Pages

வெள்ளி, நவம்பர் 04, 2016

சாதனை: நவம்பர் 4-ல் செயல்பாட்டுக்கு வந்தது பாரீஸ் காலநிலை ஒப்பந்தம்! 

24 ஆண்டு பேச்சுவார்த்தைக்கு பின் சாதனை!
உலகின் சுற்றுச்சூழலைக் காக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பாரீஸ் காலநிலை ஒப்பந்தம் (The Paris Climate Agreement) ஐநா காலநிலை உடன்படிக்கை  நவம்பர் 4 முதல் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. 

இது ஒரு மாபெரும் சாதனை, ஏனெனில் இதற்காக 24 ஆண்டுகளாக உலகெங்கும் போராட்டம் நடக்கிறது.

2000 ஆவது ஆண்டு முதல் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் பசுமைத் தாயகம் அமைப்பு இதற்கான போராட்டங்களையும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் முன்னெடுத்து வருகிறது (படங்களைக் காண்க).  2009 ஆம் ஆண்டு கோபன்ஹெகன் ஐநா காலநிலை மாநாட்டில் (Conference of the Parties - COP 15) மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுடன் நான் கலந்துகொண்டேன். (அதற்கு முன்பு 2002 புதுதில்லி ஐநா காலநிலை மாநாட்டில் (COP 8)  நான் கலந்துகொண்டேன்).

(2015 பாரிஸ் மாநாட்டில் (COP 21) மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் பசுமைத் தாயகம் அமைப்பு பங்கேற்க, ஐநா அழைப்பு அனுப்பியது. ஆனால், சென்னை பெருவெள்ளம் காரணமாக பங்கேற்க இயலவில்லை).
புவி வெப்பம் அதிகரித்து வருவதையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் தடுப்பதற்காக 1992 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஐநா காலநிலை பணித்திட்ட பேரவை (United Nations Framework Convention on Climate Change - UNFCCC) மூலமாக உலகநாடுகள் 23 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. முடிவில் 2015 ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் கூடிய ஐநா காலநிலை மாநாட்டில் (COP21)  'பாரிஸ் காலநிலை உடன்படிக்கை' (Paris Climate Agreement) உலகின் 195 நாடுகளால் ஒருமனதாக ஏற்கப்பட்டது.

நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களை மிதமிஞ்சி பயன்படுத்தியதாலும், காடுகளை அழித்ததாலும் வளிமண்டலத்தில் மாசுக்காற்றின் அடர்த்தி அதிகமாகி, அதனால் பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்துச் செல்கிறது. பெருவெள்ளம், அதிவேக சூறாவளி, பெரும் வறட்சி, நோய்கள் அதிகரிப்பு, வேளாண்மை பாதிப்பு, கடல்வள அழிவு என எண்ணற்ற பாதிப்புகள் இதனால் அதிகமாகியுள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புவியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பை 2 டிகிரி செல்சியஸ் ஆளவுக்கு மிகாமல் மிகக்கீழாக குறைப்பது என்றும், அதற்கு மேலும் 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கீழ் குறைக்க முயற்சிப்பதாகவும் 'பாரிஸ் காலநிலை உடன்படிக்கை' கூறுகிறது.

இந்த உடன்படிக்கையின் மூலம் பெட்ரோல், டீசல், எரிவாயு, நிலக்கரி உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

பின்னணி என்ன? 

காலநிலை மாற்றம் குறித்த பன்னாட்டு அறிவியலாளர்கள் குழு ( (IPCC - Intergovernmental Panel on Climate Change) 1988 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 1992 ஆம் ஆண்டின் ரியோ-டி-ஜெனிரோ புவி உச்சிமாநாட்டில் ஐநா காலநிலை மாற்ற பணித்திட்டப் பேரவை (UNFCCC - United Nations Framework Convention on Climate Change) அமைக்கப்பட்டது. அந்த அமைப்பு சட்டபூர்வமாக 1994 ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்தது முதல், 21 ஆண்டுகளாக 'ஐநா காலநிலை உச்சிமாநாடுகள்' (UNFCCC - Conference of the Parties - COP) ஆண்டுதோரும் கூட்டப்பட்டுள்ளன.

அவற்றில் சில முக்கியத்துவம் வாய்ந்த மாநாடுகள்:

"1997 - கியோட்டோ உடன்படிக்கை"

ஐநா காலநிலை மாற்ற பணித்திட்ட பேரவையின் 3 ஆவது மாநாடு ஜப்பான் நாட்டின் கியோட்டோ நகரில் 1997 ஆம் ஆண்டு கூடிய போது, அங்கு ஒரு புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டது. உலகின் பணக்கார நாடுகள், அதாவது வளிமண்டலத்தில் அதிக மாசுக்காற்றைக் கலக்கவிட்ட நாடுகள், தங்களது நாடுகளில் இருந்து வெளியாகும் கரியமில வாயு அளவைக் குறைக்க ஒப்புக்கொண்டனர்.
உலகை மாசுபடுத்திய நாடுகள் 1990 ஆம் ஆண்டில் எந்த அளவுக்கு கரியமில வாயுவை வெளிவிட்டனவோ, அதற்கு கீழாக 5.2% கரியமில வாயு வெளியாகும் அளவைக் குறைப்பது என ஒப்புக்கொள்ளப்பட்டது (ஒவ்வொரு நாட்டிற்கும் இந்த அளவு மாறுபடும்). இவ்வாறு குறைப்பதற்கான கால அளவு 2008 முதல் 2012 வரை என முடிவெடுக்கப்பட்டது.

உலகின் ஏழை நாடுகள் உடபட எல்லா நாடுகளும் கரியமில வாயுவைக் குறைக்க முன்வந்தால்தான் தாங்களும் குறைக்க ஒப்புக்கொள்வோம் எனக்கூறி, உலகின் மிகப்பெரிய மாசுபடுத்தும் நாடான அமெரிக்கா இந்த உடன்படிக்கையை ஏற்காமல் வெளியேறிவிட்டது.

"2007 - பாலி வழிக்காட்டி"

'காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த 5% கரியமில வாயுவைக் குறைத்தால் போதாது. 85% குறைக்க வேண்டும். அப்போதுதான் உலகைக் காப்பாற்ற முடியும்' என 2007 இல் வெளியான பன்னாட்டு அறிவியலாளர் குழுவின் புதிய மதிப்பீடு சுட்டிக்காட்டியது. இந்த புதிய அவசர நிலைக்கேற்ப தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் புதிய உடன்பாட்டை 2009 ஆம் ஆண்டில் உருவாக்க வேண்டும் என பாலி மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.

மாசுபடுத்திய நாடுகள் மட்டுமே கரியமில வாயுவைக் குறைக்க வேண்டும் என்கிற நிலைபாட்டிற்கு மாறாக, மாசுபடுத்திய நாடுகள் நிதி உதவியும் தொழில்நுட்ப உதவியும் அளித்தால் - மாசுபடுத்தாத ஏழை நாடுகளும் தங்களது நாடுகளில் இருந்து வெளியாகும் கரியமில வாயுவைக் குறைக்க ஒப்புக்கொண்டன.

"2009 - கோபன்ஹெகன் மாநாடு"

உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கோபன்ஹெகன் மாநாடு படுதோல்வியில் முடிந்தது. ஏற்கனவே பாலியில் பேசியபடி கோபன்ஹெகனில் புதிய உடன்படிக்கை உருவாக்கப்படவில்லை. எல்லா நாடுகளும் தங்களது கரியமில வாயுவைக் குறைக்க வேண்டும்.
மாசுபடுத்திய நாடு, மாசுபடுத்தாத நாடு என்கிற பாரபட்சம் வேண்டாம் என பேசப்பட்டது. இதனை ஏற்கும் நாடுகளுக்கு நிதி உதவி கிடைக்கும் என்கிற ஆசை வார்த்தைகள் பேசப்பட்டன. ஆனாலும், எந்த நாடு எவ்வளவு கரியமில வாயுவைக் குறைக்கும் என்கிற கேள்விக்கு பதில் இல்லை.

"2011 - டர்பன் மாநாடு"

ஏற்கனவே 2007 ஆம் ஆண்டு பாலி மாநாட்டின் போது, 2009 கோபன்ஹெகனில் ஒப்பந்தம் செய்வோம் என்று கூறியது போல - இப்போது மீண்டும் 2015 இன் புதிய சட்டபூர்வமான ஒப்பந்தத்தை செய்துகொள்வோம் என்று முடிவு செய்தார்கள்.

ஆனால், இந்த முறை 'எல்லா நாடுகளும்' மாசுக்காற்றைக் குறைக்க வேண்டும் என்று ஒப்புக்கொண்டுவிட்டார்கள்.  மாசுபடுத்திய நாடு, மாசுபடுத்தாத நாடு என்கிற பாரபட்சம் முடிவுக்கு வந்துவிட்டது. வெறும் 4 விழுக்காடு மக்களைக் கொண்டு உலகத்தை 30 விழுக்காடு மாசுபடுத்திய அமெரிக்க நாட்டுக்கும், 17 விழுக்காடு மக்களைக் கொண்டு உலகத்தை வெறும் 3 விழுக்காடு மட்டுமே மாசுபடுத்திய இந்திய நாட்டுக்கும் இனி ஒரேமாதிரி பொறுப்புதான்.

"2015 - பாரிஸ் மாநாடு"

'எல்லா நாடுகளும்' மாசுக்காற்றைக் குறைக்க ஒப்புக்கொள்ளும் ஒப்பந்தம் 2015 பாரிஸ் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2016 நவம்பர் 4 முதல் சட்டபூர்வமாக செயல்பாட்டுக்கு வந்துவிட்டது.

கருத்துகள் இல்லை: