Pages

திங்கள், மே 30, 2011

சாலை விபத்து: முதலிடம் தமிழ்நாடு!!

சாலை விபத்துகள் மிகவேகமாக அதிகரித்து வருகின்றன. அவை தடுக்கப்பட வேண்டும் என ஐ.நா.சபை உலகம் முழுவதும் பத்தாண்டுகளுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இப்போது ஆண்டுக்கு 13 லட்சம் பேர் உலகம் முழுவதும் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். இந்த எண்ணிக்கை 24 லட்சம் பேராக அதிகரித்துவிடும் என்று அஞ்சப்படுகிறது.

சாலைப் பாதுகாப்பு செயல்பாட்டுக்கான பத்தாண்டுகள் 2011 - 2020 பிரச்சாரத்தின் மூலம் இப்போது நடக்கும் சாலை விபத்துகள் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டிற்குள் பாதியளவாக குறைக்கப்பட வேண்டும் என ஐ.நா.சபை இலக்கு நிர்ணயித்துள்ளது.

உலகில் முதலிடம் இந்தியா. இந்தியாவில் முதலிடம் தமிழ்நாடு.

உலகிலேயே மிக அதிக சாலை விபத்துகள் நடக்கும் நாடாக இந்தியா உள்ளது. அகில இந்திய அளவில் மிக அதிக சாலை விபத்துகள் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. சாலை விபத்துகளில் இந்தியாவில் 2009 ஆம் ஆண்டில் 1 லட்சத்து 27 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். அதில் 13 ஆயிரத்து 700 பேர் தமிழ் நாட்டில் மட்டும் இறந்துள்ளனர். இது இந்தியாவின் சாலை விபத்து சாவுகளில் பத்து சதவீதம் ஆகும். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
சாலை விபத்துகளில் இறப்பவர்களில் பெரும்பாலானவர்கள் 16 முதல் 29 வயதுக்குள் இளம் வயதில் இறந்துவிடுகின்றனர். இது ஈடுசெய்ய முடியாத இழப்பாகிவிடுகிறது.

இந்தியாவின் சாலை விபத்துகளில் 40 சதவீத விபத்துகளுக்கு மதுப்பழக்கம் காரணமாக இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் நடக்கும் சாலை விபத்துகளுக்கு மதுபானம் மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

சாலைவிபத்துகளை தடுப்பது எப்படி?

தமிழ்நாட்டில் நடக்கும் சாலை விபத்துகளை தடுக்க தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கான ஒரு செயல் திட்டத்தை வகுத்து உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
குறிப்பாக, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை முற்றிலுமாக தடுத்தல், இருசக்கர வாகனங்களில் செல்வோர் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்குதல், வாகன வேகத்தை கட்டுப்படுத்துதல், மகிழுந்துகளில் செல்வோர் வார்ப்பட்டை அணிவதை கட்டாயமாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தேவை.

உலகம் முழுவது சாலை விபத்துகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என ஐ.நா.சபை சொன்னாலும் - உலகிலேயே மிக அதிக விபத்துகள் இந்தியாவிலும், இந்தியாவிலேயே மிக அதிக சாலை விபத்துகள் தமிழ்நாட்டிலும் நடப்பதால், இந்த சாலைப் பாதுகாப்பு பிரச்சாரம் தமிழ்நாட்டிற்கே மிக முக்கியமானதாகும்.
எனவே, இந்த நேரத்தில் அரசாங்கமும், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தமிழ்நாட்டின் சாலை விபத்துகளை தடுத்து நிறுத்த முன்வரவேண்டும்.

http://decadeofaction.org/

http://www.flickr.com/groups/roadsafetydecade

1 கருத்து:

Unknown சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.