Pages

வியாழன், மார்ச் 02, 2017

நெடுவாசல்: தமிழ் இன அழிப்புதான் பாஜகவின் நோக்கமா?

காவிரியில் தமிழகத்துக்கு பெரும் துரோகம் இழைத்தை பாஜக அரசு, இப்போது அதே கர்நாடகத்தின் பாஜக நாடாளு மன்ற உறுப்பினருக்கு நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வாரி வழங்கியுள்ளது. இது ஒரு திட்டமிட்ட தமிழின அழிப்பு நடவடிக்கை ஆகும். 

தமிழ் மண்ணில் இழ அழிப்பு சதி

தமிழர்களுக்கு எதிராக ஒரு கட்டமைக்கப்பட்ட இன அழிப்புத் திட்டத்தை தேசியக் கட்சிகள் அரங்கேற்றுவது மெல்ல மெல்ல தெளிவாகி வருகிறது.

1. தண்ணீர் வரும் வழியை அடைத்தல்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்சநீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்ததன் மூலம், மோடி அரசு காவிரிப் படுகையை பாலைவனமாக்கும் திட்டத்தை செயலாக்கியது. அதனை மேலும் விரைவு படுத்தும் நோக்கில், கர்நாடக மாநிலத்தை ஆட்சி செய்யும் காங்கிரசு அரசு மேகதாது அணைத்திட்டத்தை செயல்படுத்த முனைந்துள்ளது.

காவிரியில் தமிழகத்தின் உரிமையை மறுப்பது பாஜகவின் செயல்திட்டமாக இருக்கும் அதே நேரத்தில், தமிழகத்துக்கு தண்ணீர் வருவதை முற்றிலுமாகத் தடுக்கும் வகையில் அணையைக் கட்டுகிறது காங்கிரசு அரசு. இவை தண்ணீர் வரும் பகுதியில் நடத்தப்படும் இன அழிப்பு முயற்சிகள் ஆகும்.

2. தண்ணீர் பெறும் இடத்தை அழித்தல்

இதற்கு மறுபக்கத்தில் தண்ணீர் பெறும் பகுதியில் இன அழிப்பினை திராவிடக் கட்சிகளும் தேசிய கட்சிகளும் திட்டமிட்டு அரங்கேற்றி வருகின்றன.

முதலில் காவிரிப் படுகை நெடுகிலும் இறால் பண்ணைகளை அமைத்து விவசாயத்தை சீரழித்தன திராவிடக் கட்சிகள். அதன் பின்னர், அதே பகுதிகளில் தனியார் அனல்மின் நிலையங்களுக்கு அனுமதி அளித்தனர். தற்போது மீத்தேன் திட்டம், பாறை எரிவாயுத் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் என வரிசையாக நீர்வளத்தையும் விவசாயத்தையும் அழிக்கும் திட்டங்களாக தேர்வு செய்து திணிக்கின்றனர். இத்திட்டங்களுக்கு திராவிடக் கட்சி அரசுகள் ஏற்கனவே அனுமதி அளித்தன.

நெடுவாசலிலும் காரைக்காலிலும் ஹைட்ரோ கார்பன் திட்டம் அனுமதிக்கப்பட்டால், அதன் தொடர்ச்சியாக மீத்தேன் திட்டம், பாறை எரிவாயுத் திட்டம் ஆகியவை நிச்சயமாக செயல்பாட்டுக்கு வரும்.

நோக்கம் என்ன?

ஒவ்வொரு தேசிய இனத்தின் அடையாளமும் அதன் உணவுடன் தொடர்பு கொண்டிருக்கிறது. மக்களின் உணவு மற்றும் அந்த உணவுக்கான உத்திரவாதம் இரண்டுமே தேசிய இன அடையாளத்தின் முக்கிய அங்கங்கள் ஆகும். தனது நாட்டில் பாரம்பரிய உணவினைக் காப்பதும், தமக்கு தேவையான உணவை தனது நாட்டுக்குள்ளேயே விளைவிப்பதும் முக்கியமானதாகும்.
உணவு இறையாண்மையை (Food sovereignty) காத்துக்கொள்ளாத எந்த இனமும் சுதந்திரமாக வாழ இயலாது. எப்போது ஒரு நாடு, தனது உணவுத் தேவைக்காக அன்னிய நாட்டினை நம்புகிறதோ, அப்போதே அதன் இறையாண்மை பலவீனமாகிவிடுகிறது. காவிரிப் படுகை எனும் தமிழனின் தானியக் களஞ்சியத்தை அழிப்பதன் மூலம், தமிழர்களின் உணவுப் பாதுகாப்பையும், இறையாண்மையும் அழித்துவிட முடியும். தமிழர்கள் கோதுமைக்காகவும், பன்னாட்டு நிறுவனங்களின் இறக்குமதி உணவுக்காகவும் கையேந்தும் நாளில் - தமிழர்களின் தேசிய அடையாளம் அழிந்து போயிருக்கும்.

இதுதான் தேசியக் கட்சிகளின் நோக்கம். இதுதான் பாஜகவின் திட்டம். அதனால்தான், காவிரி நீரை எந்த கர்நாடகத்துக்கு தாரைவார்த்தார்களோ, அதே கர்நாடக மாநிலத்தின் ஆர்.எஸ்.எஸ் தலைவரும் பாஜக எம்.பியும் முன்னாள் பாஜக மத்திய அமைச்சருமான ஜி.எம். சித்தேஸ்வராவின் ஜெம் லாபரெட்டரீஸ் நிறுவனத்துக்கு நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை வாரி வழங்கியுள்ளனர்.

என்ன செய்ய வேண்டும்?

நெடுவாசலிலும் காரைக்காலிலும் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இனிமேலும் இதுபோன்ற மீத்தேன் திட்டம், பாறை எரிவாயுத் திட்டம் போன்றவற்றை அனுமதிப்பதை தடுக்கும் வகையில், காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். 

இதன் மூலம் - இனி வேளாண்மையை சீரழிக்கும் எந்த ஒரு பெருந்திட்டமும் காவிரி வடிநிலத்தில் அமையாமல் நிரந்தரமாக தடுக்க வேண்டும். இதுவே, தமிழ் இன அழிப்பினை தடுக்கும் வழியாகும்.

கருத்துகள் இல்லை: