Pages

திங்கள், டிசம்பர் 24, 2012

திராவிடர் கழகம் வீரமணி அவர்களின் விதண்டாவாதம்: தந்தை பெரியார் கொள்கைக்கு மருத்துவர் அய்யா எதிரானவரா? 

பெரியார் பிறந்த மண்ணில் காதலுக்கு எதிராகவும் சாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராகவும் பேசலாமா? அப்படிப்பட்ட நோக்கத்தில் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் இயக்கம் தொடங்குவதை ஏற்கமுடியுமா? என்றெல்லாம் கேட்டு திடீரென ஒரு மிதமிஞ்சிய முற்போக்கு கூட்டம் தமிழ்நாட்டில் முளைத்துள்ளது.

இந்நிலையில், '21 வயதுக்கு முன் திருமணம் செய்ய பெற்றோரின் ஒப்புதல் தேவை' என்கிற சட்டத்தைக் கோரும் மருத்துவர் அய்யா அவர்களின் கோரிக்கையை எதிர்த்து திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்:
""நியாயந்தானா? சிந்தியுங்கள்! 18 வயது வந்த பெண்ணுக்குத் தனது வாழ்விணையரைத் தேர்வு செய்யத் தகுதி இல்லை என்பது உங்கள் வாதமானால், 18 வயதில் வாக்குரிமையை - ஓட்டுப் போடும் வாய்ப்பை - மாற்றிட நாடு தழுவிய அளவில் பிரச்சாரம், போராட்டம் செய்ய முன் வருவீர்களா? சட்டத்தை மாற்றிடப் போராடுவீர்களா?"" என்று கேட்டுள்ளார் ஆசிரியர் வீரமணி அவர்கள்!  (இங்கே காண்க)

வாக்குரிமையும் வாழ்க்கைத் துணையை முடிவு செய்வதும் ஒன்றா? மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறார் ஆசிரியர்  வீரமணி . நாட்டில் சிகரெட் வாங்க ஒரு வயது (18), சாராயம் வாங்க வேறொரு வயது (21) என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு வயது வரம்பு உள்ளது.

மருத்துவர் அய்யா அவர்களை எதிர்த்து ஒரு அறிக்கை விடவேண்டும் என்கிற உணர்ச்சி உந்துதலில் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் போலும். இதன்மூலம் தன் சார்ந்த அமைப்பின் கருத்தையும் தந்தை பெரியாரின் கருத்தையும் எதிர்த்துள்ளார் ஆசிரியர் வீரமணி!

ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையிலான பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் சார்பில் 25.11.2012 அன்று  பெரியார் திடலில் ஏற்பாடு செய்யப்பட்ட, "மன்றல் 2012 - சாதி மறுப்பு இணைதேடல் பெருவிழா" எனும் நிகழ்ச்சிக்கான அறிவிப்பில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது:

"ஆண், பெண் இருவரும் 21 வயது நிரம்பியவர்களாகவும், தனித்து வாழ்க்கை நடத்துவதற்கான பொருளாதார வாய்ப்பும் கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். திருமணம் செய்து கொள்ள விரும்புவோரிடம் மருத்துவம், மனவளர்ச்சி சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்படுவர்" (இங்கே காண்க)

 '21 வயதுக்கு முன் திருமணம் செய்ய பெற்றோரின் ஒப்புதல் தேவை' என மருத்துவர் அய்யா அவர்கள் சொன்னால் அது ""நியாயந்தானா? சிந்தியுங்கள்!" என்று சொல்லும் ஆசிரியர் வீரமணி, அவர்கள் நடத்தும் திருமண நிகழ்ச்சியில் மட்டும் 'திருமணம் செய்யவே 21 வயதாக வேண்டும்' என்று கூறுவது ஏன்? இந்த இரட்டைவேடம் எதற்காக?!

பெண்களின் திருமண வயது குறித்து தந்தை பெரியாரின் கருத்து:

"சம்பாதனை, குடும்பப் பொறுப்பு, குழந்தைகள் பெற்றால் அதைக் காப்பாற்றும் திறமை ஆகியவைகள் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டு இத்திறமைகள் இல்லாத ஒரு புருஷனைக் கட்டிக்கொள்வதாய் இருந்தால் மாத்திரம் ஆண்களைப் பெண்கள் அடக்கியாள முடியும்; முடியாவிட்டாலும் சம சுதந்திரமாகவாவது இருக்க முடியும். இதில்லாமல் எவ்வளவு சுயமரியாதையும், சமசுதந்திரமும் போதித்தாலும் பெண்களுக்குச் சம சுதந்திரமும், சமகற்பு என்பதும் ஒரு நாளும் முடியக்கூடிய காரியமல்ல என்பதே எனது அபிப்பிராயம். அன்றியும் அப்படிப்பட்ட திறமை அற்றவர்களுக்கு சமசுதந்திரம் அளிப்பதும் ஆபத்தான காரியம்தான்.
ஆதலால், பெண்கள் சுதந்திரம், இந்த மாதிரிக் கல்யாண காலங்களில் பேசிவிடுவதாலோ, "சுத்த" சுயமரியாதை முறையில் திருமணம் செய்து விடுவதாலோ ஏற்பட்டு விடாது.

தனி உரிமை உலகில் பெண்கள் சுதந்திரம் வேண்டுமென்பவர்கள் பெண்களை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். தங்கள் ஆண்பிள்ளைகளை இலட்சியம் செய்யாமல் பெண்களுக்கே செலவு செய்து படிக்க வைக்க வேண்டும். ஜீவனத்துக்கு ஏதாவது ஒரு தொழில் கற்றுக்கொடுக்க வேண்டும்.

...இதை நான் இங்குள்ள தாய்மார்களுக்காகவே சொல்லுகிறேன். உங்கள் பெண்களை நன்றாகப் படிக்க வையுங்கள்; தொழில் சொல்லிக் கொடுங்கள்; 20 வயது வரை கல்யாணம் செய்யாதீர்கள். அப்போதுதான் பெண்களுக்குச் சுதந்திர உணர்ச்சி உண்டாகும்"

-ஈரோட்டில் 28.2.1939 அன்று நடந்த கா. வேலாம்பால் - சேலம் சி. இரத்தினம் திருமணத்தில் தந்தை பெரியாரின் சொற்பொழிவு, குடி அரசு 1.3.1936

ஆக, "20 வயது வரை கல்யாணம் செய்யாதீர்கள்" என்கிற தந்தை பெரியாரின் கருத்தைதான் மருத்துவர் அய்யா அவர்களும் வலியுறுத்துகிறார்.

மருத்துவர் அய்யா அவர்கள் காதலையோ கலப்பு மணத்தையோ எதிர்க்கவில்லை

மருத்துவர் அய்யா அவர்களோ அல்லது அனைத்து சமுதாய கூட்டமோ காதலையோ கலப்பு மணத்தையோ எதிர்க்கவில்லை என்பதை இவர்கள் வேண்டுமென்றே மறைக்கின்றனர். 2.12.2012 அன்று சென்னையில் நடந்த அனைத்து சமுதாயத் தலைவர்கள் கூட்டத்தின் தீர்மானம் "நாகரீக சமுதாயத்தில் காதல் திருமணங்களுக்கோ அல்லது கலப்புத் திருமணங்களுக்கோ தடை போடுவது சரியாக இருக்காது. இத்தகைய திருமணங்களை நாங்கள் எதிர்க்கவும் இல்லை" என்று கூறப்பட்டுள்ளது. (இங்கே காண்க)
"உரிய வயதை எட்டாத இளம் வயதினர் காதல் நாடக மோசடியால் பாதிக்காமல் தடுக்கும் நோக்கில், பிரேசில், சிங்கப்பூர், ஜப்பானில் உள்ளது போன்று, 21 வயது நிரம்பாதோர் திருமணம் செய்ய பெற்றோரின் சம்மதத்தைக் கட்டாயமாக்க வேண்டும்" என்று கோரப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தைத் தான் 'காதலுக்கு எதிர்ப்பு, கலப்புத் திருமணத்துக்கு எதிர்ப்பு' என்று திசைதிருப்புகின்றனர் மிதமிஞ்சிய முற்போக்கு கூட்டத்தினர்.

சனி, டிசம்பர் 22, 2012

திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் எனும் சாதிவெறியரின் புலம்பல்!

"சமுக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம்" என்ற பெயரில் வன்னியர்களுக்கு எதிரான சாதிவெறியோடு கிளம்பியிருக்கும் கூட்டத்தில் ஒரு முக்கியமான நபர் திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம். இவரைக்குறித்து வினவு இப்படி குறிப்பிடுகிறது: "அடுத்ததாக கருப்பு சட்டை, கருப்பு பேண்ட், கருப்பு ஷீ என்று இராணுவ வீரர்களை போல உடை அணிந்து வந்திருந்த சினிமா டைரக்டர் களஞ்சியம் பேசினார். இவரும் ஒரு அமைப்பு வைத்திருக்கிறார் என்பது அன்றைக்கு தான் தெரியும். அந்த அமைபின் பெயர் “தமிழர் நலம்”. தமிழ் தேசியத்தை உய்விக்க வந்த இது எத்தனை ஆயிரமாவது இயக்கம் என்று தெரியவில்லை. போகிற போக்கைப் பார்த்தால் தமிழ் தேசியம் ஒரு மில்லியன் தலைவர்களை தொட்டுவிடுவது நிச்சயம்."

சாதிவெறி பிடித்த திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் தனது முகநூலில் பின்வரும் கருத்தை எழுதியுள்ளார்: "அய்யா ராமதாஸ் அவர்களின் மருமகள் வன்னியர் பெண் இல்லை என்று ''மறுமலர்ச்சி வன்னியர் சங்கத்தை '' சேர்ந்த ஒரு வன்னியர் சொன்னார்.எப்படி என்று கேட்டேன்.கிருட்டிணசாமியின் இரண்டாவது மனைவியின் பெண் தான் அன்புமணியின் மனைவி என்றார்.அந்த 2 வது மனைவி வன்னியர் இல்லையாம்.அப்பிடினா?அன்புமணி ராமதாசு சாதிமறுப்பு திருமணம் செய்தவரா?" என்று கேட்டுள்ளார் திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம். (அவரது முகநூலில் அந்த பக்கம் தற்போது நீக்கப்பட்டுள்ளது)

இப்படியெல்லாம் முட்டாள்தனமாக, வன்மமாக பேச முடியுமா? என்று வியப்பாக இருக்கிறது. 

காங்கிரசு கட்சியின் முன்னாள் மாநிலத்தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கிருஷ்ணசாமி அவர்களது துணைவியார் பழம்பெரும் தலைவர் தளபதி விநாயகம் அவர்களின் மகள் ஆகும்.

காமராசர், அண்ணா ஆகியோரின் காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். திருத்தணியை தமிழ்நாட்டோடு இணைப்பதற்காக போராடி வெற்றியும் பெற்றவர் தளபதி கே. விநாயகம் அவர்கள். இதனால் அவர் தணிகையை மீட்ட தளபதி என்று போற்றப்பட்டார்.
""போராட்டத் தளபதி திருத்தணி கே.விநாயகம். அவருடைய பகுதி பாதிக்கப்பட்டதால் அவர் அப்பகுதி இளைஞர்களைத் திரட்டி போராடினார். ம.பொ.சி. அன்றைய முதல்வர் இராஜாஜிக்கு வேண்டப்பட்டவர் என்பதால் வடக்கெல்லைப் பாதுகாப்புக் குழு, போராட்ட குழுத்தலைவராக ம.பொ.சி.யை விநாயகம் நியமித்தார். எல்லாக் கட்சிகளையும் சேர்ந்தவர்கள் அப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். கே.விநாயகம் அப்போது பிரஜா சோசலிஸ்டு கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக எதிர்க் கட்சியில் இருந்தார்."" என்று இதுகுறித்து வாலாசாவல்லவன் என்பவர் கூறியுள்ளார்.

சௌமியன் என்பது அறிஞர் அண்ணா அவர்களின் புனைப்பெயர். தளபதி விநாயகம் அவர்கள் அறிஞர் அண்ணா மேல் கொண்ட பற்றின் காரணமாகத்தான் திரு. கிருஷ்ணசாமி அவர்களது மகளுக்கு, அதாவது தளபதி விநாயகம் அவர்களின் பேத்திக்கு சௌமியா என்று பெயர் வைத்தார்கள். அவர்தான் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களின் துணைவியார் ஆவார்.

தளபதி கே. விநாயகம் அக்காலத்தில் ஒரு வன்னியர் சமுதாயத் தலைவராகவும் இருந்தார்.

உண்மை இப்படியிருக்கையில் வன்னியர்கள் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியின் பேரால் அரைலூசுத்தனமாக உளரும் சாதிவெறியர் மு. களஞ்சியதின் அறிவு முதிர்ச்சியை என்னவென்பது?

வெள்ளி, டிசம்பர் 21, 2012


சாதிக்கலவர கொலைகளும் வன்னியர் எதிர்ப்பு சாதிவெறியும்!

தமிழ்நாட்டின் வடக்கு மேற்கு மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த எவராவது தாக்கப்பட்டாலோ, கொலை செய்யப்பட்டாலோ - அதனை யார் எதற்காக செய்திருந்தாலும் - அந்த குற்றத்திற்காக பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா, வன்னியர் சங்கத்தலைவர் ஜெ. குரு ஆகியோரை தண்டிக்க வேண்டும் என்று கூக்குரலிடுவது ஒரு மரபாகிவிட்டது.

வன்னியர் சமூகத்தினரை ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டும் இந்த வன்னியர் எதிர்ப்பு சாதிவெறியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்டுகள், காங்கிரசு, தமிழ்தேசிய அமைப்பினர் சிலர் முன்னணியில் உள்ளனர். அதற்கான எடுத்துக்காட்டாக சிதம்பரம் மற்றும் காஞ்சிபுரம் நிகழ்வுகள் உள்ளன.

சேத்தியாதோப்பு கொலை: பாவம் ஓரிடம், பழி வேறிடம்

""சிதம்பரத்தை அடுத்த சென்னிநத்தம் காலனி பகுதியைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் மகன் கோபாலகிருஷ்ணன். இவர் படிக்கும் கல்லூரியில் பரதூர்சாவடி ரவி மகள் துர்கா படித்து வருகிறார். இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையறிந்த துர்காவின் பெற்றோர், அவரை கண்டித்துள்ளனர்.  மாணவர் கோபாலகிருஷ்ணன் கடந்த டிச.12-ம் தேதி கல்லூரி சென்றவர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் மாணவர் கோபாலகிருஷ்ணன் கொலைசெய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவத்தை தொடர்ந்து அருகே வெள்ளியக்குடி கிராமத்தில் மாணவி துர்காவின் பெரியதந்தை ராமமூர்த்தி வீட்டிற்கு ஒரு கும்பல் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் ராமமூர்த்தி வீடு முற்றிலும் எரிந்து சேதமுற்றது. மேலும் அருகாமையில் இருந்த இரு வீடுகளும் எரிந்து சேதமுற்றன"" என்கிற செய்தி தினமணியில் வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்வு குறித்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்தால், இது காதலுக்காக நடந்த கொலை அல்ல. கள்ளத் தொடர்புக்காக நடந்த கொலை என்கிறார்கள். பதினெட்டு வயதாகும் இளைஞர் அவரைவிட ஒரு வயது அதிகமுள்ள பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாகவும் அதனை பலமுறைக் கண்டித்த பெண்ணின் பெற்றோர் கடைசியில் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

கொலை செய்தவரான ரவியும் அவரது குடும்பத்தினரும் பாட்டாளி மக்கள் கட்சியிலோ, வன்னியர் சங்கத்திலோ இல்லை. அவர்கள் திரு. வேல்முருகன் அவர்களின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

எவிடன்ஸ் அமைப்பின் அறிக்கையில் "படுகொலை செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணனின் தந்தை மாயகிருஷ்ணன் ஒரத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். வன்னியர் சங்கத்தின் தலைவர் காடுவெட்டி குரு, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ச.ராமதாஸ் ஆகிய இருவரின் தூண்டுதலின் பேரில் ரவி த/பெ.பரஞ்சோதி உள்ளிட்ட 12 நபர்களின் பெயர்களோடு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரான அமைப்பாகக் கருதப்படும்  தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த நபர்கள் செய்த கொலையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரையும் வன்னியர் சங்கத் தலைவரையும் இணைத்து பேசுவது என்ன விதமான சாதி வெறியோ?!

விடுதலை சிறுத்தை சொந்தக் கட்சிகாரர்களே செய்த கொலையில் வன்னியர்கள் மீது வீண் பழி!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டத் துணைச் செயலாளர் கொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்வு குறித்து அறிக்கை வெளியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் "விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி மாவட்டத் துணைச் செயலாளர் நாராயணன் (எ) அம்பேத்கர்வளவன் அவர்களை 9-12-2012 அன்று இரவு சாதி வெறிபிடித்த சமூகவிரோதக் கும்பல் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்துள்ளது.

தருமபுரி அருகே 6 மணி நேரம் நடந்த சாதிவெறியாட்டத்தைத் தடுக்கவோ, தலித் மக்களைப் பாதுகாக்கவோ துளியளவும் முனைப்புக்காட்டாத தமிழக அரசும் அதன் காவல்துறையும் தொடர்ந்து அமைதிகாத்து வருவது சாதிவெறியர்களை ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது. சாதிவெறியர்களை ஊக்கப்படுத்தும் தமிழக அரசின் இத்தகைய அமைதிப்போக்கும் தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டும் சாதிவெறியர்களின் நடவடிக்கைகளும் சாதியவாத சமூகவிரோதக் கும்பலுக்கு உந்துதலாக அமைந்திருப்பதன் விளைவாகவே தம்பி அம்பேத்கர் வளவன் காஞ்சிபுரத்து வீதியில் வெளிச்சம் நிறைந்த பகுதியில் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்....தருமபுரி மற்றும் கடலூர் பகுதிகளில் நடந்தேறிய வன்முறை வெறியாட்டங்களைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் அம்பேத்கர்வளவன் படுகொலை நிகழ்ந்துள்ளது" என்று குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து, "விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகரின் உடலை அரசு மருத்துவமனையில் இருந்து பெற்றுக் கொண்டு ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம், கொலை நடந்த சம்பவம் அருகே வந்த போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த பா.ம.க. கொடி மரத்தை சாய்த்தனர். பின்னர் அப்பகுதியில் உள்ள ஒரு விடுதியில் கற்களை வீசினர்" என்று பத்திரிகை செய்திகள் தெரிவித்துள்ளன.

ஆக, விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பொறுப்பாளர் கொலை செய்யப்பட்டதற்கு பாமக'வும் வன்னியர்களும் குற்றம் சாட்டப்பட்டனர். பாமக கொடிக் கம்பங்கள் உடைக்கப்பட்டன.
ஆனால் காவல்துறை விசாரணையில், விடுதலை சிறுத்தை கட்சி மாநில துணைச் செயலர் சோகன்பிரபுதான் இந்தக் கொலையை செய்தார் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. ""டைல்ஸ் பாபு, ஸ்ரீதர், ஆகியோர் கோனேரிகுப்பம் ஊராட்சி தலைவியின் மகனும், விடுதலை சிறுத்தை கட்சி மாநில துணைச் செயலருமான சோகன்பிரபுவிடம் பேசியுள்ளனர். நாராயணனை கொலை செய்தால், அவரது எதிரியான, சேகரை கொலை செய்வதாகக் கூறியுள்ளனர்.அதற்கு சம்மதம் தெரிவித்த சோகன்பிரபு, தனது ஆட்களான செவிலிமேடு அம்பேத்கர் நகரை சேர்ந்த எழில்மாறன், விஜயசங்கர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த டேவிட், செம்பரம்பாக்கத்தை சேர்ந்த சாலமன், காஞ்சிபுரம், முனிசிபல் குடியிருப்பை சேர்ந்த மதன்குமார், உத்திரமேரூரை சேர்ந்த சிம்பு, நீதிமன்றத்தில் சரணடைந்த அறிவழகன், தாமஸ், நரேஷ்குமார், ஆகியோர் உதவியுடன் கொலை செய்துள்ளார். இக்கொலை வழக்கில், சோகன்பிரபு மற்றும் அவரது ஆட்கள் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளனர்."" என்று கூறுகிறது பத்திரிக்கை செய்தி.


கட்டைப் பஞ்சாயத்து சண்டையில் விடுதலை சிறுத்தை சொந்தக் கட்சிகாரர்களே செய்த கொலைக்கு பாமக'வும் வன்னியர்களும் எதற்காக குற்றம் சாட்டப்பட்டனர்? பாமக கொடிக்கம்பங்கள் எதற்காக வெட்டப்பட்டன? இது என்ன விதமான சாதி வெறியோ?!

திங்கள், டிசம்பர் 03, 2012

இளம்பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழ்வுகளே சமுதாய கொந்தளிப்புக்கு காரணம்: தீர்வு என்ன?

தமிழ் நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் வளரிளம் பருவ (adolescence) இளம்பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை சம்பவங்கள் சமுதாயத்தில் கொந்தளிப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.  இதன் காரணமாகவே சில இடங்களில் சாதி மோதல்கள் நடந்துள்ளன. இத்தகைய மோதல்கள் இனியும் தொடராமல் தடுக்க "இளம்பெண்களுக்கு எதிரான வன்முறை" ஒழிக்கப்பட வேண்டும்.

வன்பேச்சு (Verbal aggression): அவமதிக்கும் பேச்சுக்கள் மூலம் இளம்பெண்கள் அவமதிக்கப்படுகின்றனர். துன்புறுத்தப்படுகின்றனர்.

தாக்குதல் (Physical attacks): அடிக்கப்படலாம் என்கிற பயம், சடையைப் பிடித்து இழுத்தல், வண்டிகள் மூலம் மோதுதல், கையைப் பிடித்து இழுத்தல், மேலே மோதுதல், முட்டையால் அடித்தல் போன்ற பல வடிவங்களிலும் இளம் பெண்கள் தாக்கப்படுகின்றனர்.

பாலியல் தொல்லை (Sexual aggression): ஆபாச பேச்சுக்கள், பாலியல் துன்புறுத்துதல்கள் நடக்கின்றன.

காதல் நாடகம் : ஒரு தெளிவான முடிவெடுக்க இயலாத பதின்வயது பெண்கள் 'சினிமாக் காதல்' வலையில் திட்டமிட்டு வீழ்த்தப்படுகின்றனர். காதல் நாடகம், நாடகத் திருமணம், பணம் பறிப்பு, பாலியல் வன்கொடுமை ஆகிய பல கேடுகளுக்கு நாடகக் காதல் திருமணங்கள் வழிவகுக்கின்றன.

ஆட்கடத்தல் (trafficking): இளம்பெண்கள் கடத்திச் செல்லப்படுகின்றனர்.

- இவ்வாறாக பல்வேறு வடிவங்களில் நடக்கும் "இளம்பெண்களுக்கு எதிரான வன்முறையே" வடக்கு மற்றும் மேற்கு தமிழ்நாட்டின் அண்மைக்கால சாதி மோதல்களுக்கு அடிப்படைக் காரணமாக உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, பள்ளி, கல்லூரி செல்லும் பதின்வயது பெண்களின் காதலும் அதனால் ஏற்படும் கட்டைப் பஞ்சாயத்தும் சச்சரவும் ஒரு குறிப்பிடத்தக்க சர்ச்சையாக மாறியுள்ளது. வீட்டை விட்டு ஓடிப்போகும் பெண்ணை மீட்டுத்தருவதாக சில அமைப்பினர் பேரம் பேசுவதும், அப்படியே பணம் கொடுத்து மீட்பதுமான நிகழ்வுகள் நடந்துள்ளன. இதில் சில இடங்களில் பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

கொங்கு பேரவையினர் கலப்புத் திருமண எதிர்ப்பு இயக்கம் தொடங்கியதற்கும், வன்னியர் சங்கத் தலைவர் திரு. ஜெ. குரு அவர்கள் மாமல்லபுரம் வன்னியர் மாநாட்டில் காதல் நாடகக் கலப்புத் திருமணத்திற்கு எதிராகப் பேசியதற்கும் அடிப்படைக் காரணம் இதுதான். திட்டமிட்டு காதல் நாடகம் நடக்கிறது. பதின்வயதிலுள்ள பள்ளி, கல்லூரிப் பெண்கள் இதில் பலியாகின்றனர், பணம் பேரம் பேசப்படுகிறது, பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன, திருமணம் ஆன குறுகிய காலத்தில் குழந்தையுடன் பெண் துரத்தப்படுகிறார் - என்றெல்லாம் பரவலாக பேசப்படுகிறது. பாதிக்கப்படுவோர் இளம் பெண்கள் என்பதால், இத்தகைய நிகழ்வுகள் பெரும்பாலும் மூடி மறைக்கப்படுகின்றன.

இளம்பெண்களுக்கு எதிரான வன்முறை - மிகப்பெரிய மனித உரிமை மீறல்.

பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களின் கீழ் இளம்பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது ஒரு மிகப்பெரிய மனித உரிமை மீறலாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இளம்பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது - பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனம் (Universal Declaration of Human Rights), பெண்களுக்கு எதிரான அனைத்து ஒதுக்குதல்களையும் ஒழிப்பதற்கான பன்னாட்டு உடன்படிக்கை (Convention on the Elimination of All Forms of Discrimination Against Women - CEDAW), குழந்தைகள் உரிமை குறித்த பன்னாட்டு உடன்படிக்கை (Convention on the Rights of the Child) ஆகிய பன்னாட்டு சட்டங்களுக்கு எதிரானதாகும்.

உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ தீங்கு அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் அல்லது அவ்வாறு ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ள எந்த ஒரு நடவடிக்கையும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஆகும். ("violence against women" means any act of gender based violence that results in, or is likely to result in, physical, sexual or psychological harm or suffering to women, including threats of such acts, coercion or arbitrary deprivation of liberty)

ஐக்கிய நாடுகள் அவையின் சார்பில் "இளம்பெண்களின் உரிமைக்கான ஐநா செயல்திட்ட கூட்டமைப்பு" (UN Adolescent Girls Task Force) எனும் அணி 2010 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பிரகடனத்தில், உலகின் அனைத்து நாடுகளும் இளம்பெண்களின் உரிமையைக் காக்கும் வகையில் ஐந்து வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அவற்றில், "இளம்பெண்களை வன்முறையிலிருந்து பாதுகாக்க வேண்டும்" (Keep them free from violence) என்று முதன்மையாக கோரப்பட்டுள்ளது. (இளம் பெண் கல்வி, இளம் பெண் உடல் நலம் உள்ளிட்டவை மற்ற கோரிக்கைகளாகும்)

இளம்பெண்களுக்கு எதிரான வன்முறையின் கொடும் விளைவுகள்

பின் வளரிளம் பருவம் (Late adolescence) எனப்படும் 15 வயது முதல் 19 வயது வரையிலான காலம், மனித வளர்ச்சிக்கான மிக முக்கியமான காலகட்டம் என்று கூறுகிறது யுனிசெஃப் அமைப்பின் "வளிரளம் பருவம் - வாய்ப்புகளின் சகாப்தம்" (Adolescence: An Age of Opportunity) எனும் அறிக்கை. உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி என இரண்டும் உச்சக்கட்டத்தை எட்டும் முக்கியமான காலகட்டம் இதுவாகும்.

பின் வளரிளம் பருவத்தில் ஆண்களை விட பெண்களே அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர். உடல், மனம், உணர்ச்சி என அனைத்திலும் ஏற்படும் வேகமான மாற்றம் இளம்பெண்களை ஆபத்தான நிலையில் வைக்கிறது. இந்த பருவத்தை முறையாக பயன்படுத்துவதன் மூலமே அவர்களின் எதிர்காலம் அமையும் என்கிறது அந்த அறிக்கை.

உண்மையில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் மிக முக்கியமான தருணமாக 15 முதல் 20 வயது வரையிலான காலம் அமைகிறது. இந்த முக்கியமான காலகட்டத்தில் இளம்பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை அவர்களது எதிர்காலத்தை நிரந்தரமாக பாதிக்கிறது. கூடவே, அந்தப் பெண்ணின் குடும்பத்தையும், அவர்சார்ந்த சமுதாயத்தையும் அந்த வன்முறை நிரந்தரமாக பாதிப்படையச் செய்கிறது.

பெண் கல்வி

இளம்பெண்களுக்கு எதிரான வன்முறையால் அதிகம் பாதிப்படைவது பெண் கல்வி ஆகும். தனி நபருக்கும், குடும்பத்துக்கும், ஒட்டுமொத்த சமுதாய முன்னேற்றத்துக்கும் இன்றியமையாதது பெண் கல்வி. க்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துதல், பேறுகால இறப்பைக் குறைத்தல், குழந்தை மரணங்களைத் தடுத்தல், நலவாழ்வு மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி என எண்ணற்றப் பலன்களை பெண் கல்வியால் அடைய முடியும் என்பது மெய்ப்பிக்கப்பட்ட உண்மை. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பெண் கல்வி இளம்பெண்களுக்கு எதிரான வன்முறையால் தடுக்கப்படுகிறது.

குழந்தைத் திருமணம்

குழந்தைத் திருமணம் எனும் பெரும் சமூகக் கேட்டிற்கு இளம்பெண்களுக்கு எதிரான வன்முறை வழிசெய்கிறது. பேறுகால மரணம், குழந்தை இறப்பு, வறுமை அதிகரிப்பு, பொருளாதார முன்னேற்றத்திற்குத் தடை எனப்பல கேடுகளுக்கு குழந்தைத் திருமணம் காரணமாக உள்ளது. அத்தகைய கேடான குழந்தைத் திருமணங்கள் அதிகரிப்பதற்கு இளம்பெண்களுக்கு எதிரான வன்முறை ஒரு முதன்மைக் காரணம் ஆகும்.

இளம் பெண்கள் வன்முறைகளில் சிக்கும் போது, அவர்களது பெற்றோர் குடும்பமானம் காப்பாற்றப்பட வேண்டும் என்று கருதி, சிறுவயதிலேயே பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து விடுகின்றனர். ஒரு ஊரில், ஏதேனும் ஒரு இளம்பெண் வன்முறையால் பாதிக்கப்பட்டால், அது அந்த ஊரில் உள்ள மற்றவர்களையும் குழந்தைத் திருமணத்திற்கு தூண்டுகிறது. மறுபுறம் பெரும்பாலான காதல் நாடகத் திருமணங்கள் இளம்வயதில் உரிய வயதாகும் முன்பே நடக்கும் குழந்தைத் திருமணங்களாகவே முடிகின்றன.

ஒட்டுமொத்தத்தில், இளம்பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது தனிநபர்கள், சமுதாயம், பொருளாதாரம், பொது அமைதி என எல்லாவற்றிற்கும் பெரும்கேடாக அமைகின்றது.

தீர்வு என்ன?

சமூக நல்லிணக்கத்தை முன்னிட்டும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், அடிப்படை மனித உரிமைகளைக் காக்கும் நோக்கிலும் இளம்பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழ்வுகள் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும்.

அந்த நோக்கத்தில் தமிழ்நாடு அரசு பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்

1. வெள்ளை அறிக்கை 

காதல் நாடகத் திருமண நிகழ்வுகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு எதிரான அனைத்து வித வன்முறைகள், இத்தகைய நிகழ்வுகளினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மக்களிடம் கருத்துக் கேட்டும், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உரிய விசாரணை செய்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் ஒரு குழுவை அமைக்க வேண்டும்.

2. இருபத்தோரு வயது முடியாதோர் திருமணத்திற்கு பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்குக

காதல் நாடகத் திருமணங்களைத் தடுக்க அரசு திருமணச் சட்டவிதிகளில் உரிய திருத்தம் செய்ய வேண்டும்.

இந்தியக் குழந்தைகள் திருமணச் சட்டம் 2006 இன் கீழ் திருமண வயது வரையறுக்கப்பட்டுள்ளது. ஆண்கள் 21 வயது முடிந்த பின்னரும், பெண்கள் 18 வயது முடிந்த பின்னரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அச்சட்டம் கூறுகிறது. ஆனாலும் அச்சட்டம் முறையாக பின்பற்றப்படுவதில்லை. காதல் நாடகத் திருமணங்களைத் தடுக்க இது போதுமானது அல்ல.

எனவே, உலகின் வேறு சில நாடுகளில் உள்ளது போன்று, பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதற்காகன வயது, சம்மதம் இல்லாமல் திருமணம் செய்துகொள்ளும் வயது என திருமண வயதை இரண்டு வகையாக வரையறுக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக,
அதுபோன்று, தமிழ் நாட்டில் 21 வயது முழுமை அடையாதவர்கள் திருமணம் செய்துகொள்ள, பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வேண்டும். இதன் மூலம் காதல் நாடகத் திருமணங்களை பெருமளவிற்கு தடுத்துவிட முடியும்.

3. விழிப்புணர்வு

காதல் நாடகத் திருமண நிகழ்வுகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு எதிரான அனைத்து வித வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வை தமிழ்நாடு அரசு ஏற்படுத்த வேண்டும்.

4. இளம் பெண்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுத்திட்டம்

இளம் பெண்களின் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்கான விரிவான திட்டத்தை அரசு வகுத்து செயல்படுத்த வேண்டும். குறிப்பாக, இளம்பெண்கள் கல்வி, இளம்பெண்கள் உடல்நலம், இளம்பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்தல், குழந்தைத் திருமண ஒழிப்பு, இளம்பெண்களின் திறன், தலைப்பண்பு மேம்பாடு மற்றும் வேலை, தொழில் முன்னேற்ற திட்டங்களை உள்ளடக்கியதாக அத்திட்டம் அமைய வேண்டும்.

காதல் திருமணங்களையும் கலப்புத் திருமணங்களையும் தடை செய்யலாமா?

காதல் திருமணங்களையோ கலப்புத் திருமணங்களையோ தடை செய்வது தேவையில்லாதது. அது சாத்தியமும் இல்லை. உலகின் எந்த மூலையிலும் அப்படிப்பட்ட சட்டம் எதுவும் இல்லை.

இந்திய நாடு உலகின் முதன்மையான பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களில் கையொப்பமிட்டுள்ளது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும் தனிமனித உரிமைகள், அடிப்படை உரிமைகளுக்கு உயரிய இடத்தை அளித்துள்ளது. இதுபோன்ற சூழலில், காதல் திருமணங்களையோ கலப்புத் திருமணங்களையோ தடை செய்யக் கோருவது முற்றிலும் சாத்தியமற்றது ஆகும்.

காதல் திருமணங்கள் கலப்புத் திருமணங்கள் அனுமதிக்கப்படுவதாலேயே, அவை மிகப்பெரிய அளவில் நடக்கும் என்பதும் கற்பனையானதுதான். 

முழுவயதடைந்தவர்கள் சுதந்திரமாகவும், முழு சம்மதத்துடனும் திருமணம் செய்து கொள்ளலாம், இனம், மொழி, தேசியம், மதம் போன்றவை அதற்கு தடையாக இருக்கக் கூடாது என்கிற 'பன்னாட்டு மனித உரிமைப் பிரகடனம்' உலக நாடுகளால் 1948 ஆம் ஆண்டில் ஐநாவால் ஏற்கப்பட்டது. அதன் பின்னர் 'திருமண ஒப்புதல், திருமண வயது, திருமணப் பதிவு குறித்த பன்னாட்டு உடன்படிக்கை' 1962 ஆம் ஆண்டு ஏற்கப்பட்டது. இதுவும் "இனம், மொழி, தேசியம், மதம்" என்கிற கட்டுப்பாடுகள் கூடாது என்றது.

இதனாலெல்லாம், உலகில் எந்த மூலையிலும் இனம், மொழி, தேசிய இனம், மதம் கடந்த திருமணங்கள் பெருமளவில் நடக்கவில்லை. மனிதர்கள் எப்போதும் ஏதேனும் ஒரு இனம், ஒரு மொழி, ஒரு தேசிய இனம், ஒரு மதத்துடன் தன்னை இணைத்துக் கொள்கின்றனர். இதனைக் கடந்து விதிவிலக்காக நடக்கும் திருமணங்கள் மறுபடியும் ஏதேனும் ஒரு மொழி, ஒரு தேசிய இனம், ஒரு மதத்துடன் கலந்துவிடுகிறது. புதிய அடையாளத்தை உருவாக்குவதும் இல்லை. இருக்கிற அடையாளத்தை அழிப்பதும் இல்லை.

எனவே, சாதிமாறி திருமணங்கள் பெருமளவில் நடக்கும் என்றோ, அதனால் சாதி ஒழிந்துவிடும் என்றோ நினைப்பது கற்பனையானது. நடைமுறையில் சாத்தியமற்றது. தமிழ் நாட்டில் சாதிமாறி நடக்கும் திருமணங்கள் பெரும்பாலும் தந்தையின் சாதியுடன் கலந்துவிடுகின்றன. கலப்புமண தம்பதிகளின் குழந்தைகள் பெரும்பாலும் தந்தை வழி சாதியில்தான் மணமுடிக்கின்றனர்.

கலப்புத் திருமணங்களை தடை செய்யாமல் - நாடகத் திருமணங்களை கட்டுப்படுத்த முடியுமா?

பதின் வயதில் இருக்கும் பள்ளிக் கல்லூரி மாணவிகள்தான் பெருமளவில் நாடகத் திருமணங்களில் சிக்குகின்றனர். எனவே, இளம் வயது திருமணங்களைத் தடுப்பதன் மூலம், அதற்கு பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்குவதன் மூலம் நாடகத் திருமணங்களை ஒழிக்க முடியும்.

அண்மையில் 25.11.2012 அன்று பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் சார்பில் பெரியார் திடலில் ஏற்பாடு செய்யப்பட்ட, "மன்றல் 2012 - சாதி மறுப்பு இணைதேடல் பெருவிழா" எனும் நிகழ்ச்சிக்கான அறிவிப்பில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது:

 "ஆண், பெண் இருவரும் 21 வயது நிரம்பியவர்களாகவும், தனித்து வாழ்க்கை நடத்துவதற்கான பொருளாதார வாய்ப்பும் கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். திருமணம் செய்து கொள்ள விரும்புவோரிடம் மருத்துவம், மனவளர்ச்சி சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்படுவர்." (இங்கே காண்க)

இந்த அறிவிப்பை சட்டபூர்வமானதாக ஆக்க, எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும். குறிப்பாக, 21 வயது முடியாதோர் திருமணத்திற்கு பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வேண்டும்.

லண்டன் உலகத் தமிழர் மாநாடு - எனது அனுபவம்!

லண்டனில் தமிழர் ஒருங்கிணைப்பு

இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் சுமார் ஐந்து லட்சம் இலங்கைத் தமிழர்களை ஒருங்கிணைக்கின்ற அமைப்பாக உள்ள பிரித்தானியத் தமிழர் பேரவையின் தொடர் முயற்சியால் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 80 பேர் வரை உறுப்பினராக உள்ள தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக்குழு (All Party Parlimentary Groups for Tamils) உருவாகியுள்ளது. இந்த இரண்டு அமைப்புகளும் இணைந்து பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்திலேயே, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இனப்படுகொலை குறித்து ஒரு சர்வதேச சுயாதின விசாரணை கோரி (International Independent Investigation)  உலகத் தமிழர் மாநாட்டை கடந்த 7,8,9-ஆம் தேதிகளில் லண்டன் மாநகரில் நடத்தினர். இம்மாநாட்டில் நான் பங்கேற்றேன்.

லண்டன் மாநகரில் தமிழக அரசியல் அமைப்பினர், இலங்கை அரசியல் தலைவர்கள், இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் "இலங்கை மீது பன்னாட்டளவிலான ஒரு தன்னிச்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று ஒரே குரலாக வலியுறுத்தினர்.


இதற்காக இங்கிலாந்தின் புகழ்பெற்ற வெஸ்மினிஸ்டர் நாடாளுமன்ற அரங்கில் இரண்டு கூட்டங்களும், தமிழ் மக்களிடையே இரண்டு கூட்டங்களும் நடத்தப்பட்டன.

இந்தக் கூட்டங்களின் போது எடுக்கப்பட்ட சில 'வித்தியாசமான' நிழற்படங்கள்

தமிழ்நாட்டில் ஒரே மேடையில் காண முடியாத காட்சி: பெரியார் தொண்டர் விடுதலை ராஜேந்திரனுடன் இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்.
 திரு.தொல்.திருமாவளவன்  மற்றும் மருத்துவர் கிருஷ்ணசாமி.
எனது தந்தையின் பெயர் இரத்தினப் படையாட்சி. இங்கே என்னுடன் நிற்பவர் பெயர் பிரகாசன் படையாட்சி. தென்ஆப்பிரிக்க இலங்கைத் தமிழர் ஆதரவு அமைப்பின் நிருவாகி.
லண்டன் பிள்ளையார் கோவிலில்  திரு. கோ.க.மணி, மருத்துவர் கிருஷ்ணசாமி,  திரு. தொல்.திருமாவளவன் ஆகியோருடன் நான்
இந்த மாநாடு குறித்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் திரு. அர்ஜுன் சம்பத் எழுதிய விரிவான கட்டுரை இதோ:


ஞாயிறு, டிசம்பர் 02, 2012

காதல் நாடகத் திருமணக் கொடுமைக்கு எதிர்ப்பு: திரளும் தமிழ்நாட்டு சமூகங்கள்!

அனைத்து சமுதாயத் தலைவர்கள் கலந்தாய்வுக் கூட்டம் 2.12.2012 அன்று சென்னை எழும்பூரில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தின் தீர்மானங்கள்

1. எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டமானது பிடிகாதவர்களைப் பழிவாங்கவும், பொய் புகார் அளிக்கவும், கட்டப் பஞ்சாயத்துக்காகவும் முறைகேடாகப் பயனபடுத்துவதைத் தடுக்க அச்சட்டத்தை திருத்த வேண்டும்.

2. எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை திருத்தக் கோரி 4.01.2013 அன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அனைத்து சமுகத்தினர் ங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

3. காவல்துறையினர் ஒரு தரப்பிற்கு ஆதரவாகச் செயல்படும் போக்கை தடுத்து, அவர்கள் நடுநிலையுடன் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. பதின் வயதில் நடைபெறும் காதல் நாடக திருமணங்களைத் தடுக்கும் வகையில், பிரேசில், சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்காவின் மிசிசிபி மாகாணம் போன்ற இடங்களில் உள்ளது போன்று 21 வயதுக்கு முன்பு திருமணம் செய்ய பெற்றொரின் ஒப்புதல் கட்டாயம் தேவை என்கிற சட்டதைக் கொண்டுவர வேண்டும்
5. பெண்கள், மகளிருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க சிறப்பு நடவடிக்கைகள் வேண்டும்.

6. சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தனித்தொகுதிகளை பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்க வேண்டும்

7. கடந்த நான்காண்டுகளில் நடைபெற்ற காதல் நாடகத் திருமாணங்கள், அவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் விசாரணக் குழு அமைத்து உண்மை நிலையை வெளியிட வேண்டும்.

--ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பங்கேற்றோர்

இக்கூட்டத்தில் மருத்துவர் அய்யா, வன்னியர் சங்கத்தின் ஜெ. குரு, 

தேவர் அமைப்புகளின் பி.டி. அரசக்குமார், தி. அரப்பா, இ.ஜி. பாண்டியன், சைதை கணேசன், மாறன், பார்வர்ட் பிளாக் ஆ. சாமி அய்யா உள்ளிட்டோர்,

பாரிவேந்தரின் பார்கவ குல (உடையார்) சங்கத்தின் சார்பில் கோவைத் தம்பி,

கொங்கு வேளாளர்கள் அமைப்புகளைச் சேர்ந்த ஜி.கே. நாகராஜன், பெ. செந்தமிழன் உள்ளிட்டோர்,

இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் த.மு.மு.க'வின் குனங்குடி ஆர்.எம். அனீபா, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவின் எம். ஷபீக் அன்சாரி, எஸ்.டி.பி.ஐ கட்சியின் அப்துல் சத்தார் உள்ளிட்டோர்,
நாடார் அமைப்புகளின் சார்பில் புழல் ஏ. தர்மராஜ், த. மோகன், இரா. சிவக்குமார் உள்ளிட்டோர்,

வேளாளர்கள், பிள்ளைமார், முதலியார் கூட்டமைப்பின் நடிகர் கே. ராஜன்,

மீனவர் அமைப்புகளின் எம்.இ. இராஜா, ஏ. சௌந்தர் உள்ளிட்டோர்,

மற்றும் யாதவர், நாயுடு, முத்தரையர், முதலியார், ரெட்டியார் உள்ளிட்ட பல்வேறு சமுதாய அமைப்புகளைச் சேர்ந்தோர் பங்கேற்றனர். அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து செயல்படுவது என்று முடிவெடுக்கப்பட்டது. (இக்கூட்டத்திற்கு தாழ்த்தப்பட்ட சமூக அமைப்பினர் அழைக்கப்படவில்லை.)

தீர்மான நகல் இதோ:
PMK All Community Meet- Resolutions

திங்கள், நவம்பர் 26, 2012

ஜெனீவா பயணம்ஐநா மனித உரிமைக் குழு: சில நெகிழவைக்கும் அனுபவங்கள்!

ஐநா மனித உரிமை குழுவில் நடைபெற்ற இலங்கை மீதான காலமுறை விசாரணையை நேரில் காண நான் ஜெனீவா நகருக்கு சென்றிருந்தேன் (நவம்பர் 2012). அதில் சில அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஐநாவில் தமிழர் குரலும் பசுமைத் தாயகமும்

இலங்கையில் போர் உச்சத்தை எட்டிய 2009 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் பலரும் அதற்கு எதிரான முன்னெடுப்புகளில் ஈடுபட்டிருந்தனர் (அதில் படுதோல்வி அடைந்தனர் என்பது வேறு விடயம்). அப்போது, இது தொடர்பாக ஐநா மனித உரிமைக் குழுவில் முறையிட வேண்டும் என்று பசுமைத் தாயகம் அமைப்பின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கூறினார்கள். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு. எம்.ஜி.தேவசகாயம், பியுசிஎல் அமைப்பின் திரு. சுரேஷ் ஆகியோருடன் இணைந்து இதற்காக முயற்சித்தோம். பிப்ரவரி மாதத்தில் ஐநா மனித உரிமைக் குழுவின் பத்தாவதுக் கூட்டத்தில் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்தோம். (இங்கே காண்க: A Crying Need To Protect The Rights Of Civilians In Northern Sri Lanka)  இலங்கை மீதான ஐநா மனித உரிமைக் குழுவின் சிறப்புக் கூட்டம், பாதுகாக்கும் பொறுப்புடைமை விதியை செயலாக்குதல், இலங்கையில் ஐநா மனித உரிமைக் கண்காணிப்பு, இனப்படுகொலைத் தடுப்பு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தோம். அந்த அறிக்கை ஐநா மனித உரிமைக் குழுவால் அதிகாரப்பூர்வமாக விநியோகிக்கப்பட்டது.

அதுதான் ஐநா மனித உரிமைக் குழுவில் தமிழர்கள் சார்பில் எடுக்கப்பட்ட முதல் முயற்சியாக இருந்தது. அடுத்து வந்த மே மாதத்தில் இலங்கை மீதான சிறப்புக்கூட்டம் ஐநா மனித உரிமைக் குழுவில் கூட்டப்பட்டது (அதிலும் தமிழர்களுக்கு தோல்விதான்). அப்போதும் பசுமைத் தாயகம் சார்பில் அறிக்கை சமர்ப்பித்தோம். எனினும், பொருட்செலவின் காரணமாக நேரில் பங்கேற்க இயலவில்லை.

எனினும், மனித உரிமைகள் தொடர்பில் ஆர்வமுள்ள கனடா மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் இக்கூட்டங்களில் பங்கேற்க நாங்கள் வழி செய்தோம். ஐநா மனித உரிமைக் குழுக் கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்க அனுமதி பெற்றுத் தந்தோம்.
ஐநா மனித உரிமைகள் குழு அரங்கில் திரு. கோ.க.மணி அவர்களுடன் நான்
தற்போது ஜெனீவா சென்றபோது அவர்கள் ஒரு முக்கிய விடத்தை பகிர்ந்து கொண்டனர். 'பசுமைத் தாயகம் அளித்த வாய்ப்பின் அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐநா மனித உரிமைக் குழு கூட்டங்களில் பங்கேற்கத் தொடங்கிய பின்னர்தான், பன்னாட்டு மனித உரிமைத் தொடர்பான ராஜதந்திர வட்டாரங்களுடன் நேரில் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் தொடர்பும் ஏற்பட்டது. படிப்படியான அந்த நல்லுறவின் காரணமாகவும், அமெரிக்காவில் இருந்த தொடர்புகள் மூலமும், அமெரிக்க வெளியுறவுத் துறையினை அனுகி, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை 2012 மார்ச்சில் சாத்தியமாக்கினோம்' என்று அவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் பசுமைத் தாயகம் அமைப்புதான் இலங்கைத் தமிழர்களுக்கு ஜெனீவாவில் முதன்மையான வழியாக இருந்தது. ஆனால், ஜெனீவா கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்றதன் விளைவாக, அவர்கள் அங்கு சகஜமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதை இப்போது காண முடிந்தது. அரசு சார்பற்ற மனித உரிமை அமைப்புகள், ஐநா அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் தூதர்களுடன் அவர்கள் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். 2012 மார்ச் தீர்மானத்தில் வெற்றியும் அடைந்தனர்.

உலகின் புகழ்பெற்ற சட்டப்பல்கலைக் கழகங்களில் பன்னாட்டுச் சட்டத்தை முதன்மைப் பாடமாக படித்துக் கொண்டிருக்கும் இளம் தமிழ் மாணவர்கள் இந்தப் பணியில் பகுதி நேரமாக ஈடுபட்டுள்ளனர். உலகின் பல மனித உரிமை அமைப்புகளுடன் அவர்கள் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பதால், இனி பசுமைத் தாயகத்தின் மூலமாக ஐநா அவைக்குள் செல்ல வேண்டும் என்கிற தேவையும் இப்போது அவர்களுக்கு இல்லை. ஒரு நீண்ட மனித உரிமைப் பயணம் பசுமைத் தாயகத்தால் தொடங்கியது என்பது நெகிழ்ச்சியான விடயம்தானே.

திமுக பொருளாளர் ஸ்டாலின் அவர்களுடன் சந்திப்பு!

சென்னையிலிருந்து ஜெனீவா செல்ல துபாய் வழியே பயணித்த போது, துபாய் வானூர்தி நிலையத்தில் திமுக பொருளாளர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அவரது துணைவியாருடன் நின்றிருந்தார். அவரிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். சென்னையிலிருது துபாய் சென்ற வானூர்தி தாமதமானதால், அவர் லண்டன் செல்ல வேண்டிய வானூர்தியைப் பிடிக்க முடியவில்லை. அடுத்த விமானத்திற்காக காத்திருப்பதாகக் கூறினார்.
லண்டன் நாடாளுமன்ற அரங்கில் திரு. மு.க. ஸ்டாலின், திரு. கோ.க. மணி ஆகியோருடன் நான்.
அவர் லண்டனில் கலந்துகொள்ள உள்ள நிகழ்வில் நானும் கலந்துகொள்வேன் என்று கூறினேன். அவர் எனது பயணம் குறித்தும், திரு கோ.க.மணி அவர்களின் பயணம் குறித்தும் விசாரித்தார். பின்னர் திரு. டி.ஆர். பாலு அவர்கள் அங்கு வந்த போது "இலங்கை மீதான காலமுறை விசாரணையில் பங்கேற்க செல்கின்றனர்" என்று என்னை அவரே அறிமுகப்படுத்தி வைத்தார்.

அதன் பின்னர் ஒரு வார காலம் கழித்து, லண்டன் நாடாளுமன்ற அரங்கில் திரு. கோ.க.மணி அவர்களை நேரில் சந்தித்த போது, 'துபாய் விமான நிலையத்தில் அருளைப் பார்த்தேன், நீங்கள் இங்கே வருவீர்கள் என்று கூறினார்' என்று திரு. கோ.க.மணி அவர்களிடம் திரு. ஸ்டாலின் கூறினார். ஒருமுறை வழியில் சந்தித்ததை இன்னொரு இடத்தில் ஞாபகமாகக் கூறுவது எல்லோராலும் முடியாது.

ஜெனீவாவில் ஒரு நெகிழ்ச்சி

ஜெனீவா நகருக்கு நான் சென்றடைந்த உடன், அங்கு சென்று சேர்ந்துவிட்ட தகவலை தமிழ்நாட்டில் உள்ள நண்பர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக, செல்பேசி இணைப்பை வாங்குவதற்கு ஒரு கடைக்குச் சென்றேன்.

அங்கு 10 பிராங்க் (ரூ. 580) மதிப்பில் ஒரு செல்பேசிக்கான சிம் கார்டினை வாங்கினேன். அந்தக் கடையில் தமிழ் பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது. "இந்த 'சிம்' வேலைசெய்ய எவ்வளவு நேரம் ஆகும்?" என்று கேட்டதற்கு, அந்தக் கடைகாரர் "சுமார் ஒரு மணி நேரம் ஆகலாம்" என்று இலங்கைத் தமிழில் கூறினார்.

பின்னர், "பத்து பிரங்க் கட்டணத்தைக் கொண்டு எத்தனை நாட்கள் பேசலாம்?, இது போதுமா?" என்று நான் கேட்டேன். "நீங்கள் எத்தனை நாள் ஜெனீவாவில் இருப்பீர்கள்?" என்று கடைகாரர் கேட்டார். அதற்கு "இலங்கை மீதான் காலமுறை விசாரணைக்காக வந்துள்ளேன். நான்கு நாட்கள்தான் ஜெனீவாவில் இருப்பேன்" என்று கூறினேன்.
ஜெனீவா ஐநா அலுவலகம் முன்பு நான்
உடனே, என்னிடம் கொடுத்திருந்த சிம் கார்டினை அந்தக் கடைகாரர் திரும்ப வாங்கிக்கொண்டு, வேறொரு சிம் கார்டை எடுத்து அதனை கணினியில் செலுத்தி ஏதோ செய்தார். பின்னர் எனது கைப்பேசியை வாங்கி அதில் சிம் கார்டினை போட்டு - உடனடியாக நான் தமிழ்நாட்டில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ள வழிசெய்து தந்தார்.

அதுமட்டுமல்லாமல், நான் அந்த சிம் கார்டை வாங்க கொடுத்திருந்த பணம் 10 பிராங்கை (ரூ. 580) திருப்பிக் கொடுத்துவிட்டார். நான் "எதற்காக பணத்தை திருப்பிக் கொடுக்கிறீர்கள்?" என்று கேட்டபோது, "நீங்கள் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக வந்திருக்கிறீர்கள். உங்களிடம் நான் பணம் வாங்க மாட்டேன்" என்று கூறிவிட்டார். எவ்வளவோ கேட்டுக்கொண்டும் அவர் அதை வாங்க மறுத்துவிட்டார்.

இந்தியாவின் இரட்டை நாக்கு

மிகமுக்கிய நிகழவான இலங்கை மீதான காலமுறை விசாரணை 1.11.2012 அன்று மனித உரிமை அவையில் நடந்தது. இதில் இலங்கை அரசின் பிரதிநிதி மகிந்த சமரசிங்க 'இலங்கை மனித உரிமையை மதிக்கும் நாடு' என மிகவும் நிட்டி முழக்கி பொய்யுரைத்தார். இதனை உலக நாடுகள் எதுவும் நம்பவில்லை என்று உடனடியாக அறிய முடிந்தது.

இலங்கை மீதான விவாதத்தில் 98 நாடுகள் பேசினர். இதில் மிகச்சில நாடுகள் தவிர மற்ற எல்லா நாடுகளுமே இலங்கையைக் கண்டிக்கும் விதமாகவே பேசினர். இந்த நிகழ்வின் போது நேர்ந்த எதிர்பாராத மாற்றம் என்பது இந்தியாவின் நிலைபாடுதான்.  இலங்கைக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் 13 ஆவது சட்டத்திருத்தம், வடக்கில் தேர்தல், மனித உரிமை மீறல் குறித்த விசாரணை என பலவற்றைக் குறித்தும் சரமாரியாக இந்தியா கேள்வி எழுப்பியது. (இது குறித்த எனது பதிவு:ஜெனீவா ஐநா மனிதஉரிமை விசாரணையில் ஓர் அதிசயம்: இந்தியாவின் நம்பிக்கையளிக்கும் மாற்றம்!)

ஆனால், இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை! அடுத்த நான்கு நாட்களுக்குள் இந்திய மீண்டும் பல்டியடித்துவிட்டது. நவம்பர் 1 அன்று பிரதானக் கூட்டத்தில் பேசிய விடங்களை இந்தியாவின் சார்பில் இறுதி அறிக்கையில் சேர்க்காமல் விட்டுவிட்டது இந்தியா. இதனால், நவம்பர் 5 அன்று இலங்கை மீதான அறிக்கையை ஏற்கும் கூட்டத்தில் 'இந்தியா முன்னுக்குப் பின் முரணாகச் செயல்படுவதை' பல நாடுகள் மறைமுகமாக சுட்டிக்காட்டி கண்டித்தன.


இனி என்ன?

இனிவரும் நாட்களில், ஐநா மனித உரிமைகள் அவையில் இலங்கைக்கு எதிரான விவாதங்கள் சூடுபிடிக்கும். குறிப்பாக 2013 பிப்ரவரி, மார்ச்சில் நடைபெரும் மனித உரிமைக் குழுவின் 22 ஆம் கூட்டத்தில் மிகக் கடுமையான நெருக்கடியை இலங்கை எதிர்கொள்ளும். அந்த நேரத்தில் இந்தியா, இலங்கைக்கு எதிரான நிலையை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு தமிழர்கள் அனைவரும் ஒரேகுரலில் வலியுறுத்த வேண்டும்.

அதற்கு தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளும், மக்கள் அமைப்புகளும் இப்போதிருந்தே தயாராக வேண்டும். அதுதான் உடனடித் தேவை.