Pages

செவ்வாய், பிப்ரவரி 25, 2014

ஐ.நா மனித உரிமை ஆணையார் நவநீதம் பிள்ளை அறிக்கை இதோ: இலங்கை மீது அனைத்துலக விசாரணைக்கு பரிந்துரை !

சிறிலங்கா தொடர்பில் சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்கு பரிந்துரைக்கும், ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் நவி பிள்ளை அவர்களுடைய அறிக்கையை ஐநா மனித உரிமைப் பேரவை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமைப் பேரவையில் எதிர்வரும் மார்ச் 26 ஆம் நாள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

18 பக்கங்கள் கொண்டுள்ள இந்த அறிக்கையின் முன்னுரையில், உள்நாட்டு விசாரணை பொறிமுறைகள் சிறிலங்காவில் தோல்வியடைந்ததுள்ள நிலையில், சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்கான பொறிமுறைக்கு பரிந்துரை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகள் சிலவன முன்னேற்றம் கண்டிருப்பதனை ஒத்துக் கொள்வதாகவும், எனினும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் சுதந்திரமான மற்றும் நம்பகமான விசாரணைகள் உறுதி செய்ய முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் அலுவலகம் பரிந்துரைத்த சிறப்பு பொறிமுறைகள் ஊடான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு சிறிலங்கா உரிய பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, வெளிவந்துள்ள புதிய ஆதாரங்கள் ஆயுத மோதல்களின் இறுதி கட்டங்களில் நடந்த நிகழ்வுகளை வெளிப்படத்  தொடர்கிறது எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தப் பின்னணியில் , சுதந்திரமான அனைத்துலக விசாரணைப் பொறிமுறைக்கு ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகம் பரிந்துரைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையான அறிக்கை இதோ:

வெள்ளி, பிப்ரவரி 21, 2014

ராஜீவ் கொலை பயங்கரவாதம் அல்ல: வடஇந்தியர்களின் இனவெறி குறையுமா? 

'ராஜீவ் காந்தியின் கொலை ஒரு தனிப்பட்ட பழிவாங்கும் சம்பவம். அதனை பயங்கரவாதமாகக் கருத முடியாது. கொலை செய்தவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. அந்த நிகழ்வு இந்திய தேசத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல' என்று இந்திய உச்சநீதிமன்றம் 1999 ஆம் ஆண்டிலேயே தீர்ப்பளித்துள்ளது (08.10.1999).

ஆனால், அதனை ஒரு பயங்கரவாத நிகழ்வு என வடஇந்தியர்கள் இன்னமும் பேசுகின்றனர். பயங்கரவாதிகளை தமிழகம் ஆதரிப்பதாக இனவெறி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வடஇந்திய ஊடகங்களும் அரசியல்வாதிகளும் கொந்தளிக்கின்றனர். 

"நாட்டின் பிரதமராக இருந்தவரை பயங்கரவாதிகள் மிகவும் கொடூரமாகப் படுகொலை செய்தனர். பயங்கரவாதச் செயல் என்பது நாடு மீது தொடுக்கப்படும் போருக்கு சமமாகும். அந்த வகையில் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்யும் நடவடிக்கை தேசியப் பாதுகாப்புக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலுக்கு ஒப்பாகும்" - என்கிறார் பா.ஜ.க'வின் அருண் ஜேட்லி.

"பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் இரு வேறு நிலைகளை எந்த கட்சியும் கொண்டிருக்க முடியாது. ஆனால், நாட்டின் பிரதமராக இருந்தவரை கொன்றவர்களுக்கு விடுதலை பெற்றுத் தர ஒரு மாநில அரசே ஆர்வம் காட்டுவது வெட்கக்கேடான செயலாக உள்ளது' - என்கிறார் சட்டத் துறை அமைச்சர் கபில் சிபல்.
"ஈவு இரக்கமற்ற படுகொலையை நிகழ்த்தியவர்கள் பயங்கரவாதிகள். அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த நடவடிக்கை துரதிருஷ்டவசமானது" - என்கிறார் தகவல் ஒலிபரப்பு அமைச்சர் மணீஷ் திவாரி.

"ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், இந்தியாவின் ஆன்மா மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலாகும்" - என்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான இந்த இனவெறி பொய்ப் பிரச்சாரம் நிறுத்தப்பட வேண்டும். 

ஆம் ஆத்மி கட்சிக்காரர்கள் 'ஆப்பிரிக்க பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்' என்று குற்றம்சாட்டியவுடன், அப்பிரிக்க தூதரகங்கள் கண்டனம் தெரிவித்தன. இந்திய அரசு உடனே பணிந்து போனது. ஆனால், தமிழனுக்கு என்று உலகில் ஒரு நாடும் இல்லை என்கிற இளக்காரத்தில் வடஇந்தியர்கள் - தமிழகம் பயங்கர வாதிகளை ஆதரிக்கிறது - என அபாண்டமான குற்றச்சாட்டுகளை வீசுகின்றனர். இந்த அநீதிக்கு முடிவு வரவேண்டும்.

ராஜீவ் கொலை பயங்கரவாதம் அல்ல: உச்சநீதி மன்றம்

"பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி இவர்களில் யாரும் பயங்கரவாதிகள் இல்லை. ராஜீவ் காந்தி கொலை ஒரு பயங்கரவாத நடவடிக்கையே அல்ல. தனிப்பட்ட பகையின் காரணமாக ராஜீவ் காந்தியை கொலை செய்ய பிரபாகரன் உத்தரவிட்டார். இது இந்தியாவுக்கோ இந்திய மக்களுக்கோ எதிரானது அல்ல. இந்திய அரசுக்கு எதிராக அல்லது இந்திய மக்களிடையே பீதியை உண்டாக்க இந்த சம்பவம் நடக்கவில்லை.
ராஜீவ் காந்தி என்கிற ஒருவரைத் தவிர வேறு யாரையும் கொலைசெய்யும் நோக்கம் இவர்களில் யாருக்கும் இல்லை" - இப்படியாக, 'ராஜீவ் காந்தி கொலை ஒரு பயங்கரவாதச் செயலே இல்லை' என்று உச்சநீதிமன்றம் 08.10.1999-ல் தீர்ப்பளித்தது.

Supreme Court verdict on the Rajiv Gandhi assassination case:

Justice Thomas found it difficult to "conclude that the conspirators intended, at any time, to overawe the Government of India as by law established. Nor can we hold that the conspirators ever entertained an intention to strike terror in people or any section thereof."

Justice Thomas reasoned that there was no evidence to suggest that the LTTE's intention had been to overawe the Government of India. Although the expression 'terrorist' can be used to refer to any person for acting to "deter the Government from doing anything or refrain from doing anything," the Judge said that was not Prabakaran's intention. He was "not against India or the Indian people but against the former leadership in India who is against the Tamil liberation struggle and the LTTE".

Justice Wadhwa said: "There is nothing on record to show that the intention to kill Rajiv Gandhi was to overawe the Government."

தனிப்பட்ட பகையால் நிகழ்ந்த ஒரு கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பயங்கரவாதிகள் என்பது என்ன நியாயம்? 'தமிழகம் பயங்கரவாதிகளை ஆதரிக்கிறது. இது தமிழ் மக்களின் இனவெறி' என்றெல்லாம் - வட இந்திய ஊடகங்களும் அரசியல்வாதிகளும் ஏன் கொந்தளிக்கின்றனர்? 

தமிழர்களுக்கு எதிரான இனவெறி பிரச்சாரத்தை கைவிடுவதுதான் வட இந்தியாவுக்கு நல்லது. 

இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்தியப் பெருங்கடலை கட்டுப்படுத்தும் கடற்கரை பரப்பு தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்!

ராஜீவ் கொலை பயங்கரவாதம் அல்ல என உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பு குறித்து இங்கே காண்க: RAJIV GANDHI ASSASSINATION CASE - Out of the TADA net

வியாழன், பிப்ரவரி 20, 2014

7பேர் விடுதைலைக்கு உச்சநீதிமன்றம் தடை: தமிழ்நாடு அரசு முறையாக செயல்படவில்லை!

"இந்தத் தவறு தெரிந்தே நடந்ததா? தெரியாமல் நடந்ததா?" தமிழக அரசு விதிமுறைகளின் கீழ் விடுதலை செய்யவில்லை என்கிறது உச்சநீதிமன்றம். 
கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இருக்கிறது. ஆனால், அதனை முறைப்படி செய்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசு உரிய வழிமுறைகளை பின்பற்றி இருக்க வேண்டும் என்கிறது உச்சநீதிமன்றம். 

The court said the state is expected to comply with the procedural checks and that the court was ‘inclined’ to go into the issue. Remission is not automatic and that every state is obligated to follow the procedure before releasing any convict, ruled the court.

The apex court told the TN government that the court was not underestimating the state’s power but it acquired to be assured of procedural compliance by the state.
அவர் அப்படின்னா....!
இவங்க இப்படி....!
நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் 
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடி கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி!

In haste, Jayalalithaa threw away rule book?

புதன், பிப்ரவரி 19, 2014

நீதியரசர் சதாசிவம்: வரலாற்று சிறப்புமிக்க முழுமையான தீர்ப்பை இங்கே காண்க

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 18.2.2014ல் தீர்ப்பளித்திருந்தது. அத்துடன், இவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில் தமிழக அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தை 19.2.2014ல் கூட்டிய முதலமைச்சர் ஜெயலலிதா, பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று சட்டப்பேரவையில் அறிவித்திருக்கிறார்.

அந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு இதோ:

ஏழு பேர் விடுதலைக்கு வரவேற்பு: 20 ஆண்டு சிறையில் வாடும் வீரப்பனின் சகோதரர் மாதையனை விடுதலை செய்ய வேண்டும்

ஏழு பேர் விடுதலைக்கு வரவேற்பு: 20 ஆண்டுகளாக சிறையில் வாடும் வீரப்பனின் சகோதரர் மாதையனை விடுதலை செய்ய மருத்துவர் இராமதாசு அய்யா கோரிக்கை

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:

"பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அத்துடன், இவர்கள் ஆயுள் தண்டனைக் காலத்தை கழித்து விட்டதால் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432, 433 ஆகிய பிரிவுகளின்படி  அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் மட்டுமின்றி, இதே வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனைக் காலம் முடிவடைந்த பிறகும் சிறையில் வாடும் நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரையும் சேர்த்து விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை நான் வலியுறுத்தியிருந்தேன்.

இந்த நிலையில் தமிழக அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தை இன்று கூட்டிய முதலமைச்சர் ஜெயலலிதா, பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று சட்டப்பேரவையில்  அறிவித்திருக்கிறார். இவர்களின் விடுதலைக்கான சட்டபூர்வ நடைமுறைகள் தொடங்கப்பட்டிருப்பதால் அடுத்த சில நாட்களில் இவர்கள் 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களின் விடுதலை காலம் தாழ்த்தப்பட்ட ஒன்று  என்றபோதிலும் வரவேற்கப்பட வேண்டியதாகும்.

செய்யாத குற்றத்திற்காக 23 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு, தங்களது வாழ்க்கையின் முக்கியமான காலகட்டத்தை இழந்துவிட்ட இவர்கள், விரைவில் விடுதலை ஆவார்கள் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விடுவிக்கப்பட்ட பின்னர் இவர்கள் 7 பேரும்  அவர்கள் விரும்பியவாறு, தொல்லையில்லாத, அமைதியான வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும்  தமிழக அரசே செய்து தர வேண்டும் .

மாதையனை விடுவிக்க வேண்டும்

நளினி உள்ளிட்டோரைப் போன்றே தண்டனைக் காலம் முடிவடைந்தும் ஏராளமானோர் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர். பல்வேறு பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்ட வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.  

அவர் மீது தொடரப்பட்டுள்ள எந்த வழக்கிலும் அவருக்கு தொடர்பு இல்லை. ஒரு வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தண்டனைக் காலம் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆகியும் அவர் விடுதலை செய்யப்படவில்லை. 65 வயதைக் கடந்த மாதையன் நீரிழிவு நோய், அதிக இரத்த அழுத்தம், பார்வைக் குறைபாடு உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு வருகிறார்.

அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவரைப் போலவே தண்டனைக் காலம் முடிந்த பிறகும் சிறையில் வாடும் அனைத்துக் கைதிகளையும் கருணை அடிப்படையில் அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்."

தமிழக அரசின் அதிரடி: முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை!

முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 6 பேரை உடனே விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவு

"ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில் ஆயுள் தண்டனை குறைப்பு பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். மேலும், வேலூர் சிறையில் இருந்த நளினியும் விடுவிக்கப்படுவார்.
நளினியுடன், ஜெயச்சந்திரன், ராபர்ட் பயாஸ் போன்றோரும் விடுதலை செய்யப்படுவார்கள். மேற்குறிப்பிட்ட 6 பேரையும் விரைவில் விடுதலை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும். 3 நாட்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்காவிட்டால் அந்த 6 பேரையும் தமிழக அரசே விடுதலை செய்யும்" - முதல்வர் ஜெயலலிதா

"வானளாவிய அதிகாரத்தை நிரூபித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி! கலைஞர் முதல்வராக இருந்திருந்தால் இது சாத்தியம் இல்லை"

தொடர்புடைய சுட்டி: 

மூன்றுபேர் விடுதலை: முதல்வர் ஜெயலலிதா இப்போது கடவுளுக்கு நிகரானவர்!

செவ்வாய், பிப்ரவரி 18, 2014

மூன்றுபேர் விடுதலை: முதல்வர் ஜெயலலிதா இப்போது கடவுளுக்கு நிகரானவர்!

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை 23 வருட சிறைவாசத்திற்கு பின்னர் ரத்து செய்யப்பட்டது. இதற்காக நீதியரசர் சதாசிவம் அவர்களுக்கு தமிழினம் கடமைப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், இவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவுசெய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது (Considering the fact that the convicts were languishing jail for nearly 23 years, the Bench also gave a ray of hope for their release by saying that the State government could exercise its remission powers under Section 432 and 433 and following the due procedure in law).

எனவே, 14 ஆண்டு சிறைத்தண்டனை முடிந்தவர்களை குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432, 433 இன் கீழ் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது.

மன்னிப்பு - ஒரு வானளாவிய அதிகாரம்!

இந்தியாவில் நீதிமன்றங்களுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் மட்டும்தான் உண்டு. அந்த தண்டனையை நிறைவேற்றும் அதிகாரம் கிடையாது. தண்டனையை நிறைவேற்றுவது அல்லது அதனை மன்னிப்பது அரசாங்கத்தின் அதிகாரம் ஆகும். இந்த மன்னிப்புக்கும் நீதிமன்ற தண்டனைக்கும் எந்த தொடர்பும் இல்லை.
குற்றம் எதுவானாலும் விசாரணை தொடங்கும் முன்பு, விசாரணை நடக்கும் போது, தண்டனை அளிக்கப்பட்ட பின்பு என எப்போது வேண்டுமானாலும் அரசாங்கம் எந்த ஒரு குற்றவாளியையும் மன்னிக்கலாம். இது ஒரு உச்சபட்சமான அதிகாரம் ஆகும். இந்திய அரசியல் அமைப்பின் 161 ஆம் பிரிவின்படி மாநில அரசுக்கு இந்த மன்னிக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மன்னிக்கும் அதிகாரம் ஒரு வானளாவிய அதிகாரம். 

நேற்றுவரை தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை குறைக்கும் அதிகாரம், அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் என இரண்டு அதிகாரங்கள் இருந்தன. உச்சநீதிமன்றம் மரணதண்டனையை குறைத்துள்ளதால், இப்போது விடுதலை செய்யும் அதிகாரம் மட்டுமே மீதமிருக்கிறது.

விடுதலை செய்யும் அதிகாரத்தில் இந்திய உச்சநீதிமன்றத்தை விட மேலான அதிகாரம் படைத்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா இருக்கிறார் என்பது இங்கே கவனிக்கத் தக்கதாகும்.

எனவே, கடவுளுக்கு இருப்பதாகக் கருதப்படும் அதே அதிகாரம் இப்போது தமிழக முதல்வருக்கும் இருப்பதால் - 

14 ஆண்டு சிறைதண்டனை முடிந்தவர்கள் விடுவிக்கப்படலாம் என்கிற குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432, 433 பிரிவுகளின் கீழோ; எப்போது வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் மன்னித்து விடுதலை செய்யலாம் என்கிற இந்திய அரசியல் சாசன அதிகாரம் 161 இன் கீழோ;

சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உட்பட நீண்டகாலமாக சிறையில் இருப்போர் அனைவரையும் மன்னித்து விடுதலை செய்ய வேண்டும்.

தொடர்புடைய சுட்டிகள்:

1. அவசரம்: 3 பேரின் தூக்கு தண்டனையை எதிர்ப்போர் கவனத்திற்கு!

2. தூக்குதண்டனை-சட்டமன்ற தீர்மானம்: முதலமைச்சருக்கே அதிகாரம் இருக்கும் போது நடுவண் அரசிடம் கெஞ்சலாமா? 


3. முதலமைச்சர் நினைத்தால் இப்போதும் 3 உயிர்களை காக்க முடியும்.


4. தூக்கு: தமிழக தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று கூறும் மத்திய அரசின் மூக்குடைக்கும் வழி என்ன?


5. மருத்துவர் இராமதாசு அவர்கள் முதலமைச்சருக்கு எழுதிய கடிதம் -இங்கே காண்க. (தமிழ்)

திங்கள், பிப்ரவரி 17, 2014

இலங்கை: இனப்படுகொலையா? போர்க்குற்றமா? - கட்டுக்கதைகளும் உண்மையும்!

ஈழத்தில் ராஜபக்சே அரசால் நடத்தப்பட்ட கொடூரங்களுக்கு நீதிகேட்டு நடக்கும் போராட்டங்கள் ஓரளவுக்கேனும் பயன்தரும் நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் 'தவறான பாதையில் வேகமாக ஓடுவது' போன்று ஒரு தவறான பிரச்சாரம் தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படுகிறது. இது நீதிக்கான பாதையில் போடப்படும் முட்டுக்கட்டையாக மாறக்கூடும்.

தமிழர்கள் மத்தியில் 'இனப்படுகொலை', 'பொதுவாக்கெடுப்பு' என்கிற வார்த்தைகள் பேசப்படுகின்றன. இவை முக்கியமான வார்த்தைகள்தான். ஆனால், இன்றைய தருணத்தில், இவற்றைவிட மிக முக்கியமான வார்த்தை 'சர்வதேச விசாரணை' என்பதுதான். அதிலும் 'சர்வதேச விசாரணைக்கு இந்திய அரசு துணை நிற்க வேண்டும்' என்பதே இப்போது மிகமிக முதன்மையான தேவை ஆகும்.

ஆனால், 'போர்க்குற்றம் என்று சொல்வதே குற்றம். இனப்படுகொலை என்றுதான் சொல்ல வேண்டும்', 'போர்க்குற்றம் என்று சொல்வது சர்வதேசம் தமிழர்களை வஞ்சிக்கும் செயல்' என்றெல்லாம் இப்போது பேசுகிறார்கள். இந்தப் பிரச்சாரங்களுக்கு என்ன அடிப்படை, என்ன நோக்கம், என்பதெல்லாம் விளங்கவில்லை.

இனப்படுகொலையா? போர்க்குற்றமா?

இந்தக் கேள்வியே முட்டாள் தனமானது. ஏனெனில், இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. இனப்படுகொலை, போர்க்குற்றம் இரண்டும் ஒரே வகையான சர்வதேச சட்டங்களில் அடங்குகின்றன. இலங்கையில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளன. சர்வதேச சட்டம் என்கிற வரையறைக்குள் போர்க்குற்றம் (war crimes), மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் (crimes against humanity), இனப்படுகொலை (genocide) என எல்லாமும் அடங்கும்.
"போர்க்குற்றம் என்று சொல்வதே குற்றமாம்"
சர்வதேச சட்டங்கள், குறிப்பாக - சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டது குறித்து விசாரிக்க வேண்டும் (investigate the alleged violations of international human rights and humanitarian law) என ஐநா மனித உரிமைகள் ஆணையர் கோரிக்கை வைத்துள்ள நிலையில் - இனப்படுகொலை குறித்த விசாரணையை யாரும் கேட்கவில்லை என்று பேசுவது குதர்க்கமானது.

ஐநா தீர்மானத்தில் இனப்படுகொலை விசாரணைக்கு வாய்ப்பு இருக்கிறதா?

இப்போதைய நிலவரப்படி ஐநாவில் வரவுள்ள தீர்மானத்தில் இனப்படுகொலை விசாரணைக்கு வாய்ப்பு இல்லவே இல்லை என்று கூறிவிட முடியாது. மாறாக, இனப்படுகொலை என்று நேரடியான சொல் இடம்பெறாமல் போனாலும், அதையும் சேர்த்து விசாரிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

ஐநா மனித உரிமை ஆணையர் வெளியிட இருக்கும் அறிக்கையில் "சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டது குறித்து விசாரிக்க வேண்டும்" என்கிற வாசகம் இருப்பதாக செய்திகள் கூருகின்றன (establish an international inquiry mechanism to further investigate the alleged violations of international human rights and humanitarian law).

இதே கோரிக்கை 2012 மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்தில் 'இதற்கான தேவை இருப்பதைக் கவனத்தில் கொள்வதாக' ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது (Noting the High Commissioner’s call for an independent and credible international investigation into alleged violations of international human rights law and international humanitarian law).

பிப்ரவரி 6 ஆம் நாள் அமெரிக்க செனட்டில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்திலும் போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இதர மனித உரிமைக் குற்றங்கள் குறித்து விசாரிக்க வேண்டும்' என்று கோரப்பட்டுள்ளது (international accountability mechanism to evaluate reports of war crimes, crimes against humanity, and other human rights violations).

பிப்ரவரி 10 ஆம் நாள் பிரிட்டன் அரசு அளித்த தகவலிலும் பன்னாட்டு விசாரணைக்கான தீர்மானத்தை முன்வைக்க இருப்பதாகக் கூறியுள்ளது.

எனவே, இப்போதைய நிலவரப்படி - ஒரு சர்வதேச விசாரணைக்கான தீர்மானம் ஐநா மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவரப்படுமானால் அதில் பின்வரும் வாசங்களில் ஏதேனும் ஒன்று இடம்பெறக் கூடும்:

"சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் (international human rights and humanitarian law) மீறப்பட்டது குறித்து விசாரணை"

(அல்லது)

"போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இதர மனித உரிமைக் குற்றங்கள் (war crimes, crimes against humanity, and other human rights violations) குறித்த பன்னாட்டு விசாரணை"

- இந்த இரண்டு வாசகங்களிலும் இனப்படுகொலையும் சேர்த்தே விசாரிக்கப்படும் என்பது உள்ளடங்கி இருக்கிறது.

போர்க்குற்றம் என்று சொல்லாதே - என்பதில் என்ன தவறு?

சர்வதேச குற்றவியல் சட்டங்கள் என்றால் - போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை என்கிற மூன்றுவிதமான குற்றங்களை அவை முதன்மையாகக் குறிக்கின்றன.

பன்னாட்டு நீதிவிசாரணை அமைப்புகள் இந்த மூன்றுவிதமானக் குற்றங்களையுமே மிகத் தீவிரமான குற்றங்களாக  வரையறுக்கின்றன. எனவே, இவற்றில் ஒன்று இலேசானக் குற்றம் என்றோ, மற்றொன்று தீவிரமான குற்றம் என்றோ சொல்ல முடியாது. இவை எல்லாமும் மிகக் கொடூரமானக் குற்றங்களே ஆகும்.

மேலும், ஒரு சர்வதேசக் குற்றமானது எந்த வகையானக் குற்றம் என்பது நீதிவிசாரணையின் முடிவிலேயே தெரிய வரும். எடுத்துக்காட்டாக 'ஒரு படுகொலை நிகழ்வை' - போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை என மூன்று நிலைகளிலும் குற்றமாக வகைப்படுத்த முடியும்.

1. போர்க்காலத்தில் ஆயுதமற்ற குடிமக்கள் கொலை செய்யப்பட்டால், அது போர்க்குற்றம். 2. அதுவே பரவலாகவோ திட்டமிட்டோ செய்யப்பட்டால் அது மனித குலத்துக்கு எதிரான குற்றம். இவை போரிலோ போரில்லாமலோ நடந்திருக்கலாம். 3. மேற்கண்ட குற்றங்களில் 'ஒரு இனத்தை அல்லது குழுவை அழிக்க வேண்டும்' என்கிற உள்நோக்கம் இருந்திருந்தால் அது இனப்படுகொலை.

- இந்த மூன்றுவகைக் குற்றங்களில் - போர்க்குற்றத்தை நிரூபிப்பது எளிது. மனித குலத்துக்கு எதிரான குற்றத்தை நிரூபிப்பது கடினம். இனப்படுகொலையை நிரூபிப்பது மிகக் கடினம்.

அதாவது, ஒரே சம்பவத்துக்காக மூன்று வகை குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தால் - இனப்படுகொலையை நிரூபிக்க முடியாத தருணத்தில்,  மனித குலத்துக்கு எதிரான குற்றத்தில் தண்டிக்க முடியும். இவை இரண்டையும் நிரூபிக்க இயலாவிட்டாலும் - போர்க்குற்றத்தில் தண்டிக்க முடியும்.
'போர்க்குற்றம் என்று சொல்கிறவர்களுக்கு எதிர்ப்பு'
சர்வதேச குற்றவழக்கு விசாரணை என்பது ஒவ்வொரு குற்ற நிகழ்வையும் தனித்தனியாக விசாரிக்கக் கூடியது என்பதால் 'இனப்படுகொலை' என்கிற ஒற்றைக் குற்றச்சாட்டை மட்டுமே வைத்தால், அதன்மூலம் பெரும்பாலான குற்றங்களை நிரூபிக்க முடியாமல் போய்விட வாய்ப்பு உள்ளது.

இலங்கையில் நடந்த சர்வதேசக் குற்றங்களில் ராஜபக்சேவைக் குற்றவாளியாக ஆக்கினால் - போர்க்குற்றத்தின் கீழ் அவரைத் தண்டிப்பது மிக எளிது. மனித குலத்துக்கு எதிரான குற்றத்திலும் தண்டிக்க முடியும். இனப்படுகொலை குற்றச்சாட்டில் தண்டிப்பது கடினமாக இருக்கும்.

மூன்றுவகையான குற்றச்சாண்டிலும் தண்டனை அதிகம் உண்டு. ஒரே குற்றவாளியை முன்று குற்றச்சாட்டுகளில் கீழும் தண்டிக்க முடியும். அதாவது - குற்றம் ஒன்றுதான் என்றாலும், அதற்கு மூன்றுவிதமான குற்றப் பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்க முடியும்.

இதில் - மிக எளிதாக நிரூபிக்கக் கூடிய குற்றச்சாட்டை எழுப்பக்கூடாது. ஆனால், நிரூபிப்பதற்கு மிகக் கடினமாக இருக்கும் குற்றச்சாட்டை மட்டுமே எழுப்ப வேண்டும் என தமிழ்நாட்டில் விசித்திரமாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.

'போர்க்குற்றம் என்று சொல்லாதே' என்பதில் உள்ள ஆபத்து என்ன?

போர்க்குற்றம் என்பது தனிப்பட்ட அளவிலேயே மிகப்பெரிய கொடுங்குற்றம். இதனை மிகச் சாதாரணமான குற்றமாகக் காட்டுவது மக்களைக் குழப்பும் செயல். அடுத்ததாக - போர்க்குற்றம் என்று பேசும் எல்லோரும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் (crimes against humanity) என்பதையும் சேர்த்தே பேசுகின்றனர். மனிதகுலத்துக்கு எதிரான குற்றம் என்பதும் கிட்டத்தட்ட இனப்படுகொலைக்கு இணையான குற்றச்சாட்டாகும்.

இந்த இரண்டு குற்றச்சாட்டுகளையும் இலங்கை மீது சர்வதேச சமூகம் முன்வைக்கிறது. அதுமட்டுமல்லாமல், 'பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்கள்' என்று கூறுவதன் மூலம் இனப்படுகொலை நடந்ததா என்று பார்ப்பதற்கான வாய்ப்புகளையும் உள்ளடக்கிதான் சர்வதேச சமூகம் பேசுகிறது. 

அதாவது, இன்றைய நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐநா உள்ளிட்ட எல்லோரும் தமிழர்களுக்கு ஆதரவாகவே உள்ளனர். 'போர்க்குற்றம் என்று சொல்லாதே' என்பன் மூலம் இன்று தமிழர்களுக்கு நண்பர்களாக இருப்பவர்களையே எதிரிகளாக சித்தரிக்கும் முயற்சி நடக்கிறது.
போர்க்குற்றம் என்று சொல்வதே குற்றமாம்"
இவ்வாறு, தமிழர்களுக்கு நீதிகிடைக்க குரல் கொடுப்பவர்களையே - நீதிக்கு எதிராக நடப்பவர்கள் போல குற்றம் சாட்டுவது நியாயம் இல்லை.

போர்க்குற்ற விசாரணையக் கேட்பவர்கள் தமிழர்களின் எதிரிகள் என்றால், உலகில் தமிழனுக்கு ஆதரவாக ஒரே ஒரு நாடும் இருக்காது. எனவே, 'போர்க்குற்றம் என்று சொல்லாதே' என்று கூறுகிறவர்கள் ராசபக்சேவுக்கு ஆள் சேர்ப்பதாகவே கருத முடியும்.

இனப்படுகொலை விசாரணைத் தேவை இல்லையா?

இனப்படுகொலை விசாரணை கட்டாயம் தேவை. ஆனால், அதற்கு நேரடியாக உடன்படும் நிலையில் இன்றைய சர்வதேச நிலை இல்லை. 'எல்லா சர்வதேச சட்ட மீறல்களையும் விசாரிக்க' ஒரு சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, அந்த ஆணையம் இனப்படுகொலை நடந்ததற்கான முகாந்திரங்களை வெளியிடுமானால் - அதன் பின்னர் இனப்படுகொலை குறித்த விசாரணைக்கும் வாய்ப்பு உண்டு.

மாறாக, இப்போதே ஒரு இனப்படுகொலை விசாரணை தேவை (whether or not acts of genocide have occurred) என்றால் - அதனை முன்வைக்க தகுதி வாய்ந்த ஒரே நாடு இந்தியா மட்டுமே.

உலகில் மூன்று குற்றங்களும் விசாரிக்கப்பட்டுள்ளனவா?

உலகில் இதுவரை அமைக்கப்பட்டுள்ள சர்வதேச நீதிவிசாரணை அமைப்புகள் பலவற்றிலும் இந்த மூன்றுக் குற்றச்சாட்டுகளும் ஒரே நேரத்தில் விசாரிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் யூகோசுலோவியா, ருவாண்டா, கம்போடியா, கிழக்கு திமோர் உள்ளிட்ட உள்நாட்டுப் படுகொலை நடந்த இடங்கள் அனைத்திற்காகவும் அமைக்கப்பட்ட நீதி மன்றங்கள் 'போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை' என இவை மூன்றையும் விசாரித்துள்ளன.

உண்மையில் விசாரணைக்கு பின்னரே ஒரு குற்றச்செயலை 'போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை' என ஏதேனும் ஒன்றிலோ, ஒன்றுக்கு மேற்பட்டோ வகைப்படுத்துகின்றனர்.

உலகிலேயே முதன் முறையாக - எங்கும் இல்லாத அதிசயமாக - 'போர்க்குற்றத்தை விசாரிக்காதே, இனப்படுகொலையை மட்டும் விசாரி' என்று கோருகிறவர்கள் தமிழர்களாக மட்டுமே இருக்கும்!

போர்க்குற்றம் என்றால் ஒரு சிலர் தண்டிக்கப்படுவதோடு முடிந்துவிடுமா?

இது ஒரு தவறான பிரச்சாரம். தண்டனையைப் பொருத்தவரை 'போர்க்குற்றம், இனப்படுகொலை' இரண்டுக்கும் பெரிய வேறுபாடு ஏதும் இல்லை. தண்டனைக் காலம் வேண்டுமானால் மாறுபடலாம்.

போர்க்குற்றம் என்றால் ஒரு சிலர் மட்டுமே தண்டிக்கப்படுவார்கள் என்று கூறப்படுவது உண்மை என எடுத்துக்கொண்டால் - இனப்படுகொலை என்று சொன்னாலும் அதுதான் நடக்கும்.

இரண்டிலுமே தனிநபர்கள்தான் தண்டிக்கப்படுவார்கள். குற்றம் இழைத்தவர்கள் மட்டுமின்றி அதற்கு காரணமானவர்களும் குற்றம் சாட்டப்படுவார்கள். எனவே, கீழ்நிலை இராணுவத்தில் தொடங்கி, ராஜபக்சே வரை எல்லோரும் குற்றம் சாட்டப்படுவார்கள்.

பிரேமன் மக்கள் தீர்ப்பாயம் இனப்படுகொலை என்று தீர்ப்பளித்துள்ளதே?

நிரந்த மக்கள் தீர்ப்பாயம் என்பது ஒரு நீதிமன்றமோ, அரசுகள் பங்கேற்கும் ஒரு பன்னாட்டு அமைப்போ அல்ல. அந்த அமைப்புக்கு சட்டரீதியான எந்த வலிமையும் இல்லை. அங்கீகாரமும் இல்லை. ஐக்கிய நாடுகள் அவையில் நேரடியாக பங்கேற்று கருத்துகளை முன்வைக்கக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட ஐநா ஆலோசனை அமைப்பும் அது அல்ல.

ஒரு அரசு சாரா மக்கள் அமைப்பின் கருத்து என்கிற அளவுக்கு மட்டுமே நிரந்த மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எடுத்துக்கொள்ள முடியும். ஆனாலும், அந்த மக்கள் தீர்ப்பாய முயற்சிகள் வரவேற்கத் தக்கவை.

நிரந்த மக்கள் தீர்ப்பாயமும் கூட - அதன் டப்ளின் விசாரணையில் 'போர்க்குற்றம் மற்றும் மனித குலத்துக்கு எதிரானக் குற்றங்கள்' நடந்தன என்று கூறி, பின்னர் இந்தக் குற்றச்சாட்டுகளுடன் 'இனப்படுகொலை' குற்றத்தையும் சேர்க்க வேண்டும் என்று கூறி பிரேமன் தீர்ப்பாய விசாரணை நடத்தப்பட்டது.

எனவே, நிரந்த மக்கள் தீர்ப்பாயமும் கூட 'போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரானக் குற்றங்கள், இனப்படுகொலை' என மூன்று வகையான குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கிறது.

இப்போதைய தேவை என்ன?

ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அனைத்து சர்வதேச சட்ட மீறல்கள் குறித்து ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என்பதே இப்போதைய கோரிக்கையாக இருக்க வேண்டும். 

சர்வதேச சட்ட மீறல்கள் எனும் போது 'போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை' அனைத்தையும் விசாரிக்க வேண்டும் என்பதே சரியான கோரிக்கையாக இருக்க முடியும்.

எனவே இன்றைய உடனடி கோரிக்கையாக இருக்க வேண்டியது 'சர்வதேச விசாரணை' என்பதுதான். இந்தக் கோரிக்கைக்கு தடையாக இருக்கக் கூடிய முதன்மை நாடு இந்தியா என்பதால் - தமிழ்நாட்டு தமிழர்களின் போராட்டமும் இந்திய அரசை நோக்கியே இருக்க வேண்டும்.

'சர்வதேச விசாரணைக்கு இந்திய அரசு துணை நிற்க வேண்டும்' என்பதே இப்போது முதன்மையான தேவை ஆகும். அதை விடுத்து, ஐநா அவையையும் அமெரிக்காவையும் குறிவைத்து போராட இது நேரம் அல்ல.

தொடர்புடைய சுட்டிகள்:





செவ்வாய், பிப்ரவரி 11, 2014

ராஜபக்சேவை காப்பாற்றும் தமிழ்த்தேசியப் போராளிகள்?!

ஈழத்தமிழர் இனப்படுகொலை தொடர்பில் இப்போது ஒரு முக்கியமான கட்டத்தை உலகம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. ராஜபக்சே கும்பலுக்கு ஜெனீவாவில் நெருக்கடி உருவாகியிருக்கிறது. 

இந்த நேரத்தில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளைக் குழப்பும் வேலையில் சில தமிழ் அமைப்பினரே ஈடுபட்டுள்ளனர். ராஜபக்சேவை காப்பாற்றும் வாய்ப்புள்ள இந்தச்சதிக்கு தமிழ் மக்கள் பலியாகக் கூடாது.

"செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க 
செய்யாமை யானுங் கெடும்."

'செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்' என்கிறார் திருவள்ளுவர்.
சர்வதேச போர்க்குற்ற விசாரணையை எதிர்க்கும் சிங்கள அமைப்பினர்
சர்வதேச போர்க்குற்ற விசாரணையை எதிர்க்கும் தமிழ் அமைப்பினர்

இப்போது 'ஈழத்தமிழர் உரிமைக்காக போராடுவதாக' கூறிக்கொள்ளும் சில அமைப்பினர் செய்யக்கூடாத நேரத்தில் செய்யக்கூடாத வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். இதன் மூலம் மக்களைக் குழப்பும் வேலையையும் தொடங்கியுள்ளனர். இந்த ஆபத்தான போக்கு தவிர்க்கப்பட வேண்டும்.

தமிழினத் துரோகம் - நேற்றும் இன்றும்!

தமிழர்களுக்கு ஏராளமான நாடுகள் துரோகம் இழத்துள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ராஜபக்சேவுக்கு போரில் உதவி செய்துள்ளன. ஐக்கிய நாடுகள் அவையும் தமிழர்களுக்கு துரோகம் செய்தது. ராஜபக்சேவின் குற்றங்களைத் தடுக்காமல் ஐநா வேடிக்கைப் பார்த்திருக்கிறது.

இவர்கள் எல்லோரைவிடவும் மிகமிக அதிகமாக இந்திய அரசு துரோகம் செய்தது. இவை எல்லாமும் 2009 ஆம் ஆண்டுவரையிலான சோக நிகழ்வுகள். 
அமெரிக்க நிறுவனங்களை விரட்டக் கோரும் சிங்கள அமைப்பினர்
அமெரிக்க நிறுவனங்களை விரட்டக் கோரும் தமிழ் அமைப்பினர்

அதன்பிறகு, குறிப்பாக 2012 ஆம் ஆண்டு தொடங்கி, தற்போது வரை ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கத் தடையாய் இருப்பது இந்திய அரசுதான். போருக்குப் பின்னாலான இந்தக் காலகட்டத்தில் இந்தியாவுடன் சீனா, கியூபா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் இஸ்லாமிய நாடுகள் தமிழர்களுக்கு எதிரான தீவிர நிலைபாட்டில் உள்ளன.

2012 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐநா மன்றம் தமிழர்களுக்கு எதிராக இல்லை. இந்த மாற்றங்களை தமிழர்கள் கணக்கில் கொள்ள வேண்டும்.

இப்போதைய தேவை என்ன?

இலங்கை அரசுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராமல் அதனை பொத்திப் பாதுகாக்கும் கொடுஞ்செயலை இப்போதும் செய்துகொண்டிருக்கிறது இந்திய அரசாங்கம். ராஜபக்சே அரசுக்கு எந்தக் கேடும் நேரக்கூடாது என்பதில் இலங்கையை விட இந்திய அரசுதான் ஆர்வத்துடன் இருக்கிறது.

2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில், ஐநா மனித உரிமைப் பேரவையில் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்ட போது அதனைத் தீவிரமாக எதிர்த்து, அந்த தீர்மானங்களை நீர்த்துப்போக செய்தது இந்திய அரசாங்கம்தான். 

எனவே, 'இந்திய அரசுக்கு தமிழ்நாடு நிர்பந்தம் கொடுத்து, இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை நிகழ்த்த வேண்டும்' என்பதுதான் இப்போதைய தேவை.

அதிலும் குறிப்பாக 'இலங்கை மீது பன்னாட்டு விசாரணைக்கான தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும்' என்கிற கோரிக்கையை இந்திய அரசே முன்வைத்து "பகிரங்கமாக" அறிவிக்க வேண்டும். இதனை தமிழ்நாடு ஒன்றுபட்டு வலியுறுத்த வேண்டும்.

வேண்டாத வேலைகளுக்கு இது நேரம் அல்ல

இன்றைய நிலையில் அமெரிக்காவோ, இங்கிலாந்தோ, ஐநா அவையோ - தமிழர்களுக்கு எதிரிகள் அல்ல. மாறாக, இலங்கையை ஆதரிக்கும் சீனா, கியூபா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் இஸ்லாமிய நாடுகள்தான் தமிழர்களுக்கு எதிரானவர்கள்.

இவர்கள் எல்லோரைவிடவும் ஆகப்பெரிய எதிரியாக இருப்பது நமது தாய்நாடு இந்தியாதான்.
ஐநாவை எதிர்த்துப் போராடும் சிங்கள அமைப்பினர்
ஐநாவை எதிர்த்துப் போராடும் தமிழ் அமைப்பினர்

இலங்கையில் சிங்கள இனவெறியர்கள் எல்லோரும் ஐநாவையும் அமெரிக்கவையும் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் அமெரிக்காவையும், ஐநா அவையையும் எதிர்த்து தமிழர்களும் போராடுவது ராஜபக்சேவுக்கு ஆதரவாகவே முடியும்.

என்ன செய்ய வேண்டும்?

எதிரிகள் - எதிரி அல்லாதவர்கள் யார்?

1. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐநா மன்றம் ஆகியன இப்போது தமிழர்களின் எதிரிகள் அல்ல (சிங்கள இனவெறியர்களால் எதிர்க்கப்படுவோர், தமிழ் மக்களின் எதிரிகளாக இருக்க வாய்ப்பில்லை).
இரஷ்யாவைப் பாராட்டும் சிங்களர்கள்

2. இந்தியா, சீனா, கியூபா, ரஷ்யா, ஜப்பான், பாகிஸ்தான், மாலத்தீவுகள் உள்ளிட்ட நாடுகளே தமிழர்களுக்கு எதிரானவர்கள்.

தமிழர்கள் எழுப்ப வேண்டிய கோரிக்கைகள்

1. இலங்கையில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பில் ஐநா பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக, போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரானக் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குறித்து ஐநா விசாரணை ஆணையம் விசாரிக்க வேண்டும்.

2. 'இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்' என இந்திய அரசாங்கம் உடனடியாக, வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். 

- இத்தகையக் கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் ஓரணியில் திரண்டு இந்திய அரசை பணிய வைக்க முயற்சிக்க வேண்டும். இதைவிடுத்து அமெரிக்காவுக்கும் ஐநாவுக்கும் எதிராகப் பேசிக்கொண்டிருப்பது ராஜபகசேவைக் காப்பாற்றுவதில் போய் முடியுக்கூடும்.

திங்கள், பிப்ரவரி 10, 2014

இலங்கை-ஐநா தீர்மானம்: சேவ் தமிழ்சு இயக்கத்தின் அறியாமையா? இருட்டடிப்பா?

'சேவ் தமிழ்சு இயக்கம்' என்கிற அமைப்பு "மார்ச் 2014 ஐநா மனித உரிமை மன்றக் கூட்டத்தொடர் - தமிழ்நாடு என்ன செய்ய வேண்டும்?" என்கிற ஒரு கருத்தரங்கை சென்னையில் நடத்தியுள்ளது. அக்கூட்டத்தில் ஆகப்பெரிய தமிழ்தேசியப் போராளிகள் பலர் பங்கேற்றுள்ளனர். அந்தக் கூட்டத்திற்கான ஒரு விளக்கக் குறிப்பில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. 

சேவ் தமிழ்சு இயக்கம் சொல்வது என்ன?

ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இலங்கை குறித்து விவாதிக்கப்பட்ட தீர்மானங்கள் பற்றி, சேவ் தமிழ்சு இயக்க குறிப்பில் விளக்கியுள்ளார்கள். அதில் பின்வரும் வாசகம் இடம்பெற்றுள்ளது:

"மே 2009 ல் இலங்கை குறித்து ஐநா மனித உரிமை மன்றத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில், இந்திய அரசின் ஆதரவுடன், இலங்கை அரசைப் பாராட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தின் போது தமிழகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் இருந்த தமிழர்கள் எதுவும் செய்யாமல் மவுனித்து இருந்தார்கள். தமிழர்களின் இந்த மவுனம் இலங்கைக்கு ஆதரவாக அமைந்துவிட்டது" என்கிற வகையில் குறிப்பிட்டுள்ளது சேவ் தமிழ்சு இயக்கம்.

UNHRC’s 11th Special session in May 2009 passed a resolution that appreciated Sri Lanka after the genocidal war against Tamils with full support from India. Tamils from diaspora and Tamil Nadu were silent during this session after experiencing and witnessing the Mullivaaikkaal disaster. This silence of Tamils favored many genocidal partners and countries like India to openly support Sri Lankan terror state. (Save-Tamils-Movement - UNHRC What should be the Role of Tamil Nadu?)

சேவ் தமிழ்சு இயக்கம் எதை மறைக்கிறது?

"2009 மே இலங்கை குறித்த ஐநா சிறப்புக் கூட்டத்தின் போது தமிழகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் இருந்த தமிழர்கள் எதுவும் செய்யாமல் மவுனித்து இருந்தார்கள்" என்று சேவ் தமிழ்சு இயக்கம் சொல்கிறது. இதன் மூலம் அப்போது நடந்த விவரங்களை சேவ் தமிழ்சு இயக்கம் இருட்டடிப்பு செய்துள்ளது.

மார்ச் 2009 ஐநா கூட்டத்திலேயே தமிழர்களின் கோரிக்கை

2009 ஆம் ஆண்டு மே மாதம்இலங்கை குறித்த ஐநா மனித உரிமைப் பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது. அதற்கு முன்பாக மார்ச் 2 முதல் 27 வரை ஐநா மனித உரிமைப் பேரவையின் பத்தாவது கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் பசுமைத் தாயகம் அமைப்பு ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை சமர்ப்பித்தது. (ஐநா மனித உரிமைப் பேரவையில் அரசாங்கமும், ஐநாவால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளும் மட்டுமே அதிகாரப்பூர்வ அறிக்கைகளை கொடுக்க முடியும். அந்த அறிக்கைகளை மனித உரிமைப் பேரவையே வெளியிடும்). பசுமைத் தாயகம் அமைப்பு அளித்த அறிக்கையை 26.2.2009 அன்று ஐநா மனித உரிமைப் பேரவை வெளியிட்டது.

"Sri Lanka: A Crying Need to Protect the Rights of Civilians in Northern Sri Lanka" என்று தலைப்பிடப்பட்ட அந்த அறிக்கையில், இலங்கை குறித்த ஐநா மனித உரிமைப் பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்றும், இலங்கையில் இனப்படுகொலை நடக்காமல் தடுக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டது.
அதாவது, இலங்கையில் உச்சக்கட்ட இன அழிப்பு நடந்த 2009 மே மாதத்திற்கு முன்பாகவே, ஐநா மனித உரிமைப் பேரவையில் தமிழர்களின் கோரிக்கையை முன்வைத்தது பசுமைத் தாயகம் அமைப்பு. பசுமைத் தாயகத்தின் கோரிக்கையில் இலங்கை குறித்த ஐநா மனித உரிமைப் பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்பதும் ஒன்றாகும்.

அந்த அறிக்கையை இங்கே காணலாம்: Sri Lanka: A Crying Need to Protect the Rights of Civilians in Northern Sri Lanka

இதன் தொடர்ச்சியாக மே மாதம் 9 ஆம் நாளன்று உலகின் 90 மனித உரிமை அமைப்புகள் சேர்ந்து இலங்கை குறித்து விசாரிப்பதற்காக 'ஐநா மனித உரிமைப் பேரவையின் சிறப்புக்கூட்டத்தை' உடனே கூட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த 90 அமைப்புகளில் பசுமைத் தாயகமும் ஒன்று. 

அதனை இங்கே காணலாம்: Sri Lanka: Appeal for a Special Session of the UN Human Rights Council on the Human Rights Situation in Sri Lanka

மே 2009  இலங்கை குறித்த ஐநா சிறப்புக் கூட்டத்திலும் தமிழர்களின் கோரிக்கை 

இலங்கை தொடர்பாக விவாதிக்க சிறப்புக் கூட்டம் 2009 மே மாதம் 26 - 27 தேதிகளில் கூட்டப்பட்ட போது, அதிலும் பசுமைத் தாயகம் அதிகாரப்பூர்வ அறிக்கையை சமர்ப்பித்தது.

இந்தக் கூட்டத்தில் உலகம் முழுவதும் இருந்து மொத்தம் நான்கு அமைப்புகள் மட்டுமே கோரிக்கை அறிக்கையை சமர்ப்பித்தன. அதில் பசுமைத் தாயகம் அறிக்கையும் ஒன்று. 


அந்த அறிக்கையில் - இலங்கையின் இனப்படுகொலை அளவிலான கொடூரங்கள் நடந்துள்ளது தொடர்பில் ஐநா சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என பசுமைத் தாயகம் கோரியது. மேலும் தமிழர் பகுதியில் பொதுவாக்கெடுப்பு நடத்தி, தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைக் காக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
அந்த அறிக்கையை இங்கே காணலாம்: Sri Lanka: International inquiry into War Crimes – an urgent need

அதுமட்டுமல்லாமல், இக்கூட்டத்தில் பசுமைத் தாயகம் சார்பில் கனடாவைச் சேர்ந்த மருத்துவர் சாந்தகுமார் நேரில் கலந்துகொண்டு பேசினார். 


அதாவது, இலங்கை குறித்த 2009 மே மாத ஐநா சிறப்புக் கூட்டத்தில், இந்திய அரசு இலங்கையை தீவிரமாக ஆதரித்துப் பேசிய அதே இடத்தில் - பசுமைத் தாயகம் சார்பில் இலங்கைக்கு எதிராக உரை நிகழ்த்தப்பட்டது.

இலங்கை மீதான ஐநா சிறப்புக் கூட்டம் குறித்த ஐநா பாதுகாப்புச் சபையின் விரிவான அறிக்கையை இங்கே காணலாம் (10 மற்றும் 14 ஆம் பக்கத்தில் பசுமைத் தாயகத்தின் பங்கேற்பு குறிப்பிடப்பட்டுள்ளது): REPORT OF THE HUMAN RIGHTS COUNCIL ON ITS ELEVENTH SPECIAL SESSION 

உண்மையை மூடி மறைப்பது ஏன்?

ஆக, 2009 ஆம் ஆண்டிலேயே - இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும், இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தமிழர் பகுதிகளில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் பசுமைத் தாயகம் அமைப்பு அதிகாரப்பூர்வ அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளது. பசுமைத் தாயகம் சார்பிலான பிரதிநிதிகள் நேரிலும் கலந்துகொண்டு அந்தக் கூட்டத்தில் பேசியும் உள்ளனர்.

ஆனால், இதையெல்லாம் முடி மறைத்துவிட்டு, "மே 2009 ல் இலங்கை குறித்து ஐநா மனித உரிமை மன்றத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில், தமிழர்கள் மவுனமாக இருந்துவிட்டனர்" என்று கூறுகிறது சேவ் தமிழ்சு இயக்கம்.

அப்படியானால், பசுமைத் தாயகம் அமைப்பு தமிழர்களின் அமைப்பு இல்லையா? அதனுடைய குரல் தமிழர்களின் குரல் இல்லையா? அல்லது மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களினால் தொடங்கப்பட்ட ஒரு அமைப்பின் பணிகளை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக இதனை மறைக்கிறார்களா?

சேவ் தமிழ்சு இயக்கம் உள்ளிட்ட தமிழ்த்தேசியப் போராளிகளே - ஈழத்தமிழர் விடயத்திலாவது உங்களது சாதிவெறியை மூட்டைக்கட்டி ஓரமாக வையுங்கள்.

குறிப்பு: ஐநா அவையின் அதிகாரப்பூர்வ இணையத்தில், 2009 ஆம் ஆண்டில் ஐநா மனித உரிமைப் பேரவையில் பசுமைத் தாயகம் பங்கேற்றது குறித்த ஆவணங்களை காணலாம்:

1. UN Human Rights Documents HRC/10/NGO/71


2. HUMAN RIGHTS COUNCIL Eleventh special session (Page 10 & 14)