Pages

செவ்வாய், டிசம்பர் 27, 2016

கி. வீரமணியின் சசிகலா புராணம்: நாகபதனிக்காக களமிறங்கும் நாகப்பதனி!

நாகபதனி குழுவை சேர்ந்த அதிமுகவுக்காக - நாகப்பதனி குழுவை சேர்ந்த கி. வீரமணி வாள் வீச்சில் இறங்கியுள்ளார். அதிமுகவின் தலைமைப் பதவிக்கு சசிகலாவை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அடம்பிடித்து அவர் அறிக்கையும் வெளியிட்டுள்ளார்!

'அதிமுகவின் தலைமைக்கு சசிகலாவைத் தேர்வு' செய்ய வேண்டும். இதுவரை கேடயமாய் பயன் பட்டவர்; இனி வாளும் - கேடயமாய் நின்று அந்த இயக்கத்திற்குப் பயன்படுவார் என்பது நம் இனமானக் கண்ணோட்டம்!" - என்று முழங்கியுள்ளார் திராவிடர் பூசாரி கி. வீரமணி!

இந்த உலகமகா தத்துவத்துக்கு தந்தை பெரியாரையும் துணைக்கழைத்து ‘‘இந்நாட்டில் என்றுமே அரசியல் போராட்டங்கள் நடைபெற்றதே இல்லை; அரசியல் பெயரில் - போர் வைக்குள் நடைபெற்றவை அத்துணையும் ஆரிய - திராவிட இனப் போராட்டமே’’ என்று நீட்டி முழக்கியுள்ளார்.

கூடவே, 'திராவிடர் இயக்கங்களின் தாய்க்கழகம் என்ற உரிமையோடும், உறவோடும் கூறுகிறோம்' என்றும் கூறியுள்ளார் கி. வீரமணி. அவரின் இந்த உரிமைப்பாசத்தில் உண்மை இருக்கிறதா என்று பார்ப்போம்! 

வீரமணி நாகப்பதனி குரூப்: அதிமுக நாகபதனி குரூப்

வடிவேலுவின் 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' படத்தில் 'நாகபதனி' மற்றும் 'நாகப்பதனி' என இரண்டு சாதிகளுக்குள் சண்டைப் போட்டி நடக்கும். இரண்டும் ஒருசாதி தானே என்று கேட்கும் போது - நடுவில் 'ப்' இல்லாததை கவனியுங்கள் மன்னா என்பார்கள்.

அதேபோல - கி. வீரமணி என்பவர் 'திராவிடர்' இயக்கத்தை சேர்ந்தவர். அதிமுக கட்சி 'திராவிட' இயக்கத்தை சேர்ந்தது. இரண்டுக்கும் நடுவே 'ர்' விட்டுவிட்டதை கவனியுங்கள்! 
அதாவது, இவை இரண்டும் வெவ்வேறு குழுக்கள் ஆகும். எப்படி 'இந்தியன் பேங்க்' என்பதும் 'பேங்க் ஆஃப் இந்தியா' என்பதும் இரண்டு வெவ்வேறு வங்கிகளோ, அதுபோலத்தான் இவை இரண்டும் வெவ்வேறு கொள்கைக் கொண்ட அமைப்புகள்!

திராவிட"ர்" இயக்கம் என்பதில்தான் வீரமணியின் திராவிடர் கழகம் உள்ளது. திராவி"ட" இயக்கம் என்பதில் திமுகவும் அதிமுகவும் உள்ளன. இவை இரண்டுக்கும் இடையே கொள்கை அளவில் மலைக்கும் மடுவுக்குமான மாபெரும் வேறுபாடு உள்ளது.

பெரியாருக்கு எதிரான இயக்கம்

தந்தை பெரியார் தலைமையிலான 'திராவிடர்' இயக்கம், 'பிராமணர் - பிராமணர் அல்லாதார்' என்கிற வேறுபாட்டை முன்னிறுத்தியது. அது 'திராவிடர்' என்கிற மக்கள் பிரிவினருக்கான இயக்கம் ஆகும். அதாவது, பிராமணர் அல்லாத மக்களின் இயக்கம்தான் திராவிடர் இயக்கம்.

பெரியாரின் கொள்கைக்கு நேர் எதிராக, அண்ணா உருவாக்கியது 'திராவிட' இயக்கம் ஆகும். 'தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதியை 'திராவிட நாடு' என்று குறிப்பிட்டு - இந்த நிலப்பகுதியின் நலனை முன்னிறுத்தியது 'திராவிட' இயக்கம். இது பிராமணர் உள்ளிட்ட எல்லோருக்குமான இயக்கம் ஆகும்.

"திராவிடர் முன்னேற்றக் கழகம் என்று கூறும்போது அதில் திராவிடர்கள் மட்டுமே அங்கம் பெறலாம் என்று அரண் எழுப்புவதாக அமைந்துவிடுகிறது. இப்போதுள்ள உலகச் சூழ்நிலைக்கு, காலப்போக்குக்கு இது உகந்ததாகப் படவில்லை. நம்முடைய கட்சியின் லட்சியம் திராவிட நாட்டைச் செழுமையான பூமியாகப் பேணிக் காப்பதாகும்" - என்று 1949 ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தபோது அண்ணா தெரிவித்தார். (அண்ணா 'ர்' எழுத்தை கைவிட்டு விட்டதைக் கவனியுங்கள்)

அதாவது, திராவிடர் இனம் என்கிற பெரியாரின் கோட்பாட்டை குழிதோண்டி புதைத்துவிட்டு, திராவிட நாடு என்கிற இடத்துக்காகத்தான் அண்ணா கட்சி தொடங்கினார். அதிலிருந்து உருவானதுதான் அதிமுக. 'ஆரியர் - திராவிடர்' என்கிற வேறுபாட்டை 67 ஆண்டுகளுக்கு முன்பே திராவிட கட்சிகள் கைவிட்டுவிட்டதால்தான்,  சட்டமன்றத்திலேயே 'நான் பாப்பாத்திதான்' என்று கூறிக்கொண்ட ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்வராக வரமுடிந்தது.

யார் பெற்ற பிள்ளைக்கு யார் அப்பா?

யாரோ பெற்ற பிள்ளைக்கு தன்னுடைய இனிஷியலை சூட்டக் கூறுவது போல, கி. வீரமணிக்கு தொடர்பே இல்லாத அதிமுகவுக்கு வக்காலத்து வாங்கும் சாக்கில் -  'திராவிடர் இயக்கங்களின் தாய்க்கழகம் என்ற உரிமையோடும், உறவோடும் கூறுகிறோம்' என்கிறார் வீரமணி!

அதிமுக திராவிடர் இயக்கமே இல்லை. அது திராவிட இயக்கம். அப்புறம் எப்படி உரிமையும் உறவும் வரும்? இந்தியன் பேங்க் மேனஜர், பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு மேனஜர் ஆக முடியுமா?

யாராவது  கி. வீரமணியிடம் சொல்லுங்கள் - அது நாகப்பதனி குரூப் அல்ல. நாகபதனி குரூப் என்று! 

கருத்துகள் இல்லை: