Pages

சனி, டிசம்பர் 04, 2010

அரசாங்கமே சட்டத்தை மதிக்காத அவலம்: சட்டம் உண்டு - புகையிலை பொருட்கள் மீது எச்சரிக்கை படம் இல்லை

2010 டிசம்பர் 1 ஆம் தேதி முதல் புகையிலை பொருட்கள் மீது புதிய எச்சரிக்கை படத்தை வெளியிட வேண்டும் என்கிற விதியை நாட்டின் ஒரு இடத்திலும் அரசு செயல்படுத்தவில்லை. அதாவது, சட்டப்படி அரசு உத்தரவு செல்லும். ஆனால், ஒரு இடத்திலும் அது செயல்பாட்டில் இல்லை.

சிகரெட், பீடி, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால், இந்தியாவில் ஆண்டுக்கு பத்து லட்சம் பேர் உரிய வயதாகும் முன்பே இறந்துபோகின்றனர். புகையிலை தீமையை கட்டுப்படுத்தும் நோக்கில் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் நடுவண் நலவாழ்வுத் துறை அமைச்சராக இருந்தபோது பல உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதில், புகையிலைப் பொருட்கள் மீது எச்சரிக்கைப் படங்களை வெளியிட வேண்டும் என்கிற விதிமுறை முக்கியமானதாகும். கூடவே, ஒவ்வொரு ஆண்டும் எச்சரிக்கைப் படங்களை கட்டாயமாக மாற்ற வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டிருந்தார்.

இது இந்திய அரசு கையொப்பமிட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் புகையிலை கட்டுப்பாடு ஒப்பந்தத்தின் படியும் (WHO - FCTC), இந்திய புகையிலை கட்டுப்பாடு சட்டப்படியும் (COTPA 2003) கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை ஆகும்.

இதன்படி புகையிலைப் பொருட்களின் மீது எச்சரிக்கை படங்களை வெளியிடும் முறை 31.5.2009 முதல் நாடெங்கும் செயல்பாட்டுக்கு வந்தது. நுரையீரல் பகுதியின் எக்ஸ்ரே மற்றும் தேள் ஆகியன எச்சரிக்கைப் படங்களாக வெளியிடப்பட்டன.

31.5.2009 முதல் இடம்பெற்ற படங்கள்
இந்தப் படங்களுக்கு மாற்றாக புதிய படங்கள் 1.6.2010 முதல் இடம்பெற வேண்டும் என்பது விதியாகும். எனவே, புதிதாக 'வாய்ப்புற்றுநோய்' படத்தை அச்சிட வேண்டும் என 5.3.2010 இல் நடுவண் நலவாழ்வுத்துறை உத்தரவிட்டது (அரசாணை எண்: GSR 176).

ஆனால், கால அவகாசம் போதாது என்று புகையிலை நிறுவனங்கள் கோரியதால் 1.6.2010 ஆம் நாளுக்குப் பதிலாக 1.12.2010 முதல் புதிய படத்தை புகையிலை வெளியிட வேண்டும் என அரசு உத்தரவிட்டது (அரசாணை எண்: GSR 411, நாள் 17.5.2010)

1.12.2010 முதல் இடம்பெறவேண்டிய படம்


இந்த உத்தரவை மீறி, புதிய எச்சரிக்கைப் படம் இல்லாது 1.12.2010 முதல் புகையிலைப் பொருட்கள் விற்கப்பட்டால் - ரூ. 5000 தண்டம் மற்றும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்கிறது இந்திய அரசின் புகையிலை கட்டுப்பாடு சட்டம்.

ஆனால், இந்தியாவின் ஒரே ஒரு இடத்தில் கூட இந்த சட்டம் பின்பற்றப் படவில்லை.

2.12.2010 அன்று சென்னையில் வாங்கப்பட்ட புகையிலைப் பொருட்கள் (ஒன்றில் கூட புதிய படம் இல்லை)

சட்டத்தை செயல்படுத்துவதற்கு பதிலாக, அரசின் உத்தரவு தெளிவாக இல்லை என்று கூறி, ITC , GPI ஆகிய இந்திய சிகரெட் நிறுவனங்கள் டிசம்பர் 1 முதல் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

ஒன்பது மாதங்களுக்கு முன்பு 5.3.2010 அன்றே புதிய படத்தின் CDயை  இந்திய அரசு வெளியிட்டது. இதனை 1.12.2010 முதல் கட்டாயமாக வெளியிட வேண்டும் என்று ஆறு மாதங்களுக்கு முன்பு 17.5.2010லேயே அரசு தெளிவாக உத்தரவிட்டது. ஆனாலும், இதுகுறித்து குழப்பம் நிலவுவதாக சிகரெட் நிறுவனங்கள் பசப்புகின்றன.

சிகரெட் நிறுவனங்களின் மிரட்டலுக்கு அடிபணிந்து - அரசு இந்த உத்தரவை பின்வாங்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாள்தோரும் 2500 பேர் புகையிலைப் பொருட்களால் முன்கூட்டியே செத்துப்போகும் கொடுமையை விட, ஒரு சில சிகரெட் - குட்கா நிறுவனங்களின் இலாப வெறி அரசுக்கு முக்கியமாகப் போய்விட்டது.

வாழ்க சனநாயகம்!

புதன், டிசம்பர் 01, 2010

சாதி அரசியல் தவறானதா?    பகுதி 2

இந்திய அரசியல் வளர்ச்சியில் சாதியின் பங்கு

சமூகம் ஒருநிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும்போது, பழையன கழிதலும் புதியன புகுதலும் வழக்கம். ஆனால், இந்திய சமூகத்தில் 'ஒன்றை அழித்து மற்றொன்று தோன்றுவதற்கு' பதிலாக - இருக்கும் ஒன்றே வேறொரு வடிவம் எடுக்கிறது. இதற்கு சான்றாக இருப்பது சாதி.

விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் வாழ்ந்த தலைவர்கள் பலருக்கு சுதந்திர இந்திய நாட்டில் சாதி இருக்காது என்கிற நம்பிக்கை இருந்தது - அல்லது அவ்வாறு நம்பவைக்க முயற்சி நடந்தது. அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியாரை தவிர வேறு எவரும் இதனை கேள்விக்குள்ளாக்கவில்லை.

இந்திய நாடு அரசியல் விடுதலை அடைந்த போது நாடு சிதறுண்டு போகும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். இந்தியா ஒரு ஒற்றை நாடாக, சனநாயக நாடாக நீடித்திருக்கும் என்று நம்பப்படவில்லை. "இந்திய நாடு மிகக்கேடடைந்து பல நூற்றாண்டுகள் பின்னோக்கி போய்விடும். கற்காலத்தின் காட்டுமிராண்டித்தனம்தான் எஞ்சி நிற்கும்" என்று எச்சரித்தார் வின்சென்ட் சர்ச்சில். அதாவது, கல்வி அறிவற்ற இந்திய மக்கள் சனநாயக அரசியலை புரிந்து, ஏற்று நடக்க மாட்டார்கள் எனக்கருதப்பட்டது.

ஆனால், இதனை மாற்றி சனநாயக அரசியலை வளர்த்தெடுப்பதில் சாதி அமைப்புகள் முக்கிய பங்காற்றின.

மேலை நாடுகள் சனநாயக அரசியல் முறையை ஏற்றபோது, அங்கெல்லாம் மக்கள் அமைப்புகள், தன்னார்வ குழுக்கள் உருவாகி - மக்களை சனநாயக அரசியல் அமைப்பில் பங்கெடுக்கச்செய்தன. ஆனால், இந்தியாவில் அப்படியெல்லாம் பொதுவான அமைப்புகள் எதுவும் பெரிதளவில் காணப்படவில்லை. இந்தநிலையில், படிப்பறிவற்ற ஏழை எளிய மக்கள் கூட புதிய அரசியல் சூழலை புரிந்துகொள்ள வழிவகுத்தவை சாதி சங்கங்கள்தான்.

இதுகுறித்து விரிவாக ஆராய்ந்துள்ள Lloyd L Rudolph மற்றும் Susanne Hoeber Rudolph எனும் அறிஞர்கள், இவர்களது 1960 ஆம் ஆண்டின் "The Political Role of India's Caste Associations" எனும் ஆய்வுக்கட்டுரையில் "இந்திய கிராமங்களுக்கு சனநாயக அரசியலை எடுத்துச் சென்றவை சாதி சங்கங்கள்தான். இதன் மூலம் சாதியின் அடையாளத்தையும் சாதி சங்கங்கள் மாற்றியமைக்க தொடங்கின. சமூக அந்தஸ்து, சாதி பழக்க வழக்கங்களில் சாதியின் பலம் இருந்த நிலையை மாற்றி - சாதியின் பலம் வாக்கு எண்ணிக்கையில் உள்ளது என்கிற உண்மையை சாதி சங்கங்கள்தான் உணரவைத்தன" என்கின்றனர்.

இக்கட்டுரையில் தமிழ் நாட்டின் அரசியல் வளர்ச்சிக்கு வன்னியர் சங்கம் எவ்வாறு பங்களித்தது என்பதை விவரித்துள்ளனர்.

காண்க: Explaining Indian Democracy - A Fifty Years Perspective 1956 - 2006, by Lloyd L Rudolph & Susanne Hoeber Rudolph, Published by Oxford University Press 2008.

எனவே, சாதி என்பது கட்டாயம் தீமையை தான் செய்தது. குறிப்பாக ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு சாதி கேடானதாகவே இருந்து வந்தது. ஆனால், சாதி அமைப்புகள் தீங்கானவை அல்ல. அவை ஒடுக்கப்பட்ட பிரிவினரின் விடுதலைக்குதான் பாடுபட்டன. கூடவே, இந்திய சனநாயக அமைப்புக்கும் சாதி சங்கங்கள் நன்மையையே செய்துள்ளன.        


சாதி சங்கங்களின் அடுத்தக்கட்டமாக பார்க்கப்படும் சாதி அரசியல் என்பதும் கூட ஒடுக்கப்பட்ட பிரிவினரின் உரிமைக்கான அரசியல்தான்.

இதனை பிற்போக்காக பார்ப்பதுதான் உண்மையான பிற்போக்கு.

செவ்வாய், நவம்பர் 30, 2010

கான்குன்: ஐ.நா.மாநாட்டால் உலகம்  அழியாமல் காப்பாற்றப்படுமா?

புவி வெப்பமடைதல் ஒவ்வொரு நாளும் அதிகமாகி வருகிறது. வரலாற்றில் இதுவரை இருந்திராத வகையில் மிக அதிக வெப்பம் நிலவும் ஆண்டாக 2010 ஆம் ஆண்டு மாறும் எனக் கணிக்கப்படுகிறது. இதனால், காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு உலகெங்கும் இயற்கை சீற்றங்கள் அதிகரித்துள்ளன.

'வரலாறு காணாத' புயல், 'வரலாறு காணாத' மழை, 'வரலாறு காணாத' வெள்ளம், 'வரலாறு காணாத' வறட்சி, 'வரலாறு காணாத' காட்டுத்தீ, 'வரலாறு காணாத' நில நடுக்கம், 'வரலாறு காணாத' பனிப்பொழிவு,  'வரலாறு காணாத' குளிர் என்பனவெல்லாம் இப்போது வழக்கமாகிவிட்டன - காரணம் காலநிலை மாற்றம்தான்.

இயற்கை சீற்றங்கள் வரலாற்றில் இல்லாத அளவாக மாறியுள்ளன. இப்படி நடக்கும் என்பதை 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐ.நா. பன்னாட்டு அறிவியலாளர் குழுவின் (IPCC - Intergovernmental Panel on Climate Change) அறிக்கை தெளிவாக எச்சரித்துள்ளது.

காலநிலை மாற்றத்தின் விளைவுகள் கட்டுப்படுத்தவே முடியாதவையாக மாறும் நிலை தற்போது தோன்றியுள்ளது. உலகெங்கும் பல்வேறு மாற்றங்கள் தெரிய ஆரம்பித்துள்ளன. இவை ஒரு மிகப்பெரிய பேரழிவின் தொடக்கமாக இருக்கக் கூடும் என அறிவியலாளர்கள் அஞ்சுகின்றனர்.

'உலகம் அழிவதை மனிதர்களால் தடுத்து நிறுத்த முடியும்' என்கிற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து வருகிறது. உலக அழிவை மனித சக்தியால் தடுத்து நிறுத்தவே முடியாத கட்டத்தை எட்டும் நிலை வந்துவிட்டதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

ஆனால், 'அறிவியல்' சுட்டிக்காட்டும் அவசர நிலையை 'அரசியல்' தலைவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

அறிவியல் சொல்வது என்ன?

புதை படிவ எரிபொருட்கள் எனப்படும் நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாய உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதாலும் - காடுகளை அழிப்பதாலும், அதிக அளவு கரியமில வாயு பூமியின் வளிமண்டலத்தில் கலக்கிறது.

வளிமண்டல கரியமில வாயு அடர்த்தி 200 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 275 ppm அளவாக இருந்தது. இப்போது 392 ppm ஆக அதிகரித்துள்ளது. (ஒரு ppm என்பது பத்துலட்சத்தில் ஒரு பகுதி ஆகும்.)

வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயு, சூரியனிடமிருந்து வரும் வெப்ப சக்தியை பிடித்து வைக்கும் திறனுடையது. இதன் அடர்த்தி அதிகமாவதற்கு ஏற்ப, அது பிடித்துவைக்கும் வெப்பமும் அதிகமாகிறது. இதனால், பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகமாகி வருகிறது. உலகெங்கும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு, இயற்கை சீற்றங்கள் கட்டுக்கடங்காத அளவு அதிகமாவதற்கு இதுவே காரணம்.

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டை உடனடியாக குறைக்க வேண்டும். காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். இப்போதைய 392 ppm கரியமில வாயு அடர்த்தி மென்மேலும் அதிகரிக்காதவாறு வேகமாக செயல்பட்டு கட்டுப்படுத்தப்பட வேண்டும். கூடவே, இதனை 350 ppm அளவுக்கு படிப்படியாக குறைத்தாக வேண்டும்.

இதுவே, பூமியில் மனித இனமும், உயிரினங்களும் தொடர்ந்து உயிர் பிழைத்திருக்க ஒரே வழி என்கின்றனர் அறிவியலாளர்கள்.

அரசியல் தலைவர்கள் செய்வது என்ன?

உலகநாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் கடந்த 20 ஆண்டுகளாக ' புவி வெப்பமடைவது' குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள், அதிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக மிகத் தீவிரமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள் - ஐ.நா. அவையை மையமாக வைத்து நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் உருப்படியான முடிவு எதுவுமே எட்டப்படவில்லை.

ஐ.நா. புவி உச்சிமாநாடு 1992 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ-டி-ஜெனிரோ நகரில் கூடியபோது, அதன் ஒரு அங்கமாக "காலநிலைமாற்ற பணித்திட்ட பேரவை" (UNFCCC - United Nations Framework Convention on Climate Change) ஏற்படுத்தப்பட்டது. உலகின் பெரும்பாலான நாடுகள் பங்கேற்கும் இந்த அமைப்பின் 'அமைச்சர்கள் அளவிலான ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்ற மாநாடு' (Conference of the Parties -COP) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. 1997 ஆம் ஆண்டு ஜப்பானின் கியோட்டோ நகரில் கூடிய  மாநாட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க 'கியோட்டோ உடன்படிக்கை' (Kyoto Protocol ) எட்டப்பட்டது.

வளிமண்ட கரியமில வாயு அடர்த்திக்கு வரலாற்று ரீதியில் காரணமான நாடுகள் கியோட்டோ உடன்படிக்கையில் பட்டியலிடப்பட்டன. அந்த நாடுகள் கூட்டாக 1990 ஆம் ஆண்டில் எவ்வளவு கரியமில வாயுவை வெளியேற்றினவோ - அந்த அளவுக்கு கீழாக 5.2% அளவுவரை 2008 - 2012 ஆண்டுகளில் கரியமில வாயு வெளியாகும் அளவை குறைக்க வேண்டும் என்றது இந்த உடன்படிக்கை.

உலகின் மிக அதிகம் மாசுபடுத்தும் நாடான அமெரிக்கா, இந்த உடன்படிக்கையில் முதலில் இணைந்து பின்னர் வெளியேறிவிட்டது.

இதற்கு பின்னர் 2007 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஐ.நா. அவையின் ஒரு அங்கமான பன்னாட்டு அறிவியலாளர்கள் குழு (IPCC)அறிக்கை, கரியமில வாயு வெளியாகும் அளவை 1990 ஆம் ஆண்டின் அளவுக்கு கீழாக 5.2 % குறைத்தால் போதாது, உண்மையில் 80 % குறைக்க வேண்டும் என்றது. எனவே, புதிய புரிதலுக்கு ஏற்ப புதிய வியூகத்தை வகுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பாலி வழிகாட்டி 2007 (Bali Road Map)

ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்ற மாநாடு (COP 13) 2007 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலித் தீவில் கூடியபோது இருவழி பேச்சுகளைத் தொடங்க ஒப்புக்கொள்ளப்பட்டது.

1. ஏற்கனவே நடைமுறையில் உள்ள கியோட்டோ உடன்படிக்கையை அடுத்த காலகட்டத்திற்கு கொண்டு செல்வது. அதாவது, 5.2 % அளவு கரியமில வாயு வெளியாகும் அளவை 2012 க்குள் எட்டுவது என்பதை 2012 க்கு பின்னும் நீட்டிப்பது (80 % வரை). (Ad Hoc Working Group on Further Commitments under the Kyoto Protocol - KP)

2. கியோட்டோ உடன்படிக்கையில் அமெரிக்கா ஒரு உறுப்பு நாடு அல்ல என்பதால், அந்த நாட்டையும் இணைத்து 'நீண்டகால நோக்கிலான கூட்டுச் செயல்பாடு' குறித்து பேசுவது, என்று முடிவெடுக்கப்பட்டது. (Ad Hoc Working Group on Long-term Cooperative Action - LCA)

இரண்டுவகையாக பேசினாலும் இரண்டின் நோக்கமும் ஒன்றுதான். ஒன்றில் அமெரிக்கா இடம்பெறாது, மற்றதில் இடம்பெறும் - இதுதான் வேறுபாடு.

'நீண்டகால நோக்கிலான கூட்டுச் செயல்பாடு' (LCA) பேச்சுகளில்:

அ. கரியமில வாயு உள்ளிட்ட பசுங்கூட வாயுக்கள் வெளியாகும் அளவினைக் குறைத்தல் (Mitigation),

ஆ. மாறிவரும் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்வது (Adaptation),

இ. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்குவது மற்றும் பகிர்ந்து கொள்வது (Technology),

ஈ. மேற்கண்ட மூன்று தேவைகளுக்குமான நிதிவளத்தை அளிப்பது (Finance) - ஆகியவை குறித்து பேசுவது என்பதே பாலி வழிகாட்டி ஆகும்.

அவ்வாறே, கியோட்டோ உடன்படிக்கையில் இணைந்துள்ள நாடுகள் அதனை 2012 ஆம் ஆண்டுக்கு பின்னும் தொடர்வதற்கான இலக்குகளை வகுப்பது பாலி வழிகாட்டியின் மற்றொரு வழிப் பேச்சுவார்த்தை.

இந்த இரண்டு வழிகளின் இலக்கும் 'காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது மற்றும் பாதிப்புகளை எதிர்கொள்வது' ஆகியனதான். எனினும், கியோட்டோ உடன்படிக்கை அதன் உறுப்பு நாடுகளை சட்டப்படி கட்டுப்படுத்தக்கூடியது. மற்றது வெறும் பேச்சுதான்

தோல்வியில் முடிந்த கோபன்ஹெகன் மாநாடு.

ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்ற மாநாடு (COP 15) ஆம் 2009 ஆண்டு டென்மார்க்கின் கோபன்ஹெகன் நகரில் கூடும்போது 1. நீண்டகால நோக்கிலான கூட்டுச் செயல்பாடு, 2. கியோட்டோ உடன்படிக்கை இருவழி பேச்சுகளும் வெற்றி பெற்று தலைவர்கள் புதிய உடன்படிக்கையில் கையொப்பமிடும் இடமாக அது அமையவேண்டும் என்று ஏற்கனவே பாலி வழிகாட்டியில் முடிவு செய்யப்பட்டிருந்தது. அவ்வாறே நடக்கும் என்று உலகெங்கும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அமெரிக்கா மற்றும் வளர்ந்த நாடுகளின் பிடிவாதத்தால் கோபன்ஹெகன் மாநாடு தோற்றுப்போனது.

தோல்வி தொடருமா?

கோபன்ஹெகன் மாநாடு தோல்வியில் முடிந்தாலும், 2010 ஆம் ஆண்டில் உடன்படிக்கை எட்டப்படும் வகையில் பேச்சுவார்த்தைகளை தொடர்வது என்று அங்கே முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில் உலக நாடுகளுக்கு இடையேயான கூட்டங்கள் முறையே 2010 ஏப்ரல், சூன், ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் மூன்று முறை ஜெர்மனியின் பான் நகரில் கூடியது. நான்காவது கூட்டம் அக்டோபர் மாதம் சீனாவின் தியான்ஜின் நகரில் கூடியது. இங்கெல்லாமும் பேச்சுவார்த்தைகளில் இழுபறியே நீடித்தது.

கான்குன் நகரில் என்ன நடக்கும்?

மெக்சிகோவின் கான்குன் நகரில் இப்போது நவம்பர் 29 முதல் டிசம்பர் 10 வரை ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்ற மாநாடு (COP 16) கூடியுள்ளது. "கோபன்ஹெகனில் தவறவிடப்பட்ட உடன்படிக்கை" உலகத் தலைவர்கள் கான்குனில் கூடும் போதாவது எட்டப்படுமா என்கிற ஆவல் இப்போது எழுந்துள்ளது.

கான்குன் மாநாடு மிகமிக முக்கியமானது - பூமியில் உயிரின வாழ்க்கை தொடருமா, அல்லது ஒரேயடியாக அழியுமா என்பதை இங்கு மேற்கொள்ளப்படும் முடிவுகள்தான் தீர்மானிக்கப் போகின்றன.

ஸ்பெக்ட்ரம் பணத்தில் அனுஷ்காவுக்கு பங்கு! அதிர்ச்சி தகவல்.





சுப்ரமணியன் சுவாமி குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு அளித்த பேட்டியில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆதாயம் அடைந்தவர்கள் பட்டியலில் அனுஷ்கா, நாடியா ஆகியோரும் இருக்கக்கூடும் என்று கூறியுள்ளார். (பக்கம் 43 - குமுதம் ரிப்போர்ட்டர் - 5.12.2010)

அதாவது, ஸ்பெக்ட்ரம் பணத்தில் அனுஷ்காவுக்கும் பங்கு கிடைத்திருக்கலாமாம்!!!

(குறிப்பு: அனுஷ்கா, நாடியா ஆகியோர் திருமதி. சோனியா அம்மையாரின் தங்கைகளாம்)

(முக்கிய குறிப்பு: மேலே உள்ள படங்களுக்கும் இந்த செய்திக்கும் தொடர்பு எதுவும் இல்லை)

திங்கள், நவம்பர் 29, 2010

சாதி அரசியல் தவறானதா?    பகுதி 1

சாதி அரசியல் ஒரு மோசமான விடயம் என்று இப்போது பலரும் பேசுகின்றனர். குறிப்பாக, உயர்சாதி பத்திரிகைகள் அப்படியொரு கருத்தை திணிக்கின்றன. ஆனால், ஒடுக்கப்பட்ட சாதிகளின் அரசியல் என்பது ஒருபோதும் மோசமானதாக இருந்ததில்லை, எந்த காலகட்டத்திலும் பிற்போக்கானதாகவும் இருந்தது இல்லை.

வரலாற்று ரீதியில் பார்த்தால் அரசியலில் சாதி கலந்ததாகக் கூறமுடியாது. மாறாக, சாதிதான் அரசியல் வடிவமெடுத்தது.

1. இந்தியாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு முறையை ஆங்கிலேயர்கள் 1860களுக்கு பின்பு அறிமுகப்படுத்தியபோது, ஒருசில சாதிகள் தீண்டத்தகாத சாதிகளாக ஆக்கப்படுவதை எதிர்க்க சாதி ரீதியிலான அணிதிரட்டல் நடந்தது.

2. ஒருசில சாதியினர் குற்றப்பரம்பரையினர் என்று ஆங்கிலேயர்களால் வகைப்படுத்தப்பட்டபோது சாதி ரீதியிலான அணிதிரட்டல் தேவைப்பட்டது.

3. தமிழ்நாடு திராவிட ஆட்சியாளர்களால் ஆளப்படும் ஒரு மாநிலமாக இருப்பதும், திராவிட கட்சிகள் ஒரு அசைக்கமுடியாத சக்தியாக இருப்பதற்கும் பின்னணி சாதி அரசியல்தான். "பார்ப்பனர்கள் ஒரு சாதி - பார்ப்பனர் அல்லாத மற்ற எல்லோரும் மற்றொரு சாதி" என்கிற தந்தை பெரியாரின் வகைப்படுத்தல்தான் திராவிட அரசியல் எழுச்சியின் அடிப்படை.

4. அண்ணல் அம்பேதகர் அவர்களால் முன்வைக்கப்பட்டு, இன்று தலித் அரசியலாக வளர்ந்து நிற்கும் அரசியல் எழுச்சியின் அடிப்படையும் சாதிதான்.

5. விடுதலையான காலகட்டத்தில் இந்தியாவின் சனநாயகத்தை வளர்க்க சாதியே வழிவகுத்தது. தேர்தல் முறையை ஊக்குவிக்கும்விதமாக பெருவாரியான மக்கள் தேர்தலில் பங்கேற்க செய்தவை சாதி அமைப்புகள்தான்.

6. காங்கிரஸ் என்கிற ஒற்றைக்கட்சி சர்வாதிகாரத்தை வீழ்த்தி இன்று வட இந்தியாவில் பலம்பெற்று நிற்கும் கட்சிகள் பலவும் மண்டல் எழுச்சியால் உருவானவை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பாலம் அமைக்கும் கன்சிராமின் கனவுதான் மாயாவதியின் வளர்ச்சியாக வடிவெடுத்தது.

இப்படியாக, ஒடுக்கப்பட்ட சாதிகளின் அரசியல் என்பது - சாதி முறையை நீட்டிப்பதற்காகவோ, ஏற்றத்தாழ்வை தொடர்வதற்காகவோ ஏற்பட்டது அல்ல. மாறாக, சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வையும் அடக்குமுறையையும் சுரண்டலையும் ஒழித்துக்கட்டவே சாதி அரசியல் பயன்பட்டது.

ஆக, மனுதர்மம் முன்னிறுத்திய ஏற்றத்தாழ்வான சாதி முறைக்கு நேர் எதிரானதாக - சாதித் தீமையை ஒழித்துக்கட்டும் ஒரே கருவியாக இருப்பது சாதி அரசியல் மட்டும்தான்.

ஓரே இடத்தில் குவிக்கப்பட்டிருக்கும் அதிகாரம் பரவலாக்கப்பட வழிவகுத்ததும் சாதி அரசியல்தான். ஆளும் சிறுபான்மைக் கூட்டத்திடமிருந்து ஆளப்படும் பெரும்பான்மைக் கூட்டத்திற்கு அதிகாரத்தை இடம்பெயரச் செய்யும் தொடர் முயற்சியே சாதி ஆரசியல் ஆகும்.

இது எப்படி பிற்போக்கு ஆகும்?

ஞாயிறு, நவம்பர் 28, 2010

இந்த முறையும் பீகாரில் சாதிதான் வென்றது!

பீகாரில் சாதி தோற்றுவிட்டது என்றும், இது மற்ற மாநிலங்களில் சாதி அரசியல் பேசும் தலைவர்களுக்கு ஒரு பாடம் என்றும் பத்திரிகைகள் பிரச்சாரம் செய்துவருகின்றன. இந்த பிரச்சாரம் உண்மையா?

பீகாரில் பிற்படுத்தப்பட்டோர் + தாழ்த்தப்பட்டோர் என்கிற சாதிக் கூட்டணியை மற்றொரு சாதிக் கூட்டணியான பிற்படுத்தப்பட்டோர் + உயர்சாதிக் கூட்டணி தோற்கடித்துள்ளது. அதாவது இரண்டு சாதி அணிகளுக்கு இடையேயான போட்டியில் உயர்சாதி அணி வென்றுள்ளது. இதைத்தான் "சாதி தோற்றது" என்று பேசுகின்றன உயர்சாதி பத்திரிகைகள்.

பீகாரின் ஆதிக்கசாதியினர் மூன்று பிரிவினர் ஆகும். 1. பூமிகார்கள், இவர்கள் நிலச்சுவாந்தார்கள். 2. இராசபுத்திரர்கள், இவர்கள் பொருளாதார ரீதியில் பலம் வாய்ந்தவர்கள். 3. பார்ப்பனர்கள், இவர்கள் அதிகாரப் பதவிகளில் கோலோச்சுபவர்கள். இந்த மூன்று பிரிவினரின் ஆதிகாரம்தான் 1990 வரை நீடித்தது. இந்த உயர்சாதி ஆதிக்கத்திற்கு முடிவுகட்டியவர் லாலு பிரசாத் யாதவ். லாலுவின் வெற்றி சமூக நீதியின் வெற்றி என்று போற்றப்பட்டது.

இவ்வாறு லாலுவின் வெற்றியால் ஓரங்கட்டப்பட்ட கூட்டத்தினர் - இப்போது, நிதீஷ்குமாரை முன்னிறுத்தி மீண்டும் எழுச்சி பெற்றுள்ளனர். ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பு தலைவரை - இன்னொரு பிற்படுத்தப்பட்ட தலைவருடன் சேர்ந்து ஆதிக்க வகுப்பினர் வீழ்த்தியுள்ளனர். இது எப்படி சாதியின் தோல்வி ஆகும்?

பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து 'இந்தியா டுடே' இதழ் மிக முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது:

1. தொகுதி எல்லை மறுவரையறை செய்த பிறகு உயர்சாதியினர் மிகுந்திருந்த தொகுதிகளின் எண்ணிக்கை 52 இலிருந்து 72 ஆக அதிகரித்தது.


2. நிதீஷ்குமார் கடந்தமுறை முதல்வரான பின்பு அதிதீவிர பிற்படுத்தப்பட்டோர், மகாதலித்துகள் ஆகியோரை தனது சமூக அடித்தளமாக உருவாக்கினார். உயர்சாதியினரின் வாக்கு வங்கியை பா.ஜ.க தக்கவைத்துக்கொண்டது.


3. உயர் சாதியினரில் பெரும்பாலானோருக்கு நிதீஷ் மீது அபிமானம் இல்லாவிட்டாலும் வேறு வழியின்றி அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள். தேர்தலில் நிதீஷ் + பா.ஜ.க இரு கட்சிகளின் ஓட்டுகளும் பரஸ்பரம் கூட்டணி வேட்பாளருக்கு பரிமாரிக்கொள்ளப்பட்டது. ஆனால் லாலு + பாஸ்வான் அணியில் அவ்வாறு கூட்டணி வேட்பாளருக்கு வாக்கு பரிமாரிக்கொள்ளப்படவில்லை.

ஆக நடந்தது இதுதான்:

பிற்படுத்தப்பட்டோர் லாலு தலைமையில் ஒரு பிரிவினரும் நிதீஷ் தலைமையில் ஒரு பிரிவினரும் எதிர் எதிராக அணிவகுத்தனர்.

பிற்படுத்தப்பட்டோர் + தாழ்த்தப்பட்டோர் கூட்டணி ஆகிய லாலு + பாஸ்வான் அணி தோற்றுள்ளது. பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் பரஸ்பரம் இணையவில்லை. இவர்களின் சாதிப்பற்று தீவிரமானதாக இல்லை.

பிற்படுத்தப்பட்டோர் + உயர்சாதிக் கூட்டணி ஆகிய நிதீஷ் + பா.ஜ.க அணி வென்றுள்ளது. பிற்படுத்தப்பட்டோரும் உயர்சாதியினரும் பரஸ்பரம் வாக்களித்துள்ளார்கள். உயர்சாதியினருக்கு வேறு வழியும் இல்லை.

ஆக, இந்த முறையும் பீகாரில் சாதிதான் வென்றுள்ளது. அதுவும் உயர்சாதி!

உண்மை இவ்வாறிருக்க சாதி தோற்றுவிட்டதாக பிரச்சாரம் செய்யப்படுவது ஏன்?

ஒடுக்கப்பட்ட சாதியினர் வென்றால் - அது சாதியின் வெற்றி என்பதும், அதுவே, உயர்சாதியினர் வென்றால் அது சாதிகடந்த வெற்றி என்றும் அடையாளப்படுத்துவது ஏன்?

"உயர் சாதியினரின் ஆதிக்கமே இயல்பு - ஒடுக்கப்பட்டோரின் வெற்றி இயல்புக்கு மாறானது" என்கிற மனுதர்ம சிந்தனையே பத்திரிகைகளின் "பீகாரில் சாதி தோற்றது" என்கிற பிரச்சாரத்தின் பின்னணி ஆகும்.

சனி, நவம்பர் 27, 2010

பீகாரில் தோற்ற சாதி = ஆதிக்க சாதி வெறியர்களின் சதி!

பீகார் தேர்தலில் நிதீஷ்குமார் வெற்றி பெற்றதை "சாதி தோற்றது, வளர்ச்சி வென்றது" என்று பத்திரிகைகள் பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளன. இது உண்மையை மூடிமறைக்கும் மேல்சாதி சதியே அன்றி வேறல்ல! - என்று நான் எனது பதிவில் எழுதியிருந்தேன். (பத்திரிகைகளின் பித்தலாட்டம்: பீகாரில் சாதி தோற்றதா?)

ஐக்கிய சனதாதளத்தின் வெற்றியை "சாதியின் தோல்வி" என்று பேசுவது பித்தலாட்டம் என்று நான் கூறியிருப்பதற்கு மறுப்பு ஓசை பதிவில் வந்துள்ளது: தணியுமோ சாதீய வெறி..

அதில் "சாதீயை கடந்து, மதத்தை கடந்து நேர்மையுடன் தில்லுமுல்லற்ற தேர்தல் மூலம் வென்று இருக்கிறார் (நிதீஷ்குமார்).  இது பிடிக்காத சிலர், அவரது வெற்றியையும் சாதீய கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். என்ன பெரிய வளர்ச்சி, என்ன பெரிய வெற்றி என்கின்றனர். அது நிச்சயம் துரதிருஷ்டவசமானது." என்று கூறப்பட்டுள்ளது.

ஓசை பதிவிற்கு எனது மறுப்பு:

1. நிதீஷ்குமாரின் வெற்றியை நான் கொச்சைப்படுத்தவில்லை. அவருக்கு எதிராகவும் பேசவில்லை. "தோற்றுப்போன லாலு சாதி வெறியர், வெற்றி பெற்ற நிதீஷ்குமார் சாதி கடந்தவர்" என்று பேசுவது என்ன நியாயம்? என்பதுதான் எனது கேள்வி. நிதீகுமாரோ அவரது கட்சியோ எந்த விதத்தில் சாதிக்கு அப்பாற்பட்ட கட்சி? அதுவும் சாதிவாரி உரிமைக்காக போராடுகிற கட்சி என்பதுதானே உண்மை.

சாதி மறுப்பு பேசும் ஆதிக்க சக்திகள் - வெற்றி பெற்றவர்களை தங்களது ஆளாக மாற்றும் முயற்சி இது இல்லையா? ஒருவேளை நிதீஷ்குமார் தனியார்துறை இடஒதுக்கீட்டை கொண்டுவந்தால் அவர் உடனே சாதிவெறியர் ஆக்கப்பட மாட்டாரா?

நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்காகவும், சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்கு ஆதரவாகவும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு கேட்டும் போராடும் கட்சி ஐக்கிய சனதாதளம். பிற்படுத்தப்பட்டோருக்காக போராடும் தலைவர்களில் முன்னிலையில் நிற்பவர் ஐக்கிய சனதாதளத்தின் தலைவர் சரத் யாதவ்.

நாடாளுமன்றத்தில் சரத்யாதவையும் அவரது கட்சியையும் சாதி வெறியர்களாக சித்தரித்த அதே பத்திரிகைகள் - இப்போது பீகாரில் மட்டும் அவரது கட்சியை சாதிக்கு எதிரான கட்சியாக சித்தரிப்பது ஏன்?

பிற்படுத்தப்பட்ட மக்களின் கட்சியும் (லாலு) தாழ்த்தப்பட்ட மக்களின் கட்சியும் (பாஸ்வான்) பீகாரில் தோற்றுப்போனதாக எழுதும் பத்திரிகைகள் - வெற்றிபெற்ற கட்சியும் (நிதீஷ்) ஒரு பிற்படுத்தப்பட்ட மக்களின் கட்சிதான் என்கிற உண்மையை மறைப்பது ஏன்?

பீகாரில் சாதி தோற்றது உண்மையானால் - அங்கு காங்கிரஸ் கட்சிதானே வெற்றி பெற்றிருக்க வேண்டும். சாதிக்கு அப்பாற்பட்ட தலைவர் ராகுல் காந்தியின் கட்சி வெறும் நான்கு இடங்களை மட்டுமே பிடித்தது ஏன்?

2. வளர்ச்சிக்குதான் மக்கள் வாக்களித்தார்கள் என்பது உண்மையானால் - நிதீஷ்குமாரைப் போலவே, மத்திய பிரதேசத்தின் திக் விசய சிங்கும், ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுவும் கூடத்தான் வளர்ச்சிக்காக பாடுபட்டார்கள். அவர்கள் தோற்றது ஏன்? உத்திரபிரதேசத்தில் மாயாவதி மாபெரும் வெற்றி பெற்றாரே - அதற்கு பின்னால் இருந்தது சாதியா? வளர்ச்சியா?

3. மதவாதத்தையும் மதசார்பின்மையையும் ஒன்றுக்கொன்று எதிரானதாக ஒப்பிடலாம். தீவிர முதலாளித்துவத்தையும் தீவிர பொதுவுடமையையும் ஒன்றுக்கொன்று எதிரானதாகக் கூறலாம். அது போல சாதி பேசுவதையும் வளர்ச்சியையும் எதிரானதாக எதன் அடிப்படையில் ஒப்பிடுகிறார்கள்?

நீடித்த வளர்ச்சி என்பது ஒரு கொள்கை. வளர்ச்சிக்கு ஆதாரமான சுற்றுச்சூழல் காக்கப்பட்டால்தான் வளர்ச்சி நீடிக்கும் என்பது இதன் அடைப்படை.  எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகப் பேசினால் அது வளர்ச்சியை எதிர்ப்பது ஆகாது. அதாவது, ஒருகட்சி ஒரே நேரத்தில் வளர்ச்சிக்காகவும் - சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும் பேச முடியும்.

அதுபோலத்தான் வகுப்புவாரி உரிமைக் கொள்கையும். வளர்ச்சியின் பலன் ஒருசிலரிடம் சேராமல் அது எல்லோருக்கும் பரவலாக்கப்பட வேண்டும் என்பதே இதன் அடிப்படை. வளர்ச்சிக்காகப் பேசும் ஒரு கட்சி சமூக நீதிக்காகவும் பேச முடியும். இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல.

ஆனால், ஆதிக்க சாதிவெறி பத்திரிகைகள் சமூகநீதிக் கோள்கைக்கு சாதிச்சாயம் பூசி அதனை வளர்ச்சிக்கு எதிராக நிறுத்துகின்றன. இதுஒரு பித்தலாட்டம் அல்லாமல் வேறு என்ன?

உண்மையில் ஒருதேர்தலில் வெற்றி தோல்விக்கு பல காரணங்கள் இருக்கும். அதில் வளர்ச்சிக்கும் ஒரு பங்கு இருக்கும், அவ்வளவுதான். சாதியின் தாக்கம் மாநிலத்துக்கு ஏற்ப மாறுபடும். மேற்கு வங்கத்திலோ, குஜராத்திலோ சாதிக்கு குறிப்பிடத்தக்க பங்கு இருக்காது. ஆனால், உத்திரபிரதேசம், பீகாரில் அதற்கு முக்கிய பங்கு உண்டு.

சாதி தோற்றது என்று பத்திரிகைகள் எழுதுவது ஒரு போலிவேடம், சதிச்செயல். இதன் மூலம் சமூகநீதிக் கொள்கைக்கு மக்கள் ஆதரவளிக்கவில்லை என்கிற மாயத்தோற்றத்தை அவை விதைக்கின்றன.

அதாவது - நிதீஷ் வென்றார், லாலு தோற்றார். வளர்ச்சி வென்றது, சாதி தோற்றது - எனவே, சாதிவாரிக் கணக்கெடுப்பு, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு, தனியார் துறை இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகள் இனி எடுபடாது - என்கிற மாயத்தோற்றத்தை பத்திரிகைகள் எற்படுத்த முயல்கின்றன.

இந்த பிரச்சாரத்தை "ஆதிக்க சாதி வெறியர்களின் தொடர்சதியின் ஒரு அங்கம்" என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.