Pages

வியாழன், டிசம்பர் 01, 2016

தங்கத்துக்கு கட்டுப்பாடு: இந்திய தேசத்தின் மீதான மற்றுமொரு தாக்குதல்!

இந்திய பொருளாதார அமைப்பை சீர்குலைக்கும் வகையில், மோடி அரசு மிக ஆபத்தான விளையாட்டில் இறங்கியிருப்பது மீண்டும் தெளிவாகியுள்ளது. 

ஆண்கள் 12 பவுன், செல்விகள் 31 பவுன், திருமதிகள் 62 பவுன் மட்டுமே நகை வைத்திருக்க வேண்டும் என்று சுற்றிவளைத்து பேசுகிறது மத்திய அரசு. இதற்கு மேல் வைத்திருந்தால் - அந்த நகை நியாயமாகத்தான் வந்தது என்று நிரூபிக்க வேண்டுமாம்.

அதாவது, பணத்தாள் போன்றே, இனி தங்கத்துக்கும் கட்டுப்பாடு என்பதே இதன் பொருளாகும்.

1. ரூபாய் நோட்டு ஒழிப்பின் மூலம், மக்களிடம் இருந்த பணத்தை வங்கிகளுக்கு மாற்றி, கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கும் முதல் செயல்திட்டத்தை ஏற்கனவே செயலாக்கியுள்ளது அரசாங்கம்.

2. இனி மக்களின் சேமிப்புகளை தங்கமாக வைக்காமல், வங்கிகளிலும் பங்குச்சந்தையிலும் முதலீடு செய்ய வேண்டும் என்கிற நிர்பந்தத்தை தொடங்கியிருக்கிறது. தங்கத்தின் மீதான நெருக்கடியை இவ்வாறுதான் பார்க்க வேண்டும்.

சமூக பாதுகாப்புக்கு வேட்டு!

இந்திய சமூக மற்றும் பொருளாதார அமைப்பு, மேலை நாடுகளின் நிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

மேலை நாடுகளில் சமூகப் பாதுகாப்பு முழுமையாக அரசின் கடமையாக உள்ளது. எல்லா குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கும், எல்லா மக்களின் உடல்நலச் செலவுகளுக்கும் அரசாங்கமே பெருமளவு பொறுப்பேற்கிறது. வேலையில்லாதவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையும், முதியோர் பாதுகாப்பும் அரசின் பொறுப்பே ஆகும்.

ஆனால், இந்தியாவில் 90% மக்களுக்கு எந்த சமூகப் பாதுகாப்பும் இல்லை. மேலும் கல்வி, மருத்துவம், ஆதரவற்றோருக்கு பாதுகாப்பு என எல்லாமும் தனிமனித கடமையாக உள்ளது. இந்தப் பொறுப்புகள் அனைத்தையும் குடும்பங்களே ஏற்றுக்கொண்டுள்ளன. அதாவது, உலகின் பல நாடுகளில் அரசின் கடமையான சமூகப் பாதுகாப்பு இந்தியாவில் மட்டும் குடும்பங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

மேலை நாடுகளில், மாதம்தோரும் ஒருவர் வாங்கும் சம்பளத்தை அவர் மட்டுமே அந்த மாதமே செலவிட்டுவிடலாம். ஆனால், அது இந்தியாவில் சாத்தியம் இல்லை. இங்கே மற்றவர்களுக்காக செலவிட வேண்டும். எதிர்கால நெருக்கடியை சமாளிக்க சேமிக்கவும் வேண்டும்.

தங்கம் = பாதுகாப்பு

இவ்வாறு, எதிர்கால நெருக்கடிகளையும் திடீர் தேவைகளையும் சமாளிக்கும் நோக்கிலேயே, இங்கே பெண்களால் தங்கம் வாங்கப்படுகிறது. சமூகப் பாதுகாப்புக்கான மிக முக்கியமான கருவியாக தங்கம் உள்ளது. அவசரமான கல்விச் செலவுகள், மருத்துவ செலவுகள், புதிய தொழில் தொடங்குதல் என எல்லா தேவைகளுக்கும் தங்கத்தை அடகு வைக்கலாம், விற்கலாம் - என்கிற நோக்கில்தான் தங்கம் சேமிக்கப்படுகிறது.

குழந்தைகளின் எதிர்காலத் தேவையான கல்வி, திருமணம் போன்ற தேவைகளுக்கு தங்கமே பாதுகாப்பான சேமிப்பாக கருதப்படுகிறது.

பங்கு சந்தைகளிலோ, வங்கிகளிலோ பணத்தை சேமிப்பதால் இத்தகைய பாதுகாப்பினை பெற முடிவதில்லை. அதுமட்டுமல்லாமல், திடீர் தேவைகளுக்கு உடனடியாக கடன் பெறும் வகையிலோ, அமைப்புசாராத தொழிலில் உள்ளோர் கடன்பெறும் வகையிலோ - இந்திய வங்கி அமைப்பும் இல்லை.

இந்நிலையில், முழுமையான சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வக்கற்றுப்போன மத்திய அரசு - தங்கத்தில் சேமிப்பதை கட்டுப்படுத்தி, அந்தப் பணத்தை கார்ப்பரேட்டுகளுக்கு திருப்ப நினைப்பது அப்பட்டமான வழிப்பறி.

மோடி அரசின் தங்கக் கட்டுப்பாடு முயற்சியும், பணத்தாள் ஒழிப்பும் இந்திய தேசத்துக்கு எதிரான தாக்குதல்கள். இதனை மக்கள் அனுபவித்து உணரும் காலம் வரும்!

தொடர்புடைய சுட்டிகள்:

500 ரூபாய் இல்லை: குழப்பத்தின் உச்சத்தில் மோடி அரசு!

1. மோடி அரசின் பண ஒழிப்பு: தேச பக்தியா, தேசத்தின் மீதான தாக்குதலா?

2. மோடி அரசின் பண ஒழிப்பு: இந்திய பொருளாதாரத்தின் மீதான போர்!

3. கருப்பு பண ஒழிப்பு: ஏழைகளிடம் பிடுங்கி பணக்காரர்களுக்கு கொடுக்கும் திட்டமா?

4. மோடி அரசின் சதி: கருப்பு பண ஒழிப்பா? கார்ப்பரேட் கொள்ளையா?

5. புதிய ரூபாய் நோட்டில் ஹிந்தி திணிப்பு: மோடி அரசின் மொழிவெறி!

கருத்துகள் இல்லை: