Pages

செவ்வாய், மார்ச் 19, 2013

ஐநா மனித உரிமைப் பேரவையில் தமிழர்களுக்கு துரோகம் - இந்தியா கேட்டுக்கொண்டபடி தீர்மானத்தில் மிகப்பெரிய திருத்தத்தை செய்தது அமெரிக்கா.

ஐநா மனித உரிமைப் பேரவையில் தமிழர்களுக்கு துரோகம்.

இந்தியா கேட்டுக்கொண்டபடி தீர்மானத்தில் மிகப்பெரிய திருத்தத்தை செய்தது அமெரிக்கா.

தமிழர்களுக்கு மாபெரும் துரோகம்.
A Hrc 22 l 1_english(Draft Rev 1) by Arul Rathinam

திங்கள், மார்ச் 18, 2013

ஜெனீவா: கலைஞரின் மிரட்டல் கடைசி நாடகமா? தமிழக மக்கள் செய்ய வேண்டியது என்ன?

"நம்பகத்தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்பாகவும், பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளேன். இக்கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும் திமுகவுக்கும் உள்ள உறவு நீடிக்காது என்பது உறுதி." என்று கலைஞர் கூறியுள்ளார்.

கலைஞரின் பேட்டியைப் பார்க்கும் போது "இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல...பேசும் போது, ரொம்ப இலக்கணமா பேசு! பாட்டெழுதும் போது கோட்டை விட்டுரு!" என்று திருவிளையாடல் படத்தில் நாகேஷ் பேசும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது!

ஈழத்தமிழர் இனப்படுகொலையில் கலைஞர் நடத்தும் நாடகங்களைப் பார்த்து தமிழக மக்களுக்கு ரத்தக் கண்ணீர் வடிகிறது. அவரது நாடகங்களில் மிகக்கொடுமையான காட்சிகள் இரண்டு:
  •  'இலங்கையில் போரை இரண்டு வாரத்தில் நிறுத்தாவிட்டால் தமிழ்நாட்டின் எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா' என்று 2008 அக்டோபர் 18-ல் அறிவித்து, அதனை 26 ஆம் தேதி பிரணாப் முகர்ஜியிடம் தனி அறையில் பேசிய பின்பு கைவிட்டார்.
  • சாகும்வரை உண்ணாவிரதத்தை 2009 ஏப்ரல் 27 அன்று தொடங்கி மூன்று மணி நேரத்தில் 'சோனியா பேசினார், மன்மோகன் பேசினார், இலங்கையில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்துவிட்டது' என்று கூறி உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
- இந்த இரண்டு நாடகங்களுக்கு பின்னர்தான் ஈழத்தமிழர்கள் ஒரு லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழகமே தோண்டையில் துக்கம் அடைக்க கண்ணீர்விடும் பாலசந்திரன் படுகொலை இந்த நாடகங்களுக்கு பின்னர் நிகழ்ந்ததுதான்.

இப்போது - நாடகத்தின் மூன்றாவது கட்டம் வந்துவிட்டதாக சராசரித் தமிழன் நினைக்கிறான். வரலாற்றில் இந்த அவப்பெயரில் இருந்து கலைஞர் தப்ப வேண்டுமானால் அவர் செய்ய வேண்டியது இதுதான்:

இந்திய அரசு செய்ய வேண்டியது என்ன?
  • முதலில்: "இலங்கை இறுதிப்போரின் போது பன்னாட்டு சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பாக சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்காக ஐநா மனித உரிமை பேரவையின் மூலம் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்" என்கிற கோரிக்கையை இந்திய அரசு கொள்கை அளவில் ஏற்கசெய்ய வேண்டும். 
(அதாவது - இலங்கை இறையாண்மை மிக்க நாடு, அதன் உள்விவகாரத்தில் அந்நிய தலையீடு கூடாது, இலங்கையில் நிகழ்ந்த பன்னாட்டு சட்ட மீறல்களை இலங்கையே விசாரிக்கட்டும் - என்கிற பழைய பல்லவியை இந்தியப் பேரரசு முற்றிலுமாக கைவிட வேண்டும்).
  • அடுத்ததாக: ஐநா மனித உரிமை பேரவையில் அமெரிக்க முன்வைத்துள்ள தீர்மானத்தில் மேற்கண்ட கோரிக்கையை இந்தியாவின் சார்பில் சேர்க்க வேண்டும். 
இந்தியாவுக்கு இது ஒன்றும் புதிதல்ல. கடந்த ஆண்டு தீர்மானத்தின் போது இலங்கைக்கு ஆதரவாக கடைசி நேரத்தில் எப்படி இந்தியா திருத்தம் கொண்டு வந்ததோ, அதே போன்று இப்போது தமிழர்களுக்கு ஆதரவாகவும் இந்தியாவால் திருத்தம் செய்ய முடியும்.
எனவே, 'மத்திய அரசுடன் பேச்சு, மத்திய அரசின் தூதர்கள் சந்திப்பு, கலைஞரிடம் விளக்கம்' என எத்தனை காட்சிகள் நடந்தாலும், கடைசியில் "பன்னாட்டு விசாரணை ஆணையம்" என்கிற ஒற்றைக் கோரிக்கையைத் தவிர வேறு எந்த ஒரு சமாதானத்தையும் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.

அப்படி ஏதேனும் புது சமாதானத்தை, விளக்கத்தை, மழுப்பலை, 'அய்யோ மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாதே' என்கிற பசப்பலை கலைஞர் கூறினால் அதைக் கடைசித் தமிழன் கூட நம்ப மாட்டான். கூடவே, கலைஞரின் மிரட்டல் தமிழனுக்காக அல்ல, அது 'வேறு எதற்காகவோதான்' என்று நாடே பேசும் நிலைதான் உருவாகும்.

"பன்னாட்டு விசாரணை ஆணையம்" ( independent, international commission of inquiry) என்கிற கோரிக்கையை கலைஞர் சாதிக்கிறாரோ இல்லையோ - தமிழக மக்களால் 'இன்றில்லாவிட்டாலும் நாளை' நிச்சயம் சாதிக்க முடியும். அதற்கு தமிழ்நாட்டு மக்கள் ஒரே குரலில் தெளிவாக இக்கோரிக்கையை முன்வத்து போராட வேண்டும்.

இலங்கை மீது பன்னாட்டு விசாரணை ஆணையம் - முன் உதாரணங்கள்.

மனித உரிமை பேரவையில் சிரியா மீது பன்னாட்டு விசாரணை தீர்மானம் 2011 (இங்கே சொடுக்கவும்)

"Decides to dispatch urgently an independent international commission of inquiry, to be appointed by the President of the Human Rights Council, to investigate violations of international human rights law in the Syrian Arab Republic since July 2011, to establish the facts and circumstances that may amount to such violations and, where possible, to identify those responsible with a view of ensuring that perpetrators of violations are held accountable"

மனித உரிமை பேரவையில் லிபியா மீது பன்னாட்டு விசாரணை தீர்மானம் 2011 (இங்கே சொடுக்கவும்)

"Decides to urgently dispatch an independent, international commission of inquiry, to be appointed by the President of the Council, to investigate all alleged violations of international human rights law in Libya, to establish the facts and circumstances of such violations and of the crimes perpetrated, and , where possible identify those responsible to make recommendations, in particular, on accountability measures, all with a view to ensuring that those individuals responsible are held accountable, and to report to the Council at its seventeenth session, and calls upon the Libyan authorities to fully cooperate with the Commission"

1. பன்னாட்டு விசாரணை ஆணையம் எதற்காக ?

ஆயுதம் தாங்கிய ஈழப்போரின் கடைசிக் கட்டத்தில் 2008 ஆம் ஆண்டு தொடங்கி 2009 மே மாதம் வரை - இந்த நூற்றண்டின் மிகப்பெரிய அழித்தொழிப்புப் போர், சாட்சிகள் ஏதுமற்ற நிலையில் இலங்கை நாட்டின் சிங்கள பௌத்த பயங்கரவாத அரசாங்கத்தால் நடத்தப்பட்டது. இந்தப் போரில் பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறி தமிழ் மக்களுக்கு எதிராக கொடுமைகள் அரங்கேற்றப்பட்டன.

போர் முடிந்த பின்னர் இந்தக் கொடுமைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளி உலகிற்கு தெரிந்தன. சானல் 4 வெளியிட்ட ஆதாரங்கள், டப்ளின் மக்கள் தீர்ப்பாய விசாரணை, ஐநா நிபுணர் குழு அறிக்கை, ஐநா உள்விசாரணை அறிக்கை - என முக்கியமான அறிக்கைகள் கொடுமைகளை வெளிக்கொண்டு வந்தன. மனித உரிமை கண்காணிப்பகம், அம்னெஸ்டி இன்டர்நேஷனல், சர்வதேச நெருக்கடி குழு உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகள் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டன. ஐநா மனித உரிமை ஆணையரின் அறிக்கையும் இதனை சுட்டிக் காட்டியது.
இத்தனை ஆதாரங்களுக்கு பின்னரும் - இறுதிக் கட்ட போரின் போது சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டமைக் குறித்து ஒரு பாரபட்சமில்லாத விசாரணை நடத்தப்படவே இல்லை. உண்மையில் நடந்தது என்ன என்பதை அதிகாரப்பூர்வமாக வெளிக்கொண்டு வருவதற்காக நியாயமான, பக்கசார்பற்ற, நம்பகத்தன்மையுடன் கூடிய ஒரு விசாரணை இதுவரை இல்லை.

எனவே, உண்மை வெளிக்கொண்டுவரப்பட வேண்டும். குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, உரிய நீதி அமைப்புகள் வழியே விசாரிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்கிற 'உண்மை மற்றும் நீதிக்கான' குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. உண்மையும் நீதியும் இல்லாது போனால் அமைதியும் சமாதானமும் இல்லை. இதனை உலகின் பெரும்பாலான நாடுகளும் எல்லா மனித உரிமை அமைப்புகளும் ஏற்றுக் கொள்கின்றன, வலியுறுத்துகின்றன.

உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கையை எல்லோரும் ஏற்கும் நிலையில் அதனை யார் செய்வது என்கிற கேள்வி எழுகிறது. இலங்கை அரசு தன்னை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை கொண்ட ஜனநாயக அரசு என்று கூறிக்கொண்டாலும் - அதுவே குற்றத்தை செய்த அரசாகவும் இருக்கிறது. நியாயமான, பக்கசார்பற்ற, நம்பகத்தன்மையுடன் கூடிய ஒரு விசாரணையை நடத்தும் தகுதியோ, திறமையோ, நேர்மையோ, உண்மையான விருப்பமோ, நம்பகத்தன்மையோ அந்த அரசுக்கு கொஞ்சமும் கிடையாது.

ஆகவே, "சுதந்திரமான பன்னாட்டு விசாரணைத் தேவை" என்கிற கோரிக்கை முதன்மையான கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது.

2. பன்னாட்டு விசாரணை என்றால் என்ன?

உலகின் எந்த ஒரு பகுதியிலும் பன்னாட்டு சட்டங்களை மீறும் வகையில் பெரிய அளவில் குற்றங்கள் நடைபெறும் நிலையில் - குறிப்பாக போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான கொடும் குற்றம், இனப்படுகொலை என்கிற மிகக் கொடூரமான குற்றங்கள் இழைக்கப்படும் நிலையில், அல்லது குற்றங்கள் நடந்து முடிந்த பின்பு பன்னாட்டு விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. குறிப்பாக அந்தக் குற்றத்தில் அரசும் ஒரு பங்குதாரராகவோ அல்லது விசாரிக்கும் விருப்பமோ தகுதியோ ஆற்றலோ அரசுக்கு இல்லாத நிலையில் பன்னாட்டு விசாரணை கட்டாயமாகிறது.

இத்தகைய பன்னாட்டு விசாரணைகள் அனைத்தும் குற்றத்தை ஆவணப்படுத்தி உண்மையை வெளி உலகிற்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்படுகின்றன. குற்றமும் அதற்கு காரணமானவர்களும் அதிகாரப்பூவமாக ஆவணப்படுத்தப்பட்ட பின்னர் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் வாய்ப்பு உண்டு.

3. பன்னாட்டு விசாரணைக்கு உத்தரவிடுவது யார்?

பன்னாட்டளவிலான விசாரணைக்கு உத்தரவிடும் அதிகாரம் ஐநா பாதுகாப்பு அவைக்கும் ஐநா மனித உரிமை பேரவைக்கும் உண்டு. இந்த அமைப்புகளில் தீர்மானம் கொண்டுவந்து உலகின் எந்த ஒரு நாட்டின் மீதும் விசாரணை நடத்த உத்தரவிட முடியும்.

இலங்கை நிலவரத்தைப் பொறுத்த வரை, ஐநா பாதுகாப்பு அவையில் இலங்கையைப் பாதுகாக்கும் அதன் நட்பு நாடுகளான சீனாவும் ரஷ்யாவும் வீட்டோ அதிகாரத்துடன் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன (வீட்டோ அதிகாரம் என்பது எந்த ஒரு தீர்மானத்தையும் தனி ஒரு நபராக தடுக்கும் அதிகாரம் ஆகும்). அந்த நாடுகள் இலங்கை மீதான எந்த ஒரு தீர்மானத்தையும் தடுத்துவிடும்.

ஆனால், ஐநா மனித உரிமை பேரவை என்பது 47 தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் ஜனநாயக அமைப்பாகும். இங்கு யாருக்கும் வீட்டோ அதிகாரம் கிடையாது. ஒரு தீர்மானத்தின் மீது வாக்களிக்கும் நாடுகளில் சரிபாதிக்கு  கூடுதலான வாக்குகளைப் பெற்றால் தீர்மானம் வெற்றிபெற்றுவிடும்.

ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கையின் தீவிர நட்புநாடுகளான சீனா, ரஷ்யா, கியூபா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக இல்லை. அவற்றின் பதவிக்காலம் 2012 இல் முடிந்து விட்டது. இலங்கை உறுப்பினராகும் தேர்தலில் தோற்று அதற்கு முன்பாகவே வெளியேறிவிட்டது. இப்போதைக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் மட்டுமே இலங்கையின் தீவிர ஆதரவு உறுப்பு நாடுகள்.

எனவே, இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐநா மனித உரிமை பேரவையில் வெற்றி பெறுவது சாத்தியம்தான். இலங்கை மீது பன்னாட்டு விசாரணைக்கு ஐநா மனித உரிமை பேரவை எளிதாக உத்தரவிட முடியும்.

4. பன்னாட்டு விசாரணையை எந்த நாடு மேற்கொள்ளும்?

பன்னாட்டு விசாரணையில் எந்த நாடும் இடம்பெறாது. நீண்ட அனுபவமும் தகுதியும் கொண்ட மனித உரிமை வல்லுநர்கள் ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலகம் மூலம் இதற்காக தெரிவு செய்யப்படுவார்கள். தன்னிச்சையான அதிகாரம் கொண்ட அந்தக் குழுவே விசாரண நடத்தும்.

விசாரணையில் பங்கேற்கும்  மனித உரிமை வல்லுநர்களுக்கு சம்பளம் எதுவும் அளிக்கப்பட மாட்டாது. அவர்கள் தன்னார்வ அடிப்படையிலேயே வேலை செய்வார்கள். அலுவலகம், ஆய்வு உதவி, பயணங்கள் போன்றவற்றிற்கு ஐநா மனித உரிமை அணையர் அலுவலகம் உதவும்.

5. இதுபோன்ற பன்னாட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளதா?

யூகோசுலோவியா, லெபனான், இஸ்ரேல், காங்கோ, லிபியா, சிரியா, சூடான் என உலகின் பல நாடுகளுக்காக பன்னாட்டு விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகள் மூலம் கொடூரமான குற்றங்கள்  ஆதாரப்பூர்வமாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் பன்னாட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். தனி நாடுகள் உதயமாகவும் இது வழிவகுத்துள்ளது.

சூடான்: தெற்கு சூடனின் தர்ஃபுர் பகுதியில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் பன்னாட்டு சட்ட மீறல்கள் குறித்து விசாரிக்க 2004 ஆம் ஆண்டில் ஐநா பாதுகாப்பு சபை ஒரு பன்னாட்டு விசாரணை ஆணையத்தை அமைத்தது.
சூடான்
மூன்றே மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்ட இந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை, சூடானின் அரசாங்கமே மனித குலத்துக்கு எதிரான கொடுங்குற்றங்களையும், பாலியல் வன்கொடுமைகளையும், சித்தரவதைகளையும், திட்டமிட்ட மக்கள் அப்புறப்படுத்தலையும் நிறைவேற்றியதை நிரூபித்தது. கூடவே, அரசாங்கமே இனப்படுகொலைக்கு வழி செய்யவில்லை என்றாலும், அரசின் சில உயர்மட்ட உறுப்பினர்கள் இனப்படுகொலைக்கு வழிவகுத்ததை சுட்டிக்காட்டியது.

இதனைத் தொடர்ந்து, சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. சூடான் அதிபர் ஒமர் அல் பஷீர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
தெற்கு சூடான் 
அதே ஆண்டில் எட்டப்பட்ட அமைதி உடன்படிக்கையின் கீழ் தெற்கு சூடான் பகுதி ஆறு ஆண்டுகளுக்கு தன்னாட்சிப் பகுதியாகவும், பின்னர் 2011 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பின் மூலம் - 99 % மக்கள் தனிநாட்டிற்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாக - தெற்கு சூடான் தனிநாடாகவும் மலர்ந்தது.

லிபியா: லிபியாவில் நடந்த கலவரத்தினைத் தொடர்ந்து ஐநா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தின் படி 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஐந்து மாத காலத்தில் இந்த விசாரணை ஆணையம் தனது அறிக்கையை அளித்தது. அதில் லிபியாவில் பன்னாட்டு சட்டங்களை மீறி கொடும் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதை மெய்ப்பித்தனர். போர்க்குற்றங்களும் மனித குலத்துக்கு எதிரான கொடுங்குற்றங்களும் நிகழத்தப்பட்டது வெளிக்கொணரப்பட்டது.
லிபியா
குற்றச்சாட்டுக்கு உள்ளான கடாஃபியின் அரசு தூக்கி எறியப்பட்டது. அவரும் கொல்லப்பட்டார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து - லிபியாவின் புதிய அரசே குற்றங்களை விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்கலாம் என பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சிரியா: சிரியாவில் நடந்துவரும் கலவரங்களைத் தொடர்ந்து 2011 ஆகஸ்ட் மாதம் ஒரு பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைத்து ஐநா மனித உரிமை ஆணையம் தீர்மானம் நிறைவேற்றியது. 
தங்களது நாட்டில் நடந்த குற்றங்களை விசாரிக்க நாங்களே ஆணையம் அமைத்துள்ளோம் என்று கூறி இந்த விசாரணை ஆணையத்தை சிரியா அனுமதிக்கவில்லை. எனினும், சிரியாவுக்கு வெளியா உள்ள அகதிகளிடமும் மற்ற நாடுகளிடமும் விசாரணை நடத்தி சிரியாவின் அரசாங்கமே பன்னாட்டு சட்டங்களை மீறீயுள்ளதாகவும், குற்றவாளிகளை அரசே காப்பதாகவும், மனித குலத்துக்கு எதிரான கொடுங்குற்றங்கள் நடப்பதாகவும் விசாரணை ஆணையம் தெரிவித்தது. இந்த விசாரணை அறிக்கை குறித்த விவாதங்கள் தற்போதைய மனித உரிமை பேரவையில் நடந்து வருகிறது.

- இதே போன்று இலங்கையில் நடந்த 'பன்னாட்டு சட்ட மீறல்கள்' குறிப்பாக இனப்படுகொலை, போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான கொடுங்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்பதே இப்போது வலியுறுத்தப்பட வேண்டிய முதன்மைக் கோரிக்கை ஆகும்.

அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தில் இந்த கோரிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால், அத்தகைய விசாரணை ஆணையம் அமைக்க இந்த தீர்மானம் உத்தரவிடவில்லை. எனவே, சர்வதேச விசாரணை ஆணையம் அமைப்பதற்கான திருத்தத்தை இந்தியா முன்வைக்க வேண்டும். 

ஒரு உதாரணத்திற்கு இந்தியா கொண்டுவரும் திருத்தம் பின்வருமாறு அமையலாம்:
  • Decides to dispatch urgently an independent international commission of inquiry, to be appointed by the President of the Human Rights Council, to investigate violations of international human rights law and international humanitarian law in the Democratic Socialist Republic of Sri Lanka since January 2008, to establish the facts and circumstances that may amount to such violations and, where possible, to identify those responsible with a view of ensuring that perpetrators of violations are held accountable.
இவ்வாறு "சர்வதேச விசாரணை ஆணையம்" அமைக்கப்பட்டு, இலங்கை அரசின் கொடூர முகம் அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படும் நிலையில் - காலம் நிரந்தரமான அரசியல் தீர்வை நோக்கி பயணிக்கும். தெற்கு சூடானில் நேர்ந்தது போன்று விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு சாத்தியமாகும்.

எனவே - "சர்வதேச விசாரணை ஆணையம் (Commission on Inquiry) "  என்பதை தமிழ்நாட்டு மக்களின் தற்போதைய முதன்மைக் கோரிக்கையாக்க வேண்டும்.

ஞாயிறு, மார்ச் 17, 2013

ஜெனீவா: இந்தியாவின் பேசாத பேச்சுக்கே திட்டுகிறார் வைகோ - ஏன் இந்த அவரசம்?!


"இந்திய அரசு நேற்று முன்தினம் மார்ச் 15 ஆம் தேதி மனித உரிமை கவுன்சிலில் சிங்கள அரசை பட்டவர்த்தனமாக ஆதரித்து, அக்கிரமமான அறிக்கை தந்துள்ள துரோகம், தமிழர் நெஞ்சில் சூட்டுக்கோலைத் திணித்துள்ளது. இந்த அறிக்கை சிங்கள இராஜபக்சே அரசு தயாரித்துத் தந்த அறிக்கையாகவே தோன்றுகிறது." என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 17.03.2013 அன்று ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.

ஐநாவில் தற்போது அரங்கேறிவரும் விவாதங்கள் தொடர்பில் தமிழ்நாட்டில் உள்ள குழுப்பத்தை இது வெளிப்படுத்துகிறது. 

கடந்த மார்ச் 15 ஆம் நாளன்று ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கை மீதான காலமுறை மீளாய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. (இது ஏற்கனவே கடந்த 2012 அக்டோபரில் நடந்த கூட்டத்தின் அறிக்கை ஆகும்). மார்ச் 15 கூட்டத்தில் - இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க அறிக்கை சமர்ப்பித்த பின்னர் அதன் மீது கருத்து சொல்ல நாடுகளுக்கும் அரசு சார்பற்ற அமைப்புகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அது சமயத்தில் அம்னஸ்டி சார்பாக டாக்டர் மனோகரன் தனது காணாமல் போன மகன் குறித்து பேசினார்.

பேசும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பெயர் இடம் பெற்றிருந்தது. இந்தியாவிற்கு கீழே அரசு சார்பற்ற அமைப்புகளின் சார்பில் பசுமைத் தாயகம் இடம் பெற்றிருந்தது. ஆனால், நேரமின்மையின் காரணமாக இந்தியாவும் பேசவில்லை, பசுமைத் தாயகமும் பேசவில்லை.
ஐநா கூட்டத்தில் பேசுவதற்கு முன்பே பேச்சின் எழுத்து வடிவத்தை அளிக்க வேண்டும் என்பதால் - இந்தியாவும் பசுமைத் தாயகமும் தமது பேச்சினை அளித்திருந்தன. அது ஐநா மனித உரிமை பேரவையின் நிகழ்ச்சி நிரலிலும் இடம் பெற்றுள்ளது. அதன்படி இந்தியா இலங்கைக்கு மழுப்பலான ஆதரவை தெரிவித்துள்ளது. பசுமைத் தாயகம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததுடன் - பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் கூறியது.

இந்தியா பேச இருந்த பேச்சின் எழுத்து வடிவம் இதோ (இங்கே சொடுக்கவும்): Statement by INDIA

பசுமைத் தாயகம் பேச இருந்த பேச்சின் எழுத்து வடிவம் இதோ (இங்கே சொடுக்கவும்): Statement by PASUMAI THAAYAGAM

ஆக, இந்தியா பேசுவதற்காக வைத்திருந்து, பின்னர் பேசாமல் விட்டுவிட்ட கருத்தினை தான் வைகோ அவர்கள் இந்தியாவின் அறிக்கை என்று குறிப்பிட்டு கண்டித்துள்ளார். (இந்தியாவின் அந்த வரைவிலேயே - இதைத்தான் பேசுகிறாரா என்று கவனித்து அதன் பின்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடவும் - Check against delivery - என்று குறிப்பிட்டுள்ளார்கள்!)  ஒருவேளை பேச வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தால் இந்தியா இதே கருத்தைதான் பேசியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

எது எப்படியோ - பேசாத பேச்சுக்காகக் கூட திட்டு வாங்கும் நிலையில் இந்தியா இருப்பதை தமிழர்கள் வரவேற்கத்தான் வேண்டும்.

குறிப்பு: மார்ச் 15 காலை கூட்டத்தில் பசுமைத் தாயகம் பேசுவதற்கு நேரம் கிடைக்கவில்லை என்றாலும் மதியம் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது பசுமைத் தாயகம் இலங்கைக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததுடன் - பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் கூறியது (அந்த பேச்சின் காட்சி வடிவம் இங்கு வெளியிடப்படும்).

தற்போது நடைபெற்று வரும் மனித உரிமைப் பேரவையின் 22 ஆவது கூட்டத்தில் பசுமைத் தாயகம் இதுவரை நான்கு முறை இலங்கை மீது குற்றம் சாட்டி பேசியுள்ளது. ஆனால், ஒருமுறை கூட இந்தியா இலங்கை தொடர்பாக எதுவும் பேசவில்லை.

தொடர்புடைய சுட்டி:

ஜெனீவா: ஐநாவில் பசுமைத்தாயகம் சாதனை - இலங்கை மீது நேரடியாக சரமாரிக் குற்றச்சாட்டு!

வியாழன், மார்ச் 14, 2013

ஜெனீவா: ஐநாவில் பசுமைத்தாயகம் சாதனை - இலங்கை மீது நேரடியாக சரமாரிக் குற்றச்சாட்டு!

தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமை பேரவையின் (UNHRC) கூட்டத்தில் பசுமைத் தாயகம் சார்பில் தமயந்தி ராஜேந்திரா, வழக்கறிஞர் கார்த்திகா தவராஜா, வழக்கறிஞர் தாஷா மனோரஞ்சன் ஆகியோர் "இலங்கையின் மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தி பேசினர், இலங்கை மீது சரமாரிக் குற்றச்சாட்டினர்.

அவர்களது பேச்சினை கீழே காண்க:


பசுமைத் தாயகம் - கார்த்திகா தவராஜா

மார்ச் 11 திங்கள் அன்று நடந்த ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் கார்த்திகா தவராஜா கலந்து கொண்டு பேசினார். 

வழக்கறிஞர் கார்த்திகா தவராஜா பேச்சினை YOUTUBE வீடியோ மற்றும் எழுத்து வடிவிலும் அது தொடர்பான பத்திரிகை செய்தியையும் கீழே காணலாம்: (படத்தின் மீது சொடுக்கவும்)
Pasumai Thaayagam at UNHRC Kartiga Thavaraj, 11 March 2013
பேச்சின் எழுத்து வடிவம்: Pasumai Thaayagam at UNHRC - Kartiga Thavaraj, 11 March 2013


பசுமைத் தாயகம் -  தாஷா மனோரஞ்சன்

மார்ச் 12 செவ்வாய் அன்று நடந்த ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் தாஷா மனோரஞ்சன் கலந்து கொண்டு பேசினார்.

வழக்கறிஞர் தாஷா மனோரஞ்சன் பேச்சினை YOUTUBE வீடியோ மற்றும் எழுத்து வடிவிலும் அது தொடர்பான பத்திரிகை செய்தியையும் கீழே காணலாம்:(படத்தின் மீது சொடுக்கவும்)
Pasumai Thaayagam at UNHRC Tasha Manoranjan, 12 March 2013

பேச்சின் எழுத்து வடிவம்: Pasumai Thaayagam at UNHRC - Tasha Manoranjan, 12 March 2013

பத்திரிகை செய்தி: “Sri Lanka 'served as precursor' to Syrian tragedy”


பசுமைத் தாயகம் -  தமயந்தி ராஜேந்திரா 

அதற்கு முன்பாக மார்ச் 04 திங்கள் அன்று நடந்த ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் தமயந்தி ராஜேந்திரா கலந்து கொண்டு பேசினார். 

தமயந்தி ராஜேந்திரா பேச்சினை YOUTUBE வீடியோ மற்றும் எழுத்து வடிவிலும் அது தொடர்பான பத்திரிகை செய்தியையும் கீழே காணலாம்: (படத்தின் மீது சொடுக்கவும்)
Pasumai Thaayagam at UNHRC Dhamayanthi Rajendra, 4 March 2013

பேச்சின் எழுத்து வடிவம்: Pasumai Thaayagam at UNHRC - Dhamayanthi Rajendra, 4 March 2013

பத்திரிகை செய்தி: “UN Human Rights chief reiterates the need to monitor Sri Lanka's progress on accountability” 

ஐநாவில் பசுமைத் தாயகம்

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு ஐக்கிய நாடுகள் அவையால் சிறப்பு ஆலோசனை அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ள அமைப்பாகும் (non-governmental organization in special consultative status with UN ECOSOC). இத்தகைய அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனை அமைப்புகள் மட்டுமே ஐநா அவையின் கூட்டத்தில் பங்கேற்கவும் பேசவும் முடியும்.

இந்தியாவில் இருந்து ஈழத்தமிழர்களுக்காக ஐநா மனித உரிமை பேரவை (UNHRC) கூட்டத்தில் பேசும் ஒரே அமைப்பாக 2009 முதல் பசுமைத் தாயகம் செயலாற்றி வருகிறது.

ஐக்கிய நாடுகள் அவையின் அழைப்பின் பேரில் தற்போது ஜெனீவா நகரில் நடைபேற்றுவரும் 22 ஆவது ஐநா மனித உரிமை பேரவை கூட்டத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் ஏழு பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றுள்ளனர். அவர்கள் இலங்கையின் மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என மனித உரிமை பேரவையின் உறுப்பினர்களை சந்தித்து வலியுறுத்து வருகின்றனர்.

ஐநா மனித உரிமை பேரவையில் நேரடியாக உரைநிகழ்த்தி அவர்கள் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இலங்கை இனப்படுகொலை, போர்க்குற்றம்: ஐநாவில் தொடரும் நீதிக்கான போராட்டம் - கட்டுரை 

பசுமைத் தாயகம் சுற்றுச்சூழல் மார்ச் இதழில் வெளியான "இலங்கை இனப்படுகொலை, போர்க்குற்றம்: ஐநாவில் தொடரும் நீதிக்கான போராட்டம்" கட்டுரை மற்றும் தலையங்கம்.

புதன், மார்ச் 13, 2013

ஜெனீவா ஐநா கூட்டத்தில் பசுமைத் தாயகம் பேச்சு: இலங்கை மீது சர்வதேச விசாரணை ஆணையம் - நேரடியாக வலியுறுத்தல்.


மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு ஐக்கிய நாடுகள் அவையால் சிறப்பு ஆலோசனை அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ள அமைப்பாகும் (non-governmental organization in special consultative status with UN ECOSOC). இத்தகைய அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனை அமைப்புகள் மட்டுமே ஐநா அவையின் கூட்டத்தில் பங்கேற்கவும் பேசவும் முடியும்.

இந்தியாவில் இருந்து ஈழத்தமிழர்களுக்காக ஐநா மனித உரிமை பேரவை (UNHRC) கூட்டத்தில் பேசும் ஒரே அமைப்பாக 2009 முதல் பசுமைத் தாயகம் செயலாற்றி வருகிறது.

ஐக்கிய நாடுகள் அவையின் அழைப்பின் பேரில் தற்போது ஜெனீவா நகரில் நடைபேற்றுவரும் 22 ஆவது ஐநா மனித உரிமை பேரவை கூட்டத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் ஏழு பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றுள்ளனர். அவர்கள் இலங்கையின் மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என மனித உரிமை பேரவையின் உறுப்பினர்களை சந்தித்து வலியுறுத்து வருகின்றனர்.

ஐநா மனித உரிமை பேரவையில் நேரடியாக உரைநிகழ்த்தி அவர்கள் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

பசுமைத் தாயகம் -  தாஷா மனோரஞ்சன்

மார்ச் 12 செவ்வாய் அன்று நடந்த ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் தாஷா மனோரஞ்சன் கலந்து கொண்டு பேசினார்.

வழக்கறிஞர் தாஷா மனோரஞ்சன் பேச்சினை வீடியோ மற்றும் எழுத்து வடிவிலும் அது தொடர்பான பத்திரிகை செய்தியையும் கீழே காணலாம்:
Pasumai Thaayagam at UNHRC 
Tasha Manoranjan, 12 March 2013
Watch the video from 01.32.00 minute to 01.34.40 minute here:
Tasha Manoranjan Speech at UNHRC 22


பேச்சின் எழுத்து வடிவம்: Pasumai Thaayagam at UNHRC - Tasha Manoranjan, 12 March 2013

பத்திரிகை செய்தி: “Sri Lanka 'served as precursor' to Syrian tragedy”

தாஷா மனோரஞ்சன் பேச்சு:

சிரியாவில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பசுமைத்தாயகத்தின் பிரதிநிதி வழக்கறிஞர் தாஷா மனோரஞ்சன்:

‘‘சிரியாவில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்களில் இதுவரை சுமார் 70,000 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அது ஒரு பேரழிவு நிலையை எட்டியிருக்கிறது.

சிரியாவில் என்ன நடக்கும் என்பதற்கு முன்னோட்டம் தான் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை ஆகும். இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக அந்நாடு தண்டிக்கப்படாததன் விளைவாக , இலங்கை அரசு சிங்களமயமாக்கலை நாடு முழுவதும் சட்டவிரோதமாக பரப்பி வருகிறது. நாடு முழுவதும் சட்டத்தின் ஆட்சி சீரழிந்து வருகிறது.

ஐ.நா. பொதுச்செயலாளரின் வல்லுனர் குழு தாக்கல் செய்த அறிக்கையில், போரின் கடைசி 9 மாதங்களில் , இலங்கை படையினர் தொடர்ந்து நடத்திய குண்டுவீச்சு தாக்குதல் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்று கூறப்பட்டிருக்கிறது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக ஐ.நா. பொதுச்செயலாளரின் உள் ஆய்வுக் குழுவின் அறிக்கையில் 2009 ஆம் ஆண்டில் மட்டும் 70.000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற விதி மீறல்களுக்கு தண்டனை வழங்கப்படாமல், ஈழத்தமிழர்களின்  எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையிலான அரசியல் அதிகாரம் வழங்கப்படாத வரையில் அங்கு நிலையான அமைதியும், ஸ்திரத்தன்மையும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்கள் இந்த அவையில் தாக்கல் செய்த அறிக்கையிலும் இதை ஒத்த கருத்துக்களே இடம்பெற்றுள்ளன.

-எனவே, இலங்கை அரசு தண்டனையிலிருந்து தப்பி வருவதற்கு முடிவு கட்டவும், இலங்கையில் உண்மையான அமைதியை ஏற்படுத்த அடித்தளம் அமைக்கவும்  அங்கு நடந்த போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் பசுமைத் தாயகம் சார்பில் தமயந்தி ராஜேந்திரா, வழக்கறிஞர் கார்த்திகா தவராஜா, வழக்கறிஞர் தாஷா மனோரஞ்சன் ஆகிய மூன்றுபேர் தமது பேச்சின் போது "இலங்கையின் மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தி பேசினார். மற்ற இருவரது பேச்சு அடுத்த பதிவில்

திங்கள், மார்ச் 11, 2013

அவசரம்: ஜெனீவா தீர்மானம் - தமிழ்நாட்டின் கோரிக்கையை ஒருமுகப்படுத்துங்கள்! உலகத் தமிழர்கள் வேண்டுகோள்.

ஈழத்தமிழர்களுக்கு நீதி மற்றும் கண்ணியமான அரசியல் தீர்வினை நோக்கிய பயணத்தில் உலகத் தமிழர்கள் ஒரு முக்கியமான காலகட்டத்தில் நிற்கிறார்கள். இந்த நேரத்தில் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் முதன்மை கோரிக்கை என்ன என்பதில் கருத்தொற்றுமை வேண்டும்.

குறிப்பாக, லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதத்தில் - "அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஐ.நா.சபையில் அமெரிக்க தீர்மானத்தை நிறைவேற்றாதே" என்ற கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதே போன்று தினமணி தனது தலையங்கத்தில் "தீர்மானமல்லாத தீர்மானம்" என்று அமெரிக்க தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற குழப்பமான கருத்துகளை இந்த நேரத்தில் தவிர்க்க வேண்டும்.

அமெரிக்க தீர்மானத்தை வரவேற்போம்

உலகின் அமைதி மற்றும் மனித உரிமையை காக்கும் கடமை எல்லா நாடுகளுக்கும் உண்டு. குறிப்பாக ஐநாவுக்கு உண்டு. ஆனால், இலங்கையில் படுதோல்வி அடைந்ததை  ஐக்கிய நாடுகள் அவையே ஏற்றுக்கொண்டுள்ளது. அதற்கு அடுத்ததாக அந்த பொறுப்பை நிறைவேற்றும் இடத்தில் உள்ள இந்திய அரசு ராஜபக்சேவின் சட்டைப் பைக்குள் தஞ்சமடைந்து விட்டது.

உண்மை இவ்வாறிருக்கும் போது - அமெரிக்கா கடந்த ஆண்டு ஜெனீவாவில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. இப்போது அதன் அடுத்த தீர்மானத்தை முன்வைத்துள்ளது (ஐநா மனித உரிமைக் குழுவின் 22 ஆவது கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரே ஒரு தீர்மானம் இது மட்டும்தான்). இந்த தீர்மானம் தமிழர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக் கூடிய அளவுக்கு வலுவானதாக இல்லை. ஆனால், மிக மோசமானதாகவும் இல்லை! இந்த வேறுபாட்டை தமிழர்களுக்காக பேசுபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஐநா மனித உரிமைகள் குழு என்பது ஒரு புதிய ஐநா அமைப்பு. அது 2006 முதல்தான் இயங்கி வருகிறது. ஐநா மனித உரிமைகள் அவையில் அமெரிக்கா ஒரு புதிய உறுப்பினர். அந்த நாடு 2009 முதல்தான் அங்கு இணைந்துள்ளது. 2009 ஆம் ஆண்டில் இந்தியாவும் கியூபாவும் இணைந்து இலங்கையை பாராட்டி ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்த போது அமெரிக்கா மனித உரிமைகள் குழுவில் உறுப்பினராக இல்லை.

மனித உரிமைகள் குழுவில் அமெரிக்கா 'ஒரு நல்ல பிள்ளையாகவும்' இல்லை. உலகின் மனித உரிமைக்காக கொண்டுவரப்படும் பல நல்ல தீர்மானங்களை அமெரிக்கா எதிர்த்துதான் வாக்களித்து வந்துள்ளது - இப்படிப்பட்ட பின்னணிகளை வைத்து பார்க்கும் போது இப்போதைய அமெரிக்க தீர்மானம் ஒப்பீட்டளவில் ஓரளவுக்கு வரவேற்கக் கூடிய தீர்மானம் தான்.

அமெரிக்கா அளித்துள்ள தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள்:

1. ஐநா மனித உரிமை ஆணையர் இலங்கை தொடர்பில் பிப்ரவரி 11 அன்று அளித்த அறிக்கையினை புதிய தீர்மானம் வரவேற்றுள்ளது. கூடவே சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என்கிற அவரது கோரிக்கயை கவனத்தில் கொள்வதாக இந்த தீர்மானம் கூறுகிறது.

2. மேற்கண்ட ஐநா மனித உரிமை ஆணையர் அறிக்கையில் இலங்கை அரசுக்கு 12 பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றை இலங்கை செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானம் கூறுகிறது.

3. ஐநா மனித உரிமை சிறப்பு விசாரணை வல்லுநர்களுக்கு (Special Rapporteurs) இலங்கை அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அவர்களுக்கு இலங்கை அரசு கட்டுப்பாடற்ற அனுமதி அளிக்க  வேண்டும்.

4.  ஐநா மனித உரிமைகள் ஆணையர் அவர்கள், இந்த தீர்மானத்தின் செயலாக்கம் தொடர்பில் இலங்கை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து 2013 செப்டம்பர் மாதம் கூடும் ஐநா மனித உரிமைகள் குழுவின் 24 ஆவது கூட்டத்தில் இடைக்கால அறிக்கையும்  2014 தொடக்கத்தில் கூடும் 25 ஆவது கூட்டத்தில் மற்றுமொரு முழு அறிக்கையும் சமர்ப்பிக்க வேண்டும். அதன் மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் கூறுகிறது.

"இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை" என்று சொல்வது போல - நாதியற்றுப் போன தமிழ் இனத்திற்கு இந்த தீர்மானம் ஆதரவான ஒன்றுதான்.

தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?

உலகின் அனைத்து தமிழர்களும் ஒரே இனம் என்கிற அடிப்படையில் நாம் முன்வைக்கும் கோரிக்கையானது உலகின் எல்லா மனித உரிமை ஆர்வலர்களும் ஏற்கத்தக்க நியாயமான கோரிக்கையாக இருக்க வேண்டும். அந்தவகையில் ஈழத்தமிழர்கள் தொடர்பில் இரண்டு கோரிக்கைகள் முதன்மை இடத்தைப் பிடித்தாக வேண்டும். 

1. இலங்கையில் நடைபெற்ற போரின்போது சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டது குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்காக ஒரு விசாரணை ஆணையத்தை அமைக்கும் தீர்மானம் ஐநா மனித உரிமைகள் குழுவில் நிறைவேற்றப்பட வேண்டும் (UN International Commission of Inquiry on Sri Lanka).
அதாவது, 2011 ஆம் ஆண்டில் சிரியா நாட்டிற்காகவும் லிபியா நாட்டிற்காகவும் இதே ஐநா மனித உரிமைகள் குழுவில் சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது போன்று இலங்கையில் விசாரண நடத்தவும் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.

சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டது (violations of international law, including international humanitarian and human rights law) குறித்து விசாரிக்க வேண்டும் என்று கேட்கும்போது அதில் எல்லா குற்றங்களும் அடங்கிவிடும். ஐநா நிபுணர் குழு அறிக்கையில் போர்க்குற்றங்களும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும் நடந்துள்ளதை குறிப்பிட்டுள்ளது. ஆனால், அவற்றுடன் இனப்படுகொலை நடந்ததையும் சேர்க்க போதுமான விசாரணையும் சாட்சியங்களும் அவசியம்.

(போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றம் இவை இரண்டுமே கொடூரமான குற்றங்கள்தான். அவற்றுடன் இனப்படுகொலை என்பதையும் இணைத்து மெய்ப்பிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு 'இலங்கையில் நடந்தது போர்க்குற்றம் அல்ல' என்று நாமே பேசக்கூடாது)

2. அடுத்ததாக, ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்கிற அடிப்படையில் எத்தகைய ஒரு அரசை விரும்புகிறார்கள் என்பது குறித்து ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழ்நாட்டு தமிழ் அமைப்புகள் முன்வைக்க வேண்டும்.

- மேற்கண்ட கோரிக்கைகளில் 'பொது வாக்கெடுப்பு' என்பது ஐநா மனித உரிமைகள் குழுவின் வரம்புக்குள் இருக்கும் விடயம் அல்ல. எனவே, நாம் உடனடியாக இதற்காக போர்க்கொடி தூக்க வேண்டாம்.

ஆனால், 'சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கான விசாரணை ஆணையம்' என்பது ஐநா மனித உரிமைகள் குழுவின் வரம்புக்குள் உள்ள விடயம். ஏற்கனவே, அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தில் - இதற்கான ஒரு வரியை கூடுதலாக இந்திய அரசு முன்மொழிந்தால் போதும். அடுத்த வாரமே - அதாவது மார்ச் 21 அல்லது 22 அன்று சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுவிடும்.

இது சாத்தியமா? - நிச்சயம் சாத்தியம்தான். 

"2011 ஆம் ஆண்டில் சிரியா நாட்டிற்காகவும் லிபியா நாட்டிற்காகவும் ஐநா மனித உரிமைகள் குழுவில் சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது போன்று இலங்கையில் விசாரண நடத்தவும் ஒரு சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்" என்கிற கோரிக்கையை - மத்தியில் ஆட்சி நடத்தும் - கலைஞர் நினைத்தால் நிச்சயமாக சாதிக்க முடியும். இதற்கு தமிழக முதல்வரும் மற்ற கட்சிகளும் ஆதரவு அளிப்பார்கள்.

கூடவே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி தமிழ்நாடு அரசும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்த வேண்டும். மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் கூறியது போல இதற்காக முழு அடைப்பு போராட்டம் நடத்த வேண்டும்.

உலகத் தமிழர்கள் ஆதரவு

சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கும் தீமானம் ஐநா மனித உரிமைகள் குழுவில் கொண்டுவரப்பட வேண்டும் (UN International Commission of Inquiry on Sri Lanka) என்கிற கோரிக்கையை உலகின் ஒட்டுமொத்த தமிழ் அமைப்புகளும் ஆதரிக்கின்றன. 

இதனை வலியுறுத்தி உலகத் தமிழ் அமைப்பு (World Thamil Organization, Inc), அமெரிக்க தமிழ் அரசியல் செயற்பேரவை (US Tamil Political Action Council), வட அமெரிக்க தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு (FeTNA), இலங்கைத் தமிழ் சங்கம், இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்துக்கான மக்கள் அமைப்பு (PEARL) வட கரோலினா அமைதி அமைப்பு (North Carolinians for Peace), இளந்தமிழரணி (Tamil Youth Front) ஆகிய அமைப்புகள் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். (அந்தக் கடிதம் கீழே).

இதே கோரிக்கையை பிரித்தானிய தமிழ் பேரவை (BTF), உலகத் தமிழ் பேரவை (GTF), நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) ஆகிய அமைப்புகளும் ஆதரிக்கின்றன.

எனவே, தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஒரே குரலில்:
1. ஐநா மனித உரிமைகள் குழுவில் சர்வதேச விசாரணை ஆணையத் தீர்மானம், 
2. ஈழத்தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு என்கிற கோரிக்கைகளை முதன்மைப்படுத்த வேண்டும்.


தொடர்புடைய சுட்டிகள்:

1. ஐநாவில் தீர்மானம்: இந்தியாவின் மூக்கை உடைத்த அமெரிக்காவும் தமிழ்நாட்டு அமைப்புகளின் குழப்பமும்!

2. அவசரம்: ஐநாவில் அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டது இலங்கை மீதான அமெரிக்கத் தீர்மானம்- இதோ நகல் -இனியும் இந்தியா மவுனம் காக்குமா?

3. டெசோ: கலைஞருக்கு துணிச்சலும் மனசாட்சியும் உண்டா? பாவத்தைக் கழுவ ஒரு கடைசி வாய்ப்பு!

4. ஐநாவில் இலங்கை போர்க்குற்றம்: இந்திய அநீதிக்கு ஒரு முடிவே இல்லையா? உதிரும் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட இந்தியாவில் தமிழர்களுக்கு இல்லை!

5. இந்திய பிரதமருக்கே தெரியாத அமெரிக்க தீர்மானம் இதுதான்! இதனை இன்னும் பலவீனமாக்க இந்திய அரசு துடிப்பது ஏன்?

6. இலங்கை - போர்க்குற்ற விசாரணை: ஐ.நாவில் பசுமைத் தாயகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை!

ஞாயிறு, மார்ச் 10, 2013

ராஜபக்சேவை கூண்டிலேற்ற வலியுறுத்தி அரசு சார்பில் முழு அடைப்பு: மருத்துவர் இராமதாசு அறிக்கை


"ஈழத்தமிழர்களின் நலன் காப்பதற்காக என்று கூறி வரும் 12-ஆம் தேதி டெசோ அமைப்பின் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக தி.மு.க. தலைவர் கலைஞர் அறிவித்திருக்கிறார்.

இலங்கையில் போர் உச்சகட்டத்தில் இருந்த போது கொத்து குண்டுகளை வீசியும், பாஸ்பரஸ் குண்டுகளை வீசியும் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது போர் நிறுத்தம் கோரி உண்ணா விரதம் இருந்த கலைஞர், இலங்கையில் போர்நிறுத்தம் செய்யப்பட்டதாக அவர் அங்கம் வகிக்கும் மத்திய அரசு சொன்ன பொய்யான தகவலைக்கூட சரிபார்க்காமல் 3 மணி நேரத்தில் போராட்டத்தி கைவிட்டார். 

அதன்பிறகும் தமிழர்கள் கொல்லப்படுவது தொடர்ந்த போது மழை விட்டும் தூவானம் விடவில்லை என்று கிண்டலடித்து தமிழர்களின் மரணங்களை கொச்சைப்படுத்தியவர் தான் கலைஞர். இப்போது ஈழத்தமிழர்கள் மீது திடீர் பாசம் வந்தவரை போல இப்போது முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்திருக்கிறார்.

இலங்கையில் போர் நடந்த போது பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகித்த இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் 04.02.2009 அன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் அறிவித்த போது, அத்தகைய போராட்டத்தை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போதைய தமிழக அரசின் தலைமைச்செயலாளர் சிறீபதி மூலம் அரசியல் கட்சிகளின் அலுவலகங்களுக்கு கடிதம் அனுப்பி மிரட்டல் விடுத்தவர் தான் தி.மு.க. தலைவர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட சென்னையில் நடத்தப்பட்ட டெசோ அமைப்பின் மாநாட்டில், மத்திய அரசின் அச்சுறுத்தலுக்கு பயந்து தனித்தமிழீழம் குறித்த தீர்மானத்தை நிறைவேற்றாமல் தவிர்த்தவர் கலைஞர். இப்போது வேறு சில அரசியல் காரணங்களுக்காக, ஈழத்தமிழர்களை முன்னிறுத்தி, இப்படி ஒரு முழு அடைப்பு போராட்ட நாடகம் நடத்துவதை தமிழ் உணர்வாளர்களும் தமிழக மக்களும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அதேநேரத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்று பட்டு நிற்கிறது  என்பதை உலகிற்கும், மத்திய அரசுக்கும் காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய உணர்வை வெளிப்படுத்த தமிழக மக்களும் தயாராகவே உள்ளனர். 

எனவே, ஈழப்பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும். அக்கூட்டத்தில் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று கோரி ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவே தீர்மானம் கொண்டுவரவேண்டும்.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு- கிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைத்து தமிழீழம் அமைப்பதற்கு உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களிடையே ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் சார்பில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." - இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.

ஐநாவில் தீர்மானம்: இந்தியாவின் மூக்கை உடைத்த அமெரிக்காவும் தமிழ்நாட்டு அமைப்புகளின் குழப்பமும்!

"இலங்கை மீது ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தில் ஒன்றுமேயில்லை. ஈழத்தமிழ் மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவும், ஈழ இனப்படுகொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் வேண்டும்" என்கிற கோரிக்கை தற்போது தமிழ்நாட்டில் எழுந்துள்ளது.

"இனப்படுகொலை விசாரணை, தமிழ் ஈழத்துக்கான வாக்கெடுப்பு" என்கிற கோரிக்கைகளில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அமெரிக்காவின் தீர்மானத்தில் ஒன்றுமே இல்லை என்று சொல்வது தேவையற்றது.

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் 
துணைவலியும் தூக்கிச் செயல் - என்றார் திருவள்ளுவர்.

(செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்) - இதனை இந்த நேரத்தில் தமிழர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கை மிகப் பலமான நிலையில் இருக்கிறது. இந்தியா என்கிற தெற்காசியாவின் வல்லரசு அதற்கு உற்ற தோழனாக நிற்கிறது. உலகின் முன்னணி கம்யூனிச நாடுகளும் இசுலாமிய நாடுகளும் இலங்கைக்கு பலமாக நிற்கின்றன. 

கம்யூனிச சித்தாந்தத்தை முழுவதாகவோ அல்லது ஓரளவுக்கோ ஏற்கும் கியூபாவும் சீனாவும் இலங்கையைக் காப்பதற்காக மல்லுகட்டுகின்றன. (நல்லவேளையாக அவை இப்போது மனித உரிமைகள் அவையில் உறுப்பினராக இல்லை). இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், இந்தோனேசியா, ஈரான் ஆகியவை அமெரிக்க தீர்மானத்துக்கு தீவிரமாக எதிர்ப்பு தெரிவிக்கின்றன. மலேசியாவும் அதே நிலைபாட்டை எடுக்கக் கூடும்.

எப்பாடுபட்டாவது, இந்த தீர்மானத்தை தோற்கடிக்கவோ அல்லது நீர்த்துப் போக செய்யவோ இந்தியா தீவிரமாக சதி வேலையில் இறங்கியுள்ளது.

தமிழரின் நிலை என்ன?

இலங்கையின் வலுவான நிலைக்கு மாறாக தமிழர்கள் பரிதாபகரமான நிலையில் உள்ளனர். தனக்கென பேசுவதற்கு ஒரு நாடும் இல்லாத கையறு நிலையில் தமிழர்கள் உள்ளனர்.

வாட்டிகன் நகர் எனப்படுகிற 'ஹோலி சீ' நாட்டின் மொத்த மக்கள் தொகை வெறும் 832 பேர் மட்டும்தான். அவ்வாறே, லீக்டன்ஸ்டைன் எனும் நாட்டின் மக்கள் தொகை 35 ஆயிரம் பேர் மட்டும்தான். இந்த நாடுகளுக்கு இருக்கும் வாய்ப்பும் முக்கியத்துவமும் கூட ஒன்பது கோடி தமிழர்களுக்கு இல்லை. 

தமிழர்களுக்கென்று ஒரு நாடும் இல்லை (இந்தியா எதிரியின் ஆதரவு நாடு). அதனால்தான் தமிழர்களின் மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே உள்ள சிங்களர்களால் தமிழர்களைக் கொன்று குவிக்கவும் அடக்கி ஒடுக்கவும் முடிகிறது.

அமெரிக்க தீர்மானத்தை வரவேற்போம்

"இனப்படுகொலை விசாரணை, தமிழ் ஈழத்துக்கான வாக்கெடுப்பு" என்பனவெல்லாம் ஒரே நாளில் அடையக்கூடிய இலக்குகள் இல்லை. படிப்படியாகத்தான் அதை நோக்கி முன்னேற வேண்டும். அதற்கான ஒரு படிக் கல்லாகத்தான் அமெரிக்க தீர்மானத்தை பார்க்க வேண்டும். (அதிலும் பொது  வாக்கெடுப்பு போன்ற கோரிக்கைகள் - ஐநா மனித உரிமைக் குழுவால் மட்டுமே முடியக் கூடியனவும் அல்ல. அதற்கு ஐநா பாதுகாப்பு சபையின் ஆதரவு வேண்டும். அங்கு தமிழர்களின் எதிரிகளான சீனாவும் ரசியாவும் வீட்டோ அதிகாரத்துடன் உள்ளனர்)

கடந்த 2009 ஆம் ஆண்டில் இந்தியா, கியூபா உள்ளிட்ட நாடுகள் "விடுதலைப் புலிகளை ஒழித்ததற்காக இலங்கையைப் பாராட்டி" ஐநா மனித உரிமைகள் அவையில் தீர்மானம் கொண்டுவந்தன. அந்த நிலைமை இன்று தலைகீழாக மாறி - இலங்கையைக் கண்டித்து தீர்மானம் வருகிறது. இது முன்னேற்றம் இல்லையா?

அமெரிக்காவின் மீது தமிழர்களுக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், ஈழத்தமிழர் விடயத்தில் அது நமது நட்பு நாடுதான்.

தமிழர்கள் எப்போதும் கியூபாவுக்கு ஆதரவான நிலையில்தான் இருந்தனர். இன்றைக்கும் தமிழ்நாட்டு இளைஞர்கள் செ குவேராவையும் பிடல் காஸ்ட்ரோவையும் தமது சட்டையில் பொறித்துக் கொள்கிறார்கள். ஆனால், கியூபா நமது மனித உரிமையை மதித்ததா? தமிழர்கள் எப்போதுமே இஸ்லாமியர்களுக்கு நண்பர்கள்தான். ஆனால், இஸ்லாமிய நாடுகள் நமது உரிமைகள் அங்கீகரித்தனவா? (இப்போதும் - இலங்கை மீதான தீர்மானத்தை எதிர்க்கும் தமிழ்நாட்டு அமைப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒன்று மட்டும்தான்)

இந்தியாவின் மூக்கை உடைத்த அமெரிக்கா

கடந்த 2012 ஆம் ஆண்டில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தில் கடைசி நேரத்தில் திருத்தம் செய்து இலங்கையைக் காப்பாற்றியது இந்தியா. இந்த முறை சற்று பலவீனமான ஒரு தீர்மானத்தை முதலில் கசியவிட்டது அமெரிக்கா.

உடனடியாக - பலவீனமான இந்த தீர்மானத்தை இலங்கை தானாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் ஐநா வாக்கெடுப்பையும், சர்வதேச அவமானத்தையும் இலங்கை சமாளித்து விடலாம என்று ஆலோசனை சொன்னது இந்தியா.
இதற்காக இலங்கை அமைச்சர் நிமல் சிறிபால டெசில்வா புதுதில்லிக்கு வந்தார். அமெரிக்காவிடம் பேசி அந்த தீர்மானத்தை மேலும் பலவீனமாக்கி, ஏற்றுக் கொள்வதாக நாடகமாடி, பின்னர் அதைச் செய்தோம் இதைச் செய்தோம் என்று ஏமாற்றலாம் என சதி செய்தனர். ராஜபக்சேவே ஜெனீவாவுக்கு போகவேண்டும் என்று திட்டம் தீட்டப்பட்டது. இலங்கையின் தூதுவர்கள் அமெரிக்காவுக்கும் சென்றதாகக் கூறப்பட்டது, இந்திய வெளியுறவுத்துறையின் ஆசியுடன் சுப்பிரமணிய சாமியும் அமெரிக்காவுக்கு சென்றார்.

சுதாரித்துக் கொண்ட அமெரிக்கா, தீர்மானத்தை சற்று கடினமானதாக மாற்றியது. "இலங்கை மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும்" என்கிற ஐநா மனித உரிமைகள் ஆணையரின் கோரிக்கையை நேரடியாக தீர்மானத்தின் செயல்பாட்டு பகுதியில் (operational part) சேர்த்தது. கூடவே, அவரது பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்ற வாசகத்தையும் இணைத்தது. "ஐநா மனித உரிமை சிறப்பு விசாரணை வல்லுநர்கள் (UN Special Rapporteurs) இலங்கைக்கு செல்ல வேண்டும். அவர்களை தங்குதடையின்றி அனுமதிக்க வேண்டும்" என்கிற கட்டாயத்தை வலியுறுத்தியது.

முதலில் ஒருவருடத்திற்கு பின்னர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற வார்த்தையை மாற்றி - அடுத்த ஆறு மாதத்தில் ஒரு இடைக்கால அறிக்கையும், ஒரு வருடத்தில் முழு அறிக்கையும் மனித உரிமைக் குழுவில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
அதாவது, தீர்மானத்தை "இலங்கை தானாகவே ஏற்றுக் கொள்ள வாய்ப்பே இல்லை" என்கிற நிலையை உருவாக்கிவிட்டது அமெரிக்கா. அந்த வகையில் அமெரிக்க வெளியுறவு வல்லுநர்கள் தாங்கள் இந்திய வெளியுறவுத் துறையினரை விட புத்திசாலிகள் என மெய்ப்பித்து விட்டனர்.

இதனால்தான் - முதலில் அமெரிக்க தீர்மானத்தை ஏற்று இந்தியா வாக்களிக்கும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார் (Manmohan Singh had promised to support the US resolution against Sri Lanka). பின்னர், தீர்மானத்தை பார்த்த பின்னர்தான் முடிவு செய்வோம் என்று பல்டியடித்தார் (India will take steps based on what kind of resolutions comes in the UN HRC).

இனி என்ன?

"ஒன்றுமே இல்லாத நிலையில் இப்படியான தீர்மானங்களாவது வருவது வரவேற்கத்தக்கதே" என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கூறியுள்ளது. இதுதான் ஒட்டுமொத்த தமிழர்களின் நிலைபாடாக இருக்க வேண்டும். அமெரிக்காவின் இந்த தீர்மானம் கூட பல தமிழ் செயல்பாட்டாளர்களின் அயராத முயற்சியின் விளைவாகவே வந்துள்ளது. இந்த சிறிய வெற்றியைக் கொண்டாடுவதன் மூலமே அடுத்த வெற்றியை நோக்கிப் பயணிக்க வேண்டும்.

அமெரிக்கா எந்த சுயநலத்தின் அடிப்படையில் இந்த தீர்மானத்தை முன்வைத்தாலும் அதைப்பற்றி நாம் கவலை கொள்ள தேவையில்லை. அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டை இலங்கை எதிர்க்கிறது. ராஜபக்சே எதிர்க்கிறான். இது ஒன்றே நாம் அமெரிக்காவை ஆதரிக்கப் போதுமானதாகும். இந்த தீர்மானத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவது என்பதே தமிழ் மக்களின் முன் உள்ள உடனடிக் கடைமை.

தமிழர்களின் நண்பன் - அமெரிக்கா வாழ்க!

தொடர்புடைய சுட்டிகள்:

1. அவசரம்: ஐநாவில் அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டது இலங்கை மீதான அமெரிக்கத் தீர்மானம்- இதோ நகல் -இனியும் இந்தியா மவுனம் காக்குமா?

2. டெசோ: கலைஞருக்கு துணிச்சலும் மனசாட்சியும் உண்டா? பாவத்தைக் கழுவ ஒரு கடைசி வாய்ப்பு!

3. ஐநாவில் இலங்கை போர்க்குற்றம்: இந்திய அநீதிக்கு ஒரு முடிவே இல்லையா? உதிரும் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட இந்தியாவில் தமிழர்களுக்கு இல்லை!

4. இந்திய பிரதமருக்கே தெரியாத அமெரிக்க தீர்மானம் இதுதான்! இதனை இன்னும் பலவீனமாக்க இந்திய அரசு துடிப்பது ஏன்?

5. இலங்கை - போர்க்குற்ற விசாரணை: ஐ.நாவில் பசுமைத் தாயகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை!

சனி, மார்ச் 09, 2013

அவசரம்: ஐநாவில் அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டது இலங்கை மீதான அமெரிக்கத் தீர்மானம்- இதோ நகல் -இனியும் இந்தியா மவுனம் காக்குமா?

இதோ இன்று மார்ச் 9 சனிக்கிழமை ஐநா மனித உரிமைக் குழுவில்  (UNHRC) அதிகாரப்பூர்வமாக வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் உண்மை நகல்:  - இனியும் இந்தியா மவுனம் காக்குமா?

மார்ச் 13 அன்று ஐநாவில் சமர்ப்பிக்கப்படும் என்று பத்திரிகைகளில் கூறப்பட்ட நிலையில் - இலங்கை மீதான தீர்மானம் இன்றே (சனிக்கிழமை) அதிகாரப்பூர்வமாக ஐநா மனித உரிமைகள் குழுவில் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மார்ச் 21 அல்லது 22 அன்று நடக்கலாம்.

தொடர்புடைய சுட்டிகள்:

1. டெசோ: கலைஞருக்கு துணிச்சலும் மனசாட்சியும் உண்டா? பாவத்தைக் கழுவ ஒரு கடைசி வாய்ப்பு!

2. ஐநாவில் இலங்கை போர்க்குற்றம்: இந்திய அநீதிக்கு ஒரு முடிவே இல்லையா? உதிரும் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட இந்தியாவில் தமிழர்களுக்கு இல்லை!

3. இந்திய பிரதமருக்கே தெரியாத அமெரிக்க தீர்மானம் இதுதான்! இதனை இன்னும் பலவீனமாக்க இந்திய அரசு துடிப்பது ஏன்?

4. இலங்கை - போர்க்குற்ற விசாரணை: ஐ.நாவில் பசுமைத் தாயகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை!

வெள்ளி, மார்ச் 08, 2013

இந்திய பிரதமருக்கே தெரியாத அமெரிக்க தீர்மானம் இதுதான்! இதனை இன்னும் பலவீனமாக்க இந்திய அரசு துடிப்பது ஏன்?


(அமெரிக்க தீர்மானத்தின் நகலைக் கீழே காண்க)
இலங்கை குறித்த ஐநா மனித உரிமை தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும், வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் 'அமெரிக்க தீர்மானத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாத நிலையில் நாம் முடிவெடுக்க முடியாது' என்று மழுப்பலாக பேசி வருகின்றனர். ஆனால், இந்த விவகாரத்தை கவனிக்கும் எல்லோருக்குமே அமெரிக்க தீர்மானத்தில் என்ன இருக்கிறது என்று நன்றாகவே தெரியும்!

உலகிற்கே தெரிந்த விடயம் இந்திய பிரதமருக்கும் வெளியுறவு அமைச்சருக்கும் தெரியாது என்று சொன்னால் அதற்காக இந்திய மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். ஆனாலும், உண்மை அதுவல்ல. அமெரிக்க தீர்மானத்தில் உள்ள 'இலங்கைக்கு இலேசாக வலிக்கும்' வாசகங்களைக் கூட இந்தியா ஏற்க மறுக்கிறது என்பதே இதன் பின்னுள்ள கொடூரமான உண்மை. 
இலங்கைக்கு கொஞ்சமும் வலிக்காத வகையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என்று உலகநாடுகளுக்கு சமிக்ஞை அனுப்பும் வகையிலேயே இந்திய அரசு இப்போது நடந்துகொள்கிறது. ராஜதந்திர மட்டங்களில் இன்னும் தீவிரமாக இலங்கையை ஆதரித்து இந்தியா பஞ்சாயத்தில் ஈடுபட்டிருக்கும் என்பது உறுதி. 

இதுதான் தமிழ்நாட்டு தமிழர்களின் உணர்வுகளை மதிக்கும் லட்சணமா? டெசோ கலைஞருக்கே வெளிச்சம்!

அமெரிக்க தீர்மானம் கூறுவது என்ன?

அமெரிக்க தீர்மானத்தின் முதல் வரைவு கடந்த மார்ச் ஒன்றாம் தேதி வெளியானது. அடுத்த வரைவு ஏழாம் தேதி வெளியாகியுள்ளது. இந்த தீர்மான நகல் இந்தியாவிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் தமிழர்கள் எதிர்பார்க்கும் அளவிலோ, உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் எதிர்பார்க்கும் அளவிலோ இல்லை.

இலங்கை இனப்படுகொலை குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணையையும் தமிழ் மக்களிடையே பொது வாக்கெடுப்பையும் தமிழர்கள் கோருகிறார்கள். இலங்கைப் போரின்போது பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என்று உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் கோருகின்றன. இவை எதுவும் அமெரிக்க வரைவு தீர்மானத்தில் இல்லை.

ஆனாலும், 2009 ஆம் ஆண்டில் இந்தியாவின் உதவியுடன் நிரைவேற்றப்பட்ட இலங்கைக்கான பாராட்டுப் பத்திரம் போல இந்த புதிய தீர்மானம் இல்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா கொண்டுவந்த தீமானத்தை விட ஒரு படி மேலாகவும் புதிய தீர்மானம் இருக்கிறது.

அமெரிக்க தீர்மான விவரம்

உலக நாடுகளுக்கு 7.3.2013 அன்று அமெரிக்கா அளித்துள்ள தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள்:

1. இலங்கை அரசு அமைத்த எல்.எல்.ஆர்.சி மற்றும் அதனை செயல்படுத்துவதற்கான தேசிய செயல்திட்டம் ஆகிய இரண்டுமே பன்னாட்டு சட்டங்களின் கீழான பொறுப்புகளை நிரைவேற்ற போதுமானவை அல்ல என்று இந்த தீர்மானம் கவலை தெரிவித்துள்ளது.

2. ஐநா மனித உரிமை ஆணையர் இலங்கை தொடர்பில் பிப்ரவரி 11 அன்று அளித்த அறிக்கையினை புதிய தீர்மானம் வரவேற்றுள்ளது. கூடவே சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என்கிற அவரது கோரிக்கயை கவனத்தில் கொள்வதாக இந்த தீர்மானம் கூறுகிறது.

3. மேற்கண்ட ஐநா மனித உரிமை ஆணையர் அறிக்கையில் இலங்கை அரசுக்கு 12 பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றை இலங்கை செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானம் கூறுகிறது.

4. இலங்கையில் போரின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த நியாயமான சுதந்திரமான விசாரணை வேண்டும் என்கிற கடந்த ஆண்டின் தீர்மானத்தில், "பன்னாட்டு சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்" என்பது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

5. ஐநா மனித உரிமை சிறப்பு விசாரணை வல்லுநர்களுக்கு (Special Rapporteurs) இலங்கை அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அவர்களுக்கு இலங்கை அரசு கட்டுப்பாடற்ற அனுமதி அளிக்க  வேண்டும்.

6.  ஐநா மனித உரிமைகள் ஆணையர் அவர்கள், இந்த தீர்மானத்தின் செயலாக்கம் தொடர்பில் இலங்கை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து 2013 செப்டம்பர் மாதம் கூடும் ஐநா மனித உரிமைகள் குழுவின் 24 ஆவது கூட்டத்தில் இடைக்கால அறிக்கையும்  2014 தொடக்கத்தில் கூடும் 25 ஆவது கூட்டத்தில் மற்றுமொரு முழு அறிக்கையும் சமர்ப்பிக்க வேண்டும். அதன் மீது விவாதம் நடத்தப்பட வேண்டும்.

அமெரிக்க தீர்மானத்தின் நகல்:
அமெரிக்க தீர்மானத்தை நீர்த்துப் போக செய்ய இந்தியா துடிப்பது ஏன்?

1. முதன் முறையாக "இலங்கை மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும்" என்கிற கருத்து ஐநா தீர்மானத்தில் இடம்பெற்றுள்ளது. அத்தகைய ஒரு விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்றாலும், அப்படி ஒரு கோரிக்கை உள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது.

இதற்கு முன்பு டப்ளின் மக்கள் தீர்ப்பாயம் இதனைக் குறிப்பிட்டாலும், அந்த தீர்ப்பாயமே அரசு சாராத ஒரு குடிமக்கள் அமைப்புதான் என்பதால் அதற்கு சட்ட வலிமை இல்லை. அடுத்ததாக, ஐநா பொதுச்செயலர் அமைத்த இரண்டு குழுக்கள் இதனைச் சுட்டிக்காட்டினாலும் - அந்த அறிக்கைகள் ஐநா பாதுகாப்பு அவையிலோ, மனித உரிமைகள் அவையிலோ சமர்ப்பிக்கப்படவும் இல்லை, விவாதிக்கப்படவும் இல்லை. அவற்றின் மீது ஐநா நடவடிக்கை எதுவும் இல்லை.

"இலங்கை மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும்" என்பது நவநீதம் பிள்ளை அவர்கள் மார்ச் 20 அன்று சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில்தான் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றுள்ளது. இது தீர்மானத்திலும் இடம்பெறுவது முக்கியமானதாகும்.

2. ஐநா மனித உரிமை சிறப்பு விசாரணை வல்லுநர்கள் இலங்கைக்கு செல்ல வேண்டும் என்பதும் முக்கியமானது. சுமார் ஆறு குழுக்கள் சென்று அவர்களது அறிக்கைகள் தொடர்ச்சியாக வெளியாகும் நிலையில் அது உலக அரங்கில் இலங்கையை மேலும் அம்பலப்படுத்துவது உறுதி.

3. "பன்னாட்டு சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்" எனும் புதிய வாசகத்துக்குள் எதை வேண்டுமானாலும் கொண்டுவர முடியும்.

4. அடுத்த ஆறு மாதத்தில் ஒரு இடைக்கால அறிக்கையும், ஒரு வருடத்தில் முழு அறிக்கையும் மனித உரிமைக் குழுவில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதால் - ஐ.நா மனித உரிமைகள் விவாதத்தில் இலங்கை நிரந்தரமாக இடம் பிடிக்கும்.

- இலங்கையிடம் அளவுகடந்த காதல் கொண்டுள்ள இந்தியா இதையெல்லாம் ஏற்பது கடினம்தான்.

திரிசங்கு நிலையில் இந்தியா

47 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட  ஐநா மனித உரிமைகள் குழுவில் இலங்கையை எப்போதும் காப்பாற்றிக் கொண்டிருக்கும் நாடுகளான கியூபா, சீனா, ரசியா ஆகிய நாடுகளின் பதவிக்காலம் 2012 ஆம் ஆண்டில் முடிந்துவிட்டது. அவை இப்போது ஐநா மனித உரிமைகள் குழுவில் உறுப்பினர்களாக இல்லை. இலங்கையும் அதில் உறுப்பினராக இல்லை. இப்போது ஐநா மனித உரிமைக் குழுவில் எஞ்சியுள்ள இலங்கையின் ஒரே தீவிர ஆதரவு நாடு இந்தியா மட்டும்தான்.
அமெரிக்க தீர்மானம் மார்ச் 21 அல்லது 22 ஆம் நாள் வாக்கெடுப்புக்கு வரக்கூடும். கடந்த ஆண்டு 24 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்து வெறிபெறச்செய்தன. இந்த ஆண்டு அதைவிட அதிகமான நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும். இதனால் சர்வதேச அரங்கில் இலங்கை இன்னும் தனிமைப்பட்டு போகும்.

மனித உரிமைகள் அவையில் இலங்கைக்கு ஆதரவு மிகக் குறைவு என்பதனால் புதிய தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படாமலேயே நிறைவேற்றப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. ஆனால், "இலங்கை மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என்கிற கோரிக்கயை கவனத்தில் கொள்வதாக" கூறும் தீர்மானத்தை இலங்கை எப்படி தானாக ஏற்கும்?

ஏற்றுக்கொண்டால் உள்நாட்டில் அவமானம், ஏற்காவிட்டாலும் தீர்மானம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும் - என்கிற இக்கட்டான நிலை இலங்கைக்கு.

தீர்மானத்தை ஆதரித்தால் இலங்கைக்கு வலிக்கும். ஆதரிக்காவிட்டாலும் தீர்மானம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும் - என்கிற இக்கட்டான நிலை இந்தியாவுக்கு.

அதனால்தான் 'இலங்கைக்கு வலிக்காத மாதிரி தீர்மானத்தை மாற்றுங்கள்' என்று கட்டைப் பஞ்சாயத்தில் ஈடுபட்டுள்ளது இந்தியா?

தமிழ்நாட்டு தமிழர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதைக் காண உலகம் காத்திருக்கிறது. டெசோ கலைஞர் என்ன செய்யப்போகிறார் என்பதைக் காண தமிழ்நாட்டு தமிழர்கள் காத்திருக்கிறார்கள்.
தொடர்புடைய சுட்டிகள்:

1. டெசோ: கலைஞருக்கு துணிச்சலும் மனசாட்சியும் உண்டா? பாவத்தைக் கழுவ ஒரு கடைசி வாய்ப்பு!

2. ஐநாவில் இலங்கை போர்க்குற்றம்: இந்திய அநீதிக்கு ஒரு முடிவே இல்லையா? உதிரும் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட இந்தியாவில் தமிழர்களுக்கு இல்லை!

3. இலங்கை - போர்க்குற்ற விசாரணை: ஐ.நாவில் பசுமைத் தாயகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை!

வியாழன், மார்ச் 07, 2013

இலங்கை - போர்க்குற்ற விசாரணை: ஐ.நாவில் பசுமைத் தாயகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை!

இலங்கையில் ஒன்றைரை லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களை கொடூரமான முறையில் படுகொலை செய்த இலங்கை அதிபர் இராஜபக்சே மற்றும் அவனது கூட்டாளிகள் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்தக்கோரும் தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமெரிக்காவும் கடந்த ஆண்டு தாக்கல் செய்ததன் தொடர்ச்சியான நடைமுறை தீர்மானத்தையே தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. இந்த நிலையில் ஐ.நா. அமைப்பால் அதிகாரப்பூர்வ ஆலோசனை அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில், இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரும் அறிக்கை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
மருத்துவர் இராமதாசு அவர்களால் நிறுவப்பட்ட அமைப்பான பசுமைத் தாயகம் கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்தே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற இலங்கை அரசுக்கு எதிரான காலமுறை விசாரணையின் போது பசுமைத் தாயகத்தின் சார்பில் பா.ம.க. தலைவர் கோ.க. மணி, பசுமைத் தாயகத்தின் செயலாளர் இர. அருள் ஆகியோர் பங்கேற்றனர்.

ஐ.நாவின் அதிகாரப்பூர்வ ஆலோசனை அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ள (NGO in special consultative status with UN ECOSOC) பசுமைத் தாயகத்தின் பிரதிநிதிகளால் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் உரையாற்றவும் அறிக்கைத் தாக்கல் செய்யவும் முடியும். அதன் படி பசுமைத் தாயகம் தாக்கல் செய்துள்ள அறிக்கை மனித உரிமை ஆணையத்த்தின் அனைத்து உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் ஐ.நா. பொதுச்செயலரின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
பசுமைத் தாயகத்தின் அறிக்கையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்தும், கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குப் பிறகு இலங்கையில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் பட்டியலிடப்பட்டிருப்பதால் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கலாம் என்பதிலும், போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான திருத்தத்தை கொண்டுவருவதிலும் மனித உரிமை ஆணைய உறுப்பு நாடுகளிடையே இந்த அறிக்கை தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

இலங்கை தொடர்பாக, இந்தியாவிலிருந்து ஐநா மனித உரிமை ஆணையத்தின் 22 ஆவது கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்துள்ள ஒரே அமைப்பு பசுமைத் தாயகம் மட்டும்தான்.

பசுமைத் தாயகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை இதோ:


தொடர்புடைய சுட்டி:

டெசோ: கலைஞருக்கு துணிச்சலும் மனசாட்சியும் உண்டா? பாவத்தைக் கழுவ ஒரு கடைசி வாய்ப்பு!

ஐநாவில் இலங்கை போர்க்குற்றம்: இந்திய அநீதிக்கு ஒரு முடிவே இல்லையா? உதிரும் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட இந்தியாவில் தமிழர்களுக்கு இல்லை!

புதன், மார்ச் 06, 2013

டெசோ: கலைஞருக்கு துணிச்சலும் மனசாட்சியும் உண்டா? பாவத்தைக் கழுவ ஒரு கடைசி வாய்ப்பு!

கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக நாளுக்கொரு அறிக்கை விடுகிறார். மூன்று நாட்களுக்கு ஒரு முறை போராட்டமோ நிகழ்ச்சியோ நடத்துகிறார். வள்ளுவர் கோட்டம் முற்றுகை, தில்லியில் டெசோ கூட்டம், தமிழ்நாட்டில் முழு அடைப்பு என்று போகிறது அவரது அரசியல். ஆனாலும், அவர் "வேறு ஏதோ ஒரு காரணத்துக்காக" இதைச் செய்வதாக சராசரி தமிழன் நினைக்கிறான்.

கலைஞரின் புதிய நடவடிக்கைகளால் அவர் மீது வீழ்ந்துள்ள வரலாற்று பழி நீங்காது. அவர் கொஞ்சமாவது பாவத்தைக் கழுவ வேண்டும் என்றால் - அவர் செய்ய வேண்டிய உருப்படியான காரியங்கள் வேறுசில இருக்கின்றன. அவற்றை கடைசியில் பார்ப்போம்.

கலைஞரின் கருப்பு வரலாறு

கலைஞர் எத்தனை ஆண்டுகாலம் அரசியலில் கோலோச்சினார் என்பது முக்கியமில்லை. அவரது பெயர் வரலாற்றில் எப்படி இடம்பிடிக்கப் போகிறது என்பதுதான் முக்கியமானதாகும். அவர் தமிழ் இனத்துக்கு செய்த நன்மைகளைப் பட்டியலிட முடிகிறதோ இல்லையோ, அவரால் நேர்ந்த கேடுகளைப் பட்டியலிட முடியும். அதில் முதல் இடம் பிடிக்கக் கூடியது ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகம்தான்.
ஈழத்தமிழினத்தின் சோகத்துக்கு காரணமானவர்களில் ஒவ்வொரு தமிழனும் குற்றவாளியாக இருக்கிறான். ஒவ்வொரு அரசியல் கட்சியும் இருக்கிறது. இந்தக் குற்றத்தை முன்னின்று நடத்தியவராக கலைஞர் இருக்கிறார். ஈழப்போர் உச்சக் கட்டத்தை எட்டிய காலத்தில் தமிழ் நாட்டின் முதலமைச்சராக அவர் இருந்தார். அதுமட்டுமல்ல, தமிழ்நாடு - புதுவையின் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவருக்கு பக்க பலமாக நின்றனர்.

அப்படிப்பட்ட வலுவான நிலையில் கலைஞரைத் தவிர வேறு யார் முதலமைச்சாராக இருந்திருந்தாலும் - ஒரு லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை வெறுமனே வேடிக்கைப் பார்த்திருப்பார்களா? என்கிற கேள்வி வரலாறு நெடுகிலும் கேட்கப்படும்.

கலைஞர் செய்த பெரும் குற்றம் 1: நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா

ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் ஏற்பட்ட பேரிழப்பை தடுக்கும் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 14 அன்று வந்தது. "ஈழத்தமிழர்கள் அழிப்பை இந்தியா இரண்டு வாரங்களில் தடுக்காவிட்டால், தமிழ்நாட்டின் எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வது" என்று அப்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த எல்லா கட்சிகளும் கலைஞர் தலைமையில் ஒருமனதாக முடிவெடுத்தனர். (End Lanka war in two weeks, else TN MPs will quit: Karunanidhi)
அந்த ஒரு முடிவுமட்டும் நிறைவேற்றப் பட்டிருந்தால் - இலங்கையில் மாபெரும் மனிதப் பேரழிவு நிகழ்ந்திருக்காது. ஏனெனில், இலங்கையில் போரை முன்னின்று நடத்திய நாடு இந்தியா தான். குறிப்பாக காங்கிரசு கட்சிதான் இந்தப் போரை நடத்தியது. தமிழ் நாட்டின் 40 உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருந்தால் அதன் பிறகு காங்கிரசு அரசு பிழைத்திருக்காது, இலங்கையில் போரும் தொடர்ந்திருக்காது.

ஆனால். கெடு முடிவதற்கு மூன்று நாட்கள் இருக்கும் போது அக்டோபர் 26 அன்று காலை பிரணாப் முகர்ஜி இலங்கையின் பசில் ராஜபட்சேவுடன் பேச்சு நடத்தினார். பின்னர் சென்னை வந்து கலைஞரிடம் மூன்று மணி நேரம் பேசினார். திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ராஜினாமா செய்ய மாட்டார்கள் - என்று பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.  (Karunanidhi will not insist on MPs' resignation: Mukherjee) 

இலங்கையில் தமிழர்களைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு அளித்த உறுதி மொழியின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா முடிவை கைவிட்டார் கலைஞர் என்று கூறப்பட்டது. ஆனால், அதற்கு பின்னர்தான் ஒரு லட்சம் தமிழ் மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

(DMK resignation threat blows over: Karunanidhi has assured he would not precipitate a crisis for UPA government over Sri Lankan Tamils issue after the Centre apprised him of steps being taken by the island nation's governments to ensure safety of Tamil civilians.)

ஈழத்தமிழினம் பேரழிவில் இருந்து காப்பாற்றப்படும் கடைசி வாய்ப்பு 'எதற்காகவோ' கைவிடப்பட்டது. இந்த வரலாற்று பெரும்பழி ஒருநாளும் மறையாது.
கலைஞர் அவரது 'நெஞ்சுக்கு நீதியின்' அடுத்த பாகத்தை எழுதும் வாய்ப்பிருந்தால் - 2008 அக்டோபர் 26 அன்று பிரணாப் முகர்ஜியிடம் மூன்று மணி நேரம் என்னவெல்லாம் பேசினார் - என்பதை தமிழக மக்களுக்கு சொல்ல வேண்டும். ஒரு லட்சம் மக்களின் படுகொலைக்கு காரணமான அந்த மூன்று மணி நேர பேச்சின் விவரம் வெளி உலகிற்கு சொல்லப்பட்டாக வேண்டும். 

(பிற்காலத்தில், அதே பிரணாப் முகர்ஜி இந்திய நாட்டின் ஜனாதிபதியாக வேண்டும் என முந்நின்று பாடுபட்டவரும் கலைஞர்தான்)

கலைஞர் செய்த பெரும் குற்றம் 2: சாகும்வரை உண்ணாவிரதம்

"உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் அறிவித்த போதிலும், இலங்கை அரசு அதனை ஏற்காததைக் கண்டித்து, இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி" 2009 ஏப்ரல் 27 அன்று சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் கலைஞர். "ராஜபக்சேவின் கடைசி பலியாக தான் இருக்கட்டும்" என்றும், "ஈழத்தமிழர்களுக்காக தன் உயிரைத் தியாகம் செய்ய தயாராக இருப்பதாகவும்" தெரிவித்தார்.
ஆனால், உண்ணாவிரதம் தொடங்கிய மூன்று மணி நேரத்தில் அதனைக் கைவிட்டார் கலைஞர். கூடவே, இந்திய அரசின் முயற்சியால் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்றும் அறிவித்தார். (Karunanidhi calls off indefinite hunger strike)

"இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக இலங்கை அரசின் பாதுகாப்பு கவுன்சில் கூடி போருக்கான நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது என்று முடிவு செய்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது" என்று கூறினார் கலைஞர்.

கலைஞரின் போர்நிறுத்த அறிவிப்புக்கு பின்னர்தான் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் மேலும் அதிகரித்தது. அதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது "மழை விட்டும் தூவானம் விடவில்லை' என்றார் கலைஞர். 

"மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பார்களே, அதைப் போல எல்லா போர் முனைகளிலும் கொஞ்சம் கொஞ்சம் இதுபோல நடக்கக் கூடும். அதுபோல நடந்திருக்கும் என்று கருதுகிறேன்" என்று மனசாட்சியை அடகுவைத்து பேசினார் கலைஞர்.

இன்று அவர் கண்ணீர் வடிக்கும் "பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்டது அந்த தூவானத்தில்தான்". (This is proof, beyond reasonable doubt, of the execution of a child – not a battlefield death) "நிராயுதபாணிகளாக நடேசனும் புலித்தேவனும் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த பின்பு சித்தரவதை செய்து கொல்லப்பட்டதும் அந்த தூவானத்தில்தான்". (The final atrocity: Uncovering Sri Lanka’s ‘white flag incident’)
- இப்படியாக 2009 ஆம் ஆண்டு மே மாதம் ஈழமண்ணில் பேரவலம் உச்சக்கட்டத்தை எட்டுவதற்கு முன்னால் 2008 அக்டோபர் 26 அன்று ஒருமுறையும், 2009 ஏப்ரல் 27 அன்று மறுமுறையும் கலைஞர் நடத்திய நாடகங்கள் வரலாற்றின் கருப்பு பக்கங்களில் என்றென்றும் இடம் பிடித்திருக்கும்.

உண்மையில், தமிழகத்தில் எழுந்த மக்கள் பேரெழுச்சியை தணிப்பதற்காக - அதாவது ராஜபக்சேவின் கொடூரங்களுக்கு ஆதரவாக - கலைஞரின் நாடகம் நடத்தப்பட்டதா என்கிற கேள்வியை எதிர்காலத் தலைமுறை கேட்கும்.

பாவத்தைக் கழுவ என்ன வழி?

தமிழ்நாட்டுத் தமிழர்கள் செய்த பிழையால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர் (தெரியாமல் செய்த பிழை 2004 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரசு கட்சியின் தலைமையில் ஆட்சி அமைய 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்தது டெல்லிக்கு அனுப்பியது. தெரிந்து செய்த பிழை - கலைஞரின் தலைமையில் 2009 ஆண்டு படுகொலைகளை வேடிக்கைப் பார்த்தது). இந்தப் பாவச்செயலுக்கு ஒரு போதும் மன்னிப்பு இல்லை. குறிப்பாக, கலைஞரை வரலாறு மன்னிக்காது.

ஆனாலும், பாவங்களை ஓரளவுக்கு கழுவ அவருக்கு இப்போதும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு, இலங்கை குறித்த இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு சிறிய மாற்றத்தைக் கொண்டுவந்தால் போதும். இப்போதும் இந்திய அரசு கலைஞரின் ஆதரவில்தான் நடக்கிறது என்பதால் - அந்த மாற்றம் சாத்தியமாகக் கூடியதுதான்.

முதலாவதாக, பன்னாட்டு விசாரணையிலிருந்து இலங்கையை இந்திய அரசு காப்பாற்றக் கூடாது. அடுத்ததாக, நவம்பர் மாதம் கொழும்பில் நடபெறவுள்ள காமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும். இதற்கு கலைஞர்தான் பொறுப்பு.

1. பன்னாட்டு விசாரணையை இந்தியா தடுக்கக் கூடாது.

'இலங்கை ஒரு இறையாண்மை மிக்க நாடு, அது ஒரு ஜனநாயக நாடு' என்கிற வாதங்கள் பன்னாட்டு அரங்கில் காலாவதியாகிவிட்டன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை இலங்கையை ஆதரித்த பல நாடுகள் அந்த நிலைபாட்டை இப்போது மாற்றிக் கொண்டுவிட்டன.

ஐநா மனித உரிமைகள் ஆணையரே, ஐநா மனித உரிமைக் குழுவிற்கு அளித்த தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் "இலங்கையில் நடந்த குற்றங்கள் குறித்து ஒரு சுதந்திரமான பன்னாட்டு விசாரணை வேண்டும்" என்று தெளிவாகக் கோரியுள்ளார் (UN Human Rights Commissioner Report on promoting reconciliation and accountability in Sri Lanka). இந்த கோரிக்கையை இப்போது வரை தடுத்துவரும் ஒரே நாடு இந்தியா தான்.
அமெரிக்க தீர்மானத்தில் தலையிட்டு - இலங்கையின் உள் விவகாரங்களில் பன்னாட்டு தலையீடு கூடாது என்று இந்திய அரசு லாபி செய்து வருகிறது. திமுக ஆதரவுடன் நடக்கும் காங்கிரசு அரசின் இந்த அநீதியான போக்கினை கலைஞர் தடுக்க வேண்டும்.

"தமிழர்களுக்கு எதிரான போரின்போது நடந்த குற்றங்கள் குறித்து ஒரு சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு இந்தியா தடை போடக்கூடாது" என்கிற மிக நியாயமான கோரிக்கையை காங்கிரசு அரசு ஏற்க செய்ய வேண்டிய கடமை கலைஞருக்கு மட்டுமே இருக்கிறது.

2. கொழும்பு காமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தை (நவம்பர் 2013) இந்தியா புறக்கணிக்க வேண்டும்

காமன்வெல்த் என்பது இங்கிலாந்திடம் காலனியாக இருந்த நாடுகளின் கூட்டமைப்பாகும். மனித உரிமைகளை கொஞ்சமும் மதிக்காத இலங்கையில் நடைபெரும் காமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தை புறக்கணிப்பதாக கனடா அறிவித்துள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் இக்கூட்டத்தை புறக்கணிக்க வாய்ப்பு உள்ளது.

"கொழும்பு காமன்வெல்த் கூட்டத்தில் இந்தியாவும் பங்கேற்க கூடாது" என்கிற மிக நியாயமான கோரிக்கையை காங்கிரசு அரசு ஏற்க செய்ய வேண்டிய கடமையும் கலைஞருக்கு மட்டுமே இருக்கிறது.

கலைஞருக்கு துணிச்சலும் மனசாட்சியும் உண்டா?

கலைஞருக்கு துணிச்சலும் மனசாட்சியும் இருந்தால் இப்படிப்பட்ட உருப்படியான கடமைகளை அவர் செய்ய வேண்டும். "வள்ளுவர் கோட்டம் முற்றுகை, தில்லியில் கூட்டம், தமிழ்நாட்டில் முழு அடைப்பு" என்கிற போராட்டங்கள் எல்லாம் எதிர்கட்சிகள் செய்ய வேண்டியவை. இந்தியாவை ஆளுங்கட்சிகளில் ஒன்றான திமுக இதைச் செய்ய தேவையே இல்லை.
கலைஞர் அவர்களே, தில்லியில் நடக்கும் ஆட்சி உங்களுடையதும்தான்.

உங்களடைய இந்திய அரசு பன்னாட்டு விசாரணையிலிருந்து இலங்கையை காப்பாற்றுவதைத் தடுத்து நிறுத்துங்கள்.

உங்களடைய இந்திய அரசு நவம்பர் மாதம் கொழும்பில் நடபெறவுள்ள காமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் தடுத்து நிறுத்துங்கள்.

மக்கள் உங்களிடம் உறுதியான செயலைத்தான் வேண்டுகிறார்கள். நாடகங்களை அல்ல.

தொடர்புடைய சுட்டி:

ஐநாவில் இலங்கை போர்க்குற்றம்: இந்திய அநீதிக்கு ஒரு முடிவே இல்லையா? உதிரும் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட இந்தியாவில் தமிழர்களுக்கு இல்லை!