Pages

புதன், மார்ச் 06, 2013

டெசோ: கலைஞருக்கு துணிச்சலும் மனசாட்சியும் உண்டா? பாவத்தைக் கழுவ ஒரு கடைசி வாய்ப்பு!

கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக நாளுக்கொரு அறிக்கை விடுகிறார். மூன்று நாட்களுக்கு ஒரு முறை போராட்டமோ நிகழ்ச்சியோ நடத்துகிறார். வள்ளுவர் கோட்டம் முற்றுகை, தில்லியில் டெசோ கூட்டம், தமிழ்நாட்டில் முழு அடைப்பு என்று போகிறது அவரது அரசியல். ஆனாலும், அவர் "வேறு ஏதோ ஒரு காரணத்துக்காக" இதைச் செய்வதாக சராசரி தமிழன் நினைக்கிறான்.

கலைஞரின் புதிய நடவடிக்கைகளால் அவர் மீது வீழ்ந்துள்ள வரலாற்று பழி நீங்காது. அவர் கொஞ்சமாவது பாவத்தைக் கழுவ வேண்டும் என்றால் - அவர் செய்ய வேண்டிய உருப்படியான காரியங்கள் வேறுசில இருக்கின்றன. அவற்றை கடைசியில் பார்ப்போம்.

கலைஞரின் கருப்பு வரலாறு

கலைஞர் எத்தனை ஆண்டுகாலம் அரசியலில் கோலோச்சினார் என்பது முக்கியமில்லை. அவரது பெயர் வரலாற்றில் எப்படி இடம்பிடிக்கப் போகிறது என்பதுதான் முக்கியமானதாகும். அவர் தமிழ் இனத்துக்கு செய்த நன்மைகளைப் பட்டியலிட முடிகிறதோ இல்லையோ, அவரால் நேர்ந்த கேடுகளைப் பட்டியலிட முடியும். அதில் முதல் இடம் பிடிக்கக் கூடியது ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகம்தான்.
ஈழத்தமிழினத்தின் சோகத்துக்கு காரணமானவர்களில் ஒவ்வொரு தமிழனும் குற்றவாளியாக இருக்கிறான். ஒவ்வொரு அரசியல் கட்சியும் இருக்கிறது. இந்தக் குற்றத்தை முன்னின்று நடத்தியவராக கலைஞர் இருக்கிறார். ஈழப்போர் உச்சக் கட்டத்தை எட்டிய காலத்தில் தமிழ் நாட்டின் முதலமைச்சராக அவர் இருந்தார். அதுமட்டுமல்ல, தமிழ்நாடு - புதுவையின் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவருக்கு பக்க பலமாக நின்றனர்.

அப்படிப்பட்ட வலுவான நிலையில் கலைஞரைத் தவிர வேறு யார் முதலமைச்சாராக இருந்திருந்தாலும் - ஒரு லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை வெறுமனே வேடிக்கைப் பார்த்திருப்பார்களா? என்கிற கேள்வி வரலாறு நெடுகிலும் கேட்கப்படும்.

கலைஞர் செய்த பெரும் குற்றம் 1: நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா

ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் ஏற்பட்ட பேரிழப்பை தடுக்கும் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 14 அன்று வந்தது. "ஈழத்தமிழர்கள் அழிப்பை இந்தியா இரண்டு வாரங்களில் தடுக்காவிட்டால், தமிழ்நாட்டின் எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வது" என்று அப்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த எல்லா கட்சிகளும் கலைஞர் தலைமையில் ஒருமனதாக முடிவெடுத்தனர். (End Lanka war in two weeks, else TN MPs will quit: Karunanidhi)
அந்த ஒரு முடிவுமட்டும் நிறைவேற்றப் பட்டிருந்தால் - இலங்கையில் மாபெரும் மனிதப் பேரழிவு நிகழ்ந்திருக்காது. ஏனெனில், இலங்கையில் போரை முன்னின்று நடத்திய நாடு இந்தியா தான். குறிப்பாக காங்கிரசு கட்சிதான் இந்தப் போரை நடத்தியது. தமிழ் நாட்டின் 40 உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருந்தால் அதன் பிறகு காங்கிரசு அரசு பிழைத்திருக்காது, இலங்கையில் போரும் தொடர்ந்திருக்காது.

ஆனால். கெடு முடிவதற்கு மூன்று நாட்கள் இருக்கும் போது அக்டோபர் 26 அன்று காலை பிரணாப் முகர்ஜி இலங்கையின் பசில் ராஜபட்சேவுடன் பேச்சு நடத்தினார். பின்னர் சென்னை வந்து கலைஞரிடம் மூன்று மணி நேரம் பேசினார். திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ராஜினாமா செய்ய மாட்டார்கள் - என்று பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.  (Karunanidhi will not insist on MPs' resignation: Mukherjee) 

இலங்கையில் தமிழர்களைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு அளித்த உறுதி மொழியின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா முடிவை கைவிட்டார் கலைஞர் என்று கூறப்பட்டது. ஆனால், அதற்கு பின்னர்தான் ஒரு லட்சம் தமிழ் மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

(DMK resignation threat blows over: Karunanidhi has assured he would not precipitate a crisis for UPA government over Sri Lankan Tamils issue after the Centre apprised him of steps being taken by the island nation's governments to ensure safety of Tamil civilians.)

ஈழத்தமிழினம் பேரழிவில் இருந்து காப்பாற்றப்படும் கடைசி வாய்ப்பு 'எதற்காகவோ' கைவிடப்பட்டது. இந்த வரலாற்று பெரும்பழி ஒருநாளும் மறையாது.
கலைஞர் அவரது 'நெஞ்சுக்கு நீதியின்' அடுத்த பாகத்தை எழுதும் வாய்ப்பிருந்தால் - 2008 அக்டோபர் 26 அன்று பிரணாப் முகர்ஜியிடம் மூன்று மணி நேரம் என்னவெல்லாம் பேசினார் - என்பதை தமிழக மக்களுக்கு சொல்ல வேண்டும். ஒரு லட்சம் மக்களின் படுகொலைக்கு காரணமான அந்த மூன்று மணி நேர பேச்சின் விவரம் வெளி உலகிற்கு சொல்லப்பட்டாக வேண்டும். 

(பிற்காலத்தில், அதே பிரணாப் முகர்ஜி இந்திய நாட்டின் ஜனாதிபதியாக வேண்டும் என முந்நின்று பாடுபட்டவரும் கலைஞர்தான்)

கலைஞர் செய்த பெரும் குற்றம் 2: சாகும்வரை உண்ணாவிரதம்

"உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் அறிவித்த போதிலும், இலங்கை அரசு அதனை ஏற்காததைக் கண்டித்து, இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி" 2009 ஏப்ரல் 27 அன்று சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் கலைஞர். "ராஜபக்சேவின் கடைசி பலியாக தான் இருக்கட்டும்" என்றும், "ஈழத்தமிழர்களுக்காக தன் உயிரைத் தியாகம் செய்ய தயாராக இருப்பதாகவும்" தெரிவித்தார்.
ஆனால், உண்ணாவிரதம் தொடங்கிய மூன்று மணி நேரத்தில் அதனைக் கைவிட்டார் கலைஞர். கூடவே, இந்திய அரசின் முயற்சியால் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்றும் அறிவித்தார். (Karunanidhi calls off indefinite hunger strike)

"இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக இலங்கை அரசின் பாதுகாப்பு கவுன்சில் கூடி போருக்கான நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது என்று முடிவு செய்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது" என்று கூறினார் கலைஞர்.

கலைஞரின் போர்நிறுத்த அறிவிப்புக்கு பின்னர்தான் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் மேலும் அதிகரித்தது. அதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது "மழை விட்டும் தூவானம் விடவில்லை' என்றார் கலைஞர். 

"மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பார்களே, அதைப் போல எல்லா போர் முனைகளிலும் கொஞ்சம் கொஞ்சம் இதுபோல நடக்கக் கூடும். அதுபோல நடந்திருக்கும் என்று கருதுகிறேன்" என்று மனசாட்சியை அடகுவைத்து பேசினார் கலைஞர்.

இன்று அவர் கண்ணீர் வடிக்கும் "பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்டது அந்த தூவானத்தில்தான்". (This is proof, beyond reasonable doubt, of the execution of a child – not a battlefield death) "நிராயுதபாணிகளாக நடேசனும் புலித்தேவனும் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த பின்பு சித்தரவதை செய்து கொல்லப்பட்டதும் அந்த தூவானத்தில்தான்". (The final atrocity: Uncovering Sri Lanka’s ‘white flag incident’)
- இப்படியாக 2009 ஆம் ஆண்டு மே மாதம் ஈழமண்ணில் பேரவலம் உச்சக்கட்டத்தை எட்டுவதற்கு முன்னால் 2008 அக்டோபர் 26 அன்று ஒருமுறையும், 2009 ஏப்ரல் 27 அன்று மறுமுறையும் கலைஞர் நடத்திய நாடகங்கள் வரலாற்றின் கருப்பு பக்கங்களில் என்றென்றும் இடம் பிடித்திருக்கும்.

உண்மையில், தமிழகத்தில் எழுந்த மக்கள் பேரெழுச்சியை தணிப்பதற்காக - அதாவது ராஜபக்சேவின் கொடூரங்களுக்கு ஆதரவாக - கலைஞரின் நாடகம் நடத்தப்பட்டதா என்கிற கேள்வியை எதிர்காலத் தலைமுறை கேட்கும்.

பாவத்தைக் கழுவ என்ன வழி?

தமிழ்நாட்டுத் தமிழர்கள் செய்த பிழையால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர் (தெரியாமல் செய்த பிழை 2004 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரசு கட்சியின் தலைமையில் ஆட்சி அமைய 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்தது டெல்லிக்கு அனுப்பியது. தெரிந்து செய்த பிழை - கலைஞரின் தலைமையில் 2009 ஆண்டு படுகொலைகளை வேடிக்கைப் பார்த்தது). இந்தப் பாவச்செயலுக்கு ஒரு போதும் மன்னிப்பு இல்லை. குறிப்பாக, கலைஞரை வரலாறு மன்னிக்காது.

ஆனாலும், பாவங்களை ஓரளவுக்கு கழுவ அவருக்கு இப்போதும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு, இலங்கை குறித்த இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு சிறிய மாற்றத்தைக் கொண்டுவந்தால் போதும். இப்போதும் இந்திய அரசு கலைஞரின் ஆதரவில்தான் நடக்கிறது என்பதால் - அந்த மாற்றம் சாத்தியமாகக் கூடியதுதான்.

முதலாவதாக, பன்னாட்டு விசாரணையிலிருந்து இலங்கையை இந்திய அரசு காப்பாற்றக் கூடாது. அடுத்ததாக, நவம்பர் மாதம் கொழும்பில் நடபெறவுள்ள காமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும். இதற்கு கலைஞர்தான் பொறுப்பு.

1. பன்னாட்டு விசாரணையை இந்தியா தடுக்கக் கூடாது.

'இலங்கை ஒரு இறையாண்மை மிக்க நாடு, அது ஒரு ஜனநாயக நாடு' என்கிற வாதங்கள் பன்னாட்டு அரங்கில் காலாவதியாகிவிட்டன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை இலங்கையை ஆதரித்த பல நாடுகள் அந்த நிலைபாட்டை இப்போது மாற்றிக் கொண்டுவிட்டன.

ஐநா மனித உரிமைகள் ஆணையரே, ஐநா மனித உரிமைக் குழுவிற்கு அளித்த தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் "இலங்கையில் நடந்த குற்றங்கள் குறித்து ஒரு சுதந்திரமான பன்னாட்டு விசாரணை வேண்டும்" என்று தெளிவாகக் கோரியுள்ளார் (UN Human Rights Commissioner Report on promoting reconciliation and accountability in Sri Lanka). இந்த கோரிக்கையை இப்போது வரை தடுத்துவரும் ஒரே நாடு இந்தியா தான்.
அமெரிக்க தீர்மானத்தில் தலையிட்டு - இலங்கையின் உள் விவகாரங்களில் பன்னாட்டு தலையீடு கூடாது என்று இந்திய அரசு லாபி செய்து வருகிறது. திமுக ஆதரவுடன் நடக்கும் காங்கிரசு அரசின் இந்த அநீதியான போக்கினை கலைஞர் தடுக்க வேண்டும்.

"தமிழர்களுக்கு எதிரான போரின்போது நடந்த குற்றங்கள் குறித்து ஒரு சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு இந்தியா தடை போடக்கூடாது" என்கிற மிக நியாயமான கோரிக்கையை காங்கிரசு அரசு ஏற்க செய்ய வேண்டிய கடமை கலைஞருக்கு மட்டுமே இருக்கிறது.

2. கொழும்பு காமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தை (நவம்பர் 2013) இந்தியா புறக்கணிக்க வேண்டும்

காமன்வெல்த் என்பது இங்கிலாந்திடம் காலனியாக இருந்த நாடுகளின் கூட்டமைப்பாகும். மனித உரிமைகளை கொஞ்சமும் மதிக்காத இலங்கையில் நடைபெரும் காமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தை புறக்கணிப்பதாக கனடா அறிவித்துள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் இக்கூட்டத்தை புறக்கணிக்க வாய்ப்பு உள்ளது.

"கொழும்பு காமன்வெல்த் கூட்டத்தில் இந்தியாவும் பங்கேற்க கூடாது" என்கிற மிக நியாயமான கோரிக்கையை காங்கிரசு அரசு ஏற்க செய்ய வேண்டிய கடமையும் கலைஞருக்கு மட்டுமே இருக்கிறது.

கலைஞருக்கு துணிச்சலும் மனசாட்சியும் உண்டா?

கலைஞருக்கு துணிச்சலும் மனசாட்சியும் இருந்தால் இப்படிப்பட்ட உருப்படியான கடமைகளை அவர் செய்ய வேண்டும். "வள்ளுவர் கோட்டம் முற்றுகை, தில்லியில் கூட்டம், தமிழ்நாட்டில் முழு அடைப்பு" என்கிற போராட்டங்கள் எல்லாம் எதிர்கட்சிகள் செய்ய வேண்டியவை. இந்தியாவை ஆளுங்கட்சிகளில் ஒன்றான திமுக இதைச் செய்ய தேவையே இல்லை.
கலைஞர் அவர்களே, தில்லியில் நடக்கும் ஆட்சி உங்களுடையதும்தான்.

உங்களடைய இந்திய அரசு பன்னாட்டு விசாரணையிலிருந்து இலங்கையை காப்பாற்றுவதைத் தடுத்து நிறுத்துங்கள்.

உங்களடைய இந்திய அரசு நவம்பர் மாதம் கொழும்பில் நடபெறவுள்ள காமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் தடுத்து நிறுத்துங்கள்.

மக்கள் உங்களிடம் உறுதியான செயலைத்தான் வேண்டுகிறார்கள். நாடகங்களை அல்ல.

தொடர்புடைய சுட்டி:

ஐநாவில் இலங்கை போர்க்குற்றம்: இந்திய அநீதிக்கு ஒரு முடிவே இல்லையா? உதிரும் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட இந்தியாவில் தமிழர்களுக்கு இல்லை!

6 கருத்துகள்:

T G Ramamurthy சொன்னது…

இந்த வரலாற்று பெரும்பழி ஒருநாளும் மறையாது.

R. Senthil சொன்னது…

As you rightly pointed out, DMK is the ruling party in the center. It has ministers who are part of the Union Cabinet. It is like Manmohan Singh agitating against petrol price hike! Let us see how long Tamil people tolerate his tamasa!

Unknown சொன்னது…

சுதந்திரமான பன்னாட்டு விசாரணை மற்றும் பொது வாக்கெடுப்பு பற்றி வாயைத் திறக்காமல் திரும்பத் திரும்ப 'போர்க்குற்ற விசாரணை', மறுவாழ்வு அளித்தல் என பேசுவதெல்லாம் இந்தியா, அமெரிக்காவின் பித்தலாட்டம். அதற்குத் துணை போக கூடாது.

http://rsgurunathan.blogspot.in/2013/03/blog-post_6.html

சாய்ரோஸ் சொன்னது…

நல்ல கட்டுரை... ஆனால் தமிழக அரசியல் ஒருநாளும் மாறப்போவதில்லை... தமிழகத்தில் எங்களுக்கு ஒருபோதும் சொரணை வரப்போவதுமில்லை... இந்தியாவிலிருந்து, அதிலும் தமிழகத்திலிருந்து ஈழத்திற்காக கேட்கும் குரல்களெல்லாம் அடுத்த நாடாளுமன்றத்தேர்தல் வரை மட்டுமே... அப்புறம் அதுவாய் அடங்கி மறைந்துவிடும். இனி மெல்லச்சாகும் எஞ்சிய தமிழினம்!!!

Saha, Chennai சொன்னது…

இன்றைய சூழ்நிலையில், உறுதியான மாற்றம் வேண்டுமெனில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஓரணியில் திரண்டு குரல் கொடுக்கவேண்டும். நடக்குமா?

Unknown சொன்னது…

இவர் மகளுக்காக இலங்கைத் தமிழர்களை பலி கொடுத்து விட்டு இப்போது டெசோ நாடகத்தை அரங்கேற்றி வருகிறார் .மீண்டும் 40 mp சீட் கனவில் உள்ளார் .....................மக்கள்தான் இந்த தமிழின துரோகிக்கு பதில் சொல்லவேண்டும் .............
mbjahangeer@gmail.com