந்த திருவிழாவுக்காக, ஒரு மாபெரும் ஊஞ்சல் பாங்காக் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. அது அந்த நாட்டின் ஒரு பாரம்பரிய சின்னமாகவும் விளங்குகிறது.

கண்டுகொள்ளாத தமிழகம்

உலகின் எல்லா நாடுகளும் தமது பண்பாட்டு பாரம்பரிய தொடர்புகளை போற்றுகின்றன. ஆனால், தமிழ்நாட்டின் திராவிட ஆட்சியாளர்கள் இதுபோன்ற தமிழ் பண்பாட்டு சிறப்புகளை தேடுவதோ, அடையாளம் காண்பதோ, கொண்டாடுவதோ இல்லை என்பது வேதனையான விடயம் ஆகும்.

ஆதாரம்:

1. Siamese state ceremonies, by Horace Geoffrey Quaritch Wales, 1931

2. Some Aspects of Asian History and Culture, by Upendra Thakur, 1986 

3. God & King, the Devarāja Cult in South Asian Art and Architecture. by Arputha Rani Sengupta, 2001

செவ்வாய், செப்டம்பர் 27, 2016

பாரிஸ் நகரின் சாலையில் கார்களுக்கு தடை!

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரின் பிரதான சீன் (Seine) ஆற்றின் ஓரத்தில் இருக்கும் முதன்மையான சாலையில் கார்களுக்கு நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மூன்றே கால் கிலோமீட்டர் தொலைவுள்ள இந்த சாலையில் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்கு 2700 கார்கள் ஓடுகின்றன. பரபரப்பான இந்த சாலையில் கார்களுக்கு தடை விதிப்பதாகவும், இனி அந்த சாலை முழுவதும் நடைபாதையாக மட்டுமே இருக்கும் என்றும் பாரிஸ் நகரசபை நேற்று (26.09.2016) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இப்போது இருக்கும் சீன் ஆற்று சாலை
இனிமேல் வர இருக்கும் மாற்றம் குறித்த கற்பனைக் காட்சி

கார் பயன்படுத்துவோர் இந்த தடைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் கூட, மக்களின் உடல்நலம் கருதி கார்களுக்கு தடை விதிப்பதாக நகர மேயர் தெரிவித்துள்ளார். இந்த புதிய தீர்மானத்தின் மூலம் - இனி சீன் ஆற்றின் இரண்டு கரைகளும், மக்கள் நடப்பதற்கும், பொழுது போக்குவதற்கும் மட்டுமே பயன்படும்.

கார்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். பேருந்து உள்ளிட்ட பொதுப்போக்குவரத்தையும் நடைபாதைகளையும் அதிகமாக்க வேண்டும். இது மட்டும்தான் போக்குவரத்து நெரிசலுக்கும், மாசுபாட்டுக்கும் தீர்வாகும் - என்பதை உலகின் முன்னணி நகரங்கள் உணர்ந்துவிட்டதன் வெளிப்பாடே, பாரிஸ் நகரின் இந்த மாற்றம் ஆகும்.

இதுபோன்ற நல்ல திட்டங்களை சென்னை எப்போது கண்டு கொள்ளுமோ!

வியாழன், ஜூன் 02, 2011

தைவான், பிலிப்பைன்ஸ் - எனது அனுபவம்

ஒரு நாடு குறித்து எண்ணெற்ற தகவல்கள் இப்போது இணையத்தின் மூலம் கிடைத்தாலும் - நேரில் காணும் அனுபவம் புதுமையாகவே அமையும். அந்த வகையில் தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் குறித்த எனது பயண அனுபவத்தை இங்கே பகிர விரும்புகிறேன்.
தைப்பே 101
தைப்பே 101 முன்பு நான் 
தைப்பே - தைவான்.

தைவான் ஒரு சின்னஞ்சிறு நாடு. புத்த மதத்தை பின்பற்றும் நாடு. அதன் தலைநகர் தைப்பே அழகிய ஊர்.  தைவான் நாட்டினர் தம்மை அதிகாரப்பூர்வமாக "சீனக் குடியரசு" என்று அழைத்துக் கொள்கின்றனர் (சீனா தன்னை மக்கள் குடியரசு என்று அழைத்துக்கொள்கிறது).

தனிநாடாக இருப்பினும் சீனாவால் தமது மாநிலம் என்று அழைக்கப்படும் தைவான் நாட்டு மக்கள் சீனாவை எதிர்த்து நிற்பது ஆச்சர்யமானது. ஒரே நாளில் தைவானை சீனாவால் நசுக்கி விட முடியும். ஆனாலும், சீனாவை அவர்கள் எதிர்த்து நிற்கின்றனர். அவர்களது மிக முக்கிய கனவு ஐ.நா. அவையில் ஒரு உறுப்பினர் ஆவதுதான் (அது நடக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி).
தைவான் ஐ.நா. உறுப்பினர் கனவு

தைவான் நாட்டில் மக்களின் பொது ஒழுங்கு

உலகின் இரண்டாவது மிக உயரமான கட்டடம் தைப்பே 101 அங்கு உள்ளது. ஒரு வளர்ந்த நாட்டுக்கு இணையான பொருளாதார முன்னேற்றம், கட்டமைப்பு வசதிகள் என வளமாக வாழும் தைவான் நாட்டில் மக்களின் பொது ஒழுங்குதான் அங்கு கவரக்கூடிய முக்கிய அம்சம் என நான் கருதுகிறேன்.

எந்த ஒரு இடத்திலும் எவரும் முண்டியடித்து ஓடியதை பார்க்கவே முடியவில்லை. பேருந்து நிறுத்தம். கடைகள் என எந்த ஒரு இடத்திலும் மக்கள் வரிசையாக நின்றே எதையும் வாங்குகிறார்கள். சாலையோரங்களில் உள்ள சின்னஞ்சிறு கடைகளில் கூட வெறும் 2 அல்லது 3 பேர் இருந்தால் கூட அவர்களும் வரிசையில்தான் நிற்கின்றனர்.
மெட்ரோ நகரும் படிக்கட்டுகளில் 1
மெட்ரோ நகரும் படிக்கட்டுகளில் 2
மெட்ரோ தொடர்வண்டிகளிலிருந்து இறங்கி நகரும் படிக்கட்டுகளில் அவர்கள் பயணிக்கும் ஒழுங்கை ஒர் பாடமாகவே கருதலாம். சுரங்கப்பாதையில் இயங்கும் மெட்ரோவிலிருந்து இறங்கும் மக்கள் மேலே செல்லும் நகரும் படிகளுக்கு வரும் போது வரிசையாக வருகின்றனர். இரண்டுபேர் செல்லும் அளவுள்ள நகரும் படிக்கட்டில் ஒரு ஆள் வரிசையில் மட்டுமே மக்கள் நிற்கின்றனர். இன்னொரு ஆள் செல்லும் இடத்தை காலியாக விட்டுள்ளனர். 

இதன் காரணமாக, ஏதேனும் அவசர பணிக்காச செல்ல வேண்டியவர்கள் ஒன்றிரண்டுபேர் மட்டும் அந்த காலி இடத்தில் வேகமாக ஓடி முன்னதாக செல்கின்றனர்.

தைவானிடம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பழக்கம் அவர்களது ஒழுங்கு முறைகள் தான்.


பிலிப்பைன்ஸ் - ஒரு வலிமிகுந்த வரலாறு.

தனக்கென்ற ஒரு அடையாளத்தை இழந்துநிற்கும் மக்களுக்கு பிலிப்பைன்ஸ் ஒரு எடுத்துக்காட்டு (எதிர்கால தமிழ்நாடு இப்படித்தான் ஆகுமோ?!). பிலிப்பைன்ஸ் என்கிற பெயரே காலனியாதிக்க நாடான ஸ்பெயின் நாட்டு அரசன் இரண்டாம் பிலிப் பெயரைக் குறிப்பதாகும்.
ஸ்பெயினை எதிர்த்து போராடிய விடுதலை வீரர்கள் நினைவுத்தூண் முன்பு நான்

சுமார் ஐநூறு வருடங்களுக்கு முன்பு போர்த்துகீசியர்கள் மற்றும் மெக்சிகோ நாட்டினர் மூலம் ஸ்பெயின் அரசருக்கு காலனி நாடாக ஆக்கப்பட்டதுதான் பிலிப்பைன்ஸ். எனினும் தொடர்ந்து ஆங்கிலேயர்களுக்கும் ஸ்பானியர்களுக்குமான மோதலில் பாதிக்கப்பட்டது. கடைசியில் 1898 இல் தனக்குத்தானே விடுதலையை அறிவித்த போது 2 கோடி டாலருக்கு ஸ்பெயினால் அமெரிக்காவுக்கு விற்கப்பட்டது. பல ஆண்டுகளாக ஸ்பெயினோடு மோதி பின்னர் அமெரிக்காவுடன் சண்டையிட்டனர் பிலிப்பைன்ஸ் மக்கள்.

1935 ஆம் ஆண்டிற்கு பின் மீண்டும் விடுதலைபெரும் தருணத்தில் ஜப்பானால் கைப்பற்றப்பட்டது பிலிப்பைன்ஸ். 1945 இல் இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான மோதலில் சிக்கி சின்னாபின்னமானார்கள் பிலிப்பைன்ஸ் நாட்டினர். ஐரோப்பிய வார்சா நகருக்கு அடுத்ததாக பிலிப்பைசின் மணிலா நகர மக்கள் தான் அதிகமாகக் கொல்லப்பட்டனர்.
உலகப்போரில் இறந்த அமெரிக்க வீரர்கள் நினைவிடம் முன்பு நான்

இரண்டாம் உலகப்போர் ஐரோப்பிய நாடுகளை மையமாக வைத்து நடந்த நிலையில், எங்கோ மூலையில் கிடந்த மணிலா நகரில் ஒரு லட்சம் அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டனர். எல்லாவிதமான ஊடுருவலுக்கும் காலனியாதிக்கத்துக்கும் ஆளான பிலிப்பைன்ஸ் இன்றும் அமெரிக்க அரசின் இராணுவ ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறது. அமெரிக்க இராணுவ தளம் பிலிப்பைன்சில் உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டு சட்டம் அங்குள்ள அமெரிக்க வீரர்களைக் கட்டுப்படுத்தாது! (உலகப்போரின் போது அதிக அமெரிக்க போர்வீரர்கள் கொல்லப்பட்ட நாடு பிலிப்பைன்ஸ் தான்.)

காலனியாதிக்கத்தின் விளைவுகளை இன்றும் பிலிப்பின்சில் காணலாம். மக்களின் தாய் மொழி தகலோக் பொதுவாக பேசப்படுவது இல்லை. ஸ்பானிஷ், ஆங்கிலம் இரண்டையுமே சரளமாக பேசுகின்றன். இவை எல்லாவற்றையும் கலந்து பிலிப்பினோ மொழிதான் ஆட்சிமொழி என்கின்றனர். மொழி மட்டுமல்ல இனமும் கலப்பினம் தான். பெரும்பாலானோரின் தாத்தா பாட்டிகளின் பட்டியலில் சீனர், ஸ்பானியர், அமெரிக்கர் ஆகியோர் உள்ளனர். அதாவது காலனியாதிக்கம் அரசியல் அதிகாரத்தோடு நிற்கவில்லை. சகட்டுமேனிக்கு எல்லோரும் பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களோடு திருமண உறவும் கொண்டிருக்கின்றனர். எனவே, இன்றைய மக்கள் எல்லாம் கலந்த இனமாக காட்சியளிக்கின்றனர்.

இன்றைய மணிலா.
இன்றைய மணிலா நகரம் ஒரு எழில்மிகு நகரம்தான். உலகப்போரின் போது விமான ஓடுபாதையாக இருந்த இடம்தான் இப்போது நகரின் பிரதான வீதியாக இருக்கிறது. மணிலா நகரின் நடைபாதைத் திட்டம் அவர்களைப் பார்த்து பொறாமைப் படவைக்கும் ஒரு திட்டமாக இருக்கிறது. 

மணிலா பெருநகரின் முக்கிய பகுதி மக்காட்டி நகரம். இங்குதான் மணிலா நகரின் முக்கிய அலுவலகங்கள், வணிகப்பகுதிகள் உள்ளன. இந்த நகரின் அலுவலகங்களுக்கும் கடைகளுக்கும் செல்லும் மக்களில் மிகப்பெருமளவினர் நடந்தே செல்கின்றனர். இதற்கான அற்புத திட்டத்தை அந்நாட்டு அரசு வடிவமைத்துள்ளது.

மணிலா நகரின் நடைபாதை.

மக்காட்டி நகரின் நடைபாதை திட்டம் நகரின் எல்லா முக்கிய இடங்களையும் இணைக்கிறது. இது சுரங்கப்பாதை - தரை அளவு - முதல் தளம் என்கிற மூன்று தள அளவுகளில் இடத்திற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையின் சிறப்பம்சம் - எந்த இடத்திலும் சாலைமீது நடக்கத்தேவை இல்லை என்பதுதான்.
முக்கிய இடங்களை இணைக்கும் சுரங்க நடைபாதை 
மணிலா நகர நடைபாதையில் நான் 

அகலமான நடைபாதை, வெய்யிலோ மழையோ பாதிக்காத மேற்க்கூரை, மேலே ஏற - கீழே இறங்க நகரும் படிக்கட்டுகள் என தனிவழியாக நடபாதைகள் உள்ளன. இந்த நடைபாதை மூலமாக நகரின் பெரும்பாலான வணிக நிறுவனங்கள், அங்காடிகளுக்கு அவற்றின் முதல் மாடிக்குள் நேராக செல்ல முடியும்.
முக்கிய இடங்களை முதல் மாடி உயரத்தில் இணைக்கும் நடைபாதைகள்
முக்கிய இடங்களை முதல் மாடி உயரத்தில் இணைக்கும் நடைபாதைகள்
ஒரு எடுத்துக்காட்டுக்கு சென்னையை எடுத்துக்கொண்டால் - சத்யம் திரையரங்கம், எக்ஸ்பிரஸ் அவென்யூ, ஸ்பென்சர் பிளாசா ஆகிய மூன்றுக்கும் செல்ல வேண்டுமானால் - சாலையில் இறங்கவே தேவை இல்லை. இவை ஒவ்வொன்றின் முதல் மாடியில் இருந்தும் அதே முதல் மாடி உயரத்தில் உள்ள நடைபாதையில் நடந்து அனைத்து இடங்களுக்கும் எளிதில் செல்லலாம்.

திநகர் என்றால், அங்குள்ள எல்லா கடைகளுக்கும் முதல் தளத்துக்கு இணையாக உள்ள நடைபாதைகள் மூலம் எல்லா கடைகளுக்கும் நடந்தே செல்ல முடியும். கீழே சாலையில் இறங்கி நடக்க வேண்டாம்.

இந்த வசதியான நடைபாதையால் மக்கள் மிக எளிதாக நகரின் முக்கிய இடங்களுக்கு நடந்து செல்கிறார்கள். இதுபோன்ற திட்டங்கள் சென்னைக்கு அவசியம்.