Pages

புதன், நவம்பர் 16, 2016

கருப்பு பண ஒழிப்பு: ஏழைகளிடம் பிடுங்கி பணக்காரர்களுக்கு கொடுக்கும் திட்டமா?

ஒரு கடினமான முயற்சியாக இருந்தாலும், 1000 மற்றும் 500 ரூபாய் தாள்கள் ஒழிக்கப்பட்டதை நாம் வரவேற்கிறோம். அதே நேரத்தில், அரசு முன்னரே திட்டமிட்டிருந்தால் 500 ரூபாய் சில்லரை தட்டுப்பாட்டை பெருமளவு ஒழித்திருக்க முடியும். ஓரளவுக்காவது ஏடிஎம்களை செயல்பட வைத்திருக்க முடியும். மக்களின் துன்பத்தை பெருமளவில் குறைத்திருக்க முடியும் என்பதே பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.

இப்போது நடக்கும் கூத்துகளை பார்க்கும் போது - திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த சில்லரைத் தட்டுப்பாட்டுக்கு பின்னால் வேறு சதிகள் இருக்குமோ என்கிற ஐயம் எழுவது இயல்பானது.

வங்கியில் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம். ஆனால், குறைவான பணத்தை மட்டுமே பணத்தாளாக எடுக்க வேண்டும். செக் மூலமோ, மின்னணு முறையிலோ பணத்தை மாற்ற தடை இல்லை - என்கிறது அரசாங்கம். அதாவது, வங்கிகளில் மட்டுமே மக்களின் பணம் இருக்க வேண்டும் என அரசாங்கம் கட்டாயப்படுத்துகிறது. இந்த வலுக்கட்டாய பணப்பறிப்பு ஏன்?

இந்த முயற்சியின் உண்மை நோக்கம் கருப்ப பண ஒழிப்பு மட்டும்தானா என்கிற கேள்வி தவிர்க்க முடியாதது. குறிப்பாக, சாதாரண மக்களின் பணத்தை அபகரித்து, அதனை பெரும் பணக்காரர்களிடம் அளிக்கும் சதியாக இருக்குமோ என அஞ்ச வேண்டியிருக்கிறது.

அதற்கான சில காரணங்களை பார்ப்போம்:

1. கருப்பு பணம் ஓரிரு லட்சம் கோடி

இந்தியா முழுவதும் சுமார் 15 லட்சம் கோடி மதிப்பிலான பணம் 1000 மற்றும் 500 ரூபாய் தாள்களாக இருப்பதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அதாவது, செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள, 'நல்லப் பணம், கள்ளப் பணம்' ஆகிய அனைத்து ரூபாய் தாள்களின் மொத்த மதிப்பு 15 லட்சம் கோடிகள் மட்டுமே. இவற்றில் எவ்வளவு தான் அதிகப்படியாக மதிப்பிட்டாலும் கூட - பணத்தாளாக உள்ள கருப்பு பணத்தின் மதிப்பு ஓரிரு லட்சம் கோடிகளை தாண்டாது.

(இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பான 125 லட்சம் கோடியில், சுமார் 25% கருப்பு பணமாக இருக்கலாம். ஆனால், மிகப்பெருமளவு கருப்பு பணம் தங்கமாகவும், நிலமாகவும், பினாமி சொத்தாகவும், வெளிநாட்டு முதலீடாகவும் உள்ளது. பணத்தாளாக அதிகம் இல்லை)

2. வராக்கடன் பல லட்சம் கோடி

இந்திய வங்கிகளிடம் பெரும் பணக்காரர்கள் 'பல ஆயிரம் கோடிகளாக கடன் வாங்கி' திருப்பி செலுத்தாத கடன் அளவு - மொத்தமாக 6 லட்சம் கோடிக்கும் கூடுதல் ஆகும். அதாவது, பெரும் கோடீஸ்வரர்கள் திருப்பிச் செலுத்தாத வராக்கடனின் மதிப்பு, பணத்தாளாக உள்ள கருப்பு பணத்தை விட அதிகம். இதனால், இந்தியாவின் வங்கிகள் திவாலாகும் நிலையில் உள்ளன. 

பெரும் பணக்காரர்கள் பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடனில் 2 லட்சத்து 51 ஆயிரம் கோடி ரூபாய், கடந்த 11 ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. யாருடைய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்கிற விவரத்தைக் கூட, உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் மத்திய அரசு வெளியிடவில்லை.

ஆடு, மாடு வாங்க கடன் வாங்கிய விவசாயி பெயரைக் கூட படத்தோடு வெளியிடும் வங்கிகள், ஆயிரக்கணக்கான கோடி பணத்தை பொதுத்துறை வங்கிகளிடம் வாங்கி கட்டாமல் விட்ட பெரும் கோடீஸ்வரகளின் பெயரை, அவர்களின் கடனை தள்ளுபடி செய்த பின்னரும் கூட வெளியிடவில்லை.

3. இந்திய வங்கிகளின் மோசடி கடன்

உலகின் எந்த நாட்டின் வங்கிகளும் செய்யாத மாபெரும் மோசடியை, இந்தியாவின் வங்கிகள் செய்கின்றன. இங்குதான், ஏழைகளிடமும் நடுத்தர மக்களிடமும் உள்ள பணத்தை அபகரித்து, அதனை பணக்காரர்களிடம் கொடுக்கும் வேலையை வங்கிகள் செய்கின்றன. அதாவது, வங்கிகளில் முதலீடு செய்யப்படும் பணம் சாதாரண மக்களுடையது. ஆனால், வங்கிகள் அதனை கடனாகக் கொடுப்பதோ பெரும் பணக்காரர்களுக்கு!

இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துபவை சாதாரண சிறுதொழில்கள், சிறு சேவைகள், வீட்டு தொழில்கள், கடைகள், அமைப்பு சாராத தொழில்கள் போன்றவைதான். 89% மக்களின் வேலை வாய்ப்பாக இத்தகைய தொழில்கள்தான் உள்ளன. Non-corporate sector (comprising partnerships, proprietorships and the self-employed) எனப்படும் இவற்றுக்கு வங்கிகள் போதுமான அளவில் கடன் அளிப்பது இல்லை. மாறாக, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குதான் கடன் அளிக்கின்றன.

இந்திய பொருளாதாரத்தில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு 18% மட்டும்தான். ஆனால், வங்கிகள் அளிக்கும் கடன் தொகையில் 45% கார்ப்பரேட் நிறுவனங்களுக்குதான் அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்திய பொருளாதாரத்தில் Non-corporate sector தொழில்களின் பங்களிப்பு 45% ஆகும். இந்தத் தொழில்களுக்கு வங்கிகள் பெரும்பாலும் கடன் அளிப்பது இல்லை. இத்தகைய தொழில்களை நடத்துவோர் தனியாரிடம் அதிக வட்டிக்கு வாங்கி தொழில் செய்கின்றனர்.
மொத்தத்தில், கார்ப்பரேட் நிறுவங்களுக்கு 45% மற்றும் அரசுக்கு 20% என பணத்தை வங்கிகள் அளிக்கின்றன. மற்ற எல்லா கடன்களுக்கும் 35% பணத்தை மட்டுமே அளிக்கின்றன. அதாவது, மக்களின் சேமிப்புகளை அபகரிக்கும் வங்கிகள் அவற்றை பெரும் நிறுவனங்களுக்கு அரசாங்கத்துக்கும் கொடுத்துவிட்டு - மக்களை வாழ வைக்கும் சிறுதொழில் மற்றும் அமைப்பு சாராத தொழில்களுக்கு நாமம் சாத்துகின்றன.

(இதுகுறித்து விரிவாகக் காண India Uninc, by R. Vaidyanathan எனும் நூலைப் படிக்கவும்)

கார்ப்பரேட் கொள்ளைக்கு வழிசெய்கிறதா மோடி அரசு?

மக்கள் வலுக்கட்டாயமாக வங்கிகளில் பணத்தை வைக்க வேண்டும் என்று நிர்பந்திப்பது யாரின் நலனுக்காக? இப்போது சாதாரண மக்களின் பணம் வங்கிகளில் குவிவதால், இந்தப் பணம் மீண்டும் பெரும் பணக்காரர்களுக்கு கடனாக அளிக்கப்படக்கூடும். 

இந்திய பொருளாதாரத்தின் ஆணிவேரான சாதாரண சிறுதொழில் மற்றும் அமைப்பு சாராத தொழில்களை நடத்துவோருக்கு கடன் அளித்துவரும், வங்கிசாராத கடன் நிறுவனங்கள் இனி இயங்காது. தாளாக பணம் புழங்காததால், இனி தனியாரிடமிருந்து அவசரக் கடன்கள் கிடைக்காது. அமைப்பு சாராத தொழில்களுக்கு வங்கிகளும் கடன் அளிக்காது. இந்தியப் பொருளாதாரம் சிதையும் நிலை இதனால் வரக்கூடும்.

என்ன செய்ய வேண்டும்?

மோடி அரசுக்கு உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்தால்:-

1. பணத்தாளாக உள்ள கருப்பு பணத்தை விட, மிக அதிக தொகையாக உள்ள, பெரும் பணக்காரர்கள் செலுத்த வேண்டிய 6 லட்சம் கோடி வராக்கடனை அவசர சட்டங்கள் மூலமாக வலுக்கட்டாயமாக வசூலிக்க வேண்டும்.

2. இந்திய வங்கிகளின் செயல்பாட்டில் மாற்றம் கொண்டுவந்து, சிறுதொழில் மற்றும் அமைப்பு சாராத தொழில்களுக்கும் சுயதொழில்களுக்கும் தாராளமாக கடன் வழங்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். 

3. உடனடியாக புதிய நோட்டுகளை அதிகம் வெளியிட்டு, பணப்புழக்கத்தை தாராளமாக்கி, வழக்கம் போல பணம் மூலமாகவே மக்கள் பரிவர்த்தனைகளை நடத்த வழி செய்ய வேண்டும். (இந்தியாவில் 87% பணப்பரிமாற்றம், பணத்தாளின் மூலம் நடக்கிறது. இதனை ஒரே இரவில் மாற்றிவிட முடியாது)
எச்சரிக்கை

உலகில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா போன்ற நாடுகளில் எல்லாம் வங்கிகள் மூலம்தானே பணப்பரிவர்த்தனை நடக்கிறது. இங்கு மட்டும் ஏன் பணமாக மாற்ற வேண்டும் என்று கேட்பவர்கள் - அங்கெல்லாம் பொருளாதாரமும், வேலைவாய்ப்பும் கார்ப்பரேட் நிறுவனங்களால் இயங்குகிறது என்பதையும், இங்கு இந்தியாவில் அது அமைப்பு சாராத தொழில்களால் இயங்குகிறது என்பதையும் மறந்துவிடக் கூடாது.

மேலும், மேலைநாடுகளில் வங்கிகள் கடன் அளிக்கும் முறையும், அதனை பெறுவதும் எளிது என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். ஏதேனும் தொழில் நடத்த முன்வந்தால், அந்த தொழிலையேதான் அங்கெல்லாம் வங்கிகள் ஜாமீனாக கருதுகின்றன. இந்தியாவில் கேட்பது போல - மும்மடங்கு சொத்து ஜாமீன் இருந்தால்தான் கடன் தருவேன் என்று வங்கிகள் கூறுவது இல்லை.

மேலை நாடுகளில் - மக்களின் இன்றியமையாத தேவைகளான கல்வி மற்றும் மருத்துவத்துக்கான பெருமளவு செலவுகளை அரசாங்கமே ஏற்கிறது. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிய வருமானம் கிடைப்பதையும் பெருமளவில் அரசாங்கமே உறுதிசெய்கிறது. வருமானத்துக்கு வழி இல்லாதவர்களுக்கு, வேலை கிடைக்கும் வரை அரசாங்கமே ஊதியம் அளிக்கிறது. இவ்வாறான சமூக பாதுகாப்பு இல்லாத இந்தியாவில் - மக்களின் பணப்புழக்கத்தை தடுப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

கருத்துகள் இல்லை: