Pages

திங்கள், அக்டோபர் 24, 2011

வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு: பேராசைக்கு எதிரான போராட்டம்!

தாரளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் எனப்படுகிற கட்டற்ற பொருளாதாரத்தினை உலகெங்கும் பரப்பும் நாடாக இருப்பது அமெரிக்கா. அங்கிருக்கும் நியூயார்க் பங்குசந்தை உலகின் எல்லா பங்குசந்தைகளுக்கும் தலைமையிடமாகக் கருதப்படுகிறது. நியூயார்க் பங்குசந்தையும் உலகின் மிகப்பெரிய வங்கிகளும் அமைந்துள்ள வால் ஸ்ட்ரீட் உலகின் பொருளாதார அச்சாணியாகும். அப்படிப்பட்ட மிகமுக்கியமான இடத்தில் "வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்" என்கிற முழக்கத்துடன் வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் நடந்து வருகிறது.

உலகின் மாபெரும் பன்னாட்டு நிறுவனங்கள், அவர்களுக்கு ஆதரவான உலகவங்கி போன்ற அமைப்புகள், பெருமுதலாளித்துவ அரசாங்கங்கள் என எல்லோருக்கும் எங்கே அடித்தால் வலிக்குமோ அங்கே அடிப்பதாக இந்த போராட்டம் உருவெடுத்துள்ளது.
பேராசைக்கு எதிராக போராட்டம்
வால் ஸ்ட்ரீட்டில் நான் - நியூயார்க் July 2011
"உலகின் வளங்களைக் கொண்டு உலக மக்கள் எல்லோரது தேவைகளையும் ஈடு செய்ய முடியும், ஆனால் எல்லோரது பேராசைகளையும் ஈடு செய்ய முடியாது" என்றார் மகாத்மா காந்தி. அவரேதான் "உரிமைகளை வென்றெடுப்பதற்காக வன்முறை இன்றி அறவழியில் போராடும்" அறப்போர் முறையையும் உருவாக்கினார். இன்று அதே அறப்போர் வழியில் பேராசைக்கு எதிரான போராட்டம் உருவெடுத்துள்ளது.

"வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு" என்றால் என்ன?

கனடா நாட்டிலிருந்து நுகர்வுவெறிக்கு எதிராக நடத்தப்படும் பத்திரிகை 'அட்பஸ்டர்ஸ்' ஆகும். இப்பத்திரிகை சூலை மாதவாக்கில், பன்னாட்டு நிறுவனங்கள் சனநாயகத்தை சீரழிப்பதாகவும் இதனால் ஏழை - பணக்காரர் வேறுபாடு அதிகரிப்பதாகவும் கூறி - அரசியலில் தனியார் தொழில் நிறுவனங்களின் தலையீட்டையும் ஆதிக்கத்தையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற போராட்டத்தை முன்வைத்தது. இதனைக் குறிக்கும் விதமாக பங்குசந்தைகளின் அடையாளமாக விளங்கும் காளைமாட்டின் மீது ஒரு பெண் நடனமாடுவது போன்ற படத்தை 'அட்பஸ்டர்ஸ்' வெளியிட்டது.
போராட்டத்தை தூண்டிய படம்
பங்குசந்தை காளைக்கு காவல்
வால் ஸ்ட்ரீட் காளை அருகே நான் - நியூயார்க் July 2011
'அனானிமஸ்' எனப்படும் முகமற்ற போராட்ட அமைப்பினர் 'கூடாரம், சமையல் கருவிகளுடன் வால் ஸ்ட்ரீட்டை நிரப்ப வேண்டும்' என அழைப்பு விடுத்தனர். அறிவிக்கப்பட்டபடி 2011 செப்டம்பர் 17 அன்று சுமார் மூன்றாயிரம் பேர் வால் ஸ்ட்ரீட் முற்றுகையில் ஈடுபட்டனர். அத்தெருவின் வடக்கு பக்கத்தில் உள்ள சுக்கோட்டி பூங்கா எனும் இடத்தில் அவர்கள் முகாமிட்டு தங்கினர். அந்த பூங்காவிற்கு விடுதலைப் பூங்கா என பெயரிட்டனர். அங்கேயே கூட்டமாக தொடர்ந்து தங்கிவருகின்றனர். பல அமைப்புகள் பங்கேற்றாலும், இப்போராட்டம் தனிப்பட்ட அமைப்புகள் எதனாலும் நடத்தப்படவில்லை. தலைவர், வழிகாட்டி என்று யாரும் கிடையாது. அரசியல் கட்சி சார்பு எதுவும் இல்லை.

உலகின் மிகமுக்கிய பொருளாதார மையத்தில் நடந்துவரும் இந்த போராட்டத்தை பத்திரிகைகள் முதலில் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. செப்டம்பர் 24 அன்று அப்பகுதியில் மறியலில் இறங்கிய போராட்டக்காரர்கள் மீது எரிச்சல் தரும் மிளகுச்சாறு தெளிக்கப்பட்டது, 80 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த மோதல் ஊடகங்களில் பெரிதாக வெளியானது. அக்டோபர் 1 அன்று போராட்டக்காரர்கள் புரூக்ளின் பாலம் நோக்கி நடத்திய போராட்டத்தில் 700 பேர் கைது செய்யப்பட்டனர்.
 விடுதலைப் பூங்கா , நியூயார்க்
ஸ்பெயின்-மாட்ரிட்டில் 5 லட்சம் பேர் திரண்டு போராட்டம்
படிப்படியாக வளர்ந்த இந்த போராட்டம் - அமெரிக்காவின் எல்லா நகரங்களுக்கும் பரவியது. பின்னர் உலகளாவிய போராட்டமாக மாறியது. அக்டோபர் 15 அன்று உலகின் 82 நாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்களில் - பல லட்சம் பேர் பங்கேற்ற போராட்டமாக "வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு" போராட்டம் மாறியிருந்தது. ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மட்டும் ஐந்து லட்சம் பேர் போராட்டத்தில் பங்கேற்றனர். லண்டன் பங்குச்சந்தை உள்ள புனித பால் கதீட்ரல் பகுதி உட்பட உலகின் பல இடங்களில் ஆக்கிரமிப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 லண்டன் பங்குச்சந்தை-புனித பால் கதீட்ரல் போராட்டம்
 லண்டன் போராட்டத்தில் விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே
புனித பால் கதீட்ரல் அருகே நான் -  லண்டன்  July 2011

போராட்டம் எதற்காக?

சமூக நீதி, சமத்துவத்தை வலியுறுத்தும் போராட்டம் இதுவாகும். இதே கொள்கையை வலியுறுத்திய தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று "வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு" போராட்டமும் தொடங்கப்பட்டது ஒரு தற்செயல் நிகழ்வாகும் (பெரியார் பிறந்தநாளுக்கும் இதற்கும் தொடர்பில்லை). பொருளாதார வளர்ச்சியின் பலன் மிகச்சிலருக்கே செல்வது, அரசாங்கத்தை பெரும் நிறுவங்கள் கட்டுப்படுத்துவது, மக்களின் அடிப்படை தேவைகள் புறக்கணிக்கப்படுவது ஆகியவற்றுக்கு எதிராக நடக்கும் போராட்டும் இதுவாகும்.

அமெரிக்க நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களின் நிருவாகிகளாக உள்ள 400 தனிநபர்களின் ஆண்டு மொத்த வருமானமும், அந்த நாட்டின் 18 கோடி அமெரிக்க மக்களின் ஆண்டு மொத்த வருமானமும் சமமாகும். அமெரிக்க மக்களில் கீழ்நிலையில் உள்ள 42 விழுக்காட்டினரின் மொத்த வருமானமும், மேல்தட்டில் உள்ள 1 விழுக்காடு மக்களின் மொத்த வருமானமும் சமமாகும் - இந்தக்கருத்தை முன்வைத்துதான் "வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு" போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. "நாங்கள் 99 விழுக்காட்டினர்" என்கிற முழக்கம் அங்கு எழுப்பப்படுகிறது.
ஆஸ்திரேலிய போராட்டம்
இதையே உலகளவில் நாடுகளுக்கு இடையே பார்க்கும்போது உலகின் ஒட்டுமொத்த வருமானத்தில் 42 விழுக்காடு மேல்தட்டின் 10 விழுக்காட்டினருக்கு செல்கிறது. கீழ்தட்டில் இருக்கும் மக்களுக்கு வெறும் 1 விழுக்காடு பங்குதான் கிடைக்கிறது. இப்படி நாடுகளுக்கு இடையே இருக்கும் ஏற்றத்தாழ்வு மட்டுமின்றி நாட்டிற்கு உள்ளே வருமானம் பெருமளவில் வேறுபடுகிறது.

கூடவே, வருமான ஏற்றத்தாழ்வு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இப்படி ஏழை - பணக்காரர் வேறுபாடு 1982 ஆம் ஆண்டிற்கு பின்னரே அதிகரித்து வந்துள்ளதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. எனவே, தாரளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் கொள்கைகளே இன்றைய சிக்கல்களுக்கு காரணம் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்த அநீதியான பொருளாதார வளர்ச்சிப்போக்கிற்கு முடிவு கட்டுவதே வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டத்தின் அடிப்படை இலக்காகும்.

போராட்டக்காரர்களின் கோரிக்கை என்ன?

வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் ஒரு வேறுபட்ட போராட்ட முறையாகும். அதற்கு தலைவர்கள் எவரும் கிடையாது. அவ்வப்போது பொதுச்சபை என்கிற கூட்டத்தைக் கூட்டுகின்றனர். அங்கு எல்லோருக்கும் பேச வாய்ப்பு அளிக்கின்றனர். எல்லோரும் ஒத்துக்கொள்ளும் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். எனவே, திட்டவட்டமாக இதுதான் எங்கள் கோரிக்கை என்று அவர்கள் எதையும் முன்வைக்கவில்லை. இதனால் அது ஒரு இலக்கில்லாத போராட்டம் என்றும் கருதிவிட முடியாது.

போராட்டத்தின் ஒற்றை இலக்கு - அரசியலை, அதாவது அரசாங்கத்தை பெரும் நிறுவனங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும் - என்பதுதான். ஏனென்றால், ஏற்றத்தாழ்வு, வேலையின்மை, வறுமை என எல்லாவற்றுக்கும் பெரும் தொழில் நிறுவனங்களும், வங்கிகளும், பங்குசந்தையுமே காரணமாக இருக்கின்றன. மக்கள் வாக்களிப்பதன் மூலம் அரசாங்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அரசியல் தலைவர்களுக்கும் பணம்படைத்த பெரும் முதலாளிகளுக்கும் இடையே உள்ள நெருக்கத்தின் காரணமாக - அரசாங்கம் பணம் படைத்தோருக்கு சாதகமாகவே இருக்கிறது.
நியூயார்க்
மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக - அரசாங்கம் தனது கடைமைகளை தனியாரிடம் விட்டுவிடுகிறது. அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை குறைப்பது என்கிற பெயரில் மக்கள் தமது அடிப்படைத் தேவைகளுக்காக தனியாரின் கருணையை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். வங்கிகளும் பங்குச்சந்தையும் 99 விழுக்காட்டினரின் பணத்தைப் பிடுங்கி 1 விழுக்காடு பணக்காரர்களிடம் கொடுக்கின்றன. இந்த சமத்துவமற்ற நிலை மாற்றப்பட வேண்டும் என்பதே போராட்டத்தின் பொதுவான இலக்காகும்.

எங்கே வலிக்குமோ அங்கே அடியுங்கள்

தாரளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் கொள்கைகளின் அடிப்படைகளைத் தகர்க்கும் கோரிக்கைகள் இப்போராட்டத்தின் மூலம் உலகெங்கும் எழுப்பப்படுகிறது. பெரும் பணக்காரகள் மீது அதிக வரிவிதிக்க வேண்டும். இந்த வரியைக் கொண்டு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை சேவைகளை அரசாங்கமே வழங்க வேண்டும் என்கின்றனர்.

இப்படி உள்நாட்டில் வரி விதிப்பது மட்டுமின்றி - உலகளாவிய பணப்பரிமாற்றத்தின் மீதும் வரி விதிக்க வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் பெரும் பணத்தை ஏழை நாட்டின் மக்களின் தேவைகளுக்காக செலவிட வேண்டும் என்பது மிக முக்கிய கோரிக்கையாக எழுந்துள்ளது. இப்படி பணக்காரர்களிடம் பிடுங்கி ஏழைக்கு அளிக்கும் இந்த பன்னாட்டு பணப்பரிமாற்ற வரிக்கு "ராபின் குட் வரி" என்று பெயரிட்டுள்ளனர்.

போராட்ட பிரகடனம்

"மக்களின் கூட்டுறவே மனித இனத்தின் எதிர்காலத் தேவை. அரசாங்கங்கள் மக்களிடம் இருந்தே அதிகாரத்தைப் பெருகின்றன. ஆனால், பூமியின் வளங்களை பெருநிறுவனங்கள் எடுப்பதற்கு மக்களின் அனுமதியினைப் பெறவில்லை. எனவே, பொருளாதார வலிமையைக் கொண்டு எல்லாமும் தீர்மானிக்கப்படும் வரை உண்மையான சனநாயகம் ஒருபோதும் சாத்தியமில்லை. மக்களைவிட இலாபம் பெரிது, நீதியைவிட சுயநலம் பெரிது, சமத்துவத்தைவிட ஒடுக்குமுறை பெரிது என்று கருதும் பெரும் நிறுவனங்களே நமது அரசாங்கங்களை இயக்குகின்றன.
பெரும் நிறுவனங்கள் அரசிடமிருந்து வரிப்பணத்தை எடுத்துக்கொண்டனர். வேலை இடங்களில் சமத்துவமின்மையையும் ஒதுக்குதலையும் கடைபிடித்தனர். உணவு முறையை நஞ்சாக்கினர். தொழிலாளர் உரிமைகளை மறுத்தனர். மக்களுக்கு மருத்துவ சேவைகளை மறுத்தனர். மக்களின் அந்தரங்கங்களை விற்று காசாக்கினர். இராணுவத்தையும் காவல்துறையினரையும் மக்கள் மீது ஏவினர். தவறான பொருளாதாரக் கொள்கைகளை வலுக்கட்டாயமாகத் திணித்தனர். தம்மை கண்காணிக்கும் அரசியல் தலைவர்களுக்கே பெரும் பணத்தை லஞ்சமாகக் கொடுத்தனர். மாற்று ஆற்றல் எரிபொருளைத் தடுத்தனர். காப்புரிமை இல்லாத பொதுவான உயிர்க்காக்கும் மருந்துகளைத் தடுத்தனர். சுற்றுச்சூழலை சீர்கெடுத்தனர். ஊடகங்களை கட்டுப்படுத்தி கட்டுக்கதைகளைப் பரப்பினர். உலகெங்கும் காலனியாதிக்கத்தை திணித்தனர். அரசின் உதவியுடன் போர் மற்றும் ஆயுதப் பெருக்கத்திற்கு வழிவகுத்தனர்."

இப்படியாக பெரும் நிறுவனங்களின் அநீதிகளைப் பட்டியலிட்டு அவற்றை ஒழித்துக்கட்டி மக்களின் உரிமையை நிலைநாட்டுவதே "வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு" போராட்டத்தின் நோக்கம் ஆகும்.

இந்தியாவில் ஏற்றத்தாழ்வு

அமெரிக்காவின் ஏழை - பணக்காரர் வேறுபாட்டுடன் ஒப்பிட்டால் இந்தியாவின் நிலை மாறுபட்டது அல்ல. இந்தியாவின் புதிய பொருளாதாரக் கொள்கை என்பது குறைந்த வருவாய்ப் பிரிவினரிடமிருக்கும் பணத்தை அபகரித்து அதிக வருவாய்ப் பிரிவினரிடம் அளிப்பதாக மாறியுள்ளது.
வருவாய் ஏற்றத்தாழ்வை மதிப்பிட நாட்டின் மொத்த மக்கள் தொகையை வருமான அடிப்படையில் 5 பிரிவாக பிரிக்கின்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முறையே 20 விழுக்காடு மக்கள் அடங்குவர். இதில் கீழ்தட்டில் இருக்கும் 20 விழுக்காடு மக்களின் வருவாயுடன் மேல்தட்டில் இருக்கும் 20 விழுக்காட்டினரின் வருமானத்தை ஒப்பிட்டு வருவாய் ஏற்றத்தாழ்வை அளவிடுகின்றனர். இத்தகைய புள்ளிவிவரங்கள் இந்தியாவின் பொருளாதார ஏற்றத்தாழ்வினை அப்பட்டமாக எடுத்துக்காட்டுவதுடன் - அந்த ஏற்றத்தாழ்வு ஆண்டுக்காண்டு அதிகரிப்பதையும் காட்டுகின்றன.  (The Official Poor in India Summed Up, Rajesh Shukla, Indian Journal of Human Development, Vol. 4, No. 2, 2010)

2004 - 05 ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களின் படி இந்தியாவின் மொத்த ஆண்டு வருமானத்தில் கீழ்த்தட்டு 20 விழுக்காடு மக்களுக்கு கிடைத்தது 6.3 விழுக்காடு ஆகும். அதுவே மேல்தட்டு 20 விழுக்காட்டினருக்கு கிடைத்த பங்கு 48 விழுக்காடு ஆகும். கீழ்தட்டு 20 விழுக்காட்டினரின் சராசரி ஆண்டு வருவாய் 3,692 ரூபாய் ஆக இருந்தது. அதுவே மேல்தட்டு 20 விழுக்காட்டினரின் சராசரி ஆண்டு வருவாய் 33,020 ரூபாய் ஆக இருந்தது. அதாவது கீழ்தட்டு பிரிவினரைவிட மேல்தட்டு பிரிவினரின் வருவாய் 9 மடங்கு அதிகம்.

தற்போதைய போக்கினை அடிப்படையாகக் கொண்டு, எதிர்காலத்தை மதிப்பிடும் போது அதிர்ச்சியளிக்கும் முடிவுகளே கிடைக்கின்றன. கடந்த இருபதாண்டு பொருளாதார தாராளமயமாக்கலால் - ஏற்றத்தாழ்வு அதிகரிப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. 1993 - 94 இல் மேல்தட்டு 20 விழுக்காட்டினருக்கு நாட்டின் மொத்த வருமானத்தில் கிடைத்த பங்கு 37 விழுக்காடு. இது 2004 - 05 இல் 48 விழுக்காடாக அதிகரித்தது. இனி 2014 - 15 இல் இதுவே 58 விழுக்காடாக அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

அதே நேரத்தில் கீழ்தட்டு 20 விழுக்காட்டினருக்கு நாட்டின் மொத்த வருமானத்தில் கிடைக்கும் பங்கு 1993 - 94 இல் 7 விழுக்காடாக இருந்தது. 2004 - 05 இல் 6.3 விழுக்காடாகக் குறைந்தது. இது 2014 - 15 இல் 6 விழுக்காட்டிற்கும் கீழாகக் குறையும் என மதிப்பிடப்படுகிறது. ஆக, நாட்டின் வளர்ச்சி என்பது பணம் படைத்தோரின் வளர்ச்சி என்பதாக மாறியுள்ளது. மேல்தட்டின் 20 விழுக்காட்டினரைத் தவிர மீதமுள்ள 80 விழுக்காட்டினரும் வஞ்சிக்கப்பட்டவர்களாக மாறியுள்ளனர்.
பெரும் தொழிநிறுவனங்களுக்கும் பணம் படைத்தோருக்கும் ஆதரவான பொருளாதாரக் கொள்கையை அரசாங்கம் முன்னெடுப்பதால், பெரும்பான்மை மக்கள் பாதிப்படைகின்றனர். சனநாயகம் கேலிக்கூத்தாகிறது. உலகிலேயே மிகக்குறைவாக வரிவிதிக்கப்படும் நாடாக இந்தியா இருக்கிறது. குறிப்பாக பணக்காரர்களின் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரி அளவு, உலக நாடுகளுடன் ஒப்பிட்டால், இந்தியாவில் மிகமிகக் குறைவு. அரசின் வருமானம் குறைவதால் - மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம், குடிநீர், துப்புரவு போன்ற எல்லாவற்றிலும் பெரும் பற்றாக்குறை நிலவுகிறது.

அமெரிக்காவின் பெருநிறுவனங்கள் அந்த நாட்டு மக்களின் வளத்தைக் கொள்ளையடிப்பது போல - இந்தியாவில் இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் பெரும் கோள்ளையில் ஈடுபட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, நாட்டின் எண்ணெய் வளத்தை தனியார் நிறுவனம் ஒன்றிற்கு அளிக்கும் அரசின் ஒரேஒரு உத்தரவினால், அந்த நிறுவனத்திற்கு 81 ஆயிரம் கோடி ரூபாய் இலாபம் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
நோக்கியா நிறுவனம், திருப்பெரும்புதூர்
தமிழ்நாட்டில் உள்ள நோக்கியா அலைபேசி நிறுவனம் 2005 ஆம் ஆண்டு 625 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது. அந்த நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையில் பத்தாண்டுகளுக்கு மதிப்புக்கூட்டும் வரியை திருப்பியளிக்க ஒப்புக்கொண்டுள்ளது.அதன்படி நோக்கியா நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் மதிப்புக்கூட்டு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கூடவே, இந்தியாவின் இதர மாநிலங்களில் அந்த நிறுவனம் செலுத்தும் மதிப்புக்கூட்டு வரியையும் தமிழ்நாடு அரசு திருப்பியளிக்க ஒப்புக்கொண்டுள்ளது. அதாவது, இந்தியாவின் இதர மாநிலங்களில் நோக்கியா அலைபேசி கருவிகள் விற்கப்படும் போது, அந்த மாநிலங்கள் விதிக்கும் மதிப்புக்கூட்டு வரியை தமிழ்நாடு அரசு ஈடுசெய்கிறது!

இதன்படி 2008 ஆம் ஆண்டில் மட்டும் தமிழக மக்களின் வரிப்பணத்தில் 107 கோடி ரூபாய் நோக்கியா நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. அதாவது, நோக்கியா நிறுவனம் எவ்வளவு தொகையை முதலீடு செய்ததோ, அதைவிட அதிக பணத்தை பத்தாண்டுகளில் தமிழ்நாடு அரசு திருப்பியளிக்கப்போகிறது, கூடவே தமிழ்நாட்டில் வரிவிலக்கும் உண்டு. நிலம், மின்சாரம், கட்டமைப்பு, தண்ணீர் வசதி போன்ற இன்னபிர இலவச இணைப்புகளும் உண்டு.

இப்படியாக, உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வாரிவழங்கும் வள்ளல்களாக நம்முடைய அரசுகள் மாறிவிட்டன. அரசியல்வாதிகளுக்கும் தனியார் பெருமுதலாளிகளுக்கும் இடையேயான 'நெருக்கமான நட்பு'தான் இதற்கெல்லாம் காரணம் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. எனவே, 'வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு' என்கிற போராட்டம் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் கூட பொருந்தக்கூடியதுதான்.

தாரளமயமாக்கல், உலகமயமாக்கல் கொள்கைகளால் கேடு நேர்ந்துள்ளதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒப்புக்கொண்டுள்ளார். செப்டம்பர் 25 அன்று நியூயார்க் நகரில் ஐ.நா. கூட்டத்தில் பேசும்போது "பன்னாட்டளவில் இப்போது பொருளாதார நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. உலகமயமாக்கல், நாடுகளுக்கிடையே ஒன்றை ஒன்று சார்ந்து இருத்தல் என்கிற தத்துவங்களால், நாடுகள் பலன் பெரும் என்ற முந்தைய நிலை மாறி, தாராளமயம், உலகமயக் கொள்கையை செயல்படுத்தியதால், இன்று காணப்படும் எதிர்மறை விளைவுகளையும் தாங்கிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது" என்று பேசியுள்ளார் மன்மோகன் சிங்.

மேலும் "ஒருபக்கம் வங்கிகளின் அதிகாரிகளுக்கு கொழுத்த சம்பளம் அளிக்கும் போது மறுபுறம் மக்களின் வயிற்றினை இருக்கி கட்டிக்கொள்ள (செலவுகளைக் குறைக்க) சொல்லும் நிலையால் - அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் போராட்டங்கள் நடக்கின்றன. வால் ஸ்ட்ரீட்டில் போராட்டம் நடக்கிறது. அந்த போராட்டங்களுக்கு வலுவான காரணம் இருக்கிறது." என்றெல்லாம் பேசுகிறார் மன்மோகன் சிங்.

(இந்தியாவில் தாராளமய பொருளாதாரக் கொள்கையைத் திணித்தவர்களில் முதலிடத்தில் இருப்பவர் அவர்தான். இப்போது இந்திய அரசின் 12 ஆவது ஐந்தாண்டு திட்டத்தினை 'தாராளமயக்கொள்கை' அடிப்படையில் உருவாக்கிக் கொண்டிருப்பவர் அவரது நண்பர் மாண்டெக் சிங் அலுவாலியா.)

இனி என்ன?
இதுவரைக்கும் வரி விதிப்பை குறைக்க வேண்டும் என்கிற போராட்டங்கள்தான் உலக வழக்காக இருந்தன. இப்போது பணம் படைத்தோர் மீது அதிக வரிவிதித்து எல்லோருக்குமான அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் நிறைவு செய்ய வேண்டும் என்கிற குரல் எழுந்துள்ளது. அரசாங்கம் என்பது ஜனநாயக வழியில் நடக்க வேண்டும். தனியார் இலாபத்தைவிட மக்கள் நலனை முன்னிலைப்படுத்த வேண்டும். பெருநிறுவனங்களின் பேராசையை ஒழிக்க வேண்டும் - என்கிற கோரிக்கை வளர்ந்த பணக்கார நாடுகளிலேயே உருவெடுத்துள்ளது ஒரு முக்கிய மாற்றம் ஆகும்.

உலகெங்கும் சமூக நீதி, சனநாயகம், சமத்துவம் என்கிற சரியான இலக்கை இந்த போராட்டம் முன்வைக்கிறது. இந்த குரலுக்கு வலு சேர்க்க ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.

புதன், அக்டோபர் 19, 2011

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

உலகின் முதல் சத்தியாகிரகத் தியாகியின் பிறந்த ஊர் எது?
சாமி நாகப்பன் படையாட்சி
இது ஒரு விடைதெரியாத கேள்வி. இதற்கு விடை தேடும்போது, பதிலைவிட கேள்விகளே அதிகம் தென்படுகின்றன.

மகாத்மா காந்தியின் சத்தியாகிரக போராட்டத்தில் பலியான உலகின் முதல் சத்தியாகிரகத் தியாகியை எல்லோரும் மறந்துவிட்டனர். "மறைக்கப்பட்ட இந்த தியாகத்தினை" விரிவாக மூன்று கட்டுரைகளில் எழுதியுள்ளேன் (இங்கே காண்க):

1. மறக்கப்பட்ட மாபெரும் தியாகம்: சாமி நாகப்பன் படையாட்சி!
2. தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகமும் தமிழர்களின் தியாகமும்
3. தமிழ் வீரத்தை புகழும் மகாத்மா காந்தி: சாமி நாகப்பன் படையாட்சி

உலகின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் தமிழர்களின் போராட்டமாகவே நடந்தது. காவிரி வடிநிலப்பகுதியை சேர்ந்த, மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதி தமிழர்கள்தான் தென்னாப்பிரிக்காவில் அதிகம் இருந்தனர். அவர்களே போராட்டத்திலும் பங்கெடுத்தனர். சாமி நாகப்பன் படையாட்சி, நாராயணசாமி, வள்ளியம்மா முனுசாமி முதலியார் ஆகிய மூன்று பேருமே மயிலாடுதுறை பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
ஜொகனஸ்பர்க் அருங்காட்சியகத்தில் உள்ள சாமி நாகப்பன் படையாட்சி, வள்ளியம்மா முனுசாமி படங்கள்

வடக்குவாசல் இதழில் நல்லம்பள்ளி என்.ஆர்.ஜெயசந்திரன் என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார்.

"....தென்னாப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு இந்தியாவிற்கு வந்த காந்தியடிகள், சென்னைக்கு வந்ததும் முதலில் பார்க்க விரும்பிய இடம் தியாகச்சுடரின் தில்லையாடி கிராமத்தைத்தான்! தில்லையாடி கிராமத்தில் சந்தித்த மக்களைப் பார்த்துக் கலங்கிய காந்தியடிகள் "இவர்கள் எல்லோரும் யார்! இவ்வளவு அவலமாக கந்தல் துணி அணிந்து ஓட்டைக் குடிசைகளில் வாழ்கிறார்களே!'' என்று வருத்தத்துடன் வினவினார்.


"இவர்கள் எல்லோரும் தென்னாப்பிரிக்கப் போராட்டத்தில் உங்களுடன் பங்கேற்றவர்களான வள்ளியம்மை, நாராயணசாமி, நாகப்பன் ஆகியவர்களின் உறவினர்கள்'' என்று கூறினர்.


நாகப்பனின் மனைவியைச் சந்தித்தார். நாகப்பனின் மறைவிற்கு வருத்தம் தெரிவித்தார். "உங்களால் தான் என் கணவர் மரணமடைந்தார்'' என்று நாகப்பனின் மனைவி அழுது புலம்பினார்.  காந்தியடிகள் கலங்கிய மனதுடன் "சகோதரியே, நீயும், உன் குழந்தைகளும் என்னுடன் வந்து சபர்மதி ஆசிரமத்திலேயே தங்கிவிடுங்களேன்'' என்று அவர்களை அழைத்தார்.


ஆனால் அந்த அம்மையார் உடன்படவில்லை. பின்னர் அந்த கிராம மக்கள் அவரை சமாதானப் படுத்தி நாகப்பனின் இரு குழந்தைகளில் ஒருவரை காந்தியடிகளுடன் அனுப்பி வைத்தனர்.  காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்படுவதற்குச்சில ஆண்டுகளுக்கு முன்பு அவன் சபர்மதி ஆசிரமத்தில் மரணமடைந்தான்....." என்று வடக்கு வாசல் இதழில் நல்லம்பள்ளி என்.ஆர்.ஜெயசந்திரன் எழுதியுள்ளார்.

சாமி நாகப்பன் படையாட்சி, நாராயணசாமி, வள்ளியம்மா முனுசாமி முதலியார் மட்டுமல்லாமல், "1913 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் நாள், மவுண்ட் எட்ச்காமே எனும் இடத்தில் 'சத்தியாகிரகம் முடியும் வரை தோட்ட வேலைக்கு வரமாட்டோம்' என்று கூறிய ஆறு தமிழர்கள் - பச்சையப்பன், ராகவன், செல்வன், குருவாடு, சுப்புராய கவுண்டர் மற்றும் பெயர்தெரியாத மற்றொருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேற்குறிப்பிட்டவர்களில் செல்வத்தின் மனைவி தமிழ் நாட்டிற்கு திரும்பினார், செல்வத்தின் மகன் அந்தோணிமுத்து காந்தியின் அகமதாபாத் ஆசிரமத்தில் சேர்ந்தார்" என்று எனுகா எசு. ரெட்டி என்பவர் குறிப்பிடுகிறார்.

காந்தி சந்தித்தது யாருடைய விதவை மனைவி? காந்தி யாருடைய வீடுகளுக்கெல்லாம் சென்றார்?

காந்தி தென் ஆப்பிரிக்காவை விட்டு 1914 ஆம் ஆண்டு சூலை 18 ஆம் நாள் லண்டன் வழியாக இந்தியாவுக்கு கிளம்பினார். 1915 ஆம் ஆண்டு சனவரி 9 ஆம் நாள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். 1915 ஏப்ரல் 30, மே 1 ஆகிய நாட்களில் மயிலாடுதுறை பகுதிக்கு வந்தார்.

அப்போது செம்மனார்கோவில், தரங்கம்பாடி, ராமாபுரம், தில்லையாடி, மயிலாடுதுறை ஆகிய இடங்களுக்கு போனதாக காந்தி குறிப்பிடுகிறார்.

மயிலாடுதுறை கூட்டத்தில் பேசும்போது "தென் ஆப்பிரிக்காவில் உயிர்த்தியாகம் செய்த இரண்டு பேருடைய விதவை மனைவிகளைக் காண்பதற்காக இங்கு வந்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இச்செய்தி 3.5.1915 அன்று தி இந்து பத்திரிகையில் வெளியானது.

13.5.1915 அன்று காந்தியின் நண்பர் கல்லன்பெக்கிற்கு எழுதிய கடிதத்தில் - "இரண்டு விதவைகளையும் சந்தித்துவிட்டேன். ஒருவரது மகனை என்னுடன் அழைத்துச் செல்கிறேன்" என்று கூறியுள்ளர்.

4.5.1915 அன்று ஏ.எச். வெஸ்ட் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் - "நான் செல்வனின் விதவை மனைவியைப் பார்த்தேன், அவரை என்னுடன் வருமாறு கேட்டதற்கு மறுத்துவிட்டார். அவருக்கு மாதம் 5 ரூபாய் அனுப்புவேன். அவருடைய இளைய மகனை என்னுடன் அழைத்து வந்துள்ளேன்." என்று கூறியிள்ளார். அந்த இளைய மகனை "நாய்க்கர்" என்று அவர் அழைக்கிறார்.

6.5.1915 அன்று எழுதப்பட்ட ஒரு கடிதத்தில் "நான் என்னுடன் செல்வனின் மகனை அழைத்து வருகிறேன். உனக்கு அவனைத் தெரியும். போனிக்சு பண்ணையில் துறுதுறுப்பாக இருந்தானே, அவன் தான் அது" என்று குறிப்பிடுகிறார்.

நாய்க்கரின் தந்தை தியாகியா?

எனுகா எசு. ரெட்டி "செல்வன் மகன் அந்தோணிமுத்துவை" காந்தி தன்னுடன் அழைத்து சென்றதாகக் குறிப்பிடுகிறார். காந்தி "செல்வன் மகன் நாய்க்கரை" அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார். ஒருவேளை - அது "அந்தோணிமுத்து நாய்க்கர்" என்று கூட இருக்கலாம்.

"தென் ஆப்பிரிக்காவில் ஃபோனிக்சு தோட்டத்தில் இருந்த துடுக்கான பையன் நாய்க்கர்" என்கிறார் காந்தி. ஆனால், "செல்வன் என்கிற ஒருவர் உயிர்த்தியாகம் செய்ததாக" எந்த இடத்திலும் காந்தி குறிப்பிட்டுள்ளதாகத் தெரியவில்லை.

செல்வன் நவம்பர் 1913 இல் சுட்டுக்கொல்லப்பட்டதாக எனுகா எசு. ரெட்டி குறிப்பிடுகிறார். காந்தி 1913 ஆம் ஆண்டு டிசம்பர் 18 அன்று சிறையிலிருந்து வெளிவந்தார் - 1914 சூலை 18 அன்று தென் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிவிட்டார். இடைப்பட்ட ஏழு மாத காலத்தில் நாய்க்கர் ஃபோனிக்சு பண்ணையில் வளர்ந்தாரா? அல்லது "செல்வன்" என காந்தி குறிப்பிடுவது வேறு நபரா?

நல்லம்பள்ளி என்.ஆர்.ஜெயசந்திரன் வடக்குவாசல் இதழில் கூறுவது போல காந்தி நாகப்பன் மனைவியை சந்தித்தாரா? ஆம் எனில், 18 வயதில் தென் ஆப்பிரிக்காவில் உயிர்நீத்த நாகப்பனுக்கு தமிழ்நாட்டில் இரண்டு குழந்தைகள் இருந்திருக்க முடியுமா? அல்லது, காந்தி சந்தித்த இரண்டு தியாகிகளின் விதவை மனைவியரில் வேறு ஒருவர் நாகப்பன் மனவியா?

நாகப்பன் ஊருக்கு காந்தி சென்றாரா? நாகப்பன் உறவினர் யாரையாவது பார்த்தாரா?

எனது பதிவை படித்துவிட்டு திரு. மு. இளங்கோவன் அவர்கள் "விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள் (தன்வரலாறு) நான் பதிப்பித்துள்ளேன். துரையனார் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர். தாங்கள் குறிப்பிடும் போராட்டத்தில் 16 வயது இளைஞராகக் கலந்துகொண்டு காந்தியுடன் சிறையில் இருந்தவர்.


விடுதலைப்போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள் நூலில் - நாகப்பன் மாயவரம் தாலுக்காவைச் சார்ந்தவர். நாகப்பன் காந்தியடிகளுக்கு உண்மையான நண்பரும் தியாகியுமாவர் என்று குறிப்பு உள்ளது. 1913 இல் காந்தியடிகள் இந்தியா வந்தபொழுது நாகப்பனின் உறவினரைக் கண்டு ஆறுதல் கூறியுள்ளதாகத் தகவல் உள்ளது. துரையனார் அடிகள் நாகப்பனை அறிவேன் என்று எழுதியுள்ளார். துரையனாரை விட சற்று வயது அதிகம் என்கின்றார். துரையனார் அடிகள் கும்பகோணத்தில் வாழ்ந்தவர்" - என்று திரு. மு. இளங்கோவன் அவர்கள் கூறினார். (காந்தி வந்ததாகக் குறிப்பிடும் ஆண்டு 1915 ஆக இருக்கலாம்)

இனி என்ன?

1915 ஏப்ரல் 30, மே 1 ஆகிய நாட்களில் மயிலாடுதுறை பகுதிக்கு வந்தபோது செம்மனார்கோவில், தரங்கம்பாடி, ராமாபுரம், தில்லையாடி, மயிலாடுதுறை ஆகிய இடங்களுக்கு போனதாக காந்தி குறிப்பிடுகிறார். நாகப்பன் ஊருக்கு காந்தி சென்றாரா? நாகப்பன் உறவினர் யாரையாவது பார்த்தாரா?


ஒரு மாபெரும் தியாகியின் பூர்வீகத்தை கண்டுபிடிக்க முடியும் என்று நம்புகிறேன்
(நான் எனது முதல் வெளிநாட்டு பயணமாக சென்ற ஊர் ஜொகனஸ்பர்க், அதே ஊரில்தான் சாமி நாகப்பன் படையாட்சி தியாகியானார். நான் அங்கு சென்ற நாட்களில் - 2002 - அதுகுறித்து அறிந்திருக்கவில்லை)



தவறாமல் இதையும் இதையும் கொஞ்சம் படித்துப்பாருங்கள்:
மறக்கப்பட்ட மாபெரும் தியாகம்: சாமி நாகப்பன் படையாட்சி!

ஆதாரம்:


1. GANDHIJI'S VISION OF A FREE SOUTH AFRICA, by E. S. REDDY, 1995
by Sanchar Publishing House, New Delhi
2. THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI Volume 14
3. THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI Volume 15
4. தியாக தீபம் தில்லையாடி வள்ளியம்மை, நல்லம்பள்ளி என்.ஆர்.ஜெயசந்திரன்

புதன், அக்டோபர் 12, 2011

மறக்கப்பட்ட மாபெரும் தியாகம்: சாமி நாகப்பன் படையாட்சி!

எந்த ஒரு போராட்டத்திலும் முதலாவதாக உயிரிழப்பவர் மாபெரும் தியாகியாக போற்றப்படுவார். அவருக்கு சிலை, நினைவிடம், அருங்காட்சியகம், அவர் பெயரில் விருதுகள் என அவரது நினைவு என்றென்றும் போற்றப்படும். உலக வரலாற்றின் மிகப்பெரிய சனநாயகப் போராட்டமாக கருதப்படுவது மகாத்மா காந்தியின் சத்தியாகிரக போராட்டம் ஆகும். இப்போராட்டத்தில் முதன்முதலில் பலியான உலகின் முதல் சத்தியாகிரகத் தியாகியை எல்லோரும் மறந்துவிட்டனர். 

'இறந்தாலும் என்றென்றும் ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் வாழ்வார்' என மகாத்மா காந்தியால் புகழப்பட்ட அந்த தியாகி இந்திய வரலாற்றில் இடம் பெறவில்லை. ஒரு மாபெரும் தியாகி மறக்கப்பட்டது ஏன்? அவர் ஒரு தமிழர் என்பதாலா? வஞ்சிக்கப்பட்ட சாதியில் பிறந்தவர் என்பதாலா? ஏழை என்பதாலா? படிக்காதவர் என்பதாலா?

அந்த மாபெரும் தியாகம் குறித்த முதல் கட்டுரை இதுவாகும்: இதர இரண்டு கட்டுரைகளை இந்த இணைப்புகளில் காணலாம்:

2. தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகமும் தமிழர்களின் தியாகமும்
3. தமிழ் வீரத்தை புகழும் மகாத்மா காந்தி: சாமி நாகப்பன் படையாட்சி

கட்டுரை 1. மறக்கப்பட்ட மாபெரும் தியாகம்: சாமி நாகப்பன் படையாட்சி!


மகாத்மா காந்தி வடிவமைத்த மாபெரும் போராட்ட முறை சத்தியாகிரகம் எனப்படுவதாகும். இந்திய விடுதலைப்போராட்டம், நெல்சம் மண்டேலாவின் தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டம், மார்ட்டின் லூதர் கிங்கின் அமெரிக்க கருப்பின உரிமைப் போராட்டம் என உலகின் மிகப்பெரிய போராட்டங்களின் அடிப்படை வடிவம் சத்தியாகிரகம்தான்.சிறீ நாராயண குரு, தந்தை பெரியார் பங்கெடுத்த வைக்கம் சத்தியாகிரகத்தின் முன்னோடியும் அதுதான். அப்படிப்பட்ட தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போருக்காக உயிர்த்தியாகம் செய்த உலகின் முதல் தியாகி "சாமி நாகப்பன் படையாட்சி".
ஜொகனஸ்பர்க் அருங்காட்சியகத்தில் உள்ள சாமி நாகப்பன் படையாட்சி, வள்ளியம்மா முனுசாமி படங்கள்
உலகின் முதல் சத்தியாகிரக உயிர்த் தியாகம் எனும் அந்த மாபெரும் நிகழ்வு வரலாற்றின் பக்கங்களில் மறைக்கப்பட்டுவிட்டது.

அறப்போர் அல்லது சத்தியாக்கிரகம் என்பது பொதுவாக உரிமைகளை வென்றெடுப்பதற்காக வன்முறை இன்றி அறவழியில் போராடுவதைக் குறிக்கும். எதிராளிக்குத் தீங்கு விளைவிக்காமல் அவர் மனதை மாற்றி உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முயல்வதே இதன் அடிப்படையாகும்.


மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் தொடங்கி ஈழத்தில் தியாகி திலீபன், இப்போது இந்தியாவில் அன்னா அசாரே, கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு என எல்லாமும் "அறப்போர்" என்கிற முறையில் நடத்தப்படுகிறது. ஆனால், சத்தியாகிரக போரின் முதல் தியாகி சாமி நாகப்பன் படையாட்சியை எவரும் நினைவில் கொள்ளவில்லை. அவர் உயிர்த்தியாகம் செய்து 102 ஆண்டுகள் கடந்துவிட்டன.

தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி

குசராத் மாநிலத்தில் பிறந்து லண்டனில் சட்டம் பயின்ற காந்தி, இந்தியாவில் உரிய வேலை அமையாத காரணத்தினால் 1893 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் நேட்டாலில் பணிக்கு சேர்ந்தார்.அப்போது தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள்தான், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்கியது. 
தென் ஆப்பிரிக்காவில் காந்தி
அங்குள்ள டர்பன் நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஒருநாள் இந்திய வழக்கப்படி தலைப்பாகை அணிந்து வழக்காடச்சென்ற காந்தியிடம் அத்தலைப்பாகையை விலக்குமாறு நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார். பிறகொரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக தகுந்த பயணச்சீட்டுடன் தொடருந்தில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்த காந்தி, அவர் ஒரு வெள்ளையர் இல்லை என்ற காரணத்திற்காக, ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் தொடருந்து நிலையத்தில் பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.

தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை நேட்டால் சட்டப்பேரவை இயற்ற இருப்பதாக செய்தித்தாளில் படித்தறிந்தார். தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு இத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அவரது முயற்சி வெற்றிபெறவில்லை.

மகாத்மா காந்தியின் முதல் சத்தியாகிரகப் போராட்டம்.

1906 ஆம் ஆண்டு டிரான்சுவால் காலனி அரசாங்கம் அங்கு வாழ்ந்த இந்தியர்கள் தமது பெயரை அரசாங்கத்திடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றுகூறும் ஏசியாடிக் பதிவு சட்டத்தை கொண்டுவந்தது. இந்தியர்கள் தமது பெயரையும் கைரேகையையும் பதிவு செய்து கொண்ட ஆவணத்தை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். வேலை, தங்குமிடம் என எல்லா இடத்திலும் இந்தியர்கள் தனியாக பிரித்து வைக்கப்படுவார்கள். புதிதாக இந்தியர்கள் எவரும் டிரான்சுவால் மாகாணத்திற்குள் குடியேறக்கூடாது, மூன்று பவுண்ட் வரி செலுத்த வேண்டும், இந்தியர்களின் திருமணங்கள் சட்டபடி செல்லாது என்று பல விதிமுறைகளை முன்வைத்தது அச்சட்டம்.

இந்திய வம்சாவழியினருக்கு எதிரான இச்சட்டம் இந்தியர்களை துன்புருத்துவதாகவும் கண்ணியத்தை குலைப்பதாகவும் இருப்பதாகக் கூறிய காந்தி, விளைவுகள் எதுவானாலும் அதைப்பற்றி கவலைகொள்ளாமல் இந்தியர்கள் இச்சட்டத்தை எதிர்க்க அழைப்புவிடுத்தார்.

1906ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள் ஜொகனஸ்பர்க் நகரில் சுமார் மூன்றாயிரம் இந்தியர்கள் கூடிய பொதுக்கூட்டத்தில் தனது அறவழிப்போராட்டத்தை அறிமுகப்படுத்தினார். அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல், ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். அதாவது, இச்சட்டம் செயலுக்கு வந்தால் இந்தியர்கள் தமது பெயரை பதிவு செய்துகொள்ளக்கூடாது. சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும் என்று காந்தி வலியுறுத்தினார்.

மகாத்மா காந்தியின் வடிவமைப்பில் உருவான உலகின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் இதுதான். 1907 ஆம் ஆண்டு சூலை மாதம் டிரான்சுவால் காலனி அரசாங்கம் ஏசியாட்டிக் பதிவு சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. தனது பெயரை பதிவு செய்யாத இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். 1906 ஆம் ஆண்டு தொடங்கி 1914 ஆம் ஆண்டுவரை எட்டு ஆண்டுகள் இப்போராட்டம் நீடித்து கடைசியில் வெற்றி பெற்றது. அந்தவகையில் காந்தி வெற்றி பெற்ற முதல் போராட்டமும் இதுதான்.

காந்தி முதல் முறையாக சிறை சென்றதும் இந்த போராட்டத்திற்காகத்தான். மகாத்மா காந்தி "சத்தியாகிரகம்" என்கிற போராட்டமுறையை வடிவமைத்ததும் இப்போராட்டத்தில்தான். இந்த முதல் சத்தியாகிரக போராட்டமே இந்திய விடுதலைப் போருக்கு வழிகாட்டியாக அமைந்தது. மேலும், நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் உள்ளிட்ட பலரது அறப்போராட்டங்களுக்கு முன்னோடியாக விளங்கியது ஜொகனஸ்பர்க் சத்தியாகிரகம் என கருதலாம்.

உலகின் முதல் சத்தியாகிரக தியாகி.

ஜொகனஸ்பர்க் சத்தியாகிரக காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். "இந்தியர்கள் சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும்" என்ற காந்தியின் கட்டளைக்கு ஏற்ப "பெயரை பதிவு செய்ய மறுத்து சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால்" 1909 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 ஆம் நாள் கைது செய்யப்பட்டார் தமிழரான சாமி நாகப்பன் படையாட்சி. அவருக்கு மூன்று பவுண்ட் தண்டம் அல்லது 10 நாள் கடின உழைப்புடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. (மூன்று பவுண்ட் என்பது தற்போதைய மதிப்பில் சுமார் 230 ரூபாய்). எனினும்,  தண்டத் தொகையைக் கட்டாமல் சிறைத் தண்டனையை ஏற்பதே சத்தியாகிரகப் போராட்டம் என்பதால் சிறைக்குச் சென்றார்.

முதல் நாள் இரவு ஜொகனஸ்பர்க ஃபோர்ட் சிறையில் அடைக்கப்பட்டார் சாமி நாகப்பன் படையாட்சி. (இதே சிறையில்தான் காந்தியும், பின்னாளில் நெல்சன் மண்டேலாவும் அடைக்கப்பட்டனர். 'கான்சிடியூசன் மலை' என்று அழைக்கப்படும் அந்த இடம் இப்போது ஜொகனெஸ்பர்க் நீதிமன்றமாகவும், அருங்காட்சியகமாகவும் இருக்கிறது). அடுத்த நாள் 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுக்ஸ்கெய் சாலை சிறை முகாம் எனும் இடதிற்கு நடத்தியே அழைத்துச் செல்லபட்டார். அங்கு அவர் சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டார். கடும்குளிரில் திறந்தவேளி கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டார். சரியான உணவும் இல்லை. உடல் நலம் பாதிப்படைந்த நிலையிலும் சாலை அமைத்தல், அதற்காக கல் உடைத்தல் போன்ற கடுமையான வேலைகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டன. உடல்நலப் பாதிப்பிற்கு சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை.
ஜொகனஸ்பர்க ஃபோர்ட் சிறை
ஏறக்குறைய கொலை செய்யப்பட்டவராக சூன் 30 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் இரட்டை நிமோனியாவால் இதயம் செயலிழது மரணத்தை தழுவினார்.

1909 ஆம் ஆண்டு சூலை 7 ஆம் நாள் ஜொகனஸ்பர்க் இந்தியர்கள் அவர் உடலை ஒரு பொது நிகழ்ச்சியாக பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்தனர்.

அந்த சமயத்தில் டிரான்சுவால் இந்தியர்களின் போராட்டம் குறித்து பிரச்சாரம் செய்வதற்காகான பிரதிநிதியாக லண்டன் சென்றிருந்தார் காந்தி. சாமி நாகப்பன் படையாட்சி கைது செய்யப்பட்ட சூன் 21 ஆம் நாள் அன்றுதான் காந்தி ஜொகனஸ்பர்க் நகரிலிருந்து லண்டனுக்கு கிளம்பினார். அவர் சூலை 10 அன்று லண்டன் சென்று சேர்வதற்குள் சாமி நாகப்பன் படையாட்சி வீரமரணம் அடைந்துவிட்டார். காந்தியிடம் சூலை 12 ஆம் நாள் தந்தி மூலமாக அவரது தியாக மரணம் தெரிவிக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்க இந்தியர்களும் ஜொகனஸ்பர்க் நகரின் வெள்ளையின கிறித்தவ தலைவர்களும் சாமி நாகப்பன் படையாட்சி சிறைவாசத்தால் கொல்லப்பட்டது குறித்து பொதுவிசாரணை நடத்தக் கோரினர்.

1909 ஆம் ஆண்டு சூலை 19 அன்று மாஜிஸ்ட்ரேட் மேஜர் டிக்சன் என்பவரது தலைமையில் "சாமி நாகப்பன் படையாட்சி சிறைவாசத்தால் கொல்லப்பட்டது" குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் அளிக்கப்பட்ட விசாரணை அறிக்கை சிறை அதிகாரிகள் குற்றமற்றவர்கள் என்றது. இதற்கு இந்திய வம்சாவழியினர் திரண்ட ஜொகனஸ்பர்க் பொதுக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அரசாங்கத்திற்கு காந்தி எழுதிய கடிதத்தில் விசாரணை அறிக்கையில் உள்ள விசயங்களே நாகப்பன் சிறைவாசத்தால் கொல்லப்பட்டதை உறுதி செய்வதாக தெரிவித்தார்.

சாமி நாகப்பன் படையாட்சி சத்யாகிரகியாக சிறை சென்று உயிர்தியாகம் செய்யும் போது அவரது வயது பதினெட்டு. அந்த இளம் வயதில் சம உரிமைக்காக தனது உயிரை தந்தார் அவர்.

1914 ஆம் ஆண்டு சூலை 18 ஆம் நாள், தனது 21 ஆண்டுகால தென் ஆப்பிரிக்க வாழ்வை முடித்துக்கொண்டு, காந்தி லண்டன் வழியாக இந்தியாவுக்கு கிளம்பினார். அதற்கு மூன்று நாள் முன்னதாக, சாமி நாகப்பன் படையாட்சி இறந்து ஐந்தாண்டுகளுக்கு பின்னர், சூலை 15 அன்று தென் ஆப்பிரிக்காவின் ஜொகனஸ்பர் நகரில் உள்ள பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடத்தை திறந்துவைத்தார் மகாத்மா காந்தி. (அதனுடன் வள்ளியம்மா முனுசாமி முதலியார் நினைவிடத்தையும் அன்று திறந்தார் காந்தி, அதுதான் மகாத்மா காந்தியின் கடைசி தென் ஆப்பிரிக்க நிகழ்ச்சி). 
ஜொகனஸ்பர்க் நகரின் பிராம்ஃபோன்டெய்ன் கல்லரைத்தோட்டம்
தென்னாப்பிரிக்க இனவெறி ஆட்சி காலத்தில் சாமி நாகப்பன் படையாட்சி நினைவிடம் சிதைக்கப்பட்டது, தென் ஆப்பிரிக்காவில் 1994 இல் நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் 20.4.1997 அன்று மீண்டும் சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடம் மறுசீரமைக்கப்பட்டது. அதனை விடுதலைப் போராட்ட வீரரும் நெல்சன் மண்டேலாவின் நண்பருமான வால்டர் சிசுலு மற்றும் இந்திய தூதரும் காந்தியின் பேரனுமான கோபாலகிருட்டின காந்தியும் திறந்து வைத்தனர்.


காந்தியின் நிறைவேறாத கனவுகள்!

தனது சத்தியாகிரகப் போராட்டத்தில் உயிர்நீத்த முதல் தியாகி சாமி நாகப்பன் படையாட்சியின் வீரமரணம் காந்தியின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்பதை அவரது பேச்சுகளில் இருந்தும் எழுத்துகளில் இருந்தும் அறியமுடியும். தென் ஆப்பிரிக்காவில் காந்தியின் எழுத்தும் பேச்சும் இந்தியன் ஒப்பீனியனில் தொடர்ந்து வெளியானது.
இந்தியன் ஒப்பீனியன்
தனது மகன் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று முதன்முதலாக சிறை சென்ற போது -  நாகப்பன் தியாகத்தோடு ஒப்பிட்டால், தனது மகனின் சிறைவாசம் பெரிதல்ல என்று 14.12.1909 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார் காந்தி.

தனது சகோதரர் இறந்த போது -   நாகப்பன் உயிரிழப்பு தனக்கு ஏற்படுத்திய மன வலியுடன் ஒப்பிட்டால் தனது சகோதரன் இறப்பால் ஏற்படும் வலி பெரிதல்ல என்று 18.3.1914 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார் காந்தி.

சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகத்தை போற்ற வேண்டும் என காந்தி விரும்பினார். முதலாவதாக, 6.10.1909 அன்று போலக் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் சாமி நாகப்பன் நிழற்படம் கிடைத்ததைக் குறிப்பிட்டு, உடனடியாக அதனை சென்னையிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்று காந்தி தெரிவித்தார். இதன் மூலம் தமிழ்மக்களிடம் நாகப்பன் தியாகத்தை கொண்டுசெல்ல வேண்டும் என அவர் நினைத்தார். அந்த விருப்பம் நிறைவேறவில்லை.
சாமி நாகப்பன் படையாட்சி
அடுத்ததாக, நாகப்பன் தியாகத்தை போற்றும் வகையில் ஜொகனஸ்பர்க் நகரில் ஒரு கல்வி உதவித்தொகை நினைவு நிதியை உருவாக்க விரும்பினார். அதற்காக திருமதி.வோகல் என்பவர் நிதிதிரட்ட முன்வந்த போது காந்தி அதனை வரவேற்று ஆதரித்து 9.12.1911 மற்றும் 14.6.1912 தேதிகளில்  இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகையில் எழுதினார். அதுமட்டுமல்லாமல் சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களிலும்  நாகப்பன் நினைவு நிதியை உருவாக்க வேண்டும் என்றார் காந்தி. அதுவும் நடக்கவில்லை.

காந்தி இந்தியா திரும்பிய பின்னர் - இந்திய சுதந்திரப் போராட்டம் எப்படி அமையவேண்டும் என்பதற்கு - போராட வருவோர் நாகப்பனை முன்னுதாரணமாக கொண்டு அவர் காட்டிய பதையில் பயணிக்க வேண்டும் என்றார் காந்தி.

சென்னை, மதுரை, தூத்துக்குடி, நாகப்பட்டிணம் என தமிழ்நாட்டில் தான் பங்கேற்ற கூட்டங்களில் எல்லாம்  நாகப்பன் தியாகத்தை புகழ்ந்து பேசினார் காந்தி.

(சாமி நாகப்பன் படையாட்சியை புகழ்ந்து காந்தி பேசியுள்ள குறிப்புகளை விரிவாக இங்கே காண்க: தமிழ் வீரத்தை புகழும் மகாத்மா காந்தி: சாமி நாகப்பன் படையாட்சி)

இத்தனைக்கு பிறகும் விடுதலை அடைந்த இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில், சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகம் வெளியே தெரியாமல் மறைந்து போனது எப்படி?

மறக்கப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சியும் போற்றப்பட்ட வள்ளியம்மா முனுசாமி முதலியாரும்.

சாமி நாகப்பன் படையாட்சியைப் போன்று தென்னாப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டத்தில் முதன்மை இடத்தை பிடிக்கும் மற்றொரு போராளி, மற்றொரு தமிழர் வள்ளியம்மா முனுசாமி முதலியார். தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று 1913 டிசம்பர் 22 அன்று தனது தாயாருடன் கைது செய்யப்பட்டார். மூன்று மாத சிறைத்தணடனைப் பெற்று காந்தியின் துணைவியார் கசுதூரிபா காந்தியுடன் சிறையில் இருந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டதால் விடுதலை செய்யப்பட்ட போதும் வெளிவர மறுத்தார். எனினும் சத்தியாகிரக போராட்டம் வெற்றி பெற்றதால் 1914 சனவரி 11 அன்று விடுதலை ஆனார். சிறையில் ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பால் 1914 பிப்ரவர் 22 அன்று மரணமடைந்தார். அப்போது வள்ளியம்மா முனுசாமி முதலியாரின் வயது 16. தமிழ்நாட்டில் அவர் 'தில்லையாடி வள்ளியம்மை' என்று அறியப்படுகிறார்.
வள்ளியம்மா முனுசாமி முதலியார்
(நாடுகடத்தப்பட்டதால் கப்பலில் அலைகழிக்கப்பட்டு அதனால் இறந்த நாராயணசாமி, முதுமையின் காரணமாக 75 வயதில் சிறையில் இறந்த அர்பத் சிங் ஆகியோரின் மரணம் தென் ஆப்பிரிக்க அரசின் ஆவணங்களில் இடம்பெறவில்லை. காந்தியின் போராட்ட அழைப்பை ஏற்று தியாகம் செய்தவர்கள் பெருபாலும் தமிழர்கள்தான். இதுகுறித்து விரிவாகக் காண்க: தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகமும் தமிழர்களின் தியாகமும்).

இருவருக்கும் ஒரு சில வேறுபாடுகள் மட்டுமே உண்டு. சாமி நாகப்பன் படையாட்சி போராட்ட காலத்தில் 1909 ஆம் ஆண்டு, சிறையில் அனுபவித்த கொடுமைகளின் காரணமாக இறந்தார். இவருக்காக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. போராட்டங்கள் நடத்தப்பட்டன. இவர் இறக்கும்போது காந்தி லண்டனில் இருந்தார்.

வள்ளியம்மா முனுசாமி முதலியார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறையிலிருந்து வெளிவர மறுத்தார். போராட்டம் முடிந்ததால் விடுதலை ஆனார். அவர் இறக்கும் முன்பு காந்தி அவரை நேரில் வந்து பார்த்து பேசினார். 1914 ஆம் ஆண்டு வீரமரணம் அடையும் போது தென் ஆப்பிரிக்க சத்தியாகிரக போராட்டம் முடிந்துவிட்டது.

இரண்டு பேருமே பதின் வயதினர். இரண்டுபேருமே சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள். இரண்டு பேரின் இறுதி சடங்குகளும் பிராம்ஃபோன்டெய்ன் கல்லரைத் தோட்டத்தில் நடந்தது. இரண்டு பேரின் நினைவு பலகைகளையும் அதே பிராம்ஃபோன்டெய்ன் கல்லரைத் தோட்டத்தில் 1915 ஆம் ஆண்டு காந்தி திறந்து வைத்தார். இரண்டு பேரின் நினைவிடங்களும் 1997 இல் மறுசீரமைக்கப்பட்டு வால்டர் சிசுலு அவர்களால் மீண்டும் திறக்கப்பட்டன.

தென் ஆப்பிரிக்க கான்சிடியூசன் மலை அருங்காட்சியகத்தின் தியாகிகள் பட்டியலில் சாமி நாகப்பன் படையாட்சியின் பெயருக்கு அடுத்த பெயராக வள்ளியம்மா முனுசாமி முதலியாரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. சாமி நாகப்பன் படையாட்சியின் படத்திற்கு அடுத்த படமாக வள்ளியம்மா முனுசாமி முதலியாரின் படம் இடம் பெற்றுள்ளது.
ஜொகனஸ்பர்க் அருங்காட்சியகத்தில் உள்ள சாமி நாகப்பன் படையாட்சி, வள்ளியம்மா முனுசாமி படங்கள்
ஆனால், தமிழ்நாட்டின் வரலாற்று பக்கங்களில் சாமி நாகப்பன் படையாட்சி மறக்கப்பட்டுவிட்டார். வள்ளியம்மா முனுசாமி முதலியார் போற்றப்பட்டுகிறார். தியாகிகளைப் போற்றுவதில் ஏன் இந்த பாகுபாடு?

புதுச்சேரி மாநிலம் டூப்ளே தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி முதலியார். அவரது மனைவி ஜானகி மயிலாடுதுறை அருகில் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள தில்லையாடி கிராமத்தை சேர்ந்தவர். தென் ஆப்பிரிக்காவில் குடியேறிய இவர்களுக்கு பிறந்தவர்தான் வள்ளியம்மா. அவர் தமிழ்நாட்டை பார்த்தது இல்லை. தென் ஆப்பிரிக்காவில் அவர் வள்ளியம்மா முனுசாமி முதலியார் என்றுதான் அழைக்கப்பட்டார்.

தந்தையின் ஊர் புதுச்சேரி மாநிலத்தில் இருப்பதால் அம்மாவின் ஊரான தில்லையாடியை எடுத்துக்கொண்டது தமிழ்நாடு அரசு. வள்ளியம்மா முனுசாமி முதலியார் என்கிற பெயரையும் தில்லையாடி வள்ளியம்மை என்று மாற்றிவிட்டனர்.
தில்லையாடி வள்ளியம்மை சிலை, தில்லையாடி 
தில்லையாடி கிராமத்தில் காந்தியடிகள் நூற்றாண்டு விழாவை ஒட்டி அமைக்கப்பட்ட வள்ளியம்மை நகர், வள்ளியம்மை மண்டபம், வள்ளியம்மை உயர்நிலைப்பள்ளி ஆகிய நினைவு கட்டிடங்களை 13.8.1971 அன்று அப்போதைய கல்வி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் இரா.நெடுஞ்செழியன் திறந்து வைத்தார். தில்லையாடி வள்ளியம்மை சிலை அமைக்கப்பட்டது.

1982 இல் சென்னையில் கோ-ஆப் டெக்சின் கட்டடத்திற்கு தில்லையாடி வள்ளியம்மை மாளிகை என பெயரிடப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டியவர் எம்.ஜி.ராமச்சந்திரன். 2008 ஆம் ஆண்டு தில்லையாடி வள்ளியம்மை நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
 தில்லையாடி வள்ளியம்மை நினைவு அஞ்சல் தலை
தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தைப் போற்றும் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் போற்றுதலுக்கு உரியவை, வரவேற்கப்பட வேண்டியவை. அதே நேரத்தில் - சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகம் மறக்கப்பட்டது ஏன்? என்கிற கேள்வி தவிற்க இயலாத கேள்வியாகும்.

சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகம் - மறக்கப்பட்டதா? மறைக்கப்பட்டதா?

1970 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் "தென் ஆப்பிரிக்க அறப்போரில் தமிழர்களின் தியாகம்" என்கிற விளம்பரத்துடன் ஒரு தேர் ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது. (தென் ஆப்பிரிக்க தமிழர்களின் ஆவணத்தில் இது காந்தியின் பிறந்தநாளைக் கொண்டாடும் நோக்கில் அரசாங்கம் மக்கள் மத்தியில் உலவவிட்ட தேர் என குறிப்பிடப்பட்டுள்ளது.)
1970 ஆம் ஆண்டு தேர்ஊர்வலம், தமிழ்நாடு
"தென் ஆப்பிரிக்க அறப்போரில் தமிழர்களின் தியாகம்" என்கிற இந்த தேரில் "நாகப்பன், நாராயணசாமி. வள்ளியம்மை" என எழுதப்பட்டுள்ளது. கூடவே, மகாத்மா காந்திக்கு அருகில் நாகப்பன், நாராயணசாமி ஆகியோர் நிற்பது போலவும், சிறைக்கம்பிகளுக்கு பின்னால் வள்ளியம்மா நிற்பது போலவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இப்படி 1970 ஆம் ஆண்டு "நாகப்பன், நாராயணசாமி. வள்ளியம்மை" என மூன்று பேரையும் புகழ்ந்தது தமிழ்நாடு அரசு. ஆனால், 1971 ஆம் ஆண்டில் வள்ளியம்மா முனுசாமி முதலியாரை - தில்லையாடி வள்ளியம்மை என பெயர் மாற்றி அவருக்கு  நினைவு மண்டபம், சிலை,  நினைவு நூலகம் அமைத்துள்ளது. சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகம் எதற்காக மறக்கப்பட்டது?

1971 ஆம் ஆண்டில் தில்லையாடி வள்ளியம்மை நினைவிடங்கள் அனைத்தையும் அப்போதைய அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் திறந்து வைத்துள்ளார். ஆனால், வள்ளியம்மா முனுசாமி முதலியாருக்கு இணையாக சாமி நாகப்பன் படையாட்சிக்கு நினைவிடங்கள் அமைக்கப்படவில்லை?  அப்படியானால், முதலியார் சமூகத்தை சேர்ந்தவரான நாவலர் நெடுஞ்செழியன் முதலியார் சமூகத்தை சேர்ந்த வள்ளியம்மைக்கு மட்டுமே நினைவிடங்கள் அமைத்தார் - வன்னியரான மற்றொரு தியாகியின் தியாகத்தை மறைத்தார் என்று கருதலாமா?

(தியாகத்தில் கூடவா சாதி பார்க்கிறீர்கள் என்று யாராவது கேட்பதாக இருந்தால் - 1970 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு அறிந்திருந்த சாமி நாகப்பன் படையாட்சியை, 1971 ஆம் ஆண்டில் மறந்தது எதற்காக என்று கண்டுபிடிக்கவும்.)

1970 ஆம் ஆண்டில் "நாகப்பன், நாராயணசாமி. வள்ளியம்மை" என ஊர்வலம் நடத்திய போதும், 1971 ஆம் ஆண்டில் "வள்ளியம்மைக்கு மட்டும்" நினைவிடங்கள் அமைக்கப்பட்ட போதும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்தவர் கலைஞர்.

தென்னாப்பிரிக்க இனவெறி ஆட்சி காலத்தில் ஜொகனஸ்பர்கில் சிதைக்கப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி, வள்ளியம்மா முனுசாமி முதலியார் நினைவிடங்கள் 20.4.1997 அன்று மீண்டும் மறுசீரமைக்கப்பட்டன. அதனை விடுதலைப் போராட்ட வீரரும் நெல்சன் மண்டேலாவின் நண்பருமான வால்டர் சிசுலு திறந்து வைத்தார். அப்போதும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்தவர் கலைஞர்தான்.
சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடம்: 1999இல் வால்டர் சிசுல திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற வகையில் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார் கலைஞர். அந்த வாழ்த்துச் செய்தியில் வள்ளியம்மையின் வீரத்தை புகழ்ந்தும் தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் முன்னேற்றங்களை புகழ்ந்தும் எழுதியுள்ளார். குறிப்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஷீலா ராணி சுங்கத் எழுத்தறிவு இயக்கத்திற்காக "மிதிவண்டி புரட்சி" செய்து வருவதாக அந்த வாழ்த்துச் செய்தியில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிகிறது.

ஆனால், சாமி நாகப்பன் படையாட்சி குறித்து அவர் ஒன்றும் எழுதியதாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் 1997 இல் அந்த நிகழ்ச்சி "சாமி நாகப்பன் படையாட்சி, வள்ளியம்மா முனுசாமி முதலியார்" என இரண்டு பேருக்காகவும்தான் ஜொகனஸ்பர்கில் நடத்தப்பட்டது.

நினைவிடங்களில் மறைக்கப்பட்டு, வரலாற்று பாடநூல்களில் மறைக்கப்பட்டு, இப்போது எல்லா இடங்களிலும் சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகம் ஒரேயடியாக மறக்கப்பட்டுள்ளது. இப்போதும் தென் ஆப்பிரிக்காவின் விடுதலை வரலாற்றில சாமி நாகப்பன் படையாட்சியும் வள்ளியம்மா முனுசாமி முதலியாரும் இடம் பெற்றுள்ளார்கள். இந்திய விடுதலைக்கும் உலகின் அகிம்சை போராட்டத்திற்கும் வழிகாட்டியான இவர்களில் 'தில்லையாடி வள்ளியம்மை' தமிழ்நாட்டில் அறியப்படுகிறார். சாமி நாகப்பன் படையாட்சியை யாருக்கும் தெரியவில்லை!

மகாத்மா காந்தியால் புகழப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி இந்திய தேசிய போராட்ட தியாகிகளில் ஒருவராக போற்றப்படாமல் போனது எப்படி? உலகப்புகழ் பெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தின் முதல் உயிர்த்தியாகியை நாடு மதிக்கும் லட்சணம் இதுதானா? 

காந்தியை பின்பற்றிய வட இந்திய தியாகிகளுக்கெல்லாம் தமிழ்நாட்டின் பல இடங்களில் சிலைகளும் நினைவிடங்களும் இருக்கும் நிலையில் ஒரு தமிழனின் மாபெரும் தியாகம் மறக்கப்பட்டது எப்படி?

குறிப்புகள்:
1. மகாத்மா காந்தி 1915 ஆம் ஆண்டு ஏப்ரல் 30, மே 1 ஆகிய நாட்களில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி ஆகிய இடங்களில் இருந்துள்ளார். மயிலாடுதுறை கூட்டத்தில் பேசும்போது "தென் ஆப்பிரிக்காவில் உயிர்த்தியாகம் செய்த இரண்டு பேருடைய விதவை மனைவிகளைக் காண்பதற்காக இங்கு வந்தேன். ஒரு தியாகியின் மனைவியை பார்த்துவிட்டேன். இன்னொரு தியாகியின் மனைவியை நான் சென்னை மாகாணத்தைவிட்டு செல்வதற்கு முன்பு பார்த்துவிடுவேன் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இச்செய்தி 3.5.1915 அன்று தி இந்து பத்திரிகையில் வெளியானது. அவர் நாகப்பன், நாராயணசாமி ஆகியோரைக் குறிப்பிட்டிருக்கலாம்.

காந்தி அப்போது மயிலாடுதுறை பகுதியில் எங்கெல்லாம் சென்றார், யாரையெல்லாம் சந்தித்தார் என்பது தெரிந்தால் ஒருவேளை சாமி நாகப்பன் படையாட்சியின் தமிழக பூர்வீக ஊர் தெரியவரலாம். அவர் நாகப்பனின் விதவை மனைவியை சந்தித்தார் என்று சிலர் எழுதியுள்ளனர். எனினும் ஆதாரபூர்வமான தகவல் தெரியவில்லை.

2. காந்தியின் பேச்சுகளிலும் எழுத்துகளிலும் சில இடங்களில் சாமி நாகப்பன் படையாட்சி குறித்து தனியாகவும் சில இடங்களில் வள்ளியம்மா முனுசாமி முதலியார், நாராயணசாமி ஆகியோருடன் சேர்த்தும் பேசியிருக்கிறார்.

3. வரலாற்று ஆவணங்களில் சாமி நாகப்பன் படையாட்சி "Swami Nagappen Padayachee, Summy Nagappen, Nagappan" என்கிற பெயர்களிலும், வள்ளியம்மா முனுசாமி முதலியார் "Valliama R Munuswami,  Valliamma Munusamy Moodaliar, Valliamma Munusamy Mudliar" என்கிற பெயர்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளார். (தில்லையாடி வள்ளியம்மை என்கிற பெயர் எங்கும் இல்லை.) நாராயணசாமி "Narayanasamy" என்று மட்டுமே குறிப்பிடப்படுகிறார்.


ஆதாரம்:

1. Satyagraha in South-Africa, Mohandas K. Gandhi, Published by Yann FORGET on 26th April 2003
2. GANDHIJI'S VISION OF A FREE SOUTH AFRICA, by E. S. REDDY
7. Valliamma Munusamy Mudliar – Child Martyr, by Yana Pillai, Natal Tamil Vedic Society, South Africa

தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகமும் தமிழர்களின் தியாகமும்

உலக வரலாற்றின் மிகப்பெரிய சனநாயகப் போராட்டமாக கருதப்படுவது மகாத்மா காந்தியின் சத்தியாகிரக போராட்டம் ஆகும். இப்போராட்டத்தில் முதன்முதலில் பலியான உலகின் முதல் சத்தியாகிரகத் தியாகியை எல்லோரும் மறந்துவிட்டனர்.
ஒரு மாபெரும் தியாகி மறக்கப்பட்டது ஏன்? அவர் ஒரு தமிழர் என்பதாலா? வஞ்சிக்கப்பட்ட சாதியில் பிறந்தவர் என்பதாலா? ஏழை என்பதாலா? படிக்காதவர் என்பதாலா? அந்த மாபெரும் தியாகம் குறித்த இரண்டாவது கட்டுரை இதுவாகும்: இதர இரண்டு கட்டுரைகளை இந்த இணைப்புகளில் காணலாம்:

1. மறக்கப்பட்ட மாபெரும் தியாகம் - சாமி நாகப்பன் படையாட்சி! 
3. தமிழ் வீரத்தை புகழும் மகாத்மா காந்தி: சாமி நாகப்பன் படையாட்சி

கட்டுரை 2. தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகமும் தமிழர்களின் தியாகமும்

தென் ஆப்பிரிக்க டிரான்சுவால் காலனி அரசாங்கம் உருவாக்கிய ஏசியாட்டிக் பதிவு சட்டத்தை எதிர்த்து காந்தி 1906 ஆம் ஆண்டில் போராட்டம் அறிவித்தார். காந்தியின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் இதுதான். காந்தி முதன்முதலாக சிறை சென்றதும் இந்த போராட்டத்திற்காகத்தான். அவரது அறிவிப்பை மீறி 1907 ஆம் ஆண்டு அந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும் இச்சட்டத்துக்கு எதிராக 1909 ஆம் ஆண்டில்தான் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது .
தென் ஆப்பிரிக்காவில் காந்தி
இதே காலகட்டத்தில்தான் காந்தியின் சத்தியாகிரகப் போராட்டத்தின் முதல் உயிர்த் தியாகமாக சாமி நாகப்பன் படையாட்சி வீரமரணம் அடைந்தார். கடைசியில் 1914 ஆம் ஆண்டில் காந்திக்கும் செனரல் ஸ்முட்ஸ் என்கிற டிரான்சுவால் அரசின் செயலாளருக்கும் இடையேயான உடன்படிக்கையின் பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய நிவாரண சட்டம் என்கிற புதிய சட்டத்தின் படி இந்திய சமூகத்தினரின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.

தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் இந்த போராட்டம் வரலாற்று நோக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. முதலாவதாக, இரண்டு கண்டங்களில் இருக்கும் இரண்டு நாடுகளின் விடுதலைப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளி அதுதான். அகிம்சை முறையிலான இந்திய சுதந்திரப்போராட்டத்தின் வழிகாட்டி இந்த போராட்டம்தான். நெல்சன் மண்டேலா அவர்களின் தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தின் வழிகாட்டியும் இந்த போராட்டம்தான்.

இரண்டாவதாக, அமெரிக்க குடியுரிமை போராட்டமான மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் போராட்டம் தொடங்கி, அதற்கு பின் இன்றுவரை உலகெங்கும் நடக்கும் அகிம்சை வழி போராட்டங்கள் அனைத்திற்கும் தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் இந்த போராட்டம்தான் முன்னோடியாகும்.

தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டமே மகாத்மா காந்தியை உருவாக்கியது, அதுவே இந்திய விடுதலைப் போரின் வழிகாட்டி என்பதை காந்தியும் தெளிவாக கூறியிருக்கிறார். "காந்தி இந்தியாவில் பிறந்திருக்கலாம் - ஆனால் தென் ஆப்பிரிக்காதான் காந்தியை 'உருவாக்கியது'" என்றார் அவர்.

1925 ஆம் ஆண்டு கான்பூர் காங்கிரசு மாநாட்டில் பேசிய காந்தி "தென் ஆப்பிரிக்க இந்தியர்கள் என்னை உங்களுக்கு (காந்தியை இந்தியாவுக்கு) அளித்ததாகக் கூறுகிறார்கள். அதனை நான் ஒப்புக்கொள்கிறேன். அது முற்றிலும் உண்மை. இப்போது என்னால் இந்தியாவுக்காக என்னென்ன பணிகளை எல்லாம் செய்ய முடிகின்றதோ, அவை எல்லாம் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவை" என்று கூறினார்

எட்டாண்டுகள் நடந்த தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் சத்தியாகிரகப் போரில் இருபதாயிரம் இந்தியர்கள் பங்கேற்றதாக காந்தி தெரிவிக்கிறார். இவர்கள் எல்லோரும் தத்தமது வேலைகளை விட்டுவிட்டு - வருமானத்தை இழந்து - பலநாட்கள் போராட்டத்தில் பங்கெடுத்தனர். பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். பலர் நாடுகடத்தப்பட்டனர். எத்தனை துன்பம் வந்தாலும் அதனை எதிர்கொண்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.
ஜொகனஸ்பர்க் அருங்காட்சியகத்தில் உள்ள சாமி நாகப்பன் படையாட்சி, வள்ளியம்மா முனுசாமி படங்கள்
இப்போராட்டத்திற்காக உயிர்த் தியாகம் செய்தவர்கள் என்று நான்கு பேர்களை குறிப்பிடுகிறார் காந்தி.

1. சாமி நாகப்பன் படையாட்சி: காந்தியின் கட்டளைக்கு ஏற்ப "ஏசியாட்டிக் பதிவு சட்டத்தின்படி பெயரை பதிவு செய்ய மறுத்து சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால்" 1909 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 ஆம் நாள் கைது செய்யப்பட்டார் தமிழரான சாமி நாகப்பன் படையாட்சி. அவருக்கு மூன்று பவுண்ட் தண்டம் அல்லது 10 நாள் கடின உழைப்புடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும்,  தண்டத் தொகையைக் கட்டாமல் சிறைத் தண்டனையை ஏற்பதே சத்தியாகிரகப் போராட்டம் என்பதால் சிறைக்குச் சென்றார் சாமி நாகப்பன் படையாட்சி.
சாமி நாகப்பன் படையாட்சி
முதல் நாள் இரவு ஜொகனஸ்பர்க ஃபோர்ட் சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த நாள் 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுக்ஸ்கெய் சாலை சிறை முகாம் எனும் இடதிற்கு நடத்தியே அழைத்துச் செல்லபட்டார். அங்கு அவர் சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டார். கடும்குளிரில் திறந்தவேளி கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டார். சரியான உணவும் இல்லை. உடல் நலம் பாதிப்படைந்த நிலையிலும் சாலை அமைத்தல், அதற்காக கல் உடைத்தல் போன்ற கடுமையான வேலைகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டன. உடல்நலப் பாதிப்பிற்கு சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை.

ஏறக்குறைய கொலை செய்யப்பட்டவராக சூன் 30 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் இரட்டை நிமோனியாவால் இதயம் செயலிழது மரணத்தை தழுவினார். அப்போது அவரின் வயது 18. சூலை 7 ஆம் நாள் ஜொகனஸ்பர்க் இந்தியர்கள் சாமி நாகப்பன் படையாட்சியின் உடலை ஒரு பொது நிகழ்ச்சியாக அடக்கம் செய்தனர்.
 நாராயணசாமி
2. நாராயணசாமி: 1910 ஆம் ஆண்டு சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற இவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தண்டனைக்கு ஆளானார். எனினும் டர்பன் துறைமுகத்தில் கப்பலில் ஏற்றப்பட்ட நாராயணசாமி, அங்கிருந்து போர்ட் எலிசபெத், கேப் டவுன், மீண்டும் டர்பன் என தென் ஆப்பிரிக்க கடல் பகுதியிலேயே ஆறு வாரங்கள் அலைகழிக்கப்பட்டார். கடும் குளிரில் கப்பலின் மேல்தளத்தில் போதுமான அளவு குளிருக்கான உடையோ உணவோ இல்லாமல் வாடிய அவர் கரையிறங்கவும் அனுமதிக்கப் படவில்லை. இதனால் மரணமடந்த நாராயணசாமிக்கு அப்போது வயது 19.
அர்பத் சிங்
3. அர்பத் சிங்: சத்தியாகிரகப் போராட்ட காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட போது அர்பத் சிங்கின் வயது 75. முதுமையின் காரணமாக அவர் சிறையில் மரணமடைந்தார்.
வள்ளியம்மா முனுசாமி முதலியார்
4. வள்ளியம்மா முனுசாமி முதலியார்: தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று 1913 டிசம்பர் 22 அன்று தனது தாயாருடன் கைது செய்யப்பட்டார். மூன்று மாத சிறைத்தணடனைப் பெற்று காந்தியின் துணைவியார் கசுதூரிபா காந்தியுடன் சிறையில் இருந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டதால் விடுதலை செய்யப்பட்ட போதும் வெளிவர மறுத்தார். எனினும் சத்தியாகிரக போராட்டம் வெற்றி பெற்றதால் 1914 சனவரி 11 அன்று விடுதலை ஆனார். சிறையில் ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பால் 1914 பிப்ரவர் 22 அன்று மரணமடைந்தார். அப்போது வள்ளியம்மா முனுசாமி முதலியாரின் வயது 16. தமிழ்நாட்டில் அவர் 'தில்லையாடி வள்ளியம்மை' என்று அறியப்படுகிறார்.

இந்த நான்கு பேரின் உயிர்த் தியாகத்தைதான் காந்தி பலமுறை குறிப்பிட்டுள்ளார். பல வரலாற்று ஆவணங்கள் சாமி நாகப்பன் படையாட்சி, வள்ளியம்மா முனுசாமி முதலியார் ஆகிய இரண்டுபேரை மட்டுமே உயிர்த் தியாகம் செய்தவர்களாகக் குறிப்பிடுகின்றன.  எனினும் வரலாற்று ஆய்வாளர்கள் இன்னும் பலர் உயிர்த்தியாகம் செய்திருக்கக்கூடும் என்று குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக, 1913 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் நாள், மவுண்ட் எட்ச்காமே எனும் இடத்தில் 'சத்தியாகிரகம் முடியும் வரை தோட்ட வேலைக்கு வரமாட்டோம்' என்று கூறிய ஆறு தமிழர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டதாக செய்தி பத்திரிகைகள் தெரிவித்தன.  பச்சையப்பன், ராகவன், செல்வன், குருவாடு, சுப்புராய கவுண்டர் மற்றும் பெயர்தெரியாத மற்றொருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பச்சையப்பன் மனைவி
மேற்குறிப்பிட்டவர்களில் செல்வத்தின் மனைவி தமிழ் நாட்டிற்கு திரும்பியதாகவும், செல்வத்தின் மகன் அந்தோணிமுத்து காந்தியின் அகமதாபாத் ஆசிரமத்தில் சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
 செல்வத்தின் மனைவி, மகன் 
உலகின் முதல் சத்தியாகிரகப் போராட்டமான 'தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் போராட்டம்' என்பது உண்மையில் தமிழர்களின் போராட்டமாகவே நடந்தது. அதிலும் காவிரி வடிநிலப்பகுதியை சேர்ந்த, மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதி தமிழர்கள்தான் தென்னாப்பிரிக்காவில் அதிகம் இருந்தனர். அவர்களே போராட்டத்திலும் பங்கெடுத்தனர். சாமி நாகப்பன் படையாட்சி, நாராயணசாமி, வள்ளியம்மா முனுசாமி முதலியார் ஆகிய மூன்று பேருமே மயிலாடுதுறை பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர்கள்தான்.

காந்தி தென் ஆப்பிரிக்காவை விட்டு 1914 ஆம் ஆண்டு சூலை 18 ஆம் நாள் லண்டன் வழியாக இந்தியாவுக்கு கிளம்பினார். 1915 ஆம் ஆண்டு சனவரி 9 ஆம் நாள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். அவரது முதல் இந்திய பயணங்களில் ஒன்றாக 1915 ஏப்ரல் 30, மே 1 ஆகிய நாட்களில் மயிலாடுதுறை பகுதிக்கு வந்தார் காந்தி.

தமிழ் நாட்டிலிருந்து 7100 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஜொகனெஸ்பர்க் நகரில், சூலு எனும் ஒரு ஆப்பிரிக்க மொழியும் ஆங்கிலமும் பேசப்படும் நாட்டில், அதிகம் கல்வி கற்காத ஏழை எளிய தமிழர்கள் காந்தியின் முதல் போராட்டத்தை முந்நின்று நடத்தினர்.

"தமிழர்களுக்கு நன்றிக் கடன் பட்டவர்களாக மற்ற இந்திய சமூகத்தினரை தமிழர்கள் மாற்றிக் கொண்டிருக்கின்றனர். நாளுக்கு நாள் இந்த நன்றிக்கடன் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தமிழர்கள் தம்மீதான புகழ் பேரொளியை நாளுக்கு நாள் அதிகமாக்கிக் கொண்டிருக்கின்றனர். தமிழ் சமூகத்திற்கு இந்தியர்கள் எப்படி இந்த நன்றி கடனை திருப்பியளிக்கப் போகிறார்கள்?


தமிழர்களிடம் இந்திய சமூகத்தினர் பாடம் கற்க வேண்டும். தமிழர்களை முன்மாதிரியாகக் கொண்டு அவர்களைப் பின்பற்ற வேண்டும். தாய்நாட்டுக்காக அமைதியாக துன்பத்தை ஏற்பது எப்படி என்பதை இந்தியர்கள் தமிழர்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். இதை செய்யத் தவறினால் இந்தியர்கள் தமக்குத் தாமே பழியை சுமப்பார்கள்" என 22.10.1910 அன்று இந்திய ஒப்பீனியன் இதழில் எழுதினார் காந்தி.

1915 ஆம் ஆண்டு மார்ச் 22 அன்று பர்மாவின் ரங்கூன் நகரில் தி இந்து பத்திரிகைக்கு பேட்டியளித்த காந்தி "தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு சிறைக்கு செல்லாவிட்டால் அது தமக்கு அவமானம் என தமிழர்கள் ஒவ்வொருவரும் நினைத்தனர். பொது நோக்கிற்காக சிறை செல்லாமலிருப்பது அவமானம் என்கிற இந்த மனப்பான்மை தமிழ் சமூகத்தைத் தவிர வேறு எந்த ஒரு இந்திய சமூகத்தினரிடமும் இல்லை. நான் முதன்முதலாக தமிழ் சமூகத்தினரை சந்தித்த போது அவர்களை நினைத்து பெருமிதம் அடைந்தேன். அடுத்தடுத்த சந்திப்புகளின் அவர்கள் மீதான மதிப்பு உயர்ந்து கொண்டே சென்றது. நான் என்னை வேறு எந்த ஒரு இந்திய சமூகத்தினரை விடவும் தமிழர்களுடன் தான் இணைத்துக் கொள்கிறேன்." என்று தெரிவித்தார் காந்தி.

(அன்றைய காந்தி, 'தமிழர்களுக்கு நன்றிக்கடன் பட்ட இந்தியா, அந்த நன்றிக்கடனை எப்படி தீர்க்கப்போகிறது?' என்று கேட்டார். இன்று???)

மகாத்மா காந்தியால் புகழப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி இந்திய தேசிய போராட்ட தியாகிகளில் ஒருவராக போற்றப்படாமல் போனது எப்படி? உலகப்புகழ் பெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தின் முதல் உயிர்த்தியாகியை நாடு மதிக்கும் லட்சணம் இதுதானா? 


காந்தியை பின்பற்றிய வட இந்திய தியாகிகளுக்கெல்லாம் தமிழ்நாட்டின் பல இடங்களில் சிலைகளும் நினைவிடங்களும் இருக்கும் நிலையில் ஒரு தமிழனின் மாபெரும் தியாகம் மறக்கப்பட்டது எப்படி?

குறிப்புகள்:


1. மகாத்மா காந்தி 1915 ஆம் ஆண்டு ஏப்ரல் 30, மே 1 ஆகிய நாட்களில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி ஆகிய இடங்களில் இருந்துள்ளார். மயிலாடுதுறை கூட்டத்தில் பேசும்போது "தென் ஆப்பிரிக்காவில் உயிர்த்தியாகம் செய்த இரண்டு பேருடைய விதவை மனைவிகளைக் காண்பதற்காக இங்கு வந்தேன். ஒரு தியாகியின் மனைவியை பார்த்துவிட்டேன். இன்னொரு தியாகியின் மனைவியை நான் சென்னை மாகாணத்தைவிட்டு செல்வதற்கு முன்பு பார்த்துவிடுவேன் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இச்செய்தி 3.5.1915 அன்று தி இந்து பத்திரிகையில் வெளியானது. அவர் நாகப்பன், நாராயணசாமி ஆகியோரைக் குறிப்பிட்டிருக்கலாம்.


காந்தி அப்போது மயிலாடுதுறை பகுதியில் எங்கெல்லாம் சென்றார், யாரையெல்லாம் சந்தித்தார் என்பது தெரிந்தால் ஒருவேளை சாமி நாகப்பன் படையாட்சியின் தமிழக பூர்வீக ஊர் தெரியவரலாம். அவர் நாகப்பனின் விதவை மனைவியை சந்தித்தார் என்று சிலர் எழுதியுள்ளனர். எனினும் ஆதாரபூர்வமான தகவல் தெரியவில்லை.


2. காந்தியின் பேச்சுகளிலும் எழுத்துகளிலும் சில இடங்களில் சாமி நாகப்பன் படையாட்சி குறித்து தனியாகவும் சில இடங்களில் வள்ளியம்மா முனுசாமி முதலியார், நாராயணசாமி ஆகியோருடன் சேர்த்தும் பேசியிருக்கிறார்.


3. வரலாற்று ஆவணங்களில் சாமி நாகப்பன் படையாட்சி "Swami Nagappen Padayachee, Summy Nagappen, Nagappan" என்கிற பெயர்களிலும், வள்ளியம்மா முனுசாமி முதலியார் "Valliama R Munuswami,  Valliamma Munusamy Moodaliar, Valliamma Munusamy Mudliar" என்கிற பெயர்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளார். (தில்லையாடி வள்ளியம்மை என்கிற பெயர் எங்கும் இல்லை.)  நாராயணசாமி "Narayanasamy" என்று மட்டுமே குறிப்பிடப்படுகிறார்.


ஆதாரம்:

1. Satyagraha in South-Africa, Mohandas K. Gandhi, Published by Yann FORGET on 26th April 2003
2. GANDHIJI'S VISION OF A FREE SOUTH AFRICA, by E. S. REDDY
3. Gandhi Out of Africa: It is in the details that thespirit of the Mahatma lives on in Johannesburg, by Dilip D’Souza  Forbes India Magazine of 26 August, 2011.
4. Rethinking Gender and Agency in the Satyagraha Movementof 1913, by Kalpana Hiralal, University of Kwazulu-Natal, South Africa
5. ABOUT GANDHI IN JOHANNESBURG, Arts, Culture and Heritage Department,Johannesburg City
6. Martyrs graves at Braamfontein, by Romaana Naidoo 08September 2011
7. Valliamma Munusamy Mudliar – Child Martyr, by Yana Pillai, Natal Tamil Vedic Society, South Africa
8. Legacy of struggle, The Hindu, 19.10.2003
9. THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI Volume 10
10. THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI Volume 11
11. THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI Volume 12
12. THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI Volume 14
13. THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI Volume 16
14. THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI Volume 17