அமைச்சரவையில் சாதி
ஜெயலலிதாவின் தோழி சசிகலா கட்டுப்பாட்டில் இருக்கும் அதிமுக ஆட்சியில் முக்குலத்தோர் சமுதாயத்துக்கே அதிகாரமிக்க பதவிகள் அளிக்கப்படுகின்றன. 32 அமைச்சர்கள் உள்ள தமிழக அமைச்சரவையில் 9 பேர் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். அதில் முதலமைச்சர் பதவியும் அடங்கும்.
அதாவது, முதலமைச்சருடன் சேர்த்து 28 % அமைச்சரவை பதவிகள் முக்குலத்தோர் சமூகத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. முக்குலத்தோரை விட அதிக எண்ணிக்கையில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கு வெறும் 9 % இடம் (3 பேர்) அளிக்கப்பட்டுள்ளதுடன் ஒப்பிட்டு பார்த்தால் - அதிமுகவின் சாதி அரசியல் தெரியும்.
அரசுப்பணி தேர்வில் சாதி
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது தமிழகத்தின் அரசு நிர்வாகத்திற்கு தேவையான எழுத்தர்கள் முதல் மாவட்ட துணை ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் வரையிலான அனைத்து பணிகளுக்கும் ஆட்களை தேர்வு செய்யும் முக்கிய அமைப்பாகும்.
அரசு வேலை வாய்ப்புகளுக்கான தேர்வுகளின் மதிப்பெண் மட்டுமல்லாமல், நேர்முகத்தேர்வு என்கிற வழியில் அளிக்கப்படும் மதிப்பெண்களும் சேர்க்கப்பட்டு - கூட்டு மதிப்பீட்டின் படி அரசுப்பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அரசாங்க வேலைக்கான பணி நியமனங்களை மேற்கொள்ளும் இந்த இடத்தில் இருப்பவர்கள் நினைத்தால் - 'என்ன நடக்கும்' என்பது எல்லோரும் அறிந்ததுதான். இப்படிப்பட்ட முக்கியமான இடத்துக்கு - தேர்தல் தேதி அறிப்புக்கு முன்பாக, அவசரம் அவசரமாக 2016 ஜனவரி மாதம் ஒரு விடுமுறை நாளில் 11 உறுப்பினர்களை நியமித்தனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய 11 உறுப்பினர்களில்:
முக்குலத்தோர் 7 பேர்
நாயுடு 1
கொங்கு வெள்ளாளர் 1
யாதவர் 1
தாழ்த்தப்பட்டவர் 1
அதாவது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களில் 64 % முக்குலத்தோர் ஆகும். வன்னியர், முத்தரையர், வெள்ளாளர், முஸ்லிம்கள் போன்றவர்களுக்கு ஒரு இடம் கூட இல்லை.
தகுதியற்ற நியமனம்
இந்த நியமனத்தில் 'சாதிசார்பு நியமனத்தை விட பெரிய கொடுமை', தகுதியற்ற நபர்களுக்கு இந்த பதவிகளை வழங்கியதுதான்.
'அரசு ஊழியர்களை தேர்ந்தெடுத்து நியமிப்பதற்கான அரசியல் சட்ட அதிகாரம் கொண்ட ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்படும் தார்மீக தகுதி அவர்களுக்கு இல்லை' என்பதை சுட்டிக்காட்டி மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் 1.2.2016 அன்று அறிக்கை வெளியிட்டார்கள் .
பாமகவின் சட்டப்பிரிவான, வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை சார்பில் வழக்கறிஞர் பாலு பொதுநல வழக்குத் தொடுத்தார். பின்னர், இதே பிரச்சினைக்காக திமுகவும், புதிய தமிழகம் கட்சியும் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுக்களும் பாமக பொதுநல வழக்குடன் இணைத்து விசாரிக்கப்பட்டன.
இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு 'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு 11 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டது செல்லாது' என்று கூறி அவர்களின் நியமனத்தை ரத்து செய்திருக்கிறது.
‘‘ தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய உறுப்பினர்கள் எவரும் இந்திய அரசியலமைப்புச் சட்ட விதிகளை பின்பற்றி நியமிக்கப்படவில்லை. இதுதொடர்பாக முறையாக கலந்தாய்வுகள் செய்யப்படவில்லை. உறுப்பினர்களுக்கு முறையான தகுதிகள் இல்லை’’ என்று சென்னை உயர்நீதிமன்றம் அதன் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது.
சாதி ஆதிக்கத்துக்கு தற்காலிக தடை!
பாட்டாளி மக்கள் கட்சியின் முன்முயற்சியின் காரணமாக, சென்னை உயர்நீதி மன்றத்தீர்ப்பின் படி, அரசுப் பணியாளர் தேர்வில் சாதி ஆதிக்கம் நிகழாவண்ணம் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரே சாதிக்கு 64 % உறுப்பினர் பதவிகள் அளிக்கப்பட்ட சமூக அநீதிக்கு அடி கிடைத்துள்ளது.
ஒரு சாதி சார்பாக தேர்வு செய்யப்பட்டவர்கள் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் முக்கிய பதவிகளுக்கான நபர்களை தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தால் - அது மிகப்பெரிய சமூக அநீதிக்கு வழிசெய்திருக்கும். அந்த ஆபத்து தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது.
இனியாவது, அதிமுக அரசு தனது சாதி அரசியல் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். அனைத்து சமூகங்களுக்கும் அனைத்து பதவிகளிலும் உரிய விகிதாச்சார பங்கினை அளிக்க முன்வர வேண்டும். கூடவே, ஊழலுக்காக அல்லாமல், தகுதி அடிப்படையில் அதிகாரப் பதவிகளுக்கான நியமனங்களை அளிக்க வேண்டும்.
குறிப்பு: முக்குலத்தோர் சமுதாயம் ஒரு பின்தள்ளப்பட்ட சமுதாயம் ஆகும். அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை நாம் ஆதரிக்கிறோம். மக்கள் தொகை விழுக்காட்டுக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில், அனைத்து சமூகங்களுக்கும் உரிய அதிகாரம் தேவை என்பதே நமது நிலைப்பாடு. அதே நேரத்தில், தமது உரிமைக்கு அதிகமாக எந்த ஒரு சமூகமும் அதிகாரத்தில் கோலோச்சுவது சாதி மேலாதிக்கத்துக்கே வழி செய்யும். அது சமூகநீதிக்கு எதிரானதாகும். (மேலும், முக்குலத்தோரிலும் கூட, கள்ளர், மறவர் போன்று அகமுடையோருக்கும் உரிய இடம் அளிக்கப்பட வேண்டும்).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக