Pages

ஞாயிறு, நவம்பர் 13, 2016

மோடி அரசின் சதி: கருப்பு பண ஒழிப்பா? கார்ப்பரேட் கொள்ளையா?

500 ரூபாய், 1000 ரூபாய் தாள்கள் ஒழிக்கப்பட்டதை பொதுவாக மக்கள் ஆதரித்தனர். ஆனால், இப்போது அதே மக்கள் அரசை எதிர்க்கும் நிலையை உருவாக்கியுள்ளனர். இப்போது நடக்கும் கூத்துகளை பார்க்கும் பொது - மோடி அரசு 'கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில்' இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது.

கார்ப்பரேட் கொள்ளை

சாதாரண ஏழை எளிய மக்களின் வியபாரத்தை ஒழித்து - பன்னாட்டு நிறுவனங்களின் வியபாரத்தையும், இணைய வர்த்தக முறையையும் அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கில் மோடி அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது. சாதாரண கடைகள், உணவகங்கள், சிறு விற்பனையாளர்களிடம் கடன் அட்டைகளை பயன்படுத்தும் வசதி இல்லை. இதனால், கடன் அட்டை வைத்திருப்பவர்கள், சாதாரண தேவைகளுக்கு கூட பெரிய நிறுவனங்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், மின்னணு பண வர்த்தகம், கடன் அட்டை நிறுவங்கள் மற்றும் தனியார் வங்கிகளுக்கு ஆதரவாக மோடி அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது. உயர்நடுத்தர வர்க்கமும், பணம் படைத்தோரும்தான் கடன் அட்டைகளை பயன்படுத்துகின்றனர். சாதாரண எளிய மக்கள் அவற்றை பயன்படுத்தம் நிலை இல்லை. அன்றாடம் சம்பளம் வாங்கும் நிலையிலும், சிறிய வியபாரத்தை நடத்துவோரும் - வங்கிகளில் பணத்தை போட்டு, அதனை வங்கி அட்டை மூலம் செலவிடும் நிலையில் இல்லை. இவர்களை வலுக்கட்டாயமாக மின்னணு பணப்பரிமாற்ற முறைக்கு மாற்றும் வன்முறையில் ஈடுபட்டுள்ளது மோடி அரசு.

அம்பலமாகும் மோடி அரசின் சதி!

மோடி அரசின் 500 ரூபாய், 1000 ரூபாய் தாள்கள் ஒழிப்பு என்பது உண்மையாகவே, கருப்பு பண ஒழிப்பு நோக்கில் இருந்திருந்தால் - இவர்களால் 500 ரூபாய் நோட்டுகளை பெருமளவில் புழக்கத்துக்கு கொண்டுவந்திருக்க முடியும். ஆனால், 2000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே வெளியிட்டு - செயற்கையான சில்லரை தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளனர்.

சிறிய கடையில் 100 ரூபாய்க்கு பொருளை வாங்கிவிட்டோ, எளிய உணவகத்தில் 100 ருபாய்க்கு சாப்பிட்டுவிட்டோ - 2000 ரூபாயை நீட்டினால், அவர்கள் சில்லரைக்கு எங்கே போவார்கள்?
ஒரு அரசு பெரிய நடவடிக்கை எடுக்கும் போது - அதற்கு ஏற்ற வகையில் முன்னேற்பாடுகளை முன்கூட்டியே செய்திருக்க முடியும். புதிய ரூபாய் தாள்களை வழங்கும் வகையில் ஏடிஎம் எந்திரங்களின் மென்பொருளை உடனடியாக மாற்றி சில்லரை தட்டுப்பாடுகளை தடுத்திருக்கலாம். ஆனால், இதற்கு இன்னும் மூன்று வாரங்கள் ஆகும் என்று கூறுவதன் மூலம் - திட்டமிட்டு சில்லரைத் தட்டுப்பாட்டை நீட்டிக்கிறார்கள்.

ஆக, மொத்தத்தில் - பெரிய நிறுவனங்கள், இணையவழி விற்பனையாளர்கள், கடன் அட்டை நிறுவங்கள், தனியார் வங்கிகளுக்கு ஆதரவாகவே - மோடி அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது. இதற்காக 'கருப்பு பண ஒழிப்பு' என்கிற நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.

1 கருத்து:

Unknown சொன்னது…

ஐயா
காவிரி நீர் குறித்து மெளனம் காத்த பிரதமர் மக்களுக்கு நன்மை செய்வார்கள் என்று நம்புகிறீரா