Pages

சனி, மார்ச் 11, 2017

சிவபெருமானின் தந்தை வீர வல்லாள மகாராஜா

அருள்மிகு அண்ணாமலையார் மகனாக அவதரித்து மகனின் கடமை ஆற்றும் மாசி மகம் திருநாள்!
மூன்றாம் வீர வல்லாள மகாராஜா. நடுநாடு எனப்பட்ட திருவண்ணாமலை பகுதியை ஆண்ட அரசர்களில் புகழ்பெற்றவர். வல்லாள ராஜன் கோபுரம் எனப்படும் திருவண்ணாமலை ஆலயத்தின் ராஜ கோபுரத்தை நிர்மாணித்தவர். இவருக்கு சிவபெருமானே மகனாக வந்து பிறந்தார் என்பது நம்பிக்கை ஆகும். இறந்து போன தனது தந்தை வல்லாள மகராஜனுக்கு மாசி மகம் நாளில் சிவபெருமானே திதி கொடுக்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை கோவிலில் நடந்து வருகிறது.

பின்னணி

ஹோய்சாளப் பேரரசு என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய அரச மரபின் கடைசி மாமன்னர் வீர வல்லாள மகாராஜா. கி.பி 1291 -ல் தொடங்கி, கி.பி. 1343 ஆம் ஆண்டுவரை கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளையும் வட தமிழ்நாட்டையும் ஆந்திராவின் சில பகுதிகளையும் ஆட்சி செய்தார். இப்பேரரசின் தலைநகரம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹளபேடு. இவரது இரண்டாம் தலைநகரம் திருவண்ணாமலை.
வல்லாள மகாராஜா சிலை, திருவண்ணாமலை கோவில்.

ஹோய்சாள மன்னர்கள் சோழர்களுடனும் பாண்டியர்களுடனும் திருமண உறவு கொண்டிருந்தனர். அவர்களால் மாமன் உறவில் அழைக்கப்பட்டனர். சோழப்பேரரசை பாண்டியர்களிடமிருந்தும் காடவர்களிடமிருந்தும் இவர்கள் காப்பாற்றினர். மூன்றாம் குலோத்துங்கச் சோழனும், மூன்றாம் இராசராசனும் வல்லாள இளவரசிகளை மணந்தனர். இரண்டாம் வல்லாளன் சோழ இளவரசியை மணந்தார். மூன்றாம் வீரவல்லாளனின் தாத்தாவான ஹோய்சாள சோமேஸ்வரன் கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழர்களின் அரண்மணையில் வாழ்ந்தார். திருச்சிக்கு அருகே கண்ணனூரில் தலைநகரை அமைத்தார்.

வீர வன்னியர் மரபு

வன்னியர்கள் வடபால் முனிவரின் யாகத்தீயில் இருந்து உதித்தவர்கள் என்பது வன்னிய புராணம் குறிப்பிடும் செய்தி ஆகும். இதே தொன்மக்கதையை ஹோய்சாளர்களும் கொண்டிருந்தனர்.

கி.மு. 4 ஆம் நூற்றாண்டு வாக்கில் எருமை நகரம் எனப்பட்ட மைசூர் அருகே துவரை நகரை இருங்கோவேள் என்னும் தமிழச் சிற்றரசன் ஆண்டுவந்தான். இவனைப்பற்றி புறநானூறு பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது:

"நீயே, வடபான் முனிவன் தடவினுட் டோன்றிச்
செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறற்போ ரண்ணல்
தாரணி யானைச் சேட்டிருங் கோவே
ஆண்க னுடைமையிற் பாண்கட னாற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்" (புறநானுறு  201)

வடபால் முனிவன் எனப்படும் சம்புமுனிவரின் ஓம குண்டத்தில் தோன்றித் துவரை நகரை நாற்பத்தொன்பது தலைமுறையாகத் தொன்றுதொட்டு ஆண்டுவந்தவன் இருங்கோவேள் ஆகும். இவனே புலிக்கடிமால் எனப்பட்டான். பாரியின் மகளிராகிய அங்கவை, சங்கவை என்பவரைக் கபிலர் இருங்கோவேள் அரசனிடம் அழைத்து வந்து மணஞ் செய்து கொள்ளும்படி கேட்டார். இருங்கோவேள் மறுத்துவிட்டான் என்று புறநானூறு கூறுகிறது.
புலியை வீழ்த்தும் வீரன் புலிக்கடிமால் சின்னம், பேலூர்

சம்புமுனிவரின் யாகத்தீயில் தோன்றிய இருங்கோவேள் அரசன், தபங்கர் என்னும் முனிவர் தவம் செய்கையில் பாயவந்த புலியை 'ஹொய்சள' என்று கூறிய முனிவர் ஆணைப்படிக் கொன்றதால் அவன் புலிகடிமால் என்று பெயர் பெற்றான். இந்த வம்சத்தில் வந்தவர்களே ஹொய்சாளர்கள் என்பது உ.வே. சாமிநாத அய்யர், ஞா. தேவநேயப் பாவாணர், மயிலை சீனி. வேங்கடசாமி ஆகிய அறிஞர்களின் கருத்தாகும்.

புலியை வீழ்த்தும் வீரன் புலிக்கடிமால் என்று புறநானூற்றில் உள்ள தொன்மக்கதையை ஹொய்சாளர்கள் தங்களது சின்னமாகக் கொண்டனர். பேலூர் கோவிலிலும், அவர்கள் கட்டிய திருவண்ணாமலை கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும் புலிக்கடிமால் சின்னத்தை சிலையாக வடித்துள்ளனர். புறநானூற்றில் உள்ள அதே துவரை நகரம் தான் ஹொய்சாளர்களின் தலைநகரமாக விளங்கியது. முதலில் துவாரசமுத்திரம் என்றும் பின்ன ஹளபேடு (பழைய நகரம்) என்றும் அழைக்கப்பட்டது.
புலியை வீழ்த்தும் வீரன் புலிக்கடிமால் சின்னம், திருவண்ணாமலை கோவில்.

வன்னிய புராணம் குறிப்பிடும் வன்னியர்கள் யாகத்தீயில் தோன்றியவர்கள் என்கிற தொன்மமும், புறநானூறு குறிப்பிடும் ஹொய்சாளர்கள் யாகத்தீயில் தோன்றியவர்கள் என்கிற நம்பிக்கையும் ஒன்றாக இருப்பது வியப்பளிக்கக் கூடியது ஆகும். கல்வெட்டுகளும் அருணாசலபுராணமும் ஹொய்சாளர்களை வன்னியர்கள் என்று குறிப்பிடுகின்றன.

கர்நாடக மாநிலம் பேலூர் கல்வெட்டு ஹொய்சாளர்களை வன்னிய புத்திரர்கள் என்கிறது. கோலாரில் உள்ள 1291 ஆம் ஆண்டு தமிழ் கல்வெட்டு ஹொய்சாளர்கள் காலத்தை வன்னியர் காலம் என்று குறிப்பிடுகிறது.

திருவண்ணாமலை கோவில் புராணமான கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் அருணாச்சலபுராணம், ஹோய்சால வீரவல்லாள மகாராஜாவை "வன்னி குலத்தினில் வரு மன்னா" என்று குறிப்பிடுகிறது. 

சிவன் மகனாக பிறந்த கதை

வல்லாள மகாராஜாவுக்கு பிள்ளை இல்லை என்கிற குறை இருந்தது. இதனை அறிந்த சிவபெருமான் தானே மகனாக பிறக்கும் திருவிடையாலை நிகழ்த்தினார்.

திருவண்ணாமலையில் இருந்த எல்லா தேவதாசிகள் வீட்டுக்கும் சிவகணங்களை அனுப்பிய சிவபெருமான், வல்லாள மகாராஜாவிடம் சைவத் துறவி கோலத்தில் வந்து தனக்கு ஒரு தேவதாசி வேண்டும் என்று கேட்டார். வல்லாள மகாராஜாவும் தேவதாசியை அனுப்புவதாக வாக்களித்தார். ஆனால், ஊரில் உள்ள எல்லா தேவதாசிகளும் சிவகணங்களுடன் இருந்ததால் - வல்லாள மகாராஜாவால் தேவதாசியை கொண்டுவர முடியவில்லை. மன்னனின் கவலை அறிந்த வல்லாள மகாராஜாவின் இளைய ராணி, தானே தேவதாசியாக சிவனிடம் செல்ல முன்வந்தார். துறவி வேடத்தில் சிவன் இருந்த அறைக்குள் ராணி நுழைந்த போது - குழந்தையாக சிவபெருமான் காட்சியளித்தார். ராணியும் மகாராஜாவும் சிவபெருமானை தமது குழந்தையாக ஏற்றனர்.

பின்னர், வீர வல்லாள மகராஜன், மதுரை சுல்தான் மீது போர் தொடுத்தபோது கொலை செய்யப்பட்டார். வீர வல்லாள மகாராஜாவின் இறுதி கடனை இறைவனே திருவண்ணாமலையின் கீழ்த்திசையில் ஓடும் கௌதம நதிக்கரையில் செய்து முடித்தார். வன்னியப்பெருமக்கள் அருள்மிகு அண்ணாமலையானை சம்மந்திமுறை ஏற்று தலைக்கட்டு நடத்தினர். வன்னியர்கள் வாழ்ந்த அந்த ஊருக்கு "சம்மந்தனூர்" என்ற பெயர் வழங்க பெற்றது.

அப்போது முதல் பள்ளிகொண்டாபட்டு கௌதம நதிக்கரையில் சிவபெருமான் தனது தந்தைக்கு திதிகொடுக்கும் மாசி மக திருவிழா கொண்டாடப்படுகிறது. சம்மந்தனூர் வன்னியர்கள் சம்மந்தி உரிமையில் சிவனுக்கு பட்டாடை சாத்துகின்றனர். மறுநாள் வீர வல்லாள மகாராஜனுக்கு பதிலாக திருவண்ணாமலையில் சிவபெருமான் மன்னராக முடிசூடிக்கொள்கிறார். இந்த நிகழ்விலும் வன்னியர்களே காலம் காலமாக பங்கேற்கின்றனர்.

2017 ஆம் ஆண்டு, சிவபெருமான் வல்லாள மகராஜனுக்கு திதி கொடுக்கும் மாசி மகம் திருநாள் 11.3.3017 ஆம் நாளிலும், சிவபெருமானுக்கு முடிசூட்டு விழா 12.3.2017 ஆம் நாளிலும் நடைபெறுகிறது.

திங்கள், மார்ச் 06, 2017

ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கை: உண்மை நிலை என்ன?

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆம் கூட்டத்தொடரில் இலங்கை மீதான விவாதம் 2017 மார்ச் 22 ஆம் நாள் வர இருக்கிறது. இதுகுறித்த சில கேள்விகளும் பதிலும் கீழே:

1. ஐநா மனித உரிமைகள் பேரவையில் 34 ஆம் கூட்டத்தில் என்ன நடக்கும்?

இக்கூட்டத்தொடரில் மார்ச் 22 ஆம் நாள் இலங்கை மீதான 30/1 தீர்மானத்தின் நடவடிக்கைள் குறித்த ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை முன்வைக்கப்பட்டு, அதன் மீது விவாதம் நடக்கும். அதற்கு அடுத்த நாள் மார் 23 ஆம் நாள் இலங்கை மீதான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படலாம்.

மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சித்தரவதை மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான ஐநா சிறப்பு தூதுவர்கள் இலங்கையின் நிலைமை குறித்த அறிக்கைகளை இக்கூட்டத்தொடரில் முன்வைத்துள்ளனர்.

2. இலங்கை மீதான தீர்மானத்தில் என்ன இருக்கும்?

இலங்கை மீதான புதிய தீர்மானத்தில் என்ன இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. 2015-ல் நிறைவேற்றப்பட்டு இப்போது நடைமுறையில் உள்ள 30/1 தீர்மானத்தை ஐநா மனித உரிமைகள் பேரவை கண்காணித்து வருவதை தொடரும் வகையில், அதற்கான கால எல்லையை நீட்டித்து புதிய தீர்மானம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3. புதிய தீர்மானம் குறித்து பல்வேறு தரப்பினரின் நிலைப்பாடு என்ன?

நடைமுறையில் உள்ள 30/1 தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசை விடுவிக்க வேண்டும், அல்லது பன்னாட்டு நீதிபதிகள் என்பதையாவது நீக்க வேண்டும் என்பது இலங்கை அரசின் விருப்பம் ஆகும்.

அதே நேரத்தில், 30/1 தீர்மானத்தை நீர்த்துப்போக செய்யக்கூடாது. அதனை குறித்த காலத்திற்குள் நிறைவேற்றும் வகையில் கால அட்டவனையை உருவாக்க வேண்டும் என்பது பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்புகளின் கோரிக்கை ஆகும்.

கால நீட்டிப்பு கூடாது என்றும் ஐநா பொதுச்சபைக்கு நீட்டிக்க வேண்டும் என்பதும் சில தமிழர் அமைப்புகளின் கோரிக்கை ஆகும்.

4. இலங்கை அரசின் கோரிக்கை சரிதானா?

மிக மோசமான கோரிக்கையை இலங்கை அரசு முன்வைக்கிறது. இலங்கை அரசு தானே முன்னின்று 2015 கொண்டுவந்த தீர்மானத்தை தானே மறுப்பது நியாயம் அல்ல. இலங்கை அரசின் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும்.

5. பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளின் கோரிக்கை சரிதானா?

சரிதான். 30/1 தீர்மானத்தில் ஒரு வார்த்தையைக் கூட கைவிடாமல், அதனை முழுவதுமாக நிறைவேற்ற வேண்டும் என்கிற நிலைப்பாடு மிகச் சரியானதாகும். இதற்கான குறிப்பிட்ட கால எல்லையையும் தீர்மானிக்க வேண்டும் என்பதும் சரியான கோரிக்கையே ஆகும். ஐநா மனித உரிமைகள் ஆணையரும் தனது அறிக்கையில் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

6. தமிழர் அமைப்புகளின் கோரிக்கை சரிதானா?

இலங்கை விவகாரத்தை ஐநா பொதுச்சபைக்கும் பாதுகாப்பு மன்றத்துக்கும் நீட்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கை சரியானது. ஆனால் 'கால அவகாசம்' என்கிற வார்த்தையை தமிழர் அமைப்புகள் குழப்பமான பொருளில் பயன்படுத்துகின்றன.

7. 'கால அவகாசம்' என்கிற வார்த்தையில் என்ன குழப்பம்?

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தை பொருத்தவரை, கால அவகாசம் என்பது சரியான பொருளில் பயன்படுத்தபடவில்லை. ஐநா மேற்பார்வைக்கான காலத்தை நீட்டிப்பது என்பதையே பலரும் இலங்கைக்கான கால அவகாசம் என தவறாக பொருள் கொள்கின்றனர்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆம் கூட்டத்தொடருடன் இலங்கை விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடாது. இதனை எதிர்வரும் கூட்டங்களுக்கு விரிவுபடுத்தி, இலங்கையை பன்னாட்டு நிகழ்ச்சி நிரலில் வைத்திருக்க வேண்டும். இதுதான் இப்போது மிக முக்கியமானது ஆகும். மேலும், ஏற்கனவே உள்ள தீர்மானத்திலுருந்து கீழிறங்காமல், மேலும் வலுவான நிலையில் மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பும் பங்களிப்பும் தொடர வேண்டும்.

அதாவது, இப்போது மனித உரிமைகள் பேரவையில் பேசப்படும் கால நீட்டிப்பு என்பது - ஐநா மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்புக்குத்தான். இலங்கை அரசுக்கு அல்ல.

8. அப்படியானால் 'இலங்கை அரசுக்கு கால நீட்டிப்பு' வழங்கலாமா?

ஐநா மனித உரிமைகள் பேரவையில் புதிய தீர்மானம் வேண்டும் என்பதை இலங்கைக்கான கால நீட்டிப்பு என்பதாக புரிந்துகொள்வது ஒரு தவறான பார்வை.

உண்மையில் 30/1 தீர்மானத்தில் இலங்கை அரசின் செயல்பாட்டுக்கு கால எல்லை எதுவும் வகுக்கப்படவில்லை. இலங்கை அரசுக்கு 25 செயல் திட்டங்கள் அளிக்கப்பட்டன. சில செயல்திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தக்கூடியவை. சில செயல்திட்டங்களை செயலாக்க ஒரு சிலஆண்டுகள் கூட ஆகலாம். எடுத்துக்காட்டாக, புதிய அரசியல் சாசனம், இராணுவத்தை மாற்றியமைத்தல், அரசியல் தீர்வு என்பனவெல்லாம் 18 மாதத்தில் முடியக்கூடிய வேலைகள் இல்லை.

எனவே, 30/1 தீர்மானத்தை இலங்கை அரசு எந்த அளவுக்கு நிறைவேற்றியுள்ளது என்பதை 18 மாதங்கள் கடந்து 34 ஆம் கூட்டத்தில் ஆராய வேண்டும் என்றுதான் 2015 அக்டோபர் தீர்மானம் கூறியது. மாறாக, 18 மாதங்களில் 25 செயல்திட்டங்களையும் நிறைவேற்றியாக வேண்டும் என்று கூறவில்லை.

(HRC/RES/30/1: Requests the Office of the High Commissioner to continue to assess progress on the implementation of its recommendations and other relevant processes... and to present ... a comprehensive report followed by discussion on the implementation of the present resolution at its thirty-fourth session)

9. ஐநா 2015 தீர்மானத்தின் தற்போதைய நிலைமை என்ன?

2015 தீர்மானத்தின் நிலைமை குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையர் தமது அறிக்கையை வெளியிட்டுள்ளார். 'கவலை கொள்ளும் அளவுக்கு இலங்கை அரசு காலதாமதம் செய்வதாகவும், எதையெல்லாம் செய்ய முடியுமோ, அவற்றைக்கூட செய்யவில்லை எனவும்' கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். எனவேதான், உரிய கால வரையறையுடன் கூடிய செயல்திட்டம் தேவை என்று கூறியுள்ளார்.

(HRC/34/20) Present a comprehensive strategy on transitional justice, with a time-bound plan to implement the commitments welcomed by the Human Rights Council in its resolution 30/1 and the recommendations contained in the present and previous reports of the High Commissioner to the Council

இதே கோரிக்கையை பல பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்புகளும் முன்வைத்துள்ளன.

அதாவது - இதுவரை கால அட்டவணை இல்லாத நிலையில் இலங்கை மீதான தீர்மானம் இருந்தது. இப்போது ஐநா மனித உரிமைகள் ஆணையர் ஒரு கால அட்டவணையை கோரியுள்ளார். எனவே, ஐநாவின் கண்காணிப்பு தொடர வேண்டும் என்பதும், கால அட்டவணை வேண்டும் என்பது நீதிக்கான பயணத்தில் ஒரு முன்னேற்றமே ஆகும்.

10. ஐநா மனித உரிமைகள் ஆணையர் இலங்கை மீது குற்றவிசாரணைக்கு உத்தரவிட முடியாதா?

முடியாது. அந்த அதிகாரம் அவருக்கு இல்லை. ஐநா மனித உரிமை பேரவைக்கும் கூட அந்த அதிகாரம் இல்லை. ரோம் உடன் படிக்கையில் கையொப்பமிடாத நாடுகள் மீது பன்னாட்டு குற்றவிசாரணைக்கு ஐநா பாதுகாப்பு மன்றம் மட்டுமே உத்தரவிட முடியும்.
11. ஐநா மனித உரிமைகள் ஆணையர் கேட்டபடி கால அட்டவணையாவது உருவாகுமா?

அப்படியும் கூறிவிட முடியாது. ஐநா மனித உரிமைகள் ஆணையர் தனது பரிந்துரைகளை தெரிவித்துள்ளார். அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ஐநா மனித உரிமைகள் பேரவைதான் முடிவெடுக்க வேண்டும். அதாவது, அடுத்தக்கட்டத்தை தீர்மானம் செய்ய வேண்டியது 47 உறுப்பு நாடுகள்தான்.

ஐநா மனித உரிமைப் பேரவை என்பது ஒரு அரசியல் அவை மட்டுமே. அது நீதிமன்றமும் அல்ல. எனவே, பன்னாட்டு சட்டமும் நியாயத்துக்கான கோரிக்கைகளும் ஒருபக்கம் இருந்தாலும் -  பன்னாட்டு புவிஅரசியல் வியூகங்களுக்கு ஏற்பவும், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் போக்கினை கவனித்தும், தத்தமது நாடுகளின் நலனுக்கு ஏற்பவுமே உறுப்பு நாடுகள் முடிவு செய்யும்.

12. இலங்கை விவகாரத்தை ஐநா பொதுச்சபைக்கு 'மாற்ற' வேண்டுமா?

இலங்கை விவகாரத்தை ஐநா பொதுச்சபைக்கு 'மாற்ற' வேண்டும் என்பது தவறான பொருள்படும் கோரிக்கை ஆகும். மாறாக, ஐநா பொதுச்சபைக்கும் பாதுகாப்பு மன்றத்துக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பதே சரியான கருத்தாகும்.

அதாவது, ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் நீட்டிக்கப்படும் அதே நேரத்தில், இதனை ஐநா பொதுச்சபைக்கும் ஐநா பாதுகாப்பு மன்றத்துக்கும் விரிவாக்க வேண்டும்.

13. ஐநா பொதுச்சபைக்கு மாற்றுவதால் பயன் இருக்குமா?

உடனடிப் பலன் எதுவும் இருக்காது. ஏனெனில், ஐநா பொதுச்சபையானது இதனை பாதுகாப்பு மன்றத்துக்கு பரிந்துரை செய்யலாம். அங்கு சீனாவும் ரஷ்யாவும் தமது வீட்டோ அதிகாரத்தால் தடை செய்யும். இப்படியாக பல ஆண்டுகள் நீடிக்கலாம். அதே நேரத்தில் இலங்கை விவகாரம் பன்னாட்டு அரங்கில் ஒரு பேசு பொருளாக இருப்பது மட்டும் ஒரு பயனாக இருக்கக் கூடும்.

14. ஐநா மனித உரிமைப் பேரவை பொதுச்சபைக்கு பரிந்துரைக்குமா?

இந்த 34 ஆம் கூட்டத்தொடரில் அப்படி ஒரு பரிந்துரையை ஐநா மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ளாது. ஏனெனில், இப்போது உறுப்பினர்களாக இருக்கும் 47 நாடுகளில் ஒரு நாடுகூட இந்தக் கோரிக்கையை ஏற்பதாக இதுவரை கூறவில்லை.

15. ஐநா மனித உரிமைகள் பேரவை 30/1 தீர்மானத்தின் காலத்தை நீட்டிக்கக் கூடாது என்பது சரியா?

மிகத் தவறான கோரிக்கை. இதற்கு பதிலாக 'இலங்கை அரசுக்கு முழு விடுதலை அளிக்க வேண்டும்' என்று நேரடியாகவே சொல்லி விடலாம். ஐநா மனித உரிமைப் பேரவையில் மார்ச் 23 ஆம் நாள் இலங்கை மீது ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால் - இலங்கை அரசினை கேள்வி கேட்க இனி எவருமே இருக்க மாட்டார்கள்.

அதாவது, அடுத்த தீர்மானம் வராவிட்டால் - பன்னாட்டு குற்றவியல் விசாரணை நெருக்கடியில் இருந்தும், ஐநாவின் நேரடி கண்காணிப்பில் இருந்தும் இலங்கை ஒரேயடியாக விலக்கப்பட்டுவிடும். இலங்கையில் தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளிகள் முழுவதுமாக தப்பி விடுவார்கள்.

15. இப்போது என்ன தான் தேவை?

தமிழீழம் அமைய வேண்டும் என்பது ஒரு உறுதியான லட்சியம். அதற்காக ஈழத்தமிழர் இடையே ஒரு பொது வாக்கெடுப்பு வேண்டும் என்பது தமிழர்களின் கோரிக்கை. இந்த கோரிக்கை நடக்க வேண்டும் என்றால் - இலங்கை விவகாரம் சர்வதேச அரசியலில் நீடித்திருப்பது முக்கியம் ஆகும்.

ஐநா அவையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை அரசு நீடிக்க வேண்டும் என்றால் - ஐநா மனித உரிமைப் பேரவையின் 2015 தீர்மானத்தின் காலத்தை நீட்டிக்கும் புதிய தீர்மானத்தை கொண்டுவர வேண்டும்.

ஏற்கனவே இருக்கும் தீர்மானத்தின் ஒரு வார்த்தையைக் கூட மாற்றவோ நீர்த்துப்போகச் செய்யவோ கூடாது. மாறாக, அதன் அனைத்து செயல்திட்டங்களுக்கும் உறுதியான கால எல்லையை கட்டாயமாக்க வேண்டும். மேலும், இத்தீர்மானத்தின் செயல்பாட்டை ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் கண்காணித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் மனித உரிமைகள் பேரவைக்கு தெரிவிக்க வேண்டும். அதன் மீது தொடர் நடவடிக்கைகளை தீர்மானிக்க வேண்டும் - இவை அனைத்தும் புதிய தீர்மானத்தில் இடம் பெற வேண்டும்.

மேலும், இலங்கை விவகாரத்தை ஐநா பொதுச்சபைக்கு விரிவாக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் வலியுறுத்தலாம்.

16. வடகொரிய விவகாரம் போன்று இலங்கையை கையாளக் கூடாதா?

வடகொரியா போன்று இலங்கையையும் நடத்த ஐநா அவையைக் கோரலாம். ஆனால், வடகொரிய விவகாரத்தை ஐநா பொதுச்சபைக்கும் பாதுகாப்பு மன்றத்துக்கும் பரிந்துரை செய்ததால், ஐநா மனித உரிமைப் பேரவையில் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

வட கொரிய அதிபர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று 2014 ஆம் ஆண்டில் பொதுச்சபைக்கும், அதன் வழியே பாதுகாப்பு மன்றத்துக்கும் ஐநா மனித உரிமைப் பேரவை பரிந்துரை செய்தது. அந்த விவகாரம் முன்று ஆண்டுகளாக ஐநா பாதுகாப்பு மன்றத்தில் ஆண்டுதோரும் விவாதிக்கப்படுகிறது. ஆனால், இதுவரை சர்வதேச குற்றவியல் நீதிவிசாரணைக்கு பரிந்துரை செய்யப்படவில்லை.

இதனிடையே - வடகொரியா மீது ஆண்டுதோரும் பழைய தீர்மானங்களை தொடர்ந்து ஐநா மனித உரிமைப் பேரவையும் நிறைவேற்றி வருகிறது. 2016 ஆம் ஆண்டில் இரண்டு சிறப்பு நிபுணர்களை நியமனம் செய்து, வடகொரிய அதிபரை சர்வதேச சட்டங்களின் கீழ் தண்டிப்பதற்கான வழிகளை ஆராயுமாறு பணித்தது. தென் கொரியாவில் ஒரு சிறப்பு அலுவலகத்தையும் அமைத்துள்ளது.

அதாவது, பொதுச்சபைக்கும், அதன் வழியே பாதுகாப்பு மன்றத்துக்கும் வடகொரிய விவகாரத்தை பரிந்துரைத்த பின்னரும் கூட - தமது பழைய நிலைப்பாட்டை மேலும் வலுவாக்கும் தீர்மானங்களை ஐநா மனித உரிமைப் பேரவை நிறைவேற்றி வருகிறது.

அந்த வகையில் - இலங்கை மீது ஐநா மனித உரிமைகள் பேரவையின் அழுத்தம் மென்மேலும் அதிகமாக வேண்டும் என்பதே முதன்மையான தேவை ஆகும்.
படம்: ஐநா மனித உரிமைகள் ஆணையருக்கு எதிராக இலங்கை சிங்கள இனவெறியர்களின் போராட்டம்.

குறிப்பு: ஐநா பாதுகாப்பு சபைக்கு போனால், இனப்படுகொலை உறுதியாகும். அதன் வழியே பொது வாக்கெடுப்பு நடக்கும். தமிழீழம் அமையும் என்கிற நம்பிக்கை பரவலாக பேசப்படுகிறது. ஆனால், விடுதலைக்கான பாதை இப்படி நேரானதாகவும் தெளிவானதாகவும் இல்லை என்பதே உண்மை.

ஐநா மனித உரிமைப் பேரவையில் இப்போதே, உடனடியாக 'ஐநா பொதுச்சபைக்கு பரிந்துரைக்கும் தீர்மானம்' நிறைவேற்றப்பட்டால் கூட, ஐநா பாதுகாப்பு அவையில் இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குள் இலங்கைக்கு எதிரான தீர்மானம் எதுவும் நிறைவேற வாய்ப்பு இல்லை.  ஏனெனில், அவற்றை மிக எளிதாக வீட்டோ அதிகாரம் மூலம் சீனாவும் ரஷ்யாவும் முறியடித்துவிடும்.

ஒருவேளை அவ்வாறு ஒரு தீர்மானம் வந்த பின்பும் கூட - அது நேரடியாக பொது வாக்கெடுப்புக்கு அழைத்துச் செல்லாது. இனப்படுகொலை நடந்த நாட்டில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கிற நேரடி விதிகள் எதுவும் இல்லை.

ஒரு புதிய நாடு அமைவது அந்த காலத்துக்கு ஏற்ற புவி அரசியல் சூழலைப் பொருத்துதான் சாத்தியம் ஆகும். குறிப்பாக, இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் ஏற்படும் மாற்றம் மட்டுமே சாதகமான புவிஅரசியல் சூழலை உருவாக்கும்.

நீதிக்கான போராட்டம் என்பது ஒரு நெடிய பயணம். சர்வதேச அரங்கில் இப்போது தமிழர்களுக்கான இடம் ஐநா மனித உரிமைப் பேரவையில் மட்டுமே இருக்கிறது. இதனை மென்மேலும் வலிமையாக்கி கொண்டு - அடுத்தக் கட்டத்திற்கும் முயற்சிக்க வேண்டும்.

"வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்." - குறள்

(செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்.)

சனி, மார்ச் 04, 2017

ஐநாவில் இலங்கையை தண்டிக்க இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும்! மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அறிக்கை

ஜெனிவா நகரில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமைப் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை இறுதிப்போரின் போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்காக அந்நாட்டு அரசின் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் தாக்கல் செய்துள்ளார். இதனடிப்படையில் இலங்கை மீதான விவாதம் மார்ச் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்கான இலங்கையின் செயல்பாடுகள் மனநிறைவு தரவில்லை  என்றும் ஆணையர் அவரது அறிக்கையில் கூறியுள்ளார். ‘‘இலங்கையின் ஒப்புதலுடன் 2015-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை, கவலைக்கொள்ளும் அளவுக்கு மிகவும் காலதாமதம் செய்யப்பட்டுள்ளது. ஐநா தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இலங்கை அதிபர், பிரதமர், அமைச்சர்கள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசுவது கண்டிக்கத்தக்கது. இனியும் தாமதிக்காமல் தீர்மானத்தை செயல்படுத்த  திட்டம் வகுக்கப்பட வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இலங்கையில் அமைப்பு ரீதியில் நடத்தப்பட்ட பன்னாட்டு குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிபதிகளைக் கொண்டு கலப்பு நீதிமன்றம் அமைப்பது கட்டாயமான தேவை. இத்தகைய குற்றங்களை விசாரிக்கும் வகையில் உள்நாட்டு சட்டங்களை உடனடியாக மாற்ற வேண்டும். மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலங்களை உடனடியாக திருப்பி அளிக்க வேண்டும், குடிமக்கள் விவகாரங்களில் இருந்து இராணுவம் முழுவதுமாக விலக்கப்பட வேண்டும். இலங்கை அரசின் நடவடிக்கைகளை முழுமையாக செயலாக்க ஐநா மனித உரிமைகள் ஆணையரின் நேரடி அலுவலகத்தை இலங்கையில் நிறுவ வேண்டும். போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலையை விசாரிப்பதற்கான ரோம் உடன்படிக்கையில் இலங்கை உடனடியாக கையொப்பம் இடவேண்டும். இலங்கை அரசின் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் ஐநா மனித உரிமை ஆணையர் பரிந்துரைத்துள்ளார்.

2015 ஆம் ஆண்டின் பேரவை தீர்மானத்தில் நிலைமாற்ற நீதி பொறிமுறை என்பதை இலங்கை அரசு ஏற்றது. இதில் உண்மையை வெளிக்கொணர்தல், குற்றவாளிகளைத் தண்டித்தல், இழப்புகளுக்கு பரிகாரம் தேடுதல், குற்றம் நடந்ததற்கான காரணங்களைக் கண்டுபிடித்து அமைப்புகளை மாற்றுதல் என நான்கு அங்கங்கள் உள்ளன. ஆனால், உண்மை, பரிகாரம் என இரு வழிமுறைகளை மட்டுமே இலங்கை அரசு ஓரளவுக்கு ஏற்பது போன்று தெரிவதாகவும், குற்றவாளிகளைத் தண்டிக்காமல் தவிர்க்க முயல்வதாகவும் ஆணையர் குற்றஞ்சாற்றியிருக்கிறார். இலங்கை அரசே அமைத்த ஆலோசனைக் குழுவின் அறிக்கையை ஏற்று செயல்படுத்த வேண்டும் என்றும் இந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்காமல் ஏமாற்ற இலங்கை அரசு நடத்தும் நாடகம் மனித உரிமை ஆணையர் அறிக்கை மூலம் தெளிவாகியுள்ளது. இதற்கு மேலும் இலங்கை அரசின் ஏமாற்று சதிகளுக்கு சர்வதேச சமூகம் பலியாகக் கூடாது. 2015-ஆம் ஆண்டு மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல், ஒருசிலவற்றை மட்டும் நிறைவேற்ற ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மாறாக, மனித உரிமை பேரவையின் நடவடிக்கைகளை தீவிரமாக்குவதுடன், ஐநா பொது அவைக்கும், பாதுகாப்பு மன்றத்துக்கும் இலங்கை விவகாரத்தை கொண்டு செல்ல வேண்டும்.

குறிப்பாக, இலங்கையை காப்பாற்றும் முயற்சிகளில் இந்தியா இனியும் ஈடுபடக்கூடாது. மாறாக,  நீதியின் பக்கம் நிற்க முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, ஐ.நா. மனித உரிமை பேரவையில் 2015-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தின் அம்சங்களை நிறைவேற்றாமல் காலந்தாழ்த்தும் இலங்கை அரசைக் கண்டிக்கும் வகையிலான தீர்மானத்தை இந்திய அரசே கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள - பன்னாட்டு நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் அமைப்பது உள்ளிட்ட - அனைத்து பரிந்துரைகளையும், உரிய காலக்கெடுவுக்குள் நிறைவேற்றுவதற்கான செயல்திட்டத்தையும் இந்திய அரசு அதன் தீர்மானத்தில் முன்வைக்க வேண்டும்.

கடந்த காலங்களில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் போன்ற பன்னாட்டு அமைப்புகளில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை. இத்தகைய சூழலில், மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அம்சங்களை இலங்கை அரசு செயல்படுத்துவதை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் தொடர்ச்சியாக கண்காணிப்பதையும், குறிப்பிட்ட கால இடைவெளியில் மனித உரிமைப் பேரவையில் விவாதிப்பதையும் உறுதி செய்யும்படி இந்தியத் தீர்மானம் வலியுறுத்த வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் மேலாக, இலங்கை இறுதிப்போரில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட  போர்குற்றங்களுக்கு நீதி பெற்றுத் தரும் நோக்குடன், இலங்கை சிக்கலை ஐநா பொது அவையின் மூலம் ஐநா பாதுகாப்பு மன்றத்துக்கு கொண்டு செல்லும்படியும் ஐநா மனித உரிமை பேரவையை இந்தியா கோர வேண்டும். 

ஈழத் தமிழர்கள் இந்தியாவை தந்தை நாடாக கருதுவதாலும், ஈழத்தமிழரை தொப்புள் கொடி உறவாக இந்தியத் தமிழர்கள் கருதுவதாலும் அவர்களுக்கு நீதிபெற்றுத் தருவதற்கான தார்மீக கடமையும், பொறுப்பும் இந்தியாவுக்கு உண்டு. ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில்  பொருத்தமான தீர்மானத்தைக் கொண்டு வந்து நட்பு நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றுவதன் மூலம் இந்தக் கடமையை இந்தியா நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
#PMK #AnbumaniRamadoss #UNHRC #HRC34 #SriLanka

வியாழன், மார்ச் 02, 2017

நெடுவாசல்: தமிழ் இன அழிப்புதான் பாஜகவின் நோக்கமா?

காவிரியில் தமிழகத்துக்கு பெரும் துரோகம் இழைத்தை பாஜக அரசு, இப்போது அதே கர்நாடகத்தின் பாஜக நாடாளு மன்ற உறுப்பினருக்கு நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வாரி வழங்கியுள்ளது. இது ஒரு திட்டமிட்ட தமிழின அழிப்பு நடவடிக்கை ஆகும். 

தமிழ் மண்ணில் இழ அழிப்பு சதி

தமிழர்களுக்கு எதிராக ஒரு கட்டமைக்கப்பட்ட இன அழிப்புத் திட்டத்தை தேசியக் கட்சிகள் அரங்கேற்றுவது மெல்ல மெல்ல தெளிவாகி வருகிறது.

1. தண்ணீர் வரும் வழியை அடைத்தல்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்சநீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்ததன் மூலம், மோடி அரசு காவிரிப் படுகையை பாலைவனமாக்கும் திட்டத்தை செயலாக்கியது. அதனை மேலும் விரைவு படுத்தும் நோக்கில், கர்நாடக மாநிலத்தை ஆட்சி செய்யும் காங்கிரசு அரசு மேகதாது அணைத்திட்டத்தை செயல்படுத்த முனைந்துள்ளது.

காவிரியில் தமிழகத்தின் உரிமையை மறுப்பது பாஜகவின் செயல்திட்டமாக இருக்கும் அதே நேரத்தில், தமிழகத்துக்கு தண்ணீர் வருவதை முற்றிலுமாகத் தடுக்கும் வகையில் அணையைக் கட்டுகிறது காங்கிரசு அரசு. இவை தண்ணீர் வரும் பகுதியில் நடத்தப்படும் இன அழிப்பு முயற்சிகள் ஆகும்.

2. தண்ணீர் பெறும் இடத்தை அழித்தல்

இதற்கு மறுபக்கத்தில் தண்ணீர் பெறும் பகுதியில் இன அழிப்பினை திராவிடக் கட்சிகளும் தேசிய கட்சிகளும் திட்டமிட்டு அரங்கேற்றி வருகின்றன.

முதலில் காவிரிப் படுகை நெடுகிலும் இறால் பண்ணைகளை அமைத்து விவசாயத்தை சீரழித்தன திராவிடக் கட்சிகள். அதன் பின்னர், அதே பகுதிகளில் தனியார் அனல்மின் நிலையங்களுக்கு அனுமதி அளித்தனர். தற்போது மீத்தேன் திட்டம், பாறை எரிவாயுத் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் என வரிசையாக நீர்வளத்தையும் விவசாயத்தையும் அழிக்கும் திட்டங்களாக தேர்வு செய்து திணிக்கின்றனர். இத்திட்டங்களுக்கு திராவிடக் கட்சி அரசுகள் ஏற்கனவே அனுமதி அளித்தன.

நெடுவாசலிலும் காரைக்காலிலும் ஹைட்ரோ கார்பன் திட்டம் அனுமதிக்கப்பட்டால், அதன் தொடர்ச்சியாக மீத்தேன் திட்டம், பாறை எரிவாயுத் திட்டம் ஆகியவை நிச்சயமாக செயல்பாட்டுக்கு வரும்.

நோக்கம் என்ன?

ஒவ்வொரு தேசிய இனத்தின் அடையாளமும் அதன் உணவுடன் தொடர்பு கொண்டிருக்கிறது. மக்களின் உணவு மற்றும் அந்த உணவுக்கான உத்திரவாதம் இரண்டுமே தேசிய இன அடையாளத்தின் முக்கிய அங்கங்கள் ஆகும். தனது நாட்டில் பாரம்பரிய உணவினைக் காப்பதும், தமக்கு தேவையான உணவை தனது நாட்டுக்குள்ளேயே விளைவிப்பதும் முக்கியமானதாகும்.
உணவு இறையாண்மையை (Food sovereignty) காத்துக்கொள்ளாத எந்த இனமும் சுதந்திரமாக வாழ இயலாது. எப்போது ஒரு நாடு, தனது உணவுத் தேவைக்காக அன்னிய நாட்டினை நம்புகிறதோ, அப்போதே அதன் இறையாண்மை பலவீனமாகிவிடுகிறது. காவிரிப் படுகை எனும் தமிழனின் தானியக் களஞ்சியத்தை அழிப்பதன் மூலம், தமிழர்களின் உணவுப் பாதுகாப்பையும், இறையாண்மையும் அழித்துவிட முடியும். தமிழர்கள் கோதுமைக்காகவும், பன்னாட்டு நிறுவனங்களின் இறக்குமதி உணவுக்காகவும் கையேந்தும் நாளில் - தமிழர்களின் தேசிய அடையாளம் அழிந்து போயிருக்கும்.

இதுதான் தேசியக் கட்சிகளின் நோக்கம். இதுதான் பாஜகவின் திட்டம். அதனால்தான், காவிரி நீரை எந்த கர்நாடகத்துக்கு தாரைவார்த்தார்களோ, அதே கர்நாடக மாநிலத்தின் ஆர்.எஸ்.எஸ் தலைவரும் பாஜக எம்.பியும் முன்னாள் பாஜக மத்திய அமைச்சருமான ஜி.எம். சித்தேஸ்வராவின் ஜெம் லாபரெட்டரீஸ் நிறுவனத்துக்கு நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை வாரி வழங்கியுள்ளனர்.

என்ன செய்ய வேண்டும்?

நெடுவாசலிலும் காரைக்காலிலும் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இனிமேலும் இதுபோன்ற மீத்தேன் திட்டம், பாறை எரிவாயுத் திட்டம் போன்றவற்றை அனுமதிப்பதை தடுக்கும் வகையில், காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். 

இதன் மூலம் - இனி வேளாண்மையை சீரழிக்கும் எந்த ஒரு பெருந்திட்டமும் காவிரி வடிநிலத்தில் அமையாமல் நிரந்தரமாக தடுக்க வேண்டும். இதுவே, தமிழ் இன அழிப்பினை தடுக்கும் வழியாகும்.

புதன், மார்ச் 01, 2017

ஐநாவில் ஈழத்தமிழர் நீதி: குழப்பமும் தெளிவும்!

தற்போது ஐநா மனித உரிமைப் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில், வரும் மார்ச் 22-ல் இலங்கை மீதான விவாதம் அங்கு நடைபெறவுள்ள சூழலில் - ஐநா மனித உரிமைப் பேரவையின் 2015 தீர்மானத்தின் அடுத்தக் கட்டம் குறித்த தமிழர்களின் பார்வை இப்போது ஓரளவுக்கு தெளிவாகி வருகிறது. இது வரவேற்க தக்கதாகும்.

இலங்கை மீதான குற்றச்சாட்டுகளை ஐநா பாதுகாப்பு அவைக்கு அனுப்ப வேண்டும் என்கிற கோரிக்கைக்கு மத்தியில், "ஐநா மனித உரிமைப் பேரவையின் தற்போதைய தீர்மானத்தின் காலத்தினை மேலும் நீட்டிக்க வேண்டும்" என்றும் "அதனை ஐநா மனித உரிமைகள் பேரவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்" நாடுகடந்த தமிழீழ அரசு ஏற்படுத்திய வல்லுநர் குழு 28.02.2017-ல் பரிந்துரை செய்துள்ளது. ("calls on the HRC to extend its mandate so as to review regularly the GSL’s compliance with HRC Resolution 30/1" -  Sri Lanka Monitoring and Accountability Panel)

இதே கோரிக்கைதான் கடந்த 25.02.2017-ல் சென்னையில் பசுமைத் தாயகம் நடத்திய - ஐநா மனித உரிமைப் பேரவையும் ஈழத்தமிழர் நீதியும்: அடுத்தது என்ன? UNHRC 34 ஆவது கூட்டத்தொடர் குறித்த கலந்துரையாடல் - கூட்டத்திலும் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP, கவிஞர் காசி ஆனந்தன், தேவசகாயம் இ.ஆ.ப., இயக்குனர் வ. கௌதமன், தியாகு, பேராசிரியர் மணிவண்ணன், பேராசிரியர் சரசுவதி, டி.எஸ்.எஸ். மணி, அய்யநாதன்

குழப்பம் என்ன?

2015 ஐநா மனித உரிமைப் பேரவை தீர்மானத்தினை செயல்படுத்த இலங்கை அரசுக்கு மேலும் கால நீட்டிப்பு வழங்கக் கூடாது எனவும், இந்த விவகாரத்தை ஐநா பொதுச்சபைக்கு அனுப்ப வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை வைத்தனர். இது நியாயமான கருத்தே ஆகும்.

எனினும், ஐநா மனித உரிமைப் பேரவையில் இன்னொரு தீர்மானமே வரக்கூடாது என்பது போலவும், இந்த விடயத்தை ஒரேயடியாக ஐநா மனித உரிமைப் பேரவை கைக்கழுவ வேண்டும் என்பது போலவும் சிலர் பேசத்தொடங்கினர் (அதாவது, பொதுச்சபைக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்ட பின்னர், மனித உரிமைப் பேரவையில் வேலை இல்லை என்பதான தவறான புரிதல் உருவானது).

இதன் அடுத்தக்கட்டமாக, "இலங்கை மீது ஒரு தீர்மானத்தை முன் வைக்கப்போவதாக இங்கிலாந்து அரசு கூறுவதே தவறு" என்றும், அத்தகைய தீர்மானத்தை அந்த நாடு பின் வாங்க வேண்டும் என்றும் பேசினர். கடைசியில், "இன்னொரு ஐநா தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் தமிழினத் துரோகிகள்" என்கிற அளவுக்கு தவறான பிரச்சாரம் சென்றது.

'உண்மை என்ன?"

2015 ஆம் ஆண்டில் வெளியான ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலக விசாரணைக் குழுவின் அறிக்கை (OISL) மீதான சர்வதேச நடவடிக்கைகளை - நியூயார்க்கில் உள்ள ஐநா பொதுச்சபைக்கும், ஐநா பாதுகாப்பு அவைக்கும் - விரிவாக்க வேண்டும் என்பது சரியான வியூகம்தான். அதற்காக, ஜெனீவாவில் உள்ள ஐநா மனித உரிமைப் பேரவையில் இருந்து இதனை கைவிட வேண்டும் என்பது மிகத் தவறான வாதம் ஆகும்.

இப்போதைக்கு, ஜெனீவாவில் மட்டுமே இலங்கை விவகாரம் உயிர்ப்புடன் உள்ளது. அதுமட்டுமல்லாமல், மனித உரிமைகள் மற்றும் நிலைமாற்ற நீதி (transitional justice) விவகாரங்களில் உலகின் உச்சமான அமைப்பு இதுதான். இந்த அவையில் இலங்கை தொடர்ச்சியாக விவாதிக்கப்படுவதும், கண்காணிக்கப்படுவதும் மிக மிக மிக அவசியம் ஆகும். இதற்கு வரும் மார்ச் 23 ஆம் நாளன்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டே ஆக வேண்டும். அப்படி ஒரு தீர்மானம் வராமல் போய்விட்டால், இனி இலங்கையை கேள்வி கேட்பதற்கு ஒரு பன்னாட்டு அரங்கம் இல்லாமலேயே பொய்விடும்.

எனவே, 'தீர்மானத்தில் என்ன இருக்கப்போகிறது' என்பதுதான் தமிழர்களின் கோரிக்கையாக இருக்க வேண்டுமே தவிர, 'புதிய தீர்மானமே தேவையில்லை' என்பது அல்ல. மிகக் குறைந்த கோரிக்கையாக பார்த்தால் கூட, 2015 தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்யக் கூடாது என்பதும், பழைய தீர்மானம் உடனடியாகவும் முழுமையாகவும் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதும்தான் முக்கியமானதாகும்.

அதே நேரத்தில், இந்த விவகாரத்தை ஐநா பொதுச்சபைக்கு அனுப்ப வேண்டும் என்கிற தமிழர்களின் கோரிக்கைக்கு 47 உறுப்பு நாடுகளில் ஒரே ஒரு நாடு கூட இதுவரை ஆதரவு அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

"குழப்பம் தவிர்க்க வேண்டும்"

ஈழத்தமிழர் நீதிக்கான போராட்டத்தினை ஐநாவினை இலக்காக வைத்து நடத்தும் போது, பல தவறான கருத்துகள் உருவாக்கப்படுகின்றன.

குழப்பம் 1. போர்க்குற்றம் என்று சொல்லாதே!

போர்க்குற்றம், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகிய மூன்றுமே கொடூரமான குற்றங்கள்தான் என்கிற நிலையில் 'போர்க்குற்றம்' என்று சொல்லாதே என்று சிலர் முழங்கினர்.

குழப்பம் 2. அமெரிக்க தீர்மானம் அயோக்கிய தீர்மானம்! 

இலங்கையில் நடந்த குற்றங்கள் குறித்து ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலகம் விசாரணை நடத்த வேண்டும் என்கிற தீர்மானத்தை 2014-ல் அமெரிக்கா கொண்டு வந்தபோது - "அமெரிக்க தீர்மானம் அயோக்கிய தீர்மானம்" - என்கிற பிரச்சாரம் நடத்தப்பட்டது.
சென்னையில் அமெரிக்க நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆனால், அந்த தீர்மானத்தால் கிடைத்த விசாரணை அறிக்கைதான் (OISL Report 2015) இப்போது பன்னாட்டு அரங்கில் ஏற்கபட்ட ஒரே ஆயுதமாக உள்ளது.

2015-ல் தற்போதைய தீர்மானத்தினையும் சிலர் எதிர்த்தார்கள். அதனை தீயிட்டுக் கொளுத்தினார்கள். ஆனால், இன்னமும் அந்த ஒரே ஒரு தீர்மானம்தான் இந்த சிக்கலை சர்வதேச அரங்கில் நிலைநிறுத்தியுள்ளது.

குழப்பம் 3. நிலைமாற்ற நீதி தேவையில்லை!

பின்னர் 'நிலைமாற்ற நீதிப் பொறிமுறை' (transitional justice mechanisms) என்பதையும் சிலர் எதிர்த்தனர்.

அதாவது, சர்வதேசத்தின் பார்வையில் ஈழத்தமிழர் நீதிக்கான போராட்டத்தை எவையெல்லாம் நீடித்திருக்க செய்யுமோ - அவை எல்லாவற்றையுமே இல்லாமல் செய்யும் கோரிக்கைகள் அவ்வப்போது எழுவது வாடிக்கையாக உள்ளது (இவ்வாறான கோரிக்கைகளை முன் வைப்பவர்கள் - இதற்கான மாற்று எதையும் முன் வைப்பது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்)

குழப்பம் 4. புதிய தீர்மானம் தேவையில்லை!

அந்த பட்டியலில் ஒன்றாகத்தான் - தற்பொது நடைபெறும் ஐநா மனித உரிமைப் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் புதிதாக தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது.

"வட கொரிய முன்மாதிரி"

வட கொரிய விவகாரம் 2004 ஆம் ஆண்டிலிருந்து ஜெனீவா நிகழ்ச்சி நிரலில் உள்ளது. இந்தச் சிக்கலை 2014 ஆம் ஆண்டிலேயே ஐநா பொதுச்சபைக்கு அனுப்பும் தீர்மானத்தை ஐநா மனித உரிமைப் பேரவை நிறைவேற்றியது. ஆனால், அதன் பின்னரும் ஆண்டுதோரும் ஜெனீவாவில் வடகொரியா குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அந்த வரிசையில் 2016 ஆம் ஆண்டில், ஒரு சிறப்பு அலுவலகத்தை அமைத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. (அதாவது, வட கொரிய விவகாரத்தை ஐநா பொதுச்சபைக்கு கொண்டு போனதன் காரணமாக ஐநா மனித உரிமைப் பேரவை அதனைக் கைவிடவில்லை).

"என்ன செய்ய வேண்டும்?"

"ஐநா மனித உரிமைப் பேரவையின் தற்போதைய தீர்மானத்தின் காலத்தினை மேலும் நீட்டிக்க வேண்டும்" என்றும் "அதனை ஐநா மனித உரிமைகள் பேரவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்" நாடுகடந்த தமிழீழ அரசு ஏற்படுத்திய வல்லுநர் குழு  28.02.2017-ல் பரிந்துரை செய்துள்ளது வரவேற்கக் கூடியதாகும். (calls on the HRC to extend its mandate so as to review regularly the GSL’s compliance with HRC Resolution 30/1)

பொதுச்சபைக்கும், பாதுகாப்பு அவைக்கும் இலங்கையைக் கொண்டு செல்லும் கோரிக்கைகளை ஒருபக்கம் எழுப்பும் அதே வேளையில் - இப்போது உடனடியாக "ஐநா மனித உரிமைப் பேரவையின் 2015 ஆம் ஆண்டு தீர்மானத்தை எந்த வகையிலும் குறைக்காமல் மறு உறுதி செய்யும் வகையிலும், மேலும் வலுவாக்கும் வகையிலும், காலதாமதமின்றி செயலாக்கும் வகையிலும், சர்வதேசத்தை ஏமாற்றிவரும் இலங்கையை கண்டிக்கும் வகையிலும், ஒரு புதிய தீர்மானத்தை ஐநா மனித உரிமைப் பேரவையின் 34 ஆம் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும்.

கூடவே, ஐநா மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் செயலாக்கப்படுவதை ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் தொடர்ச்சியாக கண்காணித்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் மனித உரிமைப் பேரவையில் தெரிவிக்க வேண்டும். அதன் மீது விவாதித்து கூடுதல் முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதுவே உடனடித் தேவை ஆகும்.