Pages

புதன், டிசம்பர் 28, 2016

பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாடு: மருத்துவர் அன்புமணி பங்கேற்றது ஏன்?

பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள் பங்கேற்றதை வைத்து, முஸ்லிம்களுக்கு பாமக ஏன் வக்காலத்து வாங்க வேண்டும் என்று சிலர் கொந்தளித்தார்கள்.

ஆனால், முஸ்லிம்களுக்காக மட்டும் பாமக அந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. மாறாக, பாமகவின் கொள்கையே 'பொது சிவில் சட்ட எதிர்ப்புதான்' என்கிற அடிப்படையிலேயே அவர் பங்கேற்றார்.

பாஜகவுடன் கூட்டணியாக தேர்தலை சந்தித்த 2014 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையிலேயே - பொதுசிவில் சட்ட எதிர்ப்புதான் பாமகவின் நிலைப்பாடு என்பது தெளிவு படுத்தப்பட்டுள்ளது. (படத்தில் காண்க). இதனை 9.11.2016 அன்று மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் வெளியிட்ட அறிக்கையிலும் தெளிவு படுத்தியுள்ளார்கள்.

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் அறிக்கை 9.11.2016

இஸ்லாமிய சகோதரர்கள் கோரிக்கை விடுக்காவிட்டாலும் கூட பொது சிவில் சட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி மிகக் கடுமையாக எதிர்த்திருக்கிறது; எதிர்க்கிறது; எதிர்க்கும். பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகளையும், அதன் அரசியல் பயணத்தையும் அறிந்தவர்களுக்கு இந்த உண்மை நன்றாக புரியும். 

இந்தியாவில், பொருளாளர் பதவியை இஸ்லாமிய சமூகத்திற்காக ஒதுக்கீடு செய்த முதல் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். பா.ம.க.வின் இந்த கொள்கையைத் தான் இன்று மேலும் பல கட்சிகள் கடைப்பிடித்து வருகின்றன. இஸ்லாமியர்களின் நலனுக்காக சமூக சமுதாய நல்லிணக்க மாநாடுகளை நடத்தியது, இஸ்லாமியர்களுக்கு எதிராக அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போதெல்லாம் அதை எதிர்த்து போராடியது, கோவை கோட்டைமேடு பகுதியில் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் இஸ்லாமியப் பெண்களின் கண்ணியம் சீர்குலைக்கப்பட்ட போது அதற்கு எதிராக போராடி வெற்றி பெற்றது என இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி ஆற்றிய பணிகள் எண்ணிலடங்காதவை.

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்தே இஸ்லாமியர்களின் உரிமைகளை பறிக்கும் முயற்சிகளை எதிர்த்து போராடி வருகிறது. பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதெல்லாம் அதை எதிர்த்து பா.ம.க. போராடி வந்திருக்கிறது.

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் உட்பட பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி அமைத்த போதும் கூட, பொது சிவில் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே பா.ம.க எடுத்திருக்கிறது.

2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூட,‘‘பல மதங்களையும் மாறுபட்ட பழக்க வழக்கங்களையும் கொண்ட இந்திய நாட்டில் எல்லோருக்கும் ஒரே விதமான பொது சிவில் சட்டம் தேவையில்லை. ஒவ்வொரு பிரிவும் தத்தமது மத நம்பிக்கைகளை பின்பற்றும் வகையில் மாறுபட்ட சிவில் சட்டங்களை பின்பற்றுவது உலகின் பல நாடுகளில் நடைமுறையில் உள்ள ஒரு அடிப்படை உரிமைதான். இந்த உரிமை காக்கப்பட பாடுபடும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
2014 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை
பொது சிவில் சட்டத்திற்காக பாஜக அணிந்திருக்கும் புதிய முகமூடி ‘‘தலாக் நடைமுறையால் இஸ்லாமிய பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்’’ என்பதாகும். தலாக் நடைமுறையால் இஸ்லாமியப் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது. அதற்கான தீர்வு தலாக் நடைமுறையில் உள்ள குறைகளை களைவது தானே தவிர பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அல்ல. இது காலில் உள்ள புண்ணை குணப்படுத்துவதற்கு பதிலாக காலையே வெட்டி வீசுவதற்கு சமமாகும். 

இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் என்று கூறிவிட்டு, ஒற்றை இந்தியா, ஒற்றை மொழி, ஒற்றை சிவில் சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வருவது இந்தியாவின் அடையாளமான பன்மைத்தன்மையை சிதைத்து விடும். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பொது சிவில் சட்டம் என்பது சிறுபான்மை சமுதாயத்தினரின் உரிமைகளை பறிப்பதுடன், இந்தியாவின் வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருக்கும் என்பதால் அதற்கான முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்.

- இவ்வாறு 9.11.2016 ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் பாமகவின் பொது சிவில் சட்ட எதிர்ப்பு நிலைப்பாட்டை மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள்  தெளிவு படுத்தியுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை: