Pages

வியாழன், மே 07, 2015

ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? மு.க. ஸ்டாலினுக்கு அன்புமணி இராமதாசு மீண்டும் மடல்

லாவணி வேண்டாம்... வளர்ச்சி அரசியல் பற்றி ஒரே மேடையில் விவாதிக்க தயாரா?

தி.மு.க. பொருளாளர் ஸ்டாலினுக்கு அன்புமணி இராமதாசு மீண்டும் மடல்
அன்புள்ள நண்பர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு,

வணக்கம்... நலம், நலம் வாழ வாழ்த்துக்கள்!

தமிழ்நாட்டை சீரழித்ததில் அ.தி.மு.க.வுக்கு மட்டுமல்ல, தி.மு.க.வுக்கும் பங்கு இருக்கிறது என்று கூறி தங்களுக்கு நேற்று முன்நாள் நான் கடிதம் எழுதியிருந்தேன். அந்தக் கடிதத்தில் நான் எழுப்பிய வினாக்களுக்கு நீங்கள் பதில் சொல்லியிருந்தாலோ, தவறுகளை ஒப்புக்கொண்டு திருத்திக் கொள்வதாக அறிவித்திருந்தாலோ அது நாகரீகமான அரசியலுக்கு வழி கோலியிருந்திருக்கும்.

ஆனால், ‘தளபதி’ என்று அழைக்கப்பட்டாலும் சட்டப்பேரவையில் எப்படி நீங்கள் பதுங்கிக் கொண்டு, மற்ற உறுப்பினர்களை பாய வைப்பீர்களோ... அதேபோல் இப்போதும் எனது கடிதத்திற்கு என்னால் தோற்கடிக்கப்பட்ட ஒருவர் மூலம் தரக்குறைவாக பதில் அளிக்க வைத்திருக்கிறீர்கள்.

ஒருவேளை அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள உண்மைக்கு மாறான அவதூறுகளை எழுத உங்களுக்கு கூசியதால் கூட அவ்வாறு செய்திருக்கலாம். ஆனால், நான் உங்களைப் போன்றவன் அல்ல. அநாகரீக, லாவணி அரசியல் நடத்துபவனும் அல்ல. அதனால் தான் நானே மீண்டும் உங்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.
1) தமிழ்நாட்டில் ஒரு தலைமுறைக்குப் பிறகு மதுக்கடைகளை திறந்து இளைஞர்களைக் கெடுத்தது தி.மு.க. தான். அப்படிப்பட்டக் கட்சிக்கு டாஸ்மாக் மது விற்பனை பற்றி பேச தகுதி உண்டா?

2) தமிழ்நாட்டில் இன்று மின்வெட்டு நிலவுவதற்கு தி.மு.க. முக்கியக் காரணம். தொலைநோக்குப் பார்வையுடன் மின் திட்டங்களைச் செயல்படுத்தாததாலும், அறிவிக்கப்பட்ட திட்டங்களை குறித்த காலத்தில் நிறைவேற்றாததாலும் தானே தமிழகம் இருண்ட மாநிலமாகியது?

3) தி.மு.க. ஆட்சியில் தொழில்துறை வளர்ச்சியடையவில்லை. தி.மு.க. ஆட்சியில் வந்ததாகக் கூறப்படும் ரூ.46,091 கோடி முதலீட்டால் எத்தனை ஆலைகள் வந்தன, எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்தது என்பது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடாதது ஏன்?

4) விஞ்ஞான முறையில் ஊழல் செய்ததும், செய்து கொண்டிருப்பதும் தி.மு.க. தான். ரூ.1.76 லட்சம் கோடி 2ஜி ஊழலுக்கு சொந்தக்காரர்களான உங்களுக்கு ஊழல் பற்றி பேச தகுதி உண்டா?

5) இலவசங்களைக் கொடுத்து மக்களை சோம்பேறிகளாக்கியது தி.மு.க. தானே?

6) ஓட்டுக்கு பணம் கொடுக்கும் திருமங்கலம் கலாச்சாரத்தை தொடங்கி வைத்தது தி.மு.க. தானே?

7) கிரானைட் கொள்ளைக்கு அடித்தளம் அமைத்ததுடன் கொள்ளைக்காரர்களுடன் கூட்டணி அமைத்து பணம் பார்த்தது தி.மு.க. தானே?

8) தாது மணல் கொள்ளையை ஊக்குவித்ததும், டாட்டா டைட்டானியம் தொழிற்சாலையை தமிழகத்திற்கு அழைத்து வந்து இயற்கை வளக் கொள்ளை நடத்த திட்டமிட்டதும் தி.மு.க. தானே?

9) ஆற்று மணல் கொள்ளையை யார் மூலம் அ.தி.மு.க நடத்தியதோ, அதே தொழிலதிபர் மூலம் தானே நீங்களும் மணல் கொள்ளை மற்றும் ஊழலைத் தொடர்ந்தீர்கள்?

10) ஆவின் கலப்பட ஊழலில் கைது செய்யப்பட்டவருக்கு சரக்குந்து மூலம் பால் கொண்டு செல்லும் ஒப்பந்தத்தை வழங்கியதே உங்கள் அரசு தானே?

11) ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது அதை தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?

12) தமிழை வளர்க்க வகை செய்யாமல் தமிழைப் படிக்காமலேயே பட்டம் வாங்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியது யார்?

13) தமிழகத்தில் ஆங்கில வழிப் பள்ளிகள் அதிகரிக்கவும், கட்டணக் கொள்ளை பெருகவும் காரணம் யார்?

14) கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து மீனவர்களின் துயரத்திற்கு வழி வகுத்தது யார்?

15) காவிரி ஆற்று நீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்காமலும், 4 அணைகளை கட்ட அனுமதித்தும் தமிழகத்திற்கு துரோகம் செய்த தி.மு.க.வுக்கு மேகதாது திட்டம் பற்றி பேச உரிமை உண்டா?

16) முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் செய்தது யார்?

17) பாலாற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணைகளை கட்ட அனுமதித்தது யார்?

18) சென்னையின் வளர்ச்சிக்காக மேயராகவும், துணை முதலமைச்சராகவும் நீங்கள் செய்தது என்ன?

19) கூவத்தை தூய்மைப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களும், ஒதுக்கப்பட்ட நிதியும் என்ன ஆனது?

20) மீத்தேன் திட்டத்திற்கு நீங்களே அனுமதி அளித்துவிட்டு இப்போது எதிர்ப்பது போல நாடகமாடுகிறீர்களே?

ஆகிய கேள்விகளை நான் தங்களுக்கு எழுப்பியிருந்தேன். இவை அனைத்தும் தமிழகத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் மனதில் எழும் கேள்விகள் தான். இந்தக் கேள்விகளை எழுப்பியதற்காக பல்வேறு தரப்பு மக்களும் என்னைத் தொடர்பு கொண்டு பாராட்டினார்கள். அவர்களில் பலர் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

ஆனால், தி.மு.க. 21 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தது. நீங்கள் 5 ஆண்டுகள் மேயராகவும், 5 ஆண்டுகள் அமைச்சராகவும், இரு ஆண்டுகள் துணை முதலமைச்சராகவும் இருந்தீர்கள். ஆனால், உங்களாலும், தி.மு.க.வாலும் இவற்றில் எந்த புகாருக்கும் பதில் கூற முடியவில்லை.

இவை அனைத்தும் உண்மைகள்; இவற்றை மறுக்க முடியாது என்பதால் தான் அவற்றை விட்டு விட்டு தமிழகத்தின் நலனுக்கு தொடர்பில்லாதவை பற்றி ஆள் வைத்து மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் அறிக்கை வெளியிட்டிருக்கிறீர்கள். எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு நாகரீகமான முறையில் எப்படி பதில் கூறுவது என்பதை டாக்டர் கலைஞரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இருப்பினும் இதை நான் எதிர்பார்த்தேன்.

தொடர்ந்து இத்தகைய நாகரீகமற்ற அரசியலை செய்து வரும் உங்களிடம் இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. உங்கள் குறைகளை யார் சுட்டிக்காட்டினாலும் அவர்களை நாகரீகமற்ற முறையில் விமர்சிப்பது உங்களுக்கு பழகிப் போன ஒன்று. ஆனால், தரம் தாழ்ந்து விமர்சிப்பது எங்கள் வழக்கம் அல்ல. நாகரீகமான, வளர்ச்சி அரசியல் (Decent and Development Politics) தான் எங்களின் கொள்கை. அப்படித்தான் நான் வளர்க்கப்பட்டிருக்கிறேன். எனவே, உங்கள் தரப்புக்கு நாகரீகமாக பதில் தருவது தான் எனது இந்த கடிதத்தின் நோக்கம்.
அ.தி.மு.க.வுடனும், தி.மு.க.வுடனும் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி வைத்ததாக தி.மு.க. குற்றஞ்சாற்றியிருக்கிறது. இது உண்மை தான். இதைக் கண்டுபிடிப்பதற்காக நீங்கள் ஒரு குழு அமைத்து ஆராய்ச்சி செய்திருக்கத் தேவையில்லை. உங்களுடனும், அ.தி.மு.க.வுடனும் கூட்டணி அமைத்தது தான் நாங்கள் செய்த மிகப்பெரியத் தவறு ; இந்தத் தவறை ஒருபோதும் மீண்டும் செய்ய மாட்டோம். இதற்காக வருத்தம் தெரிவித்தது மட்டுமின்றி மன்னிப்பும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஒரு கட்சி தவறை ஒப்புக்கொள்வது சாதாரணமான விஷயமல்ல.

அதுமட்டுமின்றி, 2006 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 96 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாமல் தடுமாறிக்கொண்டிருந்த தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தி உங்கள் தலைவரை முதல்வராகவும், உங்களை துணை முதலமைச்சராகவும் அமர வைத்தது நாங்கள் செய்த இன்னொரு தவறு ஆகும். இந்த தவறுகளுக்கு பரிகாரம் தேடுவதற்காகவே தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. அல்லாத அரசை அமைக்க வேண்டும் என்று முடிவெடுத்து மக்கள் பணியாற்றி வருகிறோம்.

ஆனால், மாறிமாறி கூட்டணி அமைப்பதில் தி.மு.க.வின் மோசமான வரலாறு என்ன? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதுவரை 15 முறை மாற்றி மாற்றி கூட்டணி வைத்துக் கொண்ட கட்சி தானே தி.மு.க.. 1976 ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியைக் கலைத்தற்காக அன்னை இந்திரா காந்தியை விதவை என்றும், வெளியில் சொல்லமுடியாத அநாகரீகமான வார்த்தைகளாலும் விமர்சனம் செய்ததுடன், மதுரையில் சுற்றுப்பயணம் செய்ய வந்த அவரை குண்டர்களை ஏவி கொலை செய்யவும் முயன்றது தி.மு.க.. அடுத்து நடந்த 1980 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து நேருவின் மகளே வருக... நிலையான ஆட்சி தருக..! என விளித்ததும் கலைஞர் தான்.

1998 ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க.வை பண்டாரங்களின் கட்சி என்று விமர்சித்த கலைஞர், 1999ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. விலகியதும் தில்லியிலிருந்த முரசொலி மாறன் மூலமாக துண்டு போட்டு அந்தக் கூட்டணியில் சேர்ந்தது உங்களுக்கு மறந்து போயிருந்தால் கலைஞரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

அவ்வளவு ஏன்.... 2011 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, நடிகர் வடிவேலுவை வைத்து, ‘‘கேப்டனா... அவன் எந்தக் கப்பலுக்குக் கேப்டன்? கடல்ல தண்ணில மிதக்கிற கப்பலை ஓட்டுறவன் கேப்டன். சதா தண்ணியில மிதக்கிறவன் கேப்டனா?’’ என்றெல்லாம் யாரைப் பற்றி பேச வைத்து, அதை தங்களின் குடும்பத் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப வைத்து நீங்களும், கலைஞரும் ரசித்தீர்களோ, இன்று அவரை வீட்டிற்கு அழைத்து பரஸ்பரம் படத்தை மாற்றிக் கொள்ளும் ‘படம் காட்டும்’ நிகழ்வுகள் எல்லாம் தமிழக நலனைக் கருத்தில் கொண்டவையல்ல... கூட்டணியை மட்டும் கணக்கில் கொண்டவை என்பதை தமிழக மக்கள் அனைவரும் அறிவர்.

விஜயகாந்தின் தலைமையை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தி.மு.க. தள்ளப்பட்டது உண்மையாகவே வருத்தமளிக்கும் விஷயமாகும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளுடனும் தி.மு.க. கூட்டணி அமைத்ததா... இல்லையா? தி.மு.க.வின் கூட்டணி வரலாறு இப்படி இருக்கும் போது மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் உமிழ்ந்தால் அது மார்பின் மீது தான் விழும் என்பதை தயவுசெய்து நீங்கள் உணர வேண்டும்.

தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று கூறி விட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நான் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தது எப்படி? என்பது உங்கள் கட்டளைப்படி என்னிடம் கேட்கப்பட்டுள்ள இன்னொரு கேள்வி. மக்களும், கட்சியினரும் விரும்பியதால் அந்தப் பதவிக்கு வந்தேன். ஆனால், ஸ்டாலின் அவர்களே.... மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்... அப்பா முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர், இன்னொரு மகன் மத்திய அமைச்சர், மகள் நாடாளுமன்ற உறுப்பினர், மருமகன் மத்திய அமைச்சர், பேரன் மத்திய அமைச்சர்.... இந்தியாவில் வேறு எந்தக் கட்சித் தலைமையாவது தொண்டர்கள் உழைப்பை இப்படி சுரண்டி பயனடைந்ததுண்டா?

நான் மாநிலங்களவை உறுப்பினராவதற்கும், மத்திய அமைச்சராவதற்கும் உதவி செய்தவர் கலைஞர் என்று தி.மு.க. கூறியிருக்கிறது. எனக்கான மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்பது தி.மு.க. எனக்குக் கொடுத்தது சலுகை அல்ல. 2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளை வழங்குவதற்கு பதிலாக 6 தொகுதிகள் மட்டும் வழங்கப்பட்டதால் ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்படும் என்று ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதன்படி தான் அடுத்து வந்த மாநிலங்களவைத் தேர்தலில் எனக்கு தி.மு.க. ஆதரவு அளித்தது. அந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி உறுப்பினர்கள் 15 பேர் எனக்கு வாக்களித்தார்கள். அதன்பிறகு 2007, 2008, 2010 ஆகிய தேர்தல்களில் பா.ம.க.வின் 18 உறுப்பினர்கள் ஆதரவுடன் தான் தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள்.  ஒருமுறை எங்களுக்கு நீங்கள் ஆதரவு கொடுத்ததற்காக 3 முறை எங்களின் ஆதரவை உங்களுக்குக் கொடுத்திருக்கிறோம். 

அதேபோல், 2004 ஆம் ஆண்டில் பா.ம.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைப்படி தான் எனக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்பட்டது. அதை தி.மு.க. வாங்கித் தரவில்லை. ஆனால், 2006 ஆம் ஆண்டில் பெரும்பான்மை இல்லாத தி.மு.க. தமிழகத்தில் ஆட்சி அமைக்க நிபந்தனையின்றி ஆதரவளிப்பதாக ஆளுனரிடம் முதன்முதலில் கடிதம் கொடுத்தது பா.ம.க. தான். அவ்வகையில் கலைஞரை முதல்வராகவும், உங்களை துணை முதல்வராகவும் ஆக்கியது பா.ம.க. தான்.

மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி இராமதாசு செய்த சாதனைகள் என்ன? என்று தி.மு.க. வினா எழுப்பியிருக்கிறது. இந்தியாவே போற்றும் 108 அவசர ஊர்தித் திட்டத்தை கொண்டு வந்தது நான் தான். இந்தத் திட்டம் 22 மாநிலங்களில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தால் கோடிக்கணக்கானோரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய சுகாதார இயக்கமான தேசிய ஊரக சுகாதார இயக்கத்தை (National Rural Health Mission) செயல்படுத்தியது நான் தான். இந்த திட்டத்தின் உதவியுடன் இந்தியாவின் தாய் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதத்தை 50 விழுக்காட்டிற்கும் மேல் குறைத்ததும் நான் தான். இது மிகப்பெரிய உலக சாதனை என உலகெங்குமுள்ள மருத்துவ வல்லுனர்கள் பாராட்டியுள்ளனர். இத்திட்டத்தை அறிவித்ததற்காக ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் தில்லியில் எனது அலுவலகத்துக்கே வந்து பாராட்டிச் சென்றார்.

சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையில் நான் பல்வேறு சிறப்பான பணிகளை செய்துள்ளேன். புகையிலைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தேன். பொது இடங்களில் புகைப் பிடிக்க தடை விதித்தேன், புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது எச்சரிக்கைப் படங்களை வெளியிட வைத்தேன். இதற்கு அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த உங்கள் தலைவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவற்றைச் செயல்படுத்தினேன்.
சுகாதாரத் துறையில் நான் படைத்த சாதனைகளை பாராட்டி 4 சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் 2 ஐ.நா.வின் சார்பு அமைப்பான உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனரால் வழங்கப்பட்டவை ஆகும். மற்றொன்று உலகின் மிகப்பெரிய புகையிலை எதிர்ப்பு அமைப்பான அமெரிக்க புற்றுநோய் சங்கத்தால் வழங்கப்பட்ட லூதர் எல்.டெர்ரி விருது ஆகும். போலியோ நோயைக் கட்டுப்படுத்த நான் எடுத்த நடவடிக்கைகளுக்காக சர்வதேச ரோட்டரி சங்கத்தின் போலியோ சாம்பியன் விருது வழங்கப் பட்டது. இது கெண்டுக்கி கர்னல் போன்று பணம் கொடுத்து வாங்கப்பட்ட விருது அல்ல. எனக்கு முன் இந்த விருதை ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், பில் கேட்ஸ், டோனி பிளேர், கோஃபி அனான் ஆகியோர் தான் பெற்றுள்ளனர். இதுபோன்ற விருதுகளை நீங்கள் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த வேறு எந்த தலைவர்களாவது பெற்றிருக்கிறார்களா?

ஊரக சுகாதார இயக்கத்தின் மூலம் சுமார் 15,000 கோடி மதிப்புள்ள சுகாதாரத் திட்டங்களை தமிழகத்திற்கு நான் கொண்டு வந்துள்ளேன். புதுவை ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை ரூ.1500 கோடி செலவில் மேம்படுத்தி தன்னாட்சி அதிகாரம் அளித்துள்ளேன். ஆனால், தமிழகத்திற்காக நான் கொண்டு வந்த எய்ம்சுக்கு இணையான மதுரை அதி உயர் சிறப்பு மருத்துவமனை, சென்னை முதியோர் நல மருத்துவ மையம் ஆகியவற்றை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்ட அரசு தான் நீங்கள் துணை முதல்வராக இருந்த தி.மு.க. அரசு என்பதை நினைவூட்டுகிறேன்.

நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது மதுவை ஒழிக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உங்களால் ஏவப்பட்டவர் கூறியிருக்கிறார். மத்திய சுகாதார அமைச்சர் என்ற முறையில் புகையிலையை கட்டுப்படுத்த எனக்கு முழு அதிகாரம் இருந்தது. அதைப் பயன்படுத்தி புகையிலையைக் கட்டுப்படுத்தினேன். ஆனால், மது ஒழிப்பு மாநில அரசின் பட்டியலில் உள்ளது. இதற்கான நடவடிக்கையை மாநிலத்தில் ஆட்சி செய்த நீங்கள் தான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்பதை உங்களுக்கு நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன். எனினும், மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மொத்தம் 3 ஆய்வுகளை நடத்தியிருக்கிறேன்.

மதுவை ஒழிப்பதற்கு மாநிலங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்பதற்காக தேசிய ஆல்கஹால் கொள்கையை கொண்டு வந்தேன். எனக்குப் பிறகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக வந்தவர் அதை செயல்படுத்தாமல் முடக்கி விட்டார். அதுமட்டுமின்றி, உலக சுகாதார அமைப்பின் சார்பில் மதுவின் ஆபத்தான பயன்பாட்டை தடுப்பதற்கான உலக உத்தியை உருவாக்கியதும் (Global strategy to reduce harmful use of alcohol), உலக சுகாதார நிறுவனத்தின் அமர்வில், அக்டோபர் 2 ஆம் தேதி காந்தியடிகள் பிறந்தநாளை உலக மது ஒழிப்பு நாளாக அறிவிக்கும் தீர்மானத்தைக் கொண்டு வந்ததும் நான் தான் என்பதை நல்லவர்கள் அறிவார்கள்.

நான் செய்த சாதனைகளை,‘‘50 ஆண்டுகளில் செய்ய முடியாதவற்றை 5 ஆண்டுகளில் மருத்துவர் அன்புமணி சாதித்துள்ளார்’’ என்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும், ‘‘அன்புமணி இராமதாசு ஒரு நடமாடும் மருத்துவ என்சைக்ளோபீடியா’’ என்று அப்போதைய மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியும் பாராட்டினார்கள். எனது சாதனைகளை பல மேடைகளில் பில் கிளிண்டனும், பில் கேட்சும் பாராட்டியுள்ளனர்.

தி.மு.க. சார்பில் கலைஞர் 19 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்திருக்கிறார். மத்திய அரசில் தி.மு.க. 18 ஆண்டுகள் அங்கம் வகித்திருக்கிறது. அக்கட்சி சாதித்தவை என்னவென்று சொல்ல முடியுமா? இப்போதும் மக்களுக்கு சேவை செய்கிற பெருமை மற்றும் உரிமையுடன் சொல்கிறேன்... 108 அவசர ஊர்தித் திட்டம், தேசிய ஊரக சுகாதார இயக்கம், 4 சர்வதேச விருதுகள் போன்றவை பாட்டாளி மக்கள் கட்சியின் அடையாளங்கள். ஆனால், ரூ.1.76 லட்சம் கோடி 2ஜி ஊழல், பதவிக்காகவும் , ஊழலுக்காகவும் பேரம் பேசும் நீரா ராடியா ஒலிநாடா, நீதிபதி சர்க்காரியா ஆணையத்தின் விஞ்ஞான ஊழல் சான்றிதழ் ஆகியவையே தி.மு.க.வின் அடையாளங்கள். இதை உங்களால் மறுக்க முடியுமா?

வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கொடுத்ததாக நீங்கள் மார்தட்டிக் கொள்கிறீர்கள். 8 ஆண்டுகளாக போராடி, 21 உயிர்களைத் தியாகம் செய்து தான் 20% இடஒதுக்கீடு பெறப்பட்டது. வன்னியர்களுக்கு மட்டுமின்றி 108 சமுதாயங்களுக்கான இட ஒதுக்கீட்டை மருத்துவர் அய்யா அவர்கள் தான் போராடி பெற்றுக் கொடுத்தார். நாங்கள் நடத்திய போராட்டத்தின் பயனை அடைந்ததில் உங்கள் சமுதாயமும் அடங்கும். இதற்காக நீங்கள் எங்களுக்கு நன்றி சொல்ல வேண்டுமே தவிர, அவதூறு பரப்பக்கூடாது. அந்த இடஒதுக்கீட்டை கலைஞர் மனமுவந்து தரவில்லை; தர வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது. அந்த நேரத்தில் யார் முதல்வராக இருந்திருந்தாலும் இட ஒதுக்கீட்டை மறுத்திருக்க முடியாது.

ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டமும் அப்படிப்பட்டது தான். தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியான தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் காலம் காலமாக புளோரைடு மிகையால் பாதிக்கப் பட்டுள்ளனர். 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அவலம் நீடிக்கிறது. இதுவரை 5 முறை முதலமைச்சராக இருந்த கலைஞர் முந்தைய 4 முறைகளில் ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தியிருக்கலாமே? 19 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ம.க. போராடியதன் பயனாகத் தானே 2008 ஆம் ஆண்டில் அந்தத் திட்டத்திற்கு கலைஞர் அடிக்கல் நாட்டினார். அந்தவிழாவில் கலைஞர் பேசும்போது, இந்தத் திட்டம் கொண்டுவரப்படுவதற்கு முக்கியக் காரணம் மருத்துவர் அய்யாவும், பா.ம.க.வும் தான் என்று கூறியது உங்களுக்கு தெரியுமோ, தெரியாதோ. ஆனால், இந்த உண்மை கலைஞருக்குத் தெரியும்.

கடைசியாக நான் ஊழல் செய்துவிட்டதாகக் கூறுகிறார்கள்? காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பதைப் போல ஊழல் செய்தே பழக்கப்பட்டுப் போனவர்களுக்கு எல்லாமே ஊழலாகத் தெரிகிறது. மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி புதுப்பிக்கப்பட்டது உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும். அது ஊழல் வழக்கே இல்லை. அந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் அன்புமணி யாரிடமாவது ஒரு பைசா வாங்கியதாகவோ, யாரையும் சந்தித்ததாகவோ எந்த இடத்திலும் கூறப்படவில்லை. அனுமதி வழங்குவதில் அதிகாரிகள் நடைமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என்பது தான் குற்றச்சாற்று. மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ள போதிலும், அதை மறைத்துவிட்டு, அரசியல் காரணங்களுக்காக என் மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இவ்வழக்கில் நீதி வெல்லும்.

சென்னையின் மேயராகவும், உள்ளாட்சி அமைச்சராகவும் இருந்த காலத்தில் சென்னையில் நீங்கள் மேம்பாலங்களைக் கட்டியதாகக் கூறுகிறார்கள். மேம்பாலங்கள் கட்டியதன் நோக்கம் அனைவருக்கும் தெரியும். அதனால் போக்குவரத்து நெரிசல் தீர்ந்ததா? சென்னை சிங்காரமாக காட்சியளிக்கிறதா? கூவம் மணக்கிறதா? டெங்குவும், சிக்குன்குனியா போன்ற நோய்களும் சென்னை மக்களை அவதிப் படுத்துவதற்கு உங்கள் காலத்திலிருந்து தொடரும் சுகாதாரக் கேடுகளும், தேங்கும் மழை நீரும் தான் காரணம் என்பதை மக்கள் அறிவார்கள்.

தமிழகம் ஒன்றும் தைலாபுரம் அல்ல நீங்கள் ஆள்வதற்கு? என்று தி.மு.க. கூறியுள்ளது. நாங்கள் ஆட்சியைப் பிடிப்பது பகல் கனவா? என்பது இருக்கட்டும்... 66 ஆண்டுகள் ஆன உங்கள் கட்சி கடந்த மக்களவைத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தைக் கூட பிடிக்க முடியாமல் படுதோல்வி அடைந்தது. ஆனால் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளின் துணையின்றி வெற்றி பெற்றிருக்கிறோம். மக்கள் எங்களை ஆதரிக்க முடிவு செய்து என்பதையும், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை புறக்கணிக்க முடிவு செய்து விட்டார்கள் என்பதையும் இது காட்டுகிறது.

தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். அதற்காக தமிழகத்தை 50 ஆண்டுகளாக ஆட்டிப் படைக்கும் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கிரகணங்களையும் விரட்டியடிக்க வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை நிறைவேற்றவே நாங்கள் போராடுகிறோம். அதற்காகத் தான் இரு கட்சிகளின் குறைகளையும் அம்பலப்படுத்துகிறோம். எங்களின் இந்தப் பணி தொடரும்.

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் செய்யப்பட்டதாகக் கூறப்படும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், தமிழக மக்கள் நலன் மற்றும் வளர்ச்சிக்காகவும், தமிழ் வளர்ச்சிக்காகவும், ஈழத் தமிழர் நலனுக்காகவும் தி.மு.க. எதையாவது செய்திருப்பதாக நீங்கள் கருதினால் அது குறித்தும் ஒரே மேடையில் விவாதிக்க நான் தயார்... நீங்கள் தயாரா?"

நன்றி!
தங்கள் அன்புள்ள
மருத்துவர் அன்புமணி இராமதாசு

(கார்ட்டூன்: இராவணன்)

திங்கள், மே 04, 2015

மு.க. ஸ்டாலினுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம்: தமிழகத்தை சீரழித்து சிதைத்ததில் தி.மு.க.வுக்கு பங்கில்லையா? 

"இராமாயணத்தை கூனி இல்லாமலும், மகாபாரதத்தை சகுனி இல்லாமலும் எப்படி எழுத முடியாதோ அதேபோல் தமிழகத்தின் சீரழிவு வரலாற்றை தி.மு.க. இல்லாமல் எழுத முடியாது "
அன்புள்ள தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு,

வணக்கம்... நலம், நலம் வாழ வாழ்த்துக்கள்!

தமிழகத்தின் இன்றைய நிலை தொடர்பாக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு நீங்கள் எழுதிய கடிதத்தை படித்தேன்... ஆனால், ரசிக்கவோ, சுவைக்கவோ முடியவில்லை.

ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை

ஆட்சிப் பொறுப்பிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு 46 மாதங்கள் வனவாசம் அனுபவித்ததாலேயே உங்களின் தவறுகளையும், ஊழல்களையும் மக்கள் மறந்திருப்பார்கள் என்ற எண்ணத்தில் ஊழல்கள் குறித்தும், நிர்வாகச் சீர்கேடுகள் குறித்தும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நீங்கள் பாடம் நடத்தியிருப்பதைப் பார்க்கும் போது ‘ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை’ என்ற பழமொழி நினைவுக்கு வந்ததை தடுக்க முடியவில்லை.
(கார்ட்டூன் - ராவணன்)
இராமாயணத்தை கூனி இல்லாமலும், மகாபாரதத்தை சகுனி இல்லாமலும் எப்படி எழுத முடியாதோ அதேபோல் தமிழகத்தின் சீரழிவு வரலாற்றை தி.மு.க. இல்லாமல் எழுத முடியாது என்பது தானே உண்மை. அ.தி.மு.க. ஆட்சியில் முக்கியத்துவம் தரப்படும் ஒரே துறை டாஸ்மாக் தான் என்று கூறியிருக்கிறீர்கள்.

உண்மை தான். ஆனால், அதை சொல்லும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா என்று எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா?

மதுவை திணித்தது திமுக

அரசின் செலவுகளை ஈடுகட்டவும், மலிவுவிலை அரிசித் திட்டத்தை செயல்படுத்தவும் மது விற்பனையைத் தொடங்கலாம் என பேரறிஞர் அண்ணாவிடம் அதிகாரிகள் பரிந்துரைத்த போது, மக்களைக் கெடுக்கும் மதுவை அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

அண்ணாவின் வழியில் நடப்பதாக கூறும் நீங்கள் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் அவரைப் பின்பற்றினீர்களா? மது என்றால் என்ன என்பது ஒரு தலைமுறைக்கே தெரியாமல் இருந்த நிலையில், இராஜாஜி, காமராஜர் போன்ற மூத்த தலைவர்களின் அறிவுரையை மதிக்காமல், 1971 ஆம் ஆண்டில் மதுவிலக்கை ரத்து செய்து சாராயத்தை வெள்ளமென ஓடவிட்டவர் உங்கள் தந்தை கலைஞர் தானே?
மதுவிலக்கை நடைமுறைப்படுத்துங்கள் என்று கோரிய போதெல்லாம் ‘நெருப்பு வளையத்தின் நடுவில் வைத்த கற்பூரம் போல தமிழ்நாடு இருக்கிறது” என்று கூறித் தானே நீங்களும், உங்கள் தந்தை கலைஞரும் தமிழக மக்களை ஏமாற்றினீர்கள். இராஜாஜியும், ஓமந்தூராரும், காமராஜரும், உங்கள் வழிகாட்டியான அண்ணாவும் இந்த நெருப்பு வளையத்திற்குள் வைத்து தானே தமிழ்நாடு என்ற கற்பூரத்தைக் காப்பாற்றினர்.

நீங்கள் துணை முதல்வராக இருந்தபோது மதுவிலக்கை நடைமுறைப் படுத்த முடியாது என்று சட்டப்பேரவையில் கூறவில்லையா? 23.12.2008 அன்று மருத்துவர் அய்யா தலைமையிலான குழுவின் வேண்டுகோளை ஏற்று மது விற்பனை நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்த கலைஞர், படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்தாரே... நடைமுறைப்படுத்தினாரா? இப்போது கூட முழு மதுவிலக்கு குறித்து வாக்குறுதி அளிக்க முடியாத உங்களுக்கு மதுவிலக்கு பற்றி பேச என்னத் தகுதி இருக்கிறது?

தொழில் முதலீடுகள் - திமுகவுக்கு தகுதி உண்டா?

முதலீட்டாளர்கள் மாநாடு குறித்தும், தொழில் முதலீடுகள் குறித்தும் பேசியிருக்கிறீர்கள். நல்லது தான். முந்தைய ஆட்சியில் தொழில்துறை அமைச்சர் பொறுப்பை கூடுதலாக கவனித்த நீங்கள், திமுக ஆட்சியில் ரூ.46,091 கோடி மதிப்புள்ள 37 தொழில்திட்டங்களுக்கு ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டிருப்பதாகவும், அதனால் 2,52,569 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினீர்கள். அப்படி கிடைத்ததா? இதுகுறித்து வெள்ளை அறிக்கை கோரியபோது அதை ஏற்க மறுத்த உங்களுக்கு தொழில் முதலீடுகள் பற்றி பேச என்னத் தகுதி இருக்கிறது?

நீங்கள் என்ன செய்தீர்களோ, அதையே தான் அ.தி.மு.க.வும் செய்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ. 46,602.72 கோடி தொழில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் 2.5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறினார்கள். இதில் ஒரு விழுக்காடு கூட முதலீடு செய்யப்படவில்லை. இதன்மூலம் இரு கட்சிகளுமே மக்களை ஏமாற்றுவதில் ‘ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்பதை நிரூபித்திருக்கின்றன.

தமிழகத்திலுள்ள நிறுவனங்கள் இங்குள்ள ஆலைகளை மூடிவிட்டு வெளி மாநிலங்களில் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கின்றன என்பதும் உண்மை தான்.  இது போன்றதொரு மோசமான நிலை தமிழ்நாட்டில் இதுவரை இருந்தது கிடையாது. இதற்குக் காரணமே நீங்கள் தானே.

வரலாறு காணாத மின்வெட்டுதான் திமுகவின் சாதனை

தமிழ்நாட்டில் வரலாறு காணாத மின்வெட்டு ஏற்படுவதற்குக் காரணமே தி.மு.க. ஆட்சி தானே. முந்தைய ஆட்சியில் வடசென்னை, மேட்டூர் ஆகிய இடங்களில் 1800 மெகாவாட் மின்நிலையங்களை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது மின்துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி, அனைத்து மின்திட்டங்களும் 30 மாதங்களில் முடிக்கப்பட்டு 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால், திமுக ஆட்சியின் பதவிக் காலம் முடிந்த பிறகும் அந்த நிலையங்களின் பணிகள் முடிக்கப்படாதது தான் மின்வெட்டுக்குக் காரணம் என்பது உங்கள் மனசாட்சிக்குத் தெரியாதா?
உடன்குடி மின் திட்டத்திற்கு 2007 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டிய உங்கள் அரசு அதன்பின் 4 ஆண்டுகளாக எதுவுமே செய்யாமல் தூங்கிக் கொண்டிருந்தது உண்மையா... இல்லையா? மின்வெட்டைப் போக்க எதுவுமே செய்யாத  உங்களுக்கு மின்வெட்டு, தொழில் முதலீடு ஆகியவை பற்றியெல்லாம் பேச என்ன உரிமை இருக்கிறது?  இன்றைய நிலையில் தமிழகத்தின் மொத்த மின்தேவை 14,500 மெகாவாட் மட்டுமே. கடந்த 49 ஆண்டுகளாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்துவரும் நீங்களும், அ.தி.மு.க.வும் இந்த அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான திட்டங்களைக் கூட செயல்படுத்தவில்லை என்றால் உங்களுக்கு தொலைநோக்குப் பார்வை இல்லை என்று தானே பொருள்?

தி.மு.க. ஊழல்கள்

ஊழல் குறித்தும் உங்கள் கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. விஞ்ஞான முறையில் ஊழல் செய்வதாக சர்க்காரியா கமிஷனால் சான்றளிக்கப்பட்ட தி.மு.க. ஊழல்கள் குறித்து பேசுவதும், கசாப்புக் கடைக்காரன் அகிம்சை பற்றி பேசுவதும் ஒன்று தான். தி.மு.க. ஆட்சியில் ஊழல்கள் நடைபெறவே இல்லையா? உலக அளவில் இந்தியாவுக்கு மிகப்பெரிய அவப்பெயரைத் தேடித் தந்தது 2ஜி ஊழல் தான். இந்தியா ஊழல் நாடு என்ற தோற்றம் ஏற்பட இது தான் காரணம். ரூ.1.76 லட்சம் கோடி மதிப்புள்ள அந்த ஊழலின் காரணகர்த்தா தி.மு.க. தானே? அதுமட்டுமின்றி தமிழகத்தை நீங்கள் ஆண்டபோது துணைவேந்தர்கள் நியமனம் தொடங்கி அனைத்து பணி நியமனங்களுக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டதா... இல்லையா?

வாக்கு விற்பனை - திருமங்கலம் திட்டம்

இலவசங்களை வாரி இறைத்து மக்களை சோம்பேறிகளாக்கும் கலாச்சாரத்தை வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, 2 ஏக்கர் நிலம் ஆகியவற்றுடன் 2006 ஆம் ஆண்டில் நீங்கள் தொடங்கினீர்கள்.
2011 ஆம் ஆண்டில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, ஆடு-மாடு என ஜெயலலிதா விரிவு படுத்தினார். அதேபோல், தேர்தலில் வாக்குகளை விலைக்கு வாங்குவதற்கான ‘திருமங்கலம் திட்டத்தை’ நீங்கள் அறிமுகம் செய்தீர்கள். அவர்கள் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பணத்துடன் மூக்குத்தி, தோடு வழங்கும் அளவுக்கு விரிவுபடுத்தி ‘திருவரங்கம் திட்டத்தை’ உருவாக்கினார்கள். ஆக மொத்தம் மக்களைக் கெடுப்பதில் இரு கட்சிகளும் போட்டிப் போடுகிறீர்கள்.

இயற்கை வளக் கொள்ளை

இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவது குறித்தும் நீலிக்கண்ணீர் வடித்திருக்கிறீர்கள். இந்தக் கொள்ளையை தொடங்கி வைத்தது தி.மு.க. தானே?  டாட்டா டைட்டானியம் ஆலையை  தூத்துக்குடிக்கு கொண்டுவந்து அங்குள்ள இயற்கை வளங்களை கொள்ளையடிக்க முயன்றது தி.மு.க. தானே? முந்தைய ஆட்சியில் சட்டவிரோதமாக தாது மணலை வெட்டி எடுத்ததாக ஒரு தொழிலதிபரை கைது செய்து கொடுமைப்படுத்திய நீங்கள், திடீரென அவருடன் சமாதானம் ஆகி கை குலுக்கியது ஏன்? நீங்கள் அந்த தொழிலதிபருடன் சமாதானம் செய்து கொண்டீர்கள். இப்போது அ.தி.மு.க.வினர் அவருடன் கூட்டணி அமைத்துக் கொண்டு கொள்ளையடிக்கிறார்கள்.

கிரானைட் கொள்ளையில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் நிறுவனத்தின் சட்டவிரோதச் செயல்களையெல்லாம் கண்டும் காணாமலும் இருந்த நீங்கள் இப்போது கிரானைட் கொள்ளைக்கு எதிராக குரல் கொடுக்கிறோம் என்பது நம்பும்படியாகவா இருக்கிறது? 1996 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த தி.மு.க. கிரானைட் வெட்டி எடுக்க சட்டவிரோதமாக அனுமதி அளித்ததாக கூறி ஜெயலலிதா மீது  வழக்குத் தொடர்ந்தது. அதனடிப்படையில்   ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்காமல் விசாரணை நிலையிலேயே அந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்தது ஏன்? கிரானைட் ஊழல் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இடைப்பட்ட காலத்தில் இரு முறை ஆட்சி செய்த தி.மு.க. இக்கொள்ளையை தடுக்க என்ன செய்தது? கிரானைட் நிறுவனங்களுடன் இருகட்சிகளும் மாறிமாறி கூட்டணி வைத்து இமாலய ஊழல் செய்ததெல்லாம் மக்களுக்கு தெரியாததல்ல.

மணல் கொள்ளை

2003 ஆம் ஆண்டில் ஆற்று மணல் விற்பனையில் புதிய முறையை ஜெயலலிதா புகுத்தினார். அதுவே ஊழல்களுக்கும், மணல் கடத்தலுக்கும் வழிவகுத்தது என்பது உண்மை தான். 2006 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த நீங்கள் ஏன் இந்த முறையை ரத்து செய்யவில்லை? பா.ம.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்த வழக்கில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் அதை செயல்படுத்தாமல் உயர்நீதிமன்ற ஆணையை கிடப்பில் போட்டுவிட்டு மணல் கடத்தலை ஆதரிக்க வில்லையா?

அ.தி.மு.க. ஆட்சியில் எந்த தனி நபர் ஒட்டுமொத்த மணல் விற்பனையையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாரோ, அவர் தானே உங்கள் ஆட்சியிலும் மணல் கொள்ளையை தலைமையேற்று நடத்தினார். அரசியல் ரீதியாக எதிர்த்துக் கொள்ளும் அதிமுகவும், நீங்களும் இது போன்ற முறைகேடுகளில் மட்டும் ஒற்றுமையாய் இருப்பது எப்படி?

ஆவின் பால் கலப்பட ஊழலை செய்த வைத்தியநாதன் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர். ஆனால், ஆவின் நிறுவனத்திற்கு 104 லாரிகள் மூலம் பால் கொண்டு செல்வதற்கான ஒப்பந்தத்தை அவருக்கு வழங்கியது தி.மு.க. அரசு தானே? அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகும் அவருக்கு உரிமம் நீடித்தது என்றால் ஊழல் தொடர்பான விஷயங்களில் இரு கட்சிகளும் ஒரே நிலையில் இருப்பதாகத் தானே பொருள்.

தமிழினத் துரோகம்

இனம், மொழி காப்பதே எங்கள் குறிக்கோள் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க. அதற்காக என்ன செய்தது? இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டதை தடுப்பதற்காக 3 மணி நேர உண்ணாவிரத நாடகம் நடத்தியதைத் தவிர வேறு எதையாவது தி.மு.க. செய்ததா?
(முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட போது, திமுகவினர் சென்னையில் ஒட்டிய சுவரொட்டி)

1985 ஆம் ஆண்டு டெசோ அமைப்பின் சார்பில் தமிழகம் முழுக்க பொதுக்கூட்டங்களை நடத்திய கலைஞர், ‘‘இலங்கையில் தமிழீழம் அமைய ஆதரவு அளிப்போம்’’ என்பது உள்ளிட்ட 5 உறுதிமொழிகளை தி.மு.க. தொண்டர்களுக்கு செய்து வைத்தார். அதையெல்லாம் முதலில் கலைஞரும் நீங்களும் பின்பற்றினீர்களா?

ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்த போதிலும் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஏற்பட்ட எழுச்சியை தண்ணீர் ஊற்றி அணைத்த கட்சி தானே தி.மு.க.

தலைவர் பிரபாகரனின் தாயார்

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் உடல் நலம் முற்றிலுமாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெறுவதற்காக சென்னை வந்தபோது, மனசாட்சியே இல்லாமல், விமானத்திலிருந்து கூட இறங்க விடாமல் திருப்பி அனுப்பினீர்களே இது தான் இனத்தைக் காக்கும் செயலா?
(தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்ட போது, சுப. வீரபாண்டியன் ஒட்டிய சுவரொட்டி)

நீங்கள் பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பினீர்கள்... ஜெயலலிதா பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வந்து தூக்கில் போட வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். நீங்கள் இருவருமே தமிழர்களின் எதிரிகள் என்பதற்கு இதைவிட என்ன உதாரணம் வேண்டும்?

காவிரிப் பிரச்சினை

காவிரிப் பிரச்சினையில் 1974 ஆம் ஆண்டில் புதுப்பித்துக் கொள்ளப்படவேண்டிய காவிரி ஒப்பந்தத்தை அப்போதைய மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்து கைவிட்டது தி.மு.க. ஆட்சி தானே; இப்போது ஏற்பட்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அந்த தவறு தானே காரணம். திமுக ஆட்சியில் தானே காவிரி துணை நதிகளின் குறுக்கே ஹாரங்கி, ஹேமாவதி, கபினி உள்ளிட்ட அணைகள் அனுமதியின்றி கட்டப்பட்டன. இவற்றைத் தடுத்து நிறுத்த தி.மு.க. அரசு ஏதேனும் நடவடிக்கைகளை எடுத்ததா?

அதன்பின் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு அதன் இறுதித் தீர்ப்பு 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நிலையில் அத்தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடவும், அதனடிப்படையில்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக நடவடிக்கை எடுக்கத் தவறியது ஏன்? இப்படிப்பட்ட தி.மு.க.வுக்கு மேகதாது அணை பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?

முல்லைப் பெரியாறு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றபோது தவறான அணுகுமுறையை கடைப்பிடித்து தீர்ப்பு கிடைப்பதை தாமதமாக்கிய பெருமையும்  உங்களைத் தானே சாரும்.

கச்சத்தீவு

தமிழகத்திற்கு சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட போது, மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்து, தன் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழகத்திற்கு துரோகம் செய்தவர் தி.மு.க தலைவர் கலைஞர் தானே? தமிழக மீனவர்கள் இப்போது அனுபவித்துவரும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அந்த துரோகம் தானே காரணம்? பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு 20-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளை கட்டியபோது அதை தடுக்காமல் வேடிக்கைப் பார்த்தது உங்களின் தி.மு.க. அரசும், அ.தி.மு.க. அரசும் தானே?

மீத்தேன் திட்டம்

தமிழ்நாட்டில் மீத்தேன் திட்டம் வருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதே நீங்கள் தான்.  ஆனால், ஆட்சி மாறிய பின் அத்திட்டத்திற்கு எதிராக நீங்களே போராட்டம் நடத்துவது எந்த வகையில் நியாயம்.
(ஸ்டாலின் முன்னிலையில் மீத்தேன் திட்டம் கையொப்பம்)

கல்வி

1967 ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பாகவே தாய்மொழி வழிக் கல்வியை  அறிமுகம் செய்யப்போவதாக தி.மு.க. கூறியது. ஆனால், அதன்பின் 50 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இன்று வரை அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்றீர்கள்... இப்போது எங்கு தமிழ் இருக்கிறது.  இந்தியாவிலேயே தாய்மொழியாம் தமிழை படிக்காமல் பட்டம் பெற்றுவிடலாம் என்ற அவல நிலை தமிழகத்தில் மட்டுமே நிலவுகிறது.

அதைவிடக் கொடுமை முந்தைய தி.மு.க. ஆட்சியில் தான் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விமுறை தொடங்கப்பட்டது. அதை இப்போது அதிமுக அரசு தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தியிருக்கிறது. பத்தாம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால், அதை நிறைவேற்றுவதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக குறைந்த எண்ணிக்கையில் செயல்பட்டு வந்த சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில வழிப்பள்ளிகளை மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்திக் கட்டணக் கொள்ளைக்கு வழிவகுத்தது திமுக தானே?

சீக்காளி சென்னை

நிர்வாக சீர்கேடுகள் குறித்தும் வளர்ச்சிப் பணிகள் தடைபட்டிருப்பது குறித்தும் கவலைத் தெரிவித்திருக்கிறீர்கள்.  சற்றே பின்னோக்கிச் சென்று உங்களின் நிர்வாகம் எப்படி இருந்தது என்பதையும் பாருங்கள். 1996 ஆம் ஆண்டில் சென்னை மாநகர மேயராக பொறுப்பேற்றீர்கள். அப்போது  சென்னையை சிங்காரச் சென்னையாக்குவது தான் நோக்கம் என்றீர்கள். அதை நிறைவேற்றினீர்களா?  மேயராக 5 ஆண்டுகள் இருந்ததுடன், உள்ளாட்சித்துறை அமைச்சராக 5 ஆண்டுகள் சென்னையை நிர்வாகம் செய்துவந்திருக்கிறீர்கள்.

இந்த காலத்தில் சென்னை சிங்காரச் சென்னையாக மாறவில்லை. சீக்காளி சென்னையாகவே மாறியிருக்கிறது.  சென்னையில் எங்கு பார்த்தாலும் குப்பைகள், சாக்கடைக் கழிவுகள், கூவம் நாற்றம், காற்று மாசு, குடிநீர் பிரச்சினை, கொசுத்தொல்லை, போக்குவரத்து நெரிசல் ஆகியவை தான் நிரம்பியுள்ளன. கூவம் ஆற்றை தூய்மைப்படுத்துவதாகக் கூறி ரூ.1400 கோடியில் திட்டம் செயல்படுத்தினீர்களே.... இப்போது கூவம் மணக்கவா செய்கிறது... இப்போது நாற்றம் தானே வீசுகிறது. நீங்களும், அதிமுகவும் கூவத்தை தூய்மைப்படுத்துவதற்கான திட்டங்களைத் தீட்டி உங்கள் பைகளை நிரப்பிக் கொண்டதைத் தவிர வேறு உருப்படியாக வேறு எதையாவது செய்ததுண்டா?

தி.மு.க., அ.தி.மு.க - ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்

தமிழகம் இதுவரை கண்ட ஆட்சிகளில் இப்போதைய அ.தி.மு.க. ஆட்சியை விட மிக மிக மோசமான ஆட்சியைப் பார்க்க முடியாது. இன்றைய நிலையில் தமிழகத்தில் வளர்ச்சிப் பணிகளோ அல்லது மக்கள் நலப்பணிகளோ நடைபெறவில்லை. கோவில்களில் பூஜை செய்தல், தீச்சட்டி ஏந்துதல், காவடி எடுத்தல் போன்ற பணிகள் மட்டுமே நடக்கின்றன.
எங்கும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. நிர்வாக எந்திரம் செயலிழந்து விட்டது. தமிழகத்தின் இன்றைய அவலநிலைக்கு தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே காரணம். ஊழலையும், முறைகேடுகளையும் தி.மு.க. தொடங்கி வைத்தது. அதை அ.தி.மு.க. பிரம்மாண்டமாக்கியிருக்கிறது. இந்த குற்றத்திலிருந்து இரு கட்சிகளுமே தப்பிக்க முடியாது.

நீங்கள் விஞ்ஞானப்பூர்வமாக செய்த ஊழலை நீதிபதி சர்க்காரியா ஆணையம் அம்பலப்படுத்தியது. அதன்பின் 1991&96 ஆட்சியில் செய்த ஊழலுக்காகத் தான் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறையும்,  ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தை சீரழித்ததில் அதிமுகவும், திமுகவும் தனித்தனி கட்சிகள் அல்ல... அவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் தான்.

ஒளிமயமான தமிழ் நாடு: பாமக சாதித்துக் காட்டும்

இன்றைய நிலையில் தமிழகம் மிகுந்த நோய்வாய்ப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில்(ICU)  கவலைக்கிடமாக கிடத்தப்பட்டிருக்கிறது என்று நீங்கள் கவலை தெரிவித்திருக்கிறீர்கள். இனி அந்தக் கவலை உங்களுக்குத் தேவையில்லை. அவசர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடும் நோயாளியைக் கூட காப்பாற்றும் சக்தி மருத்துவர்களுக்கு உண்டு. அந்த வகையில் மக்கள் விருப்பப்படி பா.ம.க. ஆட்சிக்கு வந்தபின்னர் கவலைக்கிடமாக உள்ள தமிழகத்தை மருத்துவராகிய நான் குணப்படுத்தி நல்ல நிலைக்கு கொண்டு வருவேன்.

நன்றி!

தங்கள் அன்புள்ள

மருத்துவர் அன்புமணி இராமதாஸ்