Pages

புதன், மார்ச் 13, 2013

ஜெனீவா ஐநா கூட்டத்தில் பசுமைத் தாயகம் பேச்சு: இலங்கை மீது சர்வதேச விசாரணை ஆணையம் - நேரடியாக வலியுறுத்தல்.


மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு ஐக்கிய நாடுகள் அவையால் சிறப்பு ஆலோசனை அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ள அமைப்பாகும் (non-governmental organization in special consultative status with UN ECOSOC). இத்தகைய அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனை அமைப்புகள் மட்டுமே ஐநா அவையின் கூட்டத்தில் பங்கேற்கவும் பேசவும் முடியும்.

இந்தியாவில் இருந்து ஈழத்தமிழர்களுக்காக ஐநா மனித உரிமை பேரவை (UNHRC) கூட்டத்தில் பேசும் ஒரே அமைப்பாக 2009 முதல் பசுமைத் தாயகம் செயலாற்றி வருகிறது.

ஐக்கிய நாடுகள் அவையின் அழைப்பின் பேரில் தற்போது ஜெனீவா நகரில் நடைபேற்றுவரும் 22 ஆவது ஐநா மனித உரிமை பேரவை கூட்டத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் ஏழு பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றுள்ளனர். அவர்கள் இலங்கையின் மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என மனித உரிமை பேரவையின் உறுப்பினர்களை சந்தித்து வலியுறுத்து வருகின்றனர்.

ஐநா மனித உரிமை பேரவையில் நேரடியாக உரைநிகழ்த்தி அவர்கள் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

பசுமைத் தாயகம் -  தாஷா மனோரஞ்சன்

மார்ச் 12 செவ்வாய் அன்று நடந்த ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் தாஷா மனோரஞ்சன் கலந்து கொண்டு பேசினார்.

வழக்கறிஞர் தாஷா மனோரஞ்சன் பேச்சினை வீடியோ மற்றும் எழுத்து வடிவிலும் அது தொடர்பான பத்திரிகை செய்தியையும் கீழே காணலாம்:
Pasumai Thaayagam at UNHRC 
Tasha Manoranjan, 12 March 2013
Watch the video from 01.32.00 minute to 01.34.40 minute here:
Tasha Manoranjan Speech at UNHRC 22


பேச்சின் எழுத்து வடிவம்: Pasumai Thaayagam at UNHRC - Tasha Manoranjan, 12 March 2013

பத்திரிகை செய்தி: “Sri Lanka 'served as precursor' to Syrian tragedy”

தாஷா மனோரஞ்சன் பேச்சு:

சிரியாவில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பசுமைத்தாயகத்தின் பிரதிநிதி வழக்கறிஞர் தாஷா மனோரஞ்சன்:

‘‘சிரியாவில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்களில் இதுவரை சுமார் 70,000 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அது ஒரு பேரழிவு நிலையை எட்டியிருக்கிறது.

சிரியாவில் என்ன நடக்கும் என்பதற்கு முன்னோட்டம் தான் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை ஆகும். இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக அந்நாடு தண்டிக்கப்படாததன் விளைவாக , இலங்கை அரசு சிங்களமயமாக்கலை நாடு முழுவதும் சட்டவிரோதமாக பரப்பி வருகிறது. நாடு முழுவதும் சட்டத்தின் ஆட்சி சீரழிந்து வருகிறது.

ஐ.நா. பொதுச்செயலாளரின் வல்லுனர் குழு தாக்கல் செய்த அறிக்கையில், போரின் கடைசி 9 மாதங்களில் , இலங்கை படையினர் தொடர்ந்து நடத்திய குண்டுவீச்சு தாக்குதல் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்று கூறப்பட்டிருக்கிறது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக ஐ.நா. பொதுச்செயலாளரின் உள் ஆய்வுக் குழுவின் அறிக்கையில் 2009 ஆம் ஆண்டில் மட்டும் 70.000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற விதி மீறல்களுக்கு தண்டனை வழங்கப்படாமல், ஈழத்தமிழர்களின்  எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையிலான அரசியல் அதிகாரம் வழங்கப்படாத வரையில் அங்கு நிலையான அமைதியும், ஸ்திரத்தன்மையும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்கள் இந்த அவையில் தாக்கல் செய்த அறிக்கையிலும் இதை ஒத்த கருத்துக்களே இடம்பெற்றுள்ளன.

-எனவே, இலங்கை அரசு தண்டனையிலிருந்து தப்பி வருவதற்கு முடிவு கட்டவும், இலங்கையில் உண்மையான அமைதியை ஏற்படுத்த அடித்தளம் அமைக்கவும்  அங்கு நடந்த போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் பசுமைத் தாயகம் சார்பில் தமயந்தி ராஜேந்திரா, வழக்கறிஞர் கார்த்திகா தவராஜா, வழக்கறிஞர் தாஷா மனோரஞ்சன் ஆகிய மூன்றுபேர் தமது பேச்சின் போது "இலங்கையின் மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தி பேசினார். மற்ற இருவரது பேச்சு அடுத்த பதிவில்

1 கருத்து:

R.Puratchimani சொன்னது…

நல்ல முயற்சி....பாராட்டுக்கள்