"பணம் கொடுத்து திரு. விஜயகாந்த் டாக்டர் பட்டம் வாங்கினாரா?" என்று சந்தேகிக்க இடமான தகவல்கள் இப்போது தெரியவந்துள்ளன.
இணையத்தின் மூலம் கிறித்தவ மதத்தை பரப்புவதற்கான ஒரு அமைப்பான "பன்னாட்டு கிறித்தவ தேவாலய மேலாண்மை நிறுவனம் - ஐ.ஐ.சி.எம்" (International Institute of Church Management Inc.) திரு. விஜயகாந்த் அவர்களுக்கு டாக்டர் பட்டம் அளித்துள்ளது.
நமது ஊரில் ஆங்காங்கே உள்ள "இயேசு அழைக்கிறார்" என்கிற மதத்தைப் பரப்பும் அமைப்புகள் போன்றதுதான் ஐ.ஐ.சி.எம். அது ஒரு பொதுவான கல்விநிலையமோ, பல்கலைக்கழகமோ அல்ல. அதாவது - முழுக்க முழுக்க மத பிரச்சாரம் செய்வதற்கான ஒரு அமைப்பிடம் திரு. விஜயகாந்த் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் - என்று நான் எனது "விஜயகாந்த் ஒரு கிறித்தவ மதபோதகரா? டாக்டர் பட்டத்தின் அதிர்ச்சியளிக்கும் பின்னணி!" எனும் பதிவில் எழுதியிருந்தேன்.
தற்போது இதுகுறித்து மேலும் கிடைக்கும் விவரங்கள் வியப்பளிக்கின்றன.
பணத்திற்கு 'டாக்டர்' பட்டம்.
ஐ.ஐ.சி.எம் இணயதளத்தில், இந்த மதப்பிரச்சார அமைப்பிடம் 'டாக்டர்' பட்டம் பெற விரும்புவோர் "ஒரு குறிப்பிட்ட அளவு நன்கொடை அளிக்க வேண்டும்" என்றும், இதனுடன் கூடுதலாக "வாழ்நாள் உறுப்பினராக ரூ. 1000 கட்டணம் செலுத்த வேண்டும்" வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளனர். (the Honorary Doctoral Degrees...will be conferred upon the candidate,...after the candidates give a certain minimum contribution, towards the Honorary Doctoral Degree and a one-time contribution of the Life-Time Membership )
இங்கே காண்க: http://www.iicmweb.org/hon.htm
இங்கே காண்க: http://www.iicmweb.org/hon.htm
ஆக, பணத்திற்கு 'டாக்டர்' பட்டம் அளிக்கப்படலாம் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
அமெரிக்க பல்கலைக்கழக பட்டம் அல்ல.
"அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தின் ஐ.ஐ.சி.எம் பல்கலைக்கழகம் வழங்கும் டாக்டர் பட்டம்" என்று 3.12.2010 அன்று பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்திருந்தனர். ஆனால், இதுவும் கூட உண்மை அல்ல.
அமெரிக்காவில் ஐ.ஐ.சி.எம் என்பது பல்கலைக் கழகமாகவோ, கல்வி அமைப்பாகவோ பதிவுசெய்யப்படவும் இல்லை, இயங்கவும் இல்லை. சென்னை நகரில்தான் அது ஒரு 'கல்வி அறக்கட்டளை' (Educational Trust) என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
கூடவே, டாக்டர் பட்டம் பெற வேண்டுமானால், அதற்கு செலுத்த வேண்டிய ரூ. 1000 வாழ்நாள் உறுப்பினர் கட்டணத்தையே - ஐ.ஐ.சி.எம் கல்வி அறக்கட்டளை, 240 ரூபி டவர், வேளச்சேரி முதன்மைச் சாலை, சேலையூர், சென்னை - 73 எனும் முகவரிக்குதான் அனுப்பக் கூறியுள்ளனர்.
ஆக, இந்திய கல்வி அறக்கட்டளை ஒன்றிடம் பட்டம் "வாங்கி" - அதனை 'அமெரிக்க பல்கலைக்கழகத்திடம் வாங்கியதாக' பெருமை பேசுவது வியப்பாக இருக்கிறது!
திரு. பண்ருட்டி ராமச்சந்திரன் புகழாரம்:
தமிழ்நாட்டின் உயர்ந்த பதவிகளை அலங்கரித்த பண்ருட்டி திரு. ராமச்சந்திரன் அவர்களின் கருத்து இதோ
"அரசியலில் ஈடுபட்டு ஆட்சிக்கு வந்து அதற்குப் பிறகு டாக்டர் பட்டம் பெற்றவர்கள் நம்மிடையே உண்டு. ஆனால், எதிர்க்கட்சியாக இயங்குகிற பொழுதே, மனிதநேயப் பணிக்காக டாக்டர் பட்டம் பெறுவது என்பது கிடைத்தற்கரிய பேறாகும். அதுவும் கடல் கடந்த நாடான அமெரிக்காவில் இருந்து புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த இன்டர்நேஷனல் இன்ஸ்டிடூட் ஆப் சர்ச் மேனேஜ்மென்ட் என்ற அமைப்பினர் நமது இதய தெய்வம் புரட்சிக்கலைஞர் கேப்டன் அவர்களின் மனிதநேய தொண்டினை உணர்ந்து அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவது அவருக்கு மட்டுமல்ல நமது இயக்கத்துக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கே பெருமை"
தமிழ்நாட்டிற்கே பெருமையாம் - இது எப்படி இருக்கு!!!