Pages

வெள்ளி, ஏப்ரல் 27, 2012

ஐ.பி.எல்: கொலை செய்யும் கிரிக்கெட்!!!

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் எனப்படும் மட்டைப்பந்தாட்ட கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. நல்லதொரு விளையாட்டாக அல்லாமல், வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாவே நடத்தப்படும் இப்போட்டிகள் மதுபானத்தையும் புகைபிடித்தலையும் திணிப்பதை முதன்மை நோக்காகக் கொண்டுள்ளன. இந்த கேடுகெட்ட நிலைமை மாற்றப்பட்டாக வேண்டும். பெரும் தீமையாக உருவெடுத்துள்ள சட்டத்துக்குப் புறம்பான விளம்பரங்கள் தடுக்கப்பட்டாக வேண்டும். 
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 
மான்சன் அவுஸ் பிராந்தி விளம்பரம் 
புகையிலையும் மதுபானமும் சட்டத்துக்கு புறம்பானப் பொருட்கள். புகையிலை 18 வயதுக்கு கீழானவர்களுக்கும் மதுபானம் 21 வயதுக்கு கீழானவர்களுக்கும் விற்கப்படுவதற்கு 'சட்டப்படி' அனுமதிக்கப்படுவது இல்லை. பொது இடங்களில் புகைபிடிப்பதும் குடித்துவிட்டு பொது இடங்களில் நுழைவதும் தடைசெய்யப்பட்டதாகும். புகையிலை மற்றும் மதுபானப்பொருட்களை விளம்பரப்படுத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதகைய ஒரு சூழலில்தான், மதுபான நிறுவனங்களும், புகையிலை நிறுவனங்களும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை முறைகேடாக பயன்படுத்தி சட்டவிரோத விளம்பரத்தினை செய்து வருகின்றனர். இந்தக் கொடுமையைத் தடுக்க கிரிக்கெட்டை நேசிப்போர் முன்வர வேண்டும்.

மாறும் உலக சூழல்:

உலக தொற்றாநோய்கள் உச்சி மாநாடு

2011 செப்டம்பர் 19 அன்று நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபை, மிகமுக்கியமானதொரு மாநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றியது. "தொற்றாநோய்களைத் தடுப்பதற்கான ஐ.நா. உச்சிமாநாடு" பிரகடனத்தில் - உலகளவில் தொற்றா நோயின் பாதிப்புகள் அதிகமாவதைச் சுட்டிக்காட்டி, 1. புகையிலைப் பொருள் பயன்பாடு, 2. ஆரோக்கியமற்ற உணவு, 3. உடலுழைப்பு இல்லாமை, 4. மதுபானம் ஆகிய நான்கு தீமைகளே இதற்கு காரணம் எனக்கூறியது.

மதுபானத்தையும், புகையிலைப் பொருட்களையும் கட்டுப்படுத்துவதற்கான பன்னாட்டு உடன்படிக்கைகளை செயல்படுத்த ஐ.நா. உச்சிமாநாடு அறைகூவல் விடுத்தது. முறையே, 1. புகையிலைக் கட்டுப்பாட்டுக்கான பன்னாட்டு உடன்படிக்கை (The WHO Framework Convention on Tobacco Control - WHO FCTC), 2. தீங்கான மதுபானப் பயன்பாட்டைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தி (Global strategy to reduce harmful use of alcohol) ஆகியவற்றை தீவிரமாக செயல்படுத்தப்பட வேண்டும் என ஐ.நா. மாநாடு கூறியது. அந்த இரண்டு உடன்படிக்கைகளுமே,  மதுபானம் மற்றும் புகையிலை விளம்பரத்தை முற்றிலுமாக ஒழிக்கக் கோருகின்றன.

உலக மதுபானக் கொள்கை மாநாடு

உலக மதுபானக் கொள்கை மாநாடு 2012 பிப்ரவரி மாதத்தில் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் கூடியது. அந்த மாநாட்டின் தீர்மானம் மதுபான விளம்பரங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் எனக்கோரியது.

உலக புகையிலைக் கட்டுப்பாட்டு மாநாடு

உலக புகையிலைக் கட்டுப்பாட்டு மாநாடு 2012 மார்ச் மாதத்தில் சிங்கப்பூரில் கூடியது. அந்த மாநாட்டின் தீர்மானம் புகையிலை விளம்பரங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் எனக்கோரியது.

- எனவே, புகையிலை விளம்பரங்களும் மதுபான விளம்பரங்களும் ஒழிக்கப்பட வேண்டும் என்பது உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வ்ழிமுறைகளாகும்.

தொடரும் படுகொலைகள்

புகையிலை ஆண்டுக்கு 60 லட்சம் பேரை வயது முதிரும் முன்பே கொலை செய்கிறது. உலகில் மிக அதிகமானோரைக் கொல்லும் மிகப்பெரிய தீமை இதுதான். 2008 ஆம் ஆண்டுக் கணக்கின் படி மதுபானத்தால் உரிய வயதாகும் முன்பே கொல்லப்பட்டவர்கள் 24 லட்சம் பேர். 15 வயது முதல் 29 வயது வரையிலான இளைஞர்களின் இறப்பிற்கு முழுமுதல் காரணமாக இருப்பது மதுபானம் தான்.

இந்தியாவில் புகையிலைப் பொருட்களால் வயது முதிரும் முன்பே இறப்பவ்ர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 10 லட்சம் பேர். அதிலும் புகையிலையால் வரும் மரணம் மிகக் கொடூரமான புற்றுநோய் மரணமாக வருகிறது. 2010 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 5 லட்சத்து 56 ஆயிரம் பேர் புற்று நோய்க்கு பலியாகியுள்ளனர். இதில் ஆண்களில் 42 விழுக்காட்டினரும் பெண்களில் 18 விழுக்காட்டினரும் புற்றுநோயால் தாக்கப்படுவதற்கு புகையிலையே காரணமாகியுள்ளது. 

மதுபானத்தால் 60 வகையான நோய்கள் தாக்குகின்றன. சாலை விபத்திற்கு மதுபானமே முதன்மைக் காரணமாக உள்ளது. வன்முறை, தற்கொலை, எச்.ஐ.வி/எய்ட்சு தொற்று என ஏராளமான தீமைகளுக்கு மதுபானம் வழிசெய்கிறது.எனினும், இந்தியாவில் மதுபானத்தால் இறப்பவர்கள் குறித்த முறையான புள்ளி விவரம் இல்லை.

மதுபானம், புகையிலை விளம்பரங்கள் தொடர்வது ஏன்?

மதுபானம், புகையிலை ஆகியவற்றின் விற்பனையில் மிகப்பெருமளவு பணம் படைத்த பன்னாட்டு நிறுவனங்களும், நாட்டின் பெரும் பணக்காரர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த தொழில்கள் தமது வாடிக்கையாளரையே வயது முதிர்வதற்குள் கொன்றுவிடுகின்றன. மறுபுறம், சுமார் 25 வயதைக் கடந்த பின்னர், வளர்ந்த வயதினர் தமது அறிவு வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வின் காரணமாக மதுவுக்கோ, புகைபிடித்தலுக்கோ பெரும்பாலும் அடிமை ஆவதில்லை.

எனவே, மதுபானம் மற்றும் புகையிலை விற்பனை அதிகரிக்க வேண்டுமெனில் சிறு வயதிலேயே வாடிக்கையாளர்களைப் பிடித்துவிட வேண்டும் என நிறுவனங்கள் சதி செய்கின்றன. அறியாத பருவத்திலேயே மது, புகை பழக்கத்தை கற்பவர் அதற்கு அடிமையாகிவிடுகிறார். வளர்ந்த பின்னரும் அந்த அடிமைத்தனத்திலிருந்து அவர் மீள முடிவதில்லை. கடைசியில் அந்த பழக்கத்தாலேயே கொலை செய்யப்படும் நிலை ஏற்படுகிறது. உண்மையில், புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவோரில் பாதியளவினர் வயது முதிரும் முன்பே கொடிய நோயினால் தாக்கப்பட்டு கொல்லப்படுவார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் மான்சன் அவுஸ் பிராந்தி விளம்பரம் 
இப்படியாக, தாம் விற்பனை செய்யும் பொருள் அதன் நுகர்வோரைக் கொலை செய்யும் என நன்றாக அறிந்த பின்னரும் - மதுபான, புகையிலை நிறுவனங்கள் மிகத்தீவிரமாக விளம்பரம் செய்து வருகின்றன. அதுவும், சட்டத்தால் இந்த விளம்பரங்கள் தடை செய்யப்பட்ட பின்னரும் போலிப் பொருட்களைக் காட்டி, திருட்டுத்தனமாக மரைமுக விளம்பரங்களை செய்து வருகின்றனர். அதற்கு கிரிகெட் விளையாட்டு பயன்படுத்தப்படுகிறது.

சட்டத்தை ஏமாற்றும் திருட்டு விளம்பரங்கள்

புகையிலைப் பொருட்கள் அல்லது மதுபான வகைகளின் பெயரோ, வடிவமோ, வணிகச் சின்னமோ, அவற்றை நினைவுபடுத்தக்கூடிய எந்த ஒரு விளம்பரமும் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த நிறுவனங்கள் அதே பெயரில், அதே வடிவத்தில் புகையிலைப் பொருட்கள் அல்லது மதுபான வகைகளை மிக எளிதில் நினைவூட்டக்கூடிய வேறொரு 'இல்லாத' பொருளின் பேரில் விளம்பரம் செய்து வருகின்றனர்.

ஐ.பி.எல் கிரிகெட்டில் அப்பட்டமான 'போலி' விளம்பரங்கள்

ஐ.பி.எல் கிரிக்கெட் அணிகளுக்கான விளம்பரதார்களில் இடம் பிடித்துள்ள மதுபான வகைகள் இதோ:

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி
மான்சன் அவுஸ் பிராந்தி விளம்பரம் 

டெக்கன் சார்ஜர்ஸ் அணி  
வொயிட் மிஸ்ச்சீஃப் வோட்கா விளம்பரம் 
இந்த அணியின் இதர மதுபான விளம்பரங்கள்:
கிங்பிஷர் பிரிமியம் பீர் விளம்பரம்
மெக்டோவல் விஸ்கி விளம்பரம்

டெல்லி டேர் டெவில்ஸ் அணி 
ராயல் சேலஞ் விஸ்கி விளம்பரம் 
இந்த அணியின் இதர மதுபான விளம்பரங்கள்:
கிங்பிஷர் பீர் விளம்பரம் 

கிங்ஸ் 11 பஞ்சாப் அணி 
மெக்டோவல் விஸ்கி விளம்பரம் 
இந்த அணியின் இதர மதுபான விளம்பரங்கள்:
கிங்பிஷர் பிரிமியம் பீர் விளம்பரம் 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 
ராயல் ஸ்டேக் விஸ்கி விளம்பரம் 

மும்பை இந்தியன்ஸ் அணி 
கிங்பிஷர் பிரிமியம் பீர் விளம்பரம் 
இந்த அணியின் இதர மதுபான விளம்பரங்கள்:
ராயல் ஸ்டேக் விஸ்கி விளம்பரம் 

புனே வாரியர்ஸ் இந்தியா அணி 
மெக்டோவல் விஸ்கி விளம்பரம் 
இந்த அணியின் இதர மதுபான விளம்பரங்கள்:
கிங்பிஷர் பிரிமியம் பீர் விளம்பரம் 

ராஜஸ்தான் ராயல் அணி 
கிங்பிஷர் பீர் விளம்பரம்  

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 
மெக்டோவல் விஸ்கி விளம்பரம் 
இந்த அணியின் இதர மதுபான விளம்பரங்கள்:
கிங்பிஷர் பிரிமியம் பீர் விளம்பரம்  
ராயல் சேலஞ் விஸ்கி விளம்பரம்  

கிரிக்கெட்டில் புகையிலை விளம்பரம்

ஐ.பி.எல் கிரிக்கெட் அணிகளுக்கு விளம்பரதாரராக மதுபான நிறுவனங்கள் செயல்படுவது போல, கிரிக்கெட் விளையாட்டு மைதானங்களில் புகையிலைப் பொருட்கள் விளம்பரம் செய்யப்படுகின்றன. குறிப்பாக, சைனி கைனி மற்றும் கம்லா பசந்த் ஆகிய மெல்லும் வகைப் புகையிலை வகைகள் கிரிக்கெட் திடலில் விளம்பரம் செய்கின்றன.
சைனி கைனி  புகையிலை விளம்பரம் 
கம்லா பசந்த்  புகையிலை விளம்பரம் 
இந்தியாவுக்கு வெளியில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் கூட இத்தகைய விளம்பரங்கள் வைக்கப்பட்டு, அவை தொலைக்காட்சி மூலம் இந்தியாவில் விளம்பரப்படுத்தப்படுகின்றன. அண்மையில் ஆஸ்திரேலிய நாட்டில் இந்திய அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையிலான போட்டியின் போது - அங்கு சைனி கைனி மற்றும் கம்லா பசந்த் புகையிலை விளம்பரங்கள் இந்தி மொழியில் வைக்கப்பட்டதால், ஆஸ்திரேலிய அரசு சுமார் 35 லட்சம் ரூபாய் தண்டம் விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கத்திற்கு அறிவிக்கை அனுப்பியுள்ளது. 

என்ன செய்ய வேண்டும்?

மதுபானம் மற்றும் புகையிலைப் பொருள் நிறுவனங்கள் தங்களது சதிக்கு கிரிக்கெட் போட்டியை பலியாக்குவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். 

கிரிக்கெட் விளையாட்டு திருட்டு விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்படாமல் தடுப்பது விளையாட்டினை மேம்படுத்த உதவும். கிரிக்கெட்டை விளையாட்டு என்று எடுத்துக்கொண்டாலும், பொழுதுபோக்கு என எடுத்துக்கொண்டாலும் - அதன் ரசிகர்கள் ஏமாற்றப்படாமலும், கொடிய நோய்களுக்கு ஆளாகாமலும் காப்பாற்றுவது ஐ.பி.எல் குழுவினரின் தார்மீகக் கடைமை ஆகும். அந்த நியாயமான கடைமையைச் செய்வதற்கு அவர்கள் முன்வர வேண்டும்.

கூடவே, மதுபான நிறுவனங்களும் புகையிலை நிறுவனங்களும் ஒரே பெயரில் மாற்றுப் பொருட்களைத் தயாரிப்பதற்கு தடைவிதிப்பதன் மூலம், மாற்றுப்பொருட்கள் மூலம் திருட்டு விளம்பரங்கள் செய்யப்படுவதை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும்.

செவ்வாய், ஏப்ரல் 24, 2012

சாதிவாரிக் கணக்கெடுப்பு: முற்போக்கு வேடதாரிகளின் மூக்கை உடைக்கிறார் கி.வீரமணி!



தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஏப்ரல் 23 முதல் தொடங்கியுள்ளது. சென்னையில் மே 1 முதல் நடக்கவுள்ளது. இதுதொடர்பாக "சாதிவாரிக் கணக்கெடுப்பில் வன்னியர்கள் ஒரே பெயரைக் கூறவேண்டும்" என்று நான் குறிப்பிட்ட போது சிலர் அதனை பிற்போக்கு என்றனர் (அதனை இங்கே காண்க).

இதனை வலியுறுத்தி வெளியிடப்பட்ட ஒரு பதாகை மீது கருத்து சொன்ன மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. திருமுருகன் காந்தி "வன்னியர்களை தமிழ்நாட்டை விட்டு விரட்ட வேண்டும்" என்றார் (அதனை இங்கே காண்க). அவரது இயக்கத்துக்கு உள்ளேயே இதற்கு எதிர்ப்பு எழுந்தது (அதனை இங்கே காண்க).

இந்நிலையில் "ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஜாதி விவரத்தைக் கூறத் தயங்க வேண்டாம்!" என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

சாதி ஒழிப்பின் தலைமை இடமான திராவிடர் கழகத்தில் இருந்தே சாதிவாரிக் கணக்கெடுப்பில் சாதியை கூறுங்கள் என்கிற வேண்டுகோள் வெளிவந்துள்ளதன் மூலம் - சாதிப்பெயரைச் சொல்லாதே - என்று முற்போக்கு வேடம்போடும் வேடதாரிகளின் மூக்கு உடைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், "ஜாதி ஒழிய வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்புத் தேவை என்று ஓங்கி ஒலித்தனர். ஜாதி இருக்க வேண்டும் - அதனை ஒழிக்கவே கூடாது என்று காலம் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் உயர் ஜாதி ஆதிக்க சக்திகளோ இத்தகைய கணக்கெடுப்புக் கூடாது என்று வரிந்து கட்டினர். இதிலிருந்து இதற்குள் புதைந்திருக்கும் மர்மம் என்ன என்பது சிந்திக்கத்தக்கதாகும்." என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் குறிப்பிடுகிறார்.

சாதிப் பெயரை சரியாகக் குறிப்பிடாமல் போனால் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இனி அவரது அறிக்கை:

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஜாதி விவரத்தைக் கூறத் தயங்க வேண்டாம்!

ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அலுவலர்கள் வரும் பொழுது ஜாதிபற்றிய விவரங்களை (உள் ஜாதி உட்பட) சொல்லத் தயங்க வேண்டாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இந்தியா முழுமையும் ஜாதிவாரி கணக்கெடுப்புத் தொடங்கப்பட்டு விட்டது. மக்கள் தொகைக் கணக்கெடுப் போடு இந்தத் தகவலும் சேகரிக்கப்பட வேண்டும் என்று சமூக நீதியாளர்கள் தரப்பிலிருந்து குரல் ஓங்கியது.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஜாதி ஒழிய வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்புத் தேவை என்று ஓங்கி ஒலித்தனர்.

ஜாதி இருக்க வேண்டும் - அதனை ஒழிக்கவே கூடாது என்று காலம் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் உயர் ஜாதி ஆதிக்க சக்திகளோ இத்தகைய கணக்கெடுப்புக் கூடாது என்று வரிந்து கட்டினர்.

இதிலிருந்து இதற்குள் புதைந்திருக்கும் மர்மம் என்ன என்பது சிந்திக்கத்தக்கதாகும்.

ஜாதி ஒழிக்கப்படவில்லையே!

ஜாதி ஒன்றும் சட்டப்படி ஒழிக்கப்படவில்லை. மத ரீதியாகவும், சாஸ்திரங்கள் அடிப்படையிலும் ஜாதி, இந்து சமூக அமைப்பில் கெட்டியாக பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டமும் தீண்டாமை ஒழிப்புப் பற்றிப் பேசுகிறதே தவிர, அதற்கு மூல வித்தான ஜாதி ஒழிக என்று எந்த இடத்திலும் கூறப்படவில்லை.

இன்னும் சொல்லப்போனால் அரசு பதிவேடுகளில் சூத்திரன் என்று இருந்தது; அதனை ஒழிப்பதற்குப் பாடுபட்டது - குரல் கொடுத்தது திராவிடர் இயக்கமே.

1901ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கூட சூத்திரர்கள் என்ற விவரம் தரப்பட்டு இருந்தது.

1927இல் சென்னையில் கூடிய பார்ப்பனர் அல்லாத இளைஞர்களின் முதல் மாநில மாநாட்டில் ஜே.எஸ். கண்ணப்பர், அரசு பதிவேடுகளிலிருந்து சூத்திரன் என்ற சொல் நீக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை முன் வைத்தார்.

சூத்திரன் என்றால் விபச்சாரி மகன் என்பது உட்பட ஏழு பொருள்களைக் கொண்டது (மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415).

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியை எரிக்கும் போராட்டத்தை அறிவித்து நடத்தினார் தந்தை பெரியார் (26.11.1957).

ஆனாலும் இன்றளவுக்கும் ஜாதி பாதுகாப்போடு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இருக்கத்தான் செய்கிறது.

அரசுக்குத் தேவை புள்ளி விவரங்கள்....

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் ஜாதி (Caste) என்ற சொல் இடம் பெற்றுள்ளது! இந்த ஜாதி முறையால்தான் பெரும்பாலான மக்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. சமூகத்தில் பிறவியின் அடிப்படையிலேயே ஏற்றத் தாழ்வு - நிலை நிறுத்தப்பட்டது. பிறப்பில் என்ன ஜாதியோ - அதுதான் சுடுகாடுவரை என்ற நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஜாதியின் காரணமாக பல வகை களிலும் பாதிக்கப்பட்டவர்கள் உரிமை மறுக்கப்பட்டவர் களைப் பற்றிய புள்ளி விவரங்களை சேகரிப்பதன் மூலம் அத்தகையவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளை அளிக்க முடியும், அரசின் நல்வாழ்வுத் திட்டங்கள் இத்தகையவர்களுக்கும் போய்ச் சேர சரியான புள்ளி விவரம் தேவைப்படுகிறது.

நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு பற்றிய வழக்குகள் வரும்போது நீதிமன்றம் கேட்கும் முதல் கேள்வி - எந்தப் புள்ளி விவரத்தின் அடிப்படையில் (Criteria) இத்தனை சதவிகிதம் என்ற வினாவைத்தான் முன் வைக்கின்றது. அதற்காகவும் இந்தப் புள்ளி விவரம் தேவைப்படுகிறது.

ஓர் அரசுக்கு குடிமக்களின் சமூக, கல்வி, பொருளா தாரம், வேலை வாய்ப்பு நிலை எந்த அளவில் இருக்கிறது என்பதற்கு அடிப்படைப் புள்ளி விவரங்கள் அவசியம் தேவைப்படுகின்றன.

ஜாதியை ஒழிக்க ஜாதி விவரம் தேவை!

ஜாதி ஒழிக்கப்பட வேண்டுமானால் கல்வி, வேலை வாய்ப்புகளில் ஒடுக்கப்பட்ட - கீழ்ஜாதியாக ஆக்கப்பட்ட மக்கள் நூற்றுக்கு நூறு படித்தாக வேண்டும்; (சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் இடஒதுக்கீடு என்று அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பது மிக முக்கியம்).

அதற்கு ஜாதி பற்றிய புள்ளி விவரம் தேவைப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் ஜாதியை ஒழிக்க - இந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்புத் தேவை. கல்வி வளர்ந்தால்தான் ஜாதி ஒழிய முடியும். மேலெழுந்தவாரியாகப் பார்த்து ஜாதி விவரத்தை சொல்லத் தயங்க வேண்டாம் என்று ஜாதி ஒழிப்பு இயக்கம் என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜாதி வாரிக் கணக்கெடுப்பில் ஒரு முக்கிய அம்சம் விடுபட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஜாதியில் உள் ஜாதி பற்றிய விவரம் கேட்கப்படுவதில்லை என்பதுதான் அந்தக் குற்றச் சாற்று. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்று தொடங்கப்பட்ட பிறகு - அதில் ஏன் இந்த விடுபடல்?

உள் ஜாதி

முதலியார் என்றால் அதில் இடஒதுக்கீடு பெறாத சைவ முதலியார்களும் உண்டு. இடஒதுக்கீடு பெறும் செங்குந்த முதலியார்களும் உண்டு. இதில் வெறும் முதலியார் என்றால் புள்ளி விவரம் சேகரிப்பதன் நோக்கமே அடிபட்டுப் போகிறதே! அதில் எது B.C யோ அதைக் குறிப்பிட்டுப் பதிவு செய்ய வற்புறுத்திடல் வேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்களில் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு தமிழ்நாட்டில் உள்ளது. இந்த நிலையில் பொதுவாக தாழ்த்தப்பட்டவர் என்று சொன்னால் அது எப்படி சரியாகும்?

இத்தகைய தவறுகள் உடனடியாகத் திருத்தப்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!

இந்தியாவில் திராவிடர் கழகம் உள்ளிட்ட சமூகநீதி சிந்தனையாளர்களின் அழுத்தமான வலியுறுத்தலின் காரணமாகத்தான் இந்த ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு சம்மதித்தது என்பதையும் இந்நேரத்தில் நினைவூட்டுகிறோம்.

இந்த வாய்ப்பை வீணாக்கி, விழலுக்கிறைத்த நீராக்கி விடக் கூடாது!

கி.வீரமணி 
தலைவர், திராவிடர் கழகம்

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திங்கள், ஏப்ரல் 23, 2012

மதுவை ஒழிக்க விரும்பும் உலகம்; திணிக்க விரும்பும் தமிழ்நாடு!


உலக மது எதிர்ப்பு மாநாடு - நம்பிக்கையளிக்கும் புதிய தொடக்கம்.

உலகின் முதல் மதுஒழிப்பு உலக மாநாடு தாய்லாந்து நாட்டில் நடந்து முடிந்துள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகள் மதுவினால் ஏற்படு தீமைகளை உணர்ந்து அதனை தடுக்கவும் மதுத்தீமையை ஒழிக்கவும் உரிய வழிமுறைகளைக் கண்டறிவதாக இம்மாநாடு இருந்தது. 

இந்நேரத்தில் உலக அளவில் தமிழ்நாடு மட்டுமே மதுபானத் தீமையை வளர்க்கும் ஒரு தனித்தீவாக இருப்பதை எண்ணித் தமிழர்கள் வெட்கப்பட வேண்டும்!

மதுவளர்க்கும் தமிழ்நாடு

தமிழ்நாடு அரசுக்கு மதுபானத்தின் மூலமாகக் கிடைத்த வருவாய் 1997 - 98 இல் 1970 கோடி ரூபாயாக இருந்தது. 2007 - 08 ஆம் ஆண்டில் 8815 கோடியாக அதிகமானது. அதுவே 2010 - 11 இல் 15000 கோடியாக மிக அதிகமாகிவிட்டது. இப்படியாக தமிழ்நாட்டில் மதுபான விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது.

இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், 'தமிழ்நாட்டில் மதுபான விற்பனையை தமிழ்நாட்டு அரசாங்கமே ஊக்குவிக்கிறது' என்பதுதான். இது உலகின் வேறு எந்த மூலையிலும் இல்லாதக் கொடுமை ஆகும்! காலை 10 மணி முதல் இரவு 10 வரை திறந்திருக்கும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை இனி காலை 9 மணி முதல் இரவு 11 வரையிலும் திறக்க அரசு முடிவெடுத்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. கடந்த நிதியாண்டில் 15000 கோடி ரூபாயாக இருந்த மதுபான வருவாயை இந்த ஆண்டில் 18000 கோடி ரூபாயாக அதிகரிக்கவும் அரசு இலக்கு நிருணயித்திருப்பதாகக் கூறப்படுகிறது. தன் சொந்த குடிமக்களை குடியில் தள்ளி அதனால் வருவாய் ஈட்டும் கொடுங்கோல் அரசு உலகில் வேறு எங்குமே காணக்கூடியது அல்ல.

மதுவை ஒழிக்கும் உலகம்

கடந்த சில ஆண்டுகளில் உலகளாவிய மதுபானக் கொள்கையில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு மே மாததில் "தீங்கான மதுப்பயன்பாட்டைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தி" (WHO Global Strategy to Reduce Harmful Use of Alcohol) எனும் தீர்மானத்தை உலக நலவாழ்வு அமைப்பு நிறைவேற்றியது (இந்த தீர்மானம் உலக நலவாழ்வு அமைப்பில் முன்வைக்கப்பட முதன்மை உந்துசக்தியாக செயல்பட்டவர் இந்திய நலவாழ்வுத்துறை முன்னாள் அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள்). வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்மானத்தின் மூலமாக மதுபானத் தீமையைக் குறைப்பது என்ற அதிகாரப்பூர்வமான நிலைபாட்டை உலகநாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன. அதாவது - இன்றைய நிலையில் மதுபானத்தை ஊக்குவிக்கும் அரசு உலகில் எதுமே இல்லை (தமிழ்நாட்டைத் தவிர!).

அடுத்ததாக 2011 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஐ.நா.பொதுச்சபையின் 'தொற்றா நோய்கள்' உச்சிமாநாட்டில் (United Nations high-level meeting on noncommunicable disease prevention and control) தொற்றா நோய்களைத் தடுப்பதற்கான நான்கு முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக மதுபானத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற தீர்மானத்தை ஐ.நா.அவை ஏற்றது.

2012 பிப்ரவரி மாதத்தில் தாய்லாந்து அரசாங்கம், உலக நலவாழ்வு அமைப்பு, உலக மதுபானக் கொள்கைக் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து உலகின் முதல் 'மதுபானக் கொள்கை உலக மாநாட்டை' (Global Alcohol Policy Conference) தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடத்தின.

- இவ்வாறாகக் கடந்த மூன்றாண்டுகளில், மதுபானத்துக்கு எதிரான பாதைக்கு உலகமே திரும்பியுள்ளது. பொதுமக்களின் நலவாழ்வுக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் மதுபானத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக முக்கியமான தேவை என்கிற நிலைபாட்டுக்கு உலகின் எல்லா நாடுகளும் வந்துவிட்டன. அதனை ஏற்காத உலகின் ஒரே ஒரு அரசாங்கம் தமிழ்நாட்டு அரசாங்கம் மட்டும்தான். இதற்காக தமிழ்நாட்டு மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

உலக மதுபானக் கொள்கை மாநாடு 
(Global Alcohol Policy Conference)
உலக நலவாழ்வு அமைப்பின் தீங்கான மதுப்பயன்பாட்டைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தியை உள்ளூர் அளவிலும் தேசிய அளவிலும் செயல்படுத்த வேண்டும் என்கிற முழக்கத்துடன் உலக மதுபானக் கொள்கை மாநாடு தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் 2012 பிப்ரவரி 13 முதல் 15 வரை நடத்தப்பட்டது. உலகின் 59 நாடுகளில் இருந்து சுமார் 1500 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர் (தமிழ்நாட்டிலிருந்து பசுமைத் தாயகம் அமைப்பு பங்கேற்றது). இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மாநாட்டுப் பிரகடனம் தேசிய அளவிலும், உள்ளூர் அளவிலும், உலகளவிலும் மதுபானத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வலியுறுத்தியது.

உலகெங்கும் ஏற்படும் மரணங்கள், ஊனங்களுக்கு மூன்றாவது பெரிய காரணமாக இருப்பது மதுபானம் தான். 2004 ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி 23 லட்சம் பேர் மதுபானத்திற்கு ஓர் ஆண்டில் பலியானார்கள். குறிப்பாக 15 முதல் 29 வயது வரையிலானோரின் இறப்புக்கும் ஊனமடைவதற்கும் மதுபானம்தான் முதல் காரணமாக உள்ளது.

புற்றுநோய்கள், இருதய நோய்கள், ஈரல் பாதிப்புகள் உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கு மதுபானம் முக்கிய காரணமாக உள்ளது. மதுபானத்தால் பாதிக்கப்பட்டு இறப்போரில் பாதியளவினர் இத்தகைய நோய்களால் சாகிறார்கள்.

சாலை விபத்துகளுக்கு மதுபானம் முக்கிய காரணமாக உள்ளது. எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றுவதற்கும் காசநோய் தொற்றுவதற்கும் மதுபானம் காரணமாகிறது.

மதுபானத்தால் ஏற்படும் இழப்புகள் அளவிடமுடியாத அளவு மிகப்பெரியதாகும். தனிநபர், குடும்பம், சமுதாயம் என எல்லோருக்குமே மதுபானம் பேரிழப்பை உண்டாக்குகிறது. சிகிச்சைக்காக அதிக பணத்தை, சொத்தை இழத்தல், வேலை செய்யும் திறன் இழப்பால் வருமானம் குறைதல், வேலை இழத்தல் - என மதுபானத்தால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோரும் பெரும் பாதிப்படைகிறார்கள். மதுபானத்தால் வறுமை அதிகமாதல், நாட்டின் மேம்பாடு தடைபடுதல் என பெரும் கேடுகள் நேருகின்றன.

எனவே, திட்டமிட்ட முறையில் மதுபானக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்தல், திறந்திருக்கும் நேரத்தைக் குறைத்தல், விலையை அதிகமாக்குதல், விளம்பரங்களை ஒழித்தல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம் மதுபானத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். மதுபானத்தைக் கட்டுப்படுத்துவதால் நலவாழ்வு, சமூக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என பல வழிகளிலும் பெரிய பலன்கள் விளையும் - எனக் கூறியது உலக மதுபானக் கொள்கை மாநாட்டுத் தீர்மானம்.
உலக மது எதிர்ப்பு மாநாட்டில் நான். இடம்: பாங்காக், பிப்ரவரி 2012
மதுபானத்துக்கு எதிரான இந்த முதல் மாநாடு, உலகம் முழுவதிலுமுள்ள அரசுத்துறையினர், ஐ.நா. அமைப்பினர், அரசுசாரா அமைப்பினர், செயல்பாட்டாளர்கள் என எல்லா தரப்பினரையும் முதல்முறையாக ஒன்றிணைத்துள்ளது. இதன்மூலம் மதுவுக்கு எதிரான போராட்டம் புதிய வடிவெடுத்துள்ளது. இதன் அடுத்த மாநாடு 2013 ஆம் ஆண்டில் தென்கொரியா நாட்டில் கூடவுள்ளது.

இத்தகைய மாறிவரும் உலக சூழலில் தமிழ்நாடு மட்டும் குடிப்பழக்கத்தைப் போற்றி வளர்க்கும் நாடாக இருப்பது தமிழ் இனத்திற்கு பெரும் களங்கமாக அமைந்துள்ளது. இந்த நிலை நிச்சயம் மாற்றப்பட்டாக வேண்டும்.

சனி, ஏப்ரல் 21, 2012

ஒரு இயக்கத்தை தலைமையேற்று நடத்துபவர்கள் தவறாக பேசிவிட்டால், அந்த இயக்கத்தை பின்பற்றுபவர்கள் அந்த தவறையே வழிமொழிந்து அதற்கு சப்பைக்கட்டு கட்டுவதையே நாம் கண்டு வந்துள்ளோம்.
அதுபோன்றுதான் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. திருமுருகன் காந்தி "வன்னியர்களை தமிழ்நாட்டைவிட்டு விரட்ட வேண்டும்" என்கிற கருத்துக்கும் அந்த அமைப்பின் தொண்டர்கள் பலரும் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருக்கின்றனர்.

இருந்தாலும், அதே மே 17 இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று அறிவித்துக்கொண்டுள்ள சிலர் விதிவிலக்காக திரு. திருமுருகன் காந்தியின் கருத்தினை விமர்சிக்கிறார்கள் (இது இதர இயக்கங்கள் பலவற்றில் காண முடியாத காட்சியாகும்).

அந்த வகையில் மே 17 இயக்கத்தின் திரு. சூரியபிரகாசு தங்கசாமி என்பவரது விரிவான கருத்தை கீழே அளித்துள்ளேன்.

திரு. திருமுருகன் காந்தியின் கருத்து குறித்த எனது பதிவில் (மே 17 இயக்கத்தின் சாதிவெறி: வன்னியர்களை தமிழ்நாட்டைவிட்டு விரட்ட வேண்டுமாம்!) "சாதி, மதம், மொழி, இனம், நம்பிக்கை போன்ற எதன் அடிப்படையிலும் ஒரு இடத்தில் நீண்டகாலமாக வாழும் மக்களை வெளியேற்றக் கூறுவது மயிரிழை அளவும் ஏற்புடையது அல்ல. ஆனாலும், பெரும்பாலும் வன்னியர்களைத் தவிர வேறு எவரும் திரு. திருமுருகன் காந்தி அவர்களின் கருத்துக்கு எதிர்ப்பு கூறாமல் மௌனமாக இருப்பது வியப்பளிக்கிறது." என்று குறிப்பிட்டிருந்தேன்.

அதேகருத்தை மே 17 இயக்கத்தின் திரு. சூரியபிரகாசு தங்கசாமியும் குறிப்பிடுகிறார். குறிப்பாக "இவை எல்லாவற்றையும் விட, சக தோழர் செய்கிற தவறை கண்டிக்க வேண்டிய உணர்வாளர்கள் யாருமே அதை செய்யவில்லை என்பதும், மாறாக பல தமிழ் உணர்வாளர்கள்(என்று நான் நம்பியவர்கள்) அதற்கு ‘விருப்பம்’ போட்டு தாங்களும் அந்த பட்டியலில் முனைப்புடன் சேர்ந்து கொண்டதும்....இதையெல்லாம் கண் கொண்டு கண்ட பின்பும், எதுவுமே நடக்காதது போல மௌனம் காத்து பொதுவான தமிழ்தேசியவாதிகள் (வெகுசில விதிவிலக்குகள் தவிர்த்து) அதை ஊக்குவித்ததும் எனக்கு பேரதிர்ச்சியை அளிக்கிறது." என்கிறார் அவர்,

இனி அவரது முகநூலில் இருந்து:
(மே 17 இயக்கத்தின் திரு. சூரியபிரகாசு தங்கசாமி )

"மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் சமீபத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய ஒரு சுவரொட்டி மீது வெளியிட்ட கருத்தும் அதன் மீதான விவாதமும் பற்றி, என்னை மே 17 உறுப்பினர் என்று எண்ணும், தமிழ் தேசிய விசயங்களில் எனக்கு உதவிகள் செய்த என் நண்பர்களுக்கு என்னுடைய நிலைப்பாட்டை விளக்கவே இந்த பதிவு..

முதலில்.. இது என்னை பொருத்தவரை திருமுருகனின் தனிப்பட்ட கருத்து.. இது பற்றி என்னிடமோ, பிற சக உறுப்பினர்களிடமோ கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட நிலைப்பாடு அல்ல.. மே 17 இயக்கம் கூடி இதை ஆமோதித்ததாக நான் அறியேன்.

இரண்டாவதாக.. விவாதத்தின் ஆரோக்கியமற்ற போக்கு என்னை போன்ற தமிழ் உணர்வாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உங்களின் ஏமாற்றத்தை நானும் உணர்கிறேன். தனி நபர் விமர்சனம், ஒரு இனக்குழுவையே பொதுப்படையாக பேசுதல் (Generalization and Stereo typing), தீவிர போக்குகள், பொறுப்பற்ற விமர்சனங்கள், வீண் வீர வசனங்கள் என்று பல இதில் அடங்கும்.. நான் மிகவும் மரியாதை வைத்திருந்த திருமுருகனின் ஆதிமூல கருத்தே (ஒரு பிரிவை தமிழகத்தை விட்டு விரட்டுவோம்) இவ்வாறானவையாக இருக்க மற்றவர் யாரையும் குறை சொல்ல முடியாமல் நிற்கிறேன்.

சாதிவாரி கணக்கெடுப்பில் உட்பிரிவுகளை சொல்லி உரிமைகளை இழக்காமல் பொது பெயரை சொல்லவேண்டும்.. என்ற செய்தி தாங்கிய அறிக்கை பற்றி திருமுருகன் சொன்ன கருத்துக்கள் பாரிய அளவில் பொதுமை படுத்தப்பட்ட (Excessive Generalization), மேற்கோள் காட்டப்படும் படத்திற்கு கொஞ்சமும் பொருத்தமற்ற, சனநாயகத்துக்கு முரணான தீவிரவாத போக்குடைய, நல்வழிப்படுத்தும் நோக்கமற்ற கருத்தாகவே என்னாலும் பார்க்க முடிகிறது. மேலும் விவரமாக கூறின்,

தமிழீழத்தில் படுகொலை நடந்தபோது ஒரு சாதி உதவவில்லை என்று சொல்லுவது எந்த ஆதாரம் அல்லது புள்ளி விவரத்தின் அடிப்படையில் என்று எனக்கும் தெரியவில்லை. திருமுருகன் தான் அதை புள்ளி விவரம் கொண்டு விளக்க வேண்டும். தமிழருக்கு ஒரு சாதி துரோகம் செய்தது என்று சொல்லுவதோ, இந்திய அரசுடன் கை கோர்த்தது என்று சொல்லுவதோ எந்த புள்ளியியலின் அடிப்படையில் என்று என் பள்ளி, கல்லூரி, அலுவல்வழி நண்பர்களாகிய உங்களைபோலவே நானும் குழம்பி தான் இருக்கிறேன்.

யார் தமிழன் என்பதும், யார் இங்கு வாழ்வது என்பதும் மிகப்பெரிய விவாதங்களுக்கு பிறகே முடிவு செய்ய முடியும். தனிநபர் தன்னிச்சையாக முடிவெடுப்பது தமிழ் தேசியத்துக்கு நல்லது கிடையாது. இயக்கத்தின் சனநாயகத்திற்கும் நன்மை பயக்காது. சனநாயக வழிமுறைகளை உடைத்து ஒரு குழுவை வெளியேற்றும் உரிமையை திருமுருகனுக்கு சக தமிழனாக, தோழனாக நான் வழங்கவில்லை. அதனால் என் மீது கோபம் கொள்வது தவறு.

சாதியத்தை ஒழித்து தமிழராக ஒன்றிணைய சபதம் ஏற்ற ஈழத்தின் வட்டுகோட்டை தீர்மானத்தில் கூட எந்த ஒரு பிரிவினரையும் ஒரு காரணம் காட்டி அங்கிருந்து விரட்டுவது நோக்கமாக இல்லை. சாதி வேறுபாடுகளை கடுமையாக தண்டித்த புலிகளின் கோட்பாடும் அதுவாக இல்லை.. மாறாக சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு சென்ற தோட்ட தொழிலாளர் உட்பட தமிழ் பேசும் மக்கள் அனைவரும் இலங்கை தீவின் எந்த பகுதியில் இருந்தும் ஈழத்தில் குடியேறி சம உரிமையுடன் வாழலாம் என்றே வரவேற்கிறது. இதை தமிழருக்கு நினைவூட்ட வேண்டிய நிலையில் இருந்த திருமுருகன் அதற்கு மாறாக பேசியது எனக்கும் அதிர்ச்சி தான்.

“உன்னை சத்ரியன் என்று சொல்லாதே அதற்கு மாற்றான ஒரு தமிழ் சொல்லை பயன்படுத்து” என்று சொல்ல நினைத்திருந்தால் அதற்கு “உன்னை தமிழகத்தை விட்டு வெளியேற்றி எவன் உன்னை சத்ரியனாக ஏற்கிறானோ அவனிடம் அனுப்புவோம்” என்றா சொல்வார்கள்? இந்த சொற்றொடரை நான் சொற்குற்றமாக பார்க்கவில்லை.. அது தரும் பொருளிலும், அது கூறப்பட்ட நோக்கத்திலும் உள்ள குற்றமாவே கருதுகிறேன்.

ஒரே பட்டப்பெயர்கள்/உட்பிரிவுகள் உள்ள பல சாதிகள் BC/MBC/SC/ST போன்ற பல்வேறுபட்ட தரப்படுத்தலில் உள்ளன. அவற்றுக்கிடையில் கணக்கெடுப்பின் போது நிகழ்ந்த கவனக்குறைவான, திட்டமிட்ட குளறுபடிகள் அதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விளைந்த, விளையக்கூடிய பேராபத்தை அறியவில்லையா அல்லது அது பற்றிய அக்கறை இல்லையா? இரண்டுமே சமமான இழப்புகளை தமிழ் தேசியத்திற்கு உண்டாக்கும். அந்த சுவரொட்டியில் கையாளப்படும் செய்தியின் கணத்தை உணர்ந்திருந்தால் அதில் கையாளப்படும் ஒரு சொல்லின் (கருதப்பட்ட) பிழையை பிரித்தெடுத்து கண்டித்திருக்க முடியும்.

மேலும் ஏதோ ஒரு அமைப்பின் உள்சுற்றறிக்கையை போது மேடையில் வைத்து விவாதிப்பது எவ்வகை நியாயம் என்ற கேள்வி எழுந்தது. கருத்து எவ்வகையினதாயினும் அதன் மீது விவாதம் நடத்தலாம் என்ற அடிப்படையில் அதை ஏற்றுக்கொள்கிறேன்..

ஆக மொத்தத்தில், சிறய பிழைகள் என்கிற அடிப்படையை கடந்த வரலாற்று பிழையாக இன்று இது நிற்கிறதென்பதே உண்மை.. தனது அதிதீவிரமான அந்த கருத்துக்கள் பலநூறு தமிழர்களை கடுமையாக மோதிக்கொள்ள வைக்கும் என்பதை எதிர்பார்க்கும் அளவு அரசியல் புரிதல் இல்லை என்று திருமுருகன் சொன்னால் அதனால் அதிகபட்ச அதிர்ச்சி அடைபவன் நானே. மாறாக இவற்றை எல்லாம் நன்றாக உணர்ந்தும் சக தோழர்கள், உறுப்பினர்களோடு இது பற்றி ஒரு முறை கூட விவாதிக்கவில்லை என்பதை உணர்ந்து அதிகபட்சமாக வருந்துபவனும் நானே.

இவை எல்லாவற்றையும் விட, சக தோழர் செய்கிற தவறை கண்டிக்க வேண்டிய உணர்வாளர்கள் யாருமே அதை செய்யவில்லை என்பதும், மாறாக பல தமிழ் உணர்வாளர்கள்(என்று நான் நம்பியவர்கள்) அதற்கு ‘விருப்பம்’ போட்டு தாங்களும் அந்த பட்டியலில் முனைப்புடன் சேர்ந்து கொண்டதும், இரு தரப்பின் பலரும் பாசிச அடிப்படையில் அழிப்பேன் ஒழிப்பேன் என்கிற பாணியில் கருத்து பதிவதும், இதையெல்லாம் கண் கொண்டு கண்ட பின்பும், எதுவுமே நடக்காதது போல மௌனம் காத்து பொதுவான தமிழ்தேசியவாதிகள் (வெகுசில விதிவிலக்குகள் தவிர்த்து) அதை ஊக்குவித்ததும் எனக்கு பேரதிர்ச்சியை அளிக்கிறது.

திருமுருகனின் கருத்துக்கள் உங்களில் பலருக்கு தயக்கங்களையும், அசௌகரியத்தையும் உண்டாக்கி இருக்கும் என்றே நம்புகிறேன்.. “உனக்காக எல்லாம் நாங்கள் போராடவில்லை, போராட போவதுமில்லை” என்பது தவறு என்று உணர்ந்திருப்பீர்கள். ஆனால் எதிர்ப்பு கூறாமல் ஊமையானது ஏன்? கருத்தியலின் மீதான பற்று என்பதையும் தாண்டி தலைவர்கள் மீதான அபிமானத்தையும், அமைப்பின் கட்டுப்பாடுகளையும் மனதில் கொண்டு இயங்குவது தமிழ் தேசிய இயக்கத்தை படுகுழியில் தள்ளிவிடும். இதற்கு இந்தியம், சாதி மத பற்று, திராவிடம் என்று பல எடுத்துக்காட்டுகள் உண்டு. இந்த பட்டியலில் தமிழ்தேசியம் சேருவதை நான் வெறுக்கிறேன்.

தமிழ்தேசியம் பற்றி இனி பேசிவரும் யாரையும் இந்த பிரச்சனை தொடர்பான தன் கருத்தை கூறுமாறும், இந்த சந்தர்ப்பத்தில் தன் கருத்தை பதியாதமைக்கான காரணங்களை கேட்பதும் கடமையாக கருதுகிறேன். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் மக்களை துன்பப்படுத்தும் பிரிவினைவாதம் இன்று ஒரு தமிழ் தேசிய இயக்கத்திற்கும் அடித்தளமாகிறதோ என்று கவலை கொள்கிறேன்..

எந்த குறிப்பிட்ட விவாதத்தின் அடிப்படையிலும் ஒப்புக்கொள்ளப்படாத இந்த கருத்தை பொதுவெளியில் என்னை கேட்டு திருமுருகன் பதியவில்லை.. என் நண்பர்களின் புரிதலை தெளிவுபடுத்தும் இந்த பதிவை யாரை கேட்டும் நான் பதிவிட வேண்டியது இல்லை.

எப்படியோ தமிழினம் ஒன்றுபடும் என்ற எனது கனவில் மண் அள்ளிப்போட்டமைக்கு வேதனையும் கண்ணீரும் நிறைந்த கைகூப்பிய நன்றி!

திருமுருகன், பாசிச தமிழ் தேசியவாதிகள், சாதிகள் மீதான அக்கறையை மீறிய வெறியர்கள், பேசா மடந்தையான பிற மே 17 உறுப்பினர்கள், களப்பணி அறியா Facebook போராளிகள், மௌனம் காக்கும் உண்மையான தமிழ் தேசியவாதிகள் உட்பட உலகின் ஒட்டுமொத்த தமிழினமும் எனக்கு எதிரே திரண்டு நின்று கூட்டமாக “You are most welcome” என்று கூவுவதை போல உணர்கிறேன். அவமானம் தலைப்பட வாயடைத்து போய் நிற்கிறேன் மூன்று வருடங்களுக்கு முன்பு மௌனித்த துப்பாக்கிகள் போல.

குறிப்பு: உங்கள் சந்ததிகள் கோடி புண்ணியம் ஈட்டட்டும், பதிவை முழுதாக படித்து பின் கருத்து பதியவும்.""

இவ்வாறு மே 17 இயக்கத்தின் திரு. சூரியபிரகாசு தங்கசாமி தனது முகநூலில் எழுதியுள்ளார். http://www.facebook.com/promankind

கருத்து 2:


இதே போன்ற ஒரு கருத்தினை கணேஷ் அருநாடன் என்பவரும் திரு. திருமுருகன் காந்தியின் முகநூலில் குறிப்பிட்டுள்ளார். அவரது கருத்து இதோ:

"திருமுருகன்...உங்களது முந்தைய பதிவில் நீங்கள் போட்ட பதிவில் இருந்த நியாயமற்ற வன்னியர் எதிர்ப்பை, "விரட்டுவோம்" என்ற கோணல் பார்வையை முதலில் எதிர்த்தவன் என்ற முறையில் இங்கு நான் சில கருத்துகளை முன் வைக்கிறேன்.

1) இப்போது நீங்கள் போட்ட பதிவில் உள்ள decency-ஐ பாருங்கள். இதுவன்றோ அரவணைத்து செல்லும் முறை. இதனை நான் மனமாற பாராட்டுகிறேன். "சத்திரியன்" என்ற சொல்லாடல் வேண்டாம் என்கிறீர்கள். அதனை விவாதிக்க intellectual வன்னியர்கள் என்றுமே தயாராகவே இருக்கிறார்கள்.

2) உங்களது முந்தைய பதிவில் நீங்கள் இட்ட விரும்பத்தகாத சொற்கள் பல வன்னியர்களை புண்படுத்திவிட்டது என்பது தான் உண்மை. இதற்கு நீங்கள் இன்னும் வருத்தம் தெரிவிக்காதது உங்களது முதிர்வின்மையை காட்டுகிறது.

3) 1.25 கோடி வன்னியர்களை ஒதுக்கிவிட்டு தமிழ் தேசியம் பேசினால் அது நாமெல்லாம் வேண்டும் என்று நினைக்கின்ற தமிழ் தேசியத்திற்கு தான் இழப்பே தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

4) இந்த ஒட்டுமொத்த விவாதத்தில் ஒரு விஷயம் நன்றாக புலப்படுகிறது. உங்களை சுற்றி சிந்திக்க தெரியாத காக்காய் கூட்டம் மிகுந்து விட்டது. இந்த நிலை ஒரு இழி நிலை. இதனை முதலில் போக்குங்கள். இந்த கூட்டம் உங்களை முதிர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லாது. இது உங்களுக்கு போலியான கர்வத்தை கொடுக்கும். இறுதியில் உங்கள் பெயரையே அழித்து விடும். இதிலிருந்து மிகுந்த எச்சரிக்கையாக இருங்கள்.

5) If there is one thing I admire in you, it is your undeterred die hard support for the cause of Tamil Nationalism. ஆனால் சாதியை கண் மூடி எதிர்ப்பவன் எதார்த்தம் தெரியாதவன். அவனால் தமிழ் தேசியத்தை வளர்க்க இயலாது. என்னை போன்றவர்கள் சாதியை ஒழித்து வரத் தயார். ஆனால் ஒரு குப்புசாமி படையாச்சியோ, சீனித்தேவரோ, ராமசாமிக் கவுண்டனோ, இந்த சாதாரணப் பட்டவர்கள் இன்னும் வர தயாராக இல்லை என்பது தான் யதார்த்தம். அதனால் அவர்களை ஒதுக்கிவிட்டு தமிழ் தேசியம் பேசலாம் என்றால், உங்கள் / நமது இயக்கத்தில் 50,000 பேர் கூட மிஞ்ச மாட்டார்கள் என்பது தான் யதார்த்தம்.

இறுதியாக எனது ஒரே வேண்டுகோள் - யதார்த்தத்தை புரிந்துக் கொண்டு களத்தில் தொடருங்கள். உங்களுக்கு எமது ஆதரவு இன்று போல் என்றும் உண்டு. அது போல தவறாக, உணர்ச்சி உந்த post செய்துவிட்டால் மனம் திறந்து மன்னிப்பு கேளுங்கள். தவறேதும் இல்லை. மன்னிப்பு கேட்பவன் பண்பட்டவனே தவிர, பண்பால் குறைந்தவன் ஆகமாட்டான். infact மன்னிப்பு கேட்பவன் உயர்நிலைக்கு தன்னை தானே செலுத்திக் கொள்பவன்."

-- இவ்வாறு திரு. கணேஷ் அருநாடன் திரு. திருமுருகன் காந்தி அவர்களின் முகநூலில் எழுதியுள்ளார்.

இயக்க ஒருங்கிணப்பாளரின் தவறை அதே இயக்கத்தினர் கண்டிக்கும் பண்பாட்டினை வரவேற்போம்.

புதன், ஏப்ரல் 18, 2012


மே 17 இயக்கத்தின் சாதிவெறி: வன்னியர்களை தமிழ்நாட்டைவிட்டு விரட்ட வேண்டுமாம்!

தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு இயக்கமாக அறியப்பட்ட மே 17 இயக்கத்தில் இப்போது சாதிவெறி தலைவிரித்தாடுகிறது. காரணம்: சாதிவாரிக் கணக்கெடுப்பு.

ஏபரல் 20 முதல் நடக்க இருக்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பில் வன்னியர்கள் பட்டப்பெயர்களைக் கூறாமல் "வன்னியகுல சத்திரியர்" என்று கூற வேண்டும் என்கிற வன்னியர்களின் வேண்டுகோளுக்கு எதிராக கொதித்து எழுந்துள்ளார் மே 17 இயக்கத்தின் பொறுப்பாளர் திருவாளர் திருமுருகன் காந்தி.

"நீ வன்னியகுல சத்திரியனாக இரு. தமிழன்  ன்றுமட்டும் சொல்லிக்கொள்ளாதே எனக்கு அவமானமாக இருக்கிறது...தமிழகத்திற்கு என்றாவது விடியல் கிடைக்கும் போது இவர்களை தமிழகத்தினை விட்டு வெளியேற்று'வேன்" என்று தனது முக நூலில் எழுதியுள்ளார் மே 17 இயக்கத்தின் பொறுப்பாளர் திருவாளர் திருமுருகன் காந்தி. இதைப் படிக்கும்போது வியப்பாக இருக்கிறது.
முகநூலில் திருவாளர் திருமுருகன்: காந்தி தமிழகத்திற்கு என்றாவது விடியல் 
கிடைக்கும் போது வன்னியர்களை தமிழகத்தினை விட்டு வெளியேற்று'வேன்

சாதிவாரிக் கணக்கெடுப்பு பிரச்சாரம் எதற்காக?

அரசாங்கம் நடத்தும் சாதிவாரிக் கணக்கெடுப்பில் குழப்பம் நேரக்கூடாது. அதற்கு உதவியாக இருக்க வேண்டும் என்கிற நோக்கிலும், சாதிவாரிக் கணக்கெடுப்பின் நோக்கமான 'எந்த சாதி எத்தனை பேர்' என்கிற புள்ளிவிவரத்தில் பிழை நேரக்கூடாது என்கிற நியாயமான எண்ணத்திலும் தான் வன்னியர்கள் ஒற்றைப் பெயரைக் கூறவேண்டும் என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது.
இதைப் பார்த்து மே 17 இயக்கத்தின் பொறுப்பாளர் திருவாளர் திருமுருகன் காந்தி எதற்காக அவமானப்பட வேண்டும்?


சாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை என்கிற கருத்தினை பொதுவாக தமிழ்நாட்டின் எந்த ஒரு அரசியல் கட்சியோ, அல்லது மக்கள் இயக்கமோ எதிர்க்கவில்லை. மே 17 இயக்கத்துடன் தோளோடு தோள் உரசும் தலைவர்கள் எல்லோரும் சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிக்கின்றனர்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு சட்டபூர்வமாக, அரசாங்கத்தின் செலவில் நடக்கிறது. இதற்காக தமிழ்நாடு அரசு தனிப்பட்ட அரசாணைகளை வெளியிட்டுள்ளது. இக்கணக்கெடுப்பை நடத்துவதற்கு மாவட்டந்தோரும் மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

இப்படிப்பட்ட ஒரு கணக்கெடுப்புக்கு உதவ வேண்டும் என்று சொல்வது தவறா?

வன்னியர்களின் சிக்கல் என்ன?

தமிழ்நாட்டின் பெரும்பாலான சாதியினருக்கு இல்லாத ஒரு சிக்கல் வன்னியர்களுக்கு இருக்கிறது. வன்னிய சமூகத்தினர் பலவிதமான பட்டப்பெயர்களைக் கொண்டுள்ளனர். அவற்றில் சில பெயர்கள் மற்ற சாதியனராலும் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, வன்னியர்கள் பயன்படுத்தும் "ரெட்டியார்" பெயரை தெலுங்கு ரெட்டியார் சமூகத்தினரும், "நாயக்கர்" பெயரை தெலுங்கு நாயுடு சமூகத்தினரும், "கவுண்டர்" பெயரை கொங்கு கவுண்டர் சமூகத்தினரும், "பிள்ளை" பெயரை வெள்ளாளர் சமூகத்தினரும், "வாண்டையார்" பெயரை முக்குலத்தோர் சமூகத்தினரும் பயன்படுத்துகின்றனர். இதுபோன்று இன்னும் பல பட்டப் பெயர்கள் உள்ளன.

ஒரே பெயரை ஒன்றுக்கும் மேற்பட்ட சாதியினர் பயன்படுத்தும் நிலையில், அரசாங்கத்தின் சாதிவாரிக் கணக்கெடுப்பில் ஒருவர் ஒரு சாதிப் பெயரை மட்டுமே கூறுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஒரே சாதிப்பெயரை இரண்டு சமூகத்தினர் கூறினால் அதனால் குழப்பம் நேராதா? அதனால் அரசின் கணக்கெடுப்பு நோக்கம் பாதிக்காதா?

இந்த குழப்பத்தால் அதிகம் பாதிக்கப்படும் சமூகமாக வன்னியர்களே உள்ளனர். எனவே, வன்னியர்கள் மத்தியில் "ஒரே சாதிப்பெயரைக் கூறுங்கள்" என்று பிரச்சாரம் செய்யப்பட்டால் அதில் என்ன தவறு?

இதற்காக, மே 17 இயக்கத்தின் பொறுப்பாளர் திருவாளர் திருமுருகன் காந்தி எதற்காக கோபம்கொண்டு கொதிக்கின்றார்? (முன்னேறிவிட்ட பிள்ளைமார் சமூகத்தினருக்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை இல்லைதானே)


வன்னியர்களை தமிழ்நாட்டை விட்டு துரத்த வேண்டுமாம்!

மே 17 இயக்கத்தின் பொறுப்பாளர் திருவாளர் திருமுருகன் காந்தியின் மற்றொரு கருத்து "வன்னியர்களை தமிழ்நாட்டை விட்டு துரத்த வேண்டும்" என்பதாகும். இது ஏன் என்று தெரியவில்லை?

மண்ணின் மைந்தர்களை அவர்களது சொந்த நாட்டை விட்டு துரத்த வேண்டும் என்று சொல்லும் இவர்தான் ஈழத்தமிழர்களுக்காக போராடுகிறாராம்! வெட்கக்கேடு!

கூடவே, சத்திரியன் என்று சொல்லாதே என்கிறார்.

வன்னியர்களின் பெயர் அரசின் பட்டியலில் "வன்னியகுல சத்திரியர்" என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழ்நாடு அரசின் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் பட்டியலில் 26 ஆவது சாதியாக"வன்னியகுல சத்திரியர்" (Vanniyakula Kshatriya) என்றுதான் கூறப்பட்டுள்ளது. அதனை இந்த இணைப்பில் காணலாம்: List of Most Backward Classes

நடுவண் அரசின் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர் பட்டியலிலும் 157 ஆவது சாதியாக"வன்னியகுல சத்திரியர்" (Vanniyakula Kshatriya) என்றுதான் கூறப்பட்டுள்ளது. அதனை இந்த இணைப்பில் காணலாம்: Central List of OBCs for the State of Tamilnadu

இவ்வாறாக சாதிச் சான்றிதழிலும், அரசு ஆவணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள "வன்னியகுல சத்திரியர்" எனும் அதிகாரப்பூர்வப் பெயரை பயன்படுத்தாதே என்று சொல்ல இவர் யார் என்று தெரியவில்லை!

சாதி ஒழிப்பா? லூசுத்தனமா?

இந்தியாவில் சாதி ஒழிப்புக்காக போராடியவர்கள், போராடுபவர்கள் எல்லோரும் சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிக்கின்றனர்

தந்தை பெரியாரைப் பின்பற்றும் இயக்கங்கள் எல்லாமும் சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிக்கின்றன. அதுகுறித்து "சாதிவாரிக் கணக்கெடுப்பு: பிற்போக்கா? முற்போக்கா?" எனும் பதிவில் விரிவாக குறிப்பிட்டுள்ளேன்.

இந்தியாவின் முதன்மையான சாதி ஒழிப்புப் போராளி அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரித்தார். அவரது "பல லட்சங்களிலிருந்து பின்னங்களுக்கு" எனும் கட்டுரையில் இந்தியாவில் தீண்டத்தகாதோரும் பிற்படுத்தப்பட்டவர்களும் எண்ணப்பட்டு எண்ணிக்கை தெளிவாக்கப்பட வேண்டும் என்று கூறினார். அந்தக்கட்டுரையை இங்கே காணலாம்: From Millions to Fractions

இந்திய அரசியல் அமைப்பின் 340 ஆம் பிரிவில் கூறப்பட்டபடி அமைக்கப்பட்ட காகா கலெல்கர் குழு, மண்டல் குழு ஆகியன உடனடியாக சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தின. எனினும், விடுதலைப் பெற்று 65 ஆண்டுகளுக்கு பின்னரே சாதிவாரிக் கணக்கெடுப்பு எனும் கனவு நனவாகியுள்ளது.

இப்போது வந்து, சாதிவாரிக் கணக்கெடுப்பில் வன்னியர்கள் தங்களது 'சட்டப்படியான' பெயரைக் கூறக்கூடாது என்றும், அவ்வாறு கூறுமாறு கேட்பதால் மண்ணின் மைந்தர்களான வன்னியர்கள் அவர்களது சொந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் கூறுகிறார் மே 17 இயக்கத்தின் பொறுப்பாளர் திருவாளர் திருமுருகன் காந்தி.

அதுமட்டுமல்லாமல், தமிழகத்திற்கு என்றாவது விடியல் கிடைக்கும் போது வன்னியர்களை தமிழகத்தினை விட்டு வெளியேற்றுவேன் என்பதாகவும் பேசுகிறார் மே 17 இயக்கத்தின் பொறுப்பாளர் திருவாளர் திருமுருகன் காந்தி.
திருவாளர் திருமுருகன் காந்தி
மே 17 இயக்கத்தின் பொறுப்பாளர் திருவாளர் திருமுருகன் காந்திக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார் என்று தெரியவில்லை. அவரோடு மெரீனா கடற்கரையில் தோளோடு தோள் நின்று காட்சியளிக்கும் தமிழினப் போராளிகளும் சமூகநீதிப் போராளிகளும்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
தொடர்புடைய சுட்டிகள்:
1. சாதிவாரிக் கணக்கெடுப்பு-ஏப்ரல் 23 முதல் நடக்கிறது: வன்னியர்களின் கடமை என்ன?
2. சாதிவாரிக் கணக்கெடுப்பு-வன்னியர்களின் கடமை: முதல் பத்திரிகை விளம்பரம்
3. சாதிவாரிக் கணக்கெடுப்பு: பிற்போக்கா? முற்போக்கா?

பின்குறிப்பு:

மே 17 இயக்கத்தின் திரு. திருமுருகன் காந்தி அவர்கள் வன்னியர்கள் குறித்து தெரிவித்த கருத்து தொடர்பாக அவரது முகநூலில்  https://www.facebook.com/profile.php?id=1339044043 நீட்டி முழக்கி விவாதம் நடக்கிறது. நான் அதுபோல நீண்ட விளக்கம் எல்லாம் கேட்கவில்லை.

"தமிழகத்திற்கு என்றாவது விடியல் கிடைக்கும் போது இவர்களை தமிழகத்தினை விட்டு வெளியேற்றி" --என்கிற கருத்தினை திரு. திருமுருகன் காந்தி அவர்கள் தெரிவித்துள்ளார். அதனை அவரே ஒப்புக்கொள்கிறார். அந்தக் கருத்து தவறானது என்று ஒருபோதும் அவர் மறுக்கவில்லை. அதனை புரிந்துகொண்டவர்கள்தான் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என்கிறார். இதன்மூலம் தமிழ்நாடு விடுதலை அடைந்தால் ஒரு கூட்டத்தினரை வெளியேற்ற வேண்டும் என்கிற அவரது கருத்தில் அவர் உறுதியாக இருக்கிறார்.

இந்த இடத்தில் வன்னியர்கள் என்று இல்லை, வேறு யார் பெயரை வேண்டுமென்றாலும் போட்டுக்கொள்ளுங்கள். அவ்வாறு குறிப்பிடப்படும் கூட்டத்தினரின் கருத்து எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கட்டும்.

என்னுடைய கேள்வி மிக எளிதானது: ஒரு குறிப்பிட்ட கருத்துக்காக அல்லது பிறப்பின் அடிப்படையில், சிலரையோ அல்லது பலரையோ இந்த நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் என்பது ஒப்புக்கொள்ளக் கூடியதா?

திரு. திருமுருகன் காந்தி அவர்களின் இந்தக் கருத்திற்கும் இடலர் யூதர்களை வெளியேற்றியதற்கும் என்ன வேறுபாடு?

திரு. திருமுருகன் காந்தி அவர்களின் இந்தக் கருத்திற்கும் சிங்கள வெறியர்கள் தமிழர்களை வெளியேற்றியதற்கும் என்ன வேறுபாடு?

வன்னியர்களை அவர் வெளியேற்றுவது ஒருபக்கம் இருக்கட்டும். தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் பல நூறு ஆண்டுகளாக வாழ்கிறார்கள். அவ்வாறே, தமிழை தாய்மொழியாகக் கொள்ளாத மக்களும் பல நூறு ஆண்டுகளாக வாழ்கிறார்கள். தமிழகத்திற்கு என்றாவது விடியல் கிடைக்கும் போது இவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கூற முடியுமா? அந்தக் கருத்தினை மனித உரிமையில் நம்பிக்கை உள்ளவர்கள் ஏற்க முடியுமா?

சாதி, மதம், மொழி, இனம், நம்பிக்கை போன்ற எதன் அடிப்படையிலும் ஒரு இடத்தில் நீண்டகாலமாக வாழும் மக்களை வெளியேற்றக் கூறுவது மயிரிழை அளவும் ஏற்புடையது அல்ல.

ஆனாலும், பெரும்பாலும் வன்னியர்களைத் தவிர வேறு எவரும் திரு. திருமுருகன் காந்தி அவர்களின் கருத்துக்கு எதிர்ப்பு கூறாமல் மௌனமாக இருப்பது வியப்பளிக்கிறது.

திங்கள், ஏப்ரல் 16, 2012

சாதிவாரிக் கணக்கெடுப்பு: பிற்போக்கா? முற்போக்கா? 


சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடங்கவுள்ள நிலையில் இதுகுறித்து சில விமர்சனங்கள் 'மறுபடியும்' பேசப்படுகின்றன. "சாதி வாரிக் கணக்கெடுப்பில் மனிதர்கள் சாதி மறுப்போம்!" என்கிற ஒருபதிவில் சாதி இல்லை என்று கூற வேண்டும் என்று எழுதியுள்ளார்கள். இதன்மூலம் "சாதி மறுப்பு மனிதர்களின் எண்ணிக்கை அதிகமாக வேண்டும்" என்று சொல்லி "முற்போக்கு" வேடத்தை அரங்கேற்றுகிறார்கள்.

சாதிவாரிக் கணக்கெடுப்பின் போது சாதியை மறுத்தால் அவர் முற்போக்காளர் ஆகிவிடுவாரா? நிச்சயம் ஆகமாட்டார். சமூகநீதிக்கான ஒரு கணக்கெடுப்பில் 'பொய்யான' தகவலைத் தருவதன் மூலம் சாதி மறுப்பாளர்கள் ஒட்டுமொத்த சமூகத்திற்கு துரோகம் இழைத்தவர்களாக ஆவார்கள். சமூகநீதிக்கு எதிரானவராகவும் ஆவார்கள்.

உண்மையில், சாதிவாரிக்கணக்கெடுப்பில் சாதியை மறைப்பவர் சாதி ஒழிப்பிற்கு எதிரான சாதிவெறியராகவே அடையாளம் காணப்பட வேண்டும்.
(சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்த எனது முந்தைய பதிவு: சாதிவாரிக் கணக்கெடுப்பு-வன்னியர்களின் கடமை: முதல் பத்திரிகை விளம்பரம்)

முற்போக்கு பெரியார் இயக்கங்களின் நிலை என்ன?
அகில இந்தியாவிலும் மிகவும் முற்போக்கான இயக்கம் என்பது பெரியாரிய இயக்கங்கள்தான். இன்று பெரியாரைப் பின்பற்றும் இயக்கங்கள் அத்தனையும் சாதிவாரிக் கணக்கெடுப்பை தீவிரமாக ஆதரிக்கின்றன.

இத்தனைக்கும் 1931 ஆம் ஆண்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட போது "யாரும் சாதியை சொல்லக்கூடாது. சாதி மறுப்பாளர் என்று கூற வேண்டும்" என தந்தை பெரியார் பிரச்சாரம் செய்தார். அன்று பெரியார் கண்ட கனவு வேறு. இந்திய நாடு விடுதலை அடைந்த உடன் "சாதி முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். சட்டப்படி சாதி தடைச் செய்யப்பட வேண்டும்" என்று பெரியார் கருதினார்.
சாதி ஒழிய சுயசாதி திருமணங்கள் தடை செய்யப்பட வேண்டும். இந்துமதம் ஒழிக்கப்பட வேண்டும். சாதிப்பெயர்களைப் பயன்படுத்துவோர், பூணூல் அணிவோர், பெண் பார்க்கும் போது சாதி பெயர் கேட்போர் எல்லாம் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று தந்தை பெரியார் கருதினார். இதில் ஏதாவது ஒன்றாவது நடந்ததா? அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தைக் கூட இன்னமும் செயல்படுத்த முடியவில்லை.

எனவே, அன்று பெரியார் சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்த்தார். இன்று எல்லா பெரியாரிய இயக்கங்களும் சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிக்கின்றன. இது காலத்தின் கட்டாயம்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து பெரியார் திராவிடர் கழகத் தலைவர் திரு. கொளத்தூர் மணி அவர்கள் முன்பு எழுதிய கட்டுரையையைக் கீழே காண்க.

சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் - ஏன்?

2011-க்கான பத்தாண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடுத்த மாதத்தில் நம் தமிழ்நாட்டில் தொடங்க இருக்கின்றன. இக்கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும் என்ற குரல் இந்திய ஒன்றியம் முழுதும் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. நாடாளுமன்றத்திலும் சூடான விவாதம் நடந்து வருகின்றது.

பெரியார் திராவிடர் கழகமும் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீதம் இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தி தமிழ்நாட்டின் மூன்று பகுதிகளிலிருந்து புறப்பட்ட பரப்புரை குழுக்கள் பத்து நாட்கள் பயணம் செய்து, 2007 அன்று திருச்சியில் நடத்திய கழக மாநாட்டில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றினோம். ஏன் இந்த கோரிக்கை? ஏன் இவ்வளவு வலிமையாக எழுப்பப்படுகிறது?

இந்தியத் துணைக் கண்டத்தைப் பொறுத்தவரை ஒரு மனிதனின் வாழ்விடம், தொழில், உடை, திருமணம், கல்வி, சமூக அந்தஸ்து அனைத்துமே அவரவர் பிறந்த வழியே தீர்மானிக்கிறது. பெரும்பான்மை மக்களின் வாக்குகளைக்கொண்டு அமைக்கப்படும் குடிநாயக ஆட்சி, பெரும்பான்மை மக்களின் கல்வி, தொழில், வாழ்வுரிமை பற்றியும் அக்கறை காட்ட வேண்டுமல்லவா? அதுதான் இல்லை. விடுதலை பெற்று, தனி அரசமைப்பு சட்டம் இயற்றி அறுபது ஆண்டுகள் கடந்த நிலையிலும், பெரிய தடைகளையெல்லாம் தாண்டி இந்த ஆண்டுதான் மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் 9 சதவீத இடம், 60, 70 விழுக்காடாய் இருக்கிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு செய்வது தொடர்பான இந்திரா சகானி (எதிர்) இந்திய ஒன்றியம் (1992); எம். நாகராஜ் (எதிர்) இந்திய ஒன்றியம் (2006); அசோக் தாக்கூர் (எதிர்) இந்திய ஒன்றியம் (2008) போன்ற வழக்குகளில் எல்லாம் எதிர் தரப்பினர் வைத்த முதன்மையான வாதம் என்ன? 1931க்குப் பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை என்பதை முன்வைத்தே வாதாடினார்கள்.

மேற்கண்ட மூன்று வழக்குகளிலும் ஒட்டு மொத்த மக்களின் சமூக கல்வி நிலை குறித்து முழுமையான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும்கூட, 2011 கணக்கெடுப்பிலும் சாதிவாரி விவரங்களை எடுக்க உரிய வழி வகைகள் ஏதும் செய்யப்படவில்லை.

இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1892 இல் முதன்முறையாக எடுக்கப்பட்டபோது, அது முழுமையான கணக்கெடுப்பாய் அமையவில்லை.

1881 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில்தான் சாதிவாரி கணக்கெடுப்பு முழுமையாக எடுக்கப்பட்டது. அது 1931 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக நடந்தது. இரண்டாம் உலகப் போர் நடந்து வந்த நிலையில் 1941 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு சரிவர, முழுமையாக எடுக்க முடியவில்லை.

குடியரசான பிறகு இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1951 இல் நடைபெற்றபோது, சாதிவாரி கணக்கெடுப்பு கைவிடப்பட்டது. ஆனால் அரசியல் சட்டத்தின் 341, 342 ஆவது பிரிவுகளின்படி பட்டியல் இன சாதி, பழங்குடியினர் கணக்கெடுப்பு மட்டும் தொடர்கிறது.

அரசியல் சட்டத்தின் 340 ஆவது பிரிவு சமூகத்திலும் கல்வியிலும் பின் தங்கியுள்ள வகுப்புகளின் நிலையை பற்றியும், அவர்களுக்குள்ள சங்கடங்களைப் பற்றியும், அத்தகைய சங்கடங்களைப் போக்குவதற்கான வழி வகைகள் பற்றியும் அவர்களை மேம்படுத்துவதற்காக மத்திய (அ) மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் போன்றவற்றை ஆய்வு செய்து அறிக்கை தர ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறுகிறது.

அதன் அடிப்படையில் 1953 இல் அமைக்கப்பட்ட காகாகலேல்கர் ஆணையம், 1978 இல் அமைக்கப்பட்ட மண்டல் ஆணையம், பல மாநிலங்களில் அமைக்கப்பட்ட இவையொத்த பிற ஆணையங்கள் எல்லாம் பிற்படுத்தப்பட்ட மக்கள் குறித்த சாதிவாரி கணக்கெடுப்பு செய்ய பரிந்துரைத்தும், அரசு உயர்சாதியினரின் எதிர்ப்பைக் கருதி திட்டமிட்டே புறக்கணித்தும் வந்துள்ளது.

ஆனாலும், இதே மய்ய அரசு தான் பிற்படுத்தப்பட்டோர் குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் வருகிறபோதெல்லாம் 1931 முதல் பிற்படுத்தப்பட்டோரின் முறையான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஏதும் இல்லை என்ற பார்ப்பன உயர்சாதியினரின் வாதங்களுக்கு முகம் கொடுத்து பார்ப்பனருக்கு எதிரான வாதங்களை முன் வைத்து வந்துள்ளது.

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் “சூத்திரர்கள் யார்?” (1946) என்ற தமது நூலில்:

“சூத்திரர்களின் பிரச்சினையின் ஆழம் குறித்து மக்கள் சரியாக உணர்ந்திராததற்கு காரணம் சூத்திரர்களின் மக்கள் எண்ணிக்கை குறித்து அவர்கள் அறிந்திராமல் இருப்பதுவே ஆகும். கெட்ட வாய்ப்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பும் அவர்களின் கணக்கை தனியாக எடுக்கவும் இல்லை. என்றாலும், தாழ்த்தப்பட்டவர்கள் நீங்கலான “சூத்திரர்”களின் எண்ணிக்கை இந்து மதத்தைப் பொருத்தவரையிலும் 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மண்டல் குழு அறிக்கை இந்துக்களில் 44 சதவீதப் பேரும், பிற மதங்களில் 8 சதவீத பேரும் என மொத்தம் 52 சதவீத பேர் பிற்படுத்தப்பட்டோர் எனக் கூறுகிறது. தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு முதலில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 36 சதவீதம் என்றது. ஆனால், பின்னர் அவர்களே எடுத்த மாதிரிக் கணக்கெடுப்பு 42 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்டவர்கள் என்கிறது.

வட்டாரத்துக்கு சில வீடுகள் என எடுத்து கணக்கிடும் மாதிரி கணக்கெடுப்பு துல்லியமானது அல்ல என்றாலும் அதனை ஆதாரமாகக் காட்டி கூக்குரல் எழுப்புகின்றனர். அரசியல் சட்டத்தின் 15(4) பிரிவு சமுதாயத்திலும் கல்வியிலும் பின் தங்கியுள்ள பிரிவினருக்கு கல்வி நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் (இடஒதுக்கீடு) செய்வது குறித்துப் பேசுகிறது. பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை பல்வேறு நிலைகளில் அவர்கள் பெற்றுள்ள கல்வித் தகுதி, மாநில சராசரியோடு அப்பிரிவினரின் சராசரி ஆகியவற்றை ஒப்பிட்டே முடிவு செய்வது பொருத்தமாயிருக்கும்.

அரசு வேலை வாய்ப்புகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாத சாதியினருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து அரசியல் சட்டத்தின் 16(4) பிரிவு கூறுகிறது. ஒரு பிரிவினரின் மக்கள் தொகை, அப்பிரிவினரில் அரசு வேலை பெற்றுள்ளோர் எண்ணிக்கை, வேலையின் எந்தப் படி நிலையில் எத்தனை பேர் என்ற விவரம் இல்லாமல் எவ்வாறு அரசு சரியாக செயல்பட முடியும்?

1993 ஆம் ஆண்டின் பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையச் சட்டத்தின் 11 ஆவது பிரிவின் (1) உட்பிரிவு, “இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின் ஒரு முறையும், அதன்பின் ஒவ்வொரு பத்தாண்டிலும், சமுதாயத்திலும், கல்வியிலும் பின் தங்கியுள்ள நிலையிலிருந்து மீண்டு விட்ட பிரிவினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து நீக்கவும், அல்லது புதிதாக சேர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறுகிறது. இது சாதிவாரியான கணக்கெடுப்பு இல்லாத நிலையில் எவ்வாறு நிறைவேற்ற முடியும்?

நீண்டகாலமாக இடஒதுக்கீட்டு முறை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப் படும். தமிழ்நாடு, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் பொதுப் போட்டி (Open Competition) இடங்களிலேயே பெரும் பகுதியைப் பெறும் அளவுக்கு பிற்படுத்தப்பட்ட மக்களும், சில இடங்களைப் பெறும் அளவுக்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களும் வளர்ந்துள்ளனர். இதைக் கணக்கில் கொண்டு, இதுவரை ஏறத்தாழ எல்லா இடங்களையுமே மொத்தமாக அனுபவித்து வந்த உயர்சாதிக் கூட்டம், தமக்கு அடுத்த நிலையில் போட்டியாக வளர்ந்து வரும் பிற்படுத்தப்பட்ட மக்களை முடிந்தவரை கல்வி, வேலை வாய்ப்புகளில் வராமல் பார்த்துக் கொள்வதில் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட்டு வருகின்றன.

கடந்த காலங்களில் அரசின் உயர் பீடங்களில் அமர்ந்துவிட்ட உயர்சாதி அதிகாரிகளின் உதவியோடு தங்கள் ஏகபோக உரிமையையும் முடிந்த வரையிலும் காப்பாற்ற பல்வேறு வஞ்சக நடவடிக்கைகளிலும், பரப்புரைகளிலும் ஈடுபடு கின்றனர். சாதி வாரி கணக்கெடுப்பால் சாதியம் சமூகத்தில் ஆழமாய் வேர் கொண்டுவிடும் என்ற ஒரு பரப்புரையை செய்கின்றனர். ஆனால், இவர்கள், கடந்த 70 ஆண்டுகளாக சாதிவாரி கணக்கெடுப்பில்லாத நிலையிலும் சாதியம் சமூகத்திலும், அரசியலிலும் ஆளுமை செலுத்துவதை ஏனோ கணக்கில் எடுக்கத் தவறுகின்றனர்.

சாதிகளுக்குள் பிளவுகளை சாதிவாரி கணக்கெடுப்பு ஏற்படுத்தும் என்ற வாதமும் மேற்கண்டவாறே ஆதாரமற்றதாகும். சாதிவாதி கணக்கெடுப்பால் மக்கள் தொகை அதிகமுள்ளோரின் ஆதிக்கம் சமுதாயத்தில் ஏற்படும் அபாயம் உள்ளது என்றொரு கருத்தையும் உயர்சாதியினர் கூறுகின்றனர். இதுவரை சூழ்ச்சிகளாலும், தந்திரங்களாலும், கல்வி, வேலை வாய்ப்புகளில் முற்றாதிக்கம் செலுத்தி வரும் கூட்டம் மிகச் சிறுபான்மையான பார்ப்பன சாதியே ஆகும்.

மக்கள் தொகை அதிகமுள்ள பிரிவினர் ஆதிக்கம் செலுத்தி விடுவார்கள் என்ற வாதம் உண்மையானால், முற்று முழுதாய் இந்துக்களே வாழ்ந்து வந்த இந்தியாவில், வெளியிலிருந்து வந்த மிகக் குறைவான எண்ணிக்கைக் கொண்ட இஸ்லாமியர் ஆட்சி எவ்வாறு ஏற்பட்டது? அதற்குப் பிறகு முழுதும் இந்துக்களும், இஸ்லாமியர்களுமே இருந்த இந்தியாவில் நூற்றுக்கணக்கில் மட்டுமே நுழைந்த ஐரோப்பியர்கள், குறிப்பாக ஆங்கிலேயர்கள் ஆட்சி எப்படி ஏற்பட்டது?

அரசியல் சட்டத்தின் 15, 16, 29(2) ஆகிய பிரிவுகள் ‘தம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம், மரபு வழி, மொழி ஆகிய காரணங்களுக்காக பாகுபாடு காட்டப்படுவது கூடாது என தடை செய்துள்ளது. ஆகவே சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்துவது சரியல்ல என்று ஒரு சொத்தை வாதம் முன் வைக்கப்படுகிறது. இவ்வாதத்தை வைப்போர் சாதியைத் தவிர பிற கூறுகளான மதம், இனம், பாலினம், பிறப்பிடம், மரபு வழி, மொழி பற்றிய விவரங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதியப்படுகின்றன என்பதை ஏனோ கவனிக்கத் தவறுகின்றனர். மேலும் பட்டியல் இன வகுப்புகள், பழங்குடிகள் மற்றும் ஆங்கிலோ இந்தியர் போன்றோர் பற்றிய விவரங்களும் தொடர்ச்சியாக பதியப்பட்டே வந்துள்ளன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

ஆக, ஒவ்வொரு முறை பிற்படுத்தப்பட்டோர் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் வருகிற போதெல்லாம் 1931க்குப் பின் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு இல்லை என்பதையே முதன்மையான வாதமாய் எதிர்தரப்பினர் வைத்து வந்ததையும், ஒரு வேளை ஒரு குறிப்பிட்ட சாதிப் பிரிவினர் பின் தங்கிய நிலையிலிருந்து மீண்டிருந்தாலோ அல்லது குறிப்பிட்ட மக்கள் பிரிவினரின் பின் தங்கிய நிலை கண்டறியப்பட்டாலும், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை அதற்குத்தக திருத்தி அமைக்க சாதிவாரிக் கணக்கீடு அவசியமாகிறது.

1991 ஆம் ஆண்டு முதல் மதுலிமாயி போன்ற பல்வேறு மூத்த தலைவர்கள் சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தி வழக்குகள் தொடுத்து வந்துள்னர்.  இப்போது சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு விண்ணப்பத்திலேயே எளிய வழி உண்டு. ஏற்கனவே 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் குடும்பவாரியான சமூகத் தன்மை பற்றிய பிரிவில் குடும்பத் தலைவர் சார்ந்துள்ள சாதி / சமுதாயம் பற்றிய கேள்வியில் “பட்டியலின சாதி அல்லது பழங்குடியினர்” எனில் குறியீட்டெண்ணைப் பதிவு செய்யுமாறு அச்சிடப்பட்டிருந்தது. அதில் “பட்டியலின சாதி / பழங்குடி / பிற்படுத்தப்பட்டவர்” என சிறு திருத்தம் செய்தாலே போதும்.

பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படும் குடிநாயக அரசான இந்திய அரசு, நாட்டு மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினராக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்கும், மேம்பாட்டுக்குமான திட்டங்களை தீட்டுவதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் வாய்ப்பாகவும்,எழுபது ஆண்டு களாக தவிர்க்கப்பட்டு வந்துள்ள சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளுவதன் வழியாக உரிய சமூகநீதி வழங்க எளிதாக அமையும் என்பதால்தான் பெரியார் திராவிடர் கழகம் சாதி வாரிக் கணக்கெடுப்பை வற்புறுத்துகிறது.

- கொளத்தூர் மணி, தலைவர், பெரியார் திராவிடர் கழகம்

(பெரியார் முழக்கம் மே 2010 இதழில் வெளியான கட்டுரை)

நன்றி: கீற்று

ஞாயிறு, ஏப்ரல் 15, 2012

சாதிவாரிக் கணக்கெடுப்பு-வன்னியர்களின் கடமை: முதல் பத்திரிகை விளம்பரம்


"சாதிவாரிக் கணக்கெடுப்பு-ஏப்ரல் 23 முதல் நடக்கிறது: வன்னியர்களின் கடமை என்ன?" எனும் முந்தைய விரிவான பதிவில்:

ஏப்ரல் 23 முதல் நடக்க இருப்பதாகக் கருதப்படும் சாதிவாரிக் கணக்கெடுப்பின் போது "சாதி பெயரைக் கூறவும் (Name of Caste/Tribe)" எனும் கேள்விக்கு வன்னியர்கள் மிகக் கவனமாக "வன்னியர்" (வன்னியக் குல சத்திரியர்) என்று பதில் கூற வேண்டும் - எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே கருத்தில் தருமபுரி மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை விளம்பரங்கள்:

தினத்தந்தி
தினகரன்
தருமபுரி மாவட்டத்தினர் பாராட்டப்பட வேண்டியவர்கள். இதர மாவட்டங்கள் இதனைப் பின்பற்ற வேண்டும்.

சனி, ஏப்ரல் 14, 2012

சாதிவாரிக் கணக்கெடுப்பு-ஏப்ரல் 23 முதல் நடக்கிறது: வன்னியர்களின் கடமை என்ன?


சாதிவாரிக் கணக்கெடுப்பு - தமிழ்நாட்டின் அரசியலை தலைகீழாக மாற்றும் ஒரு ஆயுதமாக மாறக்கூடும். ஏப்ரல் 23 முதல் நடக்க இருப்பதாகக் கருதப்படும் இக்கணக்கெடுப்பால், தமிழ்நாட்டில் எந்த சாதியினர் எத்தனை பேர் இருப்பார்கள்? அவர்களின் சமூகப் பொருளாதார நிலை என்ன? என்கிற விவரங்கள் இந்த ஆண்டே வெட்ட வெளிச்சமாகிவிடக் கூடிய நல்வாய்ப்பு வந்துள்ளது.

(தனிப்பட்ட நபர்களின் சாதி விவரம் வெளியிடப்படாது என்று கூறப்பட்டுள்ளது - Information on the person’s / household’s religion and caste/ tribe name will not be published. ஆனால், சாதிவாரி மக்கள் தொகை விவரத்தை வெளியிடுவதும், சாதிகளின் சமூக பொருளாதார விவரங்களை வெளியிடுவதும்தான் இந்தக் கணக்கெடுப்பின் நோக்கம் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது -To make available authentic information that will enable castewise population enumeration of the country, To make available authentic information regarding the socioeconomic condition, and education status of various castes and sections of the population)

உண்மையில் 'வன்னியர் அரசியல்' எனும் கருத்தாக்கத்திற்கு வரலாற்றில் ஒரு முறை மட்டுமே கிடைக்கக் கூடிய மாபெரும் வாய்ப்பாக இதனைக் கருத வேண்டும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தத் தவறினால் - இனி தலைமுறை தலைமுறையாக இதன் பாதிப்பு தொடரக்கூடும்.

வன்னியர்கள் அரசியல் அதிகாரத்தைப் பிடிப்பதானாலும், வன்னியர் சமுதாய முன்னேற்றமானாலும் - அதன் அடிப்படையாக அமையப்போவது இந்தக் கணக்கெடுப்புதான். முழுமையாக, நேர்மையாக இக்கணக்கெடுப்பு நடந்தால் - தமிழ்நாட்டில் வன்னியர்கள் எத்தனை பேர் உள்ளனர்? அவர்களின் சமூக, பொருளாதார நிலை என்ன? என்பது தெளிவாக தெரிந்துவிடும். அதன் பிறகு வன்னியர்களின் சமுதாய எழுச்சியை எவராலும் தடுக்க முடியாது.

கணக்கெடுப்பில் என்ன கேட்கப்போகிறார்கள்?

சமூக, பொருளாதார, சாதிக் கணக்கெடுப்பு (Socio Economic and Caste Census - SECC) எனப்படும் இக்கணக்கெடுப்பில்

1. சாதி விவரங்கள்


2. சமூக பொருளாதார விவரங்கள் 

-- என இரண்டுவிதமான புள்ளிவிவரங்கள் தொகுக்கப்பட உள்ளன.

ஒவ்வொரு நபர் குறித்தும் - கல்வி, வேலை, தொழில், சொத்து, வருமானம், வீடு, நிலம், வாகனம் உள்ளிட்ட சமூக பொருளாதார விவரங்கள் விரிவாக கேட்கப்பட உள்ளது.

ஒவ்வொரு நபர் குறித்தும் - மதம், சாதி விவரங்கள் சுருக்கமாக கேட்கப்பட உள்ளது.

இந்த இரண்டு வகையான விவரங்களும் முக்கியமானவை. எனினும் - சாதி குறித்த விவரங்கள் மிக மிக முக்கியம் ஆகும்.

சாதி குறித்து எவ்வாறு கேட்பார்கள்?

சாதி குறித்து இரண்டு மிக முக்கிய தகவல்கள்

சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட தகவல்களை உள்ளடக்கிய இக்கணக்கெடுப்பில் - சாதி நிலவரம் (Caste/Tribe Status) என்ற தலைப்பில் - சாதி குறித்து இரண்டு தகவல்கள் மட்டுமே கேட்கப்பட உள்ளன. அவை இரண்டுமே மிக முக்கியமானவை ஆகும்.

முதல் தகவல்: பட்டியல் இனமா? பழங்குடியினரா? வேறு சாதியா?
கிராமப்புறங்களில் 13 ஆவது தகவலாகவும் நகரப்பகுதிகளில் 16 ஆவது தகவலாகவும் பின்வரும் தகவல் கேட்கப்படும்:

1. SC பட்டியல் இனமா?


2. ST பழங்குடி இனமா?

அல்லது

3. Others - இதர வகுப்பா?

- என்று கேட்பார்கள்.

இந்தக் கேள்விக்கு வன்னியர்கள் - "3. இதர வகுப்பு - Others" என்று பதில் சொல்ல வேண்டும். இதனை கணினியில் குறிக்கும் போது "3" என்று குறிப்பார்கள்.

கவனிக்க வேண்டியது என்ன?

சாதி குறித்த முதல் கேள்வியின் போது - SC பட்டியல் இனமும் இல்லை. ST பழங்குடி இனமும் இல்லை என்று சொன்னாலே - கணக்கெடுப்பவர் "3. இதர வகுப்பு - Others" என்று குறித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதையும் மீறி "எனக்கு எந்த சாதியும் இல்லை" என்று வீம்பாக யாராவது கூறினால் - அவர்கள் "4. சாதி இல்லை" எனும் பிரிவில் சேர்க்கப்படுவார்கள். எனவே, தப்பித்தவறி கூட "சாதி இல்லை, சாதி பார்ப்பது இல்லை, சாதி தெரியாது" என்றெல்லாம் ஒரு வன்னியரும் கூறக்கூடாது.

வன்னியர்கள் அனைவரும் "3. இதர வகுப்பு - Others" என்று தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

இரண்டாவது தகவல்: சாதியின் பெயர் என்ன? (Name of Caste/Tribe)

இக்கணக்கெடுப்பில் அதி முக்கியமான, உயிர்நாடியான தகவல் இதுதான். கிராமங்களில் 14 ஆவது பத்தியாகவும், நகரங்களில் 17 ஆவது பத்தியாகவும் இந்த தகவல் கேட்கப்படும்.

"சாதி பெயரைக் கூறவும் (Name of Caste/Tribe)" என்பதுதான் அந்த தகவல் ஆகும். இக்கேள்விக்கு வன்னியர்கள் மிகக் கவனமாக " வன்னியக் குல சத்திரியர் " என்று பதில் கூற வேண்டும்.

கவனிக்க வேண்டியது என்ன?

கணக்கெடுப்பு நடத்துபவர் - சாதி பெயர் என்ன? என்று கேட்கும் போது, பதில் சொல்பவர் எதைச் சொன்னாலும், அதை எதிர் கேள்வி கேட்காமல் எழுதிக்கொள்ள வேண்டும் - என்று கூறப்பட்டுள்ளது. எனவே, வன்னியர்கள் ஆளுக்கொரு பெயரைக் கூறினால், அதைத்தான் எழுதுவார்கள். மிகமிகக் கவனமாக ஒவ்வொரு வன்னியரும் தனது சாதி "வன்னியக் குல சத்திரியர்"  என்பதை தெளிவாக ஒரே பதிலாகக் கூற வேண்டும்.

மிகப்பெரிய ஆபத்து

வன்னியர்களில் பலர் ரெட்டியார், கவுண்டர், பிள்ளை, வாண்டையார் போன்ற பட்டப்பெயர்களைக் கொண்டுள்ளனர்.  சாதிப் பெயரைக் கேட்டால் இந்த பட்டப்பெயரையே கூறுகின்றனர். இதே பெயரை மற்ற சாதியினரும் பயன்படுத்துகின்றனர்.

இப்போதையக் கணக்கெடுப்பில் - ஒரே ஒரு பெயரை குறிப்பிட மட்டுமே இடம் உள்ளது. எனவே, வன்னியர்கள் "வன்னியக் குல சத்திரியர்"  என்று சொன்னால் மட்டுமே அது வன்னியர் சாதியாகக் கருதப்படும். பட்டப்பெயர்களைச் சொன்னால், ஒவ்வொரு பட்டப்பெயரும் ஒரு தனி சாதியாகக் கருதப்படும் ஆபத்து உள்ளது.

வன்னியர் ஒருவர் தன்னை கவுண்டர் என்று குறிப்பிட்டால் - அவர் வன்னியக் கவுண்டரா? வெள்ளாளக் கவுண்டரா? என்று பிரித்துப்பார்க்க இந்தக் கணக்கெடுப்பில் வாய்ப்பு இல்லை.

இக்கணக்கெடுப்பில் "தாய்மொழி" குறித்த கேள்வி இடம்பெறவில்லை. எனவே, வன்னியர் ஒருவர் தன்னை "ரெட்டியார்" என்று கூறினால் அவர் வன்னிய ரெட்டியாரா? தெலுங்கு ரெட்டியாரா? என்று கண்டுபிடிக்க முடியாது.

வன்னியர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டப்பெயர்களை பயன்படுத்தும் நிலையில் - ஒவ்வொருவரும் தனித்தனி பட்டப்பெயரைக் கூறினால் - ஒவ்வொன்றும் ஒரு தனி சாதியாகக் கருதப்படுவதற்கும், வன்னியர்கள் வெள்ளாளக் கவுண்டர்களாகவும் தெலுங்கு ரெட்டியார்களாகவும் குறிப்பிடப்படும் பேராபத்து உள்ளது. 

எனவே ஒவ்வொருவரும் தம்மை "வன்னியக் குல சத்திரியர்" என்று கூறினால் மட்டுமே, வன்னியர் சமூகத்தின் உண்மையான எண்ணிக்கையும், சமூகப் பொருளாதார நிலையும் தெரியவரும்.

இந்தக் கணக்கெடுப்பை போர்க்கால அடிப்படையில் பயன்படுத்த தவறினால் 'தும்பை விட்டுவிட்டு, வாலை பிடிக்கும் கதையாக' வன்னியர்கள் விடிவுக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடக்கூடும்.

சரிசெய்ய ஒரு வாய்ப்பும் இல்லை.

இந்தக் கணக்கெடுப்பில் - சாதிப் பெயரை ஒருமுறை தவறாகக் கூறிவிட்டால் - அந்த தவறை கண்டுபிடிக்கவோ, சரிசெய்யவோ வாய்ப்பே இல்லை.

கணக்கெடுப்பின் சமூக பொருளாதார விவரங்கள் பஞ்சாயத்து அலுவலகத்திலும் கிராமசபையிலும் இணையத்தின் மூலமும் வெளிப்படையாக வெளியிடப்படும். திருத்தம் செய்யவும் வழி செய்யப்பட்டுள்ளது. ஆனால், சாதி விவரங்கள் வெளிப்படையாக வைக்கப்பட மாட்டாது.

அதாவது, தமிழ்நாட்டில் வன்னியர்கள் எத்தனைப் பேர்? அவர்களின் நிலை என்ன? என்பது வெளியிடப்பட வாய்ப்பு உண்டு. ஆனால், ஒரு கிராமத்தில் யார் வன்னியர் என்கிற தகவல் வெளியிடப்படாது.

எனவே, கணக்கெடுப்பின் போது வன்னியர் ஒருவரது சாதி மாற்றப்பட்டால் - அதனைக் கண்டுபிடிக்கவும் முடியாது, சரிசெய்யவும் முடியாது.

வன்னியர் நலன் காக்க என்ன வழி?

வன்னியர்களின் தலையாயப் பணியாக - வன்னியர் சங்கமும், வன்னியர் தலைவர்களும் உடனடியாக - ஒவ்வொரு வன்னியரும் தம்மை 'வன்னியக் குல சத்திரியர்' என்று கணக்கெடுப்பில் கூற வேண்டும் என்கிற பிரச்சாரத்தை போர்க்கால அடிப்படையில் முன்னெடுக்க வேண்டும்.
கணக்கெடுப்புக்கு முன்பாக:

1. பத்திரிகை, தொலைக்காட்சி விளம்பரங்கள்

2. ஒவ்வொரு வன்னியர் கிராமத்திலும் ஒரு ஆலோசனைக் கூட்டம்

3. ஒவ்வொரு வன்னியர் குடும்பத்திற்கும் யாரேனும் ஒருவர் நேரில் சென்று பேசுதல்

4. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு துண்டுப்பிரசுரம்

5. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சுவரொட்டி அல்லது பதாகை

--ஆகியன கணக்கெடுப்புக்கு முன்பு தேவை.

கணக்கெடுப்பின்போது

உள்ளூர் பிரமுகர்கள் கணக்கெடுப்பின் போது உடனிருந்து கண்காணிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு நடத்துபவர் கணக்கெடுப்பின் முடிவில் - தகவல் எல்லாம் சரியாக உள்ளாதா? என்று வீட்டுத்தலைவரிடம் படித்துக்காட்டி கையெழுத்து வாங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


இதனை வன்னியர் சங்க பிரமுகர்களும் ஊரில் உள்ள வன்னிய பிரமுகர்களும் உடனிருந்து கண்காணிக்க வேண்டும்.

(குறிப்பு: வீட்டில் உள்ளவர்கள்தான் தம்மை ' வன்னியக் குல சத்திரியர் ' என்று குறிப்பிட வேண்டும். வெளியிலிருந்து எவரும் தலையிட முடியாது)

கணக்கெடுப்பின் விதிமுறை என்ன?

சாதி குறித்து ஒருவர் பதில் சொல்லும்போது, கணக்கெடுப்பவர் விளக்கமோ, எதிர்க்கேள்வியோ கேட்கக்கூடாது. ஒருவர் தான் இந்த சாதி என்று கூறினால் - அதற்கு ஆதாரமாக எதையும் கேட்கக் கூடாது.

எனவே, வன்னியர் ஒருவர் தம்மை  வன்னியக் குல சத்திரியர் என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் காட்ட வேண்டியது இல்லை.

ஒரு வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் ஒவ்வொருவரது சாதியையும் தனித்தனியாக குறிப்பிட வேண்டும்.

இரண்டு கேள்விகள்: ஒவ்வொரு வன்னியரின் கடைமை என்ன?

கேள்வி 1: வகுப்பு என்ன?


பதில்: "நாங்கள் 1. SC அல்ல, 2. ST அல்ல. 
நாங்கள் 3. இதர வகுப்பு (Others)"


கேள்வி 2: சாதியின் பெயர் என்ன?


பதில்: " வன்னியக் குல சத்திரியர் "

ஒவ்வொரு வன்னியரும் இதே பதிலை சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்ல வைப்பது முன்னணி வன்னியர்களின் கடைமை.

இதுதான் ஒட்டுமொத்த வன்னியர் சமூகத்தினரின் தலையாயக் கடைமை. உடனடித் தேவை.
குறிப்பு: சாதிச்சான்றிதழில் உள்ளது போல வன்னியர்கள் தம்மை "வன்னியக் குல சத்திரியர்" என்று குறிப்பிட வேண்டும் என்கிற கருத்து உள்ளது. ஏனெனில், ஆங்கிலத்தில் "வன்னியர்" (Vanniyar) என்பது "வாணியர்" (Vaniyar) என்று மாற்றி எழுதப்படும் ஆபத்து உள்ளது.

அதே நேரத்தில், கிராமங்களில் "வன்னியக் குல சத்திரியர்" என்று உச்சரிப்பது குழப்பமாகிவிடும் என்பதால் "வன்னியர்" என்றே கூற வேண்டும் என்ற கருத்தும் உள்ளது.


மேலும் தகவல்களுக்கு

1. FAQ: Socio Economic and Caste Census SECC
2. SECC questionnaire
3. SECC Census 2011 RURAL
4. SECC Census 2011 URBAN


Note:



SECC will have three important outcomes:


Firstly, the SECC, 2011 will rank households based on their socioeconomic status, so that State/Union Territory Governments can objectively prepare a list of families living below the poverty line in rural and urban areas


Secondly, it will make available authentic information on the caste-wise breakup of population in the country


Thirdly, it will provide the socio-economic profile of various castes