Pages

வெள்ளி, செப்டம்பர் 22, 2017

மாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி!

திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் "மாநில சுயாட்சி" எனும் கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் இப்படி ஒரு வெட்கம் கெட்ட கோரிக்கையை முன்வைப்பது என்பது வியப்பளிக்கிறது! 1957 ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் முதல் கோரிக்கை "மாநிலங்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும்" என்பதாகும்.

நம் நாடு பத்திரிகை செய்தி 1957


எந்த ஒரு மாநிலமும் எப்போது வேண்டுமானாலும் இந்திய யூனியனில் இருந்து பிரிந்து சென்று தனித்து இயங்கலாம் என்கிற திருத்தம் இந்திய அரசியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுதான் திமுகவின் முதல் கோரிக்கை ஆகும்.

இந்திய யூனியனில் எல்லா மாநிலங்களுக்கும் சமத்துவம் வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கை ஆகும். அதாவது, மக்கள் தொகைக்கு ஏற்ப அல்லாமல் - எல்லா மாநிலங்களுக்கும் சம எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டும் என்பது 1957 ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையின் இரண்டாவது கோரிக்கை.

மத்திய ஆட்சி அதிகாரங்களுக்கு வரம்பு வேண்டும் என்பது மூன்றாவது கோரிக்கை. அதாவது, மாநில உரிமைகளுக்கு மத்திய அரசு வரம்பு விதிப்பதற்கு பதிலாக, மத்திய அரசின் அதிகாரத்தை குறைத்து வரம்பு வைக்க வேண்டும் என்பது 1957 ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையின் மூன்றாவது கோரிக்கை.
திமுக தேர்தல் அறிக்கை 1957

1962, 1967, 1971 என பின்வந்த தேர்தல்களிலும் மாநில சுயாட்சி கோரிக்கையை தேர்தல் அறிக்கையாக வைத்தது திமுக.

60 ஆண்டுகளாக திமுக கிழித்தது என்ன?

1957 ஆம் ஆண்டில் மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து போட்டியிட்ட திமுக, இப்போது 60 ஆண்டுகள் கழித்து மீண்டும் மாநில சுயாட்சி கோரிக்கையை முன் வைக்கிறது. மாநிலங்களுக்கு சம அதிகாரம், மத்திய அரசின் அதிகாரங்கள் குறைப்பு என இப்போதும் தீர்மானம் நிறைவேற்றுகிறது திமுக.

கடந்த 60 ஆண்டுகளில் மாநிலத்திலும் மத்தியிலும் அதிகாரத்தில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம், அதன் செயல்தலைவர் முக ஸ்டாலின் - மாநில சுயாட்சிக்காகவும் 1957, 1962, 1967, 1971-ல் முன்வைத்த தேர்தல் அறிக்கைகளுக்காகவும் இத்தனை நாட்களாக கிழித்தது என்ன?

அதிகாரத்தில் இருந்தபோது, காங்கிரசு கட்சியிடம் தமிழ்நாட்டின் நலன்களை அடகுவைத்த திமுக - இப்போது அதே காங்கிரசுடன் சேர்ந்து மாநில சுயாட்சிக்காக நீலிக்கண்ணீர் வடிப்பது எதற்காக?

முக ஸ்டாலினுக்கு ஏனிந்த வெட்கம் கெட்ட வேலை? 

வியாழன், ஜூலை 06, 2017

மறைக்கப்பட்ட உலகின் முதல் சத்தியாகிரத் தியாகம்: இன்று 108 ஆம் ஆண்டு நினைவு நாள்

எந்த ஒரு போராட்டத்திலும் முதலாவதாக உயிரிழப்பவர் மாபெரும் தியாகியாக போற்றப்படுவார். அவருக்கு சிலை, நினைவிடம், அருங்காட்சியகம், அவர் பெயரில் விருதுகள் என அவரது நினைவு என்றென்றும் போற்றப்படும். உலக வரலாற்றின் மிகப்பெரிய சனநாயகப் போராட்டமாக கருதப்படுவது மகாத்மா காந்தியின் சத்தியாகிரக போராட்டம் ஆகும். இப்போராட்டத்தில் முதன்முதலில் பலியான உலகின் முதல் சத்தியாகிரகத் தியாகியை எல்லோரும் மறந்துவிட்டனர்.

'இறந்தாலும் என்றென்றும் ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் வாழ்வார்' என மகாத்மா காந்தியால் புகழப்பட்ட அந்த தியாகி இந்திய வரலாற்றில் இடம் பெறவில்லை. ஒரு மாபெரும் தியாகி மறக்கப்பட்டது ஏன்?

மகாத்மா காந்தியின் முதல் சத்தியாகிரகப் போராட்டம்.

1906 ஆம் ஆண்டு டிரான்சுவால் காலனி அரசாங்கம் அங்கு வாழ்ந்த இந்தியர்கள் தமது பெயரை அரசாங்கத்திடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றுகூறும் ஏசியாடிக் பதிவு சட்டத்தை கொண்டுவந்தது. இந்தியர்கள் தமது பெயரையும் கைரேகையையும் பதிவு செய்து கொண்ட ஆவணத்தை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். வேலை, தங்குமிடம் என எல்லா இடத்திலும் இந்தியர்கள் தனியாக பிரித்து வைக்கப்படுவார்கள். புதிதாக இந்தியர்கள் எவரும் டிரான்சுவால் மாகாணத்திற்குள் குடியேறக்கூடாது, மூன்று பவுண்ட் வரி செலுத்த வேண்டும், இந்தியர்களின் திருமணங்கள் சட்டபடி செல்லாது என்று பல விதிமுறைகளை முன்வைத்தது அச்சட்டம்.

இந்திய வம்சாவழியினருக்கு எதிரான இச்சட்டம் இந்தியர்களை துன்புருத்துவதாகவும் கண்ணியத்தை குலைப்பதாகவும் இருப்பதாகக் கூறிய காந்தி, விளைவுகள் எதுவானாலும் அதைப்பற்றி கவலைகொள்ளாமல் இந்தியர்கள் இச்சட்டத்தை எதிர்க்க அழைப்புவிடுத்தார்.
1906ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள் ஜொகனஸ்பர்க் நகரில் சுமார் மூன்றாயிரம் இந்தியர்கள் கூடிய பொதுக்கூட்டத்தில் தனது அறவழிப்போராட்டத்தை அறிமுகப்படுத்தினார். அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல், ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். அதாவது, இச்சட்டம் செயலுக்கு வந்தால் இந்தியர்கள் தமது பெயரை பதிவு செய்துகொள்ளக்கூடாது. சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும் என்று காந்தி வலியுறுத்தினார்.

மகாத்மா காந்தியின் வடிவமைப்பில் உருவான உலகின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் இதுதான். 1907 ஆம் ஆண்டு சூலை மாதம் டிரான்சுவால் காலனி அரசாங்கம் ஏசியாட்டிக் பதிவு சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. தனது பெயரை பதிவு செய்யாத இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். 1906 ஆம் ஆண்டு தொடங்கி 1914 ஆம் ஆண்டுவரை எட்டு ஆண்டுகள் இப்போராட்டம் நீடித்து கடைசியில் வெற்றி பெற்றது. அந்தவகையில் காந்தி வெற்றி பெற்ற முதல் போராட்டமும் இதுதான்.

காந்தி முதல் முறையாக சிறை சென்றதும் இந்த போராட்டத்திற்காகத்தான். மகாத்மா காந்தி "சத்தியாகிரகம்" என்கிற போராட்டமுறையை வடிவமைத்ததும் இப்போராட்டத்தில்தான். இந்த முதல் சத்தியாகிரக போராட்டமே இந்திய விடுதலைப் போருக்கு வழிகாட்டியாக அமைந்தது. மேலும், நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் உள்ளிட்ட பலரது அறப்போராட்டங்களுக்கு முன்னோடியாக விளங்கியது ஜொகனஸ்பர்க் சத்தியாகிரகம் என கருதலாம்.

மறக்கப்பட்ட மாபெரும் தியாகம்: சாமி நாகப்பன் படையாட்சி!

ஜொகனஸ்பர்க் சத்தியாகிரக காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். "இந்தியர்கள் சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும்" என்ற காந்தியின் கட்டளைக்கு ஏற்ப "பெயரை பதிவு செய்ய மறுத்து சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால்" 1909 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 ஆம் நாள் கைது செய்யப்பட்டார் தமிழரான சாமி நாகப்பன் படையாட்சி. அவருக்கு மூன்று பவுண்ட் தண்டம் அல்லது 10 நாள் கடின உழைப்புடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், தண்டத் தொகையைக் கட்டாமல் சிறைத் தண்டனையை ஏற்பதே சத்தியாகிரகப் போராட்டம் என்பதால் சிறைக்குச் சென்றார்.
கான்சிடியூசன் மலை சிறை

முதல் நாள் இரவு ஜொகனஸ்பர்க ஃபோர்ட் சிறையில் அடைக்கப்பட்டார் சாமி நாகப்பன் படையாட்சி. (இதே சிறையில்தான் காந்தியும், பின்னாளில் நெல்சன் மண்டேலாவும் அடைக்கப்பட்டனர். 'கான்சிடியூசன் மலை' என்று அழைக்கப்படும் அந்த இடம் இப்போது ஜொகனெஸ்பர்க் நீதிமன்றமாகவும், அருங்காட்சியகமாகவும் இருக்கிறது). அடுத்த நாள் 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுக்ஸ்கெய் சாலை சிறை முகாம் எனும் இடதிற்கு நடத்தியே அழைத்துச் செல்லபட்டார். அங்கு அவர் சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டார். கடும்குளிரில் திறந்தவேளி கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டார். சரியான உணவும் இல்லை. உடல் நலம் பாதிப்படைந்த நிலையிலும் சாலை அமைத்தல், அதற்காக கல் உடைத்தல் போன்ற கடுமையான வேலைகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டன. உடல்நலப் பாதிப்பிற்கு சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை.

ஏறக்குறைய கொலை செய்யப்பட்டவராக சூன் 30 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் இரட்டை நிமோனியாவால் இதயம் செயலிழது மரணத்தை தழுவினார்.

1909 ஆம் ஆண்டு சூலை 7 ஆம் நாள் ஜொகனஸ்பர்க் இந்தியர்கள் அவர் உடலை ஒரு பொது நிகழ்ச்சியாக பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்தனர்.

அந்த சமயத்தில் டிரான்சுவால் இந்தியர்களின் போராட்டம் குறித்து பிரச்சாரம் செய்வதற்காகான பிரதிநிதியாக லண்டன் சென்றிருந்தார் காந்தி. சாமி நாகப்பன் படையாட்சி கைது செய்யப்பட்ட சூன் 21 ஆம் நாள் அன்றுதான் காந்தி ஜொகனஸ்பர்க் நகரிலிருந்து லண்டனுக்கு கிளம்பினார். அவர் சூலை 10 அன்று லண்டன் சென்று சேர்வதற்குள் சாமி நாகப்பன் படையாட்சி வீரமரணம் அடைந்துவிட்டார். காந்தியிடம் சூலை 12 ஆம் நாள் தந்தி மூலமாக அவரது தியாக மரணம் தெரிவிக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்க இந்தியர்களும் ஜொகனஸ்பர்க் நகரின் வெள்ளையின கிறித்தவ தலைவர்களும் சாமி நாகப்பன் படையாட்சி சிறைவாசத்தால் கொல்லப்பட்டது குறித்து பொதுவிசாரணை நடத்தக் கோரினர்.

1909 ஆம் ஆண்டு சூலை 19 அன்று மாஜிஸ்ட்ரேட் மேஜர் டிக்சன் என்பவரது தலைமையில் "சாமி நாகப்பன் படையாட்சி சிறைவாசத்தால் கொல்லப்பட்டது" குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் அளிக்கப்பட்ட விசாரணை அறிக்கை சிறை அதிகாரிகள் குற்றமற்றவர்கள் என்றது. இதற்கு இந்திய வம்சாவழியினர் திரண்ட ஜொகனஸ்பர்க் பொதுக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அரசாங்கத்திற்கு காந்தி எழுதிய கடிதத்தில் விசாரணை அறிக்கையில் உள்ள விடயங்களே நாகப்பன் சிறைவாசத்தால் கொல்லப்பட்டதை உறுதி செய்வதாக தெரிவித்தார்.

சாமி நாகப்பன் படையாட்சி சத்யாகிரகியாக சிறை சென்று உயிர்தியாகம் செய்யும் போது அவரது வயது பதினெட்டு. அந்த இளம் வயதில் சம உரிமைக்காக தனது உயிரை தந்தார் அவர்.

1914 ஆம் ஆண்டு சூலை 18 ஆம் நாள், தனது 21 ஆண்டுகால தென் ஆப்பிரிக்க வாழ்வை முடித்துக்கொண்டு, காந்தி லண்டன் வழியாக இந்தியாவுக்கு கிளம்பினார். அதற்கு மூன்று நாள் முன்னதாக, சாமி நாகப்பன் படையாட்சி இறந்து ஐந்தாண்டுகளுக்கு பின்னர், சூலை 15 அன்று தென் ஆப்பிரிக்காவின் ஜொகனஸ்பர் நகரில் உள்ள பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடத்தை திறந்துவைத்தார் மகாத்மா காந்தி. (அதனுடன் வள்ளியம்மா முனுசாமி முதலியார் நினைவிடத்தையும் அன்று திறந்தார் காந்தி). அதுதான் மகாத்மா காந்தியின் கடைசி தென் ஆப்பிரிக்க நிகழ்ச்சி.

தென்னாப்பிரிக்க இனவெறி ஆட்சி காலத்தில் சாமி நாகப்பன் படையாட்சி நினைவிடம் சிதைக்கப்பட்டது, தென் ஆப்பிரிக்காவில் 1994 இல் நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் 20.4.1997 அன்று மீண்டும் சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடம் மறுசீரமைக்கப்பட்டது.
அதனை விடுதலைப் போராட்ட வீரரும் நெல்சன் மண்டேலாவின் நண்பருமான வால்டர் சிசுலு மற்றும் இந்திய தூதரும் காந்தியின் பேரனுமான கோபாலகிருட்டின காந்தியும் திறந்து வைத்தனர்.

காந்தியின் நிறைவேறாத கனவுகள்!

தனது சத்தியாகிரகப் போராட்டத்தில் உயிர்நீத்த முதல் தியாகி சாமி நாகப்பன் படையாட்சியின் வீரமரணம் காந்தியின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்பதை அவரது பேச்சுகளில் இருந்தும் எழுத்துகளில் இருந்தும் அறியமுடியும். தென் ஆப்பிரிக்காவில் காந்தியின் எழுத்தும் பேச்சும் இந்தியன் ஒப்பீனியனில் தொடர்ந்து வெளியானது.

தனது மகன் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று முதன்முதலாக சிறை சென்ற போது - நாகப்பன் தியாகத்தோடு ஒப்பிட்டால், தனது மகனின் சிறைவாசம் பெரிதல்ல என்று 14.12.1909 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார் காந்தி.

தனது சகோதரர் இறந்த போது - நாகப்பன் உயிரிழப்பு தனக்கு ஏற்படுத்திய மன வலியுடன் ஒப்பிட்டால் தனது சகோதரன் இறப்பால் ஏற்படும் வலி பெரிதல்ல என்று 18.3.1914 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார் காந்தி.

சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகத்தை போற்ற வேண்டும் என காந்தி விரும்பினார். முதலாவதாக, 6.10.1909 அன்று போலக் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் சாமி நாகப்பன் நிழற்படம் கிடைத்ததைக் குறிப்பிட்டு, உடனடியாக அதனை சென்னையிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்று காந்தி தெரிவித்தார். இதன் மூலம் தமிழ்மக்களிடம் நாகப்பன் தியாகத்தை கொண்டுசெல்ல வேண்டும் என அவர் நினைத்தார். அந்த விருப்பம் நிறைவேறவில்லை.

அடுத்ததாக, நாகப்பன் தியாகத்தை போற்றும் வகையில் ஜொகனஸ்பர்க் நகரில் ஒரு கல்வி உதவித்தொகை நினைவு நிதியை உருவாக்க விரும்பினார். அதற்காக திருமதி.வோகல் என்பவர் நிதிதிரட்ட முன்வந்த போது காந்தி அதனை வரவேற்று ஆதரித்து 9.12.1911 மற்றும் 14.6.1912 தேதிகளில் இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகையில் எழுதினார். அதுமட்டுமல்லாமல் சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களிலும் நாகப்பன் நினைவு நிதியை உருவாக்க வேண்டும் என்றார் காந்தி. அதுவும் நடக்கவில்லை.
தென் ஆப்பிரிக்காவில் ஜொகனஸ்பர்க் அருங்காட்சியகத்தில் உள்ள சாமி நாகப்பன் படையாட்சி படம்
காந்தி இந்தியா திரும்பிய பின்னர் - இந்திய சுதந்திரப் போராட்டம் எப்படி அமையவேண்டும் என்பதற்கு - போராட வருவோர் நாகப்பனை முன்னுதாரணமாக கொண்டு அவர் காட்டிய பதையில் பயணிக்க வேண்டும் என்றார் காந்தி.

சென்னை, மதுரை, தூத்துக்குடி, நாகப்பட்டிணம் என தமிழ்நாட்டில் தான் பங்கேற்ற கூட்டங்களில் எல்லாம் நாகப்பன் தியாகத்தை புகழ்ந்து பேசினார் காந்தி.

இத்தனைக்கு பிறகும் விடுதலை அடைந்த இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில், சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகம் வெளியே தெரியாமல் மறைந்து போனது எப்படி?

குறிப்பு: சாமி நாகப்பன் படையாட்சி தமிழ்நாட்டில் மயிலாடுதுறை பகுதிய சேர்ந்தவர். அவரது சொந்த ஊர் திருநாகேஸ்வரம் ஆக இருக்கலாம்.

செவ்வாய், ஜூன் 20, 2017

வீர சிவாஜியும் நடிகர் ரஜினி காந்தும்: வியப்பளிக்கும் வரலாற்று தொடர்பு!

மராட்டிய மாநிலத்தை பூர்வீக பூமியாகக் கொண்ட நடிகர் ரஜினி காந்த், மராட்டியர்களின் அடையாளமான வீர சிவாஜியின் படத்தை தனது வீட்டில் பிரதானமாக வைத்துள்ளார். இதனை அவரது மராட்டிய இனப்பற்றுக்கான குறியீடாகவும் கொள்ளலாம். ஆனால், இதுமட்டுமே அவருக்கும் வீர சிவாஜிக்குமான தொடர்பு அல்ல. வீர சிவாஜியின் மகனை, நல்லடக்கம் செய்தவர்கள் 'கெய்க்வாட்' சமூகத்தை சேர்ந்தவர்கள். அதே வகுப்பை சேர்ந்தவர் ரஜினிகாந்த் என்பது வியப்பளிக்கும் ஒற்றுமை ஆகும்.

வீர சிவாஜியின் பரம்பரையும் கெய்க்வாட் சமூகமும்

கெய்க்வாட் எனும் பெயரில் ஏராளமான தலித் மக்கள் இருக்கின்றனர். மகர் சமூகத்தவர்கள் - ஜாதவ், போஸ்லே, கெய்க்வாட் எனும் பல பட்டப்பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். மகர் சமூகத்தை சேர்ந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தலித் இயக்கத்தில் பலர் கெய்க்வாட் எனும் பட்டப்பெயருடன் இருந்தனர். அவர்களில் - தாதாசாகிப் பாவுராவ் கெய்க்வாட் (தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பின் மும்பை மாகாணத் தலைவர். அம்பேத்கருடன் இணைந்து குடியரசு கட்சியை தோற்றுவித்தவர்), சாம்பாஜி துக்காராம் கெய்க்வாட் (மகர் பஞ்சாயத் சமிதி எனும் அமைப்பை தோற்றுவித்தவர்) - போன்றவர்கள் முதன்மையானவர்கள்.

பேரரசர் வீர சிவாஜியின் மரணத்துக்கு பின் அவரது மூத்த மகன் சத்ரபதி சாம்பாஜி மகராஜ் ஆட்சிக்கு வந்தார். இவர் 1689-ல் முகலாய மன்னர் ஔரங்கசீப்பால் சங்கமேஷ்வர் எனும் ஊரில் சிறை பிடிக்கப்பட்டார்.  கொடூரமான முறையில் சித்தரவதை செய்யப்பட்டார். கண்களை தோண்டி, நகங்களை பிடுங்கி, தோலை உரித்து பல நாட்கள் சித்தரவதை செய்து - பின்னர் உடலைக் கிழித்து, தலையை வெட்டி கொலைசெய்தார் ஔரங்கசீப். சத்ரபதி சாம்பாஜி மகராஜின் உடலை துண்டுகளாக்கி புனே அருகில் உள்ள துலாப்பூர் எனும் இடத்தில் பீமா ஆற்றில் வீசினர்.
சத்ரபதி சாம்பாஜி மகராஜ் நினைவுச் சின்னம்

சத்ரபதி சாம்பாஜி மகராஜின் உடலை அடக்கம் செய்யக் கூட அனைவரும் பயந்தனர். துலாப்பூர் அருகில் உள்ள வாது எனும் கிராமத்தின் கெய்க்வாட் பிரிவினர்தான், முகலாயர்களுக்கு பயப்படாமல் துணிச்சலாக இறுதி சடங்குகளை செய்தனர். அந்த ஊரினை சேர்ந்த கோவிந்த் கோபால் கெய்க்வாட் எனும் தலித் விவசாயி சாம்பாஜியின் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டார்.

மறைக்கப்பட்ட வரலாறும் தலித் எதிர்ப்பும்

வாது கிராமத்தில் அமைக்கப்பட்ட சத்ரபதி சாம்பாஜி மகராஜ் நினைவுச் சின்னத்தில், "இறுதி சடங்குகளை செய்தவர் கோவிந்த் கோபால் கெய்க்வாட்" என்பது முதலில் குறிக்கப்பட்டிருந்தது. ஆனால், பின்னர் அதனை அழித்து விட்டனர். இந்த வரலாற்று இருட்டடிப்புக்கு எதிராக மராட்டிய தலித் அமைப்பினர் குரல்கொடுத்து வருகின்றனர்.  சத்ரபதி சாம்பாஜி மகராஜ் நினைவுச் சின்னத்தில் மீண்டும் கோவிந்த் கோபால் கெய்க்வாட் பெயர் இடம்பெற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

வீர சிவாஜிக்கும், 'சிவாஜிராவ் கெய்க்வாட்' எனும் இயற்பெயர் கொண்ட நடிகர் ரஜினிகாந்திற்கும் இப்படியும் ஒரு பூர்வீக பிணைப்பு இருக்கிறது. 

திங்கள், ஜூன் 19, 2017

ஜனாதிபதி ஆகிறார் சாதிச் சங்கத் தலைவர்

"சாதியே இல்லை" என்றும், "சாதியே பேசாதீர்" என்றும் தொடர்ச்சியாக பலரும் வகுப்பெடுக்கின்றனர். ஆனால், இப்போது ஒரு சாதி சங்கத் தலைவர் இந்தியாவின் ஜனாதிபதி ஆகிறார். ஜனாதிபதி தேர்தல் குறித்த விவாதங்களில் கூட - அவரது சாதிதான் அவரது முதன்மை தகுதியாக பேசப்படுகிறது.

ஆளும் பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தலித்துகளில் ஒரு தனி சாதியாக அடையாளம் காணப்படும் 'கோலி' சாதிச் சங்கத்தின் தலைவரும் கூட. அவர் அகில இந்திய கோலி சமாஜம் (All-India Koli Samaj) எனும் சாதிச் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார்.

இப்போது இந்தியா முழுவதும் இடம்பெறும் தலைப்பு செய்தியே: தலித் ஒருவர் ஜனாதிபதி ஆகிறார் என்பதுதான். சாதியே இல்லை என்று இரட்டை வேடம் போடும் இந்திய மக்கள், இப்போது சாதிக்காகவே ஒருவர் ஜனாதிபதி ஆவதை கொண்டாடுகின்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு வித்திட்ட நடிகர் ரஜினிகாந்தின் முன்னோர்கள்!


இந்தியாவில் ஆங்கிலேயர்களின் மிகப்பெரிய வெற்றிக்கும், மேற்கு இந்திய பகுதி முழுவதும் பிரிட்டிஷ் ஆட்சி அமைவதற்கும் வழிவகுத்தவர்கள் நடிகர் ரஜினிகாந்தின் முன்னோர்கள் ஆகும்.

1818 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின் படைக்கும், மராட்டிய பேஷ்வாக்களின் படைக்கும் இடையே நடைபெற்ற போரில் ஆங்கிலேயர்கள் மாபெரும் வெற்றிபெற்றனர். இந்தப் போரில் ஆங்கிலேயர்களுக்காக போரிட்டவர்கள் மராட்டிய மாநிலத்தின் மகர் சமூகத்தினர் ஆகும். இவர்கள் கெய்க்வாட் என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்த வெற்றியை ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் பெரும் விழாவாக இப்போதும் கொண்டாடி வருகின்றனர். அதே மகர் சமூகத்தின் பிரிவான மராட்டிய கெய்க்வாட் வகுப்பை சேர்ந்தவர்தான் நடிகர் ரஜினி காந்த் ஆகும்.

ஆங்கிலேயர்களின் மாபெரும் வெற்றி

வீர சிவாஜியின் மராட்டிய பேரரசில் பிரதம மந்திரிகளாக இருந்தவர்கள் பேஷ்வாக்கள். பின்னர் மராட்டிய பேரரசின் மன்னர்களாக ஆயினர். முகலாயர்களை தோற்கடித்து இந்தியாவின் பெரும்பகுதிகளை ஆட்சி செய்தனர். வீர சிவாஜியின் காலத்தில் பேஷ்வாக்களின் படையில் மகர் சமூகத்தினரும் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆனால், பின்னர் வந்த பேஷ்வா மன்னர்கள் தமது பிராமண மேலாதிக்கத்தின் காரணமாக - மகர் சமூகத்தினரை இராணுவத்தில் சேர்க்க மறுத்து, அவர்களை தீண்டத்தகாக மக்களாக மாற்றி, சாதீய கொடுமைகளுக்கு ஆளாக்கினர்.

ஆங்கிலேயர்கள் பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவில் நிலைநாட்டுவதற்காக, மராட்டிய பேஷ்வாக்கள் மீது போர் தொடுத்தனர். பேஷ்வாக்களுக்கு எதிராக போரிடுவதற்காக பிரிட்டிஷ் படையில் மகர் சமூகத்தவரை ஆங்கிலேயர்கள் இணைத்துக்கொண்டனர். 1818 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள், புனே நகருக்கு அருகில் கோரேகான் எனும் இடத்தில் நடந்த போரில், வெறும் 800 மகர் படையினர், பேஷ்வா மன்னரின் 20,000 வீரர்களைக் கொண்ட பெரும் படையை தோற்கடித்தனர். இந்த போரின் மூலம்தான் மேற்கு இந்திய பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சி நிலை நாட்டப்பட்டது.
பீமா கோரேகான் நினைவுச்சின்னம்

இந்தப் போரில் 275 மகர் வீரர்கள் கொல்லப்பட்டனர். இவர்களுக்கான நினைவுத் தூணை ஆங்கிலேய ஆட்சியாளர்கள் 1851 ஆம் ஆண்டு பீமா கோரேகான் கிராமத்தில் அமைத்தனர். பின்னர் 1927 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் நாள் இந்த நினைவுத் தூண் இடத்தில் அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்வினை நடத்தினார். அப்போது முதல் ஆண்டுதோரும் ஜனவரி 1 ஆம் நாள் மராட்டிய மாநில தலித் அமைப்பினர் ஆயிரக்கணக்கில் இங்கு கூடி, ஆங்கிலேய வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினி காந்தின் கெய்க்வாட் எனும் சாதிப்பெயரினை உள்ளடக்கிய மகர் சமூகத்தினர் தான் - மேற்கு இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு வழிவகுத்தனர் என்பது வரலாற்று உண்மை ஆகும். சாதிக் கொடுமைகளை தம்மீது திணித்த பேஷ்வாக்களை ஆங்கிலேயருடன் சேர்ந்து மகர் சமூகத்தினர் வீழ்த்தியதன் மூலம், தமது விடுதலைக்கும் அவர்கள் வழிவகுத்தனர் என்பது ஒரு மிக முதன்மையான வரலாற்று நிகழ்வாக இப்போதும் கோண்டாடப்படுகிறது.
பீமா கோரேகான் நினைவுச்சின்னம் முன்பாக அண்ணல் அம்பேத்கர்

(பிரிட்டிஷ் ராணுவத்தில் மகர் ரெஜிமெண்ட் தொடங்கப்பட்டதை தொடர்ந்து, ராணுவப்பள்ளியில் அண்ணல் அம்பேத்கரின் தந்தை ஆசிரியராக பணியாற்றினார். அங்கு ராணுவ கண்டோன்மென்டில்தான் அம்பேத்கர் சிறுவயதில் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்).

ரஜினி: தலித் தலைவர்  

அண்ணல் அம்பேத்கர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மகர் சமூகத்தில் பிறந்தவர். மகர் சமூகத்தவர் ஜாதவ், போஸ்லே, கெய்க்வாட் எனும் பல பட்டப்பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். அதில் கெய்க்வாட் பட்டப்பெயரை கொண்டவர் ரஜினி காந்த்.

உண்மையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தலித் இயக்கத்தில் பலர் கெய்க்வாட் எனும் பட்டப்பெயருடன் இருந்தனர். அவர்களில் - தாதாசாகிப் பாவுராவ் கெய்க்வாட் (தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பின் மும்பை மாகாணத் தலைவர். அம்பேத்கருடன் இணைந்து குடியரசு கட்சியை தோற்றுவித்தவர்), சாம்பாஜி துக்காராம் கெய்க்வாட் (மகர் பஞ்சாயத் சமிதி எனும் அமைப்பை தோற்றுவித்தவர்) - போன்றவர்கள் முதன்மையானவர்கள்.
காலா திரைப்படத்தில் MH BR 1956

அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் பணியாற்றியவர்களின் அதே கெய்க்வாட் சமுதாயத்தில் பிறந்தவரான, சிவாஜி ராவ் கெய்க்வாட் எனும் இயற்பெயர் கொண்ட ரஜினி காந்த், இப்போது அவர் நடிக்கும் காலா திரைப்படத்தில் - அண்ணல் அம்பேத்கரின் மாபெரும் புரட்சியான 1956 ஆம் ஆண்டில், அவர் மராட்டிய மாநிலத்தில் பல்லாயிரக் கணக்கான தலித்துகளுடன் பௌத்த மதத்திற்கு மாறியதை குறிக்கும் வகையில் "MH BR 1956" (Maharashtra BR Ambedkar 1956) எனும் வாகன எண்ணை குறியீடாக பயன்படுத்தியுள்ளார்.

சனி, ஜூன் 17, 2017

ரஜினிக்கு திருமாவளவன் ஆதரவு: சாதி தான் காரணமா?


தந்தி தொலைக்காட்சி ரங்கராஜ் பாண்டே நடத்தும் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் "அடுத்தது ரஜினிதான்" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூறுவதாக செய்திகள் வருகின்றன.

தமிழ்நாட்டின் முதல்வராக தமிழ்நாட்டை சேர்ந்தவரே வரவேண்டும் என்கிற உரிமைக்குரலுக்கு எதிராக - மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒரு தலித் தமிழ்நாட்டின் முதல்வராக வரவேண்டும் என தெரிவிப்பதன் மூலம் - தனது சாதிப்பற்றை வெளிப்படுத்துகிறார் திருமாவளவன். தண்ணீரை விட இரத்தமே அடர்த்தியானது (blood is thicker than water) என்கிற வாக்கை உண்மையாக்கும் விதத்தில், மாநில உரிமையை விட தன் சாதிப்பற்றுதான் மேலானது என்பதை மெய்ப்பித்துள்ளார் திருமாவளவன்.

ரஜினி: தலித் தலைவர் 

அண்ணல் அம்பேத்கர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மகர் சமூகத்தில் பிறந்தவர். அதே மகர் சமூகத்தை சேர்ந்தவர்தான் நடிகர் ரஜினி காந்த் ஆகும். மகர் சமூகத்தவர் ஜாதவ், போஸ்லே, கெய்க்வாட் எனும் பல பட்டப்பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். அதில் கெய்க்வாட் பட்டப்பெயரை கொண்டவர் ரஜினி காந்த்.

உண்மையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தலித் இயக்கத்தில் பலர் கெய்க்வாட் எனும் பட்டப்பெயருடன் இருந்தனர். அவர்களில் - தாதாசாகிப் பாவுராவ் கெய்க்வாட் (தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பின் மும்பை மாகாணத் தலைவர். அம்பேத்கருடன் இணைந்து குடியரசு கட்சியை தோற்றுவித்தவர்), சாம்பாஜி துக்காராம் கெய்க்வாட் (மகர் பஞ்சாயத் சமிதி எனும் அமைப்பை தோற்றுவித்தவர்) - போன்றவர்கள் முதன்மையானவர்கள்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் பணியாற்றியவர்களின் அதே கெய்க்வாட் சமுதாயத்தில் பிறந்தவரான, சிவாஜி ராவ் கெய்க்வாட் எனும் இயற்பெயர் கொண்ட ரஜினி காந்த், இப்போது அவர் நடிக்கும் காலா திரைப்படத்தில் - அண்ணல் அம்பேத்கரின் மாபெரும் புரட்சியான 1956 ஆம் ஆண்டில், அவர் மராட்டிய மாநிலத்தில் பல்லாயிரக் கணக்கான தலித்துகளுடன் பௌத்த மதத்திற்கு மாறியதை குறிக்கும் வகையில் "MH BR 1956" (Maharashtra BR Ambedkar 1956) எனும் வாகன எண்ணை குறியீடாக பயன்படுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசிய அடையாளம் என்ன?

இந்தியாவில் எல்லோரும் இந்தியர்கள் தான் என்பது இந்திய தேசியவாதிகள் கூறும் அயோக்கியத்தனமான வாதம். நடைமுறையில் ஒரு மாநிலத்தை சேர்ந்தவர்கள் இன்னொரு மாநிலத்தில் கோலோச்ச முடியாது. ஆந்திராவிலோ, கேரளாவிலோ, கர்நாடக மாநிலத்திலோ - தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் முதல்வராவது கனவிலும் நடக்காது. ஆனால், தன்னுடைய தலித் இனத்தை சேர்ந்தவர் என்கிற ஒரே காரணத்தால் - ரஜினியை தமிழ்நாட்டின் முதல்வராக்க முயற்சிக்கிறார் திருமாவளவன்.

தமிழ்த் தேசிய அடையாளம் என்பது இன்னும் பிறக்காத குழந்தை. சிலர் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் மட்டுமே தமிழர்கள் என்கின்றனர். வேறு சிலர் குறிப்பிட்ட காலமாக (எடுத்துக்காட்டாக 1956 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்து) தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் மற்றும் அவர்களின் சந்ததியினர் மட்டுமே தமிழர்கள் என்கிறனர். இந்தக் கருத்துக்கள் விவாதத்திற்கு உரியவை. தமிழ்நாட்டை சேர்ந்தவராக ஒருவரை அடையாளப்படுத்த - சாதி, இனம், மதம், தாய்மொழி போன்ற எதுவுமே தடையாக இருக்கக் கூடாது என்பதுதான் நமது விருப்பம்.

அதே நேரத்தில், தமிழ்நாடு என்கிற நாட்டின் மீதும், தமிழக மக்கள் மீதும் சிறிதளவும் பற்றில்லாதவர் - தமிழக மக்களின் பணத்தை பிடுங்கி, கர்நாடக மாநிலத்தில் முதலீடு செய்திருப்பவர் - காவிரிக்காக கன்னடநடிகனை மாவீரன் வீரப்பனார் கடத்திய போது, வீரப்பனாரை அரக்கன் என கடுமையாக திட்டியவர் - தமிழ்நாட்டின் அடிப்படை அரசியல் சிக்கல்களில் கருத்து ஏதும் கொண்டிராதவரான ரஜினிகாந்த், தன்னை தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக காட்டிக்கொள்ள முயல்வது, தமிழக மக்களின் தன்மானத்துக்கு விடப்பட்டுள்ள சவால்.

சாதிப்பற்றின் காரணமாக மட்டுமே ரஜினியை தமிழகத்தின் முதல்வராக்கும் முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்.

செவ்வாய், ஜூன் 13, 2017

ஏமாளி மு.க. ஸ்டாலின்: டுபாக்கூர் கும்பலிடம் சிக்கிய தலைவர்கள்!

மக்களை ஏமாற்றுவதில் கை தேர்ந்தவர்கள் திராவிட அரசியல் தலைவர்கள். ஆனால், இந்த தலைவர்களையே ஏமாற்றும் மாபெரும் மோசடிகளும் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. இதற்கு முன்பு ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், மு.க. ஸ்டாலின் ஆகியோரை சில டுபாக்கூர் பேர்விழிகள் படுமோசமாக ஏமாற்றினர். இப்போதும் மு.க. ஸ்டாலின் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளார்.

ஸ்டாம்பிடம் ஏமாந்த கலைஞர் கருணாநிதி, கிறித்தவ மதபோதனை அமைப்பிடம் ஏமாந்த விஜயகாந்த், போலி ஐநா விருதிடம் ஏமாந்த ஜெயலலிதா, நடக்காத கூட்டத்திற்கு மறுப்பு எழுதிய மு.க. ஸ்டாலின் - இப்படிப்பட்ட தலைவர்களிடம் தான் தமிழக மக்களும் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்!

ஜெயலலிதா: 'தங்கத்தாரகை' விருது

2004 ஆம் ஆண்டில் ஜெயலலிதாவுக்கு தங்கத்தாரகை எனும் டுபாக்கூர் விருதை அளித்து ஏமாற்றினார்கள். அப்பொது, ஐநா சபையே விருது வழங்குவதாகக் கூறி, நாளிதழிகளில் அதிமுக அமைச்சர்கள் 100 பக்கங்களில் முழுபக்க விளம்பரம் கொடுத்தார்கள். அதை ஐநா விருதென்று அப்பொது ஜெயலலிதா ஏமாளித்தனமாக நம்பினார்.

உக்ரைன் நாட்டில் உள்ள சர்வதேச மனித உரிமைப் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பு ஜெயலலிதாவுக்கு தங்கத்தாரகை விருது வழங்குவதாகவும், அது ஐ.நா சபையின் அதிகாரப்பூர்வமான ஆலோசனை அமைப்பு என்றும் பீலா விட்டர்கள் (Golden Star of Honour and Dignity Award by the International Human Rights Defense Committee, Ukraine). ஆனால், அந்த அமைப்பு டுபாக்கூர் அமைப்பாகும். ஐநாவின் ஆலோசனை அமைப்புகளின் பட்டியலில் அப்படி ஒரு அமைப்பே இல்லை. (தமிழ்நாட்டின் பசுமைத் தாயகம் அமைப்புக் கூட ஐநா பட்டியலில் இருக்கிறது. ஆனால், ஜெயலலிதாவுக்கு தங்கத்தாரகை விருது வழங்கிய அமைப்பு இல்லவே இல்லை)

கருணாநிதி: ஆஸ்திரியா ஸ்டாம்பு

"தலைவர் கலைஞரின் தமிழ்ப் பணி - சமுதாயப் பணியைப் பாராட்டி "கலைஞர் 90" அஞ்சல் தலை. ஆஸ்திரிய நாடு ஜூன் 3 அன்று வெளியிட்டு கௌரவித்துள்ளது! உலகத் தமிழர்கள் மகிழ்ச்சி" என 5.6.2013 அன்று முரசொலி செய்தி வெளியிட்டது. "என்னுடைய தமிழ்ப் பணி - சமுதாயப் பணியைப் பாராட்டி ஆஸ்திரிய நாடு ஜூன் 3 அன்று வெளியிட்ட "கலைஞர் 90’’ அஞ்சல் தலையை பெற்றபோது" என்று 21.7.2013 அன்று இதுகுறித்த ஒரு படத்தையும் கருணாநிதி வெளியிட்டார்.


ஆஸ்திரியாவில் நமக்குப் பிடித்தவர்களின் படத்துடன் தபால் தலை வெளியிட அனுமதி உண்டு. அந்தவகையில் ஆஸ்திரிய தபால் துறைக்கு சிறப்புக் கட்டணம் செலுத்தி நமக்கு பிடித்தவர்களின் முகங்களை தபால் தலையாக வெளியிடலாம். இது ஒரு மிகச் சாதாரணமான காரியம் ஆகும்.

ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் துறையிடம் பணம் செலுத்தி நாம் எந்த புகைப்படத்தை வேண்டுமானாலும் அஞ்சல் தலையாக வெளியிட முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தை, பூனை, நாய் அல்லது ஒரு கார்ட்டூன் போன்ற எதை வேண்டுமானாலும் வெளியிட முடியும். இதற்கு சுமார் 222 யூரோ பணம் கட்டினால் போதும். அப்படி ஒரு ஸ்டாம்பினை வாங்கிக் கொடுத்து யாரோ சிலர் கலைஞர் கருணாநிதியை நன்றாக ஏமாற்றினார்கள்.

விஜயகாந்த்: டாக்டர் பட்டம்

"அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தின் ஐ.ஐ.சி.எம் பல்கலைக்கழகம் வழங்கும் டாக்டர் பட்டம்" என்று 3.12.2010 அன்று பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக தேமுதிகவினர் விளம்பரம் செய்திருந்தனர். ஆனால், இணையத்தின் மூலம் கிறித்தவ மதத்தை பரப்புவதற்கான ஒரு அமைப்பான "பன்னாட்டு கிறித்தவ தேவாலய மேலாண்மை நிறுவனம் - ஐ.ஐ.சி.எம்" (International Institute of Church Management Inc.) விஜயகாந்த்திற்கு டாக்டர் பட்டம் அளித்தது.
பைபிள் படிப்பு, தேவாலய நிருவாகம், கிறித்துவ தலைமைத்துவம், கிறித்துவ இறைப்பணி இதிலெல்லாம் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு இந்த அமைப்பினர் டாக்டர் பட்டம் தருகின்றனர். இப்படி முழுக்க முழுக்க மத பிரச்சாரம் செய்வதற்கான ஒரு அமைப்பிடம் தான் விஜயகாந்த் டாக்டர் பட்டம் பெற்றார்.

அமெரிக்காவில் ஐ.ஐ.சி.எம் என்பது பல்கலைக் கழகமாகவோ, கல்வி அமைப்பாகவோ பதிவுசெய்யப்படவும் இல்லை, இயங்கவும் இல்லை. சென்னை நகரில்தான் அது ஒரு 'கல்வி அறக்கட்டளை' (Educational Trust) என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடவே, டாக்டர் பட்டம் பெற வேண்டுமானால், அதற்கு செலுத்த வேண்டிய ரூ. 1000 வாழ்நாள் உறுப்பினர் கட்டணத்தை - ஐ.ஐ.சி.எம் கல்வி அறக்கட்டளை, 240 ரூபி டவர், வேளச்சேரி முதன்மைச் சாலை, சேலையூர், சென்னை - 73 எனும் முகவரிக்கு அனுப்பக் கூறியுள்ளனர். ஆக, இந்திய கிறித்துவ கல்வி அறக்கட்டளை ஒன்றிடம் பட்டம் "வாங்கி" - அதனை 'அமெரிக்க பல்கலைக்கழகத்திடம் வாங்கியதாக' பெருமை பேசினர் தேமுதிகவினர்.

மு.க. ஸ்டாலின்: கென்டகி கர்னல் 

அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் பொதுச்சேவைக்காக பணம் திரட்டுவதற்காக கென்டகி கர்னல் எனும் விருதை வைத்துள்ளார்கள். இந்த அமைப்புக்கு நிதி உதவி அளிப்பவர்களுக்கு கென்டகி கர்னல் எனும் விருதினை வழங்குவார்கள். இப்படி, மு.க. ஸ்டாலின் பெயரில் பணம் கட்டி, விருது வாங்கினர் திமுகவினர். இதை வைத்து தமிழ்நாட்டில் பக்கம் பக்கமாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர், பாராட்டு விழாக்களை நடத்தினர். இப்போதும் கூட கென்டகி கர்னலே என்று ஸ்டாலினை அழைக்கின்றனர் உடன் பிறப்புகள்!

மு.க. ஸ்டாலின்: ஐநா அவை மனித உரிமைகள் பேரவையில் கூட்டம்

தற்பொழுது ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் விவகாரம் குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை. இப்படி இல்லவே இல்லாத ஒரு கூட்டத்தில் 'தான் கலந்துகொள்ள இயலவில்லை' என்று ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு மு.க. ஸ்டாலின் 'காமெடி' கடிதம் எழுதினார்.
"தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் பங்கேற்று ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனித உரிமைகள் குறித்து உரையாற்றுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். என்றாலும், தமிழகத்தில் உள்ள சட்டமன்ற அலுவல்கள் காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை" - என்று ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் துணை ஆணையாளருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதாக ஊடகங்கள் பெரிதாக செய்தி வெளியிட்டன.

நடக்காத கூட்டத்திற்கே மறுப்பு எழுதும் அளவுக்கு யாரோ சிலரால் படு கேவலாமாக ஏமாற்றப்பட்டுள்ளார் மு.க. ஸ்டாலின்.

ஏமாளி மக்களுக்கு ஏமாளி தலைவர்கள்

ஸ்டாம்பிடம் ஏமாந்த கலைஞர் கருணாநிதி, கிறித்தவ மதபோதனை அமைப்பிடம் ஏமாந்த விஜயகாந்த், போலி ஐநா விருதிடம் ஏமாந்த ஜெயலலிதா, நடக்காத கூட்டத்திற்கு மறுப்பு எழுதிய மு.க. ஸ்டாலின் - இப்படிப்பட்ட தலைவர்களிடம் தான் தமிழக மக்களும் 200 ரூபாய்க்கு வாக்குகளை விற்று ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்!