Pages

புதன், ஜூன் 26, 2013

மத்தியஅரசு விடுதலை செய்ய உத்தரவிட்ட பிறகு பாமக'வினர் மீண்டும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது: பழிவாங்கலின் உச்சகட்டம் 

மருத்துவர் அன்புமணி இராமதாசு அறிக்கை: "அரசியல் சட்ட உரிமைகளை மதிக்காமலும், பழி வாங்கும் நோக்குடனும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் இருவரை உடனடியாக விடுதலை செய்யும்படி மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில், அவர்களை தமிழக அரசு மீண்டும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்திருக்கிறது. அ.தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத் தக்கது.

காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் கிராமத்தைச் சேர்ந்த பழனி, மாரி ஆகிய பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் எந்த குற்றமும் செய்யாத நிலையில் கடந்த மே 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள்  தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்படி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். காஞ்சீபுரம் அருகே பேரூந்தை தீயிட்டு எரித்ததாக அவர்கள் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து அவர்கள் மத்திய அரசுக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் மனு அனுப்பினர்.
இது தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கோரிய மத்திய உள்துறை அமைச்சகம், ஒருவர் மீது தேசிய தேசிய பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கான 11 விதிகளில் ஒன்று கூட இவர்கள் விவகாரத்தில் பின்பற்றப் படவில்லை என்று கூறி, அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து பிறப்பிக்கப்பட்ட ஆணையை தள்ளுபடி செய்தது. தேசியப் பாதுகாப்பு சட்டத்தின்14(3) -ஆவது பிரிவின்படி இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திருக்கிறது.

இதையறிந்த தமிழக அரசு மத்திய அரசின் ஆணை சிறைக்கு வருவதற்கு முன்பாகவே, பழனி மற்றும் மாரியை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்படி மீண்டும் கைது செய்வதற்கான ஆணையை பிறப்பித்திருக்கிறது. மத்திய அரசின் ஆணை கையில் கிடைக்காத நிலையில் இந்த ஆணையை செயல்படுத்த முடியாது என சிறை அதிகாரிகள் கூறிய பிறகும் தமிழக அரசு அதன் தீவிரத்தை குறைத்துக் கொள்ளவில்லை.

மத்திய அரசின் உத்தரவை உடனடியாக சிறை அதிகாரிகளுக்கு பெற்றுக் கொடுத்து விட்டு, புதிய கைது ஆணைகளையும் சிறையில் வழங்கி, அவர்கள் இருவரையும் தொடர்ந்து சிறையில் அடைக்க வைத்திருக்கின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியினரை பழி வாங்குவதற்காக சட்டத்தை எப்படியெல்லாம் தமிழக அரசு வளைக்கிறது; மீறுகிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது. பா.ம.க.வுக்கு எதிரான அரசியல் காழ்ப்புணர்ச்சி உச்சகட்டத்தை அடைந்து விட்டது என்பதையே இது காட்டுகிறது.
தீவிரவாதம் தலைவிரித்தாடும் ஜம்மு - காஷ்மீரில் கூட கடந்த சில ஆண்டுகளில் 86 பேர் மட்டுமே தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தமிழகத்தில் ஒரே மாதத்தில், ஒரே கட்சியைச் சேர்ந்த, ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த 122 பேர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுவரை நடைபெறாத ஒன்றாகும்." என மருத்துவர் அன்புமணி இராமதாசு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

1 கருத்து:

Aruna சொன்னது…

மறக்க மாட்டோம். மன்னிக்க மாட்டோம். மரக்காணத்தில் வன்னியர்களைக் கொலைசெய்துவிட்டு, பாதிக்கப்பட்ட வன்னியர்கள் மீதே பழிசுமத்தும் கேடுகெட்ட அரசியல் கட்சிகளுக்கு வன்னிய மக்கள் பாடம் புகட்டும் காலம் வெகுவிரைவில் வரும்.