Pages

புதன், நவம்பர் 09, 2011

அணுமின்சாரக் கட்டுக்கதைகளும் கூடங்குளமும்


கூடங்குளத்தில் அணுமின்நிலைய போராட்டம் தீவிரமடைந்துவரும் நிலையில் அணுமின்சாரம் குறித்த கட்டுக்கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

அணுமின் நிலையங்கள் பாதுகாப்பானவை, உலகின் பலநாடுகளால் விரும்பப்படுபவை, இதைவிட்டால் இந்தியாவில் மின் தேவையை ஈடுசெய்ய வேறுவழியே இல்லை - இப்படியாக நீள்கின்றன கட்டுக்கதைகள். இந்த கோயபல்சு பிரச்சாரத்திற்கு இப்போது தலைமையேற்றுள்ளார் அப்துல்கலாம்!

எனவே, உண்மை நிலையை அறியவேண்டியது அவசியம். (அணுமிசாரம் குறித்த எனது விரிவான கட்டுரையை இங்கே PDF வடிவில் காண்க.)
கட்டுக்கதை 1. அணுமின்சாரம் சிறந்தது, எனவே, உலக நாடுகள் அதை விரும்புகின்றன.

உண்மை: அணுமின்சாரம் சிறந்த மின்சாரமாக இருந்திருந்தால் உலகநாடுகள் அதிக அளவில் அணு உலைகளை அமைத்திருக்கும். ஆனால், உலகின் 31 நாடுகளில் மட்டுமே அணு உலைகள் அமைக்கப்பட்டன. அதிலும் ஒருநாடு, லிதுவேனியா தனது கடைசி அணு உலையை மூடிவிட்டது. இப்போது ஐ.நா. அவையில் உறுப்புநாடுகளாக உள்ள 192 நாடுகளில் வெறும் 30 நாடுகளில் மட்டுமே அணு உலைகள் உள்ளன.

அதிலும் உலகின் அணு உலைகளில் முக்கால் பங்கு வெறும் 6 நாடுகளில் மட்டுமே உள்ளன. அவை. அமெரிக்கா, பிரான்சு, ஜப்பான், ரசியா, செர்மனி, தென் கொரியா. இவற்றில் - செர்மனி, ஜப்பான் நாடுகள் அணு உலைகளுக்கு விடைகொடுக்கப்போவதாக அறிவித்துள்ளன.

2002 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 444 அணு உலைகள் இருந்தன. இப்போது 437 அணு உலைகள் மட்டுமே உள்ளன. அதாவது - உலகளவில் அணுமின் திட்டங்கள் அதிகமாகவில்லை. குறைந்து வருகின்றன.

கட்டுக்கதை 2: அணுமின்சாரம்தான் எதிர்காலத்தின் மின்சாரம்.

உண்மை: "அணுமின்சாரம்தான் எதிர்காலத்தின் மின்சாரம்" என்பது ஒரு அயோக்கியத்தனமான கூற்று. இதனை அப்துல் கலாம் அவர்கள் கூறிவருகிறார். இப்போது சுமார் 4,800 மெகாவாட் அளவாக உள்ள இந்திய அணுமின் உற்பத்தியை 50,000 மெகாவாட் அளவாக அதிகரிக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
ஆனால், இந்திய அணுசக்தி துறை 1970 ஆம் ஆண்டில் வெளியிட்ட கணிப்பில் 2000 ஆவது ஆண்டில் இந்தியாவில் 43,000 மெகாவாட் அணுமின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று கூறியது. ஆனால், 2011 ஆம் ஆண்டில் கூட 4,870 மெகாவாட் அளவுதான் எட்ட முடிந்தது.

உலகளவில் 2000 ஆம் ஆண்டில் 4,450 ஜிகாவாட் (ஒரு ஜிகாவாட் = 1000 மெகாவாட்) அளவு அணுமின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று பன்னாட்டு அணுசக்தி முகமை 1974 ஆம் ஆண்டிலேயே அறிவித்தது. ஆனால், 2011 ஆம் ஆண்டில் கூட 375 ஜிகாவாட் அளவுதான் உலகம் முழுவது அணுமின்சாரம் உற்பத்தி ஆகிறது.

அமெரிக்காவில் 1973 ஆம் ஆண்டில் அந்நாட்டு அதிபர் நிக்சன் அங்கு 1000 அணு உலைகள் அமைக்கப்போவதாகக் கூறினார். ஆனால், அங்கு ஒட்டுமொத்தமாக 253 அணு உலைகள் தொடங்க உத்தரவிடப்பட்டு, 71 நிலையங்கள் தொடங்குவதற்கு முன்பே கைவிடப்பட்டன, 50 நிலையங்கள் கட்டுமானம் தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்டன. 28 நிலையங்கள் தொடங்கிய பின்னர் பாதியில் நிறுத்தப்பட்டன. இப்போது 104 அணுமின் நிலையங்கள் மட்டுமே உள்ளன. அதுமட்டுமல்லாமல் கடந்த 37 ஆண்டுகளாக அமெரிக்காவில் புதிய அணுமின் நிலையம் தொடங்கப்படவில்லை.
உலகிலேயே அதிக அணு உலைகள் உள்ள பகுதி மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஆகும். அங்குள்ள 18 நாடுகளில் எட்டு நாடுகள் அணுமின்சாரத்திட்டங்கள் இல்லாத பகுதி என அறிவித்து விட்டன. 4 நாடுகள் புதிய அணு உலைகள் தொடங்க மாட்டோம் எனக் கூறிவிட்டன. செர்மனி நாடு 2022 க்குள் அனைத்து அணுமின் நிலையங்களையும் மூடப்போவதாகக் கூறிவிட்டது. அங்கு வெறும் மூன்று நாடுகள் மட்டுமே அணுமின்சாரத்தை ஆதரிக்கின்றன. ஐரோப்பா முழுவதிலும் கடந்த 30 ஆண்டுகளாக புதிய அணுமின் திட்டம் எதுவும் தொடங்கப்படவில்லை.

இப்போது உலகின் மொத்த மின் உற்பத்தியில் 13% அணுமின்சாரம் ஆகும். இது 2050 ஆம் ஆண்டில் 6% ஆகக் குறையும் என மதிப்பிட்டுள்ளது பன்னாட்டு அணுசக்தி முகமை. எனவே, அணுமின்சாரம்தான் எதிர்கால மின்சாரம் என்பது காதில் பூ சுற்றும் வேலை.

அணுமின்சாரம் பாதுகாப்பானதா? மலிவானதா? தூய்மையானதா? அணுமிசாரத்திற்கு மாற்றே இல்லையா? : இந்தக் கேள்விகளுக்கெல்லாம்  பதிலை PDF வடிவில் இங்கே காண்க:

http://www.scribd.com/fullscreen/72120961?access_key=key-1l58hvqnghuv47o9q84r