தருமபுரியில் நடந்த கலவரம், தீவைப்பு என்பவை எந்த ஒரு நாகரீக சமுதாயமும் ஏற்க முடியாத வன்முறை நிகழ்வாகும். அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான இந்தக் கொடுமைகளை மனித பண்முள்ள எந்த ஒரு மனிதனும் நியாயப்படுத்த முடியாது.
இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான இழப்பீடு அளிக்கப்பட வேண்டும். இக்கலவரத்தோடு தொடர்புடைய தற்கொலை நிகழ்வால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் உரிய இழப்பீடு அளிக்கப்பட வேண்டும். தற்கொலைக்குத் தூண்டியவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். மிக முதன்மையாக, இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் நடக்காதவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த நேரத்தில் -
தருமபுரி கலவரம் தொடர்பான கட்டுக்கதைகளுக்கு மாறான உண்மைகளை எடுத்துச் சொல்ல வேண்டிய தேவை உள்ளது. அவ்வாறே, இதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் ஆதிக்க சாதி வெறியையும் அடையாம் காண வேண்டியுள்ளது.
தருமபுரி கலவரமும் ஆதிக்கச் சாதி வெறியும்!
தருமபுரி கலவரம் ஆதிக்க சாதிக் கூட்டத்தினருக்கு ஒரு கொண்டாட்டமான பிரச்சார வாய்ப்பாக மாறியிருப்பதை இதுதொடர்பான ஊடகச் செய்திகளும் சமூக ஊடகச் செய்திகளும் உறுதி செய்கின்றன.
தமிழ்நாட்டில் சுரண்டுகிறவர்கள் சுரண்டப்படுகிறவர்கள் என்று தனிமனிதர்கள் யாரும் இல்லை.
சுரண்டும் சாதிகள், சுரண்டப்படுகிற சாதிகள் என்கிற பிரிவினைதான் இருக்கிறது. தனிமனிதர்களின் மேம்பாட்ட நிலைக்கும் பின்தங்கிய நிலைக்கும் சாதிதான் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. இதில்
வன்னியர்களுக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் சுரண்டப்படுகிற சாதிகளின் பட்டியலில்தான் இருக்கிறார்கள். சுரண்டும் சாதிகளாக இல்லை.
தருமபுரி கலவரம் தொடர்பான செய்திகளில் பலர்
"வன்னிய ஆதிக்க சாதி" என்கிற வார்த்தையை வேண்டுமென்றே பயன்படுத்துகின்றனர்.
ஆதிக்கம் என்றால்
"பிறரைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலை; அதிகாரம் மேலோங்கிய நிலை" என்கிறது
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி.
அதிகாரம் மேலோங்கிய நிலை என்பது - அரசியல் அதிகாரம், நீதித்துறை, அரசுத்துறை, காவல்துறை போன்ற வல்லமை மிக்க பதவிகளில் இடம்பெறுதல், பொருளாதார நிலையில் மேம்பட்டிருத்தல், உயர்தரமான கல்வியைப் பெற்றிருத்தல், ஊடகத் துறையில் ஆதிக்கம் என பலவற்றையும் பெற்றிருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
ஆதிகாரம் மேலோங்கிய நிலை என்பதல்ல, ஒரு சாதி "அதிகாரச் சமநிலை" என்பதை அடைய வேண்டுமானால் கூட மக்கள்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப விகிதாச்சார இடங்களை எல்லா நிலைகளிலும் பெற்றிருக்க வேண்டும்.
அத்தகைய ஒரு நிலையை வன்னியர்களும் அடையவில்லை. தாழ்த்தப்பட்டோரும் அடையவில்லை. இந்நிலையில் வன்னியர்களை ஆதிக்க சாதியினர் என்று குறிப்பிடும் "ஆதிக்க சாதிவெறி" கூட்டத்தினரை என்னவென்று சொல்வது?
தருமபுரிக் கலவரம் தொடர்பான வன்னியர்கள் மீதானக் குற்றச்சாட்டுகளில் இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்று தாழ்த்தப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுவது. இதற்கு ஒரு தார்மீக வலிமை இருக்கிறது. அவர்களின் கோபத்தில் நியாயம் இருக்கிறது.
ஆனால், உண்மையான ஆதிக்க கூட்டத்தினர் - அதாவது அரசியல் அதிகாரம், நீதித்துறை, பத்திரிகை, அரசு நிருவாகம், பொருளாதார வலிமை என எல்லாவற்றிலும் தமது மக்கள்தொகை விழுக்காட்டை விட மிகக் கூடுதலாக அபகரித்துள்ள சிறுபான்மை சாதிக் கூட்டத்தினர் - தருமபுரி கலவரத்தைக் காரணம காட்டி வன்னியர்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே கசப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் பிரச்சாரம் செய்கின்றனர்.
வன்னியர்களும் தாழ்த்தப்பட்டோரும் தமக்குள் மோதிக்கொண்டால் - உண்மையான ஆதிக்க சிறுபான்மை சாதிக் கூட்டத்தினருக்கு எதிராக திரும்ப மாட்டார்கள் என்கிற சதி இப்பிரச்சாரத்தின் பின்னால் உள்ளது. தத்தமது உரிமைக்காக வன்னியர்களுக்கும் தாழ்த்தப்பட்டோரும் போராடாதவரை உண்மையான ஆதிக்க கூட்டத்தினருக்கு கோண்டாட்டம்தானே!
நாளைக்கே "தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும்" என்று ஒரு போராட்டத்தை வன்னியர்களும் தாழ்த்தப்பட்டோரும் தொடங்கினால் இந்த ஆதிக்கக் கூட்டத்தினர் அதற்கு எதிராக நிற்பார்கள்.
சாதிக் கலவரங்களால் வன்னியர்களுக்கும் கேடு
வன்னியர்கள் தொடர்புடைய சாதிக் கலவரம் எதுவாக இருந்தாலும், அவற்றால் வன்னியர்களுக்கு பெரும் கேடுதான் நேருகிறது.கலவரத்தில் தொடர்பில்லாத வன்னியர்கள் பலர் கைது செய்யப்பட்டு, பலகாலம் நீதிமன்றங்களுக்கு இழுத்தடிக்கப்பட்டு கடைசியில் குற்றவாளிகள் இல்லை என அனுப்பப்படுகின்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் பெரும் பொருட்செலவு, அவமானம், குடும்பம் சீரழிதல் எனப் பலக்கேடுகளை அடைந்துவிடுகின்றனர். இது போன்ற நிகழ்வுகள் அருகருகே வாழும் வன்னியர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரிடையே மனக்கசப்பை ஏற்படுத்தி விடுகின்றன.
ஒட்டு மொத்தத்தில், ஏற்கனவே மிகவும் பின்தங்கியுள்ள வன்னியர்களை சாதி மோதல்கள் மேலும் மேலும் கீழே தள்ளுவனவாகவே அமைகின்றன. எனவே,
சாதி மோதல்கள் தாழ்த்தப்பட்டாவர்களுக்கு எதிரானவை மட்டுமல்ல. அவை வன்னியர் சமூகத்தினருக்கும் எதிரானவைதான்.
தருமபுரி கலவரம்: கட்டுக்கதைகளும் உண்மையும்.
தருமபுரி கலவரம் தொடர்பில் பல கட்டுக்கதைகள் உலவுகின்றன. 1. வன்னியர்களே கலவரம் செய்தனர், 2. பாமகவினர் மட்டுமே கலவரம் செய்தனர், 3. காதல் திருமணம் ஒரு சட்டப்படியான திருமணம்தான், 4. தற்கொலை செய்துகொண்ட நாகராஜன் ஒரு குடிகாரர், அவர் கொலை செய்யப்பட்டார், - இப்படி பலக் கட்டுக்கதைகள் உலவுகின்றன. அவை உண்மையாகவும் காட்டப்படுகின்றன. இதற்கெல்லாம் பதில் சொல்லப்பட வேண்டும்.
கட்டுக்கதை: 1. வன்னியர்களே கலவரம் செய்தனர். வன்னியர்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே மோதல்.
உண்மை: தருமபுரி கலவரத்தில் தொடர்புடையவர்கள் எனக் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நாயடுக்கள் (13 பேர்), செட்டியார்கள் (7 பேர்), . மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இசைவேளாளர் (5 பேர்), பழங்குடியினத்தைச் சேர்ந்த குறும்பர்கள் (3 பேர்)ஆகியோரும் உள்ளனர்.
பல்வேறு சாதியினரும் கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டும், கைதுகளும் நடைபெற்றுள்ள நிலையில் இதனை "வன்னியர்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே மோதல்" என்று வருணிப்பது வன்னியர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடன்றி வேறில்லை.
கட்டுக்கதை: 2. பாமகவினர் மட்டுமே கலவரம் செய்தனர்.
உண்மை: பாமகவினர் மட்டுமே கலவரத்தில் ஈடுபட்டனர் என்பது அயோக்கியத் தனமான் குற்றச்சாட்டு.
தற்கொலைச் செய்துகொண்ட நாகராஜன், நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.க கட்சியைச் சேர்ந்தவர். இக்கலவரத்தில் தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்டவர்களில் அதிமுகவின் பஞ்சாயத்து தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர், திமுகவின் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் எனப் பல கட்சியினரும் உள்ளனர்.
கைதானவர்களில் அதிக அளவில் 17 பேர் அதிமுகவினர். கைதானவர்களில் அதிமுக மட்டுமில்லாமல் தி.மு.க (16 பேர்), ம.தி.மு.க (5 பேர்), தமிழக விவசாயிகள் சங்கம் (12 பேர்), பா.ம.க (10 பேர்), தே.மு.தி.க (7 பேர்), கம்யூனிஸ்ட் என அனைத்துக் கட்சியினரும் உள்ளனர். எனவே இதனை பா.ம.க நடத்திய தாக்குதல் எனக் கூறுவது சிலருடைய குறுகிய அரசியல் நோக்கமே.
குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் மிகக் குறைவானவர்கள் மட்டுமே பாமகவினர். அப்படியிருக்கும் போது - ஏதோ பாமகதான் வன்முறைக்கு காரணம் என்று கூறுபது ஏன்? பாமக மட்டுமே வன்னியர்களுக்காகப் பேசுகிறது. அந்த ஒருகுரலையும் நசுக்கிவிட வேண்டும் என்கிற சதிதான் இதன் பின்னணி என்பதைத் தவிர இதில் வேறேதும் இல்லை.
கட்டுக்கதை: 3. நடந்த காதல் திருமணம் ஒரு சட்டப்படியான திருமணம்தான்
உண்மை: இது ஒரு அப்பட்டமான பொய். நடந்திருப்பது சட்டவிரோதமான ஒரு குழந்தைத் திருமணம். ஏனெனில், திருமணம் செய்துகொண்ட
இளவரசன் இன்னமும் சட்டபூர்வமான திருமண வயதான 21 ஐ எட்டவில்லை. அவருக்கு இப்போது 19 வயதுதான் ஆகிறது.
இளவரசனின் பிறந்த தேதி 3.3.1993. அப்படியிருக்கும் போது, அவர் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக சிலரும், பதிவுத் திருமணம் செய்துக் கொண்டதாக உண்மை அறியும் குழுக்களும் கூறுகின்றன.
ஒருவேளை அவர் பதிவுத் திருமணம் செய்து கொண்டிருந்தால் அது சட்டத்தை ஏமாற்றிய நிகழ்வாகும்.
இளவரசன் இன்னமும் 21 வயதை எட்டவில்லை.
அவரது வயது 19 மட்டுமே என்பதற்கான ஆதாரம் இதோ:
இளவரசனின் மாற்றுச் சான்றிதழ் - பிறந்த தேதி: 3.3.1993 (வயது 19)
இளவரசனின் திருமணம் சட்ட விரோதமானது என்பதால்,
கலவரம் நியாயமானது என்று ஆகிவிடாது. சட்டவிரோதமான இந்தத் திருமணம் தடுக்கப்பட்டிருந்தால் இந்த கலவரம் நேர்ந்திருக்க வாய்ப்பில்லையே என்பதுதான் நமது கருத்து.
கட்டுக்கதை: 4. தற்கொலை செய்துகொண்ட நாகராஜன் கொலை செய்யப்பட்டிருக்கலாம்.
உண்மை: இது ஒரு கடைந்தெடுத்த அயோக்கியத் தனமானக் குற்றச்சாட்டு. தேமுதிகவில் உறுப்பினராக இருந்த நாகராஜன் ஒரு கவுரவமான குடிமகனாகவே இருந்திருக்கிறார்.
அவர் காவல் நிலையைத்தில் ஒரு காவல்துறை உதவி ஆய்வாளரால் தாறுமாறாக அவமானப் படுத்தப்பட்டதாலேயே தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. அதனை அவரது மனைவியும் உறுதி செய்கிறார். இது தொடர்பான வழக்கில் அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது வழக்குத் தொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
கலவரத்திற்கு உண்மைக் காரணம் என்ன?
தருமபுரி கலவரம் என்பது இரு சாதிகளுக்கு இடையேயான கலவரமோ, இரு கட்சிகளுக்கு இடையேயான கலவரமோ அல்ல. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தாழ்த்தப்பட்டவர் அல்லாத மக்களுக்கும் இடையே பகை உணர்ச்சி அங்கு வளர்ந்து வந்துள்ளது. அதற்கு பலக்காரணங்கள் இருக்கலாம்.
குறிப்பாக
"கட்டாயக் காதல் - கலப்பு - நாடகத் திருமணங்கள்" நடத்தப்படுவதாக, தமிழ்நாட்டில் பல சமூகத்தவரிடையே மனக்கசப்பு உருவாகியுள்ளது. இதுவே, பல இடங்களில் சமுதாய மோதல்களுக்கு வழிவகுக்கிறது. காதல் திருமணங்கள் தவறு என்று கூற முடியாது. ஆனால்,
சாதி ஒழிப்பு என்பதை ஒரு நோக்கமாக வைத்து கட்டாய காதல் திருமணங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுமானால் - அவையும் மனித உரிமைகளுக்கு எதிரான நிகழ்வுகளே ஆகும் (இது குறித்து பின்னர் விரிவாக பார்ப்போம்).
இனி என்ன?
ஆடுகளுக்கிடையே மோதல் என்பதற்காக ஓநாய்களிடம் பஞ்சாயத்திற்கு போக முடியாது. இந்த நிகழ்வில் தமிழ்நாட்டின் ஆதிக்க சக்திகள் குளிர்காய அனுமதிக்கக் கூடாது.
""மொழி, இனம் ஆகியவற்றின் நலன்களுக்காக, தமிழீழ விடுதலைக்காக, தமிழக மாநில உரிமைகளுக்காக, கடந்த காலங்களில் பா.ம.கவும் விடுதலைச் சிறுத்தைகளும் தொலைநோக்குப் பார்வையோடு கைகோர்த்து களமாடியதைபோல, தற்போதைய நெருக்கடியான இச்சூழலில் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் மீண்டும் பா.ம.க-வும் விடுதலைச் சிறுத்தைகளும் கைகோர்ப்போம் வாருங்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவல் விடுத்துள்ளது. தலித் மக்களுக்கெதிரான வன்முறை வெறியாட்டத்தில் அனைத்து கட்சிகளைச் சார்ந்த தலித் அல்லாதவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை விடுதலைச் சிறுத்தைகளும் ஊடகவியலார்களின் சந்திப்பில் சுட்டிகாட்டியிருக்கிறது."" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்
திருமாவளவன் அவர்கள் கூறியுள்ளார்கள்.
இப்படி ஒரு நிகழ்வு நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை காவல்துறை முன்பே அறிந்திருந்ததாகக் கூறுகிறார்கள். அப்படியானால், இதனை முன்கூட்டியே தடுக்கத் தவறியது ஏன்? என்பதற்கு விடைகாண வேண்டும்.
தருமபுரி நிகழ்வில் ஈடுபட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் நடக்காவண்ணம் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் கலந்து பேசி தீர்வுகாண முன்வர வேண்டும்.
சமுதாய மோதல்களுக்கு சட்டத்தால் மட்டுமே தீர்வுகாண முடியாது. சமுதாயத் தலைவர்கள் முன்னின்று நல்லிணக்கத்திற்காகவும், ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காகவும் பாடுபட வேண்டியதே இப்போதைய தேவை.