Pages

புதன், டிசம்பர் 07, 2016

ஜெயலலிதாவை பின்பற்றுமா அதிமுக...?

அதிமுகவின் நிலைப்பாடுகள் அனைத்தும் மோசமானவை என்று கூறிவிட முடியாது. தமிழக நலனுக்கான கோட்பாடுகளையும் அக்கட்சி கொண்டிருந்தது. அத்தகைய நிலைப்பாடுகள் இனியும் தொடருமா என்பதுதான் இப்போதுள்ள முக்கியமான கேள்வி ஆகும்.

எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் சில விடயங்களில் ஒன்றுபட்டவர்கள். தமிழ்நாட்டுக்கு வெளியே பிறந்த இருவருமே தம்மை தமிழராகக் கருதினர். பேச்சில் மட்டுமல்லாமல் செயலிலும் அதனை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக இரண்டு விடயங்களில் இதனைக் காண முடியும்.

1. தம்முடைய தனிப்பட்ட எண்ணம் வேறாக இருந்தாலும் - தமிழக மக்களின் உணர்வு சார்ந்த பிரச்சினை என்று வரும்போது - தாம் முதலில் கொண்டிருந்த கருத்தினை கைவிட்டு, மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்தனர்.

2. இந்தியப் பேரரசின் மீது விசுவாசம் கொண்டிருந்தாலும் தமிழகத்தின் தனித்தன்மையை நிலைநாட்டவும் முயற்சித்தனர்.

அதாவது, 'தமது தனிப்பட்ட கருத்தை விடவும் தமிழக மக்களின் உணர்வு மேலானது' என்பதையும், 'இந்தியப் பேரரசை விட தமிழகத்தின் நலன் முதன்மையானது' என்பதையும் அவர்கள் நிலைநாட்டினர். இந்தப் போக்கின ஒருசில நிகழ்வுகளிலாவது நாம் காண முடியும்.

1. மக்கள் கருத்துக்கு மதிப்பு

எம்ஜிஆர்

மிழ்நாட்டின் சமூகநீதிக் கொள்கையில் எம்ஜிஆர் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்தார். சாதிவாரி இடஒதுக்கீட்டில் பொருளாதார உச்சவரம்பு என்கிற திட்டத்தை 1979 ஆம் ஆண்டில் கொண்டுவந்தார். பிற்படுத்தப்பட்டோருக்கான 31 % இடஒதுக்கீட்டுக்கு ஆண்டு வருமானம் 9000 ரூபாய் என்கிற உச்சவரம்பை நிர்ணயித்தார். இந்த அறிவிப்புக்கு எதிராக தமிழ்நாடே கொந்தளித்தது.

மக்களின் உணர்வுகளை அறிந்த எம்ஜிஆர், 7 மாதம் கழித்து தனது அரசு உத்தரவை திரும்பப்பெற்றார். அதனுடன் நிறுத்திக்கொள்ளாமல், முன்பு இருந்த பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டின் அளவை 31 % என்பதில் இருந்து 50 % ஆக அதிகமாக்கினார். அதாவது, சமூகநீதிக்கு எதிரான ஒரு உத்தரவை வெளியிட்ட அதே எம்ஜிஆர், தமது முடிவு தவறு என்று உணர்ந்ததும் சமூகநீதி கொள்கையை மேலும் வலுவாக்கும் உத்தரவை வெளியிட்டார்.

ஜெயலலிதா

ஜெயலலிதா விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர். தேசியத் தலைவர் பிரபாகரனை தூக்கிலிட வேண்டும் என்கிற அளவுக்கு தீவிரமானவர். ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் 'போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்' என்றார்.

ஆனால், 2009 இனஅழிப்புக்கு பின்னர் மக்களின் கொந்தளிப்பான மனநிலையை அறிந்து, இலங்கை மீது இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றம் குறித்து பன்னாட்டு விசாரணை தேவை என்றும், தமிழீழம் அமைய வேண்டும் என்றும் மிகத்தீவிரமான நிலைப்பாட்டை எடுத்தார். இதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பினை அவர் கடைசிவரை ஏற்கவில்லை என்றாலும், ஈழவிடுதலை, ராஜபக்சேவுக்கு தண்டனை, ராஜீவ் கொலைவழக்கில் கைதானோர் விடுதலை - ஆகிய நிலைப்பாடுகளில் மக்கள் உணர்வுக்கு ஏற்ப குரல் கொடுத்தார்.

2. இந்தியப் பேரரசுடனான உறவு

எம்ஜிஆரும் ஜெயலலிதாவும், இந்தியப் பேரரசின் மிரட்டலுக்கு அஞ்சாமல் தமிழகத்தின் நலனை ஒருசில தருணங்களிலாவது முன்வைத்தனர்.

எம்ஜிஆர்

ராஜீவ் காந்தி ஈழத்தமிழர் சிக்கலில் தலையிட்ட போது, 'தான் என்ன சொல்கிறேனோ அதையே ஈழத்தமிழர்களும் தமிழர்களும் ஏற்க வேண்டும்' என்கிற கடுமையான நிலைப்பாட்டை கொண்டிருந்தார்.

1986 ஆம் ஆண்டு, ஈழப்பிரச்சினைக்கு தீர்வாக இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனே சொல்லும் திட்டத்தை பிரபாகரன் ஏற்க வேண்டும் என்று ராஜீவ் காந்தி வற்புறுத்தினார். பெங்களூருவில் நடந்த சார்க் மாநாட்டின் போது, சென்னையில் கைது செய்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட பிரபாகரனை பெங்களூருக்கு அழைத்துச்சென்று பேச்சுவார்த்தை நடத்தினார் ராஜீவ் காந்தி. எம்ஜிஆரையும் பெங்களூருக்கு வரவழைத்து 'ஜெயவர்த்தனே திட்டத்தை ஏற்கவேண்டும் என பிரபாகரனிடம் சொல்லுங்கள்' என எம்ஜிஆருக்கும் கட்டளையிட்டார் ராஜீவ் காந்தி.

ராஜீவ் காந்தி சொன்ன படியே பிரபாகரனிடம் பேசுவதாகச் சொன்ன எம்ஜிஆர் - பிரபாகரனைக் கூப்பிட்டு, 'ஈழத்தமிழர்களுக்கு எது சரியென்று விடுதலிப்புலிகள் கருதுகின்றனரோ, அதையே செய்யுங்கள். ஜெயவர்த்தனே திட்டத்தை பிரபாகரன் ஏற்க வேண்டாம். ராஜீவ் காந்தியிடம் நான் பேசிக்கொள்கிறேன்' - என பிரபாகரனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார் எம்ஜிஆர்.

ஜெயலலிதா

'தான் இந்தியாவுக்கு விசுவாசம் மிக்கவர், மாநிலத்தின் நலன் அதற்கு அடுத்ததுதான்' என்று சொன்ன ஜெயலலிதாவும் - நடைமுறையில் பல விடயங்களில் தமிழகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவராகவே இருந்தார்.

ஈழத்தமிழர் நலன், இடஒதுக்கீடு, கச்சத்தீவு, காவிரி, ஜிஎஸ்டி வரி, நுழைவுத்தேர்வு, மொழி உரிமை, மீனவர் சிக்கல் எனப் பெரும்பாலான கருத்துகளில் ஜெயலலிதா தமிழகத்தின் நலனுக்கு மாற்றாக, இந்திய தேசியத்தின் நலனை முன்வைக்கவில்லை.

ஜெயலலிதாவை பின்பற்றுமா அதிமுக...?

ஜெயலலிதாவின் நிலைப்பாடுகள் இனியும் தொடருமா என்பதுதான் இப்போதுள்ள முக்கியமான கேள்வி ஆகும். பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதங்களில், தமிழ்நாட்டுக்கு ஆதரவான தமது நிலைப்பாடுகளை ஜெயலலிதா ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார்.

(காண்க: Tamil Nadu Chief Minister’s Memorandum to the Prime Minister of India)

இதே நிலைப்பாடுகளை ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் அரசும் பின்பற்றுமா என்பதுதான் இப்போதுள்ள முதன்மையான கேள்வி ஆகும்!

தமிழ்நாட்டிற்கு வெளியே பிறந்த அதிமுக முதலமைச்சர்களிடம் இருந்த உறுதிப்பாடு, தமிழ்நாட்டில் பிறந்த ஓ. பன்னீர்செல்வத்திடமும் இருக்குமா?
காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!
(குறிப்பு: எல்லாவற்றிலும் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டையே புதிய அரசு பின்பற்ற வேண்டும் என்பது தேவை இல்லை. குறிப்பாக, மதுரவாயில் மேம்பாலம், அண்ணா நூலகம், மோனோ ரயில், தலைமைச் செயலகக் கட்டிடம் போன்ற விவகாரங்களில் வீண் பிடிவாதத்தை தவிர்க்கலாம்).

படம்: ஜெயலலிதா இல்லாத அதிமுக குறித்து சமூக ஊடகங்களில் உலாவரும் படங்கள்.

கருத்துகள் இல்லை: