Pages

திங்கள், நவம்பர் 29, 2010

சாதி அரசியல் தவறானதா?    பகுதி 1

சாதி அரசியல் ஒரு மோசமான விடயம் என்று இப்போது பலரும் பேசுகின்றனர். குறிப்பாக, உயர்சாதி பத்திரிகைகள் அப்படியொரு கருத்தை திணிக்கின்றன. ஆனால், ஒடுக்கப்பட்ட சாதிகளின் அரசியல் என்பது ஒருபோதும் மோசமானதாக இருந்ததில்லை, எந்த காலகட்டத்திலும் பிற்போக்கானதாகவும் இருந்தது இல்லை.

வரலாற்று ரீதியில் பார்த்தால் அரசியலில் சாதி கலந்ததாகக் கூறமுடியாது. மாறாக, சாதிதான் அரசியல் வடிவமெடுத்தது.

1. இந்தியாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு முறையை ஆங்கிலேயர்கள் 1860களுக்கு பின்பு அறிமுகப்படுத்தியபோது, ஒருசில சாதிகள் தீண்டத்தகாத சாதிகளாக ஆக்கப்படுவதை எதிர்க்க சாதி ரீதியிலான அணிதிரட்டல் நடந்தது.

2. ஒருசில சாதியினர் குற்றப்பரம்பரையினர் என்று ஆங்கிலேயர்களால் வகைப்படுத்தப்பட்டபோது சாதி ரீதியிலான அணிதிரட்டல் தேவைப்பட்டது.

3. தமிழ்நாடு திராவிட ஆட்சியாளர்களால் ஆளப்படும் ஒரு மாநிலமாக இருப்பதும், திராவிட கட்சிகள் ஒரு அசைக்கமுடியாத சக்தியாக இருப்பதற்கும் பின்னணி சாதி அரசியல்தான். "பார்ப்பனர்கள் ஒரு சாதி - பார்ப்பனர் அல்லாத மற்ற எல்லோரும் மற்றொரு சாதி" என்கிற தந்தை பெரியாரின் வகைப்படுத்தல்தான் திராவிட அரசியல் எழுச்சியின் அடிப்படை.

4. அண்ணல் அம்பேதகர் அவர்களால் முன்வைக்கப்பட்டு, இன்று தலித் அரசியலாக வளர்ந்து நிற்கும் அரசியல் எழுச்சியின் அடிப்படையும் சாதிதான்.

5. விடுதலையான காலகட்டத்தில் இந்தியாவின் சனநாயகத்தை வளர்க்க சாதியே வழிவகுத்தது. தேர்தல் முறையை ஊக்குவிக்கும்விதமாக பெருவாரியான மக்கள் தேர்தலில் பங்கேற்க செய்தவை சாதி அமைப்புகள்தான்.

6. காங்கிரஸ் என்கிற ஒற்றைக்கட்சி சர்வாதிகாரத்தை வீழ்த்தி இன்று வட இந்தியாவில் பலம்பெற்று நிற்கும் கட்சிகள் பலவும் மண்டல் எழுச்சியால் உருவானவை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பாலம் அமைக்கும் கன்சிராமின் கனவுதான் மாயாவதியின் வளர்ச்சியாக வடிவெடுத்தது.

இப்படியாக, ஒடுக்கப்பட்ட சாதிகளின் அரசியல் என்பது - சாதி முறையை நீட்டிப்பதற்காகவோ, ஏற்றத்தாழ்வை தொடர்வதற்காகவோ ஏற்பட்டது அல்ல. மாறாக, சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வையும் அடக்குமுறையையும் சுரண்டலையும் ஒழித்துக்கட்டவே சாதி அரசியல் பயன்பட்டது.

ஆக, மனுதர்மம் முன்னிறுத்திய ஏற்றத்தாழ்வான சாதி முறைக்கு நேர் எதிரானதாக - சாதித் தீமையை ஒழித்துக்கட்டும் ஒரே கருவியாக இருப்பது சாதி அரசியல் மட்டும்தான்.

ஓரே இடத்தில் குவிக்கப்பட்டிருக்கும் அதிகாரம் பரவலாக்கப்பட வழிவகுத்ததும் சாதி அரசியல்தான். ஆளும் சிறுபான்மைக் கூட்டத்திடமிருந்து ஆளப்படும் பெரும்பான்மைக் கூட்டத்திற்கு அதிகாரத்தை இடம்பெயரச் செய்யும் தொடர் முயற்சியே சாதி ஆரசியல் ஆகும்.

இது எப்படி பிற்போக்கு ஆகும்?

4 கருத்துகள்:

குழலி / Kuzhali சொன்னது…

ஒடுக்கிறவர்கள் எப்போதும் வித்தியாசங்களெல்லாம் ஒன்றுமில்லை. நாமெல்லாரும் ஒன்றுதான் என மொழிவதும் ஒடுக்கப்படுகிறவர்கள் இல்லை இல்லை வித்தியாசங்களும் வேறுபாடுகளும் நிறைந்த உலகம் இது.நாங்கள் வித்தியாசமானவர்கள் என அரற்றுவதும் இன்றும் நடைபெறும் நிகழ்வுகள். அமெரிக்க கறுப்பர்கள் தாங்கள் பேசும் எபோனிக்ஸ் என்பது ஆங்கிலமல்ல தனிமொழி என்று வாதிடுவதும் கிளின்டன் தலையிட்டு எபோனிக்ஸ் எனத் தனிமொழி கிடையாது.அதுவும் ஆங்கிலம்தான் என ஆணையிட்டதும் சமீபத்தில் நடந்த கதை.

ஒடுக்கப்படுகிறவர்கள் தங்கள் வித்தியாசங்களை நிறுவுவதன் மூலமாகவே அதனடிப்படையில் உரிமைகளைக் கோரமுடிகிறது. ஒடுக்குபவர்கள் இந்த வித்தியாசங்களை மறுப்பதன் மூலமாகவே எல்லாருக்குமான மொத்த விடுதலை பற்றிய பெருங்கதையாடலின் மறுபக்கமாக எல்லோரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உரி்மையை ஒடுக்குகிற சக்தி பெற்றுக்கொள்கிறது.
அ.மார்க்ஸ் எழுதிய கட்டுரையிலிருந்து....

அ.மார்க்ஸ்ன் எழுத்திலிருந்து நாம் புரிந்து கொளவேண்டியது உண்மையில் சமமில்லாத போது எல்லாம் சமம், எல்லாம் ஒன்றுதான் என்று பொதுமை படுத்தும் போது உண்மையில் தாழ் நிலையில் இருப்பவர்களுக்கு துரோகம் இழைக்கிறோம், இது தான் இன்றைய நிலையில் சாதி எங்கேப்பா இருக்கின்றது? எல்லோரும் சமமாகத்தானே இருக்கின்றோம் என்று நாம் பொதுமை படுத்தும்போது உண்மையிலேயே சாதியால் பாதிக்கப்படுபவர்களுக்கு துரோகமிழைக்கிறோம்.

இது தொடர்பாக 2 பதிவுகள் எழுதியிருந்தேன் இன்னும் 2 எழுத நினைத்திருந்தேன், ஆனால் அப்போதிருந்த தமிழக அரசியல்(கட்சி அரசியல்) நிலையும் இப்போதுள்ளதற்க்கும் நிரம்ப வேறுபாடுகள் உண்டு, ஈழ அழிவு பலவற்றை புரிந்துகொள்ள வைத்துள்ளது

http://kuzhali.blogspot.com/2006/06/blog-post_16.html

http://kuzhali.blogspot.com/2006/07/2.html

கோவி.லெனின் சொன்னது…

சாதி அரசியலின் சாதக பாதகங்கள் குறித்து நிறையவே பேசவிருக்கிறது. உங்கள் கருத்துகள் ஒரு நல்ல தொடக்கம்

தமிழ்மலர் சொன்னது…

கொஞ்சம் யோசிக்கவைக்கிறது உங்கள் பதிவு... நன்று

raajaa சொன்னது…

nallathan erukku but enimala sathiyam ella nanba