ஊடகங்களும், விமர்சகர்கள் என்று கூறிக்கொள்வோரும் தேர்தல் முடிவு கூறித்து பலவித வியாக்கியானங்களை கூறக்கூடும். எனினும், இந்த தேர்தல் முடிவு எதைக் காட்டுகிறது என்பதையும் இதனால் எழுந்துள்ள சவால்களையும் நாம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.
இடைத்தேர்தலில் ஆளும் கட்சிக்கே பலம் அதிகம்
இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெரும் வாய்ப்புதான் அதிகம் என்பது அண்மைக்கால வரலாறாக இருக்கிறது. அதிலும், அதிக பணத்தை கொடுத்த கட்சியும், அதிகாரத்தில் கோலோச்சும் கட்சியுமான அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது. பணத்தை மட்டும் கொடுத்த கட்சியான திமுக இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது.
எனவே, அதிமுகவின் வெற்றி எனும் முடிவு அதிர்ச்சி அளிக்கக் கூடியது அல்ல.
மாற்று இல்லை என்பதுதான் உண்மையான அதிர்ச்சி!
கொள்கை, சித்தாந்தம் என்பதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, வெறும் உள்ளூர் புரோக்கர்களை வைத்து கட்சி நடத்தும் (Clientelistic Politics) முறையை திராவிடக் கட்சிகள் உருவாக்கி வைத்துள்ளன. வாக்காளர்களை வாடிக்கையாளர்களாக நடத்தும் இந்த அரசியல் முறையானது (Clientelism), திமுக, அதிமுக என்கிற இரண்டு பக்க நாணயமாக நடந்து வருகிறது.
தற்போது இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில், அதிமுக, திமுக கட்சிகளுக்கு சவால் விடும் அளவிலான கட்சிகள் எதுவுமே இல்லை என்பதுதான் உண்மையான அதிர்ச்சி ஆகும்.
அதிமுக - திமுக இடையேயான வாக்கு வித்தியாசம் - தஞ்சாவூரில் 26,846 திருப்பரங்குன்றத்தில் 42,670 அரவக்குறிச்சியில் 23,673 என்பதாக இருக்கிறது. இந்த வாக்கு வித்தியாசத்துக்கு இணையாகக் கூட, மூன்றாவது கட்சி எதுவும் வாக்குகளை வாங்கவில்லை. அதில் பாதி அளவு வாக்குகளைக் கூட வாங்கவில்லை.
அதாவது, இரண்டாம் இடம்பிடித்த திமுகவுடன், மூன்றாவது இடத்தை பிடித்த கட்சியின் வாக்குகளை சேர்த்தால் கூட - வெற்றி இலக்கை எட்டும் அளவிற்கு - எந்தக் கட்சிக்கும் மக்கள் வாக்களிக்கவில்லை.
அமெரிக்க, இங்கிலாந்து தேர்தலைப் போன்று - இருகட்சி ஆட்சி முறைக்கு (two-party system) இணையான தேர்தலாக - இடைத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
(இடைத்தேர்தல் முடிவுகளை வைத்து பொதுத்தேர்தலை கணிக்க முடியாது என்றாலும் கூட - தமிழகத்தின் நிலைமை இதற்கு நெருக்கமாகவே உள்ளது.)
இருகட்சி ஆட்சி முறை: இந்திய ஜனநாயகத்துக்கு எதிரானது
இந்திய ஜனநாயக அமைப்பு என்பது பலகட்சி ஜனநாயக அமைப்பு (multi-party system) ஆகும். இந்தியா இருகட்சி அரசியல் முறைக்கு (two-party system) உகந்த நாடு அல்ல.
பல்வேறு சமூகங்கள், மதங்கள், மொழிகள், நம்பிக்கைகளை கொண்ட நாடு என்பதால் - இந்தியாவின் எல்லா தரப்பு மக்களையும் உள்ளடக்கும் வகையில், பல கட்சிகள் உள்ளன. இரண்டுக்கும் மேற்பட்ட கட்சிகள் வலுவாக இருப்பதால்தான் இந்திய ஜனநாயகம் நீடிக்கிறது. பன்முகத்தன்மை வாய்ந்த சமூகத்தில், இரண்டு தரப்பாக அரசியல் பிரிவது சர்வாதிகாரத்துக்கே இட்டுச்செல்லும்.
பன்முகத்தன்மை கொண்ட மக்கள் வாழும் தமிழ்நாட்டில் அல்லது இந்தியாவில், சர்வாதிகார ஆட்சி என்பது நீண்ட நாள் நீடிக்காது. அது பேரழிவுக்கே இட்டுச்செல்லும். (அரசியல் ரீதியான சர்வாதிகாரம் எத்தகைய பேரழிவுகளை உருவாக்கும் என்பதற்கு இலங்கை, சிரியா போன்ற நாடுகள் எடுத்துக்காட்டுகளாக உள்ளன).
சர்வாதிகாரத்திலிருந்து தப்பிக்க என்ன வழி?
தமிழ்நாடு முழுமைக்கும் ஒரே அரசியல் சமூக நிலை இல்லை. தென் தமிழ்நாட்டிலும் மேற்கு தமிழ்நாட்டிலும் இருகட்சி அரசியல் நிலை வந்துவிட்டாலும் - வட தமிழ்நாட்டில் அந்த நிலை இன்னமும் ஏற்படவில்லை.
முதல் இரண்டு கட்சிகளின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் இடத்தில் வட தமிழ்நாட்டில், மூன்றாவது பெரிய கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி உள்ளது. எடுத்துக்காட்டாக, 2010 பென்னாகரம் இடைத்தேர்தலில், அப்போது ஆட்சியில் இருந்த திமுக வெற்றி பெற்றது. ஆனால், அதிமுகவை மூன்றாம் இடத்துக்கு தள்ளி, பாமக இரண்டாம் இடத்தை பிடித்தது.
ஆக. மொத்தத்தில் வெற்றி பெரும் கட்சியின் வெற்றி வாய்ப்பை பறிக்கக் கூடிய பலத்துடன் மூன்றாவதாக ஒரு கட்சி இருக்கும் நிலை வட தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது.
அதிமுக - திமுகவின் சர்வாதிகாரத்தை ஒழிக்கும் பயணம் - பாமகவின் இந்த வலிமையில் இருந்துதான் முன்னேற வேண்டும். உண்மையில் - அதிமுக திமுக சர்வாதிகாரத்திலிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை பாமகவுக்கு இருக்கிறது என்றும் கூட இதனை எடுத்துக்கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக