Pages

திங்கள், மே 01, 2017

ஐநாவில் மு.க. ஸ்டாலின்: திமுகவின் அண்டப்புளுகும் உண்மையும்!

ஐநா கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார் என்று, திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை இன்று (01.05.2017) சில ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

அதில் "ஐநா மனித உரிமைகள் கூட்டத்தில் ஈழத்தமிழருக்காக மு.க.ஸ்டாலின் பேசுவார்" என்றும், "2012 ஆம் ஆண்டிலேயே அவர் ஜெனீவாவில் ஐநா கூட்டத்தில் பங்கேற்றார்" என்றும், "ஐநா ஆண்டறிக்கையில் திமுகவின் டெசோ அறிக்கை வெளியாகியுள்ளது" என்றும் அப்பட்டமான கட்டுக்கதைகளை கூறியுள்ளனர்.

மு.க.ஸ்டாலின் = வைகோ 2.0

அண்மையில், 'வைகோ வேண்டுகோளை ஐநா பொதுச்செயலரின் ஒப்புதலோடு ஐநா மன்றம் சுற்றுக்கு வைத்துள்ளது' என்றும், 'ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 34 ஆவது கூட்டத்தில் வைகோ விடுத்த வேண்டுகோள் இரண்டாவது நிகழ்ச்சி நிரலாக வைக்கப்பட்டது' என்றும் மதிமுக பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டது. (இங்கே காண்க: மதிமுகவின் பொய்ப்பிரச்சரம்: வைகோ கோரிக்கையை ஐநா மன்றம் ஏற்றதா?). அதற்கு போட்டியாக இப்போது திமுகவின் கட்டுக்கதை முன்வைக்கப்பட்டுள்ளது.
திமுகவின் அறிக்கை

மு.க. ஸ்டாலின்: கட்டுக்கதையும் உண்மையும்

கட்டுக்கதை 1: "ஐநாவின் ஜெனீவா கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகிறாரா?"

திமுக அறிக்கை: "ஜெனீவாவில் நடைபெற உள்ள மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜெனீவாவில் வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள, 35வது மனித உரிமைகள் ஆய்வுக்கூட்டத்தில் தமிழீழ மக்களின் பிரச்னைகள் குறித்து மு.க.ஸ்டாலின் உரையாற்ற போகிறார். இதற்காக கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்." 
 ஐநாவில் ஸ்டாலின் எனும் தினகரன் பத்திரிகை செய்தி

உண்மை: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளது போன்று ஜூன் 12 முதல் 20 வரை ஜெனீவாவில் 35 ஆவது ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் நடக்கவில்லை. மாறாக, ஜூன் 6 முதல் 23 வரை இக்கூட்டம் நடக்கிறது. இந்த ஆண்டு நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் இடம்பெறவில்லை. இனி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் 37 ஆவது கூட்டத்தில் தான் இலங்கை விவாதிக்கப்படும்.

கட்டுக்கதை 2: "மு.க.ஸ்டாலின் 2012 ஐநா கூட்டத்தில் பங்கேற்றாரா?"

திமுக அறிக்கை: "மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் 03.11.2012 அன்று ஜெனிவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை பாதுகாப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர்."

உண்மை: இது பொய்யான தகவல். 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த காலமுறை ஆய்வு நடைபெற்ற போது மு.க. ஸ்டாலின் அங்கு வரவில்லை. உண்மையில் அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர் பாமக தலைவர் ஜி.கே. மணி அவர்கள் ஆகும்.

கட்டுக்கதை 3: "ஐநா அறிக்கையில் டெசோ தீர்மானமா?"

திமுக அறிக்கை: "மு.க.ஸ்டாலின் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் சமர்ப்பித்த 'டெசோ' மாநாட்டுத் தீர்மானங்கள் இந்தாண்டுக்கான ஐநா ஆண்டறிக்கையில் இடம்பெற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் 2017 - 18 ஆண்டு அறிக்கையில், ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் டெசோ அமைப்பு இணைந்து நிறைவேற்றிய தீர்மானங்கள் பதிவாகி, வெளியிடப்பட்டு இருக்கிறது"

உண்மை: ஐநா ஆண்டறிக்கை 2017 - 18 என்பதாக எந்த ஒரு அறிக்கையையும் ஐநா மன்றம் வெளியிடவில்லை. வெளியிடாத அறிக்கையில் டெசோ மாநாட்டு தீர்மானம் எவ்வாறு இடம்பெற்றது என்பதை மு.க. ஸ்டாலின் தான் விளக்க வேண்டும்.

ஐநாவில் செயலாற்றியது யார்?

ஈழத்தமிழர்கள் விடயத்தில் தமிழக கட்சிகள் எவ்வாறு கற்பனைக் கதைகளை கட்டிவிடுகின்றன என்பதற்கு மதிமுகவின் அறிக்கை போன்றே, திமுகவின் கட்டுக்கதையையும் எடுத்துக்காட்டாக கூறலாம்.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் தமிழகத்தின் சார்பில் 2009 முதல் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் நிறுவிய பசுமைத் தாயகம் அமைப்பு செயலாற்றி வருகிறது. மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள் 2013, 2015, 2017 ஆம் ஆண்டுகளில், ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் நேரடியாக உரை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
2017 ஐநா மனித உரிமைகள் பேரவையில் கனடா நாட்டின் தமிழ் MP கேரி அனந்தசங்கரியுடன் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP.

மருத்துவர் அன்புமணி அவர்களின் பங்களிப்பை யாரும் கொண்டாட்டமாக கொண்டாடியது இல்லை. அதனை அவர் விரும்பவும் இல்லை. ஆனால், ஐநாவில் பங்கேற்காத மு.க. ஸ்டாலினுக்கு 2012 ஆம் ஆண்டில் என்ன நடந்தது என்பதை திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் அறிக்கை பின்வருமாறு குறிப்பிடுகிறது: 

"இந்தியாவுக்குத்திரும்பிய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை, தலைவர் கலைஞர் அவர்களும், இனமான பேராசிரியர் அவர்களும் விமான நிலையத்திற்கு நேரடியாகச் சென்று, தாரை தப்பட்டைகள் முழங்க ஆளுயர மாலை அணிவித்து வரவேற்றதுடன், அன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தமிழ் அமைப்புகள் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத் தக்கது." - என்கிறது திமுக அறிக்கை!

திமுக, மதிமுக போன்ற கட்டுக்கதை கட்சிகளை நம்பும் அப்பாவி ஈழத்தமிழர்கள் இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும்.

தொடர்புடைய சுட்டி:

மதிமுகவின் பொய்ப்பிரச்சரம்: வைகோ கோரிக்கையை ஐநா மன்றம் ஏற்றதா?