Pages

ஞாயிறு, பிப்ரவரி 17, 2013

நான்காவது தூண்கள் நாகரீகம் தவறக் கூடாது: மருத்துவர் இராமதாசு அறிக்கை


இந்திய ஜனநாயகத்தின் மூன்று தூண்களாகத் திகழும் நாடாளுமன்றம், அரசு நிர்வாகம், நீதித்துறை ஆகியவை தங்களின் கடமைகளில் இருந்து விலகிச் சென்று விட்டால் கூட, மக்களின் குரலாக ஒலிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஊடகங்களுக்கு உள்ளது. அதனால் தான் அவற்றை ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள் என்று பெருமையுடன் அழைக்கிறோம்.

உலக அளவில் ஏற்றுக்கொண்ட 9 இதழியல் தர்மங்களின்படி ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் உண்மையானதாகவும், குடிமக்களுக்கு விசுவாசமானதாகவும், சமுதாயத்திற்கு பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் -செய்திகளை ஒன்றுக்கு பல முறை சரி பார்த்து வெளியிட வேண்டும் -இவற்றுக்கெல்லாம் மேலாக செய்திகள் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்றைய நிலையில் பெரும்பாலான ஊடகங்கள் இந்த இலக்கணத்திற்கு உட்பட்டு நடக்கவில்லை என்பது தான் வேதனையான உண்மை ஆகும்.
வாரமிருமுறை புலனாய்வு இதழ் ஒன்றில் ‘இன்னொரு மணியம்மை’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்கட்டுரை இதழியல் தர்மங்களையெல்லாம் குழிதோண்டி புதைத்துவிடும் தன்மை கொண்டதாக உள்ளது. தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான கலைஞரின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம் ; ஆனால், அவரது வயது அனைவராலும் மதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

அதேபோல் நடிகை குஷ்புவின் நிலைப்பாடுகளும், பேச்சுக்களும் பல நேரங்களில் தமிழ் பண்பாட்டிற்கு எதிரானவையாகவும், கண்டிக்கத்தக்கவையாகவும் இருந்துள்ளன; ஆனால் அவரது தனியுரிமையும் , குடும்ப உறவும் மதிக்கப்பட வேண்டும். இதையெல்லாம் மதிக்காமல், பரபரப்பை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காகவோ அல்லது பழைய பகையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவோ மனம் போன போக்கில் அருவருக்கத்தக்க வகையில், ஒரு தலைவரையும், அவரது இயக்கத்தில் உள்ள ஒரு பெண்ணையும் கொச்சைப்படுத்தி எழுதுவது என்பது அனைத்து தரப்பினராலும் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

அதுமட்டுமின்றி, தந்தைப் பெரியாருக்கும், அவர் உடல் நலிவுற்றிருந்த காலத்தில் அவருக்கு அருந்தொண்டாற்றிய அன்னை மணியம்மையாருக்கும் இடையிலான உறவை கொச்சைப்படுத்த முயன்றிருப்பதும் கீழ்த்தரமான சிந்தனையாகும். இதை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் ஊடகங்கள் ஆற்ற வேண்டிய ஆக்கபூர்வமான பணிகள் ஏராளமாக உள்ளன. மாநிலம் முழுவதும் நிலவும் மின்வெட்டு, காவிரி பாசன மாவட்டங்களில் நிலவும் வறட்சி, விலைவாசி உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள், மணல் கொள்ளை, கிரானைட் ஊழல், சட்டம் ஒழுங்கு சீரழிவு  போன்ற மக்கள் அறிந்து கொள்ளவேண்டிய பிரச்சினைகள் பற்றியெல்லாம் ஊடகங்கள் எழுதலாம். இவற்றைப் பற்றியெல்லாம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு அரசியல் புலனாய்வு என்ற பெயரில் கட்டுக்கதைகளை புனைவது எவ்வளவு தவறு என்பதையும், இது சம்பந்தப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் எத்தகைய பாதிப்புகளையும், வேதனைகளையும் ஏற்படுத்தும் என்பதை ஊடகங்கள் சிந்திக்க வேண்டும். பொதுவாழ்வுக்கு வந்துவிட்டவர்கள் என்பதாலேயே ஒருவரைப்பற்றி எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்றால், அது நல்லவர்கள் பொதுவாழ்வுக்கு வருவதை தடுக்குமே தவிர, நாட்டிற்கு நன்மை எதுவும் கிடைக்காது.

எனவே, ஊடகங்கள் வணிகத்திற்காக வரைமுறையின்றி எழுதுவதை விடுத்து உண்மையின் உரைகல்லாக திகழ வேண்டும்; இல்லாவிட்டால் வாசகர்கள் வெறுத்து ஒதுக்கிவிடுவார்கள் என்பதை இதுபோன்று செய்தி வெளியிடும் ஊடகங்கள் உணரவேண்டும்.

1 கருத்து:

மணிமகன் சொன்னது…

குமுதம் போன்ற தரம் இல்லாத இதழ்களின் கீழ்த்தரச் செய்திகளைப் பொது நிலையிலிருந்து கண்டிக்க அரசியல் தலைவர்கள் பலரும் தயாராக இல்லாத நிலையில்,மருத்துவர் அவர்கள் கண்டித்திருப்பது ஆறுதலைத் தருவதாகும்.