Pages

வெள்ளி, நவம்பர் 05, 2010

'நரகனைக் கொன்ற நாள் நல்ல நாள் விழாவா'  - தீபாவளியின் உண்மை பின்னணியைக் கூறுகிறார் தொ. பரமசிவன்.

""இன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாகக் கோண்டாடப்பெறும் திருவிழா தீபாவளி. நகர்ப்புறம் சார்ந்ததாகவும், துணி, எண்ணெய், மாவு, பட்டாசு ஆகிய பெருந்தொழில்களின் பொருளாதாரம் சார்ந்ததாகவும் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. தகவல் தொடர்புச் சாதனங்கள் தரும் பகட்டான விளம்பரங்களால், இது தமிழர்களின் 'தேசியத் திருவிழா' போலக் காட்டப்படுகிறது.

ஆயினும் தைப்பொங்கல் திருவிழா போல மரபுவழிப் பொருளாதாரம் சார்ந்ததாகவும் ஒரு திருவிழாவிற்குரிய உள்ளார்ந்த மகிழ்ச்சியோடும் சடங்குகளோடும் கொண்டாடப் பெறுவதாகவும் தீபாவளி அமையவில்லை. தைப்பொங்கல் சமய எல்லையினைக் கடந்து நிற்கும் திருவிழா. இது பழந்தமிழரின் அறுவடைத் திருவிழா. எனவேதான் இன்று ரோமன் கத்தோலிக்கத் தேவாலயங்களில்கூடத் தைப்பொங்கல் கொண்டாடப் பெறுகிறது. ஆனால் தீபாவளி தமிழரின் திருவிழாவாக அமையாமல் 'இந்து'க்களின் திருவிழாவாக அமைகிறது.

தமிழர் திருவிழா - இந்துக்களின் திருவிழா என்ற வேறுபாட்டினை எவ்வாறு பிரித்தறிவது? பழைய வழிபாட்டு முறைகளோடு கூடிய தொல் சமய வழிபாடுகள், இவற்றின் சாரத்தையும் உள்வாங்கிக் கொண்டு வளர்ந்த சைவம், வைணவம் ஆகியவையே தமிழர்களின் பழைய மதங்களாகும்.

இவை காட்டும் திருவிழாக்களான கார்த்திகைத் திருவிழா, திருவாதிரைத் திருவிழா, தைப்பூசத் திருவிழா, மாசிக்களரி எனப்படும் சிவராத்திரித் திருவிழா, பங்குனி உத்திரம், சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப் பதினெட்டாம் பெருக்கு ஆகியன சைவமும் வைணவமும் பெருஞ்சமயங்களாக நிலைபெறுவதற்கு முன்னரே தமிழர்கள் கொண்டாடிய திருவிழாக்களாகும். பக்தி இயக்கத்தின் வளர்ச்சியில் இவை சைவ வைணவ மதங்களாலும் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டன.

தீபாவளி, தமிழ்நாட்டின் மரபுவழிப் பொருளாதாரத்தோடும் பருவநிலைகளோடும் சடங்குகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழா.  பார்ப்பனியத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் விலகி நிற்கிற சிற்றூர்களில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை.  தீபாவளியின் அடையாளமான வெடி, அதன் மூலப்பொருளான வெடிமருந்து ஆகியவை தமிழ்நாட்டிற்குப் பதினைந்தாம் நூற்றாண்டுவரை அறிமுகமாகவில்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். 

விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும் தீபாவளி (தீ + ஆவளி) என்னும் வட சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லும் புழக்கத்தில் இல்லை.  தமிழர்களின் விளக்குத் திருவிழா என்பது திருக்கார்த்திகைத் திருவிழாவே.

நரகாசுரன் என்னும் அரக்கன் கிருஷ்ணனால் அழிக்கப் பட்டதாகக் கூறப்படும் தீபாவளிக் கதை திராவிடப் பண்பாட்டோடு தொடர்புடையதன்று.  இந்த நாளே பிராமணிய சார்பாக எழுந்த கதையாகும். 

இந்த நாளே பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் இருபத்து நாலாம் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறடைந்த (இறந்த) நாளாகும்.  தான் இறந்த நாளை வரிசையாகத் தீபங்களை ஏற்றிக் கொண்டாடுமாறு மகாவீரர் தம் மதத்தவரைக் கேட்டுக்கொண்டார்.  ஆகவே, பிராமணிய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.  எனவே நரகாசுரன் அழிந்ததாக பிராமணியத் தீபாவளிக் கதைகள் குறிப்பிடுவது மகாவீரர் இறந்த நாளையே ஆகும்.

விசயநகரப் பேரரசான, 'இந்து சாம்ராஜ்ஜியம்', தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு தொடங்கியே தீபாவளி இங்கு ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.  இந்தக் காரணம் பற்றியே தமிழ்ப் பிராமணர்களைவிட, தமிழ்நாட்டில் உள்ள தெலுங்குப் பிராமணர்களே தீபாவளியைப் 'பக்தி சிறத்தை'யுடன் கொண்டாடுகின்றனர். 

வட நாட்டு இந்துக்களிடமும் சமணர்களிடமும் இல்லாதபடி தமிழ்நாட்டில் இத்திருவிழா நாளன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்றனர்.  எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது தமிழ்நாட்டில் நீத்தார் நினைவில் இறுதி நாளைக் குறிக்கும் சடங்காகும்.  தமிழ்நாட்டுப் பிராமணர்களும் இத்திரு விழாவை இறந்தார் இறுதிச் சடங்கு போல 'கங்கா ஸ்நானம்' செய்து கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.  ஆகவே உண்மையில் இத்திருவிழா பார்ப்பனிய மதத்தின் திருவிழாவேயன்றித் தமிழர் திருவிழா ஆகாது.

'நரகனைக் கொன்ற நாள் நல்ல நாள் விழாவா' என்று பாரதிதாசன் பாடுவதும் இங்கே நினைவுக்குரியது.""

நன்றி: "பண்பாட்டு அசைவுகள்" நூல்.

2 கருத்துகள்:

ராம்ஜி_யாஹூ சொன்னது…

எனது ஆசான் சொன்ன வரலாறு.

நரகாசுரன் என்ற கொடிய அரசனின் இருண்ட ஆட்சி நீங்கி வெளிச்சம் பிறந்த நாள் தீபாவளி நாள் என்பது

பெயரில்லா சொன்னது…

எல்லாம் சரி ... இது எத்தனை பேர் காதில் ( பார்வையில் ) விழப்போகிறது ... ஏற்கெனவே ஒரு கும்பல் பரப்பிய கட்டு கதையை மக்கள் ஏற்ற்றுகொண்டதாகவே தெரிகிறது ... என்னதான் கரடியாக கத்தினாலும் விஷயம் மக்களுக்கு போய் சேர்வதில்லை.... அவன் முன்னேறிய நாடான அமெரிக்கா போனாலும் தீபாவளி கர்மத்தை கொண்டாடிக்கொண்டு இருக்கிறான் ...